மழை நகரம்

அசன்பாய்

அத்தர்க் கடைமுன்

குப்பை லாரியில் தூரத்துணியும்

ஈரம் நாறிய இலையும் கழிவும்

தோளில் வழியச் சுமந்து சுமந்து

கூடை கவிழ்த்தவன் வயிறு தீய்த்த

மூக்கு உறிஞ்சிச் சொல்லுவான் -

'கிளப்புய்யா தாங்கலை வாடை'.

கடைசி நம்பர் லாட்டரி செண்டரில்

உதிர்த்து எறிந்த காகிதத்தோடு

வசவும் கிழித்துப் போகிற பெரிசு

சகதி தௌித்த கார் எண் படித்துப்

புதுசாய் வாங்கத் திரும்பி வருவார்.

மோர்வடியும் அலுமினிய டப்பா

மேசைக்கடியில் மறைத்தபடி

குடை மறந்த வாத்தியாரம்மா

உலர்த்திக் கொள்ள இடம் தேடுவாள்.

சிம்னி உடைந்த ராத்திரிச் சண்டையில்

வீட்டுப் பாடம் எழுத மறந்த

சின்ன விரல்கள் ஈர சிலேட்டில்

விரையக் கேட்கும் முதல்மணிச் சத்தம்.

'நனையாதேடி உடம்புக்கு வந்துடும்.

மாசக் கடைசியில் டாக்டருக்கு அழக்

கொட்டியா கிடக்கு? உள்ளே வாடி'.

பீத்தல் குடையில் ஒண்டிய கொலுசின்

சிரிப்புக் கொஞ்சம் கலைந்து சிதற

'தண்ணி லாரி .. தண்ணி லாரி'.

(கணையாழி)