முன்னுரை

கதையோ, கவிதையோ எல்லாமே செய்யப்படுவதுதான். யுகங்களாக நீள விரியும் கணங்களோ, திரும்பிப் பார்ப்பதற்குள் கடந்து மறையும் பத்தும் இருபதுமான வருடங்களோ, மனதில் சூல் கொள்ள வைத்த அனுபவமும் அதன் தாக்கமும் வார்த்தைகளைத் தேடித் தேடி எழுத்தில் வடிக்கும்போது, செயற்கைத் தனம் எப்படியோ கலந்து ஏதோ ஓர் அளவில் அந்நியப்பட்டுத்தான் போகிறது.

அதையும் மீறிப் படைப்பு வெற்றி பெறுகிறது என்றால், ஒரே ஒரு காரணத்தைத்தான் சொல்லத் தோன்றுகிறது. அந்தக் கவிதைக்குள் வாசகர் தன்னுடைய கவிதையை எழுதிக் கொள்கிறார்.

எழுத்துக்கும் எனக்கும் உள்ள இருபதாண்டு உறவு கவிதையில் தொடங்கியது. என் உரைநடையைச் செம்மைப் படுத்தியது கவிதையே. சிறுகதையிலும், குறுநாவலிலும் மும்முரமான பிறகு, இந்தக் கவிதைகளைத் திரும்பப் படிக்கும்போது, ஒவ்வொன்றுக்குள்ளும் இருக்கும் கதைதான் உடனடியாக மனதில் படுகிறது. இதை எல்லாம் கதையாக எழுதியிருந்தாலும் இந்தத் தொனிதான் இருந்திருக்கும் என்ற நினைப்பும் கூடவே ஆசுவாசமாக எழுகிறது.

கவிஞர் மீராவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எங்கள் ஊர்க்காரரும், என் கல்லூரி ஆசிரியருமான அவருடைய பிரபலமான 'கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்' என்னைப் பாதித்திருக்காவிட்டால் முதல் கவிதையை எழுதியிருக்க மாட்டேன்.

இந்தக் கவிதைகளில் பெரும்பான்மையானவை கணையாழியில் வௌியானவை. இருபத்தைந்து வருடங்களாகக் கணையாழியில் கவிதைகளும், "முன்பிருந்த தரத்தில் கவிதைகள் இல்லை. கவிதைத் தேர்வில் கவனம் தேவை" என்று கடிதங்களும் தொடர்ந்து வருவதிலிருந்து ஆங்காங்கே எல்லோரும் அடிக்குச்சிக் கவிதைகளை வைத்திருப்பது புலப்படுகிறதோ இல்லையோ, 'இன்றைய தேதியில் எழுதப்படுவது மோசமான எழுத்து' என்ற எண்ணம் பரவலாக இருப்பதாகத் தெரிகிறது. சங்க காலத்திலும், இப்படி அதற்கு முந்திய காலத்தை உற்சாகமாகக் கையைக் காட்டித் திருப்திப்பட்டிருக்கலாம்!

என் கவிதைகளை வௌியிட்ட கணையாழிக்கும், மற்றப் பத்திரிகைகளுக்கும் நன்றி. சிற்றிதழ் வட்டாரத்தில் மட்டும் தெரிந்திருந்த என்னை வெகுஜனப் பத்திரிகை வாசக வட்டத்திலும் பலமாக அறிமுகம் செய்த 'எங்க வாத்தியாரை' (சுஜாதா) இங்கே நினைக்காவிட்டால், "இன்றைக்கு ராத்திரி சோறு கிடைக்காது;"

'ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்' சென்னை ஸ்நேகா பதிப்பகம் வௌியீடாக வந்தது. நேர்த்தியான அச்சமைப்போடு கூடிய அதன் முகப்போவியத்தைச் சிறந்த நவீன ஓவியர்களில் ஒருவரான ஆதிமூலம் வரைந்திருந்தார். என் நண்பர் எழுத்தாளர் - கவிஞர் - ஓவியர் யூமா வாசுகி புத்தகத்துக்கு உள்ளே தான் இக்கவிதைகளை உள்வாங்கிக் கொண்டதன் அடிப்படையில் அற்புதமான கோட்டோவியங்களை வரைந்தளித்திருந்தார். இருவருக்கும் என் நன்றி.

மார்ச் 2000-ல் சுஜாதா வௌியிட்டது இப்புத்தகம்.

இரா.முருகன்

(ஆகஸ்ட் 2003)