Chapter 34

அன்பு மனைவி பிரசவிக்கும் அறைக்கு உள்ளேயும் போக முடியாமல், அதே சமயம் வெளியேயும் நிற்க முடியாமல் தவிக்கும் கணவன்போல் இளங்கோ தவித்தான். அந்தக் காவல் நிலையத்திற்கு வந்து விட்டான். ஆபீஸ்காரர்களை மேலும் கொஞ்சம் திட்டிவிட்டு, அடித்துப் பிடித்து ஓடி வந்தான். சரோசாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது புரியவில்லை. ஆனால், ஏதாவது செய்தாக வேண்டும் என்று வேகமான வேகத்தில் வந்தவன், அந்தக் காவல் நிலையத்திற்கு அருகே அங்குமிங்குமாய் அல்லாடினான். அப்போது சரோசாவுடன், ஆட்டோவில் போலீஸ்காரர் சகிதமாய் வந்த முனியம்மா, அவனைப் பார்த்து லேசாய் சிரித்தபடி கையாட்டி விட்டுச் சென்றது, அவனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. சரோசாவும் அவனைப் பார்ப்பதுபோல் தெரிந்தது. ஆனால், பார்த்தாளா என்பது சந்தேகமே. எப்படியும் முனியம்மா வெளியே வந்ததும், அவளை விசாரித்துக் கொள்ளலாம் என்று உள்ளே போகாமலேயே நின்றான். சரோசாவை ஜாமீனில் எடுப்பதற்குத் தனக்குத் தெரிந்த வக்கீல்களை அவர்களின் திறமையின் அடிப்படையில் இல்லாமல், நட்பின் அடிப்படையில் மனதிற்குள் வரிசைப்படுத்திக் கொண்டான்.

இந்தச் சமயத்தில், பாமா ஒரு 'ஜே' பேருந்தில் இருந்து இறங்கினாள். அவள் முகம் தெளிவற்றுக் கிடந்தது. கன்னங்கள் லேசாய் குழிபட்டுக் கிடந்தன. ஆடை அக்கறையற்ற வகையில் தென்பட்டது. ஒற்றைச்சடையின் முடிவில் படர்ந்து விரிந்து மெல்லிய இரும்புக் கற்றைகள் போல் தோற்றம் காட்டும் முடி, இப்போது ஒரே ‘சடையாய்’, பூவற்று அங்குமிங்குமாய் பிசிறு தட்டி ஆடியது.

இருவரும் ஒருவரையொருவர் தற்செயலாக சந்தித்துக் கொண்டார்கள். பழக்க தோசத்தில் மெல்ல நெருங்கினார்கள். இறுதியில் பாமா பின்வாங்கினாள். அவன் சட்டையில் ஒரு பை கிழிந்து பனியனைக் காட்டிக் கொண்டிருப்பதை ஆச்சரியமாகப் பார்த்து விட்டு நடந்தாள். ஆனாலும், குறிப்பிட்ட இடத்தில் நின்றபடி கால்களை மட்டும் அங்குமிங்குமாய் தரையில் தேய்த்தாள். இப்போதுதான் ஒருவரையொருவர் முதன்முதலாக நேருக்கு நேராய் சந்தித்துக் கொள்கிறார்கள். அவனையே பார்த்த பாமா, முகத்தைக் குவித்து அங்குமிங்குமாய் தாழ்த்தி, தோள்பட்டைகளை ஈரப்படுத்தினாள். தந்தை ரமணனுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறும்போது இளங்கோவின் பார்வையைத் தவிர்த்தவள், இப்போது அதைத் தடுக்க முடியாமல் தடுமாறி நின்றாள். "நல்லா நாலு கேள்வி நாக்கைப் பிடுங்குற மாதிரி கேட்கணும். அவர் மட்டும் என்கிட்ட பேசட்டும், அப்போ தெரியும் சேதி” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு, தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு, இனிமேலும் ஏமாற மாட்டேன் என்று நினைத்துக்கொண்டு நின்றாள்.

இளங்கோ, அவளை வேகவேகமாக நெருங்கினான். பிறகு அவளருகே போக வேண்டாம் என்பதுபோல் பாதியிலேயே நின்றான். அப்புறம் அதை ஈடு செய்யும் வேகத்தில் நடந்தான். அவளோ, அவனைப் பார்த்தும் பாராததுபோல் முந்தானை முனையைத் தூக்கி முகத்தில் வீசிக்கொண்டு, அவனிடம் நாலு கேள்வி நல்லாக் கேட்கணும் என்ற தோரணையில் சாய்வாகப் பார்த்தபடியே நின்றாள். அந்தப் பார்வைச் சரிவாலோ என்னமோ, இளங்கோ அவளிடம் முன்னைப்போலவே நெருங்கி நின்றான். உடனே அவள் ஒரு அந்நியனிடமிருந்து விலகுபவள் போல் சிறிது விலகினாள். பிறகு இவனும் மரியாதைக்குரிய தூரத்திற்கு பின்வாங்கிக் கொண்டே, மரியாதையற்ற குரலில் கேட்டான் :

“அந்தப் பாவிப் பொண்ணு சரோசா, நீ நெனைச்சது மாதிரியே ஒரு கொலை கேசுல சிக்கிட்டாள். அதோ அந்த அறைக்குள்ளேதான், ஒருவேளை இந்நேரம் உதை வாங்கிட்டிருப்பாள். நீங்க எல்லாரும் விரும்பினதுமாதிரி அவளுக்கு ஆறு வருஷம் கிடைக்காது. தூக்குத் தண்டனைதான் கிடைக்கும். இப்போ ஒனக்கு திருப்திதானே? ஒங்கப்பா கிட்டயும் சொல்லு... எங்கம்மாக்கிட்டயும் சொல்லு. சந்தோஷப்படுவாங்க. பிறத்தியார் கஷ்டத்துல சந்தோஷம் பிறக்கும் என்கிறதை ஒங்க மூலம் தெரிஞ்சுக் கிட்டேன்."

பாமா, அவனை ஏறெடுத்துப் பார்த்தாள். அவன் முகத்தின் ஒவ்வொரு சுருக்கமும், வேதனையை இறுக்கிப் பிடித்து நிறுத்தி வைத்திருப்பதுபோல் தோன்றியது. அவளுக்கும் என்னமோ போலிருந்தது. ஆனாலும், வீம்பாகப் பதிலளித்தாள் :

"யாரும் யாரைப் பற்றியும் என்கிட்டப் பேசவேண்டிய அவசியமில்லை."

"நானும் இப்போ ஒன்கிட்ட ஆசையில பேச வரல. ஒரு ஆண், ஒரு பெண்ணுக்கு உதவி செய்தால், அது காதலின் சமிக்ஞைன்னு நினைக்கிற உன்னை மாதிரி பெண்கள் கிட்ட பேசியும் பிரயோஜனம் இல்ல. ஆனாலும், அவளோட மனிதாபிமானத்தை உன்கிட்ட சொல்லியாகணும். நானும் அவள்கிட்ட இன்-டிப்பரண்டா நடந்துக்கிட்டேன். ஆனாலும், அவள் போலீஸ்கூடப் போகிற நேரத்துல கூட, நாம ரெண்டு பேரும் ஒண்ணாச் சேரணுமுனு சொல்லிட்டுப் போறாள்; அப்படிச் சேரணும் என்கிறதுக்காக நான் சொல்லல. காலேஜ்காரியான ஒன்னையும், என்னையும் ஒரு சேரிக்காரி மனிதாபிமானத்துல மிஞ்சிட்டான்னு சொல்ல வந்தேன். சரி... இதையெல்லாம் ஒனக்குப் புரிஞ்சுக்க முடியாது."

“இருக்கலாம், ஆனாலும் சரோசாவ இரண்டு பேருமா சேர்ந்துதான் மீட்டினோம். நீங்க ஆஸ்பத்திரியில் கிடக்குறபோது பக்கத்திலேயே பழிகிடந்தேன். ஒங்களுக்காக ஏயேசு, கிருஷ்ணன், அல்லா-ன்னு மனசுக்குள்ளேயே பல தடவை மதம் மாறினேன். ஆனாலும் நீங்க என்கிட்ட உண்மையைச் சொல்லல. உயிருக்கு உயிராப் பழகின ஒருத்திக்கிட்ட உண்மையைச் சொல்லாத ஒருவரு இப்பக்கூட சொல்றேன் - எனக்குத் தேவையில்ல.”

இளங்கோ, அவனை விக்கித்துப் பார்த்தான். அவள் சொல்வதில் நியாயம் இருப்பது புரிந்தது. "தப்புத்தான்” என்று சொல்லிவிட்டு, அதற்காக அவள் மன்னிக்க வேண்டும் என்பதுபோல் தலைக்கு மேல் ஒரு கும்புடு போட்டுவிட்டு அவளையே தழுதழுத்துப் பார்த்தான். பிறகு கண்களை அங்குமிங்குமாய் ஆட்டிப் பன்னீர் தெளிப்பது போல் தெளித்தபடி மீண்டும் நின்ற இடத்திற்கு வந்தான். அவனுள் இப்போது, சரோசாவே முழுமையாக நின்றாள். 'சரோசாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். சரோசா வலியப் பேசும்போது, நான் முகம் கொடுத்திருந்தால், அவள் பிரச்சினைகளைச் சொல்லியிருப்பாள். என்மூலம் அவளுக்கு ஒரு வழிகூடக் கிடைத்திருக்கும். ஆனால், இப்போது வழியற்று நிற்கிறாள். போலீஸ்காரன், அவளை அடிப்பதைவிட நான் அவளிடம் பேசாமல் இருந்தது பெரிய கொடுமை. அவளை, அவள் மனசிற்குள்ளேயே சிறை போட்டுட்டேன். அதிலேயே அவள் சந்தோஷத்தையும் தூக்குப் போட்டுட்டேன்..'

இளங்கோ, அந்தப் போலீஸ் வளாகத்தையே வெறித்துப் பார்த்தான். இறுதியில் ஒரு தீர்மானத்திற்கு வந்ததுபோல், அந்தக் காவல் நிலையத்திற்குள் போனான். யாரோ ஒருவர் தோளில் கை போடுவது போலிருந்தது. முகத்தைத் திருப்பினால் ஒரு வளைக்கரம். பின்பக்கமாய் திரும்பினால் பாமா... நீர் முட்டும் கண்களுடன் அவன் தோளில் சாய்ந்தாள். இளங்கோ, அவள் தலையை நிமிர்த்தினான். அவள் தோளைப் பிடித்திழுத்து தனக்கு இணையாக நிறுத்திக் கொண்டு அவள் கைகளைப் பற்றினான்.

சரோசா, ஐந்தாறு பெண்களுக்கு மத்தியில் அலுங்காமல், குலுங்காமல், அங்கேயும் இங்கேயுமாய் பார்க்காமல், படியிறங்கிக் கொண்டிருந்தாள். அவளைச் சூழ்ந்திருந்த கும்பலுக்குப் பின்னால் அவள் நாயினாவும், ருக்குவும் கோவிந்தும், வீட்டுக்கார அம்மாவும் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

சரோசா, இளங்கோவைப் பார்த்ததும். இறங்கிய படியில் அப்படியே நின்றாள். அவனோடு சேர்ந்து அர்த்தநாரீஸ்வரி போல் நின்றவளைப் பார்த்ததும், அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த அதிரிச்சியில் அவள் மெல்ல மெல்ல சுயஉணர்வு பெற்ற, அவர்கள் பக்கமாய் குதித்தாள். முன்னால் காம்பவுண்ட் சுவரிலிருந்து ஏறிக் குதித்தாளே அப்படிப்பட்ட குதிதான்; ஆனால், எவ்வளவு வித்தியாசம்! சரோசா இளங்கோவைக் காட்டி, அந்தம்மாவிடம் ஏதோ பேசப் போனாள். உணர்ச்சிக் குவியலில் பேச முடியவில்லை. முனியம்மா, அவளுக்கு வாய் கொடுத்தாள் :

'இதுதாம்மா இளங்கோ என்கிற தம்பி. பாவம் இவரையும் ஆபீசுல ‘ஒருமாதிரி' பார்க்கிறாங்க. ஆயிரத்துல ஒரு தம்பி. இன்னிக்குத்தான் இவரு அதிர்ந்து பேசினத பார்த்திருக்கிறேன். கேஷுவல், பர்மனெண்டுன்னு வித்தியாசம் காட்டாதவரு. சாரே! உனிக்கி எப்போ கல்யாணம் ஆச்சு? கடைசியில கேஷுவல்னு நீயும் எனக்கு இன்விடேஷன் கொடுக்கல பாரு."

பாமா, நாணிக்கோணிய போது, முனியம்மா சொன்னதன் தாத்பரியம் புரியாத மனோநிலையில், இளங்கோ “என்ன ஆச்சுது” என்று ருக்குவைப் பார்த்துக் கேட்டான். பிறகு தனது கேள்விக்குரியவள் அந்த அம்மாதான் என்பதுபோல் அவளைப் பார்த்தான். அந்தம்மா, சரோசாவின் கையைப் பின்பக்கமாகப் பற்றி, தன் தோளில் போட்டுக் கொண்டு, அவள் மூக்கைத் தடவி விட்டு, அந்தத் தள்ளாடும் மனிதரை சிறிது நேரம் பார்த்தபடி நின்றவள், இளங்கோவைப் பார்த்து தன்னிலை விளக்கமளித்தாள்:

"நாங்க சமதர்ம மாதர் மன்றத்தைச் சேர்ந்தவங்க. எங்களால ஒரு அண்ணாத்தைக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது. ஆனால், சரோசாவை மாதிரி எளியவங்கள மீட்க முடியும். இனிமேல் இவள யாரும் தொல்லை பண்ண மாட்டாங்கன்னு நினைக்கேன். அப்படிச் செய்யறது எங்கள மட்டுமில்ல, எங்க அமைப்பையும் எங்க அமைப்புக்குப் பின்னால இருக்கிறத

இருக்கிறத ஆயிரக்கணக்கான மனிதாபிமானிகளையும் வம்புக்கு இழுக்கிறதுக்கு சமானமுன்னு போலீசுக்கும் தெரியும், அண்ணாத்தைக்கும் தெரியும்."

சரோசா, முன்பின் அறியாத அந்தப் புதிய பெண்களின் அன்புப் பார்வையில் நெகிழ்ந்தாள். சற்றுத் தொலைவில் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்த ருக்குமணியை கையாட்டி, தன் பக்கம் கூப்பிட்டாள். மெல்ல மெல்ல நடந்தவளை வேகவேகமாய் பிடித்திழுத்து, அவள் முதுகுக்கு சுவர்போல் ஆனாள். இளங்கோவைப் பார்த்துவிட்டு, அவன் அருகே இருக்கும் பாமாவையும் பார்த்துவிட்டு, அவர்கள் இருவரையும் கண்களால் சோடி சேர்த்துப் பார்த்த மகிழ்ச்சியில் லேசாய் தலையாட்டினாள். உடனே, அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொண்டவள்போல், பாமா, இளங்கோவை ஒரு தள்ளுத் தள்ளிவிட்டு சரோசாவின் பக்கம் போய் நின்று கொண்டாள்.

அந்தம்மா, தனது கைக் கடிகாரத்தைப் பார்த்தாள். புறப்படுவதற்கு ஆயத்தமாக கால்களை செருப்பு நுனிவரை நகர்த்திவிட்டு, பிறகு முக்கியமான ஒன்றைச் சொல்ல மறந்ததுபோல், செருப்புக்களை அகற்றிவிட்டு, சரோசாவைப் பார்த்துக் கேட்டாள் :

“ஒனக்கு ஆபீசுல வேலையும் போயிட்டுது. இனிமேல் நிச்சயம் சேர்க்க மாட்டாங்க... ஒரு மாசம் வரைக்கும் மட்டும்தான் கேஷுவலா இருந்த ஒனக்கு எங்களால் அந்த ஆபீசுல எதுவும் செய்யவும் முடியாது. அமைச்சர்கிட்ட சொன்னாலும் கடைசியில அதுல ஒரு கிளார்க்தான் முடிவெடுப்பான்."

ருக்கு, சரோசாவை தன் பக்கமாக இழுத்து வைத்துக்கொண்டு அந்த அம்மாவிடம் கெஞ்சுவதுபோல் பேசினாள்:

"ஆமாம்மா... அந்த ஆபீசுல செத்துப் போன ஒரு டிரைவரோட சம்சாரத்துக்கே ஒன்பது மாசம் ஆகியும் பாடாதிப் பசங்க பென்ஷன் தரலயாம். சரோசா அதுக்காக எவ்வளவு வருத்ததப்பட்டா தெரியுமா? அப்புறமா, நாயினாவோட தனி மரமா நிக்கிற இந்த தற்குறிக்கி, நீங்கதாம்மா, ஒரு வழி காட்டணும். அவளுக்கு யாருமே இல்லம்மா. திருந்தினவங்களுக்கு சரியான வழி கிடைக்காட்டி, அப்படித் திருத்துறது, பாதிக்கிணறு தாண்டினது மாதிரிம்மா. பல்லும் பூடும்; சொல்லும் பூடும். இல்லியா கோவிந்து மச்சான்?"

கோவிந்து மச்சானுக்கு இல்லியா என்பது 'மில்லியா' என்று கேட்டது; உடனே, அதற்காக அவன் மகிழ்ந்து போய் தலையாட்டினான். அந்தம்மா சற்று விலகிப் போய் நின்று கொண்டு தன்னுடன் வந்த பெண்களை அங்கே வரும்படி முகம் ஆட்டினாள். அந்தப் பெண்கள் அவள் அருகே போனார்கள். எல்லோரும் கும்மி அடிப்பது போல் வட்டமாய் நின்று கொண்டு தலைகளைக் குவித்தார்கள். சிறிது நேரத்தில் அந்தம்மா சிறிது, முன் நடந்து, சரோசாவின் தோளில் கை போட்டபடியே அபயம் அளித்தாள். அவன் முகத்தை நிமிர்த்தியபடியே, அவள் பிரச்சினைக்கு, விடையளித்தாள்:

"எங்க அமைப்புக்கு ஒன்ன மாதிரி பல அபலைப் பெண்கள் வராங்க. பெரிய இடத்து அபலைகள், சிறிய இடத்து அபலைகள்னு... இதில் சாதி பேதமோ, அந்தஸ்து வித்தியாசமோ கிடையாது. அபலைங்க என்கிற ஒரோயொரு அந்தஸ்துதான். இவங்களுக்காக பல இடங்களில் பல ஆபீசர்களுக்கு லட்டர் எழுதுறோம். அதுகளை கொண்டு கொடுக்கணும். எங்க சங்கத்துக்கு பல கிளைகள் இருக்குது. அவங்களுக்கு சர்க்குலர் கொண்டு போகணும். அவங்க எழுதுற லட்டர்ங்களை கொண்டு வரணும். ஆபீசையும் பார்த்துக்கணும். ஆபீசுக்கு இப்போ கட்டிடம் கட்டிக்கிட்டு இருக்குறோம். அதுல ஒரு குடியிருப்பும் கட்டுறோம். அது தயாரானதும், நீ அங்கேயே ஒன் தாத்தாவோட தங்கிக்கலாம். நான் சொன்ன வேலையெல்லாம் செய்யறதுக்கு ஒனக்கு மாசம் 700 ரூபா தாறோம். உன்ன வேலைக்காரியா கூப்பிடல. எங்களில் ஒருத்தியாகத்தான் கூப்பிடுறோம். நானே இப்படி வந்தவள்தான். உன்ன, பணிவிடைக்காகக் கூப்பிடல. எங்க பணிகளைப் பங்கிட்டுக்கத்தான கூப்பிடுறோம். எங்களுக்குத் தெரிஞ்ச ஒரே வார்த்தை, 'தோழர்', 'தோழியர், என்கிறதுதான்; வேலைக்காரன், வேலைக்காரி என்கிறதில்லை. என்ன சொல்றே சரோசா?''

பல பொதுக்கூட்டங்களை இஷ்டத்துக்கு விரோதமாகக் கேட்டுப் பழகிய ருக்குமணி, தன்னையும் அறியாமலேயே கை தட்டினாள். சரோசாவை தூக்கிப் பிடித்து அவள் கன்னத்திலும், உச்சியிலும் மாறி மாறி முத்தமிட்டாள்.

சரோசாவுக்கு உச்சி முதல் பாதம் வரை எதோ ஒன்று, பூப் பூவாய் விழுவதுபோல் இருந்தது. மனதிற்குள் இதயம் என்று சொல்லுகின்ற இடம் பிரபஞ்சம்போல் விரிவது மாதிரி தோன்றியது. இதுதான் மகிழ்ச்சி என்று ஏதோவொன்று முதன்முறையாய் அவளிடம் உணர்த்திக் கொண்டிருந்தது. இதயத்தை யாரோ பூவால் வருடிவிடுவது போல் இருந்தது. அங்கிருந்து வாய்க்குள் சிரிப்புச் சிரிப்பாய் ஏதோவொன்று வந்தது. அதுவே அழுகை அழுகையாயும் நின்றது. அவள் தன் மகிழ்வைப் பகிர்ந்து கொள்ள ஆள் தேடுபவள் போல் இளங்கோவையும், பாமாவையும் ஒருசேரப் பார்த்தாள். ருக்குவை தனித்துப் பார்த்தாள். பின்பக்கமாய் நின்ற நாயினாவை முன்பக்கமாய் நகர்த்திக் கொண்டாள். பின்னர் அந்தம்மாவை கண்ணீரும் கம்பலையுமாகப் பார்த்து, "நான் சேரிக்காரிம்மா. படிக்காத முண்டம்மா” என்றாள். இப்படிச் சொன்னதினால் ஒருவேளை வேலை கிடைக்காமல் போய்விடுமோ என்று கைகளை உதறிக்கொண்டே, "ஆனாலும், நானு சாவுறது வரைக்கும் விசுவாசமா இருப்பேம்மா...” என்றாள்.

அந்தம்மா, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்து, அவள் மட்டுமே அங்கே நிற்கிறாள் என்ற அனுமானத்துடன் அமைதியாகப் பேசினாள்:

"இந்தக் கால:ததுல படிச்சவங்கதான், ஏன் படிச்சோமுன்னு தலைகுனியணுமே தவிர, படிக்காத நீ தலைய நிமிர்த்த முடியாட்டாலும் அப்படியே வச்சுக்கலாம். சேரிக்காரி என்கிறதுக்காக நீ பெருமைப்படணும். காரணம், கூடிக்கிட்டே அடிச்சுக்கிறவங்க ஆபீசுக்காரங்க. அடிச்சிக்கிட்டே கூடிக்கிறவங்க சேரிக்காரங்க. சரி, அதவிடு...யாரு கண்டா, நம்ம மன்றத்துக்கு நீயே, ஒரு காலத்துல தலைவியாகலாம். எல்லாத்தையும் விட ஆயிரக்கணக்கான ஆட்களைக்கொண்ட ஒரு பெரிய குடும்பச் சங்கிலியில் நீ ஒரு வளையமா இருக்கப் போறே! இந்தக் கூட்டுக் குடும்பத்துல இனிமேல் நீயும் ஒருத்தி."

சரோசா, அந்தம்மாவை, அம்மாவாக நினைத்து மார்பில் சாயப்போனாள். இதற்குள், அவள் நாயினா, பேத்தியை இழுத்துப் பிடித்து தன் தோளில் போட்டுக் கொண்டார். இந்தச் சமயத்தில் வீட்டுக்காரம்மா, ஒரு பாயிண்டைக் கொண்டு வந்தாள்.

"இந்தப் போலீஸ்காரன் என்னை எப்படிம்மா கூட்டிக்கிட்டு வரலாம்? இந்தப் பாயிண்ட அந்தக் கறுப்புக் கோட்டுப் பொண்ணு ஏம்மா கேட்கல?”

"ஆயா, நீ எப்படி கரண்ட, சாப்பிடும்போது கட் பண்றியோ, அப்படி, அந்த போலீஸ்காரங்க செய்ததும் தப்புதான்."

பூக்கார ருக்குவை, வீட்டுக்காரம்மா கோபத்தோடு பார்த்துவிட்டு, பிறகு சிரித்தாள். இந்தச் சமயத்தில் போலீஸ் மாடி மேடையில் திருமலையப்பன் தோன்றினார். எல்லோரும் அவரை கையெடுத்துக் கும்பிட்டார்கள். அது அவருக்கு விடை கொடுப்பது போலவும், அதே சமயம் அவரை ஒருமித்து வணங்குவது போலவும் இருந்தது. அந்தக் கைகள் நிமிர்ந்தவை நிமிர்ந்தவைகளாக நின்றன.

சரோசா, கோழி முட்டையிலிருந்து வெளிப்பட்ட குஞ்சு போல் மனதாலும், உடலாலும் லேசுப்பட்டாள். தாய் கோழியின் இறக்கைகளுக்குள் அடைக்கலமாய் நிற்கும் குஞ்சு போல் அவளுக்குள் ஒரு தன்னம்பிக்கை; பிறகு அண்ணாத்தே என்ற கழுகைப் பார்த்தபடியே, தாயின் இறக்கைக் கைகளில் நம்பிக்கை வைத்து, வெளியே நகரும் குஞ்சுபோல் ஒரு எண்ணம். படிப்படியாய் பெரியதொரு கோழியாகி அந்தப் பருந்தையே துரத்தப்போவது போன்ற ஒரு ஆளுமை உணர்வின் முளைக்கீற்று, அவள் உளத்துள் துளிர்த்ததைப் பார்த்தாள்.

வாசனைப் பூக்களை மட்டுமே சூடியும், சூட்டியும் மகிழும் சமூகத்தில், தாழம்பூவான தன்னை எடுத்து அலங்கரித்துக்கொண்ட அத்தனை பேரையும் தோழமையோடு பார்த்தாள்.