Chapter 18

ஐந்தாறு நாட்கள் அடங்கி, ஆறாவது நாள் துவங்கியது.

இந்த இடைவெளிக்குள், இளங்கோவுக்கு வேண்டியவர்கள் எல்லோருமே அவனைப் பார்த்துவிட்டார்கள். பெற்றோர், உற்றோர், அலுவலக சகாக்கள் அனைவரும் அவனுக்கு ஏற்பட்ட ‘விபத்தை’ தலைக்குப் பதிலாக தலைப்பாகையோடு போனதாய் நினைத்துக் கொள்ள வேண்டும் என்றார்கள். அவனுடைய அம்மா கிட்டத்தட்ட அங்கேயே கிடந்தாள். எல்லோரையும்விட அலறி அடித்து, அவனை முதல் தடவையாய் மருத்துவ மனையில் பார்த்த பாமாவும் அங்கேயே தவம் கிடப்பதுபோல் கிடந்தாள். ஆனால் பாக்கியம் பார்த்த பார்வையில் லேசாய் ரோஷப்பட்டு, இப்போது தாய்க்காரி இல்லாத சமயமாய் பார்த்து வந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு மட்டும், இளங்கோவுக்கு ஏற்பட்டது விபத்தா அல்லது ஆபத்தா என்கிற சந்தேகம் இன்னும் போகவில்லை. அப்படி ஏடாகூடமாக ஏதாவது நடந்திருந்தால் இளங்கோ சொல்லி இருப்பார் என்ற நம்பிக்கை; அப்படியான ஒரு உரிமை...

அந்த மாடிக்குக் கீழே வரவேற்பு வளையத்திற்குள் நோஞ்சானின் தயவில், சரோசா தன்னை மறைத்துக்கொண்டு காத்துக் கொண்டிருந்தாள். மேலே பாமா போயிருக்கிறாள். அவள் போன பிறகுதான், இவள் போக வேண்டும். அரைமணி நேரத்திற்குப் பிறகு பாமாவும், நோஞ்சான் பாணியில் சொல்லப்போனால் அவளுடைய 'கிடாத்தலை' அப்பன் மிஸ்டர்.ரமணனும் கீழே படியிறங்கினார்கள். சரோசா, தலையை குனிந்து கொண்டாள். அவர்கள் மருத்துவமனையை விட்டு மறைந்ததும், அவளுடைய தலை வரவேற்பு வட்டத்திற்கு மேல் மூன்றடி உயரத்தில் எழுந்தது. வழிகொடுக்கும் சாய்வுப் பலகையை நிமிர்த்திக் கொண்டு, வெளியேறி மாடிப்படிகளில் ஏறினாள். இதற்குள், அவனை, அவள் மூன்று நான்கு தடவை பார்த்து விட்டாள். அவனிடம் கெஞ்சிக் கூத்தாடி மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று அவள் பேச நினைக்கும் போதெல்லாம், பார்வையாளர்கள் வந்துவிடுவார்கள். அவர்களது ஆடை ஆபரணங்களைப் பார்த்துவிட்டு, இவளே தனக்குள்கூசிக்கொண்டு வெளியே வந்துவிடுவாள்.

சரோசாவின் உருவம் வாசலில் தெரிந்தவுடனேயே, இளங்கோ அவளை அடையாளம் கண்டு "வா சரோசா" என்றான். அவளும் சொல்லப் பொறுக்காதவளாய் அந்த அறைக்குள் தாவினாள். அவன் முகத்தைப் பார்த்தாள். நெற்றிப்பொட்டின் வீக்கம் குறைந்திருந்தது, காதைப் பார்த்தாள்; பிளாஸ்திரி இன்னும் எடுக்கப்படாமல் இருந்தது. ஒரு கை, இப்போதும் ஒரு மாதிரி தெரிந்தாலும், அது தூளியில் தொங்கப்போடாமல், அவன் மடியில் கிடந்ததில், அவளுக்கு மகிழ்ச்சி.

சரோசா கையில் இருந்த ஒரு ஆப்பிள் பழத்தை அவனிடம் தயங்கியபடியே நீட்டினாள். பலர் இப்படி அவனுக்குக் கொடுப்பதை தொலைவில் நின்று பார்த்த அவளுக்கு, நோயாளிகளுக்கு இப்படி பழவகைகளைக் கொடுக்க வேண்டும் என்பது இப்போதுதான் புரிந்திருக்க வேண்டும். அவனுக்கு ஏதோ ஒரு டெலிபோன் வந்தது. யாரோ அலுவலக ஆசாமி. இவனும் “தேங்க்யூ ஸார்..தேங்க்யூ ஸார்... உடம்பை ஜாக்கிரதையாகத்தான் பாத்துக்கறேன் ஸார்; இனிமேல் கண்டபடி வண்டியை ஓட்டமாட்டேன் ஸார்” என்று அவன் அப்படிக் குழைந்து பேசியதைப் பார்த்தால் டெலிபோனில் அடுத்த முனையில் பெரிய அதிகாரி ஒருவர் பேசியிருக்க வேண்டும். டெலி போனை கீழே வைத்துவிட்ட அவன், சரோசாவைப் பார்த்தான். அவளது ஈரப்பட்ட முகத்தைப் பார்த்தபடியே ஒரு சந்தேகம் கேட்டான்: "ஆமா சரோ, நானும் உன்னை கவனிச்சுட்டுத்தான் வரேன். இங்கே ஆளுங்க வரும்போதும் போகும்போதும் கண்ணை கசக்குறயே, ஏம்மா?”

சரோசா அவனை சங்கடத்துடன் பார்த்தாள். பிறகு அவனிடமே ஆலோசனை கேட்பதுபோல் ஒப்பித்தாள் :

"கண்ணை கசக்கலே சாரே; கண்ணே கசங்குது! அதென்னமோ எனிக்குத் தெரியலே, இங்கமட்டுமில்லை, எங்கேயும் ரெண்டுபேரோ மூணுபேரோ அன்னியோன்யமாய் பேசிட்டிருந்தால் எனிக்கு அயுகை வந்துடும். நேத்து பாரு... இந்த கஸ்மாலம் புடிச்ச மழையிலே ஒரு பொடிப்பயலும், ஒரு பொண்ணு தன்னோட முந்தானையை எடுத்து அவன் தலையில மூடனாய். இந்த பாசத்தை பார்த்துட்டு நான் அழுதுட்டேன் சாரே. யாராவது கொயந்தைய கொஞ்சறதப் பாத்துட்டாப் போதும், அயுதுடுவேன். யாராவது ‘சொகமா இருக்கிறியானு' மெய்யாவே கேட்டாப் போதும், அயுதுடுவேன். எனக்கே ஏன் இப்படினு புரியல. எதுக்கும் ஆஸ்பத்திரி தோஸ்துக்கிட்டே சொல்லி இங்கே வார பைத்தியக்கார டாக்டரண்டே என்னையும் தோவுண்டு டெஸ்ட் பண்ணிக்கலாமுன்னு இருக்கேன். சர்தானே சாரே?”

இளங்கோ, அவளை இப்போது புதுமாதிரியாகப் பார்த்தான். அவளைப் பார்க்கப் பார்க்க, அவனுக்கே அழுகை வரும்போல் தோன்றியது. ஆகையால் அவள்மீது ஏவிவிட்ட பார்வையை தவிர்த்துவிட்டு, அங்குமிங்குமாய் பார்த்தான். அவளைப்பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க, அவள் கல்லுள் மறைந்த சிற்பம்போல் தோன்றினாள். அந்த தடிப்பேறிய உடம்பிற்குள் ஒரு குழந்தை அழுது கொண்டிருப்பதுபோல் தென்பட்டது. அவளை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய பிசகாத கையை ஊன்றி இருக்கையின் முனைக்கு வந்தான். அவளை உட்காரச் சொன்னான். அவளோ நின்றுகொண்டே உட்காருவதுபோல் உடம்பை வளைத்துக் கொண்டாள். இளங்கோ, அவளை அனுதாபமாய் பார்த்தபடியே கேட்டான்:

"உன்னைப் பற்றி விவரமா சொல்லேன் சரோ."

"போலீஸ் சொல்லி இருக்குமே.”

"சொல்லுச்சு. ஆனால் அந்தப் போலீசுக்கு ஒருத்தரோட காரியங்கள் தான் முக்கியமே தவிர, காரணங்கள் அல்ல. ஏழைகளை வேரோடு பிடுங்கி எறியத்தான் தெரியுமே தவிர, அவுங்களோட வேரையோ, வேரடி மண்ணையோ தெரிஞ்சுக்க மாட்டாங்க. போகட்டும்; ஒன்னைத் தேடி ஸ்டேசனுக்கு ஒரு பெரியவர் வந்தாரே, அவரு யாரு?"

சரோசா, உடனடியாகப் பேசவில்லை. கண்களை உள்நோக்கிச் செலுத்தினாள். அதை நெஞ்சுக்குள் விட்டதுபோல் இமைகளை முழுமையாகக் காட்டினாள். மனதிற்குள் மூன்று வயதுக் குழந்தையாக அழுதாள். கத்தியுடன்கூடிய கொலைகாரியாகத் தாண்டவம் ஆடினாள். பிறகு முடங்கிப் போனவள்போல்-மூலையில் கிடப்பதுபோல் பாவித்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் அவள் இமைகள் மெல்லத் திறந்தன. இளங்கோவை நிமிர்ந்து பார்த்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டு, உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு, முதல் தடவையாக ஒரு தோழனைப் பார்க்கிற துயரமும் மகிழ்ச்சியும் கலந்த கலவைக் குரலில், தனது வாழ்க்கைச் சுருக்கத்தை சொன்னாள்:

"பெரிசா சொல்றதுக்கு எதுவுமே இல்லே-சாரே. என் நயினா, அதான் நீ சொன்னியே - ஸ்டேசனுக்கு வந்தவர் - அவரு பர்மாவுல பெரிய கில்லாடியா இருந்திருக்கார். காரு வச்சிருக்கார், பங்களா வச்சிருக்கார்; கண்ணுக்கு அயகா பொண்டாட்டி வச்சிருக்கார். ஒரு பொண்ணையும்,புள்ளாண்டானையும் பெத்திருக்கார். அப்போ ஏதோ ஒலகப் போரோ ஏதோ வந்துதாமே - அதுல சப்பான்காரன் ரங்கூன்லே குண்டு போட்டிருக்கான். உடனே எல்லாரையும் போலே நயினாவும் துண்டக் காணோம். துணியக் காணோம்னு அடிச்சுப் புரண்டு குடும்பத்தோட நம்ம நாட்டைப் பார்த்து நடந்திருக்கார். காடு மலை வழியா, சனங்களோட சனமா வந்திருக்கார். கார் வைச்ச மனுசன் காலுவீங்கி நடந்திருக்கார். காட்டு வழியிலே எத்தனையோ பேர், வயசான நயினாக்களையும், ஆத்தாக்களையும், கொயந்தைங் களையும் வழியிலேயே விட்டுட்டு, கண்ணீரும் கம்பலையுமா ஓடி வந்திருக்காங்க. ஆனா என்னோட நயினா வூட்டுக்காரியை இடுப்பிலேயும், கொயந்தைங்களை தோளிலயுமா தூக்கிட்டு வந்திருக்கார். ஆனாலும் வழிலே சப்பான்காரன் மேலே, குண்டு போடறதா நினைச்சு, வெள்ளைக்காரன் போட்ட குண்டுல பொண்டாட்டியும் பூட்டாள். புள்ளாண்டானும் பூட்டான். நயினா மூணு வயசு பொட்டக் குயந்தயோட தப்பிச்சுட்டார். இந்த மெட்ராசுக்கு வந்து சமையல்காரனா, ரிக்ஷாக்காரனா வேலை பார்த்து, தாம் பெத்த பொண்ணை ஒருத்தனுக்குக் கட்டி வச்சிருக்கார். நான் பிறந்த ஒரு வருஷத்திலேயே, அவரோட பொண்ணு என்னோட ஆத்தா - அந்த தத்தேறி முண்டை, - எவனோ ஒரு கோல்மாலை இஸ்துக்குன்னு பூட்டாளாம். அவள் மட்டும் என் கையிலே கெடச்சா, பீஸ் பீஸா கிழிச்சிடுவேன்."

“ஏன் உடம்பை இப்படி ஆட்டறே சரோ? பொறுமையாச் சொல்லு. நடந்ததை இனிமேல் மாத்த முடியாது. உன்னோட அம்மா எந்த நிலைமையிலே அப்படிப் போனாளோ?"

"அது இன்னா சாரு நிலைமை? கொயுப்பு எடுத்த நிலைமை? பயங்கரமான காட்டுலே இருந்து தோளுல தூக்கிட்டு வந்த அப்பாவை வுட்டுட்டுப் போறதுக்கு எப்படி சாரே மனசு வரும்? பெத்த கொயந்தயை விட்டுட்டுப் போறவள் பொம்மனாட்டியா? போ சாரே... அவள் பேச்சை எடுக்காதே."

“அம்மா மேலே இந்த அளவுக்கு வருகிற கோபத்தை உன் அப்பா மேலே காட்டணுமுன்னு ஏன் தோணலே?"

“என்னை அவனுக்குப் பெத்தாளோ, இல்லை எவனுக்குப் பெத்தாளோ?"

“அந்தக் கஸ்மாலப் பயலும் ஒரு வருஷத்துக்குப் பிறகு இன்னொருத்தியை இஸ்துக்குன்னு ஓடிட்டானாம். ரெண்டு பேரும் எத்தனை கை மாறினாங்களோ? விட்டுத்தள்ளு சாரே எச்சிக்கலங்கள. ஏதோ நாயினாவுக்காக காலத்தைத் தள்ளிட்டு இருக்கேன். நான் விட்ற ஒவ்வோர் மூச்சும் அவருக்குத்தான். இரும்பைத் திருடி அவருக்கு வடையா மாத்திக் கொடுக்கேன்; சாராயம் கடத்தி அவரை சாகாம பாத்துக்கறேன். எப்படியோ பொயப்பு ஓடுது. ஆனாலும் ஒன்னை நானு அப்படி படுத்தியிருக்கப்படாதுதான்."

இளங்கோ, சரோசாவை கண்களை ஆட்டாமல் பார்த்தான். தோள் பக்கம் நைந்துபோன அவள் ஜாக்கெட்டையும் முட்டிக் கால்களைக் காட்டிய அவளது கிழிந்த பைஜாமாவையும் பார்க்கப் பார்க்க, அவனுக்கு மனம் நைந்தது. அவளையே உற்றுப்பார்த்தவன், பிறகு ஏதோ ஒரு வெளிச்சம் கிடைத்ததுபோல் அவளைப் பிரகாசமாகவும், பிரகாசப் படுத்தியும் கேட்டான் :

"ஒன்னோட எதிர்காலத்தைப்பற்றி எப்பவாவது நெனச்சுப் பாத்தியா?”

"எப்போ ஒருநாள் நினைச்சேன் சாரே... தலை சுத்திச்... விட்டுட்டேன். என்னை மாதிரி குப்பத்துப் பொண்ணுங்க குப்பத்துல திரியற நாயிங்க மாதிரி. எதிர்காலத்துல என்ன நடக்கும்னு தெரியாமக் கீறதுதான் எனிக்கு நல்லது. ஏதோ பண்ணி மாதிரி ஒரு பொய்ப்பு... விட்டுத் தள்ளு."

“அப்படி இல்ல சரோசா..பன்றி மிருகம்... ஆனால் நாம் மனுசன் மாதிரி. இப்போ ஒனக்கு இருபத்தோறு வயசுதான் இருக்குமுன்னு நினைக்கிறேன். எல்லோரும் இப்போ உன்னைக் கொஞ்சுவாங்க, தலையிலே வச்சுக் கூத்தாடுவாங்க. ஆனால், இன்னும் இருபது வருசத்துக்குப் பிறகு ஒன்னோட நிலைமை எப்படி இருக்குமுன்னு யோசித்தியா? அந்த மாதா கோயிலுக்கு முன்னாலே தரையோட தரையா உடம்புகளைக் கிடத்திக்கிட்டு கிடக்குதே ஒரு அனாதைப் பட்டாளம், அதுலதான் நீ போய் சேரணும். ஒன்னோட தோஸ்துங்க, உன்னை, காலால எத்துவாங்களே தவிர, ஏறிட்டுப் பார்க்க மாட்டாங்க. அவங்களோட அலட்சியத்துல நீ அல்லாடணும். பிச்சக்காரியா கையேந்தணும். கை செத்து காலு செத்து கண்கெட்ட அனாதைக் கிழவிங்களைப் பார்க்கேமே அது மாதிரி நீ ஆயிடுவே. நீ கடைசிக் காலத்துலே கை கால வெட்டிக்கிட்டு இருக்கப்போ உன்னை ஆஸ்பத்திரியிலே சேர்க்கிறதுக்குக் கூட ஒருத்தரும் வர மாட்டாங்க. நம்ம எதிரில் வருகிற ஒவ்வொரு அனாதைக் கிழவியோ, இல்ல குஷ்டரோகியோ நமக்கு ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கிறாங்க. என்ன தெரியுமா? 'என்னை மாதிரி ஆயிடாதேன்னு' புரியுதா?"

சரோசா, முதலில் சிரித்தாள்; பிறகு பேசாது இருந்தாள். அப்புறம் அவனை ஆழமாகப் பார்த்தாள். ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு அங்குலம் வீதமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். இளங்கோ அனுமானித்தவைகளை நினைக்க நினைக்க, அவளுக்குத் தன்னைவிட பன்றிகளும், நாய்களும் உயர்ந்தவைகளாகத் தெரிந்தன. காரணம், அவைகளுக்கு உடல் வாதைதானே தவிர மனவாதை கிடையாதே!

சரோசா எதிர்காலத்தைப் பார்க்கப் பயந்தவள் போல் முகத்தை, விரல்களால் திரையிட்டபோது, இளங்கோ அவளை ஆற்றுப் படுத்தினாள் :

"கவலைப்படாதே சரோ! உனக்குன்னு ஒரு திட்டம் வைத்திருக்கேன். ஆமாம்மா... நான் வேலை பார்க்கிற கவர்ன்மென்ட் ஆபீசிலேயே உன்னை கேஷுவல் லேபரா அதாவது அன்றாடக் கூலியாளா சேர்க்கப் போறேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கவர்ன்மென்ட் ஆளா ஆயிடலாம். கழுதையை மேய்ச்சாலும் சர்க்கார் கழுதையை மேய்க்கணும் என்கிறது ஒனக்குத் தெரியுமா?”

சரோசா, அவனைத் தலை நிமிர்ந்து பார்த்தாள். கோணலாக இருந்த மேனியை நேர்கோடாக ஆக்கிக் கொண்டாள். அவளுக்குள்ளே பிரகாசமான ஒன்று, எதிர்காலமோ, அதுபோட்ட கோலமோ, கொழுந்துவிட்டு எரிந்தது. ஆனால் சிறிது நேரத்தில் அது வெந்து தணிந்து சாம்பலானது. எதையோ ஒன்றை - அழுகையோ அல்லது ஆத்திரத்தையோ - அடக்கிக்கொண்டு, அவள் இளங்கோவிடம் விரக்தியோடு சொன்னாள் :

"இப்படி ஆசை காட்டாதே சாரே. சாராயத் தொழிலில் இருந்து யாரும் கழட்டிக்க முடியாது. எங்க அண்ணாத்தை வெட்டிடிடுவார். எனிக்கி தெரிஞ்சே அவரு அஞ்சு கொலை செய்திருக்கார். நானு உன் பேச்சைக் கேட்டால் நானே அவருக்கு ஆறாவது கொலை, நீ ஏழாவது..."

சரோசாவும் இளங்கோவும் ஒருவரை ஒருவர் சங்கடத்தோடும், இயலாமையோடும் பார்த்துக் கொண்டார்கள்.