Chapter 14
அந்தப் பந்தல் மாளிகையிலிருந்து வெளியேறப் போன இரண்டு கிங்கரர்களும் உடம்பை குழைவாக்கிக் கொண்டே குழையடித்தார்கள். “வாங்கண்ணே வாங்கண்ணே” என்று பரபரப்பான குரலோடு, கண்ணுதவி இல்லாமலே பின்னோக்கி நடந்தார்கள். உள்ளே வந்தவர், அந்த மணல் பரப்பில் வளையம் போட்டுக் கிடந்தவர்களை நோட்டமிட்டார். கருவாடும், கிளாசுமாக இருந்த அவர்கள், அவரை கண்டுக்கவில்லை. ஒரேயொருத்தர் நாலு கிளாசுகளை உள்ளே தள்ளியபிறகு ஞானத்தின் உச்சநிலையில் இருந்தார். பரம சாதுவாகத் தோன்றிய அவர், அந்தப் புதிய மனிதரைப் பார்த்து ஆசீர்வாதம் செய்ய கையை தூக்கியபோது, துரை அந்த கைக்குள் இன்னொரு கிளாசை வைத்தான்.
உள்ளே வந்தவருக்கு, ஐம்பது வயதிருக்கலாம். முகம் காய்ப்புக் காய்ப்பாயிருந்தது. தலை பம்மைபோல் தோன்றியது. ஆசாமி கொஞ்சம் குள்ளம்; ஆனாலும் அழுத்தமான உடம்பு. பழுத்த மஞ்சள் நிறத்தில் சபாரி உடை. தலைமட்டும் கொக்கு மாதிரி துண்டாகத் தெரிந்தது. ஆக்கல் (ஊரல்), காத்தல் (காய்ச்சல்) அழித்தல் (விற்றல்) ஆகிய முப்பெரும் தொழில்களைச் செய்யும் மூர்த்திமும். ஒருகாலத்தில் பைசாக்களுக்காக ஏங்கியவரை, இப்போது லட்சங்கள் ஏக்கமாய் பார்க்கின்றன. பேங்கில் உள்ள லாக்கர்கள் ராமனுக்குக் காத்திருந்த அகலிகை போல் காத்திருக்கின்றன. விருகம்- பாக்கத்திற்கு அப்பால் உள்ள காட்டுப் புதர்களில் தலைகளை மட்டும் காட்டிக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பானைகளையும், மகாபலிபுரம் சாலைகளில் மயானப்பகுதிகளில் காய்ச்சும் பானைகளையும், நகரம் எங்கும் நடமாடும் வேன்களையும் ஆதிக்கம் செய்பவர். ஆனாலும், அவரிடம் சில நல்ல குணங்கள் உண்டு. குடிக்க வைப்பாரே தவிர, அடிக்கமாட்டார். அடைக்கலம் என்று வந்தவர்களைக் காட்டிக் கொடுக்க மாட்டார். இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள். பார்ப்பதற்கு மனிதர் பரமசாது. கேட்பதற்கோ இனிமையான குரல்... பழகுவதற்கு சர்வகட்சி மனிதர். அவரிடம் நன்கொடை வாங்காத கட்சிகளோ, பிரமுகர்களோ இல்லை என்று சொல்லலாம்.
சரோசா, ஏதோ பேசப்போனபோது, துரை அவள் வாயை தன்கழுத்தால் மறைத்தபடி, "வாங்கண்ணே, உள்ளே வாங்கண்ணே! நாய் மாதிரி ஓடிவர நானிருக்கப்போ... நீங்க எதுக்கண்ணே இங்க வந்தீங்க” என்று அசல் நாய்மாதிரி பிட்டத்தை ஆட்டிக்கொண்டு, அவரை நெருங்கிப் போனான். அந்த மனிதர்“ஏன் நான் இங்க வரப்பிடாதுங்கிறீயா” என்று சொல்லி விட்டுச் சிரித்தார். கடிகார தங்கச் செயினையும், அதற்கு இணையாகக் கட்டியிருந்த ஒரு தாயத்தையும் தடவி விட்டுக்கொண்டார்.
"உள்ளே வாங்கண்ணே!"
"இப்போ அதுக்கு நேரமில்லை.”
துரைக்குப் புரிந்துவிட்டது. அண்ணன், கணக்கு வழக்குப் பார்க்க வரல. போலீஸ் ரெய்டப்பத்தி எச்சரிக்கவும் வரல. அப்படி வந்திருந்தா முன்பக்கமாய் வந்திருப்பார். அங்கேயே சோபாசெட்டில் உடம்பைக் கிடத்திக்கொண்டு சாந்தியோடு சிரிப்பும் கும்மாளமுமாய் பேசிக் கொண்டிருப்பார். 'துரை எங்கே' என்று அவளிடம் ஒப்புக்குக்கூட கேட்டிருக்க மாட்டார். அண்ணனின் ரத்தக்கண்களைப் பார்க்கும்போது அவர் 'அதுக்குத்தான்' வந்திருக்கார். துரை எண்ணெயும் நெய்யுமாய் குழைந்தான்.
"அண்ணே, நம்ப ஆட்களுக்கு சொல்லியனுப்பட்டுமா?"
"இதை கேட்டுக்கிட்டா செய்யணும்?”
துரை உள்ளே ஓடிப்போய் ஒரு நாற்காலியை எடுக்கப்போனான். பிறகு இந்த மாதிரி சமயங்களில் அண்ணன், ஒற்றைக்காலில் நின்றாலும் நிற்பாரே தவிர, உட்காரமாட்டார் என்று உள்ளே ஓடினான். ஜன்னல் வழியாக அண்ணனைப் பார்த்த தனது வீட்டுக்காரியை, அவர் கண்ணில் காட்டாமலே உள்ளே இழுத்துப்போனான். வெளியே நின்ற அண்ணனின் கண்களில் அப்போதுதான் சரோசா விழுந்தாள். அன்போடு கேட்டார்.
"என்ன சரோசா டல்லா இருக்கே?"
"அண்ணாத்தே இருந்தும், நானு டல்லாப்போற தலைவிதி வந்துட்டு.”
"நானும் கேள்விப்பட்டேன். இந்த துரை கையில என்ன வளையல் போட்டுகினு இருந்தானா?"
"பூட்டுப்பூட்டு நச்சிட்டாங்கண்ணே. முதுக பென்ட் எடுத்துட்டாங்கண்ணே. இன்னும் தலைய திருப்ப முடியலண்ணே. அண்ணன் இப்படிப் பேரும் புகழுமா இருந்தும் நானு பொம்மனாட்டி நாதியில்லாம போயிட்டேண்ணா.''
அண்ணன், சரோசாவின் பக்கம் போகப்போனர். பிறகு அது தனது தகுதிக்குக் குறைவு என்பதுபோல் அவளை தன்பக்கம் வரும்படி கையாட்டினார். அவள் வந்ததும், அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே ஆறுதல் சொன்னார்:
“நீ சொல்லிட்டே... நான் சொல்லல. அந்தச் சமயம் பார்த்து அண்ணன்வேற ஆந்திராவுக்கு அரசியல் விஷயமாய் போயிட்டேன். இந்த சோமாரி துரை, ஒரு டெலிபோன்ல எனக்குச் சொல்லி யிருக்கலாம். அனுமார் சஞ்சீவி மலைய தூக்கிக்கிட்டுப் போனதுமாதிரி நீ இருந்த போலீஸ் ஸ்டேஷனையே தூக்கிக்கிட்டு வந்து ஒடைச்சிருப்பேன். இப்பவும் குடிமூழ்கிடல. ஸ்டேஷன்ல ஒன்ன எந்தெந்தப் பசங்க ஒதச்சாங்களோ அவங்க நம்பர்ங்களை என்கிட்டக் குடு... அப்புறம் என்ன நடக்குதுன்னு பாரு. ஏண்டா துரை ஒன் பொண்டாட்டிய போலீசுல இப்படி கூட்டிக்கிட்டுப் போய் ஒதுச்சா நீ சும்மா இருப்பியாடா கயிதே, கயிதே. சரோசா நம்மப் பொண்ணுடா.'
கையாட்களுக்குத் தகவல் அனுப்பிவிட்டு மூச்சிறைக்க அங்கு வந்த துரை, அண்ணனை பயந்து பார்த்தான். அவன் சிந்தனையெல்லாம் அண்ணனை சம்சாரம் பார்க்கிறாளா என்பதில்தான் இருந்தது. அந்தக் கணக்கில், சரோசா கணக்கைக் கழித்துவிட்டான்.
அண்ணன், அதட்டலோடு பார்த்தபோது, துரை பேச்சை மாற்றினான். லாக்கப்பிலிருந்த சரோசாவை தான் மீட்பதற்குப் புறப்பட்டபோது தனக்குன்னு வாய்ச்சவள் 'போகாதே போகாதே என் கணவா' என்று தன்னை அழவைத்துப் பேசியதை அண்ணனிடம் எப்படிச் சொல்வது? ஆகையால் அவன் பேச்சை மாற்றினான்.
"ரெய்டு வராங்கன்னு சொல்றாங்கண்ணே!”
"நான் கேட்டதுக்குப் பதில் சொல்லாம, பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்கு எட்டணா என்கிற கதையில பேசுறீயே? என்ன சரோசா! ஏதோ எங்கிட்ட சொல்லணும்போல நிக்கிறே?”
"ஆமாண்ணே... என்ன போலீசுல பிடிச்சுக்கொடுத்த ஒரு பிள்ளாண்டான் ரோதனை தாளலண்ணே. அண்ணன் கம்பெனியில சரக்க எடுத்துக்கிட்டு பஸ்சுல கர்ப்பிணியா சிங்காரிச்சுட்டு வந்தேன்னா, இவன் என்னடான்னா மோட்டர் பைக்கில பாலோ பண்றான். இப்பகூட மெயின் ரோட்ல நிக்கானாம். எனக்கு பயமா இருக்குண்ணே. பழையபடியும் உள்ளே போயிட்டா அப்பால நயினா கதி?"
துரை, சரோசாயை அண்ணன் போனபிறகு தாளிக்க வேண்டும் என்று உடனடியாகத் தீர்மானித்தான். ஆனால், சரோசாவோ கண்கள் துருத்தி நிற்க, லேசாய் விம்மப்போனாள். அதற்குள் அண்ணன், அவள் தலையை தடவியபோது, அவளுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்பட்டது. அவரும், அங்கே நின்ற அம்மைத்தழும்பனை அதட்டினார்:
"ஏண்டா டேய், வெள்ளையா! நம்ம ஏரியாவில, அவன் நம்மள டபாய்க்கிறான்னா என்னடா அர்த்தம்? இன்னுமா பயல அந்தப் விட்டுவச்சிருக்கீங்க? உங்களால முடியாட்டி சொல்லுங்கடா சோதாப்பசங்களா."
'அவன ஒழுங்கு பண்ணத்தாண்ணே புறப்பட்டோம். அதுக்குள்ளே அண்ணன் வந்துட்டீங்க. நாலு நாளைக்கி முன்னேயே முடியவேண்டிய கேசு. சரோசாதான் தடுத்துட்டாள்.”
"நெசந்தாண்ணே, இவங்கோ அவன சாவடியா அடிச்சிட்டால், அப்பால பங்களாக்காரங்க என்னை போலீசுல ஒப்படைச்சிடப் படாதேன்னு பயந்தது நிசந்தாண்ணே. என்னோட பயத்தில நியாயமிருக்குண்ணே. ஏன்னா, பழகின போலீசே பயங்கரமா அடிச்சிட்டாங்கண்ணே."
"போலீஸ், பெரிய போலீஸ்! நானு பார்க்காத போலீசா? பொறுப்ப என்கிட்ட விட்டுடு. அவன் பங்களாவக்கூட இடிச்சிக்காட்டுறேன். சில விஷயங்களுல நாம முந்திக்கணும். அவன ஒன்னை பாலோ செய்யறது, என்னை செய்யறதுமாதிரி. இன்னிக்கே அவன ஒரு வழி பண்ணிடறேன்.”
அண்ணன், சபாரி சட்டையை தூக்கிப்பிடித்து, பனியன் போடாத வயிற்றைக் காட்டியபோது, பத்துப்பதினைந்துபேர் தற்செயலாய் வருவதுபோல் ஒருவர்பின் ஒருவராக வந்தார்கள். உகாய் பேன்ட் போட்டு, சட்டைகளை இன் செய்த மூன்று பேர்... பின்பக்கமாய் முடிவளர்த்த மூன்றுபேர்... அகலவாக்கில் இரண்டு, நீளவாக்கில் நான்கு... அத்தனைபேரும் அண்ணனை ஒரே கண்ணாய் பார்த்தார்கள். ஆனால் அண்ணனோ சுற்றும்முற்றும் பார்த்தார். அதைப் புரிந்துகொண்ட துரை, இன்னும் குடிக்கக் கேட்ட பரமசாது மனிதரையும், மணலில் புரண்ட ஒருவரையும் கழுத்தைப் பிடித்து தூக்கியபோது நான்கைந்துபேர் அவர்களை மென்மையாகப் பிடித்துக் கொண்டு வெளியே போனார்கள். வெளியே கோவிந்தன் கூப்பாடு போட்டான். "இன்னாய்யா பொண்டாட்டிகூட இப்படி தொடமாட்டாள்... அப்படி தொடறீங்களே. டச் பண்ணாதய்யா. நீயுமாச்சு உன் சரக்குமாச்சு; ஒரு சொம்பு கண்டக்கஞ்சிக்கி ஒன் ஸ்பெஷலு ஜமாய்க்குமா? இன்னாய்யா ஸ்பெஷலு... பொல்லாத ஸ்பெஷலு.'
வெளியே போட்ட கூப்பாட்டை அண்ணன் சிரித்துக் கொண்டே உள்வாங்கினார். பிழைச்சுப் போகிறான் என்பது மாதிரியான சிரிப்பு. எவரையும் தன்னால் எதுவும் செய்யமுடியும் என்றாலும், அப்படி முடியக்கூடியதை செய்யாமல் இருக்கும் தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தும் சிரிப்பு. அந்தச் சிரிப்பு போனதும், அண்ணன் கிசுகிசுப்பாகப் பேசினார்:
"இன்னிக்கி நைட்ல கரைக்டா ஒருமணிக்கு, நம்ம லாரி தியாகராய நகர்ல ஒரு பங்களாவுக்குப் போகுது. அந்த வீட்டுல இருக்கிறவங்கள நாம வழக்கமா செய்யறது மாதிரி செய்துடணும். நம்ம ஆசிரமத்துக்கு எட்டு மணிக்குள்ள வந்திடுங்க. இந்தா துரை, ஆயிரம் ரூபா... பசங்களுக்கு கேக்கறதயெல்லாம் கொடு... ஏழரைக்கெல்லாம் அவங்கள வழியனுப்பி வைக்கிறதுக்கு நீதான் காரண்டி."
"சரிண்ணே! எந்த பங்களா? என்ன விஷயமாய்?"
“ஒனக்கு சம்பந்தமில்லாத விஷயம்... ஆனாலும் சொல்றேன். அந்தப் பங்களாவை ஒரு சேட்டு இருபது லட்ச ரூபா கொடுத்து வாங்கியிருக்கான். ஆனா அந்த வூட்டுல பத்து வருஷமா வாடகைக்கு இருக்கிற சோமாரி பெரிய ஆபீசராம். காலிபண்ண மாட்டானாம். கோர்ட்டுக்குப் போடான்னு சொல்லிட்டானாம். சேட்டு, என்னையே கோர்ட்டா நினைக்கிறான். காலி பண்ணாதவனை 'காலி' பண்ணாம முடியுமா?"
அனைவரும், அண்ணனை அதிசயித்துப் பார்த்தார்கள். சிலர் விசிலடித்துக் கொண்டார்கள். துரை தவிர மற்றவர்களுக்குக் கொண்டாட்டம். ஆசிரமம் என்று சொல்லப்படும் அனாதரவான இடத்தில், உடற்பயிற்சி நிலையம் என்ற பெயரில் உள்ள ஒரு கல் கட்டிட வீட்டுக்குள் இருக்கும் சைக்கிள் செயின்கள், பட்டாக்கத்திகள், உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு லாரியில் போகவேண்டும். அண்ணன் காட்டுற பங்களாவில இருக்கிற வங்களை ராத்திரியோட ராத்திரியா தூக்கித்தூக்கி லாரியில போடணும். உயிருக்கு ஆபத்து இல்லாம ஊமைக் காயங்களாய் ஏற்படுத்தி, தட்டுமுட்டுச் சாமான்களோட ஏத்தணும். அப்புறம் தெற்கே செங்கல்பட்டுப் பக்கமோ, வடக்கே எண்ணூர் பக்கமோ நடுக்காட்டுல விட்டுடணும். ரோந்து போலீஸ் பார்த்தால், அண்ணன் கவனிச்சுக்குவார். அந்த வாடகைக்கார ஆபீசரு குடும்பத்தோட கோர்ட்டுக்குப் போனால்..? அண்ணனுக்கு அதுக்குன்னே வக்கீலுங்க இருக்காங்க. அப்படிப்பட்ட ஒரு வீட்டுல இப்படிப்பட்ட ஒரு குடும்பம் இல்லவே இல்லன்னு நிரூபிச்சுடுவாங்க.
கையாட்கள், ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று ஆனந்தக் கூத்தாடியபோது, துரை மட்டும் வயிற்றைத் தடவினான். அண்ணனுக்கு இந்த விவகாரத்தில் குறைஞ்சது அய்ந்து லட்ச ரூபாய் கிடைக்கும். இந்தப் பசங்களுக்கு மொத்தம் இருபதாயிரம். எனக்கு அஞ்சே அஞ்சாயிரம்... அற்பக்காசு. அப்புறம் அவ்வளவும் முள்ளங்கிப் பத்தையா அண்ணனுக்கே! அட கண்றாவியே! இன்னாய்யா நியாயம்?
அண்ணன், தனது மோவாயை மோப்பம் பிடிப்பதைப் பார்த்த துரை, சமாளித்தான். “வூட்டுக்குள்ள வாங்கண்ணே" என்று உள்ளே நடமாடிய வீட்டுக்காரியை நோட்டம் போட்டபடியே கேட்டான், நானு இல்லாதப்போ முன்பக்கமா வந்து அந்த முண்டக்கிட்ட குழையுறது. இருக்கப்போ பின்பக்கமா வாரது... இந்த அண்ணன் எந்தப் பக்கத்துல சேர்த்தி?
அண்ணன், லேசாய் புன்முறுவல் செய்தார். பிறகு ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை சரோசாவின் கைகளில் திணித்துவிட்டு, "சீக்கிரமா வாங்கடா, முடிச்சப் பொறவு குடிக்கலாம்; குடிச்சப் பொறவு முடிக்க முடியாது" என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.
அந்த செட்டு, அண்ணன் பின்னால் இப்போது போகக்கூடாது என்பதைப் புரிந்து கொண்டு அங்கேயே நின்றது. ஆனால், அண்ணனுடன் உருட்டுக் கட்டைகளோடு நான்கு பேர் புறப்பட்டார்கள். அவர்களுக்கு எதிரே வந்த பன்றிகளையும், கோழிகளையும் விரட்டியபடியே வழியமைத்துக் கொடுத்தார்கள். அண்ணன் கோவில் வளாகத்திற்கு வெளியே வந்தபோது, அவர் முன்னால் ஒரு மாருதி கார் வந்து நின்றது. உட்காரப்போன அண்ணனைப் பார்த்துக் கண்ணடித்து, அருகேயுள்ள ஒரு விடுதியில் இளங்கோ ஒரு சர்பத்தையோ, குளிர்பானத்தையோ உறிஞ்சிக் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார்கள். அண்ணனும் அங்கே பார்த்து லேசாய் தலையாட்டிவிட்டு, ஒருவன் காதில் ஏதோ கிசுகிசுத்தார். மாருதி, காற்று வேகத்தில் பறந்தது.

