Chapter 16
பூக்கார ருக்குமணி போட்ட கூச்சலில் வரவேற்புக்காரி வசந்தா திடுக்கிட்டு எழுந்தாள். அதற்குள் ஒரு டெலிபோன், அதுவும் காதலனிடமிருந்து. அந்த டெலிபோன் குமிழை ஆசைப்பட்டவனின் முகமாக அனுமானித்துக்கொண்டு அதைக் கன்னத்தில் போட்டுப் புரட்டி சிரிப்பும் சிணுங்கலுமாய் "நீங்க ஒண்ணும் பேச வேண்டாம்" என்று பேசியபடியே மீண்டும் இருக்கையில் உட்கார்ந்தாள். காதல் பேச்சுக்கு முன்னால் எந்தக் கூச்சல் எடுபடும்?
சரோசாவும் மாடிப்படிகளில் தாவிக்குதித்துப் போனாள். கோபமாகப் பார்த்த ருக்குமணியை அவள் கூனிக்குறுகிப் பார்த்தாள். ‘ஏன் இப்படிக் கத்துறேன்னு' திருப்பிக் கேட்க நினைத்தாள். ஆனால் வாய்க்குள் நாக்குப் புரளவில்லை. என்றாலும், ருக்குமணியின் தோளைப் பிடித்துத் தன் பக்கமாக இழுத்தாள். இதற்குள் சத்தம் கேட்டு கீழே வந்த நோஞ்சானிடம் “இது எங்க குடும்ப விவகாரம், முதல்ல இந்தப் பிள்ளாண்டான கவனிண்ணே” என்றாள். சிறிது தயங்கிய அந்த ஆசாமி வாசல்படியில் ரகளை ஏற்பட்டால் வெளியே தெரியும் சிவப்புத் தொப்பிகள் உள்ளே வரலாம் என்று பயந்து, தானும் அந்த ஸ்டெச்சரில் கைகொடுத்து இளங்கோவை மேலே தூக்கிக்கொண்டு போனான். அவனைக் கொல்வதற்கு அப்படி ஒரு சதி நாடகம் நடப்பதாக நினைத்த ருக்குமணி கூப்பாடு போடப்போனாள். இதற்குள் பழமும் தின்று கொட்டையும் போட்ட சரோசா, அவள் வாயைப் பொத்திக் கொண்டு மாடிப்படிகளில் நகர்த்தி அந்தப் படி தட்டிய சமதளத்தில் அவளை நிறுத்தினாள். அவள் பிடியிலிருந்து விடுபட முடியாமல் திணறிய ருக்குமணியை தோளை அழுத்தி, கீழே உட்கார வைத்துவிட்டு இவளும் உட்கார்ந்தாள். அவளைப் பார்த்து கையெடுத்துக்கும்பிட்டுக்கொண்டும், அவள் கத்தப்போனால் வாயை மீண்டும் பொத்துவதற்காக ஒரு கையை அகப்பை மாதிரி வைத்துக்கொண்டும் அவளிடம் மன்றாடினாள்:
"இந்தா பாரும்மா, நானுதான் அந்தப் பிள்ளாண்டான ஆள் வைச்சி அடிச்சேன். அவன் துடிக்கிற துடிப்பப் பார்த்து ரசிக்கணும்னுதான் அந்தப் பக்கமா வந்தேன். நான் நினைச்சிருந்தா ஒரு விசிலடிச்சி என் தோஸ்துகள வரவழைச்சி ஒன்னையும் அவன மாதிரியே செய்திருக்கலாம். செய்யக்கூடியவதான். அப்படியே இல்லாட்டியும் வேன்ல போகறப்போ, கோவில் பக்கமா ஒரு சத்தம் போட்டிருந்தா, என் தோஸ்துங்க வந்து வேனை மறிச்சிருப்பாங்க. இப்பக்கூட எங்கண்ணனுக்கு ஒரு போன் போட்டா, நீ தான் இவன கொன்னேன்னு போலீசுலே ஒன்னையே என்னால உள்ள தள்ளமுடியும். ஆனால், நீ எப்போ இந்தக் குழந்தப் பையன் ‘இந்தப் பாவிக்காக பெரிய அதிகாரிய பார்த்தான்னு சொன்னியோ அப்பவே, நான் மனசு மாறிட்டேன். இந்த பிள்ளாண்டான் கேவலம் ஒரு குப்பத்துக்காரிக்கு - அதுலயும் தன்னையே அடிச்சிப்போட்ட ஒர்த்திக்கி - போலீசுல வாதாடினார்னா அது மனுஷன் செய்யற காரியமில்ல; கடவுளாலதான் அப்படிச் செய்யமுடியும். இது சத்தியமான வார்த்த. முதல்ல அந்தப் பிள்ளாண்டான காப்பாத்தணும். அவரு சரியாகட்டும். அப்புறம் நீ வேணும்னாலும் என்னை செய்துக்கோ. நான் எங்கயும் போகலை. இங்கதான் இருக்கப் போறேன்.”
ருக்குமணி, அவளையே உற்றுப் பார்த்தாள். அவள் சொல்வதில் ஏதோ உண்மை ஒலிப்பதுபோல் இருந்தது. இதற்குள் இளங்கோவை ஒரு அறைக்குள் கொண்டு போவதை, இரு பெண்களும் பார்த்தார்கள். உடனே அங்கே ஓடிப் போனார்கள்.
முதல் மாடியில், முனையில் உள்ள அறை. ஒரு கட்டிலில், ஒரு ஸ்பிரிங் சாய்வுப் பலகையில் அவனை சாய்த்துப் போட்டார்கள். மெத்தை போடப்பட்ட இரும்பு ஸ்பிரிங் கட்டில். பக்கத்திலேயே இருநாற்காலிகள். ஒரு வாஷ்பேஸின். வசதியாகத்தான் இருந்தது.
இளங்கோ மல்லாந்து கிடந்தான். மூக்கில் ரத்தம் கசிந்து அதன் துவாரங்களை அடைத்தது. கண் விழிக்கப் பார்ப்பதுபோல் இமைகள் துடித்தன. சரோசா அவனையே பார்த்தாள். அதைத் தாங்க முடியாததுபோல் சுவரில் முகம் போட்டாள். அந்த மஞ்சள் சுவரில், கண்ணீர் வெண்கோலம் போட்டுக் கீழிறங்கியது. இந்தச் சமயத்தில் நடுத்தர வயது டாக்டர் ஒருவர், கூட வந்த நோஞ்சானைத் திட்டிக்கொண்டே உள்ளே வந்தார் :
"கண்டவனை எல்லாம் உள்ளே கொண்டு வாறியே, உனக்கு பொறுப்பு இருக்கா? ஏம்மா, கவுர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகாம என் பிராணனை எதுக்கு வாங்கறே? போலீஸ் கேஸ்... போலீஸுக்கு முதல்ல தகவல் கொடுக்கணும்.”
"முதல்ல இவர கவனியுங்க டாக்டர். நான் கீழே போய் டெலிபோன்ல போலீஸுக்கு சேதி செல்லிட்டு வாறேன்.”
“நீ இருக்கியே... நீ எப்போ இங்க சேந்தியோ, அப்பவே, இந்த ஆஸ்பத்திரி உருப்படாமப் போயிட்டு. நர்ஸிங் ஹோம் லாட்ஜா மாறிட்டு. இதுக்கு முன்னாடி தாலுகா ஆபீஸ்ல பியூனா இருந்தியோ?”
டாக்டர், இப்போது சிரித்து விட்டார். கையில் வைத்திருந்த சிரிஞ்சையும் ஊசியையும் அலாவுதீன் மந்திரம் மாதிரி ஏதோ செய்துவிட்டு, இளங்கோவின் கையில் ஊசி போட்டார். நரம்பு ஊசியோ, சதை ஊசியோ? சுரணையற்றுக் கிடந்தவன், இப்போது வலி தாங்க முடியாமல் அங்குமிங்குமாய் தலையை ஆட்டினான். டாக்டர், வார்டுப் பையன் கொடுத்த பெரிய வட்டக் கண்ணாடி ஒன்றை இளங்கோவின் தலைக்குமேல் படரவிட்டு உற்றுப் பார்த்தார். “அடடே, எவ்வளவு முள்ளுங்க” என்று அவரே சொல்லிக் கொண்டார். பிறகு, எவர்சில்வராய் மினுமினுத்த ஒரு இடுக்கியை தலைக்குள் விட்டு ஒவ்வொரு முள்ளாக எடுத்துப் போட்டார். அந்தச் சமயம், வார்டுப் பையன் (அவன்தான் அங்கே நர்ஸ்) டிஞ்சரையோ அல்லது வேறு எதையோ நனைத்த பஞ்சை வைத்து இளங்கோவின் காயங்களைத் துடைத்து விட்டான். நெற்றிப் பொட்டை “எம்மாடி” என்று சொன்னபடியே பார்த்துவிட்டு, பஞ்சை அதனருகே கொண்டு போனான். இளங்கோ வலி பொறுக்க முடியாமல் கைகால்களை அங்குமிங்குமாய் ஆட்டினான். டாக்டர் அங்கே நின்ற இரண்டு பெண்களையும் பார்த்து, "பணத்தைக் கட்டிட்டிங்களா? அப்படியாவது எனக்கு சம்பளம் வருதான்னு பார்க்கலாம். சரி வெளியில நில்லுங்க" என்று சொல்லி அவர்களை விடாக்கண்டராய் வெளியேற்றிவிட்டு, கதவைத் தாழிட்டார்.
அந்த அறைக்கு வெளியே வந்த சரோசாவிடமும் ருக்குமணியிடமும்'ஸ்பெஷல்' மனிதர் கண்டிப்போடு பேசினான் :
"ஆபத்துக்குத் தோஷமில்லேன்னு சேர்த்துட்டேன். நான் இருந்ததால டிபாசிட் பணம் கட்டாமலே சேர்த்தாச்சு. ஆனால் அப்படி டிஸ்சார்ஜ் செய்ய முடியாது. குறைஞ்சது ஆயிரம் ரூபா கறந்துடுவாங்க. என்ன சொல்றே சரோசா?”
“அந்தக் கவலையே உனக்கு வேண்டாமண்ணே. இன்னும் ஒரு அவர்ல தந்துடறேன். நீ ஸ்பெஷலுக்கு வரப்போ தலையை அடகு வச்சாவது தாறேன். அண்ணன் என்ன உதவாமலா போயிடுவாரு? என்னவோ என் போதாத காலம்."
சரோசா மேற்கொண்டு பேச முடியாமல் அரைகுறை வார்த்தைகளோடு விக்கி நின்றாள். உள்ளே பயங்கரமான சத்தம். ருக்குமணிக்கு, டாக்டர் விஷ ஊசி போடுகிறாரோ என்று இன்னும்கூட சந்தேகம். சரோசாவை முறைத்தாள். ஸ்பெஷல் பேர்வழி விளக்கம் கொடுத்தார் :
"நெத்திக் காயத்துக்கு டாக்டர் தையல் போடுறார்னு நெனைக்கேன். எப்படியோ ஆசாமி தப்பிச்சிட்டான். ஏன் சரோசா, இவனப் பார்த்தா பட்டைக் கேஸாத் தெரியல... நல்ல பையனாய் தோணுது. அப்படி இருக்கையில் உன் வழில எப்படி வந்தான்.”
"அது பெரிய கதை அண்ணாத்தே. சொன்னாலும் தீராது, சொல்லியும் மாளாது. அந்தச் சக்களத்தி, பொறம்போக்கு முண்டை, என்னை எந்த நேரத்துல பெத்துப்பூட்டாளோ, அப்பவே..."
"சரி சரி, நான் கீழே போய், வசந்தாவை சமாளிக்கேன். காசுன்னு வந்துட்டா காதலனையும் மறந்துடறவள். சீக்கிரமா வா; ஸ்பெஷல் போட்டாப்போலவும் ஆச்ச... ஆஸ்பத்திரி காச வாங்கினாப்லயும் ஆச்சு.”
இப்போதே சரக்கை மோப்பம் பிடித்தபடி நோஞ்சான் ஆசாமி போனதும், தனித்து விடப்பட்ட ருக்குமணியும் சரோசாவும் சிறிது நேரம் ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை. பிறகு பூக்காரியின் ருத்ரப்பார்வையை சாராயக்காரி தவிர்த்தாள். இறுதியில் ருக்குமணி மறக்கக்கூடாததை மறந்துவிட்டு இப்போ அது நினைவுக்கு வந்ததுபோல் திடுக்கிட்டுப் பேசினாள்:
"நல்லவேளை, இப்போதாவது ஞாபகம் வந்துட்டு... இளங்கோவோட வீட்ல போயி சேதி சொல்லி, அவங்களைக் கூட்டிட்டு வரணும். இங்கயே இரு; அவங்களுக்கு நீ ஜவாப் சொல்லியாகணும். அப்புறம் உன்பாடு, அவங்கபாடு. அந்த கஸ்மாலம் சாரு ரமணன், நீ சத்தா சமுத்திரத்துக்குள்ள போனாலும் போலீஸ் வலையால வீசிப் பிடிச்சுடுவான். அவங்க வாரது வரைக்கும் இங்கயே நில்லு. சொல்றது காதுல விழுதா?"
சரோசா, காதில் விழுந்ததை கண்ணீராகக் காட்டினாள். பிறகு அதை லேசாகச் சுண்டிவிட்டு கைகளைக் கட்டிக் கொண்டாள். நடக்கது நடக்கட்டும் என்பது மாதிரி சிறிது நின்றுவிட்டு, பிறகு ருக்குமணியைப் பார்த்துப் பதிலளித்தாள்:
“நீ நெனைக்கிறது மாதிரி நடக்காதுன்னாலும், நான் போகப் போறதில்லே. அனுமார், லவகுசாகிட்ட கட்டுப்பட்டது மாதிரி நானும் அண்ணன்கிட்டப் போகாமல், இங்கயே கட்டுப்பட்டு நிக்கேன். இளங்கோ மன்னிச்சிடுவார்னு ஒரு நம்பிக்கை. எதுக்கும் அவரு கண்விழிச்ச பிறகு நீ போ; இல்லாட்டி நானே கொன்னுட்டேன்னு நீ சொன்னாலும் சொல்வே."
"ஆனாலும் உனக்கு இவ்வளவு ரப்பு ஆகாதுடி. பாவி! உன்னைக் காட்டியும் கொடுக்க முடியல. காட்டாமலும் இருக்க முடியல. உனக்கு நான் உடந்தைன்னு கடைசியில நானுகூட ஜெயிலுக்குப் போகணும். என்னவோ, அந்தப் புள்ளாண்டான் நல்ல காலம், நான் அந்தப் பக்கம் வந்தேன். என்னோட வீட்டுக்காரனத் தேடி அங்கே வந்தேனோ, இதுவப் பார்த்தேனோ... பாவி மனுசன், பஜார்ல ஒரு பங்களாம்மா விசயதசமிக்குன்னு நாலு தேங்காயும் ஒரு சீப்பு வாயப் பயமும் மூணு ஆப்பிளும் வாங்கி எங்கிட்டக் கொடுத்தாங்க. 'அவசரமா கொஞ்சம் வெளியில போறேன். உன் வீட்ல வச்சுக்க, ஒரு அவருக்குப் பிறகு பங்களாவுல வந்து கொடுத்துடு'ன்னு அந்தம்மா சொல்லிச்சு. வீட்டுக்குக் கொண்டு வந்தால், நானு மீனு கழுவிக்கிட்டு இருக்கப்போ அந்த சோமாறி அவ்வளத்தையும் தூக்கிக்கினு சாராயத்துக்கு விலை கொடுக்கப் பூட்டான். அந்தம்மா என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க? அதுங்கிட்டருந்து தேங்காய மீட்கறதுக்கு வந்தா நீ இந்தப் புள்ளாண்டானை தேங்காயை உடைச்சது மாதிரி உடைச்சுட்டே."
"அப்போ நீ கோவிந்தோட சம்சாரமா?"
"அது பேரு கோவிந்து இல்ல; என்ன கோவிந்தா பாட வைக்கிற கஸ்மாலம்."
அப்படியும்,இப்படியுமாய் ஒருமணி நேரம் ஆகிவிட்டது. இரண்டு பெண்களும் இளங்கோவின் அறைக் கதவை அவ்வப்போது பார்த்துக் கொண்டார்கள். திறந்தபாடில்லை. ருக்குமணி அவ்வப்போது 'வீட்ல போய் சொல்லப் போறேன்' என்று முருங்கை மரத்தில் ஏறியபோது, சரோசா, பெண் விக்ரமாதித்யையாக மாறினாள். இதற்குள் கதவு திறக்கப்பட்டது. வெளியே வந்த டாக்டரை இரண்டு பெண்களும், அவசர அவசரமாய் முண்டியடித்த அவரை உள்ளே தள்ளிக்கொண்டே அந்த அறைக்குள் போனார்கள். டாக்டர் "சீ... சீ..." என்று சொன்னபடியே கைக்குட்டையால் ஸ்டெத்தாஸ்கோப்பை துடைத்து விட்டார். பிறகு தான் குணப்படுத்திய பேஷண்டை பெருமிதம் தாங்க முடியாமல் பார்த்துக்கொண்டே நின்றார்.
கட்டிலில் கிடந்த இளங்கோவின் தலையில் சில இடங்களில் மொட்டை போடப்பட்டு, பிளாஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. நெற்றிமேட்டுத் தோல் இழுத்துக் கட்டப்பட்டு வெள்ளைக் கயிறு மாதிரி ஒன்று தெரிந்தது. வாய்க்குள்ளும் நான்கைந்து பிளாஸ்டர்கள். கால்களில் சின்னச் சின்னக் கட்டுக்கள். எல்லாவற்றிற்கும் மேலாக வலது கை கழுத்தோடு சேர்த்து வெள்ளைத் தூளியில் வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டு ருக்குமணி “ஐயையோ" என்றபோது, டாக்டர் “பயப்படாதே. கை முறியலே. பிசகி இருக்கு; சரியாயிடும். இது என்ன உன் வீட்டுக்காரனா?” என்றார்.
“எனிக்கு தம்பி சாரே..."
“அப்போ இந்த அம்மாவோட வீட்டுக்கார மச்சானா?"
அந்த இரண்டு பெண்களும் குறுஞ்சிரிப்பாய் சிரித்தபோது அவர்கள் நன்றியில்லாமல் தன்னைக் கிண்டல் செய்வதாய் அனுமானித்த டாக்டர், இன்னும் நன்றி தெரிவிக்காத அந்தப் பெண்களைப் பார்த்து, "பேஷண்டை டிஸ்டர்ப் செய்யக்கூடாது. கெட் அவுட்” என்றார். பிறகு அவரே வெளியேறி விட்டார்.
இளங்கோ, கண்விழித்தான். எல்லோரும், எல்லாமும் மங்கல் மங்கலாய்த் தெரிந்தன. அவனைப் போல் அடிபட்டுக் கிடப்பது போல் தோற்றம் காட்டின. கண்களைக் கசக்கினான். விவகாரம் மெல்ல மெல்ல விரிந்தது. அடிபட்ட வரலாறும் தெரிந்தது. ஆனால் இப்போது இருக்கும் இடம்தான் புரியவில்லை. 'அம்மா' என்று ஒரு தடவையும், 'பாமா' என்று இன்னொரு தடவையும் மனதுக்குள் கூவியபடியே, தலையைத் தூக்கினான். ருக்குமணிதான் கண்ணில் பட்டாள். "எப்படியோ, மாரியாத்தா உன் கண்ணத் தெறந்துட்டா; பிழைச்சுக்கிட்டே” என்றும், “நானுதான் உன்னை இங்கு கொண்டு வந்தேன் சாரே... தோ, இந்த கஸ்மாலம் யாருன்னு சொல்லுப் பார்க்கலாம்?" என்று சொன்னபோது இளங்கோவுக்குப் புரிந்தது.
இளங்கோ, ருக்குமணியைப் பார்த்து சோகமாகப் புன்முறுவல் செய்தான். சரோசாவைப் பார்த்ததும் புன்முறுவலை அடக்கிக் கொண்டான். சரோசா அவன் அருகே போய், கைகளால் கண்களை மூடிக் கொண்டாள். அவள் உடம்பு முகத்தோடு சேர்ந்து குலுங்கியது. ருக்குமணி இளங்கோவிடம் விளக்கமளித்தான் :
"ராத்திரில எதுக்கும்மே சூரிய நமஸ்காரம்? சாரே! இந்த தத்தேரிதான் ஒன்னை ஆள் வெச்சு அடிச்சுப் போட்டது. நானு, நீ இவளுக்காகப் பட்டபாட்டைச் சொன்னாலும் சொன்னே அம்மாவுக்கு பொத்திக்கிறயுகை வருது. வீட்ல போய் சொல்லிட்டு வரட்டுமா சாரே?”
இளங்கோ சரோசாவை சிரமப்பட்டு முகம் திருப்பிப் பார்த்தான். அவளோ, அவனைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள். அந்தக் கைகளை விரித்து அதற்குள்ளேயே முகம் புதைத்து விம்மினாள். பிறகு அவனருகே போய் நின்று, “நானும் போலீஸ்ல சரண்டர் ஆகப் போறேன் சாரே. எனிக்கா பாடுபட்ட ஒன்ன இப்படி படாது பாடுபடுத்திட்டு நானு வெளில திரிய விரும்பல சாரே. உன் கைக்கி வெள்ளத்துணி போட்ட இந்தப் பாவி கைக்கு, இரும்பு விலங்கு போடணும் சாரே" என்று அழுதழுது சொன்னாள். அவன் ஏதாவது பேச வேண்டும் என்பதுபோல் அவன் வாயையே பார்த்தாள். இதற்குள் ருக்குமணி வெளியேறப் போனாள்.
இளங்கோ தட்டுத்தடுமாறி தலையாட்டியபடியே சொன்னான் :
"ஆக்சிடெண்டுன்னு சொல்லு. பாமாவுக்கும் சொல்லச் சொல்லு. மறந்துடாதே! ஆக்ஸிடெண்டுதான் பைக்கிலே இருந்து கீழே விழுந்துட்டேன்."
ருக்குமணி, இளங்கோவைப் பெருமையாகவும், சரோசாவை சிறுமையாகவும் பார்த்தபடி வெளியேறினாள். இளங்கோ முக்கல் முனங்கலோடு, சரோசாவைப் பார்த்து லேசாய் சிரிக்கப் போனான். அவள், ஏதோ பிராயச்சித்தம் செய்யப் போகிறவள்போல் மேஜையிலிருந்து ஒரு டம்ளர் தண்ணியை அவன் வாயருகே கொண்டு போனாள். அவள் மனம் நோகக்கூடாது என்பதற்காக அதைக் குடித்துவிட்டு, இளங்கோ, அவளைப் போகும்படி சைகை செய்தான். அப்படியும் அவள் போகாமல் நிற்பதைப் பார்த்துவிட்டு ஒடியாத கையால் அவளை லேசாகத் தள்ளிவிட்டான். அவன் எதற்காகப் போகச் சொல்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட சரோசா, அவன் கால்களைப் பிடித்தபடியே விம்மினாள். அவன் அடிவயிற்றிலிருந்து ஒரு மூச்சை வாய்க்குக் கொண்டு வந்து, “போம்மா” என்று சத்தம் போட்டுச் சொன்னான்.
சரோசாவோ, போகுமிடமில்லாததுபோல், போக வேண்டிய இடம் பிடிக்காததுபோல் அங்கேயே நின்றாள்.

