Chapter 29
சரோசா, சர்க்கார் வேலையில் கேஷ்வலாகச் சேர்ந்து அப்படியும், இப்படியுமாய் ஒருமாதமாகி விட்டது. அன்று சம்பள நாள்
அந்தச் சம்பள நாளே பலருக்குத் துக்க நாளாகத் தோன்றியது. ஈட்டிக்காரர்களக்கும், அந்த ஈட்டியைவிட பயங்கரமான பார்வையில் மிரட்டும் மனைவிகளுக்கும் சம்பளம் வரட்டும் என்று அதையே சர்வ கடன் நிவாரணியாகச் சொல்லி வந்த ஊழியர்களில் பெரும்பாலோர் இப்போது பேயறைந்து காணப்பட்டார்கள். அதுமட்டுமல்ல; போதாக் குறைக்கு, வருமான வரி பிடித்தம் செய்யும் வருடக் கடைசி. மாதச் சம்பளத்தை குறைவாகக் காட்டி, வீட்டுப்படி, பயணப்படி, மருத்துவப்படி ஆகிய அனைத்தையும் படிப்படியாக வாங்கிக் கட்டும் கம்பெனிக்காரர்களும், பெரிய பெரிய முதலாளிகளும், வருமான வரி வலையை கிழித்துக் கொண்டு தப்பித்துக் கொள்ளும்போது, இந்த அரசு ஊழியர்களின் வருமான வரி அவர்களது சம்பளப் பில்களிலேயே பிடிக்கப்பட்டு விடுகிறது. லட்சக்கணக்கான வருமான வரி ரூபாயை பாக்கி வைத்திருக்கும் சினிமா நடிகர், நடிகைகளை விட்டு வைத்திருக்கும் அரசு, அரசு ஊழியர்களுக்கு இடது கையால் சம்பளம் கொடுத்து, வலது கையால் பிடுங்கிக் கொள்கிறது. ஆகையால், கிட்டத்தட்ட எல்லோருமே 'வாழ்வே மாயம்' என்ற பிரமையில் இருந்தார்கள். அன்று சம்பளம் வாங்கப்போகும் ஒவ்வொருவரும் கிறிஸ்துவ மதத்தில் கூறப்படும் ‘பாவத்தின் சம்பளத்தை' நினைத்தபடியே படியேறினார்கள்.
ஆனால், சரோசாவோ சந்தோஷமாக இருந்தாள். காலையிலேயே ருக்குவின் குடிசையில் அவளைப் பார்த்து "ஒனிக்கி இன்னா வாங்கிட்டு வரணும்” என்று கேட்டாள். உடனே ஆறுமுகப்பயல் “ஒரு கமர்கட்” என்றான். கோவிந்து ‘ஒரு குவார்ட்டர்’ என்று சொல்லப்போன வார்த்தையை தொண்டைக்குள்ளேயே குவாட்டராக்கிக் கொண்டான். ருக்குதான் "அது இதுன்னு வாங்கிடாதே மவளே, புது குடிசைக்கு 200 ரூபா கொடுக்கணும். இளங்கோ சாருக்கு கடன் திருப்பிக் கொடுக்கணும். நாஷ்டா ஆயாவுக்குத் தரணும்” என்று அறிவுறுத்தினாள்.
சரோசா மனதிற்குள் பேசிக் கொண்டாள்.
'அவள் கிடக்காள். ருக்குவுக்கு பாவாடை தாவணி மாதிரி ஒரு சேல வாங்கிக் கொடுக்கணும். எதுக்குக் கொடுத்தாலும் கொடுக்காட்டியும் நாளைக்கே புது குடிசைக்கி போயிடணும். ருக்குவோட வூட்டுக்காரி தத்தேரி முண்ட, ஆளு அதிகமா ஆயிட்டுதுன்னு கரண்ட கட் பண்ணுறாள். குட்சய காலி பண்ணச் சொல்லிருக்குவ நச்சரிக்கிறாள். ஆமாம், எம்மாம் சம்பளம் தேறும்? ஒரு நாளைக்கி 34 ரூபா நாற்பது பைசா. லீவு நாளு இல்லாம 24 நாளு வேல பார்த்திருக்கேன். நாற்பது பைசா... கஸ்மாலம் விட்டுத்தள்ளு. இருபத்தி நாலு நாளுல முப்பத்திநாலு ரூபா எம்மாம் தொகை? கோவிந்துகிட்ட கணக்குக் கேட்டா ஒரு புல் பாட்டிலே கேப்பான். அடடே, இந்தக் கணக்கு கூட எனக்குத் தெரியலியே.
சரோசா, முகத்தை துடைத்துக் கொண்டே, மோகன் அருகே போனாள். அவன் கேள்வி பாவனையோடு முகம் காட்டியபோது கேட்டாள்:
"சாரே, சாரே! இருபத்தி நாலு... முப்பத்தி நாலு எம்மாம் சாரே? அதாம சாரே, ஒரு நாளிக்கி முப்பத்தி நாலு ரூபா. அப்போ, இருபத்திநாலு நாளிக்கி? பிளீஸ் சாரே."
மோகன் மனதுக்குள் முனங்கினான். விரலை மடக்கினான். முடியாமல் போகவே கால்குலேட்டரை எடுத்துக் கணக்குப் போட்டான். “816 ரூபாய்... என்ன விஷயம்?”
"என்னோட சம்பளம் சாரே! இன்னிக்கி, நம்ம செக்ஷன்ல அல்லாருக்கும் ஸ்வீட் கொடுக்கப் போறேன். ஏதோ ஓங்க புண்ணியத்துல இப்பதான் லைப்புலயே முதல் தடவையா எட்டு நூறு ரூபா நோட்டுங்கள சொந்தமா பாக்கப் போறேன்.”
தலைமை கிளார்க் எட்வர்ட் பேனாவை உதறி உதறி வெள்ளை சுவரை கறுப்பாக்கியபோது, சரோசா ஓடிப்போய் அவரது பேனாவைப் பறித்தாள். அந்த ஒல்லிப் போனவில் தடித்த பாட்டிலை எடுத்து இங்க் ஊற்றினாள். டைப்ரைட்டரில் இருந்த தூசியை வனஜா ஊதிவிடுவதைப் பார்த்து விட்டு, அவள் அருகே ஓடிப்போய், டஸ்டர் துணியை எடுத்து அதைத் துடைத்து விட்டாள். வாய்க்கு வெளியே தெரிந்த பற்கள் உள்ளே போகவில்லை. 'சம்பளம் வாங்கினவுடனேயே இளங்கோ சாரப் பார்த்து அது பேசுதோ இல்லியோ, அது காலுல பணத்த வச்சி எடுக்கணும்'
‘ஆனானப்பட்ட அநியாயக்கார இன்ஸ்பெக்டரு கூட ஒப்புக்காவது ஒரு விசாரணை நடத்துறார். ஆனால் இந்த இளங்கோ சாரு, ஒரு சின்ன விசாரணை கூட நடத்திலேயே... பாவம் அவரு. பாமா காயப்போட்டதுல ஒலர்ந்து போயிட்டார். அடடே, காதலுக்கு இம்மாம் சக்தியா? பாவம் அவருக்கு கன்னங்கூட குழிவிழுந்துட்டு. பாமா, அவர திரும்பிக்கூடப் பார்க்கறது இல்லன்னு ருக்கு வேற சொல்லுறாள். எல்லாம் என்னால. அப்படி நான் சொல்லாட்டி ருக்கு கோவிந்துக்கு, பொண்டாட்டியா தெரிந்திருக்காது. எதுக்கும் பாமாவப் பார்த்து விசயத்த எடுத்துச் சொல்லணும். தேவைப்பட்டா அவள் கன்னத்துல இரண்டு போடுபோட்டு, வலுக்கட்டாயமா கையப்பிடிச்சி இழுத்து, இளங்கோ சாரு முன்னால நிறுத்தணும். பாமா... கண்ணால பார்த்ததும் பொய், காதால் கேட்டதும் பொய்யும்மா... கண்ணு...!”
சரோசா, தலைமை கிளார்க் எட்வர்ட்டையும், அக்கவுண்டன்ட் ராமசாமியையும் பயபக்தியோடும், சிறிது அனுசரணையோடும் பார்த்தாள். இருபது நாளைக்கி முன்னால் அவர்கள் பிராந்தி வாங்கிக் கொண்டு வரச்சொன்னபோது முகத்தில் அடித்தாற்போல் முடியாது என்று சொல்லிவிட்டாள். அன்றிரவு நாயினாவிடமும், ருக்குவிடமும் நடந்ததைச் சொல்லப் போனாள். பிறகு, தனது சந்தோஷத்தையே தங்களது சந்தோஷமாகக் காணும் அவர்களது மகிழ்ச்சியை குலைக்க அவள் விரும்பவில்லை. மறுநாள் ஓலை கிழியப்போகிறது என்ற பீதியோடு அலுவலகம் போனாள். ஆனால், அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக தலைமை கிளார்க், அவளை முதல்தடவையாக ஒரு மனுஷி போல் பார்த்தார். அக்கவுண்டண்ட் ராமசாமி "ஏன் இப்படி அடிச்சுப்பிடிச்சு வாரே? ஈவினிங்கில லேட்டாய் போகிறவள், காலையில டைமுக்கு வரணும்னு அவசியமில்லே...” என்றார். அசிஸ்டென்ட் டைரக்டர் 'பி.ஏ.' சுந்தரம் கூட தனது நாற்காலியை தானே துடைத்துக் கொண்டு “சரோ பிளீஸ் காபி வாங்கி வறியா” என்று கெஞ்சுவது போல் கேட்டான். பீளிஸாமே? எப்பாடி, நல்லாத்தான் கீது!
அவளுக்கு அந்த பிளீஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியவில்லை என்றாலும், அது ஒரு மரியாதைக்குரிய வார்த்தை என்று மகிழ்ந்து போனாள். அடாவடி பியூன் அப்துல்லா கூட "பாவம் அது இப்போதானே வந்திருக்கு, நான் போயி வாங்கீட்டு வாறேன்” என்று சொன்னான். சரோசா, பழைய நினைவுகளில் இருந்து விடுபட்டு, சம்பளச் சிந்தனைக்குத் திரும்பினாள்.
மத்தியான வேளை வந்தது. பலர் படிகளில் ஏறிக் கொண்டும், இறங்கிக் கொண்டும் இருந்தார்கள். வயது பிரம்மச்சாரிகளின் சிரிப்புச் சத்தம், வால் அறுந்த நடுத்தரங்களின் நிசப்தம், டம்பப் பை பெண்கள். கைகளில் கவர்களைப் பிடித்தவர்கள், சைடுபாக்கெட் பெருத்தவர்கள், மாடிப் படிகளிலேயே பலருக்கு ஒவ்வொரு நோட்டாக உருவிக் கொடுப்பவர்கள், அனைவரையும் ரசித்துப் பார்த்த சரோசா, சம்பளம் வாங்குவதற்காகப் போகப் போனாள். அந்தச் சமயத்தில், சுந்தரேசனும், ராமசாமியும் தத்தம் லெதர் பைகளைத் தூக்கிக் கொண்டு ஒன்று போல் எழுந்ததால், அவள் ஒரு முக்காலியில் உட்கார்ந்தாள். 'அவங்க இல்லாதப்போ பொறுப்பான, நானும் போயிட்டா எப்படி? ஏடி ஏன் போகல? அவர்கிட்டே ஏன்னு கேப்போமா? வேற ரோதனையே வேணாம். கழுதைக்குப் பின்னாடியும், ஆபீசருக்கு முன்னாடியும் காரணம் இல்லாமப் போகப்படாதுன்னு காஷ்வல் முனியம்மா சொல்லி இருக்காளே!
அரைமணி நேரத்தில், கந்தரேசனும் ராமசாமியும் அவர் இவரிடம் கடன் கேட்க, இவர் அவரிடம் கடன் கேட்க, கடனே என்று உள்ளே வந்தார்கள். இதற்குள் சரோசா சம்பளம் வாங்க எழுந்திருக்கப் போனாள். அதற்குள் கனகாவும், வனஜாவும் எழுந்தார்கள். "எனக்கு ஒருத்தர் போன் பண்ணுவார். அவரோட நம்பரை வாங்கி வச்சுக்கோ" என்று அந்த 'ஒருத்தருக்கு' ஒரு அழுத்தம் கொடுத்தபடியே கனகா முன்னால் நடக்க, வனஜா கண்ணடித்து பின்னால் சென்றாள்.
சரோசா விரல்களுக்கு சொடக்குப் போட்டபடியே உட்கார்ந்திருந்தாள். நாயினாவுக்கு ஒரு கம்பளி வாங்கோணும். நாளைக்கி புது குடிசையில் பால் காய்ச்சணும். இளங்கோ சார் அங்க வந்தால் எப்படி இருக்கும்? 'சாரே-சாரே- நீ இல்லாட்டி நான் இப்படி மனுஷியா ஆயிருக்க முடியாது சாரே. நீ அடிச்சாக்கூட பேசாம நின்னுக்குனே இருப்பேன் சாரே. ஒங்கம்மா தடிச்சி கூட தப்புத்தப்பு, ஒன்னோட மதரு திட்டுனாக்கூட பொறுத்துக்குவேன் சாரே.'
வனஜாவும் கனகாவும் செக்ஷனுக்குள் வந்தபோது, மணி நாலரை; சரோசா அவசர அவசரமாக எழுந்தாள். கனகா டெலிபோன் பற்றிக் கேட்டதை காதில் வாங்காததுபோல் ஓடினாள். பிறகு மனசாட்சி உறுத்த மீண்டும் அங்கே வந்து "ஆரும் போன் போடலம்மா” என்று சொல்லிவிட்டு, திரும்பி நடந்தாள். ஆமாம், எங்க சம்பளம் கொடுக்குறாங்கோ? அதோ வாறாளே முனியம்மா, நல்லவ... கூப்டலாம்.
சரோசா மீண்டும் உள்ளே வந்தாள். ஒரு வார்த்தை சொல்லாமப் போறது எவ்வளவு பெரிய தப்பு. ஆனாலும் எனக்கு இப்பிடி தெனாவுட்டு ஆகாதுப்பா. அவள் தலைமை கிளார்க்கின் முன்னால் நின்று தலையை சொறிந்தபடியே சொன்னாள் : "சம்பளம் வாங்கிட்டு வாறேன் சாரே. கொஞ்சம் லேட்டானாலும் போகாதீங்கோ... அல்லாருக்கும் ஸ்வீட் கொடுக்கப்போறேன். கேண்டீன்ல இனிப்புக்கும் மிச்சருக்கும் ஆர்டர் பண்ணிட்டேன்.''
தலைமை கிளார்க் எட்வர்ட், அவளை ஏறிட்டுப் பார்த்து, பிறகு ஏற்றிய தலையை இறக்கினார். எதுவும் பேசவில்லை. அதையே மவுன அனுமதியாக எடுத்துக் கொண்ட சரோசா, உடம்பு குலுங்க ஓடினாள். இடையிலே படியிறங்கி வந்த முனியம்மாவை வழிமறித்தாள். அவள் இவளைப் பார்த்து பயந்தது போல் கையில் இருந்த கவரை ஜாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டாள். இவளை விட ஐந்து வயது பெரியவள். இன்னும் கேஷ்வல்தான். ஆனால் அடுத்தமாதம் பெர்மனன்ட் ஆகிவிடுவாளாம். அடேங்கப்பா... நானும் இரண்டு வருஷம் பெர்மனன்ட் ஆகாம பேஜாருல இருக்கணும் போலிருக்கே.
"ஏய், முனிம்மாக்கா! எங்கே சம்பளம் கொடுக்காங்கோ? எனிக்கி 800 ரூபாய்க்கி மேல வரப் போகுது. நீயும் என்னோட வா. நான் பணம் கொடுக்குற இடத்த தேடிக் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னால போயிடப் போறாங்க. அப்பாடி, எட்டு நூறு ரூபா நோட்ட கையில பிடிக்கப்போறத நினைச்சி எம்மாம் சந்தோஷமா இருக்கு தெரியுமா முனிக்கா."
"முதல்ல ஒன்னோட 800 கிடக்கட்டும், மொதல்ல இருபது பைசா வச்சிருக்கியா?"
"இஸ்டாம்புக்கு. இருபது பைசா கொடுக்காட்டி அந்தக் கொள்ளிக்கட்ட முந்திரி கண்ணன் சம்பளம் தரமாட்டான்! அப்புறம் எனிக்கிக் கொஞ்சம் தாயேன். அடுத்த வாரம் கொடுத்துடறேன்.”
சரோசா, அவளைக் கண்டிப்புடன் பார்த்தாள். அப்படிப் பார்க்கப் பார்க்க அவளது தொய்வு விழுந்த முகமும், நெஞ்செலும்புக் கூடம் அவளை வருத்தின. பாவம் பிள்ளைகுட்டிக்காரி. 'ஆனாலும் தனக்குப் போகத்தான் தானம்.' "எக்கா, ஒரு நூறு ரூபா வேணும்னா தாறேன். ஆனால் அடுத்த வாரம் கொடுத்துடணும்.”
முனியம்மா, சரோசாவின் கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். இப்போது அவளே இவளை இழுத்துக் கொண்டு படியேறினாள். முதல் மாடியில் மூச்சிரைக்க நின்றார்கள். பிறகு மேல்மாடிக்கு ஏறி இரண்டாவது மாடிக்கு வந்தார்கள். ஒரு மூலை அறை, பாதிச்சுவருக்கு மேல் பாங்கில் இருப்பது மாதிரி வலை பின்னிய கதவு... அரைவட்ட வழி. உள்ளே மேஜைடிராவுக்குள் கத்தை கத்தையாய் நோட்டுக்கள். மேஜைமேல் ஸ்டாம்புகள் ஒட்டப்பட்ட ஒரு பெரிய ரிஜிஸ்டர். காஷியர், முனியம்மா சொன்னது மாதிரியே ஒரு முந்திரிக் கண்ணன். கண்ணில் கருவிழியையும் வெண்மைப் பகுதியையும் கண்டுபிடிக்க முடியாத கண்ணன். ஆனால், படுசுட்டி. ஒருத்தருக்கு ஒரு கத்தை நோட்டை எடுத்து முதலாவது நோட்டின் நம்பரையும், இறுதி நோட்டின் நம்பரையும் பார்த்துவிட்டுக் கொடுத்தான். அவரையே, கண் வாங்காமல் பார்த்தான். அந்த ஆசாமி அதை பைக்குள் வைக்கப்போன போது "எண்ணிப் பாருங்கள்" என்றான். அவர் "சரியாய்த்தான் இருக்கும்” என்று சொன்னபோது, அந்தக் கத்தை நோட்டை அவரிடமிருந்து கைப்பற்றி அவனே எண்ணிக் காட்டினான். இந்தச் சமயத்தில் வளையல் போட்ட கரம் ஒன்று, அந்தத் திரைவழிக்கு அடிக்கோலாய் ஆனபோது, அவன் எரிந்து விழுந்தான். “இந்தாம்மா, கொஞ்சம் எட்டி நில்லு. இன்னும்... இன்னும்... ஒனக்கு எதுக்கு பழிபாவம்."
சரோசா சற்று விலகி நின்றாள். முனியம்மா அவளை முன்னால் பிடித்துப் பிடித்துத் தள்ளினாள். ஆனாலும் எங்கிருந்தோ வந்த நான்கைந்து பேர் போவதற்காக அவள் காத்திருந்தாள். எல்லோருடைய கணக்கும் முடிக்கப்பட்டு, காஷியர் அந்தப் பிறைவடிவை மேலே இருக்கும் ஒரு பலகையை இழுத்து மூடிவிட்டு அந்தக் கம்பிவலைக் கண்கள் வழியாக சரோசாவைப் பார்த்துக் கேட்டார்:
“என்னம்மா... விஷயம்?"
"எனிக்கும் இன்னிக்கு சம்பள நாள் தானே சாரே? 810 ரூபா தேறும். ஏன் கொடுக்க மாட்டேங்கே?"
“ஒனக்கா, ஒனக்கு ஏது சம்பளம்? ஒன் செக்ஷனிலிருந்து பில்லே வரலியே. நானே எட்வர்கிட்ட வலியக் கேட்டேன். எனக்குத் தெரியுமுன்னு முகத்துல அடிச்சாப்புல சொன்னாரே. அதுக்கு மேல நான் கேட்டிருந்தா என்னை 'சம்திங்கா' பார்த்திருப்பார். சரி... சரி... இடத்த காலி பண்ணு!"
"நல்லா பார்த்துச் சொல்லு சாரே... அவரு நல்லவரு சாரே..."
“அப்ப நான் என்ன கெட்டவனா? ஒனக்கு வந்த சம்பளத்த கொடுக்காம இருக்கிறதுல எனக்கு என்னம்மா லாபம்? போயி அவருக்கிட்டயே கேளு... பில்லே வரல."
சரோசாவுக்கு தலை கீழே விழுவது போல் இருந்தது. தான் நின்ற கட்டிடமே அற்றுப் போய், வெட்ட வெளியில் நிற்பது போலிருந்தது. இருதயம் இப்படி அடித்துக் கொண்டதை அவள் எப்போதுமே உணர்ந்ததில்லை. காலில் வெட்டுப் பட்டால் முதலில் ரத்தக்கசிவு இல்லாமலும், வலி ஏற்படாமலும், பிறகு அவை படிப்படியாக ஏறுவது போல், அவள், படிப்படியாய் அதிர்ந்து போய் நின்றாள்.
அந்த செக்ஷன்காரர்கள் அவளிடம் பிராந்தி பெற முடியாத காரணத்தால் அவளையே ஒரு போதைப் பொருளாக்கிவிட்ட உண்மை, இப்போது புலப்பட்டது. ரணகாயத்துக்கு ‘முதலுதவி' செய்தது போல் திடீரென்று ஒரு வைராக்கியம். அந்த மாடி சமதளத்தில் ஓடினாள். அப்போது தான் முனியம்மா ஞாபகம் வந்தது. அவள் அங்கே இல்லை. ஏதோ ஒரு அறைக்குள் இருந்து கொண்டு அவளைப் பார்த்து விட்டு முனியம்மா ஒளிவது தெரிந்தது. சரோசா கம்பீரமாகச் சொன்னாள் : "முனிக்கா... முனியம்மா... வெளியே வா முனியம்மா... ஒன்னண்ட கடன்கேட்க மாட்டேன் முனிக்கா..."
சரோசா, நான்கு நான்கு படிகளாய் தாவித்தாவி, இறங்கினாள். இன்றைக்கு என்ன ஆனாலும் சரி, இந்த எட்வர்ட் - ராமசாமியை இன்னான்னு பார்த்துடணும்.
சரோசா அந்த அலுவலகப் பிரிவிற்குள் பொறி கலங்கி நுழைந்தபோது, அங்கே இருந்தவர்கள் நிமிர்ந்தார்கள்; சிரிப்பும், கும்மாளமுமாய், சட்டைப் பைகளையும், ஜாக்கெட்டின் உட்புறத்தையும் பிடித்துக் கொண்டே, புறப்படப் போனார்கள்.
தலைமைக் கிளார்க் மட்டும், தலையைத் தடவியபடியே டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தார். 'ஐயையோ, ஆசாமி விடமாட்டேங்கானே' என்பது மாதிரி தலையில் லேசாக அடித்துக் கொண்டே, பேசினார்.
அக்கவுண்டன்ட் ராமசாமி எதையோ அதிகமாய் தின்று தீர்த்து விட்டு ஏப்பம் விட்டபடியே எழுந்தார். கள்ள உப்பலோடு, வனஜா, டைப்ரைட்டர் மேல் ஒரு பிளாஸ்டிக் துகிலை முக்காடு போட்டாள். அப்போது, வசூலுக்கு வந்த ஒரு புடவை வியாபாரி, ‘நரசிம்மாவதாரம்' மாதிரி வெளியேயும் நிற்காமல், உள்ளேயும் போகாமல் வாசலுக்கு வாய் உள்ள கதவு போல் நின்று கொண்டிருந்தார். அவருக்குப் பயந்து பியூன் அப்துல்லா தனது பெரிய மேஜைக்குள் ‘நெருப்புக் கோழி' மாதிரி தலையை மட்டும் மறைத்துக் கொண்டான்.
சரோசா, டெலிபோனில் பேசிக் கொண்டிருந்த எட்வர்ட் முன்னால் போய் நின்று அவர் முகத்தை நோக வைத்தபடி கத்தினாள்:
"எனக்கு ஏம்பா சம்பளம் போடலை? ஒன்னத்தாம்பா, செக்ஷன் வஸ்தாது! எனக்கு ஏன் பில் போடல?”
தொலைபேசிக் கருவிக்குள் கிட்டத்தட்ட வாயைச் செருகிக் கொண்டு பேசிய எட்வர்ட்டுக்கு, சரோசா கத்துவது கேட்டதே தவிர அதன் கருத்து கேட்கவில்லை. அவளைச் சட்டை செய்யாமல் தொடர்ந்து பேசினார். உடனே சரோசா அவர் பேசிய டெலிபோன் குமிழை பிடித்திழுத்து, “ஏம்பா ஒன்னத்தான்! என்னோட சம்பளம் என்னாச்சு?” என்று கேட்டபோது எதிர்முனையில் இருந்தவர் "ஹலோ அங்கே என்னப்பா நடக்குது?” என்று கேட்பது ஒலித்தது. சரோசா, அந்தக் குமிழை பலவந்தமாகப் பறித்து கீழே வைத்தாள். எல்லோரும் அந்தப் பூனைப் புலியை ஆச்சரியமாகவும் அதிர்ந்தும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, பின்னர் அவள் பக்கமாக வந்தார்கள். அப்துல்லாவுக்கு மட்டும் சந்தோஷம். இந்த ரகளையில் பெரிதாக்கும் வகையில் கத்தினான் : "இந்தாம்மா சாரோ! இது ஆபீஸ், நீ இருக்கிற சேரி இல்ல. எது பேசினாலும் முறையாப் பேசு. இல்லாட்டி..."
“இல்லாட்டி என்னடா செய்வே பிராண்டிப் பையா?"
அப்துல்லா, கடந்த கால ஏவலை மனதில் நினைத்துக் கொண்டு அதிர்ந்து போய் நின்றபோது, துணி வியாபாரி, அதுதான் சாக்கு என்று அவன் பக்கமாய் நகர்ந்தார்.
வனஜா, அப் துல்லா சொன்னதைச் செயல்படுத்தும் வகையில் பதறிப் பதறிப் பேசினாள் :
"செக்யூரிட்டி கார்டு கிட்ட இவளை ஒப்படையுங்க. செக்யூரிட்டி ஆபீஸரையும் வரச் சொல்லுங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில என்ன செய்யப் போறாளோ?"
தலைமைக் கிளார்க்கை முறைத்துக் கொண்டு நின்ற சரோசா, வனஜா பக்கம் முகம் திரும்பினாள். அவளைக் கடித்துக் குதறப் போகிறவள்போல் பற்களைக் குவித்தபடியே சவாலிட்டாள்:
"நீயே செக்யூரிட்டி கார்டை வரச் சொல்லுமே. ஆளுக்கு ஆள் பேப்பர் வெயிட்டுங்களையும், எழுதாத ரிஜிஸ்டரையும், பால் பாயிண்ட் பேனாக்களையும், பிளாஸ்க்குங்களையும் கொண்டு போறதை செக் பண்ணாத கார்டு என்னை என்ன செய்துடுவான்னு பார்த்துடறேன்."
வனஜா அதிரிந்து போய் வாய்க்கு உதடுகளால் தாழிட்டு, அக்கௌண்டன்ட் ராமசாமியின் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டாள். அப்போது சிறிது சுதாரித்துக்கொண்ட தலைமை கிளார்க் அசட்டையாகப் பேசுவது போல் சட்டையெல்லாம் வேர்வையால் நனைய தட்டுத் தடுமாறிப் பேசினார்:
"இந்தா பாரும்மா, எது பேசணுமுன்னாலும் உள்ளே இருக்கிற ஆபீஸர்கிட்ட பேசு; உனக்கும் எங்களுக்கும் பேச்சு இல்லை."
"ஆபீஸரு மட்டுமாய்யா வேலை கொடுத்தார்? நீ கொடுக்கலை? தப்புத்தண்டா செய்யாத போதே என்னைத் திட்டலை? நான் வாங்கிக் கொடுத்த டீயையெல்லாம் குடிச்சியே, அது டீயா, இல்லாட்டி வேற எதுவுமா?"
தலைமை கிளார்க் வாயை அசூசையாக சப்புக் கொட்டியபோது, சரோசா மேலும் தொடர்ந்தாள்:
“ஏய்யா பெரிய மனுஷங்காளா... மனுஷிகளா! நான் சம்பளம் வாங்கப் போறேன்னு, ஒங்க கிட்ட சொன்னேன்னே, அப்போகாட்டி பில்லு போடலைன்னு சொன்னா ஒங்க வாயி அயிகிப் போயிடுமா? எந்த நாறிப்படையாவது வாய் தொறந்தீங்களாய்யா? உங்களுக்கு பிராண்டி வாங்கிக் கொடுக்காட்டி என்னைப் பிராண்டுவீங்க. அப்படித்தானே? யாரும் வெளியே போகக் கூடாது. எனக்குப் பதில் சொல்லாம யாரும் அப்பால இப்பால போகக் கூடாது; இல்லாட்டி கொலை நடக்கும்."
சரோசா, அந்த செக்ஷனின் அறைக் கதவைக் காலால் உதைத்துச் சாத்தினாள். அவளை எதிர்க்கும் திராணி கொண்ட அப்துல்லாவோ, துணிக்காரரிடம் ஒரு ஓரமாக டூயட் பேசிக் கொண்டிருந்தான். அனைவரும், அந்த புதிய சரோசாவைப் பார்த்து அதிர்ந்து போனார்கள். எதற்கும் கவலைப்படாதவன் போல், நடப்பதை ரசித்துக் கொண்டிருந்த கிளார்க் மோகன் மீது ஆபத்துக்குத் தோஷமில்லை என்பதுபோல், கனகா ஒட்டிக் கொண்டாள். வனஜாவோ, 'பி.ஏ' சுந்தரத்தின் பின்னால் போய் நின்று கொண்டாள். தலைமை கிளார்க்கின் பாண்ட், இடுப்புக்குக் கீழே நனைந்திருந்தது. வெளியே நடக்கும் விவகாரங்கள் நன்றாகப் புரிந்தாலும், அவை தானாகச் சரியாகிவிடும் என்ற நப்பாசையுடன் இருந்த அஸிஸ்டெண்ட் டைரக்டர் அருணாசலம் இப்போது மெல்ல ஆமை மாதிரி கதவைத் திறந்து தலையை மட்டும் நீட்டினார். பிறகு, உடம்பு முழுவதையும் வெளிப்படுத்திக் கொண்டு அரண்டு போனதைக் காட்டிக்காமலே அதட்டினார் :
“என்ன சத்தம் இங்கே? என்ன ரகளை? சரோசா, முதல்ல கதவைத் திற.”
"உன்னோட சூட்கேஸை வாங்கிட்டு உனக்கி நல்லாத்தான் கதவைத் தெறந்து விட்டேன். ஆனர், இன்னிக்கு இப்படிநானு திறந்த கதவுக்கு பைசல் தெரியாமல் போனதால் அதை மூடிட்டேன். எனக்கு ஏன் சார் சம்பளம் கொடுக்கலை? அல்லா கேசுவலுங்களும் வாங்கறப்போ எனிக்கு ஏன் தரலை?”
டெப்டி டைரக்டர் எதுவும் தெரியாதவர்போல வாயும் வயிறும் மாறி மாறி ஆட தலைமைக் கிளார்க்கைக் கேட்டார்:
"இந்தப் பொண்ணுக்கு ஏன் சம்பளம் கொடுக்கலை? எட்வர்ட்... உங்களைத்தான், பதில் சொல்லுங்க.”
எட்வர்ட், அஸிஸ்டெண்ட்-டைரக்டரை,
தனது அஸிஸ்டெண்ட் போல் முறைத்துக்கொண்டு, அக்கம்பக்கத்தின் அங்கீகாரத்திற்காக அவர்களையும் பார்த்துக் கொண்டு பதிலளித்தார் : "காஷுவல்னு யாரையும் நியமிக்கப்படாதுன்னு போன வாரம் சர்க்குலர் வந்ததைக் காட்டினேனே... நீங்க அதைப் படித்ததுக்கு அடையாளமாய் கையெழுத்து வேற போட்டிருக்கீங்களே..."
அரசாங்கத்தின் சிக்கன நெறிகளை வகைப்படுத்தி பெரிய புராணம் போல் வந்த ஒரு கற்றைத்தாள்களை படிக்கச் சோம்பல்பட்டு, படித்தது போல் கையெழுத்துப் போட்ட அருணாசலம், இப்போது அரண்டு போனார். இந்தச் சமயத்தில் மோகன், சரோசாவுக்கு ஆதரவாக, இருந்த இடத்தில் இருந்தபடியே விவரம் சொன்னான் :
"அதே சமயம், அந்த சர்க்குலர்ல மேலிடத்தின் பெர்மிஷன் வாங்கி காஷுவல் லேபர் வச்சுக்கலாமுன்னும், வச்சிருக்கவங்களை எடுக்காண்டாமுன்னும் ரெண்டு வரி இருந்துதே... எட்வர்ட் சாருக்கு அதைப் படிக்கும்போது கண்ணு குருடாயிட்டா? இந்தப் பொண்ணு சம்பளம் வாங்கப் போறேன்னு சொன்னாளே, அப்ப மட்டும் காது செவிடாயிட்டா?"
எட்வர்ட் கண்களை வெட்டுக்கிளி போல் துள்ளவிட்ட போது, டெப்டி டைரக்டர் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் கேட்டார் :
"பெர்மிஷன் கேட்டு நீ ஒரு டிராப்ட் வச்சிருக்கலாமே எட்வர்ட்? நான் கையெழுத்துப் போட மாட்டேன்னா சொல்லுவேன்?”
"ஏற்கனவே ரெண்டு மூணு பேரு பெர்மிஷன் கேட்டு எழுதுனதுக்கு முடியாதுன்னு வந்துடுத்து."
"பத்து நாளைக்கு முன்னால் வேலைல சேர்ந்த ஹரிஹரனுக்கு கரெக்டா பணம் வந்துதே... அவரு சுந்தரேசன் சாருக்கு சொந்தக்காரன் என்கிறதுனாலயா?”
மோகன், இப்போதும் இருந்த இடத்தில் இருந்தபடியே தன்பாட்டுக்குப் பேசுவது போல் பேசினான். சரோசா ஏடி அருணாசலம் முன்னால் போய் நின்று பொறிந்து தள்ளினாள்:
"சார்! நீயும் நன்னாத்தான் நடிக்கே... எல்லா பில்லுக்கும் கையெழுத்துப் போட்டியே, என் பில்லு ஏன் வரலைன்னு கேட்டியா? ஒண்ணுந்தெரியாத பாப்பா மாதிரி பேசுறியே, ஒரு ஆபீஸ்ல எப்பேர்ப்பட்டவனுவ இருக்கானுவ... என்னென்ன சமாச்சாரம் நடக்குதுன்னு உன்னால பார்க்க முடியாட்டி நீயெல்லாம் என்ன ஸார் ஆபீசரு?"
எல்லோரும் கசாமுசாவாய் பேசிக் கொண்டிருந்தார்கள். இதுவரை குனிந்த தலையோடு - சொல்லப் பொறுக்காத ஏவல் செய்யும் தோரணையில் நடுங்கியபடியே பதிலளித்த சரோசா, இப்போது, அனைவரையும் நடுங்க வைத்ததில், அந்த அலுவலகப் பிரிவு அதிர்ந்தது. இந்த அனுபவம் அவர்களுக்குப் புதிது. இப்படிப்பட்ட கேஷுவல்களிடமும் அவர்கள் 'வாங்கி’ப் பழகியவர்கள்தான். ஆனால் இப்படியல்ல. இந்தச் சமயத்தில் சரோசா சாத்தப்பட்ட கதவுக்கு நீண்ட நெடிய தாழ்ப்பாள் போல் அதன் மேல் தன்னைச் சாய்த்துக் கொண்டாள். அப்போது வெளியே ஒரு ‘டொக்கு டொக்கு' சத்தம், "சரோசா... கதவைத் திற... எனக்காகத் திற."
சரோசா, அந்தக் குரலைக் கேட்டவுடன் மகுடியால் மயங்கும் பாம்பு போல் மயங்கினாள். உடம்பை எதிர்ப்புறமாய் நிமிர்ந்து, ஒரே இழுப்பில் கதவுகளை இரண்டு கூறுகளாக்கியபோது, இளங்கோ முன்னாலும், முனியம்மா பின்னாலுமாய் நின்றார்கள். அவ்வளவுதான்... சரோசாவின் கோபம் அழுமையாகியது. அழுத்தம் அவலமானது. அக்னித் துண்டுகள் பனிக்கட்டிகளாயின. இளங்கோவின், இரண்டு கைகளையும் எடுத்து தன் தலையில் போட்டுக் கொண்டு, அரற்றினாள் :
"அல்லாப் பழக்கத்தையும் விட்டுட்டு மனுஷியானதா சந்தோஷப்பட்ட சமயத்துல என்னை இப்படிப் பண்ணிட்டாங்களே சாரே...நாயினாவை சாகற காலத்திலியாவது வாய வைக்கலாம்னு சந்தோசப்பட்டேன். அல்லாத்தையும் கெடுத்துட்டாங்களே சாரே... பழைய தோஸ்துங்க சிரிக்கும்படியா ஆயிட்டே சாரே... எனிக்கி சம்பளம் வாங்காததுகூட பெரிசில்ல... அது கெடைக்கப் போறது மாதிரி ஒரு பாவலா பண்ணி, அம்போன்னு விட்டுட்டாங்களே... அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல சாரே."
இதற்குள், அங்கேயும் இங்கேயுமாய் போய்க் கொண்டிருந்த ஊழியர்கள் அங்கே கூடிவிட்டார்கள். மேலே இருந்து டைரக்டர் வரும் நேரம். அவருக்கும் விஷயம் போய்விட்டால், தனக்கு வரவேண்டிய பிரமோஷன் வராமலே போய்விடும் என்று, ஏடிக்கு ஒரு உதறல். இந்தச் சமயத்தில் இளங்கோவே சரோசாபோல் பேசப் போனபோது, தலைமை கிளார்க் மெல்லிய குரலில் பேசினார் :
"இந்த நியூசென்சுக்குக் காரணமே இந்த இளங்கோதான். தராதரம் தெரியாதவங்களை- யெல்லாம் ஆபீசுல சேர்த்ததாலே ஆபீஸ் தரம்தான் போச்சு.”
இளங்கோ வெடித்தான் : "இந்தப் பொண்ணு நியூசென்ஸ் காரின்னா, நாமெல்லாம் அரசாங்கக் கேடிங்க. ஒரு மாசமா நாய் படாத பாடா உழைச்சிட்டு அதுக்குப் பலன் கிடைக்கலன்னு அவள் குலைக்கத்தான் செய்வாள். நாமா இருந்தால் கடிச்சிருப்போம். நம்ப வச்சு கழுத்தறுத்துட்டீங்களே! இந்தாம்மா சரோசா. ஏன் அழுவுறே? இந்தா, என் சம்பளம் முழுசும் ஒனக்கு வேலைக்குக் கூலியாயும், இவங்களோட அகம்பாவத்துக்கு அபராதமுமாவும் தாறேன்.”
இளங்கோ, ஆவேசப்பட்டு தனது சட்டைப் பையைக் கிழித்தான். அந்த வேகத்தில் இடது கையிலிருந்த பை அவனது வலது கைக்குள் ஒரு சதுரத்துணியாக நூறு ரூபாய் நோட்டுக்களோடு வெளிப்பட்டது. அந்தத் துணியோடு அந்த நோட்டுக்களை சரோசாவின் கைக்குள் திணித்தான். அவளோ, அவற்றை அவனது வலப்புறச் சட்டைப் பைக்குள் திணித்தாள். பிறகு அவன் காலடியில் அப்படியே விழுந்தபடி கதறினாள்:
'நீ சொன்னதே போதும் சாரே. இந்த கவர்ன்மெண்டு பொறுக்கிங்க இடத்திலே, நீ கண்டிஷனா இருக்கதே போதும் சாரே. சத்தியமா சொல்றேன் சாரே, நான் மட்டும் உங்கம்மாவை அப்படி திட்டாட்டால், கோவிந்து ருக்குவக் கொன்னுருப்பான். நீயும், பாமாவும் பழையபடியும் சந்தோஷமா இருந்தா, அதுவே எனக்கு சம்பளம் கிடைச்சது மாதிரி சாரே! ஆனாலும், என்னால தாங்க முடியலையே சாரே. அநாவசியமா உன் பேரு இழுபடுமேன்னு பார்த்தேன்; இல்லாக்காட்டி இவனுவ சுறாப்புட்டு செய்திருப்பேன்."
முனியம்மாவும் கிட்டத்தட்ட அழுதுவிட்டாள். அவளுக்காக தான் ஒளிந்து கொண்டரை நினைத்தபோது அவள் அழுகை அதிகமாய் வலுத்தது. இந்த விபரீத நிலையிலிருந்து எப்படிக் கழட்டிக்கொள்ளலாம் என்று புரியாமல் அஸிஸ்டெண்ட்-டைரக்டர் அருணாசலம் அங்கும் இங்குமாய் 'வாக்கிங்' போனார். சரோசா, இளங்கோவின் பாதங்களை ஆதாரமாய் பிடித்தபடியே எழுந்தாள். ஆடைகளைச் சரிப்படுத்திக் கொண்டாள். அவனுக்காக அவர்களை விட்டுவிட்டதுபோல் வெளியேறினாள்.

