Chapter 22
அந்த மருத்துவமனைக்கு எத்தனை தடவை சென்றாளோ, அத்தனை தடவையும் அவள் கேளாமலேயே, இளங்கோ தெரிவித்த அந்த அலுவலகத்தின் சாமுத்ரிகா லட்சணங்கள் சரோசா மனத்தில் அழமாகப் பதிந்துவிட்டன. ஆகையால், அந்த அலுவலகத்தை கேட்பார் பேச்சைக் கேட்டு லெப்டில் திரும்பி ரைட்டிலோ, ரைட்டில் திரும்பி லெப்டிலோ போகாமல் சொந்த முயற்சியிலேயே கண்டு பிடித்துவிட்டாள்.
காலையிலேயே பூக்காரத் தோழியின் வீட்டுக்குப் போனவள், "அந்த கஸ்மாலம் மாருவாடிக்கிட்ட வைக்கிறதுக்கு முன்னாடி நீ கட்டிக்கோ" என்று சொல்லி ருக்குமணி கொடுத்த புடவையையும், அதற்கேற்ற ஜாக்கெட்டையும் வாங்கிக்கொண்டாள். இதர இரண்டு, மூன்று சேலைகள் கொடியில் தொங்கியபோது, இந்தப் புடவை மட்டும் கரப்பான் பூச்சி வில்லைகள் போடப்பட்ட டிரங்க் பெட்டியிலி ருந்து வெளிப்பட்டது. எலுமிச்சை நிறம். பைஜாமாவை லேசாகச் சுருட்டி, அதையே பாவாடையாக அனுமானித்துக் கொண்டு, அதற்குமேல் புடவையைக் கட்டலாமா என்று சரோஜா சிறிது யோசித்தாள். பிறகு புடவையை சுற்றிக் கொண்டு பைஜாமாவைச் சுருட்டி ஒரு மூலையில் போட்டாள். ருக்குமணி அவள் நெற்றியில் பிளாஸ்டர் குங்குமத்தை ஒட்டினாள். சினிமாக்காரி மாதிரி ஜொலி த்த கில்டு செயினை பூட்டிவிட்டாள். இந்த அன்பைப் பொறுக்க முடியாமல், சரோசா கண்ணீர் விட்டபோது “பவுடர் நனைஞ்சு திட்டுத்திட்டா ஆயிட்டுப்பாரு. பவுடர் கொஞ்சமாத்தான்கீது. அதனால இதுக்குமேல் அழாதே” என்றாள் ருக்கு. “ஏம்மே கலங்குறே? நானிருக்கேன், இளங்கோ இருக்கார். ஒன் அண்ணாத்தே இன்னாப் பண்ணுறான் பார்க்கலாம். கண்ணாடி முன்னால போமே. எப்படி ஜொராக்கீறே தெரியுமா?” என்று ஆற்றுப் படுத்தினாள்.
சரோசாவை, ருக்குமணி பஸ் நிலையம்வரை வந்து வழியனுப்பி வைத்தாள். அந்தப் பல்லவன், இளங்கோ குறிப்பிட்ட அலுவலகத்திற்கு முன்னால் பஸ் நிலையத்தில் இருந்து அனைவரையும் ஓட்டப்பந்தயத்தில் பார்க்க விரும்பியது போல், இருபதடி தள்ளி நின்றது. சரோசா இறங்கினாள்.
அந்த இலுவலக முகப்பில் இரண்டு பிரிவுகளான இரும்பு கேட்டுகளில் ஒன்று மூடியிருந்தது. இன்னொன்று அரைக்கண் பார்வை போட்டது. அந்த ஒருகண் வழியாக உள்ளே போனாள். அங்குமிங்குமாய் பார்த்தாள். வலதுபக்கம் ஒரு தூக்கலான இடத்தில் சின்ன மணிக்கூண்டு மாதிரியான கட்டிடத்தில் காக்கிச்சட்டைக்காரர்கள் நின்றும், உட்கார்ந்தும், படுத்தும் கிடந்தார்கள். துப்பாக்கிகளும் அப்படியே. உள்ளே பிரம்மாண்டமான கட்டிடம். சரோசாவுக்கு மகிழ்ச்சி. ஏழை பாழைகளை கூண்டில் அடைச்சுப் பார்க்கிற போலீஸை இப்போது கூண்டுக்குள்ளேயே பார்ப்பதில் ஒரு அகரத் திருப்தி. அவர்கள் ஏதாவது தன்னிடத்தில் கேட்பார்கள் என்றபடி நின்றாள். தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிப்பதற்காக ஏ.கே. 47 எதுவுமில்லாமல் உள்ளே கிடந்த அந்த போலீஸ்காரர்கள், அவளை கண்டுக்கவில்லை. அந்த அலுவலக செக்யூரிட்டி ஆபீசர் ஒரு சிவிலியன். இவர்களுக்கும், அவருக்கும் ஒரு உள்நாட்டு யுத்தம். யாராவது போகட்டும். அந்த குள்ளப்பையன் செக்யூரிட்டி மாட்டிக்கட்டும். இப்படிப்பட்ட ஒரு நல்லெண்ணம்.
சரோசா, அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தை நோக்கி நடைவேகத்தை அதிகப் படுத்தினாள். மணி பதினொன்றுக்கு மேலாகிவிட்டது. பத்துமணிக்கு முன்பே வரத்தான் நினைத்தாள். ஆனால், ருக்குமணிதான், ராவுகாலம், எமகண்டம் என்று இழுத்தடித்து விட்டாள். சரோசா, வேகவேகமாக அந்த அலுவலகப் உள்வாசலை நோக்கி கால்வீசி, கைநீட்டி நடந்தபோது, அவள் முன்னால் ஒரு உருவம் வந்து நின்றது. வாட்டசாட்டமான நாற்பது. உச்சி வழுக்கை; காக்கி யூனிபார்ம், தோளில் முளைத்த வட்டவட்டமான சங்கிலிச்சுருள் மாதிரியான துணிக்கயிறு அவரது பைக்குள் போய் முடிந்தது. அவளைப் பார்த்து பயபக்தியோடு கேட்டார்:
"மேடம், நீங்க யாரைப் பார்கணும்? நான் ஏதாவது உங்களுக்கு உதவி செய்யலாமா? சொல்லுங்க மேடம்."
சரோசாவுக்கு அந்த வார்த்தையின் அர்த்தம் புரியவில்லை. ஆனாலும், அந்த மேடத்திற்கு உரிய கம்பீரத்தோடு அவரைப் பார்த்தாள். இப்படியொரு ஆம்பளை இதுநாள் வரைக்கும் இப்படியொரு மரியாதை கொடுத்ததில்லை. 'யோவ், அண்ணாத்தே... இரு இரு...' சரோசா காக்கியை நெருங்கி முழங்கையை நீட்டினாள். அவர் மோவாய் இடிபடும் இடைவெளியில் நின்றுகொண்டு, கம்பீரத் தன்னம்பிக்கை யோடு. அதே சமயம் அப்பாவித்தனமாக விவரம் சொன்னாள் :
"எனிக்கி இந்த ஆபீசுல வேல போடுறாங்க சாரே, கேசுவலையோ, கொசுவலையோ, ஏதாவதொரு வேல. இளங்கோ சார் வரச் சொன்னார்."
அவள் பேச்சைக் கேட்டதும், மலர்ந்த முகத்தை உலறவைத்த காக்கிக்காரர் அருகே, இரண்டு மூன்று பெண்கள் உள்ளே வந்தார்கள். ஒருத்தி கால்முட்டிகளைக் காட்டிக் கொண்டிருக்கும் ஸ்கர்ட்காரி. இந்த லட்சணத்தில் அதுவும் இடையிடையே கத்தரிக்கப்பட்டு இருந்து. மற்றொருத்தி கையில்லாத ஜாக்கெட் காரி. பொம்பளை உடம்பு, ஆம்பளை முகம். இன்னொருத்தி ஆம்பளை உடம்பு, பொம்பளை முகம். ஆனாலும் அவர்கள் ஹாண்ட்பாக்குகளை ஆட்டியவிதத்தில், காக்கிக்காரர் அவர்களிடம் பணிவன்பாக நின்றார். இதற்குள் சரோசா தன்பாட்டுக்கு நடந்துகொண்டிருந்தாள். அப்போது ஒரு விசில் சத்தம். முதலில் விட்டுவிட்டும், அப்புறம் விடாமலும் ஒலித்தது. அவள் யாருக்கோ, எதுக்கோ என்பது மாதிரி நடந்தபோது, "ஏய்... ஏய்... கேசுவலு, ஒன்னத்தான், - உய்ங்... உய்ய்” என்ற குரலும், குரலுக்குரிய விசிலடிச் சத்தமும் கேட்டன.
சரோசா, நடந்தபடியே முகத்தைத் திருப்பினாள். அவளுடன் இரண்டு நிமிடத்திற்கு முன்பு எந்த வாய் பணிவாகப் பேசியதோ, அந்த வாயே இப்போது அவளை 'வா... வா... என்று கையை ஆட்டி அட்டகாசமாய் கூப்பிட்டது. விசிலடித்தபடியே கூப்பிட்டது. குப்பத்தில் கூட இப்படி விசிலடிச்சி பொம்மனாட்டிய கூப்பிடமாட்டாங்களே... சரோசா ரிவர்சில் நடந்து, அந்த ஆசாமி முன்னால், முகச்சுருக்கங்களோடு நின்றபோது அவர் விசிலை எடுத்துவிட்டு அவளை வீசிக் கடாசினார்.
“ஏய், என்ன நினைச்சிக்கிட்டே? தொறந்த வீட்டுல ஏதோ நுழையுறதுமாதிரி நுழையுறே... நான் ஒருத்தன் இங்க நிற்கிறேனே, என் பெர்மிஷன் இல்லாம எப்படி நீ உள்ளே போகலாம்? 'ஒங்கள இல்ல மேடம், நீங்க போங்கோ. இந்தப் பொண்ணத்தான், "உங்களச் சொல்வேனா?' இந்தாம்மா! மொதல்ல வெளியில போ”
சரோசா, மன்றாடினாள்.
“அண்ணாத்தே, தப்பா நினைக்கப்பிடாது அண்ணாத்தே. ஒரு வேல கொடுக்கிறதா இளங்கோ சார் சொன்னாரு, நானும் ஆபீஸ்கீபீஸ் போனதில்லே. தப்பா நடந்திருந்தா மன்னிச்சுக்கோ”
"ஆங்... அப்படி வா வழிக்கி. ஆபீசுன்னா ஒரு முறை இருக்குது ஆனாலும் இப்போ நீ வெளியில நிக்கணும். நான் இளங்கோவ பார்த்துட்டு ஒன்கிட்ட சொல்றேன்.”
சரோசா என்ன செய்யலாம் என்று திக்கிமுக்கித் திணறிய போத அந்தக் கட்டிடத்தின் வெளிப்பகுதியில் - அல்லி அரசாணி மண்டபம் மாதிரியிருந்த உயரமான அறையிலிருந்த ஒருவன் கர்ஜித்தான். இடமும், உயரமும், அந்தஸ்தும் அந்த விசிலைவிட அதிகம்.
"யோவ்! நான் ஒருத்தன் செக்யூரிட்டி ஆபீஸர் நிக்கேன்ல... நீயே குறுக்கே புகுந்தால் அப்புறம் நான் எதுக்கு? அந்தப் பொண்ண இங்க அனுப்பு.'
விசிலடிச்சான், வேறு வழியில்லாமல் சரோசாவுக்கு வழிவிட்டார்.நாளைக்கி மாட்டிக் கொள்ளாமலா போவாள் என்று மனதிற்குள்ளேயே அவளைப் பகையாளியாக்கிப் பார்த்தார். இதற்குள் சரோசா மேல்நாக்கிப் பார்த்த கண்களை, அந்தக் கட்டிடத்தை நோக்கி கீழ்நோக்கிப் பார்த்தபடியே மேலே மேலே போனாள். செக்யூரிட்டி ஆபீஸர், அவளிடம் பேசுவது தனது தகுதிக்குக் குறைவு என நினைத்து, ரிசப்ஷன் ஆபீசரிடம் பேசு என்பது மாதிரி சைகை செய்துவிட்டுப் போய்விட்டார். உடனே அவள் அந்த ரிசப்ஷன் இருக்கைக்கு ஓடப்போனபோது, அங்கே மேஜையைவிட உயரமான நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஒரு நடுத்தரப் பெண், தான் ஊமை என்பது போல் அவளை அங்கே உட்காரும்படி கையால் தடுத்தது.
அந்த விசாலமான மொசைக் தரையில் வரவேற்பு வளைவு மேஜையிலிருந்து சிறிது தொலைவில் நீளவாக்கிலான இரும்புக் கிராதிகளில் வரிசைவரிசையாக பிளாஸ்டிக் நாற்காலிகள் பொருத்தப் பட்டிருந்தன. கிட்டத்தட்ட வகுப்பறை மாதிரி அது தோற்றம் காட்டியது. அப்போது அந்த அறையை இரண்டு பெண்கள்... பெருக்கிக் கொண்டிருந்தார்கள். இப்போது பதினொரு மணிக்குப் பெருக்குவதால் அவர்கள் காலையில் பெருக்கியதை மீண்டும் பெருக்குகிறார்கள் என்று நினைக்கவேண்டாம். சர்க்கார் பெண்கள் பதினொரு மணிக்குப் பெருக்குவதே பெரிய விஷயம். அவர்கள் துடைப்பங்களை தரையில் ஏவிவிட்டபோது, அங்கே அமர்ந்திருந்த பத்துப் பதினைந்து பேர்கள் எழுந்து நின்றார்கள். கைக்குட்டைகளால் முகத்தை மறைத்துக் கொண்டார்கள். ஆனால், சரோசா மட்டும் இரண்டு முட்டிக் கால்களையும் நாற்காலி முனையில் வைத்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்திருந்தாள். வரவேற்புக் குமரிக்கிழவி அதைக் கவனிக்கத் தவறவில்லை.
இந்தச் சமயத்தில் ஒரு மீசைக்காரன் அந்தப் பக்கமாக வந்தான். கன்னங்களோடு நீண்ட மீசை, முப்பது வயதிருக்கும். முகம் கிழடுதட்டியது. அங்கேயிருந்த பெண்களை ஓநாய், ஆட்டைப் பார்ப்பது போல பார்த்தான். பிறகு சரோசா இருந்த நாற்காலிக்கு அடுத்த நாற்காலியை விட்டுவிட்டு அமர்ந்தான். அங்கே போய்க் கொண்டிருந்த பெரிய மனிதர்களை அவர்களை தனக்குத் தெரியும் என்கிற முறையில் ஏதேதோ கேட்டான். அவர்களில் சிலர், அவனுக்கு நின்று பதிலளித்தார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு சரோசாவை நோட்டமிட்டான். தற்செயலாய் கேட்பதுபோல் கேட்டான் :
"ஒங்க பேரு என்ன?”
"சரோசா.'
"பேருக்கு ஏத்தாப்புலதான் இருக்கீங்க. என்ன விசயம்?” “எனிக்கி தெரிஞ்சவரு, இளங்கோன்னு பேரு. ஒரு வேல போட்டுத் தரதா சொன்னார்!”
“அவரு என்ன அவரு, நானே கூட உனக்கு வேல போட்டுத் தர ஏற்பாடு செய்யறேன். டோண்ட ஒர்ரி. இந்தப் புடவ நல்லாயிருக்கே. அப்புறம் ஒன்னோட குடும்ப பேக்ரவுண்ட சொல்லு பார்க்கலாம்."
மீசைக்காரன், தான் உட்கார்ந்திருந்த நாற்காலி சரியில்லை என்பதுபோல் எழுந்து, அவளுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டான். அவனிடம் தன்னைப் பற்றிய சில விவரங்களை மட்டும் சொல்ல நினைத்த சரோசா, அவன் பார்த்த பார்வையும், பேசிய பேச்சும் பிடிக்காதவள் போல் முகம் சுழித்தாள். அவனது வலது கை, அவளது நாற்காலிக்குப் பின்னால் தாளம் போட்டது. அந்த பிளாஸ்டிக் நாற்காலியை தட்டியபடியே அவளைத் தட்டுவது போல் அனுமானித்தக்கொண்டான். சரோசா அதிர்ந்து போனாள். எத்தனைவாட்டி ஒண்ணாப் படுத்தாலும் பேஜாரு செய்யாத குப்பத்து தோஸ்துகளை நினைத்தபடியே சட்டென்று எழுந்தாள். அவனோ, இன்னும் "டோன்ட் ஒர்ரி, டோண்ட் ஒர்ரி” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
சரோசா, அந்த வரவேற்பு நாற்காலிக்கு முன்னால் வந்து நின்றாள். அந்த நாற்காலிக்காரி டெலிபோனைக் குடைந்து ஒவ்வொருவரிடமும் ஏதோ பேசினாள். பிறகு அங்கேயிருந்த ஒருசிலரை உள்ளே போகச் சொன்னாள். பிறகு கேண்டினில் இட்லி இருக்கிறதா என்று விசாரித்தாள். தளபதிக்கு டிக்கெட் வேண்டும் என்றாள். அதேசமயம் அங்கேயிருந்த ரிஜிஸ்டரில் எழுதிக் கொண்டிருந்த ஆண்களையும், பெண்களையும் சைடில் பார்த்தாள். இந்தச் சமயத்தில் குதிரை மூக்கு மாதிரி முகத்தைத் திணித்த சரோசாவைப் பார்த்துக் கோபமாகக் கேட்டாள் :
"என்ன வேணும்?”
"இளங்கோ சார்."
"இளங்கோ சார்ன்னு யாருக்கும் பேரு கிடையாது. எஸ். இளங்கோ, ஜி. இளங்கோ, எல். இளங்கோவன், இதுல யாரு வேணும்?"
"நானு அடிச்சுப் போட்டேனே?”
“என்ன ஒளறுறே?"
'இளங்கோ, அதுதான், அறியாத புள்ளாண்டான்; பதினைந்து நாளா ஆசுபத்திரியில பேஜாரு பட்டவரு. எனிக்கி வேல போட்டுத் தாரேன்னார்.”
"நீயும் ஒன் தமிழும். கேஷுவலா? உட்காரு."
"அது வந்திருக்குதா?"
"எனக்கு ஜோசியமா தெரியும்? உட்காருன்னா உட்காரு. இல்லாட்டி நடையக்கட்டு."
வரவேற்புக்காரி வாட்டசாட்டமானவள். அங்கே வருகிறவர்களை குசலம் விசாரித்து, அவர்களது உறவையே முதலீடாக்கி நான்கைந்து டாக்சிகளை விட்டிருப்பதாகக் கேள்வி. இவள் தேறாதவள் என்பதால் அலட்சியமாக அடிக்கடி டெலிபோனில் பேசிப்பேசி அங்கேயிருந்தவர்களை ஏலத்தில் கூப்பிடுவதுபோல் கூப்பிட்டாள். சரோசா என்ற வார்த்தை வாயில் வரவில்லை. இதற்குள், சரோசா படியமாட்டாள் என்பதைப் புரிந்து கொண்ட மீசைக்காரன், வரவேற்புக்காரியின் காதில் உதடுகள் படும்படி கிசுகிசுத்தான். ஒருமணி நேரத்திற்கும்மேல், சரோசாவுக்கு, காலம் காலன் போல் கடந்தது.
சரோசா மீண்டும் அங்கே போனாள். 'தத்தேறி முண்ட, அது வந்திருக்கா, வரலியான்னாவது சொல்லாமே... கீறாள்... இவள்லாம் அண்ணாத்தேகிட்ட சிக்கணும், அப்போ தெரியும் சேதி.'
இவளின் துடிப்போ, அல்லது பதைப்போ புரியாத அந்தக் குமரிக்கிழவி கத்தினாள் :
"இந்தா பாரு. என் மூட அவுட்டாக்காதே. எனக்கு ஒன்னய எப்போ கூப்பிடணுமுன்னு தெரியும். அப்புறம், யோவ் மீசை, இன்னிக்கி அந்த பார்ட்டி இருக்குதா?"
சரோசா, ஆமை போல் ஐம்பொறிகளையும் அடக்கி அந்த நாற்காலியில் மீண்டும் உட்கார்ந்தாள். ஒருமணி நேரம், ஒன்றரை, இரண்டு. மீண்டும் அவள் அங்கே போனபோது வரவேற்புக்காரி டம்பப் பையோடும், மீசைக்காரனோடும் வெளியேறினாள். இப்போது ஒரு ஆம்பளை கிழடு உட்கார்ந்தது. சரோசா அவர் முன்னால் ஓடிப்போய் நின்றாள். "இளங்கோ சாரு.. இளங்கோ சாரு..." என்றாள். அவர் கத்தினார் : "வந்ததும், வராததுமாய் என்னம்மா இது? என்றார். சரோசா கலங்கிபோனாள். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாப் போச்சே...!
சரோசா வந்த வேளை என்ன வேளையோ? அலுவலாக இடைவேளை வந்துவிட்டது.
அந்த வரவேற்புக் கிழடு, ஆற அமர உட்காரட்டும் என்பதுபோல் அவள் பல்லைக் கடித்துக் கொண்டே நின்றாள். அதுவோ கையோடு கொண்டுவந்த டிபன் பாக்ஸை மேஜையில் போட்டுத் திறந்தது. எலுமிச்சப்பழ சாதம், எண்ணெய்கத்திரிக்காய். அந்த வரவேற்பு வட்ட மேஜையிலேயே கரங்களை கால்கள் மாதிரி நீட்டிக்கொண்டது. கிடைக்காத தீனி கிடைத்துவிட்டால், ஒரு நாய், இரண்டு கால்களையும் முன்னால் நீட்டிக்கொண்டு அதற்கு மத்தியில் உள்ள இரையை தலையை சாய்த்துச் சாய்த்துத் தின்னுமே அப்படி.
இந்தச் சமயம் பார்த்து மீசைக்காரன் அங்கு வந்தான். கிழடுக்கு தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு, அவளை நோட்டமிட்டான், இப்பவாவது என் அருமை புரிஞ்சுதா என்பது மாதிரி. இதற்குள் மீசைக்காரன் அந்தக் கிழட்டைப் பார்த்து "வி.ஐ.பி. ரூம்ல போய் சாப்பிட்டுட்டு வழக்கம்போலத் தூங்குங்க சார்; ரிசப்ஷனை நான் பார்த்துக்கிறேன்” என்றான். கிழடு அவனை விருப்போடும், சரோசாவை வெறுப்போடும் பார்த்துக் கொண்டது. பிறகு சாப்பிட்டு முடித்துவிட்டு வி.ஐ.பி. ரூமிற்குள் படுக்கப் போய்விட்டது. மீசைக்காரன் அவரது நாற்காலியில் ஏறிக்கொண்டான். சரோசாவைப் போலவே ஒருசில தலை காய்ந்த பெண்களும், ஆண்களும் மீசைக்காரனை மதுரை வீரனாகப் பார்த்துக் கொண்டு அவன் பக்கமாகப் போனார்கள். சரோசா மட்டும் வீறாப்பாக நின்றாள். மீசைக்காரன் மற்றவர்களை மிரட்டினான். "போங்க... போங்க... அந்தப் பக்கமாகப் போங்க... டைரக்டர் வர்ற நேரம், நான் கூப்பிடுவேன், எனக்கு எப்பக் கூப்பிடணுமுன்னு தெரியும்."
சரோசா, ஒன்றைப் புரிந்து கொண்டாள். இவனுக்கு விட்டுக்கொடுக்க வில்லையானால், உள்ளே விடமாட்டான். அடக்கண்றாவியே, சர்க்கார் ஆபீசுலயா இந்தக் கூத்து... சாராயக் கடையில இல்லாத கூத்து. பேமானிப் பயலுக. பேசாமப்பூடலாம். நாளிக்கி இளங்கோவோடயே வரலாம். அய்யய்யோ! அதுக்குள்ளே வேல ஆருக்கும் பூட்டா? போனாப் போகட்டும். வெளியிலயே இப்படின்னா உள்ள எப்படியோ? சாட்சிக் காரனைவிட சண்டைக்காரனே தேவல. பேசாம, அண்ணாத்தக்கிட்டயே சரண்டராயிடலாம். சின்னவீடுதான் கோள் மூட்டியிருப்பாள். காலுல விழுந்தா தூக்கிவிடுவாரு.
சரோசா, வாசலுக்கு வெளியே போவதும், உள்ளே வருவருமாக இருந்தாள். அந்தச் சமயத்தில் உள்ளேயிருந்து வெளியே வந்த ஒருத்தியிடம் “இளங்கோ சார் இருக்காரா?" என்று கேட்டாள். அவள் பக்கத்தில் இருப்பதாலேயே, தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்ட அந்தப் பெண் ஊழியை, அவளிடம் அலட்சியமாக ஏதோ சொல்லப்போனாள். இதற்குள் எவனோ ஒருவன் அவளோடு சோடி சேர்ந்துவிட்டான். சரோசாவுக்குப் பதிலளிக்காமலேயே அவளும் அவனோடு போய்விட்டாள். அந்தச் சமயம் பார்த்து உள்ளே வந்த, ஒரு வெத்தலைப் பாக்கு ஆசாமியிடம் கேட்டாலோ, அவர் மீசைக்காரனிடம் கை காட்டினார். பேசாம மீசை சோமாரியை தாடையில ஒண்ணு போடலாமா...?
சரோசாவின் உள்வாங்கிய கண்கள் திடீரென்று இமைகளைத் தூக்கியபடி வெளிப் பட்டன. ஒடுங்கிய உதடுகள் பிரிந்தன. கன்னத்தில் குவிந்த கைகள் நீண்டன. இளங்கோ சார்... அதோ அந்த மீசைக்காரனுக்குப் பக்கத்திலேயே, நீலக்கலர்பேண்ட், அதுக்குள்ளே டக்கு வெச்ச சட்ட. சும்மா சொல்லக்கூடாது, பிள்ளாண்டான் நல்லாத்தான் கீறாரு. மீச மட்டும் வச்சாருன்னா குயந்த முகம் மாதிரி தோணாது.
சரோசா, துள்ளிக்குதித்து இளங்கோவின் முன்னால் போய் நின்றாள். மீசைக்காரனிடம் பேசிக்கொண்டிருந்த அவனது கவனத்தைக் கவர்வதற்காக இருமிக்காட்டினாள். அப்படியும் அவன் திரும்பாததால், அவன் முழங்கையில் லேசாய் ஒரு தட்டுத் தட்டியபடியே "சாரே... சாரே... வந்துட்டேன் சாரே”... என்றாள். இளங்கோவும் மீசைக்காரனிடம் சொன்ன ஒரு வார்த்தையை நடுவிலேயே விட்டுவிட்டு, அவளைப் பார்த்து 'ஹலோ' என்றான். அவன் தன்னிடம் பேசாமல் டெலிபோனில் பேசுகிறானோ என்பது மாதிரி பார்த்த சரோசாவை, நேருக்கு நேராய் பார்த்தபடி, ஏதோ ஒரு பெரிய எதிர்பார்ப்பு எதிர்ப்புகளுக்கு நடுவே நிறைவேறியது மாதிரியான கோபத்தனமான திருப்தியுடன் கேட்டான் :
"உன்ன பத்துமணிக்கே வரச்சொன்னேனே. இரண்டரை மணிக்கு வந்து நிக்கறியே."
"வந்துட்டேன் சாரே! பதினொரு மணிக்கெல்லாம் டான்னு வந்துட்டேன. இங்கேதான கணக்குல நிக்கறேன். உள்ள யாரும் விடல."
"ஏம்ப்பா இந்திரன்! உன்கிட்ட காலையிலேயே சொல்லி விட்டுத்தானே போனேன் : சரோசான்னு ஒரு பொண்ணு வரும், 'சேரி வாசனையை கண்டு விரட்டாமல் உள்ளே விடுன்னு, சொன்னேனே. கடைசியில நான் எதிர்பார்த்ததுமாதிரி ரிசப்ஷனையே ஜெயிலா மாத்திட்டியே."
“அய்யோ சாரே, நீங்க சொன்ன பொண்ணு இதுதானா? ஏம்மா, ஒன் பேர சொல்லப்புடாதா? சாரு கிட்ட கெட்டபேரு வாங்கிக் கொடுத்திட்டியே.'
இளங்கோ, மீசைக்காரனுக்குப் பதில் சொல்லாமல், எலுமிச்சைச் சாத எச்சங்களும், சட்னி துளிகளும் ஆக்கிரமித்த வரவேற்பு ரிஜிஸ்டரை எடுத்தான். நாள், நட்சத்திரம் போன்ற வகையறாக்களை எழுதிவிட்டு, சரோசாவை ஒரு கையெழுத்துப் போடச் சொன்னான். சரோசாவுக்குப் பெருமை பிடிபடவில்லை. 'அடேயப்பா! எம்மாம் பெரிய கவர்மெண்ட் ரிஜிஸ்டருல நானு கையெழுத்துப்போடறேன்; நைட்டு போய் நாயினாகிட்ட சொல்லணும்.'
இளங்கோ முன் நடக்க, சரோசா பின் நடந்தாள். வரவேற்பு வளையத்தைத் தாண்டி, பத்தடி இடைவெளி போன்ற பாதையில் நடந்து, எதிரேயுள்ள இரண்டு கண்ணாடிக் கதவுகளில் இளங்கோ ஒன்றைத் தள்ளினான். முரண்டுபிடித்த அந்தக் கதவு சரோசா மீது மோதாமல் இருப்பதற்காக அதைப் பிடித்துக் கொண்டான். சரோசா ஜம்மென்று நடந்தாள். வாசல் வளாகத்திலும், வரவேற்பு அறையிலும் அனுபவித்த சிறுமை, இப்போது சிறுத்துவிட்டது. மீசைக்காரனைப் பற்றி இளங்கோவிடம் சொல்லப் போனாள். பிறகு, வாயை மூடிக்கொண்டாள். எந்தக் காரணத்தைக் கொண்டும், துரை அண்ணன் சம்சாரம் அண்ணாத்தைக்கிட்ட சொன்னாப்பல, கோள் சொல்லக்கூடாது. அப்படிச் சொல்றது, 'நீ இருந்தும் நடக்குது பாரு' என்கிற அர்த்தமா ஆயிடும்.
இருவரும், கண்ணாடிக் கதவுகளைத் தாண்டி மெயின்ரோட அளவுக்கான அகலமான பாதையில் நடந்தார்கள். இருபுறமும் பெரிய பெரிய அறைகள், ஒவ்வொரு அறையிலும் மத்தியிலோ அல்லது ஒரு ஓரத்திலோ ஒரு கிருதாமீசை, வஸ்தாது நாற்காலி. மற்ற மேஜை நாற்காலி வகையறாக்கள் 'மற்றும் பலர்' மாதிரி. அத்தனை அறைகளிலும் ஆண்களும், பெண்களுமாய் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரே சந்தைச் சத்தம். டெலிபோன் முணுமுணுப்பு, வானொலியின் கிரிக்கெட் வர்ணனை. ‘டப்பு டப்பு' டைப்ரைட்டரின் சத்தம், 'டொக்கு டொக்கு' மின்விசிறிச் சத்தம். சரோசாவுக்கு ஒரு சின்ன ஆசை. ‘அதோ சொரசொரப்பான கம்பளத்துமேலே கீற நாற்காலி நல்லாத்தான் கீது. நாயினாவ ஒரு நாளக்கிக் கூட்டிவந்து அதோ அந்த மெத்த நாற்காலியில குந்தவைக்கணும். நாயினா... நாயினா... பாரு நாயினா, ஒன் பேத்தி மனுஷியாயிட்டா.'
இளங்கோ இடதுபக்கமாக இருந்த ஒரு அறைக்குள நுழைந்தான். இரண்டு கூறுகளான கதவுகள் திறந்தபடியே இருந்தன. உள்ளே நுழைந்தவன், வெளியே லேசாய் தயங்கி நின்றவளை லேசாய் தலையாட்டிக் கூப்பிட்டான். அவள் மெல்ல நடந்து உள்ளே வந்தாள். அந்த அறையை ஒட்டுமொத்தமாகப் பார்த்தாள். நீளவாக்கிலான செவ்வக அறை. அறுபதுக்கு முப்பது. கிழக்குப் பக்கம் ஓரமாக பிளைவுட் தடுப்புகளைக் கொண்ட ஒரு சின்ன அறை. இருபதுக்கு இருபது. அந்த அறையை மூடிய கதவு. வெளியே வடக்குப் பக்கம் நடுவில் பெரிய மேஜை. அதில் கழுத்தை சாய்த்துக் கொள்ளும் அளவிற்கான நாற்காலி. அந்த இருக்கைக்கு முன்னால் இருபுறமும் ஐந்தாறு இரும்பு நாற்காலிகள். சன்மைக்கா மேஜைகள். தெற்கு முனையில் ஒரு பாடாவதி மேஜை. அதன் மேல் பைல்கள், மைக்கூடுகள், ரப்பர் ஸ்டாம்புகள்... ஒரு வீராப்பான பேர்வழி.
நடு நாற்காலியில் உட்கார்ந்திருந்தவர் சரோசாவை ஓரங்கட்டிப் பார்த்தபடியே, இளங்கோவைப் பார்க்காமலேயே "உடம்பு சரியாயிட்டா" என்றார். அவனும் அவசர அவசரமாய் ஆமாம் போட்டுவிட்டுச் சொல்ல வேண்டியதைச் சொன்னான். "நீங்க என்னப் பார்க்க வந்தப்போ சொன்னேனே... கஷ்டப்படுற பொண்ணு... அது இதுதான்."
"ஓகே ஓகே நீ சொன்னால் நான் தட்டுவேனா? எதுக்கும் டெப்டி டைரக்டர் கிட்டயும் சொல்லிடு."
"காலையிலேயே சொல்லிட்டேன். ஓகே சொல்லிட்டார்." "எலக்ஷன் நம்பி பணத்தப் போடாதே, எலக்ட்ரிசிட்டிய நம்பி இலையப் போடாதே ஆபீசர நம்பி ஆமாம் போடாதே... எதுக்கும் அவரே என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லட்டும்.”
தலைமை கிளார்க் சொல்வது கொஞ்சம் அதிகப்படியாக, இளங்கோவிற்குத் தோன்றியது. ஆனாலும் அங்கிருந்த ஊழியர்கள் அனைவரையும் அடையாளம் தெரிந்தவர்கள் போல் பார்த்துக் கொண்டு ஆபீசர் கதவைத் தள்ளினான். அந்தக் கதவு அவனை உள்வாங்கிக் கொண்டு, மீண்டும் தானாய் மூடப்போனபோது, இளங்கோ அதைப் பிடித்துக் கொண்டான். சரோசாவும், தயங்கித் தயங்கி உள்ளே போனாள். உடனே அந்த ஸ்பிரிங் கதவு அலிபாபா குகைக் கதவு மாதிரி மூடிக் கொண்டது. உள்ளே போன சரோசா, முதுகை நிமிர்த்தினாள். இன்னா ஜில்லுன்னுக்கீது. அண்ணாத்த வீட்டுக்குப் போனப்போ குளிர் அடிச்சாப்புல இருந்துதே, அதேபோல ஜிலுஜிலுப்பாக கீது. அட தரையப் பாரேன், நடந்தா காலு உள்வாங்குது. காலுக்கு செருப்பே வாணாம் போல.
தலைக்கு மேல் நீண்ட ரப்பர் மெத்தை நாற்காலியின் பின்பக்கம் பிடரியில் கை போடுவதுபோல் போட்டுக்கொண்டு ஏதோ ஒரு பைலை குடைந்து கொண்டிருந்த டெப்டி டைரக்டர். அருணாசலம், கடாமுடா சத்தம் கேட்டு நிமிர்ந்தார். வயது, உடம்பு, நிறம் ஆகிய மூன்றிலும் நடுத்தரம். அடித்தொண்டையில் பேசக்கூடியவர்.
“உடம்பு இப்போ எப்படி இருக்குதப்பா?"
"ஒங்க ஆசீர்வாதத்துல சரியாயிட்டு சார்."
'அப்புறம் நான் சொன்னேன் பாருங்கோ கேஷ்வல் பொண்ணு. அது இந்தப் பொண்ணுதான் சார். பாவம், தள்ளாத அப்பாவ காப்பாத்துறதுக்கு அல்லாடுது."
“அப்படியா! ஒன் பேரு என்னம்மா?"
"சரோசாங்க, அய்யா!"
"காலையில ஒன்பது மணிக்கே, வந்து, டூட்டி ஆபீசருக்கிட்ட சாவி வாங்கி இந்த செக்க்ஷன் திறக்கணும். என் ரூம நல்லாத் தொடைக்கணும். இந்த ஜாடிய வெளியில கொண்டுபோயி கூலர்ல தண்ணி பிடிச்சு வைக்கணும். நான் வர்றதுவரைக்கும் வாசலிலேயே நிக்கணும். நான் வர்றதப் பார்த்தும் கதவத் தொறக்கணும். சூட்கேச சுமக்கணும். ஒரு நாளைக்கி பத்துப் பதினைந்து தடவ கேண்டீனுக்குப் போக வேண்டியிருக்கும். அலைச்சலுக்கு அலுக்கப்படாது. நாலு வருஷம் இப்படித் தள்ளிட்டியானால், அப்புறம் அதோ வெளியில உட்கார்ந்திருக்கானே அப்துல்லா, அவன மாதிரி காலுமேல காலு போட்டு வேல பார்க்காமயே சம்பளம் வாங்கலாம். நான் சொல்றது புரியுதா?"
"புரியுதுங்க அய்யா! அய்யா காலால் இட்ட வேலையை கையால...
"சினிமா அதிகமா பார்ப்ப போலுக்கு. இளங்கோ முகத்துக்காக இப்போ ஒன்ன சேர்க்கிறேன். அப்புறம் ஒன்ன இங்க வைக்கிறதும், வைக்காததும் உன் திறமையையும், விசுவாசத்தையும் பொறுத்திருக்கு."
"சார், ஹெட் கிளார்க் கிட்ட ஒரு வார்த்த..."
"இண்டர்காமில் சொல்லிடறேன். இந்தப் பொண்ணு முன்னால அவருக்கு உத்தரவு போடக்கூடாது பாரு."
"சாரி சார், வாறேன் சார்."
சரோசாவும், இளங்கோவும் வெளியே வந்தார்கள். அப்போது பார்த்து இண்டர்காம் குமிழை கீழேவைத்த தலைமை கிளார்க் ராமசாமி, இளங்கோவைப் பார்த்து தலை ஆட்டினார். இளங்கோவும் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு லேசாய் திடுக்கிட்டவன் போல், தோளைக் குலுக்கிவிட்டுப் புறப்படப் போனான். சரோசாவும் அவன் பின்னால் புறப்படப் போனபோது, அவன் அவளுக்குச் சொல்வது போல எல்லோருக்கும் சொன்னான்:
“நான் மாடியில இன்னொரு செக்ஷனில இருக்கேன். இந்த செக்ஷன்தான் உனக்கு எல்லாம். யார் சொல்லையும் தட்டப்படாது. என்ன வேல கொடுத்தாலும் செய்யணும்.”
சரோசா தலையாட்டினாள்.
இளங்கோ அங்கே இருந்தவர்களிடம் லேசாய் அரட்டை அடித்து விட்டுப் போய்விட்டான். தனித்துவிடப்பட்ட சரோசா, அங்குமிங்குமாய், மலங்கமலங்கப் பார்த்தாள். டைப்பிஸ்ட் கனகா, அவளை ஏறிட்டுப் பார்த்தாள். 'உடம்பு இருக்கு பார் இரும்புமாதிரி. நானும் இருக்கேனே, தயிர்ச்சாதம்.' அக்கவுண்டண்ட் ராமசாமி அவளை அண்ணாந்து கோபமாகப் பார்த்தான். 'என்னோட வேலைக்காரிய கேஷ்வலா வைக்கலாம்னு இருந்தால். இளங்கோ முந்திக்கிட்டாரே. பார்க்கலாம், பார்க்கலாம். இந்த முண்டக்கண்ணிய விரட்டணும்.' எல்லோரையும் விட, தெற்குப்புற மேஜையில் குரங்கு மாதிரி கால்களைத் தூக்கிவைத்துக் கொண்டு மேஜையையே மரமாகப் பாவித்து உட்கார்ந்திருந்த பியூன் அப்துல்லா பொறிந்தான். ஒல்லி உடம்பன், முப்பதைத் தாண்டாதவன்.
“நான் ஒருத்தன் இருக்கப்போ, எதுக்கு கேஷ்வல்?"
"டீ வாங்கிக் கொடுக்கறது ஒன் வேலையில்லங்கற. மேஜையைத் தொடைக்கறது ஒன் வேலையில்லங்கறே. ஒரு டம்ளர் தண்ணி குடிக்கறதுக்கே மூச்சு வாங்க வைக்கிற. இந்த வேலையைச் செய்யறதுக்கு ஒரு ஆள் வேண்டாமா?"
"எனக்கு ஓட்டி கேட்டா இல்லைன்னு சொல்றீங்க. அதுக்குக் காரணம் கேட்டா, அரசாங்கம் சிக்கனமா இருக்கச்சொல்லி சர்க்குலர் போட்டதாச் சொல்றீங்க. ஆனா இந்த மாதிரி சாவுகிராக்கிங்கள, கேஷ்வலா போட்டு பணத்த விரயம் பண்றீங்க."
தலைமை கிளார்க்கோடு மோதிய அப்துல்லா இப்போது சரோசா மீது பாய்ந்தான்.
“இந்தாம்மா ஒன்னத்தான், பெரிய சினிமா ஸ்டார்மாதிரி ஏன் போஸ் கொடுக்கிறே? என்னோட இந்த எச்சில் கிளாச கழுவிக் கிட்டுவா."
சரோசா சப்த நாடிகளும் அற்றுப் போனவளாய் நின்றாள். எல்லோருமே, அவன் விரட்டுவதை, வேடிக்கை பார்ப்பதைப்போல் பார்த்தார்கள். 'அல்லாரும் என்னை ஏன் ஜென்மப் பகையா பார்க்கிறாங்கோ? ஒவ்வொருத்தனும் அண்ணாத்த மாதிரி தோணுதே.”

