Chapter 13

அந்த ‘கர்ப்பிணிப்பெண்' பஸ்ஸிலிருந்து இறங்கி, லேசாய் திரும்பி ஓரங்கட்டிப் பார்த்தபடியே நடந்தாள். பிறகு இடுப்பைப் பிடித்துக்கொண்டு சிறிதுநேரம் நின்றாள். பிள்ளை வயிற்றுக்குள் மோதுகிறானாம் - மீண்டும் தன்பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தாள். பழைய கோவில் வளாகத்தின் முனைக்கு வந்ததும், மீண்டும் நின்றாள். அந்த வளாகத்தின் எல்லையில் மானுடக் கழிவுகளாய் உட்கார்ந்திருந்த மனித வரிசையில் ஒரு கிழவர் எழுந்து சிறு குழந்தைபோல் தத்தித்தத்தி நடந்து அவளிடம் நெருங்கினார். அவரை அந்த நயினாவை - அவள் தன் பக்கமாய் சாய்த்துக்கொண்டே, தன்னையே ஊன்றுகோலாய் பிடித்துவைத்தபடி அவரை நடத்திக்கொண்டே நடந்தாள். “இன்னா நயினா, எத்தனைவாட்டிச் சொல்றது? நாஸ்தா பண்ணினோமா, குப்புற அடிச்சுப் படுத்தோமான்னு இல்லாமே, இங்கே உன்க்கி இன்னாவேல” என்று செல்லமாகக் கோபித்தபடியே, அவர் தலையில் படர்ந்த துரும்புகளைத் தட்டிவிட்டாள். அவரை அவரது வாடிக்கையான இடத்தில் குந்த வைத்துவிட்டு ஒரு ஒடுங்கு பாதைப் பக்கம் வந்தாள்.

ஒரு சின்ன பனித்துளி தன்னுள்ளே முழுப் பனையை பிரதிபலிப்பதுபோல், ஒடுங்கிய சந்தின் முனைக்கு அப்பால் தெரிந்த ஏரியாவை நோக்கி மெல்ல நடந்தாள். அந்தப் பாதையைத் தாண்டியதும் அந்தக் கோவில் மறைத்த சேரிப்பகுதி தென்பட்டது. குண்டும், குழியுமான சாலை... ஒற்றைக்கண் பிசாசுபோல் பாதாளச் சாக்கடைகளைக் காட்டிக் கொண்டிருக்கும் சைபூன்கள். பெருமூச்சுவிடும் கார்ப்பரேஷன் பம்புகள். வளைந்து நெளிந்து சென்ற அந்தப் பாதையின் இருபுறத்திலும் நாயர்தேநீர்க் கடைகள். நாடாரின் பலசரக்குக் கடைகள்; இண்டர்நேஷனல் முடிதிருத்தகங்கள்; சர்வதேச தையல் கடைகள்; பலரை உருப்படாமல் செய்த ஒரு நடிகரின் மூஞ்சியை பல கோணங்களில் காட்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட தட்டிகளையே கவர்களாகக் கொண்ட ரசிகர் மன்றம்; மேடு பள்ளமுமான கோடுபோல தென்னங்கீற்று அடைத்த மறைவிடங்கள்; அந்த மறைவிடங்களையே எல்லைச் சுவராகக் கொண்ட சேரிக் குடிசைகள். ஆங்காங்கே ஓடிக்கொண்டிருந்த பன்றிகள், நோயாளி நாய்கள்-இப்படி சாலையின் எல்லையின் ஓரங்கள் இரண்டும் சமத்துவம் இல்லாத கட்டிடங்களாய் நிரப்பப்பட்டிருந்தன. என்றாலும், அந்த ஒழுங்கீனமான கட்டிட வரிசைகளை புதைப்பது போல் அந்தக் கட்டிடம் கம்பீரமாய் நின்றது. வாசலை மறைக்கும் பால்கனி, அதன் மேல் தளத்தில் டி.வி. ஆன்டனா, உள்ளே அடுக்கடுக்காய் அறைகள், தங்கம்போல் மஞ்சளாய் மின்னும் சோபாசெட். எதிரே ஒரு டிவி செட். கீழே ஒரு விசி ஆர். மேலே ஒரு டூ இன் ஒன்.

அந்தக் கர்ப்பிணிப்பெண், உள்ளே போய் காலிங்பெல்லை அழுத்தினாள். கதவு திறக்கப்படாமலேயே, ஜன்னல் வழியாக ஒரு பெண் முகம், பேய் முகம் போல் அங்குமிங்குமாய் ஆடிக்கொண்டே பேசியது. அப்போது அதன் கழுத்தில் கிடந்த நெக்லஸ், ஜன்னல் கம்பிகளில் மோதி, 'குங்க்குங்' என்ற ஒலி எழுப்பியது.

"ஏய் சரோசா, ஒனக்கு எத்தனவாட்டி சொல்றது, பின்பக்கமா போகப்படாது?"

"பந்தலில பிரசவத்தை வச்சுக்க முடியாதே -"

சரோசா, அப்படிச் சொல்லிவிட்டுச் சிரிக்கத்தான் போனாள். ஆனால், சிரிப்பைக் கொடுப்பதற்காக உள்ளடங்கி விலகிப்போக வேண்டிய பற்கள், ஒன்றையொன்று கடித்துக்கொண்டன. இந்தத் தடிச்சி, இந்த வீடு 'குட்சயா' இருக்கப்போ, அந்த ஆசாமிக்கி சின்னவீடா வந்தவள். ஒண்டவந்த இந்தப் பிடாரி, இந்த வீட்டு லட்சுமியை விரட்டிட்டு. ஆரம்பத்துல கலக்கல கத்துக்கொடுத்தவளே இவதான்.பொம்மனாட்டிக்கி பொம்மனாட்டியா உதவிக்கு வந்தவள். இப்ப என்னடான்னா டாவு காட்டுறா டாவு... ‘அடியே கஸ்மாலம், நீ பூட்டிருக்குற கம்மலு, கண்டல் கஞ்சியில வந்ததுடி... கழுத்துல பாம்புமாதிரி தொங்குதே நெக்கலசு 'ஊரலுல' வந்துதுடி. என்னய்யா உள்ள வரவேண்டாம்னு சொல்ற? இதுக்குப் பேருதாண்டி டைம்ங்கறது...

சரோசா, ஜன்னலில் பதிந்த பூசணிக்காய் முகத்தை கொட்டக் கொட்ட பார்த்தபடியே, மனதிற்குள் அவளைக் கண்டபடி திட்டினாள். அந்தத் திட்டு, அவள் காதுகளுக்கு உரக்கவே கேட்டது. ஜன்னல்காரி இன்னும் கதவைத் திறக்காமல் ஏதோ பதில் சொல்லப் போனபோது, இன்னொரு முகம் தோன்றியது. அது உடம்பை நிமிர்த்தியபோது தளதளப்பான வயிறு தெரிந்தது. கழுத்து செயின் தொப்புளை மறைத்தது. சரோசா அந்த முகத்திடம் முறையிட்டாள்:

"பாரு துரையண்ணே! அக்கா கதவ தெறக்கமாட்டக்காள்."

"அடேடே, சரோசாவா? ஒனக்காகக் காத்துக்காத்து கண்ணே நோவெடுத்துட்டுது. வழியிலே பழகாத 'நாய்' ஏதும் மடக்கிட்டோன்னு பயந்துட்டேன். ஏய் சாந்தி, கதவத்தெறமே.”

"சாந்தி, சாந்தியில்லாமல் முனங்கிக்கொண்டே அந்தக் கதவை, வீறிட்டுக் கத்தும்படி இழுத்தபடியே திறந்தாள். சரோசாவோ சொந்த வீட்டுக்குள் நுழைவது போல, உள்ளே போனாள். துரையையும், பெரிய வீடாகிப் போன அவன் சின்ன வீட்டையும் ஒருக்களித்துப் பார்த்துவிட்டு, அவர்கள் நின்ற வரவேற்பு அறையைத் தாண்டி, இரண்டாகப் பிரிந்த ஒரு கிளை அறைக்குள் போனாள். வயிற்றில் ரப்பர் கயிற்றால் கட்டியிருந்த கால்பந்து பிளாடரை எடுத்து, அங்கிருந்த ஒரு மேஜையில் வைத்தாள். இதனால், பின்பக்கம் ரப்பர் கயிற்றின் பிடி தளர்ந்தது. பிட்டத்தில் பொருத்தப்பட்ட இன்னொரு பிளாடர் கீழே விழப்போனது. சரோசா அதைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். பிறகு அதை மேஜை தொட்டிலில் கிடத்தினாள். இப்படி தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்டு, ஜாக்கெட்டை இழுத்துவிட்டு சுருங்கிப்போன பாவாடையை கால்வரைக்கும் பரப்பிவிட்டுக் கொண்டு, புடவையை கட்டினாள்.

சரோசா, பட்டறிவால் பேசினாள் :

"இனிமே ரூட்ட மாத்தணுமுண்ணா! பஸ்சுல ஏறப்போ ஏறுக்கு மாறா பார்க்கிறாங்க. நாவலூர் பக்கமும் ஒரே ரெய்டு. இரண்டு மணிநேரம் காத்திருந்தேன். ஸ்பாட்டுக்கு வராண்டாம்னு மணி சொல்லிட்டான். சவுக்குத் தோப்புக்குள்ள போகச் சொன்னான். அங்க வந்து சரக்கக் கொடுத்தான்.”

"நீ சொல்றதும் சரிதான். இனிமே கடல்வழியா சரக்கக் கொண்டு வரணும். கர்ப்பிணிப் பொண்ணுவேடம் இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சிப்போச்சு.'

"எனக்கு பயம்மா கீதுண்ணா... போலீஸ்ல அவ்வளவு ஒத தின்ன பொறகு வாய்க்கையே வெறுத்திட்டு. பழையபடி மாட்டிக்கிட்டா ஒடம்பு தாங்காதுண்ணா.”

“தொழிலுல இதெல்லாம் சகசம்மே.”

துரைக்கு, நாற்பது வயதிருக்கும். கறுப்பு என்றாலும், காக்கா பொன்கறுப்பு, துருத்திய வயிறு என்றாலும் அதைத் தூக்கி நிறுத்தும் உறுதியான மார்பெலும்பு, சரோசாவின் வயிறு மேலே பிரசவித்த சரக்குகளை கரங்களில் ஏந்தி முன் நடந்தான். சரோசா, அவன் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தாள். ஆறுதலுக்காகக் கூட ஒரு வார்த்தை சொல்லாமல், தொழில் தர்மத்தை அவன் சொல்லி க் காட்டியது, ‘வேணுமுன்னா இருந்தா இரு, இல்லாவிட்டால் போ' என்பது மாதிரி அவளுக்குத் தோன்றியது. அவள் யோசித்து நடந்ததால் நிலைப்படி நெற்றியில் தட்ட, அதை தடவிவிட்டுக் கொண்டே குனிந்து பின்புற வரவேற்பறைக்கு வந்தாள். அங்கே கிடந்த இரண்டு நாற்காலிகளின் சட்டங்களிலும், இருகால்களையும் ஒருகால் மாதிரி போட்டுக் கொண்டு இரண்டுபேர் அட்டகாசமாய் கிடந்தார்கள். அவளைப் பார்த்ததும் தங்கள் பக்கம் வரும்படி கையசைத்தார்கள். அவளோ செல்லாக் கோபத்தை பொறுமையாக்கி, புறவாசலில் இருந்து கீழே குதித்தாள்.

புறவாசலையொட்டி ஒரு பெரிய பந்தல் போடப் பட்டிருந்தது. தென்னங்கீற்றிலான மூங்கில் பந்தல். மூன்று பக்கம் மறைத்து ஒரு பக்கத்தை வாயாகக் காட்டிக் கொண்டிருந்தது. எதிர்ப்புறம் கடலே ஒரு அடைக்கலம் மாதிரியும் காட்சியளித்தது. இந்தக் கடலிலிருந்து தோணிகளில் சரக்குகள் வருவதும் போவதும் சகஜம். அந்தப் பந்தலுக்குக் கீழே ஓரடி உயரத்திற்கு மணல் பரப்பு. ஏழெட்டுபேர் தாறுமாறாகக் கிடந்தார்கள். ஒருவன் படுத்தக்கொண்டே குடித்துக் கொண்டிருந்தான். இன்னொருத்தன் குப்புறக் கிடந்தான். ஒருத்தன் கல்லுளிமங்கனாய் சுவரில் சாய்ந்திருந்தான். அத்தனைபேர் முன்னாலும் கண்ணாடிக் கிளாஸ்களில் வெள்ளித்திரவம் நிரம்பியிருந்தது. ஒரு அம்மைத்தழும்பு ஆசாமி வெளியே இருந்து உள்ளே வந்தான். இன்னொருத்தன், வீட்டுக்குள்ளேயிருந்து வெளியே வந்தான். வெளியேயிருந்து வந்தவன், வேர்க்கடலைப் பொட்டலங்களையும், சிகரெட் பாக்கெட்டுகளையும் கொடுத்தபோது, உள்ளேயிருந்து வந்தவன் நண்டுகளையும், இரால்களையும், மசாலா முட்டைகளையும் ஆவிபறக்கக் கொண்டு வந்தான். அந்தப் பக்கமாய் வந்த சரோசா முட்டுக்காலிட்டு உட்கார்ந்தாள். இதற்குள் துரை ஒரு கேனை கொண்டுவந்து, ஒரு கடிகார ஆசாமியிடம் ஒரு கிளாஸ் நிறைய ஊற்றினான். அந்த ஆசாமி சந்தேகம் கேட்டான் :

"ஏம்பா, இது நெசமாவே ஸ்பெஷல்தானா?"

துரை பதிலளிக்கப் போனபோது, சரோசா அந்த ஆசாமியின் முன்னாலிருந்த கிளாசைப் பிடுங்கினாள். மணல் இல்லாத வழுக்கைத் தரையில் நான்கைந்து சொட்டுக்களை ஊற்றினாள். ஒரு ஆசாமியின் முன்னால் கிடந்த தீப்பெட்டியை அங்கிருந்து படுத்தபடியே, கையில் கவ்விக்கொண்டு நிமிர்ந்தாள். சாராயத்துளிகள் மேல் தீக்குச்சியை உரசி மேலே பிடித்தாள். அந்தத் திரவம் குப்பென்று பற்றி எரிந்தது. இனந்தெரியாத ஒரு 'கிக்' நெடி - கடல் காற்றும், கருவாட்டு வாடையும், சடசடவென்று சத்தம் போட்டு அந்தத் திரவத்திற்கு ஒரு மவுசைக் கொடுத்தன. சரோசா வியாக்யானம் செய்தாள் :

"எங்கத் தொழிலு மோசந்தான், இல்லங்கல. ஆனால் அதுலயும் ஒரு நியாயம் கீது. ஸ்பெஷல் கிளாஸ் பத்து ரூபா, சாதா அஞ்சு ரூபா. வேணுமுன்னா ரெண்டையும் குடிச்சு, டெஸ்ட் பண்ணிக்கோ; இல்லாட்டி நடையக்கட்டு."

அப்போது முப்பது, முப்பந்தைந்து வயது ஆசாமி ஒருவன் உள்ளே வந்தான். குறுந்தாடிக் காரன். சரோசாவின் அப்போதைய வயிறுமாதிரி அவனுடைய வயிறும் பெருத்திருந்தது. சட்டென்று சட்டையைத் தூக்கி மறைத்து வைத்திருந்த நான்கு தேங்காய்களைக் கீழே வைத்தான். பனியனுக்குள் கிடந்த, ஒரு சீப்பு வாழைப்பழத்தையும், இரண்டு ஆப்பிள் பழத்தையும் எடுத்துவைத்தான். சரோசா சிரித்துக் கொண்டே கேட்டாள்:

“என்ன கோவிந்தண்ணே, கண்டக்கஞ்சி கிடைக்கலியா?”

"அத ஏம்மா கேக்கிறே; அந்த கஞ்சிக்காரன், நானு பத்து வருஷம் சர்வீசு போட்டிருக்கறதையும் கணக்கில எடுத்துக்காம வெரட்டிட்டான். காசு இல்லாகாட்டி என்னம்மா? சரக்குக்கு சரக்கு கொடுக்கிறப்போ வாங்கினா என்னம்மா? சோதாப்பய, என்னைய சாதாப்பயலா நினைச்சிட்டான்... தூ."

சரோசா, என்ன செய்யலாம் என்பது போல் துரையைப் பார்த்தாள். துரை, அந்த சுண்டக்கஞ்சிக் காரனோடு ஒருவார காலமாக நிழல் யுத்தம் செய்து கொண்டிருக்கிறான். ஒரு சொம்புக் கஞ்சியை அவன் பதினைந்து ரூபாயிலிருந்து பத்து ரூபாய்க்கு இறக்கியதால், இவன் கலக்கல் விற்பனைக்குக் கஷ்டம் வந்திருக்கிறது. இதனால், இரண்டு கோஷ்டிகளும் கம்பு, அரிவாள் இல்லாமல் மோதிக்கொண்டன. ஆகையால் இப்போது அவன் ஜாக்கிரரையாய் பேசினான் :

"இந்தாப்பா, ஊர்க் கத வேணாம். தேங்காய் ரெண்டு ரூபா; வாயப்பயம் அஞ்சு ரூபா; ஆப்பிள் எட்டணா. இஷ்டமிருந்தாக் கொடு. இந்தக் கணக்குப்படி ஒனக்கு ரெண்டு கிளாஸ்கூடத் தேறாது. ஆனாலும் தாரேன், சம்மதமா?"

கோவிந்தின் சம்மதமில்லை என்பது போல் வாயை பன்றி உதடுகள் மாதிரி ஆக்கிக் காட்டினான். பிறகு எகிறப்போனான். எகிறினான்.

"இன்னாடா துரை... பெரிய தொரைன்னு நெனைப்பா? நேத்து பெய்த சாராய மழையில இன்னிக்கி வந்த காளான் பய நீ...நாலு ரூபா தேங்காய ரெண்டு ரூவாய்க்கி கேக்கிறீயே, இந்தக் குப்பத்துல நீ மட்டும்தான் காய்க்கிறேங்கிற திமிரா, இன்னாடா?”

துரை, அவனை அலட்சியமாகப் பார்த்தான். 'நீயெல்லாம் தாங்குவிடாயா' என்பது மாதிரி. இதற்குள் கோவிந்தின் உள்ளே 'சரோ ... சரோ...' என்ற சத்தம் கேட்பதைப் பார்த்து எட்டிப் பார்த்தான். பிறகு வாயை சுருக்கி, தலையை குறுக்கி அவர்களின் கால்பக்கத்திற்கு இணையாக தலையைக் கவிழ்த்துக்கொண்டே கெஞ்சினான்:

“நீங்கோ அந்தண்ட இருக்கத பார்க்கல சாரே; மன்னிச்சிடுங்கோ சாரே."

உள்ளேயிருந்து ஒரு குரல் அதட்டியது:

"ஜல்தியா குடிச்சிட்டு ஜல்தியா போயேன்யா. வெளியில போய் நாங்க இருக்கோம்னு ஔறி வச்சே, கையில காப்புதான்.”

“அய்யோ சாரே, அப்படிச் செய்வேனா? உங்கள் இன்னிக்கி நேத்துமா பாக்கேன், எத்தன வருஷமா பாக்கேன்."

அந்தப் பந்தலில் மரத்தூணில் சாய்ந்தபடி கல்லுளிமங்கனாக இருந்த ஒருத்தர், இப்போது கீழே விழுந்தார். பறவைகள் மாதிரி விநோதமான சத்தங்களை எழுப்பினார். இதற்குள் அம்மைத் தழும்பனும், டவுசர் போட்ட ஒருவனும் துரையைப் பார்க்க, அவன் கண்ணடித்தான். அந்த ஆசாமியின் சட்டைக்குள் கைவிட்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளில் இரண்டை எடுத்து சுருட்டு மாதிரி காதில் மடித்து வைத்துக் கொண்டு, மூன்று நோட்டுகளை அவரது பைக்குள் திணித்துவிட்டு, அவரை அலாக்காகக் தூக்கிக் கொண்டு வெளியே போனார்கள். இந்தச் சமயத்தில் உள்ளே இருப்பவர்கள் "சரோ... சரோ... கமான்” என்று சத்தமிட்டார்கள்.

சரோசாவுக்கு எரிச்சலாக இருந்தது. கஷ்டப்பட்டு கர்ப்பிணியாய் வந்த தன்னை அலட்சியமாகப் பேசி அந்த உழைப்பை அங்கீகரிக்காத துரையின் மீது ஒரு கோபம். சொந்தப் பெண்டாட்டியைக் கூப்பிடுவது போல கூப்பிடும் போலீஸ் துரைமார்கள் மீது இன்னொரு கோபம். அடிஅடியென்று அடித்துவிட்டு, இப்போது அணைக்கத் துடிக்கும் அந்தக் கரங்கள் அவளுக்கு வெட்டரிவாளாகத் தோன்றின. இவ்வளவுக்கும் காரணம் யார்? அவன்... அந்தக் குயந்தப் பய அவன விடப்பிடாது...

சரோசா தனக்குள்ளேயே அழுது கொண்டிருந்தாள். போதாக் குறைக்கு, துரை அண்ணன் வேறு அவள் கர்ப்பிணி கஷ்டத்தை கண்டுக்காமல் அலட்சியப்படுத்தியது அழுகையை அழுத்தமாக்கிறது. இந்தச் சமயத்தில் அந்தப் பெரியவரை வழியனுப்பி வைத்துவிட்டு மீண்டும் உள்ளே வந்தவர்கள், காதில் மடித்து வைத்த இரண்டு நோட்டுக்களை துரையிடம் கொடுத்துவிட்டு, சரோசாவைப் பார்த்து ஒரு தகவல் சொன்னார்கள்:

"சரோ! நீ சொல்லுவியே கொழந்தப்பய 'இளங்கோ', கோவில் பக்கமா ரவுண்டடிச்சுட்டு நிக்காம்மே”

சரோசா ஆணையிடுவது போல் பேசினாள் :

"நான் பஸ்ல வரும்போதே அந்த கஸ்மாலம் பாலோ பண்ணுவதுபோல தோணிச்சு. வீட்டுக்குப் போறான்னு நினைச்சது எவ்வளவு தப்பாப்போச்சி. என் நிம்மதியக் கெடுக்கத்துக்குன்னே முளைச்சிருக்கான் அந்த சோதாப்பயல். என்ன ஏதாவது செய்யும் முன்னாடி, நீங்க அவன ஏதாவது செய்துட்டு வாங்கோ."

அந்த இருவரும் கீழே கிடந்த இரண்டு உருட்டுக் கட்டைகளை எடுத்துக்கொண்டு புறப்படப்போனார்கள். “பாவம், அல்பாய்சு அவனுக்கு" என்று ஒருவன் சொல்லிவிட்டு வெறிச்சிரிப்பாய் சிரித்தான்.