Chapter 23
சரோசா, அந்த வேலையில் சேர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. அந்த வேலையின் தலைகால் அவளுக்குப் புரிந்துவிட்டது. ஆனாலும், தலை கழுத்தில் இல்லாதது போலவும், கால் தரையில் படாதது போலவும் ஆடுகிற 'ஆபீஸ் கம்மனாட்டிங்க' போக்குத்தான் அவளுக்குப் புரியவில்லை. ஆனாலும், நாயின் மீது ஒரு கண்ணை வைத்தபடியே, அதன் அருகில் அமரும் காக்கா போல, எங்கிருந்தோ பறந்துவரும் அண்டங்காக்காவின் முட்கால்கள் உடம்பில் படாதபடி நகர்ந்து கொள்ளும் சிட்டுக்குருவி போல, சரோசா அவர்களின் இருபொருள் படும்படியான பேச்சுக்களையும், தன்னைத் தாழ்த்தும் இளக்காரமான பார்வைகளையும் தாங்கிக்கொண்டாள். வேலையில்‘காயம்' ஏற்பட வேண்டும் என்பதற்காக, உள்ளத்தின் காயங்களை ஊதிவிட்டுக் கொண்டாள். கோப்புக்களை தூக்கிக்கொண்டு, செக்ஷன் செக்ஷனாகப் போகும்போது பெருமையாக இருந்தது. எச்சில் டம்ளர்களை கழுவும்போது சிறுமையாக இருந்தது. அவளுக்கும் ஒரு முகம் இருப்பதை அனுமானிக்காமலே, அவளுக்கு எதிராக கிண்டலடிக்கும் பேர்வழிகளைப் பார்க்கும்போது அடித்து நொறுக்கலாம் என்பதுபோன்ற ஆவேசம் வந்தது. ஆனாலும் பொறுத்துக் கொண்டாள். இப்போது நாயினா அவளை சந்தோஷமாகப் பார்க்கிறார். ஆகையால் அலுவலகத்தில் தானும் சந்தோஷமாக இருப்பதாக அவரிடம் ஒரு பாவனை செய்து கொள்கிறாள். இளங்கோ, பல தடவை அவளைப் பார்த்து குசலம் விசாரித்தான். அவளுக்குப் பணம் தேவையா... என்று கூடக் கேட்டான். அவள் தன்னை அறியாமலே வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். அழுத்திக் கேட்டிருந்தால், கையை நீட்டியிருப்பாள்.
கடந்த பத்து நாட்களாக, அவளுக்கு எந்த வருமானமும் இல்லை. சரக்கு எடுக்கப் போகாததால், பைசா தேறவில்லை. துரை அண்ணனிடம் கேட்கலாம் என்றால், அவன், ஆந்திராவிற்கு சரக்கு வாங்கப் போய் விட்டான். கடைசியில் பூக்கார ருக்குமணிதான் இவள் கேட்காமலேயே கொஞ்சம் இவளுக்கும், இவள் நாயினாவுக்கும் 'நாஷ்டாவுக்கு' ஏற்பாடு செய்தாள். இவளும், தினமும் மாலையில் அந்தப் புடவையை ருக்குமணி வீட்டில் மடித்துவைத்துவிட்டு பைஜாமா வகையறாவை போட்டுக்கொள்வாள்.
அன்றும், அவள் வழக்கம்போல் பைஜாமா கோலத்தோடு நாயினாவுடன் கோவில் வளாக மண்மேட்டில் படுத்துக்கிடந்தாள். ஆபீசில் மொசைக் தரையில் நடந்துவிட்டு, சோபா செட்டில் அக்கம் பக்கம் பார்த்து உட்கார்ந்துவிட்டு, அந்தத் தரையில் இப்போது படுப்பதற்கு அவளுக்கு என்னமோபோல் இருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டாள். இந்த மாதச் சம்பளம், நாஷ்டா ஆயாவுக்கும், ருக்குமணியின் கடனுக்கும் சரியாயிருக்கும். அடுத்த மாதச் சம்பளத்தில், ஒரு குடிசைக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு குடித்தனம் போயிடலாம். எம்மாடி! ஒரு நாளைக்கி 30 ரூபா கொடுப்பாங்களாம். பள்ளிக்கூடத்துல ரொம்பவும் படிச்சிட்டு டீச்சரா போற பொண்ணுங்க கூட 300, 400 ரூபாதான் வாங்குறாங்கோ. எனிக்கி முள்ளங்கிப் பத்தமாதிரி 900/- ரூபா.
அம்புபோலான அவள் முழங்கை மடிப்பையே தலையணையாக வைத்தபடி நாயினா தூங்கிக் கொண்டிருந்தார். அவர்-கை ஏன் இப்படிக் குலுங்குகிறது என்று அவள் பார்த்தபோது காரணம் கண்டு கொண்டாள். அவள் நாயினாவின் தலை அங்குமிங்குமாய் ஆடியது. அவர் உடலெங்கும் மலேரியா படையெடுத்தது போன்ற ஆட்டம். மார்கழிப் பனி அவர் தொண்டைக்குள் ஊடுருவி, ஈளை-இருமலாக அவரை உலுக்கிக் கொண்டிருந்தது. திடீரென்று, துரை அண்ணனின் தர்ம பத்தினியைப் போல் நம்பமுடியாத மழை. ஆலங்கட்டி விழுவதுபோல் அடாவடி மழை, அவள் முகத்தை பேயாய் அறைந்தது. நாயினாவின் காக்கிச்சட்டையை காகிதமாகக் குழைத்தது. அவரை 'ஊ.. ஊ..' என்று ஊளையிட வைத்தது.
சரோசா, நாயினாவை தூக்கிப்பிடித்து நிறுத்தினாள். அவரோ நிற்கமுடியாமல் நிலைதடுமாறி அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தானும் ஆடி, அவளையும் ஆட்டுவித்தார். 'அய்யோ... நாயினா' இப்படியே இத வெச்சா செத்துடம். எங்கே கூட்டிப்போறது? துரை அண்ணன் கொட்டடிக்கப் போலாமா? அந்த தர்ம பத்தினி இன்னாப் பண்ணுவாளோ? அதானே... அப்பவே பெரிய கார்ல டம்பப் பைய வச்சுகினு, இரண்டு பிரா போட்டாப்புல, உடம்ப நெளிச்சுக்கிட்டுப் போயிட்டாளே. ஆபத்துக்குத் தோஷமில்ல. அதோட ஒருவாரமா தோஸ்துங்கள பார்க்காம தலை சுத்துது. எப்படியில்லாமோ பேசிக்கினு இருப்போம். இப்போ கஸ்மாலங்க கண்டுக்க மாட்டேங்கிறானுங்க. நல்லவேளை, அண்ணாத்தே கண்டுக்கல. நானு பயந்ததுமாதிரி ஏடாகூடமா ஏதும் செய்யல. பெரிய மனுஷன்தான்.ஏதோ அந்த வேளையில கேட்பார் பேச்சுக் கேட்டு, போலீஸ்ல மாட்ட வைக்க, நெனச்சிருக்கார்.
சரோசா, தந்தையின் தலை நனையாமல் இருப்பதற்காக, தனது சட்டையின் பின்புறத்தில் கழுத்துப் பகுதியைத் தூக்கி, அவரது தலையில் முக்காடு மாதிரி போட்டுப் போர்த்தியபடியே நகர்த்தினாள்.நடக்கும்போதே அவரது சட்டையையும் வேட்டியையும் பிழிந்துவிட்டாள். அவர் உடம்பைத் தொட்டால் ஆபீசில் பிரிஜ்ஜை தொட்டது மாதிரி இருந்தது. முக்கி முனகிய நாயினாவை, அவள் துரை அண்ணன் வீட்டின் கொல்லைப்புறப் பந்தலுக்குள் கொண்டு போனாள். அங்கே படிக்கட்டில் உட்கார்ந்தபடி, முட்டிக்காலில் ஊன்றிய கைகளில் முகம் போட்டு, பக்கத்தில் இருந்த இருவர் மாறிமாறிச் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த துரை அவளைப் பார்த்து லேசாகத் தலையாட்டினான். ஆனால், பக்கத்தில் பாதி கிளாசோடு இருந்த அம்மைத் தழும்பன், அதட்டினான்:
"நீ ஆரோ, நாங்க ஆரோ? எதுக்கும்மே வந்தே, ரோசங்கெட்ட கயிதே?"
இன்னொரு வஸ்தாவான இன்னாசி, அவளைப் பார்த்து, எழப்போன அம்மைத் தழும்பனை அழுத்தி உட்கார வைத்தான். சரோசாவைப் பார்த்து ஒரு இடத்தைக் காட்டி மோவாயை ஆட்டி உட்காரச் சொன்னான். அவளும் தந்தையை அந்தத் தரையில் படுக்கப் போட்டபடி அவரது உடைகளைத் தளர்த்தி விட்டாள். துரை சாக்களிடம் புலம்பினான் :
"அப்போ, நானு ஆந்திராவுக்கு சரக்கு எடுக்கப் போகிற போதெல்லாம், இங்கேயே சல்சா நடந்ததுன்னு சொல்றே!. ஒரு வருஷமா நடக்கிற விவகாரத்த... நீ துரோகி, என்கிட்ட - இந்த தோஸ்துகிட்ட - சொல்லல. இன்னாய்யா பிரெண்டு நீ?"
"விட்டுத் தள்ளுப்பா... விஷயம் அதவிட முத்திட்டு. அண்ணாத்தே கார் அனுப்புறார். அக்கா ஜம்முனு புறப்படறாள். மட்டுமரியாத இல்லாம பூட்டு. சே, பொம்மனாட்டியா அது?"
சரோசா வாயைக் கொடுத்தாள்:
"யோவ் இன்னாசி, அந்தப் பொம்மனாட்டிய திட்டிறீயே, ஆனாங்காட்டி தொரண்ணன் கிட்டருந்து அவள அப்பிடி பிரிச்சு மயக்கின அண்ணாத்தைய பத்தி ஏம்ப்பா பேசமாட்டேங்கிற? ஒரு குடும்பத்தையே கலிஜி பண்ணிட்டாரே."
"இந்தாம்மே எயிந்திரு. எயிந்திரு. சரியான கபீரிச்சி நீ!''
துரை, இரண்டாவது தோஸ்தின் தோளையும் தட்டி அமைதிப் படுத்தினான். ஒரு கையால் அவன் தோளை அழுத்தியபடி முன்னால் இருந்த கிளாஸை இன்னொரு கையால் எடுத்து வாய்க்குள் தடதட வென்று விட்டான். பிறகு சற்றுத் தொலைவிலிருந்த இரண்டு கிளாஸ்களை எக்கிஎக்கி எடுத்தான். கண்ணாடி ஜாடியிலிருந்த மண் நிற திரவத்தை அவற்றில் முழுமையாக நிரப்பி, இன்னாசியிடம் கொடுத்து அவற்றை சரோசாவிடமும் அவள் நாயினாவிடமும் கொடுக்கச் சொன்னான். சரோசாவும் கொடுக்கப் பொறுக்காமல், அவற்றை வாங்கிக் கொண்டாள். ஒன்றை எடுத்து படுத்துக்கிடந்த நாயினாவின் தலையைத் தூக்கி, வாயை அகலப்படுத்தி ஒரு கிளாசை தலைகீழாகக் கவிழ்த்தாள். அது 'தடா' சட்டம் மாதிரி வேகமாகப் பாய்ந்தது. இன்னொரு கிளாசை எடுத்து, தனது வாயருகே கொண்டுபோனாள். ஒரு வாரமாய் கிடைக்காத அமிர்தம்... உள்ளே போனால் அது செய்யும் மாயாஜாலமே தனி. நிஜமே இல்லாத நிழல்களைக் காட்டும் மாய மருந்து; துக்கத்தைக் கரைத்து அதையே சந்தோஷமாகக் காட்டும் சர்வ வல்லப திரவம்.
சரோசா, பூனை கருவாட்டைப் பார்ப்பது போல், அரசியல்வாதி பதவியைப் பார்ப்பதுபோல், அதைப் பார்த்தாள். அந்தச் சமயத்தில் இளங்கோ அவள் முன்னால் வந்து நிற்பதுபோல் இருந்தது. அவளை முகம் சுழித்துப் பார்க்கிறான். நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தது போல், அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான். அவனது அலுவலக சகாக்கள் அவனை ஏளனமாகப் பார்த்தபடியே 'குடிகாரிய வச்சிட்டியே' என்று ஏசுவதைக் கேட்கிறாள். 'அடப்பாவி... படுபாவி... இளங்கோ! என்னோட சுகத்தைக் கெடுத்திட்டியே. இந்தக் குளிருல ஒரு நண்டுத் துண்டக் கடிச்சுக்கினு, ஒரு கிளாய பூட்டா எப்படி ஜோரா இருக்கும்! இன்னிக்கி மட்டும் கொஞ்சமா தவோண்டு போட்டுக்கிறேன்பா... நாளக்கி வாணாம்.'
சரோசா, மனதைத் திடப்படுத்திக் கொண்டாள். சாராய வாடை மூக்கில் கிக்-ஐ ஏற்படுத்தாமல் இருக்க அதைப் பொத்திக்கொண்டாள். அந்தக் கிளாசையே ஆசையோடு பார்த்த நாயினாவின் பக்கம் அதை நகர்த்திவிட்டாள். அவர் பதிலுக்கு அதை அவள் பக்கம் நகர்த்தியிருந்தால், வாய் வாய்க்காலாகி, அந்தத் திரவம் உள்ளுக்குள் உருண்டோடியிருக்கும். ஆனாலும், அவளோ ஒரு வைராக்கியத்தோடு, நாயினா குடித்த கிளாசைப் பார்த்து கண்ணை மூடிக் கொண்டாள்.
துரை, தனது சுமையில் அவள் சுவைக்காமல் போனதை உணரவில்லை. அந்த தோஸ்துகள் இருவரும் அவளை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அவர்கள் பார்வையில் இப்போது சிறிது மரியாதை தெரிந்தது. இந்தச் சமயத்தில் பாதி திறந்திருந்த பின்வாசல் கதவு சத்தம்போட்டது. துரை அண்ணனின் தர்ம பத்தினி அங்கே தாம்தூமாய் நின்றாள். தலையிலுள்ள பூக்கள் கசங்கியிருந்தன. நெற்றிப் பொட்டில் பாதியைக் காணவில்லை. கையில்லாத ஜாக்கெட். இரண்டு தோள்களும், 'ரொட்டி' சுடும்போது உப்புமே, அப்படி உப்பிநின்றன. சரோசாவை அதட்டலோடு கேட்டாள் :
"இங்கே எதுக்குமே வந்தே? என் புருஷன் ஒனிக்கி கள்ள ஆம்படையானா?"
"எக்கோவ், ஒன்ன மாதிரி என்னை நினைக்காதே."
“ நீ பெரிய ஒழுங்குதான்.”
“நானு அப்பிடி ஒண்ணும் சொல்லல..! தொட்டு இருக்கேன், கெட்டிருக்கேன். ஆனா, எனக்குன்னு ஒரு ஆம்புடையான் வந்துட்டா, அதுவும் துரை அண்ணன் மாதிரி நல்லவனா வந்துட்டா, நானு ஏரியா விட்டு ஏரியா போயி மேயமாட்டேன்.”
"ஏய், இதுக்குமேல் பேசினே, ஜோடு பிஞ்சிடும். 'அவரும்' ஒன்ன கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்காரு. அந்தப் பிள்ளாண்டானோட நீ ஆகபத்திரியில கொஞ்சினது, அவருக்குத் தெரியும். எப்பேர்ப்பட்ட மனுஷன்... அவர அவ்வளவு சீப்பா நினைச்சிட்டியா? இருக்கட்டும்... இருக்கட்டும். மொதல்ல இடத்தக் காலி பண்ணு.”
துரை, குடிவெறியோடு எழுந்தான். தர்ம பத்தினியின் தலை என்று நினைத்து ஒரு நாயின் தலையைப் பிடித்து இழுத்துக் கொண்டே சுத்தினான்:
"ஏம்மே! வீடுவிட்டு வீடு போறதுதான் போறே, நானு போட்ட தாலிய அறுத்துட்டுப் போறதுதானம்மே! சரோ, நீ உட்கார். மொதல்ல நீ வீட்டவிட்டு காலி பண்ணும்மே.”
தர்ம பத்தினி அதிகமாய் வெடித்தாள்:
"இந்தா பாருய்யா, இப்போ சொல்றதுதான். இந்த வீடு என் பேர்ல கீது. இருந்தா இரு.. போனா போ. என்னால தனியா சரக்குப் போட முடியும். இனிமே என்ன ஒதச்சே, அப்புறம் அவருகிட்ட ஒத தின்னுவே. போகணும்னா போயேன். என்னால சரக்குப் போட முடியும். பெரிய வஸ்தாதுன்னு நெனப்பா? மானங்கெட்ட பையா! நான் அண்ணாத்தய வச்சிட்டுத்தான் இருக்கேன்; இன்னாடா செய்வே பொட்டப் பையா?"
தர்மபத்தினியை அடிப்பதற்காக எழப்போன துரை அப்படியே கீழே விழுந்தான். அந்த மணல் தரையில் ‘அய்யோ, அய்யய்யோ' என்று அங்குமிங்குமாய்ப் புரண்டான். தன் தலையிலேயே அடித்துக்கொண்டான். மீண்டும் எழுந்து உட்கார்ந்து, வாயிலும் வயிற்றிலும் மாங்குமாங்கென்று அடித்தான். அவன் கையை சரோசா பிடித்தபோது, 'ஏம்மே... இவனுக்கு இங்கயே முந்தானை விரிக்கியா... விரி... விரி...' என்று தர்மபத்தினி கத்திவிட்டு, பின் கதவை அவர்கள் முகத்திலடிப்பது போல் சாத்தினாள். சரோசாவால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கதவுக்குள் மறைந்துகொண்டவளை, ஜன்னல் வழியாகப் பார்த்தபடியே கத்தினாள் :
“துரை அண்ணன இந்த நிலைக்கிக் கொண்டுவந்த நீ, வாயில புழு வச்சி சாகப்போறே. இதுக்கு துரோகம் பண்ணின ஒன் கள்ளப் புருஷன் நொள்ளக்கண்ணு அண்ணாத்த எய்டுன்னு ஏதோ ஒண்ணு புச்சா வந்திருக்காமே, அதால சாகப்போறான். அழாத துரையண்ணே. அழாதே; பேய்க்கி தாலி கட்டினா புளியமரத்துலதான் ஏறணும்."
இந்தச் சமயத்தில் தோஸ்து கோபாலு, பாம்பும் சாகாமல் பாம்படித்த கம்பும் நோகாமல் பேசினான் :
"நீ வேற, ஏம்மே பிராணன வாங்குறே? துரையண்ணன் காலையில் சரியாயிடுவார். புருஷன் பொண்டாட்டின்னா ஆயிரம் இருக்கும். ஒனிக்கி என்னம்மே வந்துது? ஒன்னால அண்ணாத்தே எங்களையும் சந்தேகப்படப்போறாரு.பழகின தோஷத்துல சொல்றேன், நாயினாவைக் கூட்டிக்கினு போயிடும்மே."
"ஆமாம்! கோபாலு சொல்றது மாதிரி ஜல்தியா போயிக்கினே இரு.'
சரோசா, குப்புறக் கிடந்த துரை அண்ணனையும், தன்னை அந்நியமாகப் பாவித்த, ஒரு காலத்தில் அன்யோன்யமான தோஸ்துகளையும் பார்த்துப் பொருமினாள். கீழே கிடந்த தந்தையை தூக்கினாள். அவர் துள்ளலாய் எழுந்து நீராவி எஞ்சின்போல் நடந்தார். சரோசாவை, இப்போது கேரேஜ்போல இழுத்துக்கொண்டு போனார். துரையின் தர்ம பத்தினி வீட்டுக்குள் டெலிபோனைச் சுழற்றி, கோபம் கோபமாகப் பேசிக்கொண்டிருந்தாள். அப்புறம் அழுதாள், இன்னிக்கே வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டாகணுமாம்.
சரோசாவும், நாயினாவும் கோவில் வளாகத்திற்கு வந்தார்கள். நாயினா வந்ததும், வராததுமாக அந்த ஈரமண்னில் அப்படியே குடைசாய்ந்தார். மழை விட்டிருந்தது. வானம் பன்னீர் தெளிப்பதுபோல் மட்டும்தான் தூறியது. சரோசாவுக்கு தூக்கம் வரவில்லை. பாவம் துரை அண்ணன்! பெண்டாட்டிய கள்ளுமாதிரி வெள்ளையா நினைச்சான். ஆனா, அது விஷச் சாராயமாயிட்டு..!
சரோசாவுக்கும் கண் அயர்வு ஏற்பட்டது. நாயினா குறட்டைபோடும் சத்தம் அவள் தூக்கத்திற்கு தாலாட்டு போல் கேட்டது. திடீரென்று ஒரு சத்தம். இன்னாது, ஆட்டோ? யாரும் சினிமாவுக்குப் போயிட்டு வாறாங்களா?
சரோசா படுத்தபடியே தலையைத் தூக்கியபோது, அந்த ஆட்டோவிலிருந்து நான்கைந்து பேர்கள் குதித்தார்கள். இரண்டுபேர்கையில் பட்டாக் கத்திகள், ஒருவன் கையில் சைக்கிள் செயின்... மீதி இருவருக்கு உடம்பே ஆயுதம். ஆறுபேரும் டார்ச் லைட்டை அடித்தபடியே அங்கமிங்குமாய் பார்த்தார்கள்.

