Chapter 24

சரோசா அந்தக் கும்பலை உணர்வற்றபடியே பார்த்தாள். இன்றைக்கு எப்படியும் ஒருவழியாகிவிடப் போகிறோம் என்ற உணர்வு, அவளைத் தப்பிக்கும் வழியை நினைக்க முடியாமல் தடைபோட்டது. உயிரற்றவள் போல் கீழே கிடந்தாள். இதற்குள், அந்த ஆசாமிகள் சேரிக்கு இட்டுச் செல்லும் இடுக்குவழிக்குப் போனார்கள்.

சரோசாவுக்கு என்றே புதிய பங்குத் தந்தையால் தாளிடப்பட்ட அறையை நோக்கிப் போனார்கள். ஒன்றாய்ப் போய்க்கொண்டிருந்த, அனைவரும் பிறகு ஆளுக்கொரு பக்கமாகப் பிரிந்து அங்குமிங்குமாய் தேடினார்கள். பிறகு எல்லோருமாய் ஒன்றாகக் குனிந்து அவள் இருந்த பக்கமாக ஆறு தலைகளையும் ஒரே தலைகளாக நிமிர்த்தினார்கள். சரோசா பம்மிக்கொண்டே பார்த்தாள். பழக்கப்பட்ட இருவர் குரல், பழகாத நால்வர் குரலுடன் கலந்திருந்தது. காவல்நிலைய வளாகத்திற்குள் இளநீர் குடித்துக்கொண்டிருந்த இளங்கோவை அடிப்பதற்காக எகிறினானே ஒரு தோஸ்து-மணி அவன் இப்போது பட்டாக்கத்தி அந்த இருட்டில் மின்ன, கோர தாண்டவம் ஆடுவதுபோல் அவளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான்.

சரோசா நாய்னாவை உற்றுப் பார்த்தாள். அவர் தானில்லாமல் வாழப்போகும் நிலையை நினைக்க நினைக்க, அவளுக்கு ஒரு தற்காப்பு உணர்வை ஏற்பட்டது. உயிர் காக்கும்படி அக்கம்பக்கம் எழும்படி அலறலாமா...? வேறு வினையே வேண்டாம்.எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற கதை! அவர்கள் மெல்ல நகர்ந்தபோது, லேசாய் குறட்டை விட்ட தந்தையின் வாயை அவள் அழுத்த, அவர் மூச்சுத் திணறலில் கண்விழித்தார். ஏதோ பேசப்போன அவர் வாயை ஒரு கையால் அடைத்தபடியே "ஆபத்து! ஆபத்து! அதோ, அண்ணாத்தேயின் கொலைகார கோஷ்டி" என்று கிசுகிசுத்ததும், அவர் அவளைத் தப்பிப் போகும்படி சைகை செய்தார். அவளுக்குத் தெரியும் - இந்த மாதிரி சமயத்தில் குறிபார்க்கப்பட்ட ஒன்று கிடைக்கவில்லை என்றால், கொலைகாரக் கோஷ்டியினர் அந்தக் குறியின் துணையைப் பழி வாங்கி விடுவார்கள். அவள், தான் தப்பித்து, நாய்னாவுக்குக் கொலைத் தண்டனை வாங்கிக் கொடுக்க விரும்பவில்லை. நாயினாவை தன் பக்கமாக இழுத்து, அவள் தரையில் தவழ்ந்தாள். மூச்சைக்கூட மெல்ல விட்டபடியே ஊனமுற்றவனைப் போல், இரண்டு கைகளையும் கூட கால்களாக ஆக்கி, நாயினாவையும் இழுத்து இழுத்து தவழச் செய்து, அந்தக் கோயில் வளாக வாசலுக்கு வெளியே வந்து விட்டாள். உடனடியாக நாயினாவை தூக்கி நிறுத்தி, தாங்கிப் பிடித்து, தேநீர் பக்கக் கடைகளின் சுவர்கள் வழியாக நகர்த்தி, நகர்த்தி, அவற்றில் சாய்த்து, சாய்த்து, சில இடங்களில் இருந்து,இருந்து, அவர் “அய்யோ வலிக்கி, வலிக்கி” என்று போட்ட அலறல் சத்தத்தையும் பொருட்படுத்தாது, இழுத்துக்கொண்டே ஓடினாள். கும்மிருட்டான அந்தக் கடலோரச் சாலையில், இருளின் நிழல்போல் பாய்ந்தாள்.

திடீரென்று ஒரு பிளிறல் -ஒரு கர்ஜனை ஒரு அட்டகாசச் சிரிப்பு பிறகு அத்தனையும் சேர்ந்த ஒரு சவால்.

"டபாய்க்கவா பார்க்கிறே? ஒம்மாள... ஒன்ன விடப்போறதா இல்ல. டாய் தாமஸ், மடக்குடா. மொதல்ல அந்த கெயவன பிடிங்கடா. அவள் தானாய் கிடப்பாள். ஏய்... ஆய்... ஊய்..."

சரோசா, திரும்பிப் பார்த்தபோது, அந்த ஆறுபேரும், இன்னும் எங்கேயோ நின்ற இரண்டு பேரும் எட்டாகி, அவர்களை நோக்கி எட்டடி எட்டடியாய் பாய்வதுபோல் ஓடிவந்தார்கள். அவளையும் நாயினாவையும், அந்தச் சாலையில் எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்களை விடப்போவதில்லை என்பதுபோல் மூன்று பேர் பக்கவாட்டிலும், எஞ்சியவர்கள் பின்னாலும் ஓடிவந்தார்கள்.

சரோசா, கத்திக் கத்திக் கதறினாள் : "எங்களைக் காப்பாத்துங்கோ... காப்பாத்துங்கோ... கொல்றதுக்கு முன்னாடி காப்பாத்துங்கோ! கும்மாளம்மா... மாரிம்மா... வேளாங்கண்ணி... காப்பாத்துங்கோ!"

அந்தச் சாலையோரமாய் இருந்த குடியிருப்புகளில் சில விளக்குகள் அந்த வீடுகளை எரியவைப்பது போல் எரிந்தன. ஆனால், கதவுகளோ, ஜன்னல்களோ திறக்கப்படவில்லை. பாவம் சில சொரி நாய்கள்தான் அவளுக்கு உதவிக்கு வருவது போல் ஓடிவந்து, பின்னால் துரத்தும் கும்பல்களையும், பக்கவாட்டில் கொலைத்தனமாய் நடந்த பேர்வழிகளையும் பார்த்துக் குலைத்தன. பிறகு அவர்கள் கீழே எதையோ எடுப்பது போல் குனிந்து நிமிர்ந்தபோது, அந்த நாய்கள் வால்களை பின்னங்கால்களுக்கு இடையே செருகிக்கொண்டு ஓடிவந்த வழியிலேயே திரும்பி ஓடின.

சரோசா, தன்னை அறியாமலேயே உயிர் காக்கும் அனிச்சை உணர்வில், நாயினாவை சாலையிலேயே விட்டுவிட்டு ஓடினாள். அரைநிமிட ஓட்டத்திற்குப் பிறகு ஒன்று புரிந்தது. திரும்பிப் பார்த்தால், அவளை "போ... போ..." என்று நாயினா குரலிடுவது கேட்டது. பிறகு அவர் அந்த கொலைகாரக் கும்பலை நோக்கியே, அவளுக்காக அவர் வழிமறிக்கப் போவது போல் நடப்பது தெரிந்தது. சரோசா மனதில் ஒரு வாயுவேக எண்ணம். பர்மா காடுகளில் குழந்தை குட்டிகளை விட்டுவிட்டு ஓடிவந்த மனிதர்களுக்கு மத்தியில், மனைவியையும், பிள்ளைகளையும் தலையிலும், தோளிலும் தூக்கிப் போட்டுக் கொண்டு விடாப்பிடியாய் வந்தவர் இந்த நாயினா... அவரை அப்படியே விட்டுவிட்டு ஓடுவது, அம்மாக்காரி அடுத்தவனை இஸ்துக்குன்னு போனதுக்கு சமானம். சரோசா நாயினாவை நோக்கி ஓடினாள். “நாயினா... நில்லு நாயினா, நில்லு. ரெண்டு பேரும் ஒண்ணாவே வெட்டுப்படலாம்" என்று கூக்குரல் இட்டபடியே அவரை நோக்கி ஓடினாள். அவள் போட்ட கூச்சலில் புதருக்குள் கிடந்த ஒரு பெருச்சாளி ரோட்டுக்கு வந்தது. துரத்தி வரும் கும்பல் சிறிது நின்று பார்த்தது. சொரி நாய்களே மீண்டும் குலைத்தன.

சரோசா, தப்பிக்கும் திசையிலிருந்து தாக்குதல் திசையை நோக்கி ஓடிஓடி, நாயினாவை நெருங்கி, அவரை அப்படியே கட்டிப்பிடிக்க, அந்த வேகத்தில் இருவரும் கீழே விழுந்தார்கள். “நாயினா... நாயினா..." என்ற அலறல். "மவளே... மவளே” என்ற முனங்கல். பிறகு அலறலும், முனங்கலும் அற்றுப்போன நிசப்தம். என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்பதுபோல் அந்தப் பட்டமரத்தில் துளிர்த்த கொடி அதிலேயே படர்ந்தது. கொடி முளைத்த மரமும் அந்த கொடிக்குள்ளேயே முடங்கிக் கொண்டது. ‘என்ன செய்யணுமோ... செய்யுங்கடா!"

அந்த இருவரையும் சுற்றி, பட்டாக்கத்தியோடு மூன்றுபேர் நிதானமாக ஒரு வெளி வட்டம் போட்டார்கள். ஓணானை கடித்துக் கடித்து விளையாட நினைக்கும் நாய் போல, அவர்களை நிதானமாகக் கூர்ந்து பார்த்தார்கள். தென்கிழக்கில் ஒரு இரும்புத்தடியன், வடமேற்கில் ஒரு கம்புக்காரன். இரை கிடைத்த திருப்தியில், நிதானமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் நடந்தார்கள். ஆனாலும்-

திடீரென்று ஒரு விசில் சத்தம் ; மூன்று தடவை மூச்சு விடும் அளவுக்கான ஒரு நெடுஞ்சத்தம். அந்த விசில் சத்தம் நின்றதும் ஒரு வாய்ச் சத்தம் :

"டேய்... அப்படியே நில்லுங்க... இந்தப் பக்கம், அந்தப் பக்கம் அசைஞ்சிங்கோ நான் பேச மாட்டேன், துப்பாக்கிதான் பேசும்."

அந்தக் கொலைக் கும்பல் சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தது. தொலைவில் கடற்கரை மணல் மேட்டில் 'உங்கள் நண்பன்' காவல் கூண்டிலிருந்து ஒரு டார்ச் ஒளி தெரிந்தது. இன்னொரு கையில் ஏதோ கனமான ஒன்று. நின்றால் பிடிப்பான். ஓடினால் கடுவான். லோக்கல் போலீசையும், குவாட் போலீசையும் சரிக்கட்டிட்டதாய் அண்ணாத்தே சொன்னாரே... இவன் தலையிலயும் தொப்பிகீது.

"டேய்... பேமானிப் பசங்களா! ஆம்பளையின்னா நில்லுங்கடா."

மிரண்டு நின்ற அந்தக் கும்பல் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டது. இப்போது ' சுடுவேன்' என்ற சத்தம் வரல. தப்பிப் போறதுக்கு வழி சொல்றது மாதிரி தோணுது.

உயிர் கொல்ல வந்த கும்பல் உயிர் காக்க ஓடியது. அந்த ஒற்றைப் போலீசின் துப்பாக்கிக் குண்டுகள் தலையில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக பிடறிகளில் கைகளைக் கோத்தபடியே ஓடியது.கீழே உட்கார்ந்து உட்கார்ந்தும், எழுந்து எழுந்தும் ஓடியது.

அந்த போலீஸ்காரரும் ஓடிவந்தார். அவர்கள் ஓடுவதையோ, அந்த போலீசின் பூட்ஸ் சத்தத்தையோ சட்டை செய்யாமல், கீழே அசைவற்றுக் கிடந்த உருவங்களை அவர் உற்றுப் பார்த்தபடி வந்துகொண்டிருந்தார். 'டக்... டக்...' என்ற அவரது காலடிச் சத்தம், அந்த உருவங்களுக்குள் அவர்களே கேட்ட இதயத் துடிப்புச் சத்தங்களில் முங்கிப் போனது.

மதுரைக்கு விடுமுறைக்குப் போய்விட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு டூட்டியில் சேர்ந்த கான்ஸ்டபிள் திருமலையப்பன்தான் அவர். லத்திக்கம்பால் அந்த உருவங்களைத் தட்டினார். பிறகு, அவர்கள் கொலை செய்யப்பட்டு அப்படிக் கிடக்கிறார்களோ என்று பயந்துபோய் கீழே குனிந்தார். இதற்குள், சரோசா உடம்பை அசைக்காமலே கண்களை அசைத்தாள். ஒருசாய்த்துப் படுத்துக்கிடந்த தந்தையை தன் மடியிலே போட்டுக்கொண்டு போலீஸ்காரரை மலங்கமலங்கப் பார்த்தாள். அவர் அதட்டினார் :

"ஏய், ஒன் பேரு சரோசாதானே? இளங்கோன்னு ஒருத்தனோட விவகாரம் பண்ணிட்டு லாக்கப்ல இருந்தது நீதானே? என்ன நடந்தது?"

சரோசா, மெல்ல மெல்ல சுய உணர்வு பெற்றாள். நாயினாவை உற்றுப் பார்த்தாள். அவரும் சரி, தானும் சரி, இன்னும் வெட்டுப் படவில்லை என்ற மெய்யுணர்வு உந்த, மெல்ல எழுந்தாள். சுடப்பட்ட கொக்கோடு சுடாமலே செத்துப் போனதாய் அனுமானித்துக் கீழே விழும் கொக்கு போல், கைகளை விரித்து தரையில் கிடந்த நாயினாவை உசுப்பினாள். பிறகு அந்த போலீஸ்காரரின் இரண்டு கால்களையும் கட்டிப் பிடித்துக்கொண்டு, அவர் முட்டிக்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டே விம்மி, விம்மிப் பேசினாள்.

"பேசாம என்னை இன்ஸ்பெக்டர் சொன்னாப்போல வேலூருக்கு அனுப்பிடுங்க சாரே; வாழ்ந்தும் பிரயோசனமில்ல. இருந்தும் பிரயோசனமில்ல சாரே. அண்ணாத்தே என் ரத்தத்தக் குடிக்கத் துடிக்கான் சாரே. நாயினா! நாயினா! நாம நாளைக்கி எப்படியோ, இன்னிக்கி பிழைச்சிட்டோம், நாய்னா!"

திருமலையப்பன், அவளின் நாயினாவை தூக்கி நிறுத்தினார். கீழே கிடந்த கோணிப்பையை எடுத்து அவர் முதுகில் போர்த்தினார். அந்தப் போர்வையின் மேல் தன் உடம்போடு கிடந்த கம்பளியை எடுத்துப் போட்டார்.

"நல்ல வேளை, பீட்டுக்கு டூட்டி போட்டதுனால பிழைச்சிங்க. சரி, என் பின்னால நடங்க. சாப்பிட்டீங்களா?"

சரோசா எதுவும் பேசாமல் நாயினாவை தோளில் சாய்த்துக் கொண்டு திருமலையப்பனைத் தொடர்ந்தாள். மூவரும் மணல் மேட்டுக்கு வந்தார்கள். அவர் 'உங்கள் நண்பன் கூண்டை'த் திறந்தார். நாயினாவை தோளைப் பிடித்து அழுத்தி, அவரே கீழே உட்கார வைத்து, மரச்சுவரில் சாய வைத்தார். பிறகு சரோசாவை ‘நடந்ததைச் சொல்' என்பது மாதிரி பார்த்தார். கீழே உட்கார்ந்திருந்த சரோசா அவரை அண்ணாந்து பார்த்தாள். பார்க்கப் பார்க்க பயம் போய் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. மனச்சுமையை சொல்லிக் சொல்லி அதை குறைத்தாள். இளங்கோவிடம் சுருக்கமாகச் சொன்ன தனது வரலாற்றை, அவரிடம் விலாவாரியாகச் சொன்னாள். ஒவ்வொரு கட்டத்திலும் ‘ஆருமே இல்லாமே பூட்டோமே சாரே' என்று மூச்சு முட்டச் சொன்னாள். அத்தனையும் சொல்லிவிட்டு அதற்குமேல் எதுவும் இல்லை என்பதுபோல் அவரை வெறுமையோடு பார்த்தாள். அவள் கதையை பேச்சற்றுக் கேட்ட திருமலையப்பன், ஐந்து நிமிட மவுனத்திற்குப் பிறகு அறிவுரை சொன்னார்:

"இனிமேல் இந்தப் பக்கம் இருந்தீங்கன்னா, ஒங்க உயிருக்கு ஆபத்துதான். எங்கே இருக்கப் போறதா உத்தேசம்?"

“அதான் சார் புரியலே"

"ஒரு வாரத்துக்கு நீ சொல்றியே ருக்குமணி அவள் வீட்டுல உன்னால தங்க முடியுமா? அப்படி முடிஞ்சா, நல்லது. அதுக்குள்ளே நானும், கமிஷனர் ஆபீஸ் க்ரைம் செக்ஷனுக்கு ஒன் பேர்ல ஒரு மனு

தயாரிக்கிறேன். லோக்கல நம்பிப் பிரயோசனமில்ல... தின்னிப் பசங்க. ஒன் அண்ணாத்தைய பத்தி விவரமா எழுதறேன்."

"அப்போ, எங்க உயிருக்கு கேரண்டிதானே சாரே?"

"தலைவருங்க உயிருக்கே கேரண்டி இல்லாத காலத்துல, பாவம் ஒன்னமாதிரி தலை காஞ்சவங்களுக்கு எந்தப் போலீஸ், பாதுகாப்பு கொடுக்கும்? என் லெவல்ல ஏதோ செய்யறேன். நீங்க எச்சரிக்கையா இருக்கதுலதான் ஒங்க பாதுகாப்பு இருக்குது. உயிரகையில பிடிச்சிருக்கதா சொல்லுவோமே. அது ஒங்களுக்கு நிசமாயிட்டு."

ஒரு போலீஸ்காரரே, இப்படிப் பேசுவதைப் பார்த்து, மீண்டும் உயிர்ப்பயம் கொண்ட சரோசா, முட்டிக்கால்களில் முகம் போட்டபடியே கிடந்தாள். நாயினா, அவள் முதுகைத் தட்டிக் கொடுப்பதுபோல் தோன்றியது. அதுவே அவளுக்கு தாலாட்டுப் போலவும் ஒரு சோகச் சுவையைக் கொடுத்தது.

கதிரவன் நீரில் குளித்து, நிலத்தில் ஏறி, ஆகாயத்தில் தாவியது. சரோசாவும், நாயினாவும் முன்னால் நடக்க திருமலையப்பன் அவர்களுக்கு இடைவெளி கொடுத்து பின்னால் நடந்தார். பட்டப்பகலில் அவர்களுக்கு ஆபத்தில்லை என்றாலும், அங்குமிங்கும் பார்த்தபடியே நடந்தார். பூக்கார ருக்குமணியின் தெருவிற்கு வந்தபோது அவர் தெரு ஓரத்திலேயே நின்றுகொண்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு போய்விட்டார்.