Chapter 17

நாய்கள் கூடக் குரைக்காத நடு நிசி...

துரையின் சாராயக் கொட்டடிக்குக் கிழக்கே மண்டிக் கிடக்கும் குடிசைப் பகுதி. ஒன்றின் சுவர் இன்னொன்றுக்கு சுவரான தொடர் குடிசைகள். தொடர் தொடராய் சோடி சேர்ந்த குடிசைகளுக்கும், நான்கு கம்பிகள் அகல வாய்ப்பில் செருகப்பட்ட ‘ஜன்னல்கள்’. இந்த குடிசை வரிசைக்கு அங்கேயும் இங்கேயும் தாறுமாறாய் சிதறிக்கிடந்த தகர டப்பாக் குடிசைகள்; கோணிக்கதவுப் பொந்துகள்; ஒன்றோடு ஒன்று நெருக்கித் தள்ளிக் கொண்டிருந்த குடில்கள். இதற்கு மத்தியில் ஒரு பொட்டல் வெளி. அங்கேயும் ஒரு குடிசை இருந்ததுக்கு அடையாளமாக மூங்கில் பட்டைகளும், ஓலைக் கசிவுகளும் சிதறிக்கிடந்தன. அக்கம் பக்கத்து குடிசை மகுடங்களும், அருகே இருந்த ஒரு வாகை மரமும் ஆகாயக் கூரையாக, அந்தப் பொட்டல் ‘தலைமறைவாக' இருந்தது. அதற்கு இருந்த ஒரேயொரு வழியையும் ஒரு அம்பாசிடர் கார் கதவு போல வழிமறித்து நின்றது.

அந்தப் பொட்டல் வெளி புகைந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய அடுப்பின் மேல் மூன்றடுக்குப் பானைகள் மண்கரகங்கள்போல் அடுக்குடுக்காய் வைக்கப்பட்டிருந்தன. கீழே முதுமக்கள் தாழி மாதிரியான பெரிய பானை. அது கீழே வீசிய நெருப்பில் களிமண்ணே சிவந்து கல்லானது போல் அடிவாரத்தைக் காட்டியது. சென்னைப் புறநகர்ப் பகுதி ஒன்றில் நாட்கணக்கில் முகமூடி வாய்களோடு புதைக்கப்பட்டிருந்த மண் பானைகள், சிறிது தொலைவில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அத்தனையும் கலக்கல்கள். இவற்றில், போன வாரம் இட்டு நிரப்பப்பட்ட வார்னிஷ், சின்னச் சின்ன பாட்டரிகள், ஒயர்கள், அழுகிப் போன பழங்கள், வெல்லம், கருவேலம் பட்டை போன்ற பொருட்கள் இப்போது நீரோடு சேர்ந்து நீர்த்துப் போயிருந்தன. ஒரு டவுசர்காரப் பையன், அந்தப் பானைகளுக்குள், கையில் வைத்திருந்த ஒரு கண்ணாடிக் குப்பியிலிருந்து இரண்டு மூன்று துளிகளைத் தெளித்துக் கொண்டிருந்தான். இப்படி 'போஷாக்கு'ச் செய்யப்பட்ட ஒரு பானைதான், அந்த அடுப்புக்கு மேல் இருந்தது. இதைவிடச் சிறிய ஒரு பானை அதற்குமேல் இருந்தது. சிறியது என்றால் கீழே இருப்பதை விடச் சிறியது; ஆனால் சாதாரணப் பானையைவிடப் பெரியது. இந்தப் பானைக்குள் ஒரு அலுமினியப் பாத்திரம் எப்போதோ வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பானைக்கு வெளியே குழந்தையின் தொப்புள் கொடி போல் ஒரு டியூப்; அந்தப் பானையின் குழாயடி டேப்புக்குள் இருந்து வெளிப்பட்ட இந்த டியூப், வெளியே வைக்கப்பட்ட தார் நிறத்தில் உள்ள ஒரு கேனுக்குள் ஊடுருவி இருந்தது. இந்த நடுப்பானைக்குமேல் இன்னொரு பானை. அதன் வாய் ஒரு மண் ஜாடியால் மூடிக்கிடந்தது. இந்த மூன்று பானைகளுக்கும் இடையே உள்ள, இடைவெளி மண்ணால் பூசப்பட்டு, அவற்றிற்கு ஒரே பானைபோல் ஒரு தோற்றத்தைக் கொடுத்தது.

துரை, பத்தடி தள்ளி, ஒரு நாற்காலியில் சோர்ந்து கிடந்தான். அங்கே காய்ச்சப்படுவதற்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல், கண்மூடிக்கிடந்தான். ஆனால் அம்மைத் தழும்பனான கோபால், அவனுடைய கூட்டாளிகளான இன்னாசி, மணி, மொட்டை, ராக்கப்பன், சந்திரன் போன்ற வகையறாக்கள் அங்கும் இங்குமாகச் சுழன்றார்கள். சரோசா, தனது இஷ்டத்துக்கு விரோதமாக நிற்பவள் போல், அந்த வாகை மரத்தில் சாய்ந்து, அருகே உள்ள ஆழ்கடலையும் மேலே ஆகாயத்தையும் மாறி மாறிப் பார்த்தாள்.

அடுப்புத்தீ, நட்சத்திரப் பொறிகளாக மேலோங்கி மேலோங்கி, ஊறல் பானையின் அடிவாரத்தையே திரவமாக்கப்போவது போல் எரிந்தது. 'சடசட' என்ற நெருப்புச் சத்தம். அதன் சினப்பொறிகள் ஓலைத்துகள்களோடு உரசி, உரசி அங்கும் இங்குமாய் நாட்டியம் ஆடின. ஆகாயமும், பூமியுமாய் ஒரே சமயத்தில் தாவுவது போல் தோன்றின. அடுப்புப் போட்ட கத்தல், எதிரே ஆர்ப்பரித்த கடலுக்கு ஜால்ரா போடுவது போல் இருந்தது.

இந்தப் பின்னணியில், ரத்தச் சதைபோலான தாழிப்பானையின் அடிவாரச்சூடு தாங்கமுடியாது, ஆவியான ஊறல், அடுத்த பானைக்குள் புகுந்து அதற்கு மேலே தாவி, முதல் பானையின் ஈரக்கசிவான அடிவாரத்தில் மேகமண்டலமாகி,பின்னர் தலைக்காவிரி போல் மெல்லியத் துளிகளாகி, அந்தப் பானையின் அடிவாரத்தில் பிறப்பெடுத்து; அலுமினியப் பாத்திரத்தில் விழுந்து கர்ப்பக்குழாய் மாதிரியான ரப்பர் குழாய் வழியாய் சாராய காவிரியாகி, அந்த கேன் கடலுக்குள் சங்கமமாகிக் கொண்டிருந்தது.

துரை, சீக்கிரம் வேலையை முடித்துவிட்டு முடங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில், இருந்த இடத்தில் இருந்தபடியே அதட்டினான்:

"இன்னாங்கடா, ஒரு அவுரு ஆவுது, வேடிக்கை காட்டுறீங்க."

‘குருதோஸ்து'வின் சிக்னலைப் புரிந்து கொண்ட இன்னாசி, மேல் பானையை டவலைக் கொடுத்துத் தூக்கிய பொழுது, கோபால் அடுப்பு விறகை சிறிது வெளியே எடுத்தான். இதற்குள், இன்னொருத்தன் அந்தப் பானையை வாங்கி, அதில் கொதித்த நீரை கீழே கொட்டிவிட்டு, மீண்டும், அதை மத்திய பானைக்குமேல் மல்லாக்க வைத்தான். இன்னொருத்தன் கீழே கிடந்த ஒரு பிளாஸ்டிக் கேனை தூக்கி அதற்குள் இருந்த தண்ணீரை அந்தப் பானையின் வாய்க்குள் தாரை வார்த்தான். அப்போது பானைத் தண்ணீர் கீழே சிந்தி நெருப்புமேல் பட்டு, அந்த நெருப்பை நாகப்பாம்பாய் சீறவைத்து, பின்னர் பூனைக்குட்டியாய் ஒப்பாரி போட வைத்தது.

துரை, உடம்பை நெளித்தபடியே கத்தினான் :

"அசல் நாட்டுப்புறண்டா நீ... தொழிலில் சுத்தம் வேணுண்டா சோமாறி"

"நாட்டுப்புறமுன்னா, அசமந்தமுன்னு நினைக்காதண்ணா... இப்போ நமக்கே கத்துக் கொடுப்பாங்க. இந்த காச்சலையே எடுத்துக்கோ. நாம அடிக்கடி மேல்பானை தண்ணிய மாத்தறோம். ஆனா நாட்டுப்புறத்துல பம்பு செட்டு தண்ணியையே வாய்க்கால் மாதிரி அந்தப் பானை மேல விடுறாங்கோ. அந்தப் பானையோ நம்ம அண்ணாத்தே வீடு மாதிரி சும்மா கும்முன்னு குளுராவே இருக்குது. சிலரு நிலத்துலயே ஊறல ஊத்தி வைக்கிறாங்க."

துரை, இப்போது பலமாகச் சிரித்தான்; சத்தம் போட்டுச் சிரித்தான். அந்தச் சிரிப்பில், எல்லோரும் சேர்ந்து அதன் ஒலி அடர்த்திக்கு, ஒரு அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் சரோசா மட்டும் சும்மாவே நின்றாள். துரை, அவளை செல்லமாக அதட்டினாள்:

"இன்னாமே ஒனிக்கி கேடு? ஜல்தியா, ஸ்பெஷல் தயாரிமே. அம்மாம் பெரிய கார எவ்வளவு நேரம் காக்க வைக்கிறது? இந்தா வாங்கிக்கோ."

அடித்துப்போட்ட இளங்கோவையும், அவன் துடித்த துடிப்பையும், மனதுக்குள் உள்வாங்கி, மருவிக் கொண்டிருந்த சரோசாவுக்கு, துரையின் பேச்சு காதுகளை உரசவில்லை. அதோடு அவளைப் போலவே ஏழ்மையில் இருந்தாலும், பாசமும், நேசமும் கொண்ட ருக்குமணியை நினைக்க நினைக்க, அவள் அண்டமாகவும், இவள் அணுவாகவும் பெருகிக்கொண்டும், சருங்கிக் கொண்டும் இருப்பதுபோல் தோன்றியது. இந்தக் கோலத்தில், இளங்கோ தன்னைப் பார்த்தால் அவன் என்ன நினைப்பான் என்ற எண்ணம் அவளை சாராயம் போடாமலேயே 'கிக்காக்கியது'. துரை, மீண்டும் அதட்டினான் :

“ஒனக்கு இன்னாமே ஆச்சுது? நானே உயிரோட கீறேன். உனிக்கு என்ன கேடு? இந்தா, இத பட்டும் படாமலும் தட்டுமே. முக்கிடாதே."

சரோசா மெல்ல மெல்ல நகர்ந்து, துரை நீட்டிய ஈரப்பொட்டலத்தை வாங்கிக் கொண்டாள். அதற்குள் இருந்த ஊமத்தை விதைகள், அந்த வெள்ளைத் துணிக்குள் மாரியாத்தாவின் ஆயிரங்கண்கள் போல் சிமிட்டின. அதை வாங்கிக்கொண்ட சரோசா ஒரு 'தெவசாவில்' ஊற்றப்பட்டிருந்த திரவத்தின்மீது அந்தப் பொட்டலத்தை பட்டும் படாமலும் தட்டிக் கொடுக்கத்தான் போனாள். ஆனாலும், தன்னை அறியாமலே, அந்தப் பொட்டலத்தை அந்தத் திரவத்திற்குள் முக்கி முக்கி எடுத்தாள். சாதாவாக இருந்த அந்தச் சாராயம், இப்போது 'ஸ்பெஷல்' ஆகிவிட்டது. இதன் விலையும் கிக்கும் இரண்டு மடங்காம்.

சரோசா அந்த ஸ்பெஷல் சாராயத்தை இன்னொருவனுடன் சேர்ந்து கேனில் ஊற்றினாள். அப்போது கார் டிக்கியை த் திறந்த மணி ஆச்சரியம் தாங்காமல் கத்தினான்:

“துரண்ணே! இந்தண்டே வந்து பாரு. காரோட டிக்கி அசல் மாட்டுத்தொட்டி மாதிரி கீ துண்ணே. டயர் கியர் எதுவுமில்லாமே சதுரமா அசல் தரை மாதிரி இருக்குதுண்ணே."

"அடப்போடா எட்டன். அண்ணாத்தைக்கு டிக்கிய தொட்டியாக்குற ஐடியாவ கொடுத்ததே நானுதான்டா."

"சரக்கு எங்கண்ணே போகுது?"

"எங்கே போனால் உனக்கு என்னடா கயிதே?"

“ஏண்ணே இப்படி லொள்ளு லொள்ளுனு கத்தறே?"

"பின்னே இன்னாடா... அண்ணாத்தே, சர்க்கார் லைசன்சுல ஓடுற ஒயின் சாப் அல்லாத்திலேயும் விஸ்கி, பிராந்தி, ரம் இருக்கவேண்டிய பாட்டல்ல இந்த சரக்க ஊத்தி விக்கிறார்ன்னு டமாரம் அடிக்க முடியுமா? கம்மனாட்டி; என் வாயை கிளறிட்டான் பாரு."

‘அதனாலதான் இப்போ பார்ல குடிக்கிறவங்க எல்லாம் மார்ல கை வைக்காங்களா?"

"ஏய் சரோ, கார்ல ஏத்தேமே.”

சரோசா, அந்தக் கேனை தூக்கப்போனபோது, செட்டில் புதிதாகச் சேர்ந்திருக்கும் ராக்கப்பன் அங்கே வந்து கீழே மண்டியிட்டு, அந்த கேன் மூடியைத் திறந்து, கையை அதற்குக் கீழே வைத்துக்கொண்டு கேனை கவிழ்த்துக் கொஞ்சம் குடித்தான். சரோசா அவனைக் குப்புறத் தள்ளினாள். கையை ஓங்கப்போனவள்... பின்னர் அதே கையால், ஒவ்வொரு கேனாகத் தூக்கிக்கொண்டு போய் கார் டிக்கியில் வைத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு தடவையும் இளங்கோ, அவளை வழிமறிப்பதுபோல் இருந்தது. ருக்கு, அவளை பின் பக்கமாய்ப் பிடித்துத் தன் பக்கம் இழுப்பது போல் இருந்தது. இந்தச் சமயத்தில் ராக்கப்பன் கூப்பாடு போட்டான் :

"அய்யோ, என் கண்ணு பூட்டே! வயிறு எரியுதே! அய்யய்யோ என் கண்ணு! அய்யோ என் வயிறு!”

எல்லோரும் அவன் பக்கமாக ஓடி வந்தார்கள். அவன் தரையில் சுருண்டு சுருண்டு நெளிந்தான். மேற்கொண்டு கத்த முடியாமல் வாய் கோணியது... கைகால்கள் வெட்டின. கழுத்து பின்பக்கமாய் திரும்பப் போனது... எல்லோருக்கும் புரிந்துவிட்டது. துரை கத்தினான்; சரோசாவை அடிக்கப்போவது போல் கைகளை ஓங்கிக்கொண்டு அதே சமயம் அந்தக் கைகளை அவள் தலையில் இறக்காமல் சத்தம் போட்டான் :

“நான் நெனச்சபடியே, அந்தப் பொட்டலத்த முக்கி முக்கி விஷச் சாராயமா ஆக்கிட்டியமே... தோ பார்! அந்தப் பொட்டலம் ஈரமா நனஞ்சிருக்கு பார். நீயல்லாம் ஒரு தொழில்காரியா? இப்போ இவன் குடும்பத்துக்கு யார் ஜவாப்பு?"

சரோசா திருப்பிக் கத்தினாள்:

"நானு மொத்துனதுல விஷமாகல. அதோ அந்த ஓணா மூஞ்சி விஷத்துல இரண்டு துளிய ஊத்துறதுக்குப் பதிலா சொட்டுச் சொட்டா ஊத்துனான். அப்பவே எனிக்கு சந்தேகம்.”

"அப்போ நீ வேடிக்கை பார்த்துட்டு இருந்திருக்கே?"

"சரிதாம்பா, உன்கையாலேயே எனிக்கும் ஒரு கிளாஸ் தந்துடு. அவனைப் போலவே நானும் ஆயிடுறேன். இந்தத் தொழிலு எனக்கு வேணா வேணான்னு சாயங்காலம் வாயிலும் வயித்துலுமா அடிச்சி உன்கிட்ட சொன்னேன்... நீ கேட்டாத்தானே!”

இதற்குள், கீழே கை கால்களை வெட்டிக் கொண்டிருந்தவன் ஆடி அடங்கி விட்டான்; அப்படியே விறைத்துக் கிடந்தான். அவன் வாயோ ‘சொல்லாதே யாரும் கேட்டால்' என்பதுபோல் கோணிக் கிடந்தது. கண்கள் பாடை போல் வெளுத்து இருந்தது. சரோசா முகத்திற்கு கைகளை மூடியாக்கிக்கொண்டு விம்மினாள். துரை இப்பொழுது அவளுக்கு ஆறுதல் சொன்னான்:

"படுகளத்துல ஒப்பாரி கூடாதுமே. இன்னாசி, கோணி கொண்டுவா. பிணத்த தூக்கினு போயி கடலுல போடணும் நானு அண்ணாத்தைக்கு போன்ல விஷயத்தை சொல்லிட்டு வாறேன். எதிர்கோஷ்டி அங்கப்பன், ஆளுங்கட்சியில சேர்ந்த ஜோர்ல, நாம காய்ச்சிற வழக்கமான இடத்துல வம்பு பண்றான்னு இங்க வந்தால், இங்கேயும் இப்படி ஆயிட்டுதே."

சரோசாவுக்கு, இப்போது தன்னை முன்னாலும், பின்னாலும் ருக்குவும், இளங்கோவும் நின்றுகொண்டு ஆளுக்கொரு பக்கமாக இழுப்பது போல் இருந்தது. இப்படிப்பட்ட பல சாவுகளைப் பார்த்தவள்தான் அவள். ஆனால் இன்றோ அந்தப் புது தோஸ்து விறைத்துக் கிடந்ததைப் பார்க்கப் பார்க்க, அவள் மனமே அந்த ரூபத்தில் கிடப்பது போல் இருந்தது. திடீரென்று அவளே செத்து ஆவியாகி பேயுருவம் கொண்டது போல் எழுந்தாள். அந்தக் கார் பக்கம் ஓடினாள். அந்த டிக்கி தொட்டியில் இருந்த கேன்களை எடுத்து, கடல் பக்கமாக ஓடி ஓடி வீசிப் போட்டாள். துரை வந்து, அவளைப் பிடித்துக் கொண்டான். மற்ற தோஸ்துகளும், அந்தப் பிணத்தைக் கோணிக்குள் செருகப்போன இதர தோஸ்துகளும், அங்கே வந்து நின்றபோது, துரை கத்தினான்:

“என்னமே ஆச்சி ஒனக்கு? எதுக்காக கேனை கடல்ல எரியுற?”

சரோசா திருப்பிக் கேட்டாள்: "அப்போ அல்லாரும் இத குடிச்சிட்டு சாகணுங்கறியா?"

'அது அண்ணாத்தையோட விஷயம். அவர் என்ன சொல்றாரோ அதைச் செய்றதுக்குத்தான் நாம இருக்கோம். ஒருவேளை எதாவது முறிவு மாத்திரை போட்டுக்கூட அண்ணாத்தே மாயாஜாலம் செய்யலாம். உனிக்கி இன்னாமே வந்தது?”

“துரை அண்ணே! துரை அண்ணே! ஒன்னை கையெடுத்துக் கும்பிடறேன்; எனிக்கி இந்தத் தொழில் வேணாம்; என்ன விட்டுடு, விட்டுடு."

சரோசா, அந்தக் காரை காலால் ஒரு உதை உதைத்துவிட்டு, தலைவிரி கோலமாக ஓடினாள்.