Chapter 32
சரோசா, முனியம்மாவிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் அவள் பின்னாலேயே போனாள். ஆட்டோவிலும் அவளும் போலீஸ்காரரும் பேசிய பேச்சுக்கூட அவளுக்குக் கேட்கவில்லை. இப்போது எந்த இடத்தில் இருக்கிறோம் என்ற தெளிவும் இல்லை. தெரிந்து கொள்வதற்குரிய அக்கறையுமில்லை. ஒரே ஒரு சமயத்தில் மட்டும் கொலைக்காரர்களை விசாரிக்கும் தனிப்பட்ட காவல் நிலையம் அந்த மாடியில் இருக்குமோ என்று லேசாய் நினைத்துக் கொண்டாள்.
முனியம்மாவும் அவள் முதுகைப் பிடித்து லேசு லேசாகத் தள்ளினாளே தவிர அவளிடம் எதுவும் பேசவில்லை.
மூன்று சாலைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்பில் வடக்கு தெற்கான சாலையின் முனையில் உள்ள இரண்டாவது கட்டிடத்தின் முதலாவது மாடி, விசாலமான பெரிய அறை. அதன் இரு முனைகளிலும் சின்னச் சின்ன அறைகள். கதவுக்கு மேலேயும், அந்த அறைச்சுவர் ஒன்றிலும் ‘சமதர்ம மாதர் மன்றம்' என்ற போர்டுகள் தொங்கின. உள்ளே ஒரு பக்கமாய் ஒரு சாதாரண நாற்காலி; அதன் முன்னால் சராசரி மேஜை. கட்டுக்கட்டான பேப்பர்கள். ஒவ்வொன்றும், ஒன்றின் மேல் ஒன்றாக இல்லாமல், ஒன்றன்பின் ஒன்றாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேஜை முனையின் இருபுறமும் பிரம்பு நாற்காலிகள். அதன் முன்னால் இரண்டு வரிசையில், சின்னச் சின்ன இரும்பு நாற்காலிகள். பக்கவாட்டில் பெஞ்சுகள். மேஜையோடு ஜோடி சேர்ந்த ‘எஸ்' வடிவ நாற்காலியில் உட்கார்ந்திருந்த பெண்ணிற்கு, நாற்பது வயதிருக்கலாம். பொட்டில்லாத நெற்றி. நகை நட்டுக்களால் சின்னாபின்னமாகாத கூரிய மூக்கு. எவரையும் பார்த்ததும் மோவாயை கீழே தள்ளி, கண்களை முன்னால் தள்ளிப் பார்க்கும் ஒரு ஆர்வப் பார்வை. பெஞ்சுகளில் பஞ்சையாய் - பராரியாய்ப் போன பல பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களது ஆடைக்கு அப்பால் வெளிப்பட்ட முதுகுகளிலும், முகங்களிலும் வரதட்சணைத் தழும்புகள்; பெற்ற பிள்ளைகள் கொடுத்த நன்றிக் கடன்கள். இவர்களில் சிலர் தள்ளாடும் மூதாட்டிகள். சிலர், தாலாட்டும் இளம் பெண்கள். ஒவ்வொருத்தி தலையும் ஏதோ சுமக்க முடியாத ஒரு பெருஞ்சுமையை சுமப்பது போல் தாழ்ந்து கிடந்தது. முனியம்மாவை அங்கீகாரத்துடனும், அவளோடு வந்தவளை அழுத்தமாகவும் பார்த்த தனி நாற்காலியில் உட்கார்ந்திருந்த அந்த அம்மா, கும்பிட்ட முனியம்மாவிற்கு பதில் கும்பிடு போட்டுவிட்டே கேட்டாள்:
"எப்படி இருக்கே முனியம்மா? உன் வீட்டுக்காரன் மாசா மாசம் தர வேண்டியதைத் தரானா?”
“கழுதப் பய தாராம்மா."
"இன்னும் உனக்குக் கோபம் போகலையா?”
“என் வயித்துல எரியறது அணையா அக்னிம்மா. அதை மூட்டுனவனாலகூட இப்ப அணைக்க முடியாது. ரெண்டாவது ஒருத்திய சேர்த்து அவளுக்கும் மூணு வருஷத்துல ரெண்டு பிள்ளையைக் கொடுத்திட்டான். அவள்தான் என் வாழ்க்கையில அறிவில்லாம குறுக்கிட்டாள்; எனக்கு உரிமை இருந்தாலும், நான் அவள் வாழ்க்கையில குறுக்கிட விரும்பலம்மா. அதோட, ஒப்புக்கு வாழறவனோட வாழுகிற வாழ்க்கை உப்பில்லாத சாப்பாடு மாதிரின்னு உங்களுக்குத் தெரியாதா என்ன ஏதோ நீங்க தலையிட்டு இந்த அடாவடிக்காரனை அரட்டி உருட்டி அவங்கிட்டருந்து பொண்டாட்டியா, ரிட்டயரான எனக்கு பென்சன் வாங்கிக் கொடுத்திட்டீங்க. நீங்க நல்லா இருக்கணும். அப்பதான் என்னை மாதிரி இவள மாதிரி இருக்கற பொண்ணுங்க நல்லா இருக்க முடியும்."
அந்த அம்மாவுக்கு அவள் சொன்னதில் பெருமைப்படுவதா அல்லது சிறுமைப்படுவதா என்று தெரியவில்லை. முழுமையாகப் பலன் கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கமும், பாதி அளவுக்காவது பலிக்கிறதே என்ற திருப்தியும் முகத்தில் ஒருசேரத் தெரிந்தது. பிறகு இதற்கெல்லாம் தான் மட்டும் காரணமல்ல; அதோ தன் முன்னால் நாற்காலிகளில் உட்கார்ந்திருக்கும் ஐந்தாறு பெண்களும், அந்த அமைப்பும் காரணம் என்பதுபோல் அவர்களைப் பார்த்தாள்.
அந்தப் பெண்களில் இருவர், அந்த அம்மாவைப் போல் நடுத்தரங்கள். அவர்கள் முகங்களிலும் தீட்சண்யப் பார்வை. எஞ்சிய மூவரில் இருவர் இளம் பெண்கள். ஆனாலும், ஒருவித முதிர்ச்சியான பார்வை. ஒரே ஒருத்தி மட்டும் அங்குமிங்குமாய் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தோற்றத்தை வைத்து எதுவும் அனுமானிக்க முடியவில்லை. முனியம்மா, சரோசாவையே பார்த்துக் கொண்டிருந்த அந்த அம்மாவுக்குக் கோடி காட்டினாள்.
"இதோ பித்துப் பிடிச்சு நிக்குதே பாவிப்பொண்ணு, இது பட்டபாடும், படும் பாடும் கொஞ்சநஞ்ச மில்லம்மா. செய்யாத ஒரு குற்றத்தை, அதிலும் கொலைக் குற்றத்தை செய்ததா போலீஸ், ஒரு பெரிய மனுஷன் தூண்டுதல்ல பழி போட்டிருக்கும்மா. இப்பவும் கீழ போலீஸ்காரரை ஆட்டோவில் காக்க வைச்சுட்டு வந்திருக்கேம்மா. நீங்க மட்டும் இப்ப எங்ககூட வராட்டா, இவள, ராத்திரியோட ராத்திரியா ஏதாச்சும் செய்துடுவாங்கம்மா. ஏய் சரோ, நான் முன்னால ஒன்கிட்ட அடிக்கடி சொல்லுவேன் பாரு, அந்த அம்மா இவங்கதான். இன்னிக்கு என்னை என் ஆம்படையான் தெருவில போட்டு உதைக்காம இருக்கான்னா, இதுக்கு இவங்கதான் காரணம். இப்பக்கூட இவங்க பேர் எனக்குத் தெரியாது; ஆனா, அம்மாவுக்கு பேர் எதுக்கு?"
"தப்பும்மா! எனக்கும் உனக்கும் இதோ இங்க இருக்கவங்களுக்கும் அம்மா நம்ம மன்றம்தான். என்றைக்கு தனிப்பட்டவங்க ஒரு அமைப்பைவிட உயரமா தெரிய ஆரம்பிக்கிறாங்களோ, அப்பவே அந்த அமைப்போட உயிர்த்துடிப்பு போயிடும். நாங்க அரசியல் கட்சிகள் மாதிரி இல்ல. நாங்க எல்லோரும் ஒருவர் தலைமேல் ஒருவர்ஏறி நின்னாலும் இந்த மன்றம் தான் அதிக உயரம்.”
"சரிம்மா. இந்தப் பொண்ணுக்கு..."
அந்தம்மாவும், அங்கு இருந்த இதரப் பெண்களும், பெஞ்சிகளில் இருந்த பஞ்சைப் பராரிகளும் சரோசாவை ஒருசேரப் பார்த்தார்கள். எந்தப் பிரச்சினைக்கும் ஒரு முடிவு கிடைக்கும் என்பதுபோல் நாற்காலிப் பெண்கள் அவளுக்கு நம்பிக்கை தரும் வகையில் பார்த்தபோது, பெஞ்சிப் பெண்களோ, கஷ்டம் என்பது தங்களுக்கு மட்டும் உரியதல்ல என்பது போல், அவளை கண்சாய்த்துப் பார்த்தார்கள். ஆனால் சரோசாவோ, "தொரண்ணே, தொரண்ணே” என்று வாய் கூவிக் கொண்டிருக்க, அதில் மட்டும் உயிரை வைத்திருப்பவள் போல் அசைவற்று நின்றாள்.
அவளையே பார்த்தபடி அந்தம்மா மேஜையில் கையூன்றி எழுந்தாள். அவள் அருகே போனாள். அவள் மோவாயை நிமிர்த்தினாள்.வெறுமையாய் கிடந்த அவள் கண்களை தலையோடு சேர்த்துத் தடவி விட்டாள். அவள் தோளில் கை போட்டபடியே மேஜையோரம் இருந்த பிரம்பு நாற்காலியில் உட்கார வைத்து, தானும் உட்கார்ந்து கொண்டு ஆவேசமில்லாமலும், அதே சமயம் ஏனோ தானோ என்று இல்லாமலும் தன்னம்பிக்கையோடு ஆறுதல் சொன்னாள்:
"இந்தா பாரும்மா, உன் மேல தப்பில்லன்னா எந்த போலீசும், எந்த ரவுடியும், எந்த கோர்ட்டும் உன்னை தண்டிக்க முடியாது. ஒருவேளை நீ இந்த மன்றத்துக்கு வராமல் இருந்தா அது பேற விஷயம். எப்போது எங்க கிட்ட நீ வந்திட்டியோ அப்போ நீ செய்யாத குற்றத்துக்குத் தண்டனை வாங்க முடியாது. அதைத் தடுக்கிற சக்தி எங்க மன்றத்துக்கு உண்டு. இது சத்தியம். வாயைத் திறந்து உன் வாழ்க்கை முழுசையும் நல்லதோ கெட்டதோ அப்படியே கொட்டு. நீயே உனக்கு சாட்சி சொல்லாட்டால், என் பேச்சோ, இந்த முனியம்மா பேச்சோ எடுபடாது. நீ மட்டும் கொலை செய்யாட்டால் உன் மேல ஒரு துரும்பு கூட விழாது. சொல்லும்மா."
சரோசா, லேசாய்க் கண் விழித்தாள். அந்த இடத்தை அப்போதுதான் பார்ப்பது போல் பார்த்தாள். அந்த அம்மாவை நம்பாதது போலும் பார்த்தாள். லேசு லேசாய் உறைந்துபோன அவள் உடம்பினுள், ஏதோ ஒரு சூடு உட்பரவி, உள்ளத்துள்ளும் பரவியது. பனிக்கட்டியாய் உறைந்து போன மனம் மெல்ல மெல்ல கசிந்தது. மனக்கட்டி உடைந்து, மனோவாதை குணமாகவில்லை என்றாலும், குறைவது போன்ற ஒரு மாற்றம். மனதுக்குள் இருந்த பனிக்கட்டியை ஏதோ ஒரு நெருப்புக்கட்டி எரித்துவிட்டு ஜோதி மயமாய் ஒளிர்ந்தது. அதில் அண்ணாத்தே எரிந்து கொண்டிருந்தான். துரை அண்ணனின் ‘தர்மபத்தினி’ கரிந்து கொண்டிருந்தாள். சரோசா அந்த அம்மாவையே உற்று உற்றுப் பார்த்தாள். லேசாய் சிரித்தாள். அதைவிட, சிரிக்கப் போனாள் என்று சொல்லலாம். இதற்குள் நாற்காலிகளில் இருந்த பெண்கள், ‘சொல்லும்மா,' 'சொல்லும்மா' என்று மாறி மாறிச் சொன்னார்கள். சரோசா அந்த அம்மாவையே பார்த்தாள். 'எல்லாம் எனக்குத் தெரியும்' என்பது மாதிரியான தோரணை இல்லாமல், ‘எல்லாம் தெரிய வேண்டும்' என்பது மாதிரியான நளினமான முக இறுக்கம். அதே சமயம், பயபக்தியை உருவாக்காமல் தோழமை உணர்வை ஏற்படுத்தும் பார்வை.
சரோசாவின் தலை, அந்த அம்மாவின் தோளில் விழுந்தது. ஒரு குழந்தையாகி அந்தத் தோளே ஒரு தொட்டில் என்பதுபோல், அங்குமிங்குமாய் தலையை புரட்டி அரற்றினாள். அவளை, அவள் போக்கில் சில நிமிடங்கள் விட்டு வைத்த அந்த அம்மாள், அவள் தலையை நிமிர்த்தினாள். பிறகு "நீ இங்கே வைச்சு சொல்லணும் என்றாலும் சொல்லு. இல்ல, அந்த அறைக்குள்ள வந்து சொல்லணும் என்றாலும் சொல்லு” என்றாள்.
சரோசா, தன் பார்வையில் பட்ட அனைவரையும் பார்த்தாள். அத்தனை முகங்களிலும் அவளுக்கான ஒரு ஆறுதல் பார்வை இருப்பதைக் கண்டுகொண்டது போல் முகத்தைத் துடைத்தாள். தன்னாலும் மீள முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. அண்ணாத்தைக்கும் சவால்விட ஆட்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. மண்ணில் பிறந்தது, பெண்ணாய்ப் போனது, ஆத்தா ஓடியது, அவள் தாத்தா வளர்த்தது, எடுபிடி வேலை செய்தது, ஏளனமாய் நடத்தப்பட்டது, போலீஸ் தொல்லைகள், போக்கிரிகளின் சீண்டல்கள், அதனால் துரையண்ணன் மூலம் அண்ணாத்தையிடம் அடைக்கலமானது, சாராய உறவுகள், இளங்கோவுடன் போட்ட சண்டை, அவனை ஆளை வைத்து அடித்துப் போட்ட அடாவடித்தனம், அவனால் மனுஷியாகி, இப்போது ஆபீஸ்காரர் களால் மீண்டும் பழைய நிலைக்கப் போக வேண்டும் என்ற எண்ணமும், அப்படிப் போய்விடுவோமோ என்ற அச்சமும் கலக்க, அவள் ஒன்று விடாமல் சொன்னாள். அவள் அனுபவித்த துயரங்களைக் கேட்கக் கேட்க அங்குள்ள அத்தனை பேருக்கும் காதுகள் போதாது என்பது போல், பலர், இரண்டு கைகளையும் தத்தம் காதுகளுக்கு மேல் காதுகளாகக் குவித்துப் போட்டார்கள்.
அவள், தனது கதையை, சுருக்கியும் சொல்லாமல், விரியவும் விடாமல் ஒப்பித்தபோது, அவள் சொல்வதை ஆரம்பத்தில் இப்படித்தான் எல்லோருக்கும் நடக்குது என்ற தோரணையில் பார்த்த அந்த அம்மா, இறுதியில் முகம் வெளிறிப் போனாள். அவள் வார்த்தையில் தொனித்த சத்திய ஒலியில் கட்டுண்டவள் போல், சரோசாவின் முகத்தைத் துடைத்துவிட்டு, கண்ணீரைச் சுண்டி விட்டாள். பிறகு, பெஞ்சில் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்துக் கேட்டாள்:
“நீங்க என்ன நினைக்கீங்க?”
தாழம்பூ
"அந்த அண்ணாத்தையை இப்பவே கழுத்தை நெறிச்சுக் கொன்னு போடணும் போலத் தோணுது."
"கதையில வாரது மாதிரியே வருதே?"
அந்தம்மா, சிறிது உணர்ச்சி வசப்பட்டுப் பேசினாள் :
“இந்தப் பெண்ணோட பிரச்சினை நமக்கு ஒரு சவால் பிரச்சினை மாதிரி. இதுவரைக்கும் கொலை செய்யப்பட்ட பெண்களைப் பற்றியும், அப்படி கொலை செய்யப்படப் போன பெண்களைப் பற்றியும்தான், நாம் விவகாரம் செய்திருக்கோம். இப்போத கொலைப்பழியை சுமந்து நிக்கிற ஒரு பெண்ணோட பிரச்சினையை நாம சந்திச்சுத்தான் ஆகணும். இந்தமாதிரி தெருவில நிக்கிறவள், சாராயம் காய்ச்சுறவள், இப்படி ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும் ஒரு சமூக மேடு பள்ள வரலாறு நிக்குது. சரியம்மா, இனிமே இது உன் பிரச்சினை இல்ல, எங்க பிரச்சினை. முனியம்மா! நீ சரோசாவைக் கூட்டிட்டு ஸ்டேஷனுக்குப் போ; நாங்க பின்னாலயே வந்துடறோம். என்ன யோசிக்கே?"
“கண்டிப்பாய் வரணும்மா” என்ற வார்த்தைகளை வாயில் வைத்திருந்த முனியம்மா, அவற்றை "ஒண்ணுமில்லேம்மா” என்று ஆக்கிக்கொண்டு, நாற்காலியில் உட்கார்ந்திருந்த சரோசாவை சந்தோஷமாய் தூக்கிவிட்டாள். அலுவலகத்தில் கடன் கேட்பாள் என்பதற்காக தன்னை மறைத்துக்கொண்ட அவளுக்கு குற்ற உணர்வு இப்போது முழுவதுமாக மறைந்து விட்டது. போர்டை பக்தியோடு பார்த்துக்கொண்டே சரோசாவை படிகளில் இறக்கிக்கொண்டு கீழே வந்தாள்.
இதற்குள் ஆட்டோ பக்கம் நின்ற போலீஸ்காரர் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் மேலும் காலவிரயத்தைத் தடுப்பது போல், அவர்களைக் கையாட்டிக் கூப்பிட்டார். அந்த மூவரோடும் ஆட்டோ பறந்தது.

