Chapter 10
இளங்கோ, அந்தப் பிள்ளையார் கோயிலுக்கு வந்து ஒருமணி நேரத்திற்கும் அதிகமாகி விட்டது என்பது, அவனைத் தெரிந்து வைத்திருந்த அந்த ஏரியாப் பெண்களுக்குத் தெரிந்ததே தவிர, அவனுக்குத் தெரியவில்லை. அக்கம் பக்கத்து வீடுகளில் தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 'சின்னதுகள், ‘சிறிசுகளிடம்’ சரோசா என்ற ரவுடிப் பெண்ணிடம், அவன் எப்படி அடிபட்டான் என்பதை விவரித்துக் கொண்டிருந்தார்கள். அவனை கதாநாயகனுக்கு எதிர்மாறானவன் போலவும் பார்த்தார்கள்.
இளங்கோவோ, அந்த நீண்ட நெடிய தெருவில், இரு முனைகளையும் மாறி மாறிப் பார்த்தான். பூக்காரி ருக்குமணியைக் காணவில்லை. இந்தக் கோயிலுக்கு ஒரு ஓரமாய் உட்கார்ந்தும், நின்றும் கொண்டே, பூ வாங்காதவர்களையும், அவள் வாங்க வைப்பதைப் பார்த்திருக்கிறான். பத்து பைசா உண்டி யலில் போட்டுவிட்டுப் போகிறவர்களையும், “ஏன் சாமி, இன்னிக்கு சங்கடஹர சதுர்த்தியாமே” என்று அந்த வார்த்தையை சங்கடப்பட்டு உச்சரித்துச் சொல்வாள். அவள் பேச்சு காதில் விழாத அளவுக்கு பிள்ளையாரிடம் பரவசத்தோடு ஐக்கியப் பட்டவர்கள் போல், 'பாவலா' செய்பவர்களைப் பார்த்து, "ஏன் சாமி, நான் கையிலதான் பூ வைச்சிருக்கேன், காதுல இல்லை. இந்த பிள்ளையார் பத்துப் பைசா தானா பெறும்” என்பாள். அதனால், இவள் இருப்பதனாலேயே பல பக்தகோடிகள் வருவதில்லை. இன்னும் சிலர் பிள்ளையாரை நோக்கி வந்து கொண்டிருப்பார்கள். அவளைப் பார்த்தும் ‘பகுத்தறிவாதிகள்' போல் பிள்ளையாரை ஏறிட்டுப் பாராமலேயே எதிர்த் திசையைப் பார்த்தபடி போவார்கள்.
இதற்கு மேலேயும், அங்கே நிற்பது இளங்கோவிற்கு என்னவோ போல் இருந்தது. அந்த இடத்தை விட்டு, அகலப்போன போது, பூசாரி பிள்ளையார் படம் போட்ட திரைச்சீலையை இழுத்து விட்டு, தன்னையும், பிள்ளையாரையும் மறைத்துக் கொண்டார். உள்ளே மணி அடிக்கும் சத்தம் கேட்டது. இதற்காகவே காத்திருந்தது போல், அக்கம் பக்கத்துக் கும்பல் கூடி, ஆண் வரிசையாகவும், பெண் வரிசையாகவும் பிரிந்தது. அனைவருடைய கவனமும் அந்தத் திரை எப்போது விலகும் என்பதிலேயே இருந்தது. சிலருக்கு பிள்ளையாருக்குப் பதிலாக 23ஆம் நம்பர் பஸ்ஸே மனதில் வந்த நின்றது. பலர் மனதிற்குள், தாமதப்படுத்தும் அந்த பூசாரியை திட்டிக் கொண்டார்கள். ஆனால், இளங்கோவிற்கோ சற்று நிம்மதி; இன்னும் சிறிது நேரம் அங்கேயே நிற்கலாம்.
இதற்கிடையே, மிஸ்டர். ரமணன் அந்தப் பக்கம் வந்தார். இளங்கோவிற்குத் தெரியும், அவரிடம் மாட்டிக்கொண்டால், சரோசா வழக்கில் கண்டிப்புத் தேவை என்று அசோஸியேஷன் போட்ட தீர்மானங்களை நகல் எடுக்கச் சொல்வார். பிறகு போலீஸ் கமிஷனரிடம் சங்கத்தின் பிரதிநிதிக்குழு உறுப்பினராக அல்ல, உதவியாளனாக வரச்சொல்லுவார். இதில் அவனுக்கு சம்மதமில்லை. நேற்று பூக்காரியிடம் அவர் பேசிய விதமும், அவள் வேகவேகமாய் போன விதமும் சரோசாவை காப்பாற்றக்கூடும் என்று நினைத்தான். ஆகையால், ரமணனின் தலையைப் பார்த்ததும், தனது தலையை நெருப்புக் கோழி மாதிரி இதர மனிதத் தலைகளுக்கு மத்தியில் மூழ்கடித்துக் கொண்டான். ஆனால், ரமணனோ அந்தப் பிள்ளையாரை திரும்பிப் பாராமலேயே போனார். அவருக்கு இந்தத் 'தெரு பிள்ளையார்' பிடிக்காது. பக்கத்துத் தெருவில் இருக்கும் கோபுரம் - கலசம் என்ற பணக்காரப் பிள்ளையாரிடம்தான், போவார். போனார்.
மிஸ்டர். ரமணன் போகவும், பூசாரி திரைச் சீலையை விலக்கி, கர்ப்பூரம் ஏற்றவும் சரியாக இருந்தது.பிரபஞ்சம் முழுவதும் நட்சத்திரக் குவியல்களோடு, காட்சி காட்டுவது போல் கற்பூர ஜோதி ஒளிர்ந்தது. அதில் அந்த கல்லுப்பிள்ளையார் கரைந்து ஜோதிப் பிள்ளையார் தோன்றியது போல் இருந்தது. இது புரியாத இளங்கோ, வழக்கம் போல் தெருவைப் பார்த்தான். எப்போது இந்த ருக்குமணி வந்தாள்? கோவில் மேட்டுக்குக் கீழே இடுப்பில் உள்ள கூடை தரையிறங்க, ருக்குமணி கண்களை மூடியபடி நின்றாள். அவள் பக்கத்தில் செம்பட்டை முடி கொண்ட ஒரு ஆறு வயதுப் பயல், அம்மாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான்.
ருக்குமணி, விபூதி வாங்குவதற்குக் காத்திராமல் தன்னை தானே பிள்ளையார் என்பது போல் அனுமானித்து நின்ற அந்தப் பூசாரியை ஏறிட்டுப் பார்க்காமலேயே ருக்குமணியை பின்தொடர்ந்தான். பல பக்தர்களும், பக்தைகளும் விபூதி குங்குமம் வாங்குவது பற்றிக் கவலைப்படாமல் முன்னால் போன ருக்குமணியையும், பின்னால் பாய்ந்த இளங்கோவையும், கள்ளத்தனமாய் பார்த்தார்கள்.
இளங்கோவால், ருக்குமணியை அந்த சாலையின் முனையில்தான் பிடிக்க முடிந்தது.
அவள், இன்னொரு தெருவுக்குள் திரும்பும் வரைக்கும், அவள் பின்னாலேயே நடந்தான். பிறகு அம்புபோல் கூர்மைப்பட்ட இரண்டு தெருக்களின் முனையில் அவள் நின்றபோது, அவள் முன்னால் போய் நின்றான். ருக்குமணி, அவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள். பப்பாளிப் பழத்திற்கு கருப்பு வர்ணம் பூசியது போன்ற முகம். வேல் போல் கூர்மையான விரல்கள். சிரிக்கப் போகிறேன் பார் என்பது மாதிரியான குவிந்த உதடுகள். அவனைப் பார்த்ததும் மாராப்பை, சரி செய்தபடியே,‘அறியாத' பிள்ளை- யாண்டானிடம் பேச விரும்பாதவள் போல், அதே சமயம் அவன் பேசினால் பேசித் தொலைக்கத் தயாராக இருப்பது போல் நின்றாள். இளங்கோ கேட்டான் :
"ஒன்னோட... மன்னிக்கணும், உங்களோட இந்தப் பையன் காணாமல் போனவனா... இல்ல..."
"அப்போ நீ அந்த கஸ்மாலம் சாருக்கு, தூதா வந்திருக்கே, இல்லியா? வழிய விடுய்யா."
"எந்த கஸ்மாலம்?”
“அந்தத் தெருவிலே எல்லாமே கஸ்மாலம்தான். ஆனால் அந்த ரமணன் சாரு இருக்காரே, அவரு கஸ்மாலத்துலேயும் படே கஸ்மாலம். அந்தக் கதையே வாணாம்."
“எந்த கதைய?'
"உயிரோட இருக்கிற என் ராமுப் பயல கொஞ்ச நாளைக்கி மறைச்சுவச்சி, காணாமப் போனதா பழையபடியும் போலீஸ்ல சொல்லணுமுன்னு அந்த பெரிய கஸ்மாலம் சொல்லிச்சே, அந்தக் கதையத்தான். பெரிய மனுசனா அவன்? ஒரு பொண்ண வேற பெத்திருக்கான். உயிரோடிருக்கிற இந்தப் பயல, சரோசா என்கிறவ கொன்னாலும் கொன்னுருப்பான்னு போலீஸ்ல சொல்லணுமாம். எப்படி இருக்குது கத? இதுக்கு நீ ஜால்ராவா?"
"காணாமப் போன உன் பையன் கிடைச்சது எப்படி?"
"ஏன்யா, வருத்தப்பட்டுக் கேக்கிற? ஊட்ல என்னோட 'அது...' பாவி - சாராயத்த குடிச்சா ஒயுங்கா குடிக்கப்புடாது? பாதிய வச்சிட்டு, படுத்திட்டு. இந்தப் பயல் என்னாடான்னா, அது தேங்கா தண்ணின்னு குடிச்சிட்டானாம். சின்னப்பாதேவர் படத்துல ஒரு குட்டி யானை சாராயத்தைக் குடிச்சிட்டு அல்லார்க்கும் 'டேக்கா' கொடுக்குமே, அப்படி கொடுத்துட்டான். எப்படியோ பஸ் ஏறி தொரப்பாக்கத்துல கீற எங்க அண்ணாத்த வூட்டுக்குப் பூட்டான். என் அண்ணி என்னடான்னா, நானு, நாலு நாளைக்கி அவஸ்த படட்டுமுன்னு பயல அங்கேயே வச்சிட்டாள். போன வாரம்தான் உட்டாள். இந்தப் பயல காணலன்னு நான் பட்டபாடு, எனக்குத்தான் தெரியும். போலீசுக்குப் போனா, நானுதான் கொயந்தய கொன்னுட்டு அத மறைக்கிறதுக்குப் போனது மாதிரி பிளேட்ட மாத்துனானுங்க.”
ருக்குமணியின் பையன், பழைய நினைப்பாலோ என்னவோ பக்கத்தில் இருந்த ஒரு ஒயின் ஷாப்பையே ஏக்கத்தோடு பார்த்தபோது, இளங்கோ பரவசமானான். என்ன செய்கிறோம் என்பது புரியாமலேயே, அவள் கரங்கள் இரண்டையும் பிடித்துக் கொண்டு, அவளை தாறுமாறாக இழுத்தான். உடனே அவள் கூச்சலிட்ட போது, அந்தக் கரங்களை விட்டு, குழந்தை மாதிரி கெஞ்சினான்.
"ஒருத்திய நிசமாவே கொலைத் தண்டனையிலிருந்து காப்பாத்திட்டேம்மா. ஒன் பையன கொன்னதா, சரோசா என்கிறவளை போலீஸ் பிடிச்சு வைச்சிருக்குது. இப்போ நீயும், நானுமா டெப்டி கமிஷனரைப் பார்த்து நிசத்த சொல்லணும்.”
"இந்த போலீஸ் கதயே வேணாம். கோர்ட்ல வேணுமுன்னா சாட்சிக்கு வாரேன்."
“அப்படிச் சொல்லப்படாதும்மா. உயிரோட இருக்கிற ஒன் கொழுந்தய கொன்னதா சொல்லி, சரோசாவுக்குத் தூக்குத் தண்டனை கிடைத்தால் அந்தப் பழி ஒனக்கில்லயா? ஒருத்தி செய்யாத தப்புக்கு அவஸ்த படணுமா? இந்த அநியாயத்த நாம ரெண்டு பேரும் டெப்டி கமிஷனருக்கிட்ட சொல்ல வேண்டாமா?"
"டெபதின்னா அது யாரு?"
“பெரிய போலீஸ் அதிகாரி.”
"போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை விடவா?”
"Cuba Cuba..."
“இன்ஸ்பெக்டரை விடவா?”
"இன்ஸ்பெக்டருக்கும் மேலே ஏ.சி. அதுக்கு மேலே.டி.சி."
“அம்மாடியோ! அவர கண்ணால பார்க்க முடியுமா?"
“நிச்சயமா...”
பூக்கார ருக்குமணிக்கு, இதயம் குதிபோட்டது, சுற்றுப்புறச் சூழலில் கான்ஸ்டபிளை ஜமீன்தாராகவும், சப்-இன்ஸ்பெக்டரை ராசாவாகவும், இன்ஸ்பெக்டரை ராசாதி ராசாவாகவும் நினைத்துப் பழக்கப்பட்டவளான ருக்குமணி, அவர்களுக்கு மேலே மாரியாத்தா ஒருத்திதான் இருக்க முடியும் என்று நம்பினாள். அவர்களுக்கும் மேலேயும் ஓர் ஆசாமி இருந்தால், அவரைப் பார்த்துத்தான் ஆக வேண்டும் என்பது போல புடவை தூசியைத் தட்டிவிட்டாள். அதே சமயம் ஒருத்தி செய்யாத குற்றத்துக்கு சிறைவாசம் ஆவதற்கு, தானோ தனது குழந்தையோ காரணமாக இருக்கக்கூடாது என்று நினைத்தது போலவும், இளங்கோவையே பார்த்தாள்.
இந்தச் சமயத்தில் பாமா தலைவிரி கோலமாக நடந்து வந்தாள். நொடிக்கு ஒரு தடவை தலை முடியை மேல் நோக்கி தூக்கி விடுகிறவள் கவிழ்ந்த முடியுடன், நிமிர்ந்த பார்வையோடு, அவர்களை நெருங்கி, ருக்குமணியை ஏற இறங்கப் பார்த்தபடியே, இளங்கோவைப் பார்த்துக் கத்தினாள் :
"நான் ஒருத்தி பிள்ளையார் கோவிலில் கல்லு மாதிரி உங்களையே பார்த்துகிட்டு நிக்கேன். அதுக்கு முன்னால, அப்பா டெலிபோன் செய்தவுடனேயே வீட்டுக்கு வந்திடுவீங்கன்னு வாசலுக்கும், புறக்கடைக்குமா அலைஞ்சேன். இங்க என்ன வேல உங்களுக்கு?"
"ஏம்மா, எது பேசணுமுன்னாலும் பக்கத்துல இருக்கிற பீச்சுல போய் பேசுங்க. நான் ஒருத்தி மூணாவது மனுஷி இங்க இருக்கேன்."
ருக்மணி, பூக்கூடையை தூக்கிக் கொண்டே சிரித்தாள். அந்தச் சிரிப்பில் பாமாவுக்குக் கோபமும் போனது, சந்தேகமும் போனது. இதற்குள், இளங்கோ ருக்குமணியின் சாகாத பயல் பற்றியும், மிஸ்டர் ரமணனின் வில்லத்தனம் பற்றியும் பாமாவிடம் விளக்கினான். பிறகு, சரோசாவைக் காப்பாற்ற வேண்டியது, ஒரு தார்மீகக் கடமை என்று வாதாடினான். அவன் சொல்வதை பெரிய மனுஷி போல் கேட்டுக் கொண்டு, பாமா, சம்மா நின்றாள். உடனே ருக்குமணி தனது மகன் தலையை தடவி விட்டுக்கொண்டே ஒரு போடு போட்டாள் :
"சரோசாவோ, கிரோசாவோ... அவ ஜெயிலுக்குப் போனா கடவுளே என்னோட பயல காணாம பண்ணிடுவார். நீங்க ரெண்டு பேரும் கூட சேர்ந்து வாழமுடியாது. என்னம்மா சொல்றே?”
பாமா உடனடியாக ஒரு முடிவுக்கு வந்து, அந்த முடிவுக்கேற்ற தோரணையோடு, பேசினாள் :
"சரி! ஆட்டோவ கூப்பிடுங்க."

