Chapter 15
அண்ணனை வழியனுப்பி வைத்துவிட்டு, அந்த நால்வரும், அந்த விடுதிப் பக்கமாக வந்தார்கள். வரிசையாக உள்ள மூன்று விடுதிகளில் முக்கியமான விடுதி அது. அங்கே வகுப்பறை போல் திறந்தவெளியில் நாற்காலி மேசைகள் போடப்பட்டிருந்தன. ஒரு பாட்டிலுக்குள் கொக்கு மூக்கு மாதிரியான ஸ்ட்ராவை வைத்து உறிஞ்சிக்கொண்டிருந்த இளங்கோவை நின்ற இடத்தில் நின்றபடியே “டாய் ஒன்னத்தான், இங்க வாடா” என்றனர்.
விடுதிக்காரர் எதுவும் நடக்காதது போல், முகத்தை முதுகாக்கிக் கொண்டார். அங்கே உட்கார்ந்திருந்த டூரிஸ்ட்கள் அவன் நண்பர்கள் அவனைக் கூப்பிடுவது போல் நினைத்தார்கள். தலைநிமிர்ந்த இளங்கோ, புரிந்துகொண்டான். அதேசமயம் அவர்களிடம் சரோசாவை. தான்தான் மீட்டுக் கொடுத்தது என்று ஆதியோடு அந்தமாகச் சொன்னால், அவர்களை சமாதானப்படுத்த முடியும் என்று நம்பினான். ஆனாலும் உள்ளே ஒரே உதறல். மெல்ல எழுந்து அவர்களை சிநேகிதமாகப் பார்த்துக் கொண்டு அருகே போனான். அங்கே நிறுத்தி வைத்திருந்த தனது பைக்கில் கையைப் போட்டுக்கொண்டே அவர்களிடம் அவன் பேசப் போனபோது, அந்தக் கும்பல் அவனை மல்லாக்கத் தள்ளியது.
இளங்கோ மட்டும் மல்லாக்க விழவில்லை. அவன் ஆதாரமாகப் பற்றிய பைக்கும் அவன்மேல் விழுந்தது. அவன் அந்த வாகனத்திற்குள் அங்குமிங்குமாய் நெளிந்து கொண்டிருந்தபோது, இரண்டு பேர் வந்து பைக்கை அவனோடு சேர்த்துத் தரதரவென்று இழுத்தார்கள். பிறகு அந்த பைக்கைத் தூக்கி வேறுபக்கமாய் தள்ளினார்கள். இரண்டு பேர் பெரிய பெரிய கற்களை எடுத்து அந்த பைக்கின் சக்கரங்களிலும், கண்ணாடிகளிலும் போட்டார்கள். கண்ணாடிச் சிதறல்கள் அங்குமிங்குமாய் துள்ளின. ஒருவன் சக்கரங்களின் டயர்களில் காற்றைப் பிடுங்கிவிட்டான். வேலை இல்லாமல் இருந்த இரண்டுபேர் லேசாய் தலையைத் தூக்கிய இளங்கோவை முடியைப் பிடித்துத் தூக்கினார்கள். ஒருவன் வாயில் குத்துவிட்டான். இன்னொருத்தன் அவன் இடுப்பிலும் காலிலும் உருட்டுக்கட்டையால் அடித்தான். இளங்கோ சுருண்டு விழுந்தான். இரண்டு கண்களுக்கும் இடையே இரண்டு முட்டிக் கைகளையும் வைத்துக்கொண்டு விழித்தான். சத்தம் போட வேண்டும் என்றோ, எதிர்த்து அடிக்க வேண்டும் என்றோ அவனுக்கு எண்ணம் வரவில்லை. தட்டுத்தடுமாறி எழப்போன அவனை மீண்டும் தரையில் ஒரு உதை கொடுத்துக் கிடத்தினார்கள்.
அங்குமிங்குமாய் நடமாடிக் கொண்டிருந்தவர்கள், சிறிது தொலைவில் ஒன்று சேர்ந்து கும்பலானார்களே தவிர, அந்த ‘உதைக் களத்தை' நெருங்கவில்லை. வேடிக்கை பார்ப்பதுபோல் போன கார்களை, பின்னிருக்கை மனிதர்கள், முன்னிருக்கை டிரைவர்களின் முதுகுகளைத் தட்டி அவசரப்படுத்தினார்கள். பல பெட்டிக் கடைகள் மூடப்பட்டன. சில்லரைக் கடைக்காரர்கள் எதிர்ப்பக்கம் குனிந்து கொண்டார்கள். சில கடைகள் எதுவுமே நடக்காதது போல் அப்படியே திறந்திருந்தன. வீட்டு வேலைகளுக்குப் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பெண்கள், விசனத்தோடு நின்றார்களே தவிர, அந்த அடாவடியை தட்டிக் கேட்கவில்லை. தொலை தூரத்து வீடுகளிலும் உன்னிப்பான இரண்டு கால் கூட்டங்கள். இதற்கள் “ஏண்டா வேடிக்கை பார்க்கிறீங்கோ? போங்களேண்டா சோமாறிங்களா, சோதாப்பசங்களா” என்று இளங்கோவை அடித்தவர்களில் ஒருவன் இளைப்பாறும் வகையில் எகிறியபோது, நெருங்கி நின்ற ஒரு சின்னக் கூட்டமும் சின்னா பின்னமாகியது.
ஆட்டோக்களும், கார்களும், ஆங்காங்கே மனித நடமாட்டமும் மொய்த்த கடற்கதைச் சாலைக்கு அருகேயுள்ள புதர்ப் பகுதியை நோக்கி அவனை காலால் எத்தியெத்தி உதைத்துதைத்து, கால்பந்தை அடிப்பதுபோல் அடித்துக் கொண்டே போனார்கள். பிறகு அவனை தூக்கி நிறுத்தி, அவன் கைகளை இரண்டு பேர் பிடித்துக்கொள்ள, பின்னால் இரண்டு பேர் முதுகில் காலாலும் கையாலும் எகிற, அவனை புதர்ப் பகுதிக்குக் கொண்டு வந்தனர். கருவேல மரச்செடிகள் கொண்ட அந்தப் புதரில் அவனைக் குப்புறத்தள்ளினார்கள். அவன் உடலெங்கும் முட்கள் ஊடுருவின. ஒரு முட்கிளை அவன் வாய்க்குள் புகுந்து பற்களுக்குள் ஊடுருவி நாக்கைத் துளை போட்டது. அப்படியும் விடாமல் அந்தப் ‘போராளிகள்' அவனை பின்பக்க சட்டைக் காலரை கழுத்தோடு சேர்த்துப் பிடித்திழுத்தார்கள். ஒருவன், அவன் தலைமுடியை பிடித்துப் பிடித்து ஆட்டியபோது இன்னொருத்தன் அவனை முட்டிக்கு முட்டி வாங்கினான். போலீசாரிடம் இப்படி சில சமயம் வாங்கிக் கொண்ட அவர்கள், அதே விகிதாச்சாரத்தில் அவனுக்குத் திருப்பிக் கொடுத்தார்கள். அடிக்கு அடி 'சோமாரி, சோதா' என்ற வார்த்தைகள். 'டேய், டாய்' என்ற பிளிறல்கள். எழுதமுடியாத கெட்டகெட்ட வார்த்தைகள். இளங்கோ மூச்சற்று, முனங்கலற்றுக் கிடந்தபோது, ஒருத்தன் அவன் கை கடிகாரத்தைக் கழற்றிக் கொண்டான். டவுசர் பையன் அவன் சட்டைப்பையை கிழிக்கப் போனான். முடியாமல் போனதால், இளங்கோவின் வயிற்றில் காலைப்போட்டு அதை ஆதாரமாக்கிக் கொண்டு, சட்டைப்பையை இழுத்து, அதற்குள் இருந்த ரூபாய் நோட்டுகளைச் சுருட்டி காதில் வைத்துக்கொண்டு, கால்களை எடுத்தான். இன்னொருத்தன் உருட்டைக்கம்பால் அவன் தலைக்குக் குறிபார்த்தபோது, ஒருத்தன் உஷார்படுத்தினான்.
"வாணாண்டா! அண்ணன், நோவடிக்கொடுங்கோ, சாவடி வேண்டாம்னு சொன்னது தெரியாதா? அவர் அப்படிச் சொன்னா அதுல ஏதாவது அர்த்தமிருக்கும்.”
அனைவரும் இளங்கோவை அந்தப் புதர்ச் செடியிலேயே போட்டுவிட்டு, வீரியமாய் நடந்தார்கள். வேர்வையை துடைத்தபடி, நின்று, நிதானமாகப் போனார்கள். ஒருவன் இளங்கோவை நோக்கி மீண்டும் ஓடிவரப் போனான். சகாக்கள் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். இப்போது அவர்களுக்கு நேரமில்லை. சேட்டு வீட்டில் இருப்பவர்களுக்கு வழிகாட்ட இப்பவே கொஞ்சம் சாராயத்தைக் குடிக்க வேண்டும்.
இளங்கோ, மகாபாரதத்தில் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்தது போல் முட்படுக்கையில் கிடந்தான். வாயில் ஒருபக்கம் வெள்ளை வெள்ளையான நுரை. மறுபக்கம் சிவப்புச் சிவப்பான ரத்தம். நடுவில் வெள்ளையும், சிவப்பும் கூட்டணி கொண்ட கலவை. நெற்றிப் பொட்டில் பெரிய பள்ளம். அந்தப் பள்ளத்தில் ரத்த ஊற்று. ஒரு கை . அசைவற்றுக் கிடந்தது. இன்னொரு கை அங்குமிங்குமாய் ஆடியது. கால் பாதங்கள் ரத்தச் சேற்றில் நனைந்து கொண்டிருந்தன. துணியை அடித்துத் துவைத்துப் பிழியாமல் காயப்போட்டது போன்ற தோற்றம். அவனுக்கு ஏற்பட்ட அக்கிரமம் தாங்க முடியாதது போல் ஒரு ஆமணக்குச் செடி கடற்கரைக் காற்றில் ஆடி அவன் முகத்தை வருடிவிட்டது. அருகேயுள்ள எருக்கலைச் செடிகள் வெள்ளை பல்பு மாதிரி பூக்களைக் காட்டியபடி ஒப்பாரியிட்டன. அவனோ பேச்சற்று, மூச்சற்றுக் கிடந்தான்.
அவன் மயக்கமாய் கிடந்த புதர்ப்பக்கமாய் வந்து போன ஸ்கூட்டர்கள் திரும்பிப் போயின. சிறிது தூரம் கடந்துபோய் வேடிக்கையாய் நின்றன. சில கார்கள் இதெல்லாம் சகஜம் என்பதுபோல் சகஜமாய் ஓடின. சில சைக்கிள்காரர்கள் "இந்தாங்கப்பா" என்று சொல்லிவிட்டு நின்றபோது, அடித்தவர்கள் திரும்பிப் பார்த்து, "போயிக்கினே இருய்யா” என்று மிரட்டியதும், உருளைச்சக்கரங்களோடு ஓடிவிட்டார்கள். அந்தப் பக்கமாய் போன 'கால்நடை' மனிதர்கள், அவன் குடித்துவிட்டுக் கிடப்பதாய் நினைத்து "இந்த மாதிரி ஆட்கள் இப்படித்தான் கிடக்க வேண்டும்” என்று பேசிக்கொண்டே போனார்கள். அருகேயிருந்த பலமாடிக் கட்டிடங்களில் ஆண்களும், பெண்களும் வெளியே பால்கனிகளில் வேடிக்கை பார்த்துக்கொண்டே நின்றார்கள். ஒரு கால் கூட, கீழே இறங்கவில்லை.
இளங்கோ மெள்ளமெள்ளச் செத்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. காகங்கள், அவன் உடம்புக்கு மேலே ஆகாயத்தில் மொய்த்தன. அவனைக் கொத்தித் தின்பதற்காக சில ஆங்காங்கே உட்கார்ந்தன. பிறகு அவன் ஈன முனங்கலாய் முனங்குவதைப் பார்த்துவிட்டு, அது அடங்குவதற்காகக் காத்திருந்தன.
அந்தப் பக்கமாய் பூக் கூடையில்லாமல் தலைவிரி கோலமாய் வந்த ருக்குமணி, அப்படியே வாய் பிளந்து நின்றாள். அவன் இளங்கோதானா என்பதுபோல் கிட்டே நெருங்கிப் போனாள். பிறகு "அய்யய்யோ... அய்யய்யோ..." என்று அரற்றினாள். அங்குமிங்குமாய் சுற்றி, அவன் மூக்கில் விரல் வைத்துப் பார்த்தாள். கை லேசாய் சுட்டது போலிருந்தது. அருகே பலமாடிக் குடியிருப்புகளில் பால்கனிகள் மேல் திடீர் அவதாரம் எடுத்தவர்களை நோக்கி, கைகளை ஆட்டி 'வாங்கோ... வாங்கோ' என்று சமிக்ஞை செய்தாள். அந்தத் தலைகள் உடனே மறைந்தன. அந்தச் சாலையில் போய்க்கொண்டிருந்த வாகனக்காரர்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள். அவர்கள் லாகவமாக ஒதுங்கிக்கொண்டார்கள். சில கார்க்காரர்கள் திட்டிக்கொண்டே போனார்கள். “குடிகாரப் புருஷனுக்கா வக்காலத்து வாங்குறே?” என்று வேறு வக்கணை பேசிக்கொண்டு நிற்காமலே ஓடினார்கள்.
பூக்கார ருக்குமணிக்கு, கண்டும் காணாமல் போன அந்த யந்திர மனிதர்களின் கோழைத்தனம் தனது துணிச்சலுக்கு உரமாகி மனதுள்ளே பூத்திருக்கும் மனித நேயத்திற்கு உருவமாகியது. சேலையை வரிந்து கட்டிக்கொண்டு, அவன் தலையை நிமிர்த்தினாள். பிடரியில் துளைத்த முட்களை செடியோடும், கொடியோடும் ஒடித்துப் போட்டாள். ஆனாலும், பல முட்கள் அவன் உடம்பின் பல இடங்களில் கொள்ளுமாதிரி கறுப்புக்கறுப்பாய் கண் சிமிட்டின. ஒரு சப்பாத்திக்கள்ளி முள், செருப்புப் போடாத தனது கால்களைத் துளைப்பதையும் பொருட்படுத்தாது ருக்குமணி அவனை தூக்கப் போனாள். சப்பாத்தி முள்ளால் கால் துடித்தது. அதை எடுப்பதற்குக் குனித்தாள். அப்படிக் குனிந்தால் அவனை அப்படியே மீண்டும் புதர்ச் செடியில் மல்லாக்க வீழ்த்த வேண்டும். அவள் பல்லைக் கடித்துக்கொண்டு அந்த வலியைப் பொறுத்துக் கொண்டாள். சப்பாத்திமுள்ளின் கோரப் பற்களில் காலை குடியேற்றிக் கொண்டே, இளங்கோவை தன் பக்கமாய் இழுத்து, அருகில் உள்ள மணற்பரப்பில் போட்டாள். தொலைவில் ஒரு கூட்டம் தென்பட்டது. தலையில் கூடைகளோடு வந்துகொண்டிருந்த அந்தக் கூட்டத்திற்காக, அவள் காத்திருந்தாள்.
ருக்குமணி, 'டப்டப்' என்ற சத்தம் கேட்டுத் திரும்பினாள்.
பாவாடை தெரிய, சேலையையே தாவணி மாதிரி கட்டியிருந்த ஒருத்தி, அங்கே வந்து நின்றாள். முழங்கை வரைக்கும் நீண்ட சட்டைக்காரி; மோவாயை அட்டகாசமாய் அங்குமிங்குமாய் ஆட்டியபடியே ருக்குமணிக்குப் புத்திமதி சொன்னாள்:
"இந்தாம்மா... இவன் என்ன செய்தானோ, ஏது செய்தானோ? எந்தப் பசங்களோ இவன செம சாத்தா சாத்திட்டுப் போயிட்டானுங்க. உனிக்கி இன்னாச்சு? நீதான் இத அடிச்சுப்போட்டுட்டு அழுகிறது மாதிரி நடிக்கேன்னு போலீஸ் புடுச்சிட்டுப் பூடும்மா; போலீசுக்குக் குற்றவாளி முக்கியமில்ல; குத்தஞ் செஞ்ச இடத்துல நிக்கறவனுகதான முக்கியம். பேசாம போய்க்கினே இருப்பியா... அய்ய! ஒன்னத்தாம்மே..."
கீழே உட்கார்ந்து, இளங்கோவின் உச்சந்தலையிலிருந்து கொட்டிய செந்நீரைத் துடைத்துக் கொண்டிருந்த ருக்குமணி ஆவேசப்பட்டு எழுந்தாள். இடுப்பின் இருபக்கமும் கைகளை வில்போல் வளைத்துக் கொண்டு, வாய்க்கு வெளியே நாக்கை அம்புபோல் நீட்டிக்கொண்டு தெனாவட்டாய் நின்றவளையும், மாடிக் குடியிருப்புகளில் மறைந்து நின்று வேடிக்கை பார்ப்பவர்களையும் மாறிமாறிப் பார்த்தபடியே கத்தினாள்:
"ஏம்மா, இந்த அநியாயத்த பார்த்துட்டு போயிக்கினே கீறதுக்கு நான் என்ன பங்களாக்காரியா? அடேய்! பங்களா பசங்களா! பண்ணிப் பயல்களா! இந்த உடம்புகள வெச்சிக்கிட்டு ஏண்டா நிக்கிறீங்க? ஒருத்தன் நாய் மாதிரி நடுரோட்ல கெடக்கான்... அவனை என்னான்னு வந்து பார்க்கப்பிடாதாடா? இதேமாதிரி ஒரு நாய் செத்துக் கிடந்தாகூட உடனே கார்ப்பரேஷனுக்கு போன் பண்ணுவீங்களேடா... ஒரு மனுஷனுக்கு ஏண்டா செய்யமாட்டேங்கிறீங்க? அல்பங்களா!”
பூக்கார ருக்குமணி ஆங்காரியாய், ஓங்காரியாய் நடுச்சாலையில் தாண்டவமாடினாள். மாடி வீட்டுக்காரர்களுக்குக் கேட்க வேண்டும் என்பதுபோல் அந்தக் குடியிருப்புப் பகுதிக்கு ஓடியோடிப் போய் திட்டினாள். அவள் கையாட்டியும் நிற்காமல் போன ஒரு அம்பாசிடர் கார்மீது கல் எறிவதற்காகக் கீழே கூடக் குனிந்தாள். பிறகு, மேலே தென்பட்ட குடியிருப்புக்காரர்களைப் பார்த்து "நீங்க நாசமாப்போக! நீங்க சாகும்போது ஒங்கப் பொணத்துல ஒரு பூக் கூட விழாது" என்றாள். பின்பு செய்வதறியாது திகைத்து நின்றாள்.
அங்கே வந்துநின்ற பெண், ருக்குமணியின் போக்கால் அதிர்ந்து போனாள். லேசாக இளகிய மனதை பலவந்தப்படுத்திக் கொண்டு, "ஏய், ஒன்னத்தான், பேசாம போயிக்கினே இரும்மே" என்றாள்.
ருக்குமணி வெடித்தாள் : "நான் என்ன எருமக்கடாவாடி ‘மே..'ங்கறே? இந்தப் பிள்ளாண்டானப்பத்தி ஒனக்குத் தெரியுமாடி? இதுக்கும் ஒரு சேரிப் பொண்ணுக்கும் தகராறு வந்து, அந்தப் பொண்ண, இது போலீசுல ஒப்படைச்சுது. போலீஸ்காரனுங்க என்னடான்னா அந்தப் பொண்ணுதான் என் குழந்தையக் கொன்னதா வழக்கு ஜோடிக்கப் போனாங்க. இது அநியாயம்னு தெரிஞ்ச இந்தப் பிள்ளாண்டான், பெரிய போலீஸ் ஆபீசருக்கிட்ட என்னையும், கட்டிக்கப்போற பொண்ணையும் கூட்டிக்கினுப் போயி, அந்தச் சேரிப் பொண்ணுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்து. இன்னாப் பிரயோசனம்? கட்சீல, அந்த இன்ஸ்பெக்டர் சொன்னாப்புல அந்த ரத்தக்காட்டேரி - நன்றிகெட்ட நரி - அதான் அந்த சரோசாவோ, கிரோசாவோ, இந்தப் பிள்ளாண்டான ஆள் வைச்சி அடிச்சி, இப்படி அக்கிரமம் பண்ணிட்டாள் இந்த மவராசன் கொக்குக் கொத்தின நண்டு மாதிரி துடிக்குது. எப்படி இத அம்போன்னு விட்டுட்டுப் போக முடியும்?"
ருக்குமணி விம்மினாள். அங்கே நின்றவள், கைகளை நெறிப்பதையோ, இளங்கோவின் பக்கம் நெருங்கி அவனை மவுனமாகப் பார்ப்பதையோ, இவள் சரியாகக் கவனிக்க- வில்லை: இதற்குள் மீன்காரப் பெண்களும் அங்கே கூடிவிட்டார்கள். கூடைகளை இறக்கி வைத்துவிட்டு, அவற்றை காகங்கள் துழாவுவதையும் பற்றிக் கவலைப்படாமல், இளங்கோவின் பக்கம் போனார்கள். ஒருத்தி ஆலோசனை சொன்னாள் :
"உசிரு இழுத்துக்கிட்டுக் கெடக்குது. உடனே ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கிட்டுப் போனா பிழைச்சுக்கும். பாவம் இந்த பையனப் பார்த்தா அடாவடி மாதிரி தெரியல. இவன அடிச்சுப் போட்ட கம்மனாட்டிங்க மட்டும் என் கையில கெடச்சா மீன் முள்ளாலேயே அவங்கோ கண்ணக்குத்தி வெளியில இழுத்தப்பூடுவேனாக்கும். இப்போ காட்டி ஆசுபத்திரியில சேக்காக்காட்டி உசிரு பூடும்."
எல்லாப் பெண்களும் சேர்ந்து அந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த ஆட்டோக்களையும், வாடகைக் கார்களையும் கையாட்டி, காலாட்டிப் பார்த்தார்கள். இறுதியில் ஒரு வேன் வந்து நின்றது. முன்னால் டிரைவர் இருக்கை கொண்ட கூண்டும், பின்னால் தார்பாய் மேல்வாக்கில் படர்ந்த ஒரு சின்ன வேன். அதற்குள் காய்கறிகள் மூட்டை மூட்டையாகக் குவிந்து கிடந்தன. ஏழெட்டுப்பேர் அந்த மூட்டைகளுக்கும், கூடைகளுக்கும் இடையே விரவி நின்றார்கள். மணல்மேட்டில் கிடப்பவனைப் பார்த்ததும், "தூக்கித் தாங்கோ, தூக்கித் தாங்கோ” என்றார்கள். கீழே நின்ற பெண்கள் இளங்கோவை ரத்தம் சிந்தத் தூக்கி மேலே கொடுக்க, அங்கே நின்றவர்கள் வாங்கிக் கொண்டார்கள். ஒரு மூட்டையில் அவன் தலையை ஒருக்களித்து சாய்த்து உட்கார்ந்த நிலையில் வைத்தார்கள். அந்த டெம்போ வண்டியில் ருக்குமணியும் ஏறிக்கொண்டாள். அங்கே நின்ற பெண்ணும் "நானும் ஒத்தாசைக்கு வாரேன்க்கா" என்று சொல்லியபடியே ஏறிக்கொண்டாள்.
அந்த வேன், கருண்டு வளைந்து ஓடியது. அங்கேயிருந்தவர்கள் ஏதோ பெரிய காரியம் செய்துவிட்டோம் என்ற பெருமிதமில்லாமல் அவனைப் பார்த்தார்கள். வெயிலில் காய்ந்து உறைந்து போயிருந்த ரத்தத்துண்டுகளைக் கண்டார்கள். கத்தரிக்காய் காம்பு ஒன்று அவன் பிடரியில் குத்தியதைக் கண்ட ருக்குமணி ஒரு கையை பின்னால் கொண்டுபோய் அவன் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டாள். வேறுவழியில், போகப் போன வேன் டிரைவரை அந்த இருக்கையின் பிடரியில் தட்டித்தட்டி திரும்ப வைத்துப் பேசினாள்.
"இந்தப் பிள்ளாண்டான் எனக்குத் தம்பி மாதிரி. பெரிய இடத்துப் பிள்ளை. கொஞ்சம் அப்பால இதோட வீடிருக்கு. அங்க போய் அவங்கக்கிட்ட சொல்லணும். அப்புறமா ஆகவேண்டியதப் பார்க்கலாம். அண்ணாத்தே ஒன்னத்தான், வண்டியத் திருப்பு.”
பூக்காரப்பெண்ணுக்கு உதவியாக வேனில் ஏறியவள் இப்போது மிரண்டாள்.
நல்ல வேளையோ, கெட்ட வேளையோ கடிகாரம் கட்டிய ஒரு லுங்கிக்காரன் ருக்குமணிக்குப் புத்தி சொன்னான்:
"முதல்ல, இந்தப் பையன ஆசுபத்திரியில சேர்த்துடணும். நாம லேட் பண்ணுற ஒவ்வொரு நிமிஷமும் இவன் உயிரு போய்கிட்டிருக்கிறதா அர்த்தம். ஏதோவொரு ஆசுபத்திரியில சேர்த்துட்டு, அப்புறமா அவங்க வீட்டுல போய் சொல்லிடு. இப்ப வீட்டப் பார்த்துப் போனா அப்புறம் அந்தப் பையன் காட்டப் பார்த்துப் போக வேண்டியிருக்கும்."
வண்டி லேசாய் நின்றது, பிறகு கடிகாரக்காரன் சொன்னால் சரியாக இருக்கும் என்பதுபோல் அது வேறு பக்கமாய் திரும்பி ஓடியது. ருக்குமணியும் யோசித்தாள். ‘அந்த வீட்டிற்குப் போனால் அந்தம்மா இருக்காங்களோ மாட்டாங்களோ, அதுக்கு வாச்சிருக்கிற பொண்ணு செத்தாக்கூட அழத்தெரியாத மடச்சாம்பிராணி. முதல்ல, இதக் காப்பாத்தணும். அப்பால மற்றத பாத்துக்கலாம்!'
ருக்குமணி, அந்த வேன்வாசிகள் கேட்கும் முன்பே நடந்தவற்றை கோபாவேசமாகக் கண்களைக் கசக்கிக்கொண்டும், இடையிடையே திணறிக்கொண்டும், இதற்குக் காரணமான குப்பத்துக்காரியை வாய்க்கு வந்தபடி வைதுகொண்டும் விளக்கிக் கொண்டிருந்தாள். அதோடு, தனது பையன் எப்படிப் பெரிய போலீஸ் அதிகாரி முன்பு சமர்த்தாக நின்றான் என்பதையும் லேசாகச் சொல்லி வைத்தாள். பிறகு, அவர்களுடைய கதையையும் கேட்க வேண்டும் என்பதற்காக ஒரு கேள்வி கேட்டாள்:
"ஆமா, பத்து மணிக்குள்ளே காய்கறி வேனுங்க வந்துடும். நீங்க ஏன் லேட்டு?"
ஒரு பழக்காரம்மா தனது முகத்தை அழுகிய பழம் போல் ஆக்கிக்கொண்டு பதில் சொல்லப் போனபோது, கடிகாரம் கட்டிய லுங்கிக்காரன் முந்திக்கொண்டான் :
“அத ஏன் கேக்குற? அநியாயம் அக்கிரமம்... என்னோட விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து இப்படி கூத்து நடக்கிறது தெரிஞ்ச கத தான். ஆனா, இப்போ நடக்குறதோ தாங்க முடியாத கூத்து. இன்னிக்கிக் கோட்டையில சர்வகட்சி தலைவர்களோட கூட்டமாம். தலைவருங்க .வாராங்கன்னு போலீஸ்காரங்க எங்கள தலையெடுக்கவிடாமப் பண்ணுறாங்க. பாரிமுனையில ஒன்பது மணிக்குப் புறப்பட்ட இந்த வேனை, பாலத்துக்குப் பக்கத்துல ஒருமணி நேரமா காக்கப் போட்டாங்க. அப்புறம் ஒருத்தரு கோட்ட ஸ்டேஷனுக்குப் போற பாலம் வழியா போகச் சொன்னாரு. பல் ஆஸ்பத்திரிக்கிட்ட வந்தப்போ ஒரு போலீஸ் ரைட்டுல போகச் சொன்னாருன்னு வேனை விட்டோம். அந்தப் பக்கம் நின்ன இன்னொருத்தர் லெப்டுல போகச் சொன்னாருன்னு வேனை ஒடிச்சோம். லெப்டு போலீசும் திட்டுது, ரைட்டு போலீசும் திட்டுது. நடுவில் வந்தா இன்னொரு போலீசும் டிரைவரை அடிக்க வருது... பதில் சொல்றதை, எதிர்த்துப் பேசுறதாய் நினைத்து. மூணுமணி நேரமா காஞ்ச கருவாடாப் பூட்டோம். அய்யோ, ஏழபாழன்னா இந்தப் போலீஸ்காரங்க குதிக்கிற குதி..."
"எய்தவன் இருக்கப்போ, அம்ப நோகறதுல என்ன பிரயோசனம்?”
"தாய் எட்டடி பாஞ்சால் குட்டி பதினாறு அடி பாயுற கத. தலைவர்களுக்குப் பாதுகாப்புத் தேவதான்... இல்லங்கல. ஆனாலும் சினிமாக்காரன், ஒருத்தன வீரமா காட்டுறதுக்கு ஒன்பது பேரை பேடியாக்குறது மாதிரி, அவங்களோட பாதுகாப்புக்கு தல காஞ்சவங்கதான் கிடைச்சாங்களா? டெய்லி இப்பிடி காக்க வெச்சா, நம்ம பொழப்பு என்னாவறது? இப்பவே மணி ஒன்னு, காய்கறி வாடிப்பேச்சி; பழம் வேற அழுகிடும். அடக்கடவுளே!”
"பேசாம ஒவ்வொரு தலைவருங்க வீட்டுமுன்னாலயும் அழுகிப்போன பழங்களக் கொட்டணும். தலைவருக்காக மக்களா, மக்களுக்காக தலைவரான்னு நேருக்கநேரா கேள்வி கேக்கணும். ஆனா, போலீசு எங்க விடுவான்? இப்படிப் பொலம்பறதோட சரி." "ஆயா, பஸ்சுல வருவே, இப்ப ஏன் வேனுல வரே?”
"லக்கேஜு மூணு ரூபா... டிக்கெட்டு இரண்டு ரூவா. நான் என்ன கூடையில சாராயக்கேன வச்சி, அந்த வாசனைய மறைக்கிறதுக்கு கருவேப்பலையப் போட்டு மூடியா கொண்டு வாரேன், கேக்கிறத கொடுக்கறதுக்கு? பாவம் இந்த வேன் புள்ளாண்டான் பரிதாபப்பட்டு எல்லாத்துக்கும் மூணுரூவா போதும்னு சொல்லிட்டான்"
வேனில் இருந்த அந்த ஏழைபாழைகள் இப்படி பல்வேறுவிதமாகப் பேசிக்கொண்டே போனார்கள். அவ்வப்போது லேசாய் மூச்சுவிட்டுக் கொண்டிருந்த இளங்கோவையும் பார்த்துக் கொண்டார்கள். ருக்குமணி அவ்வப்போது இளங்கோ உடம்பில் பீறிட்ட ரத்தங்களை முந்தானையால் துடைத்துக் கொண்டிருந்தாள். கருவேப்பிலையில் சில ரத்தத் துளிகள் பட்டன. ஆயா, அந்த இலைக்காம்பை ஒடித்து வெளியே போட்டாள்.
அந்த வேன், ஒரு மருத்துவமனை முன் நின்றது. அந்த மருத்துவமனைக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியாத வண்ணம் கறுப்புக் கண்ணாடிகள் சுவர்களாக இருந்தன. ருக்குமணி, அந்த வேன்வாசிகளை கையெடுத்துக் கும்பிட்டபடியே "பாம்புக்கு பாம்பின்கால் தெரியும் என்பது மாதிரி, ஏழைக்கு ஏழை ஒத்தாசை செய்தீங்க” என்றாள். உடனே கடிகார லுங்கி “ஒன் உதாரணம் சரியில்லே!" என்றான். “நாம என்ன பாம்புங்களா? அரசாங்கப் பூனை பிடிக்கிற எலிங்க...” என்றான்.
அந்த வேனிலிருந்து ருக்குமணியும், அவளுக்குத் தோழியாக வந்தவளும் கடிகார லுங்கியும் இளங்கோவை கீழே இறக்கப் போனபோது, அந்த மருத்துவமனையின் முகப்பில் நின்ற காரில் ஏறப்போன ஒரு ஸ்டெதாஸ்கோப் மனிதர், அங்கே வந்தார். அவர்கள் உள்ளே வந்துவிடக் கூடாது என்பதற்காக அவரே வெளியே வந்தார். பணக்காரர்களுக்கு காலில் ஒரு முள் குத்தினாலும் அவர்களைப் படுக்க வைத்து ரத்தப் பரிசோதனை, சிறுநீர் சோதனை, எச்சில் சோதனை, எக்ஸ்ரே, தேவைப்பட்டால் ஸ்கேனிங் என்று முள்ளை எடுப்பதற்குப் பதிலாக அந்த முள்ளை காலிலிருந்த கண்ணுக்குள் தள்ளிவிட்டு விடும் அந்த டாக்டருக்கு அந்த அன்னக்காவடிகளின் கையிலிருந்த கேஸ் தேறாதது போல் தோன்றியது. கேஸ் தேறினாலும் 'காஷ்' தேறாது. அவர் கத்தினார்:
"என்னய்யா வேணும் உங்களுக்கு?"
"இவருக்குக் காயம், ஆக்சிடென்ட், இல்லயில்ல... அடிபட்டுட்டு... தப்பு தப்பு. அடிச்சிட்டாங்க."
"போலீசுக்குக் கொண்டுபோக வேண்டிய கேச எதக்குய்யா ஆசுபத்திரிக்கி கொண்டு வறீங்க? இவர இங்க சேர்த்துட்டு, நானும் கோர்ட்டு கோர்ட்டா அலையணுமா? இவர நீங்களே அடித்துக் கொண்டு வந்திருக்கு மாட்டீங்க என்கிறது என்ன நிச்சயம்? போலீசுக்குப் போய் அப்புறமா கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போங்கோ."
"அது எங்களுக்குத் தெரியும்.”
"தெரிஞ்ச பிறகும் இங்க எதுக்கு வந்தீங்க?”
"வேன்ல வந்தா இப்படிப் பேசிடுவீங்க. ஏர்-கண்டிஷன் கார்ல வந்தா இப்படிப் பேசுவீங்களா?”
"யோவ், மரியாதையா போறீங்களா, இல்ல நானே போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்யவா?”
“அந்த வியாபார டாக்டர் அப்படிச் செய்தாலும் செய்வார் என்று பயந்துபோன வேன்காரர்கள், இளங்கோவைத் தூக்கி பழையபடியும் கத்தரிக்காய் மூலையில் கிடத்தினார்கள். ஆனாலும், அந்தக் கடிகார லுங்கிக்காரனுக்கு மனம் கேட்கவில்லை. கோபம் அடங்கவில்லை. வேன் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தபோதே அவன் கத்தினான் :
"யோவ் டாக்டரு! நீயெல்லாம் ஒரு டாக்டரா? பேசாம கழுத்துல கிடக்கிற ஸ்டெதாஸ்- கோப்புலயே தூக்குப் போட்டுச் சாகவேண்டிய ஆளு நீ."
அந்த வேன் துள்ளிக்குதித்து ஓடியது. பெரும்பாலான சாலைகளில் ரக்கைக் கட்டாமலேயே பறந்தது. இருபத்திநான்கு மணிநேர கிளினிக்குகளும், அரிமா சங்கங்கள் நடத்தும் சமூகசேவை மருத்துவமனைகளும் வழியடைத்தன. பெரிய பெரிய மருத்துவ மனைகளை நெருங்குவதற்கு இந்த வேனுக்கு பயம். "இதற்கு மேலும் வண்டியை ஓட்ட டீசல் இல்லை” என்று டிரைவர் உள்ளேயிருந்து கத்தினார். இந்தச் சமயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் ருக்குமணியைப் பார்த்தபோது அவளுக்குத் தோழியாகத் தன்னைத்தானே நியமித்துக் கொண்டவள் “அந்தண்ட நிறுத்துங்க” என்றாள். அவள் சொன்ன இடத்தில் ஒரு பாடாவதி மருத்துவமனை.
ருக்குமணியும் அந்தப் பெண்ணும் காய்கறிக்காரர்கள் தூக்கிக் கொடுத்த இளங்கோவை தாங்கிப் பிடித்துக் கொண்டார்கள். பிறகு அவனை தங்களது தோள்களில் போட்டபடியே அந்த மருத்துவமனையின் ஒரு கல் தூணில் சாய்த்தார்கள். ருக்குமணி அவளைப் பார்த்து சேர்க்காட்டா" என்றாள். உடனே அந்தப் பெண் "சேர்க்க வைக்கிறேன் பார்" என்றாள். இதற்குள் ஒய்யாரமான மூன்று நாற்காலிகளில் ஒரு தலை மேலே தென்பட்டது. வரவேற்புப் பெண் கத்தினாள் :
"என்ன வேணும்? போங்கப் போங்க! இதென்ன சத்திரமா, சாவடியா?"
அந்தப் பெண் போட்ட சத்தத்தில் அவளுக்கு அருகேயுள்ள நாற்காலியில் உட்கார்ந்து ஆர்ச் மாதிரி இருந்த மேசையில் தலையைப் போட்டுக்கொண்டிருந்த ஒரு முப்பது வயத ஆசாமி நிமிர்ந்தான்.அவனுக்கு சிகிச்சையளிக்கவே ஒரு முழு மருத்துவமனை தேவை. அந்தப் பெண்ணை அடையாளம் கண்டுகொண்டு அவள் பக்கமாக வந்தான்:
"அடேடே, நீயா? என்னம்மா விஷயம்? யார் இது?"
"ஸ்பெஷல் இருக்குண்ணே. ஒனக்குன்னு நாலு கிளாச எடுத்து வச்சிருக்கேன்."
"சித்த நேரத்துலவந்துடறேன். டாக்டர் ரவுண்டு முடியட்டும்."
"அப்புறம் அண்ணே.. இது பெரிய இடத்துப் பிள்ளாண்டான். எப்படியோ ஏடாகூடமா நடந்துட்டு. நீதாண்ணே இங்கசேக்கணும்.”
“அதெப்படி, நான் என்ன டாக்டரா?"
"இந்தாண்ணே ஐம்பது கொடுக்கணும்னா கொடுத்து..."
"சரி, ஓசப்படாம நில்லு. ரூம் ரெடி பண்ணிட்டு, கொடுக்க வேண்டியவங்களுக்குக் கொடுத்துட்டு வாறேன்.”
அந்த நோஞ்சான் பேர்வழி தூணில் சாய்த்து வைக்கப்பட்ட நோயாளியை ஒருதடவை திரும்பிப் பார்த்துவிட்டு மாடிப்படிகளில் ஏறினான். அந்த ஐம்பது ரூபாயும் அவனுக்குத்தான் என்பது அவளுக்கும் தெரியும். ஆனாலும் அவன் சுயமரியாதையை குந்தகப்படுத்தாமல் பேசியதில் அவளே பெருமைப்பட்டாள். 'அடடே... எனிக்கிக்கூட புத்தியிருக்கே...
இதற்குள் ஐந்து நிமிடத்தில் அந்த ஆசாமி கீழே வந்துவிட்டான். அவன் பின்னால், இரண்டு பையன்கள் ஸ்டெச்சரோடு வந்தார்கள். அவர்கள் இளங்கோவை அந்த ஸ்டெச்சரில் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்த போது அந்த ஆசாமி சரோசாவிடம் சாவகாசமாகப் பேசினான் :
"இந்த நர்சிங்ஹோமில் கிரவுண்டுல ரூம் கிடையாது. மாடியிலதான் பேஷன்ட் பார்க்கிறாங்க. யாராவது ஹார்ட் பேஷன்ட்டா இருந்தா அவங்களையும் ஸ்டெச்சர்ல தூக்கிக்கிட்டு மாடிப்படி வழியா நடந்து போகணும். அப்பவே அந்த ஆசாமி டொக்குனு போயிடுவான். லிப்ட் இல்லாம நர்சிங்ஹோம் மாடி இருக்கக் கூடாதுங்கிறது சட்டம். ஆனால் இந்தக் காலத்துல சட்டமா பேசுது? காசில்லா பேசுது? அப்புறம் சரோசா, அந்த ஸ்பெஷல் இருக்குமா இல்ல வேற யாராவது..?"
"ஒனக்குன்னு வெச்சத ஒனக்குத் தாரேண்ணே. சும்மா ‘கும்’முன்னு இருக்கும். அப்புறண்ணே, இந்தப் பிள்ளாண்டான நல்லாக் கவனிக்கணுமுண்ணே.”
பூக்கார ருக்குமணி அவளை இப்போது ஸ்பெஷலாகப் பார்த்தாள். சந்தேகம் இல்லை... அதே தத்தேறி முண்டதான். போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியில இதோ ஸ்டெச்சருல கிடக்குற பிள்ளாண்டானும், அதுக்கு சம்சாரமாய் வாரவளும், நானும், இளநீர் குடிக்கப்போ இவள சரியாப் பார்க்கல; அப்போ பைஜாமா, இப்போ சேலை. இவள விடப்பிடாது.
ருக்குமணி ஆகாயம் அதிர்வதுபோல் கத்தினாள் :
"ஏண்டி, எச்சிக்கல நாயே! கொழுந்தையையும் கிள்ளி, தொட்டிலயும் ஆட்டறீயா? அரகொற உயிரோட துடிச்சிக்கிட்டு இருக்கிற இந்தப் பிள்ளாண்டான விஷ ஊசி போடணும்னு இந்த எச்சிக்கல ஆஸ்பத்திரியில சேர்க்கப் பார்க்கிறீயா? மவளே! ஒன்ன விடமாட்டேன்டீ. நீ ஜெயிலுல கம்பி எண்ணாம இருக்க முடியாதுடி."
ருக்குமணி ஆவேசப்பட்டாள். மாடிப்படிகளில் ஸ்டெச்சரில் சவாரி செய்து கொண்டிருந்த இளங்கோவின் பக்கம் ‘குய்யோ முய்யோ' என்று கத்திக்கொண்டே ஓடினாள். அந்த ஸ்டெச்சரைப் பிடித்து இழுத்தாள்.
end of chapter 15

