Chapter 12

சரோசா விடுதலையாகி ஒரு வாரம் ஓடி விட்டது. இளங்கோ, அவளை இப்போது மறந்து விட்டான். அவள் விடுதலையானதைக் கேள்விப்பட்டு, பாமாவின் தந்தை மிஸ்டர். ரமணன்தான், துள்ளினார். அவருக்கு, அவள் விடுதலையாகி விட்டாள் என்பதை விட, புத்திசாலியான தனது மகளும், மக்குசாமியான கப்பையாவின் மகனும், தனது முதுகுக்குப் பின்னால் இப்படியொரு விடுதலையை வாங்கிக் கொடுத்து விட்டார்களே என்ற கோபந்தான். ஒருவேளை இந்த இருவரும் அவரையே இந்திரன் சந்திரன் என்று துதிபாடியிருந்தால், அவரே முன்னால் நின்று சரோசாவை விடுவிக்கப் பாடுபட்டிருப்பார். என்றாலும், பாமா,தனது வருங்காலக் கணவன் மீது பட்டாக்கத்தி பாயக்கூடாது என்ற பயத்தில் சரோசாவை விடுவித்தாக மறைமுகமாய் சொன்னதை ரமணன் நேரிடையாகவே புரிந்து கொண்டார். 'டா' போட்டுப் பேசும் இளங்கோவை ‘நீங்க.. நாங்க' என்று மரியாதை போட்டுப் பேசத் துவங்கி விட்டார். சங்கத்துக்காரர்கள் கமிஷனரிடம் எப்போது போகலாம் என்றார்கள். அதற்கு ரமணனோ, தானே கமிஷனரை நேரிடையாகச் சந்தித்து சங்கத்தின் தீர்மானத்தைக் கொடுத்து விட்டதாக பொய்யளந்தார். இதனால் அவர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உறுப்பினர்களுக்கு ஒரு ஆசை. ஆனால், உறுப்பினர் பதவியை புதுப்பிப்பதற்கு ஐந்தாறு ஆண்டு சந்தாக்களை கட்டியாக வேண்டும். போயும் போயும் ஒரு துப்புக்கெட்ட சங்கத்தின் விவஸ்தைகெட்ட தலைவரான ரமணனை இறக்குவதற்கு அவர்கள் காசு செலவழிக்கத் தயாராக இல்லை. பாக்கியம்மாவும், பாமாவின் உபதேசத்திற்குப் பிறகு, முக்கி முனங்கி வழிக்கு வந்தாள். இப்படி எல்லோரும் எல்லாம் முடிந்து விட்டதாக நினைத்த போது...

இளங்கோ, வழக்கம்போல் பைக்கில் ஏறினான். அலுவலகங்கள் துவங்கும் நேரம் பஸ் நிலையத்தில் நிற்கும் பாமா இந்நேரம் கத்திக் கொண்டிருப்பாள். கடந்த ஒரு வார காலமாக, இந்த பாமா பஸ்ஸில்தான் போகப் போவது போல ஒரு பாசாங்குடன் வீட்டிலிருந்து புறப்படுவாள். இளங்கோவின் வீட்டைப் பாராமலே போவாள். பிறர் சந்தேகப்படக்கூடாது என்பதற்காக எதிரே வருகிற பஸ்களைக் கூட தனது பஸ்தானா என்பது போல் உற்றுப் பார்ப்பாள். இந்தப் பையன் இளங்கோவும், தற்செயலாய் பஸ் நிலையம் பக்கம் பைக்கில் போவது போலவும், அங்கே அப்போதுதான் அவளைப் பார்ப்பது போலவும், வேறு வழியில்லாமல் அவளை ஏற்றிக் கொண்டு போவது போலவும், ஒரு சின்ன செட்அப். இது நன்றாகத்தான் செயல்பட்டு வருகிறது. இன்றைக்கு கொஞ்சம் லேட். அம்மாவும் தங்கையும் நடத்திய வீட்டு பெரும்போரில் அவனே ஒரு ஐ.நா. வாக மாறி, தீர்க்க வேண்டிய நிலைமை.

இளங்கோ, சக்கரங்கள் கழலாமல் அவை அப்படியே நிற்பது போன்ற அசுர வேகத்தில் பைக்கை பாயவிட்டான். அந்த கிராஸ் தெருவைத் தாண்டி, பிரதான சாலைக்கு வந்து, வலது பக்கமாக வண்டியைத் திருப்பியபோது, பழைய முனுசாமி இரண்டு கைகளையும் முறுக்காய் விரித்துப் போட்டு, பிறகு, காக்காய் இறக்கைகளை ஆட்டுவது போல இரண்டு பக்கமும் கைகளை ஆட்டி வண்டியை நிற்க வைத்தான். அவன் தள்ளாடித் தடுமாறி நின்றிருந்தால் இளங்கோ வண்டியை வேறு பக்கம் திருப்பி விரைந்திருப்பான். ஆனால், முனுசாமியோ நிதானம் இழக்காமல் நின்றான். கண்களால் காரணம் கேட்ட இளங்கோவிற்கு அவன் பதிலளித்தான் :

"இன்னடா, சரோசா கொடுத்த சாராயத்துல நம்மள அம்போன்னு விட்டுட்டு அலாக்கா படுத்த முனுசாமி இப்போ முழுசா வந்து நிக்றானேனு பார்க்கிறியா? நானு வேணுன்னுதான் அப்படி நடிச்சேன். ஒரு மூட்டைப் பூச்சியை நாமே நகக்குறப்போ அது செத்தது மாதிரி சுருண்டு கீழே அப்படியே கெடக்குமே... எதுக்காம்? நாம அதை வுட்டுடுவோமுன்னுதானே... இதே போல இந்த முனுசாமி அப்படியே வீந்தா... அவளோட தோஸ்துங்க எனக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லன்னு நினைக்கணும்பாரு... இல்லாட்டி ஒன்னோட இந்த தோஸ்து இப்போ ஒரு முக்கியமான சமாச்சாரத்தைச் சொல்ல முடியாமல் போயிருக்குமே."

முனுசாமி தமாசாய் பேசுவது போல் பேசிவிட்டு, மோட்டார் பைக்கின் கண்ணாடி முன்னால் முகத்தைத் தடவிவிட்டபடியே இளங்கோவின் அருகே நெருங்கிப் போனான். அடித்தொண்டையில் ரகசியம் பேசுவதுபோல் பேசினான் :

"எதுக்கும் போலீஸ்லே சொல்லி ஒரு துப்பாக்கி வாங்கி வச்சுக்கோ."

"துப்பாக்கியா? ஒரு குருவியைச் சுட்டாக்கூடப் பொறுக்காதவன் நான். நரிக்குறவங்க இந்தப் பக்கம் வில்லும் கல்லுமா வந்தால், அவங்களை சத்தம் போட்டு துரத்துறவன் நான். எனக்கு எதுக்குப்பா துப்பாக்கி?'

"ஏதோ உன் தோஸ்து, சொல்றதச் சொல்லிட்டேன். அப்புறம் ஒன்னோட இஷ்டம்.”

"விவரமாத்தான் சொல்லேன் முனுசாமி.”

“வயக்கம்போல பட்டை பூடுறதுக்கு அங்கே போனேனா... சரோசாதான் ஊத்திக் கொடுத்தாள். அப்போ அவளோட தோஸ்துங்க உன்னை பட்டாக்கத்தியாலே ஒரு சொருகு சொருகப்போறதா பேசுனாங்க. நீ வேலை பார்க்கிற ஆபீசு, பாமாவை ஏத்திட்டுப் போற பஸ்டாண்டு, நீங்க டூயட் பாடுற பீச் அல்லா இடத்துலேயும் ஒன்ன வாச் பண்றாங்கோ. இன்னும் நாலு நாளைக்குள்ளே தீர்த்துக் கட்டப் போறதாய் சாராயம் குடிக்காமலே சபதம் போட்டாங்கோ."

"இதுக்கு சரோசா என்ன சொன்னாள்?"

"ஏதோ சொன்னாள். அதுக்குள்ளே சாராயம் என்னோட தலைக்குள்ளே பூட்டு. கிக்காய் படுத்துட்டேன். சரோசா பேசறதை பார்க்க முடிஞ்சது; ஆனால் கேக்க முடியலே. இதுல்லாம் நேற்று நைட்லே நடந்த சமாசாரம்."

"சரி. இந்தா... பத்து ரூபாய். ஒரு கிளாஸ் போட்டுக்கோ."

"நானும் மனுசன்தான். இந்தவாட்டி உன்கிட்டே காசு வாங்கறது நானு உன்மேலே வச்சிருக்கிற பிரண்டுசிப்பை அசிங்கப்படுத்துறமாதிரி. ஜாக்கிரதையா போ. நானும் என் பங்குக்கு அப்பப்போ ஒட்டு கேக்கேன்."

இளங்கோவிற்கு, அவனது புல்லட் வண்டி மாதிரி உடம்பெல்லாம் ஆடியது. முடிந்து போனதாய் நினைத்த ஒன்று, ஒரு முடிச்சோடு வந்திருப்பதை அறிந்ததும், அவன், மூளை மரத்ததுபோல் நின்றான். மெல்ல மெல்ல இன்றோ நாளையோ, தான் தாக்கப்படலாம் என்ற எண்ணம் அச்சமாகி பீதியானது. அதே சமயம் நன்றி மறந்த ஒருத்தி இப்படிப்பட்ட ஒன்றில் ஈடுபட்டால் அதை சந்திக்க வேண்டும் என்ற நொந்துபோன வீராப்புடன் பைக்கை அழுத்தினான். கண்மண் தெரியாமல் ஓட்டினான். என்னதான் தனக்குள்ளே வீரம் பேசிக் கொண்டாலும், எதிரே தற்செயலாக அவனைப் பார்ப்பவர்கள்கூட அவனுக்கு எதிரிகள்போல் தோன்றியது. பாமா நிற்கும் இடத்திற்கு சரியாக முன்னால் நிற்கும் பைக்கை, சிறிது தூரம் தள்ளிப் போய் நிறுத்தினான். தோளில் ஒரு ஜோல்னாப் பையைத் தொங்கப் போட்டுக் கொண்டு, பாமா அவனைப் பாராதது போல் நின்றாள். பிறகு அவன் அருகே ஓடிவந்து கத்தினாள்:

"ஆமா, பைக்கை அங்கேயே நிறுத்தினால் என்ன? என்னைக் காக்க வச்சது மட்டுமில்லாமே எதுக்காக இப்படி ஓட வைக்கிறீங்க? காதல் இதுக்குள்ளே கசந்துட்டுதா? இளங்கோ ஒங்களத்தான்... ஏன் திரும்பிக்கூடப் பார்க்க மறுக்கறீங்க?"

இளங்கோ திரும்பிப் பார்த்தான். உறுமிக் கொண்டிருந்த பைக்கை ஆப் செய்து நிறுத்தி விட்டு, அவளையே பேச்சற்றுப் பார்த்தான். அவன் உடலெங்கும் வியர்வைத் துளிகள் வெள்ளமாகிக் கொண்டிருந்தன. அந்த சாலையும், அதன் வாகனங்களும், ஏதோ ஒரு மாய உலகில் போய்க் கொண்டிருப்பது போல தோன்றியது. தலை ஆங்காங்கே அரித்தது. எதிரிகள் நோட்டமிடுகிறார்களோ என்று அங்கேயும் இங்கேயும் பார்த்தபடி முனுசாமி சொன்னதை பாமாவிடம் ஒப்பித்தான்.

அவள் பயந்துவிட்டாள். அவன் பேசப்பேச, முகத்தை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள். அவனை யாருக்கும் பலி கொடுக்கப் போவதில்லை என்பது போல் இடுப்பில் வில் போல் வளைந்த அவன் கைக்குள் தனது கரத்தை சக்கரம் போல் சேர்த்துக் கொண்டாள். அக்கம்பக்கத்தில் சிலர் குளு சிரிப்பாய் பார்ப்பதை அவளும் பார்த்தாள். ஆனால் பொருட்படுத்தவில்லை. அவள் தனக்காக அப்படி அல்லாடுவதில், அவனுக்கும் சுகம் கிடைத்தது. அதே சமயம் "பாமா, பாமா, நீ இப்படி உன் அன்பை வெளிப்படுத்துவதற்காக ஆயிரம் பட்டாக்கத்திகள் என்மீது பாய்ந்தாலும் பரவாயில்லை” என்பதுபோல் கால நேர சூழல் தெரியாமல் மடத்தனமாகப் பேசப்படும் சினிமா 'டைலாக்'கை பேசாமல் அவள், பேசட்டும் என்பது போல், அவளிடம் ஆறுதல் கண்டது போல், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு வார்த்தைகளை மென்று விழுங்கிப் பேசினாள் :

"அந்த ரவுடிப் பசங்களுக்குத் தான் அறிவில்லை, அந்தக் குப்பத்து ரவுடிப் பொண்ணுக்கு வேண்டாம்? நன்றி கெட்ட நாய்." "நாம்தான் அவள் விடுதலைக்குக் காரணமுன்னு அவளுக்குத் தெரியுமோ, என்னமோ?”

"நீங்க உங்க போலீஸ் பிரண்டு திருமலையப்பன்கிட்டே விசயத்தை சொல்லி, அவள்கிட்ட விளக்கமா சொல்லச் சொல்லி இருக்கலாமே.”

"அதுக்காகவே அவரைத் தேடி அலைந்தேன். பதினைந்து நாள் லீவுலே மதுரைக்குப் போய் இருக்காராம்."

"அடக் கடவுளே! பேசாமல் போலீஸ்லே ஒரு கம்ப்ளெய்ண்ட் கொடுப்போமா?"

"எந்த முகத்தோட இன்ஸ்பெக்டரைப் பாக்கிறது?"

"அப்போ டெபுடி கமிஷனர் அங்கிளைப் பார்த்து துப்பாக்கி லைசன்ஸ் கேட்போமா?"

"அதுகிடைக்கிறதுக்கு முன்னாடியே என்னைத் தீர்த்துடுவாங்க"

“அப்போ என்னதான் செய்யறது?"

தாழம்பூ

“அதுதான் எனக்கும் புரியவில்லை."

“அப்படியே அவுங்க வெட்டுறதா இருந்தால், நம்ம இரண்டு பேரையும் சேர்த்து வெட்டணும். உங்களைப் பிரிஞ்சு என்னாலே இருக்க முடியாது. ஆமா முடியாது தான். நெசமாத்தான். சத்தியமாத்தான்."

பாமாவால், அழுகையை அடக்க முடியவில்லை. அக்கம் பக்கத்தாரின் கவனத்தை அவள் அழுகை கவரப் போவதுபோல் இருந்தது. ஆகையால், இளங்கோ அவர்களின் கண்களில் பாமாவின் முகம் படாதபடி அட்ஜஸ்ட் செய்து நின்றான். அவளை அதிசயத்துப் பார்த்தான். எழுபது வயதுப் பாட்டியை, ஐம்பது வயது அம்மாவை அவளாக அனுமானித்தான். இறுதியில் பாமாவை, பாமாவாக அனுமானித்து அவளை பைக்கில் ஏறும்படி சைகை செய்தான். இந்தச் சமயத்தில் ஒரு மீசைக்காரன் அவனைப் பார்த்து வந்தான். உடனே பாமா பயந்துபோய் அவனை அவசரப்படுத்தினாள். அந்த மீசை இளங்கோவிடம் மணி கேட்க வந்தது, அவர்கள் இருவருக்குமே தெரியாது. எதிரில் ஒருமாதிரி படுகிற அனைவருமே அவர்களுக்கு சரோசாவின் கையாட்களாகத் தோன்றினார்கள். இளங்கோவும் வண்டியை ரவுடி வேகத்தில் ஓட்டினான். யாராவது எதிரே பட்டாக்கத்தியை எடுத்தால் அவர்கள் மீது அப்படியே வண்டியை மோத வேண்டும் என்று முரட்டுத்தனமாக நினைத்தான். உயிர்ப் பயம் அவனைக் கோழையாகவும், வீரனாகவும் மாறி மாறி மாற்றிக் கொண்டிருந்தது.

இதற்குள் சிவப்பு சிக்னல் வந்தது. பச்சை சிக்னலுக்காக பின்னால் காத்திருக்க நிதானமற்ற பேர்வழிகள், வண்டிகளை கோலம் போடுவது மாதிரி அங்குமிங்குமாய் வளைத்து ஒரு போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது தற்செயலாக எதிர்த் திசையில் இருந்த பஸ் நிலையத்தைப் பார்த்த இளங்கோ நிமிர்ந்தான். இதனால் அவன் முதுகில் சாத்தி வைக்கப்பட்ட பாமாவின் மோவாயும் அங்குமிங்குமாய் அவன் முதுகைச் சுரண்டியது. இளங்கோ பார்த்த எதிர்த் திசையில் -

சந்தேகமில்லை. சரோசாதான். எப்படி இவள் சரோசாவாக இருக்க முடியும்? வயிறு முழுப் பானை மாதிரி முன்னுக்குத் தள்ளி இருக்கே? பின்புறம் வேறு ஒரு மாதிரி தெரியுதே. இந்த ஒரு வாரத்திற்குள் அவள் எப்படி ஒன்பது மாதக் கர்ப்பிணியாகி இருப்பாள்? ஒரு வேளை, இவள், அவள் அக்காவாக இருப்பாளோ? தன்னை நோட்டம் பார்ப்பதற்கு வந்திருப்பாளோ? இல்லையானால் போலீஸ் அவள் வயிற்றில் குத்தி வீங்க வைத்திருக்குமோ? அதே முகம்; அதே தோரணை.

இளங்கோ, குழம்பிப் போனான். அதே சமயம், அவள் அவனையே பார்ப்பதுபோல் இருந்தது. அப்படி அவள், தன்னைப் பார்க்கிறாளா என்பதைப் பார்ப்பதற்காக முன்பு கல்லூரிக் காலத்தில் ‘சைட்' அடிப்பவனைக் கண்டு பிடிப்பதற்கு ஒருவன் சொல்லிக் கொடுத்த டெக்னிக்கைப் பயன்படுத்தினான். குறுக்காகப் போய்க் கொண்டிருந்த ஒரு பஸ்சை அவன் பார்த்தான். உடனே அவளும் அந்தப் பஸ்சைப் பார்ப்பதுபோல இருந்தது. ஆகாயத்தைப் பார்த்தான். அவளும் அண்ணாந்து பார்த்தாள். சந்தேகமில்லை. இவள் பார்வையில் ஏதோ மர்மம் இருக்கிறது.

இதற்குள், பச்சை விளக்கு வந்துவிட்டது. அவன் போவதையே அந்தக் கர்ப்பிணிப் பெண்ணும், முகத்தை சுற்றவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துக் கொண்டே வண்டியைத் திருப்பிய இளங்கோ, ஒரு ஸ்கூட்டர்காரனிடம் திட்டு வாங்கினான். அவனை சரோசாவின் கையாளாக அனுமானித்துக் கொண்டு இவனும் பதிலுக்குத் திட்டியபடியே வண்டியை அழுத்தினான். கால்கிலோ மீட்டருக்கு அப்பால் அதை நிறுத்தினான். அவன் தோளில் கைபோட்டிருந்த பாமா அவனது முகத்தை தன் பக்கமாகத் திருப்பிக் கேட்டாள்:

"என்ன ஆச்சு உங்களுக்கு?"

“எங்க ஆபீஸரு. அதோ, அந்த லேபர் இன்ஸ்டிடியூட்லே ஒரு விவரம் வாங்கிட்டு வரச் சொன்னாரு. சுருக்கெழுத்துல தேர்ச்சி பெற்ற ஒரு ஸ்டெனோவ ஆபீஸ்லே நியமிக்கணும். அதுக்கு டைப்பிங் வேகம் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் இருக்கணும். இந்த டைப்பிங் வேகம் சுருக்கெழுத்துலே இருந்து அதை அர்த்தப்படுத்தி டைப் அடிக்கிறதுக்கா, இல்லை ஒரு பாராவைக் கொடுத்து அதை டைப் அடிக்கிறதுக்கா என்கிறது எங்க ஆபீசுல யாருக்குமே தெரியல. இப்படித்தான் பல ஆபீசுலே ஆபீஸர்களோட அறியாமையால், பல தகுதி உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கிறது இல்லை.”

"அப்போ நானும் வாரேன். உங்களைத் தனியா விடமாட்டேன்."

"அங்கே நேரமாகும். இப்ப பஸ்ல போயிடு. சாயங்காலமா ஆபீஸ்ல வந்து உன்னை பிக்கப் செய்துக்குறேன்."

"சாக்கிறதையா போங்க. ஆபீசுக்கு வந்ததும் உடனே போன் செய்யுங்க. அதுவரைக்கும் என் மனது கேட்காது."

பாமா, அப்போது வந்த ஒரு பஸ்சில் ஏறிக் கொண்டாள். இளங்கோ, அவள் டாட்டாவுக்கு, பதில் டாட்டா போடாமல், வண்டியை ஒடித்து வளைத்து ஒரு சுற்றுச் சுற்றி, அந்தப் பெண் நின்று கொண்டிருந்த பஸ் நிலையத்தை நோக்கி வண்டியைப் பாய்த்தான். இதற்குள் அவள், அவன் வருவது தெரியாமல், ஒரு பஸ் நம்பரை உற்றுப் பார்க்காமலேயே அதில் ஏறிக்கொண்டாள். உடனே அவனும் அந்த பஸ்சை பாலோ செய்தான். அவன் மனதில் அழுத்திய குற்றச்சுமை அந்த பைக்கின் ஆக்சிலேட்டரையும் அழுத்தியது. பாமாவிடம் பொய் சொன்னதை மனம் ஒப்பவில்லை. அவன், ஆபீசர் அப்படி ஒரு விவரத்தை கேட்டுவிட்டு வரச்சொன்னது உண்மைதான். அந்த உண்மையை தனக்குச் சாதகமாக வளைத்து, தர்மர், துரோணரை ஏமாற்றியது போல் தானும் ஏமாற்றி விட்டதாக நினைத்தான். ஆனாலும் அவளுக்குச் சிரமம் கொடுக்கக் கூடாது என்றுதான் அப்படிச் செய்ததாய் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். அதேசமயம், ஒருத்தர் அவரது நோக்கங்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக செயல்களாலேயே தீர்மானிக்கப் படுகிறார் என்று யாரோ ஒரு கிரேட்மென் சொன்னதாக ஒரு பத்திரிகையில் வெளியான வாசகங்கள் அவன் மனதை பாம்பாய் கொத்தின. அதையும் மீறி அந்த பஸ்சின் பின்பக்கம் பாம்பு போல் வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தான்.

சரோசா இவளோ... அவளோ... எப்படியும் அசல் சரோசாவைச் சந்தித்து... அவள் விடுதலைக்கு தானே காரணம் என்பதை விளக்கி, அவளிடம் இருந்தும், அவள் கும்பலிடம் இருந்தும், தனக்கு விடுதலை வாங்கியாக வேண்டும்.