Chapter 8

ஒருவர், இரவில் தூங்கும்போது எந்த எண்ணம் கடைசியில் மனதில் நிற்கிறதோ, அதுதான் மீண்டும் கண் விழித்ததும், மனதில் முதலாவதாக வரும் என்பார்கள். அன்று இரவு முழுவதும் அப்படியே தூங்கிப் போன இளங்கோவின் மனதில் காலையில் எடுத்த எடுப்பிலேயே சரோசா இரும்புக் கம்பிகளுக்கிடையே கையில் விலங்கிடப்பட்டு, அவனைப் பார்த்து தலைகவிழ்ந்து நின்றாள். அதற்குப் பிறகு தான், பாமா லேசுலேசாக தலையில் கொண்டை போட்டுக் காட்டும் பாவனையோடு, எட்டியெட்டிப் பார்த்தாள்.

இளங்கோ, அம்மா நீட்டிய இட்லிகளை விழுங்குவது தெரியாமல் விழுங்கிவிட்டு, பேண்ட் சட்டையை அவனைப் போல் வீறாப்பாக இழுத்துக்கொண்டு, வெளியே புறப்பட்டான். அவனுக்கு 'சப்' என்றாகிவிட்டது. பாமா வீட்டிற்குப் போவதற்கு அவன் படியிறங்கியபோது, அவள் அப்பா ரமணனோ, மாருதி காரில் அங்கே வந்தார். கதவைத் திறந்து அவனை ஏறிக்கொள்ளும்படி சைகை செய்தார். இதற்குள், பாமா பின்பக்கமாக வந்து கைகளைப் பிடரிக்குக் கொண்டு போய் தலைமுடியை தலைக்குமேல் கொண்டுவந்து அவனைப் பார்த்துச் சிரித்தாள். அம்மா ஒருபக்கமும், இன்னொரு பக்கம் பாமாவும் கையசைத்து வழியனுப்ப மாருதி கார் அந்தப் பெயருக்குரிய வேகத்தில் பறந்தது.

அந்தக் கார், காவல்நிலைய வளாகத்திற்குள் நுழைந்ததும், நேற்றிரவு வீட்டிற்கு வந்திருந்தாரே அதே போலீஸ்காரர் அவர்களைப் பார்த்து அலறியடித்துக் கதவைத் திறந்தார். எந்தப் போலீஸ்காரராலும் இப்படி ஒரு மரியாதைக்குட்படாத ரமணன் உடம்பை நெளித்து நடப்பதோ அல்லது அக்கம்பக்கம் பார்த்து நடப்பதோ கவுரவக்குறைவு என்று நினைப்பது போல், லகான் போட்ட குதிரைபோல் நேராக நடந்தார். இளங்கோ, அவர் பின்னால் ஆட்டுக்குட்டி போல் போனான். இருவரும் கிரைம் அறைக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்த அதே சப்-இன்ஸ்பெக்டர் விழுந்தடித்து நின்றார்.

"உட்காருங்க... மிஸ்டர் ரமணன் சார்... இளங்கோ! நீங்களும் உட்காருங்க..."

“ஓயர் ஈஸ் யுவர் இன்ஸ்பெக்டர்...? இன்ஸ்பெக்டரை நான் பார்க்கலாமா...?"

"உங்களுக்காகத்தான் காத்திருக்கார் சார், வாங்க சார்." மூவரும் முதல் மாடியில் உள்ள இரண்டாவது அறைக்குள் வந்தார்கள். ரமணன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

"ஐ அம் ரமணன்... கம்பெனி எக்ஸிகியூட்டிவ். நீங்க இன்ஸ்பெக்டரா?"

"உட்காருங்க மிஸ்டர் ரமணன்... உட்காருங்க. தம்பி நீயும் உட்காருப்பா”

"இனிமேல் எது நடந்தாலும் என்கிட்ட சொல்லுங்க சார். டெப்டி கமிஷனரை கஷ்டப்படுத்த வேண்டாம். என்னை கஷ்டப்படுத்துங்க. இனிமேல் உங்க ஏரியாவோட செக்யூரிட்டிக்கு நான் பொறுப்பு. இந்தாப்பா மூணு கப் காப்பி வாங்கி வா."

ரமணனும், இளங்கோவும் அந்த இன்ஸ்பெக்டரையே பார்த்தார்கள். அவருக்கு நாற்பது வயதுக்கு சற்று மேலேயோ, கிழேயோ இருக்கும். சற்று கனமான உடம்பு; என்றாலும் காற்றில்கூட பறக்கமுடியும் என்பது மாதிரியான லாவகம். இழுத்துப்பிடித்தது போன்ற தொய்வில்லாத முகம்.

இன்ஸ்பெக்டரை விரட்டுவதற்கென்றே வந்த ரமணன், அவரது தோற்றத்தைப் பார்த்ததும் கட்சி மாறிவிட்டார். தோல் பைக்குள் வைத்திருந்த ஒரு கற்றைக் காகிதத்தை அவரிடம் நீட்டிவிட்டு, ஒவ்வொரு பேப்பருக்கும் விளக்கம் சொல்வதற்காக அவர் மனத்திற்குள் ஒத்திகை போட்டார். இதற்குள் இன்ஸ்பெக்டர் முந்திக் கொண்டு பேசினார்:

"நீங்க சொல்ல வேண்டியதே இல்ல சார்! நேற்று நைட் முழுவதும் இதே வேலைதான். மூணாவது கிராஸ் தெரு முனையில் ஒரு ஓலைவீட்டுல இருக்கிற ருக்குமணி என்கிற பால்காரியோட ஆறுவயசுப் பையனைக் காணவில்லை. அதே கிராஸ் தெருவில எட்டாம் நம்பர்ல அழகிரி சாமியோட டி.வி. செட் போயிட்டுது, இரண்டாவது கிராஸ்ஸ சம்புலிங்கம் வீட்டுல சம்புல போட்டிருந்த பூட்டும் கைப்பம்பும் போயிடுத்து. இதுங்கதான் உங்களுக்குத் தெரியும். இன்னொன்றை நான் சொல்றேன், கேளுங்க; நேத்து இரவு நைட்ல, மெயின் ரோட்டுல இருக்கிற நியாயவிலைக் கடைய உடைச்சி ஏழுெட்டு மூட்டைகளை எத்திக்கிட்டுப் போயிட்டாங்க. அந்த ஏரியாவில இருக்கிறவங்க மனுஷங்களா? மாடுங்களா? மக்களோட ஒத்துழைப்பு இல்லாம குற்றங்களைக் கண்டுபிடிக்க முடியாது ஸார்."

"அப்படியும் சொல்ல முடியாதுங்களே. இந்தப் பையன் இளங்கோ, என்னை மாதிரியே ஒரு சமூகத் தொண்டன். நேற்று உங்க ஆட்கள்கிட்டயே இவன் பட்டபாடு... ஒரே பாடு... இதைப் பார்த்த பிறகு எவன் போலீசிற்கு ஒத்துழைப்புக் கொடுப்பான்? இவ்வளவுக்கும் அந்தப் பொண்ணு ஒரு குழந்தைய திருடினவள்..."

"நடந்ததை மறந்துடுங்க... இனிமேல் நடக்கப் போறதை கவனிப்போம். இந்தாப்பா அவள் பேரு என்ன சரோசாவா? கூட்டிக்கிட்டு வா, க்விக். என்ன சார் செய்யறது? எல்லாப் போலீசும், விவிஐபி பாதுகாப்புக்குப் போக வேண்டியதிருக்கு. பஞ்ச பாண்டவர் மாதிரி, ஐந்து கான்ஸ்டபிள்களை வைச்சிக்கிட்டு, இந்த ஏரியா முழுவதையும் கவனிக்கணும். எப்படி முடியும்? உங்கள மாதிரி பப்ளிக் பர்ஸ்னாலிட்டிகள் டெப்டி கமிஷனர்கிட்ட இதையெல்லாம் சொல்லணும்”

"கண்டிப்பாய் அடுத்தவாரம் உங்க டெப்டி கமிஷனர் என் வீட்டுக்கு வரான்! சாரி... கிளாஸ்மேட்டாக இருந்தாலும் உங்க முன்னால ‘இர்' போட்டுத்தானே பேசணும்...? - டின்னருக்கு வருகிறாரு. அவர்கிட்ட விவரமா சொல்றேன்.”

சரோசாவை, இரண்டு கான்ஸ்டபிள்கள் கொண்டுவந்து, இன்ஸ்பெக்டர் அறைக்கு வெளியே நிறுத்தினார்கள். நேற்று அவளிடம் தோழமையோடு பேசிய அதே, அந்த கிரைம் சப்-இன்ஸ்பெக்டர், இப்போது அவள் கழுத்தைப் பிடித்து உள்ளே தள்ளினார். அவள் விழாக்குறையாக இன்ஸ்பெக்டர் முன்னால் குனிந்து நின்றாள். பிறகு அங்குமிங்குமாய் பார்த்தாள். இளங்கோவை திடுக்கிடாமல் பார்த்தாள். பிறகு, அரற்றியபடியே இளங்கோவைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள். அவளின் மேல் உதடு வீங்கிப் போயிருந்தது. அழகான மஞ்சள் துண்டுபோல் தோற்றம் காட்டும் அந்த உதடு, இப்போது கோவைப் பழமாய் சிவந்து அதே அளவிற்கு வீங்கி கீழ் உதட்டை மறைத்துக் கொண்டிருந்தது. கீழ் உதடோ நைந்து ரத்தக் கசிவோடு சதைக் கட்டிபோல் தொங்கியது. இரண்டு கண்களின் புருவங்களும், வீங்கிப் புடைத்து முன்பக்கமாய் குவிந்து, கண் இமைகளை மறைத்தன. கன்னங்களும் வீங்கிப் புடைத்து ரத்தம் சிந்திக் கொண்டிருந்தன. தலைமுடியை யாரோ இறுக்கிப்பிடித்து, நீண்ட நேரம் வைத்தது போல், கோரம்புல் கட்டுப்போல மேல்நோக்கி நீண்டிருந்தது. நெற்றிப் பொட்டில், குங்குமம் வைத்ததுபோல், ஒரு ரத்தக்காயம். கைகளில் சிராய்ப்புக்கள். அவள் கணுக்கால்களில், பாவாடை பிய்ந்து சிவப்புச் சிவப்பாய் தெரிந்தது.

சரோசா, இளங்கோவை காலில் விழுந்து கும்பிடப்போனாள். அவன் சற்றுத் தள்ளி நின்றதும், கீழே குனிந்தாள். நிமிர்ந்தாள். அலை அலையாய் கண்ணீர்விட்டு அதை அழுகின்ற வாய்க்குள்ளேயே உள்வாங்கியபடி, அவள் ஓலமிட்டாள்:

"சாரே... சாரே... இளங்கோ சாரே! நான் செய்தது அல்லாம் தப்புத்தான்... என்னை மன்னிச்சிடு சாரே. நீ சொன்னாத்தான் என்னை விடுவாங்களாம்."

இன்ஸ்பெக்டருக்குக் கோபம் வந்துவிட்டது.

"அதுக்குள்ள இத எவன்டி உனக்குச் சொல்லிக் கொடுத்தது? மொதல்ல அந்தக் குழந்தையை எங்கே வைத்திருக்கேன்னு இப்போ எனக்குத் தெரிஞ்சாகணும். முன்னால சாராயம் காய்ச்சினே, சரின்னு விட்டுட்டோம். அங்கேயும் இங்கேயும் சிலரை அடிச்சே... கண்ணை மூடிக்கிட்டோம். இப்ப என்னடான்னா, குழந்தையை திருடினதையும் கண்டுக்காம இருப்போமுன்னு நினைச்சால் நீதான் ஒரு குழுந்தை. சொல்லுடி, ரமணன் வாய்விட்டார்க் கொழுந்தையை எங்க வைச்சிருக்கே?”

"இன்ஸ்பெக்டர் சார், டி.வி.செட், பிரிஜ்-ஜப் பத்தியும் கேளுங்க சார்."

"கொஞ்சம் சும்மா இருங்க மிஸ்டர் ரமணன்; முதலில் உயிர்ப்பிரச்சினை, அப்புறந்தான் ஜடப்பிரச்சினை. சொல்லுடி... குழந்தையை எங்கே கொண்டு போய் வைச்சிருக்கே?"

“அய்யோ சாரே! நான் அப்படிப்பட்டவள் இல்லீங்க சாரே. நெசமா சாரே, சத்தியமா சாரே”

"இன்னிக்கிக் காலையிலே சப்-இன்ஸ்பெக்டர் கிட்ட குழந்தையை திருடி ஏதோ ஒரு கிராமத்துல வைச்சிருக்கிறதாய் சொல்லியிருக்கே.”

"சொன்னது நிசந்தான் சாரே! அடி பொறுக்க முடியாம அப்படிச் சொன்னேன் சாரே... மொகத்துல விழுந்த குத்துகள தடுக்கிறதுக்கு அப்படிப் பொய் சொன்னேன் சாரே. நான் பொறுக்கிதான்; இல்லங்கல. ஆனால் கொழுந்தையை திருடுகிற அளவுக்கு நான் மோசமானவள் இல்ல சாரே! சத்தியமாச் சொல்றேன் சாரே. பெரிய பெரிய திருட்டெல்லாம் செய்யறவள் இல்லே சாரே!'

“அப்போ... குழுந்தைய கொன்னுட்டே... அப்படித்தானே?"

"நானே தாயில்லாமல் வளர்ந்தவள் சாரே... ஒரு குழந்தையோட கஷ்டம் நஷ்டம் தெரிஞ்சவள் சாரே... நான் அப்படிச் செய்யறவ இல்ல சாரே!”

"சரி, உன்ன விசாரிக்கிற விதமா விசாரித்தாத்தான் சொல்லுவே. ஆனால் ஒண்ணு, இந்தத் தடவை நீ தப்பிக்கவே முடியாது. சாராயத்துக்கு ஒரு வருஷம்; எல்லாத்துக்கும் மேல குழந்தையை கடத்தினதுக்கு அல்லது கொன்னதுக்கு ஆயுள் தண்டனைன்னு உனக்கு வாங்கிக் கொடுக்கிறோமா இல்லையான்னு பாரு! அவள இழுத்துக்கிட்டுப் போய்யா.”

சரோசா, இப்போது இளங்கோவை விட்டுவிட்டு முகத்தை உப்ப வைத்துக் கொண்டு காலாட்டியபடியே அலட்சியமாக இருந்த ரமணனைப் பார்த்துக் கும்பிட்டாள். பெருமூச்சு, நெடுமூச்சாய் விட்டு அழுகின்ற வாயை அப்படியே விட்டுவிட்டு, மீண்டும் இளங்கோவைப் பார்த்தாள். தட்டுத்தடுமாறி கைகளை தலைக்குமேல் கொண்டு போய் அரற்றினாள் :

''சாரே... சாரே! இரும்பு வலையை பிய்ச்சது தப்புத்தான், ஒன்னோட ஆத்தாவ அடிச்சதும் தப்புத்தான்... உன்னை டபாய்ச்சதும் தப்புத்தான். ஆனால் அத்தனையும் தாத்தாவுக்கு ஒரு பன்னுக்காகவும், ஒரு டீக்காகவும் தான். எனக்குத் தேங்காய் பறிக்கத் தெரியும். ஆனால் தங்கத்தப் பறிக்கத் தெரியாது. நான் போயிட்டா என் தாத்தா ஒரேயடியா பூடுவாரய்யா. ஒனக்குக் கோடிப் புண்ணியம் சாரே. இன்ஸ்பெக்டர் ஐயாகிட்ட சொல்லு சாரே. வேணுமுன்னா இந்த ஏரியாவவிட்டே ஓடிடுறேன் சாரே..."

"ஒன்ன ஓட்டத்தான் போறோம். வேலூருக்கோ, சென்ட்ரல் ஜெயிலுக்கோ அனுப்பத்தான் போறோம். ஏய்யா அவள பேசவைச்சி வேடிக்கைப் பார்க்கிறீங்க! அவள் வாயிலிருந்து உண்மையை வரவழைக்கிற விதமா வரவழைங்க!”

கான்ஸ்டபிள்கள், அவளைத் தள்ளப் போனார்கள். அதற்குள் அவள் நடந்தாள். இளங்கோவை வெறுமையோடு ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு இன்னொரு கும்பிடு போட்டபடியே மெல்ல மெல்ல நடந்து, அவர்கள் கண்ணிலிருந்து மறைந்தாள்.

இளங்கோவிற்கு என்னவோ போலிருந்தது. அவளின் ஒவ்வொரு கும்பிடும், அவன் இதயத்தை ஈட்டி போல் குத்தியது. அவளின் ஒவ்வொரு விசும்பலும் அவன் நெஞ்சைக் கசக்கியது. ஏதோ ஒன்று அருவமோ, உருவமோ... ஆணோ, பெண்ணோ, அலியோ... அது அவன் அடிவயிற்றிலிருந்து பீறிட்டு உச்சந்தலையை முட்டி அங்குமிங்குமாக தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. பக்கத்து அறையிலோ அல்லது அதற்கு அடுத்த அறையிலோ, “ஐயோ... என்னால தாங்க முடியல, என்ன உதைக்காதீங்க, நாயினா! நாயினா!” என்ற அவலச்சத்தம், அவன் காதுகளைக் குத்தியது.

ரமணனும், இளங்கோவும் இன்ஸ்பெக்டர் எழுந்து நின்று வழியனுப்ப, கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் வாசல்வரை வந்து நிற்க வெளியே வந்தார்கள். ரமணன், மாருதி காரில் ஏறிக்கொண்டு "அப்போ நீ வீட்டுக்குப் போ. எல்லார்கிட்டயும் இந்த சந்தோஷச் செய்தியை சொல்லு" என்று சொல்லிவிட்டு காரை சத்தம் போட வைத்தார். அப்போது

ஒரு முதியவர் - சரோசா ஊட்டி விட்டாளே அந்த மெல்லிய மனிதர் - மூன்று லுங்கிக்காரர்களுக்கு மத்தியில் இருவர்மேல் தோள் போட்டு, ஒருவன் மார்பில் முதுகைப் போட்டு அங்குலம் அங்குலமாய் அந்த காவல் நிலைய வளாகத்திற்குள் வந்து கொண்டிருந்தார். அவரது பொட்டைக் கண்களில் நீர் கசிந்தது. கூடவே ஈக்களும் மொய்த்தன. அடிக்கடி அந்த ஈக்களை கையாட்டி விரட்டும் அந்த மனிதர் இப்போது அந்த சொரணையே இல்லாமல் “சரோ... சரோ...” என்று முனகிக் கொண்டே நத்தை மாதிரி நகர்ந்து கொண்டிருந்தார்.

இளங்கோவிற்கு, கண்கள் அக்கினிக்கட்டிகளாய்ச் சுட்டன. நாடி நரம்புகள் தெறித்தன. உடம்பு ரத்தம் முழுவதும் வேர்வையாய் வெளியே வந்து கொண்டிருப்பது போல் இருந்தது. ரமணன், காரை நகர்த்தப் போனபோது, அவர் அருகே போனான். மெள்ளக் கேட்டான்:

"இதோட விட்டுடலாம்னு நினைக்கிறேன் அங்கிள். அவளைப் பார்க்கப் பாவமா இருக்கு ஒழிஞ்சு போறாள். அவள விட்டுடச் சொல்லலாம்."

"என்னப்பா... இளங்கோ உனக்கென்ன பைத்தியமா? அப்புறம் நாம் என்ன சொன்னாலும் போலீஸ் கேப்பாங்களா? - என்னோட பிரிஸ்டீஜ் என்னாகிறது? அதோட நீ அவளை கற்பழிக்க முயற்சி செய்துட்டு அது வெளியில தெரியக் கூடாதுன்னு புகாரை வாபஸ் வாங்குறேன்னு போலீஸ் பிளேட்ட திருப்பினால், என்ன செய்வே...? ஓகே... ஓகே... டி.வி.யில போய் ஒலியும் ஒளியும் பாரு. மனசு சரியாயிடும்."

இளங்கோ பிரமை பிடித்து நின்றான். ரமணன் சொல்வதும் ஒரு வகையில் நியாயமாகப் பட்டது. அதே சமயம் அவளை அநத் நிலையில் காண்பதும் அநியாயமாகப் பட்டது.

இந்தக் குழப்பம் போதாதென்று கான்ஸ்டபிள் திருமலையப்பன் எங்கிருந்தோ வந்தது போல் அவன் அருகில் வந்து கத்தினார்:

"நீ சரியான பிராடுய்யா! இப்ப நான் ஒன்ன அரஸ்ட் செய்யப் போறேன்; எந்த டெப்டி கமிஷனர் வந்து தடுக்கிறார்னு பார்க்கிறேன். ஒனக்கு இன்புளுயன்ஸ் இருக்கிற திமுறு... ஏய்யா! பெரிய வீட்டுப் பையா! நேற்று என்ன சொன்னே? ஆட்டோ டிரைவர் கிட்டே பணம் கொடுத்துறதாய் சொல்லிவிட்டு, சொன்னபடி கொடுத்தியா? ஆட்டோ ஸ்டாண்டுல நின்ன அந்த டிரைவர நான் கேட்டப்போ, நீ அவனை இந்த ஸ்டேஷனுக்கு வெளியேயே விட்டுட்டு தலைமறைவா போயிட்டதா சொல்றான்?"

இளங்கோ, தன்னை ஒரு தடவை ஆட்டிக்கொண்டான். அப்போதுதான், அவனுக்கு உறுத்தியது, செய்த தவறை எப்படி உற்றாரிடம் சொன்னால், அவர்கள் திட்டி விட்டு விடுகிறார்களோ, அப்படி அந்தப் போலீஸ்காரரை ஒரு உறவினராக நினைத்து, அவரைப் பார்த்துச் சங்கடமாய் சிரித்தான். உடனே திருமலையப்பனுக்குக் கோபம் வந்தது. காக்கிச்சட்டை போனாலும் பரவாயில்லை, அவனையும் கழட்டிவிடுவது என்று தீர்மானித்தார். இதைப் புரியாமல் இளங்கோ, அவர்கைகளைப் பிடித்துக் கொண்டே பதில் அளித்தான்:

"நான் அறிவுகெட்ட முட்டாள் சார். நேற்று நடந்த அமர்க்களத்தில் ஆட்டோக்காரரை மறந்திட்டேன். மன்னிச்சிடுங்க சார்..."சாரி."

"இந்த ‘சாரி, மன்னிச்சிடுங்க' என்கிற வார்த்தைகளை வச்சே நாட்டிலே எல்லோருடைய பிழைப்பும் ஓடுதுய்யா. கொலைகாரனும் இதைத்தான் சொல்றான். அரசியல்வாதியும் அதையே சொல்றான். உன்னோட மன்னிப்பிலே என்னோட இழந்த மானம் திரும்பி வருமா? டிரைவர் கிட்டே, நானாத்தான் வம்பை விலைக்கு வாங்குனேன். உடனே அவன் உன்னோட மோசடியச் சொல்றான். பக்கத்தில இன்னொரு ஆட்டோ டிரைவர், என்ன சொல்றான் தெரியுமா? 'போலீஸ்ல அவனவன், ஆட்டோ வாடகையிலே கொஞ்சத்த மாமூலா வாங்குவான்; இவரோ வாடகையிலே கொஞ்சத்தையும் விடாமே மாமூலாய் வாங்குற டைப்புன்னு' கத்தறான். என்னால எதுவும் செய்ய முடியல. காரணம், அவங்க பக்கம் நியாயம் இருக்கு. இப்படி தைரியமாப் பேசறதுக்கு அவங்களுக்கு யூனியன் இருக்கு. எனக்கு என்னய்யா இருக்குது?"

போலீஸ்காரர்களும் குழந்தையாகலாம் என்பதுபோல், கைது செய்யப்பட வேண்டிய ஒருவன் முன்னாலேயே கைதாகி நிற்பது போல் நின்ற திருமலையப்பனைப் பார்த்து இளங்கோ திகைத்தான். அவருக்கு ஆறுதல் சொல்வது போலவும், தனக்குத் தானே தேறுதல் சொல்வது போலவும் பேசினான்:

"சார், நீங்க என்னை என்ன செய்தாலும் தகும் சார்; ஆனால் நான் வேணுமுன்னு அப்படிச் செய்யல சார். உண்மையைச் சொல்லப் போனால், இப்போதான் அந்த ஆட்டோவே ஞாபகத்துக்கு வருது. நீங்க கைது செய்தாலும் ஒரு உண்மையான குற்றவாளியைத்தான் கைது செய்யப் போறீங்க. போலீஸ்காரங்க லாக்கப்புல என்னை ஜட்டியோட நிறுத்துமுன்னாலே இந்த சட்டைக்குள்ள இருக்கிறதை தந்துடறேன் சார். இந்தாங்க சார், நூறு ரூபாய். அந்த ஆட்டோ டிரைவர்கிட்டே நீங்களே கொடுத்துடுங்க சார்."

"யோவ், யோவ், கையை சுருக்குய்யா. உன்கிட்டே நான் ஏதோ ‘சம்திங்' வாங்குறதாய் எங்க ஆட்களே நினைப்பாங்க. சாயங்காலமாய் அதோ அந்த ஆட்டோ ஸ்டாண்டுக்கு வா. நானும் 'பீட்டுக்கு' போயிட்டு வந்துடறேன். என் முன்னாலே நீ அவர்கிட்ட பணத்தைக் கொடுக்கணும்."

"நானே இப்படி நடந்துக்கிட்டது எனக்கு ஆச்சரியமாய் இருக்குது சார். பாவம், நான் கொடுக்கிற பணத்திலேயே வீட்டோட மத்தியான ஸ்டவ்வ எரிய வைக்க நினைச்சிருப்பார் அந்த ஆட்டோ டிரைவர். என்னைப் பற்றி நினைக்கவே எனக்கு வெட்கமாய் இருக்குது. ஆனாலும் நீங்க நினைக்கிறது மாதிரி நான் பிராடு இல்லை சார். எவ்வளவு அவமானமா பீல் பண்ணுறேன் தெரியுமா?"

“நான் விளக்கம் சொல்றேன் கேள். நேற்று உன் தலையிலே ஏற்றப்பட்ட சுமையிலே, உனக்கு ஆட்டோக்காரன் பாரம் தெரியல. இப்படித்தான் அந்த சரோசாவும்; அவளுக்கு இருக்கிற பிரச்சினையிலே அவள் மற்றவங்களுக்குக் கொடுக்கிற பிரச்சினைகளை நினைத்துப் பார்க்கல. அவளை மாதிரி ஆட்களுக்கு திரும்பிப் பார்க்க கடந்த காலம் இல்ல. ஏறிட்டுப் பார்க்க எதிர்காலம் இல்ல. நிற்பதற்கு நிகழ்காலமும் இல்ல. முக்காலமும் இல்லாத அஞ்ஞானிப் பொண்ணு. எப்படி கோழியை அடித்துச் சாப்பிடுவதை நாம் இயல்பாய் நினைக்கிறோமோ, அப்படி அவளும், திருடுறதை, தப்பாய் நினைக்கல. அது தப்பு என்கிற உணர்வே இல்லாதவள். இவள மாதிரி ஆட்களுக்கு மனசுன்னு எதுவும் கிடையாது. அது, பிறந்தபோதே வயிற்றுக்குள் போயிடும். இவளோட நிலைமைய யோசிச்சுப் பார். ஆட்டோக்காரனுக்குப் பணம் கொடுக்கிற நினைப்பில்லாத உன் பின்னணியிலே அவளுக்காகவும் யோசிச்சுப்பார்; நமக்காவது யோசிக்க நேரமிருக்கு; அவளுக்கு அதுக்கு நேரமும் இல்ல, வேளையும் வரல. அவளை மாதிரி ஆளுங்க யோசிக்க ஆரம்பிச்சா, அப்புறம் நாம் இந்த சமுதாய அமைப்பைப் பற்றி பயப்பிராந்தியோட யோசிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.”

இளங்கோ, யோசிப்பது போல் முகத்தைத் தூக்கினான். அவன் முன்னால் சரோசாவின் உப்பிப்போன முகம் உரசியது. அவள் ரத்தத் துளிகள் அவன் கண்களுக்குள் ஊடுருவுவது போல் இருந்தது. மாடியை அண்ணாந்து பார்த்து, அவள் வைக்கப்பட்டிருக்கக் கூடிய இடத்தையே பார்த்தான். பிறகு திருமலையப்பனைப் பார்த்து கைகளைப் பின்னிப் பின்னி எடுத்தான். அவரும் பேச்சால் பின்னினார்:

“நானும் இந்த சரோசாவைப் பற்றி விசாரித்தேன். சாராயக்காரிதான்; சின்னத் திருடி. அப்பனுக்காகத் திருடுறாளே தவிர, நடுத்தர வர்க்கத்தில், ஆபீஸர் அப்பன்களையே அரசாங்கத்தைத் திருட வைக்கிறாங்களே, அப்படி இல்ல. உள்ளே இருக்க வேண்டியவள் தான்; ஆனால், அதுவும் ஒரு வாரம், இரண்டு வாரத்திற்குத்தான். நிச்சயம் அவள் குழந்தையைத் திருடியிருக்க மாட்டாள். அந்தத் தகுதி இன்னும் அவளுக்கு வரல. ஆனால், இப்போவே அவள் மேலே குழந்தையைக் கொன்றதாய் குற்றஞ்சாட்டப் போறாங்க. இந்த நாட்டில் ஒரு ஏழைக்கு குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. பிறத்தியார் செய்த குற்றங்களையும் இவள் தலையில போடுவாங்க. கண்டுபிடிக்க முடியாத குற்றத்திற்கு இவள் காரணமாயிடுவாள். கடைசியில் அவளுக்கு ஆயுள் தண்டனைதான் கிடைக்கப் போகுது. ஒரு சின்னக்குற்றம் செய்து விட்டால் அப்புறம், செய்யாத பெரிய குற்றங்களுக்கு பொறுப்பு வகிக்கணும்; இது தான் இன்றைய நிலைமை.”

“நான் என்ன சார் செய்யணும்? நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன் சார்.'"

"எப்படியாவது, அவளைக் காப்பாற்றப் பாரு. அவளுக்காக இல்லாட்டியும் அவள் அப்பாவுக்காகக் கொஞ்சம் விட்டுக் கொடு. எந்த செல்வாக்கைக் கொண்டு வந்தாயோ, அது மூலமே அவளுக்கு விடுதலை வாங்கிக் கொடு. இப்பவே... இன்ஸ்பெக்டர் கிட்டே நான் சொன்னேன்னு சொல்லாம, நீயே கேட்கிற மாதிரி கேளு.''

அடிகொடுத்த சரோசாவை, அடிபட்ட சரோசாவாகப் பார்த்த வேளையிலே இருந்து, இளங்கோ மனமும் அடிபட்டு வீங்கியது. குழந்தையை, அவள் கடத்தியிருப்பாள் என்று அவனும் நம்பவில்லை. மனம் வலிப்பு வந்தது போல் இழுத்தது. நெஞ்சுக்குள்ளே ஒன்றும், கண்ணுக்குள்ளே ஒன்றும், எதிர் எதிராய் இழுத்துக் கொண்டன. திருமலையப்பன் கொடுத்த உந்தலில், அவன் இன்ஸ்பெக்டர் இருந்த மாடிக்கப் படி ஏறினான். அந்த இன்ஸ்பெக்டர் முன்னால் போய் நின்றான்.

இன்ஸ்பெக்டர், ஒரு மைக்கில் எள்ளும் கொள்ளுமாய் பேசிக் கொண்டிருந்தார். மீண்டும் அந்த மைக் அலறியபோது, அதற்குப் பதில் அளித்துக் கொண்டிருந்தார். பிறகு, "நன் இன்ஸ்பெக்டர் இல்லேய்யா; இந்த ஏசியும், டிசியும் இருக்கிற வரைக்கும், நான் குளோரிபைடு கான்ஸ்டபிள்தான்"

என்று கிரைம் சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்துச் சொன்னார். அந்த கிரைமோ, அப்படியானால் அந்த இன்ஸ்பெக்டர், தனக்கு ஒரு சல்யூட் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர் போல் தலையை ஆட்டினார்.

இளங்கோ லேசாய் இருமினான்; இன்ஸ்பெக்டர் கேட்டார்: "என்னப்பா வேணும்?"

"நான் டெபுடி கமிஷனருக்கு வேண்டிய அங்கிளோட அப்போ வந்தேனே... சரோசாவை விட்டுடுங்க சார்."

“ஏய்யா, டெபுடி கமிஷனருக்குத்தான் நான் சல்யூட் அடிக்கணும்... உனக்கும் அடிக்கணுமா? என்னய்யா நீ... பரமசிவம் கழுத்துப் பாம்பு மாதிரி ஆடுறியா? அவளுக்கும் உனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு. டெபுடி கமிஷனர் கிட்டே நானே பேசுறேன். சரி இப்போ மரியாதையா வீடு போயிச்சேரு. சரோசாவை எப்படி டீல் பண்ணணும்னு எங்களுக்குத் தெரியும்."

இளங்கோ, இன்ஸ்பெக்டரை மருவி மருவிப் பார்த்துவிட்டு, நடந்து வெளியே வந்தான். வலது பக்கம் ஒரு முனகல் சத்தம் கேட்டது. சரோசாதான். 'நாயினா, நாயினா' என்ற குரல்; 'டமால், டமால்' என்ற சத்தம். 'அடிக்காதீங்க, அடிக்காதீங்க' என்ற அலறல். "கொயந்த இருக்கற இடத்தைக் காட்டுறேன். காட்டுறேன்' என்ற கூப்பாடு. “அய்யோ, என் வயிறு போச்சே" என்ற வார்த்தை, அப்புறம் நெடிய மௌனம். மூச்சு முட்டியதோ, மூச்சு அடங்கிப் போனாளோ? இளங்கோ, அந்த ஓலமிட்ட உள்ளறைக்குள் போகப்போவது போல் நடந்தான். இதற்குள் இன்ஸ்பெக்டரின் திட்டுக்களை அவன் வாங்கியபோது, பார்த்துக் கொண்டு நின்ற ஒரு போலீஸ்காரர் அவனைக் கழுத்தைப் பிடித்துத் தள்ள வந்தார். இளங்கோ, கீழே ஓடினான். இதனால் அவர் கெட்ட வார்த்தையில் அவன் அம்மாவை அர்ச்சித்தது அவனுக்குக் கேட்கவில்லை.

இளங்கோ, காவல்நிலைய வளாகத்திற்குவெளியே வந்தான். கண்ட கண்ட இடமெல்லாம் சுற்றினான். பிறகு, வீட்டுக்கு வந்தான். வாசலிலேயே, தாய்க்காரி வரவேற்றாள். அவனை பிரமிப்போடு பார்த்தபடி ஒரு சேதி சொன்னாள் :

"பாமாவோட அப்பா, ரமணன் சார், இப்போதான் டெலிபோன் செய்தார். இன்னக்கி, அசோசியேசன் கூட்டம் சாயங்காலம் நடக்கப் போகுதாம். சரோசாவுக்கும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஒரு உறவு இருக்கிறதால, அவள் குழந்தையைக் கொன்ன குற்றத்தை கமிஷனர் ஆபீஸ் கிரைம் பிராஞ்ச் விசாரிக்கணுமுன்னு தீர்மானம் போடப் போறாங்களாம். ஏண்டா, நல்லா உதச்சிருப்பாங்களே? ரத்தம் வரும்படியா அடிச்சாங்களாமே? இப்பதான் என் மனசு நிம்மதியாச்சு. அவளுக்கு, கூடுனது தூக்குத் தண்டனை, குறைஞ்சது ஆயுள் தண்டனை... இரண்டிலே ஒண்ணு கிடைக்காமல் போகாது. ரமணன் சார் சொல்லிட்டாரு... எங்கேடா போறே?"