Chapter 2
கண்ணாடி ஊசிகள் கால் செருப்பையும் துளைத்து பாதங்களில் குத்த, சரோசா அந்த குண்டு குழி நிலத்தில் குதித்து எவருக்கும் சந்தேகம் வராதபடி, வேகவேமாய் நடந்து, இரண்டாவது குறுக்குத் தெருவின் விளிம்பை மிதித்தபோது 'தொப்' என்று சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தவள், திடுக்கிட்டு தோளைக் குலுக்கினாள். அந்த 'எச்சிக்கல' கீழே குதித்து தரையில் விழுந்து, நெளிந்து எழுந்து, அவளை நோக்கிப் பாய்ந்து வருவதைப் பார்த்தாள். அவன் தோற்றத்தைப் பார்த்ததும் லேசாய் பயந்து விட்டாள். உருண்டு திரண்ட உருளை மாதிரியான உடம்பு. பாக்கு மரம் மாதிரி துவங்கி, வேல் கம்புகள் மாதிரி முடிந்த விரல்கள். பேண்ட் சிலாக்கிற்குள் திமிறிக் கொண்டிருக்கும் உடல்வாகு. கசரத் எடுத்தவனோ அல்லது கராத்தே கிராத்தே என்கிறார்களே அப்படிப்பட்டவனோ? பேஜாரு கஸ்மாலமோ?
சரோஜா தனது 'ஏரியா ஆட்கள்' எவரும் அந்தப் பக்கம் திரிகிறார்களா என்பது போல் கண்களைச் சுழல விட்டாள். உடம்பைச் சுற்ற விட்டாள். காணவில்லை. அவனோ 'ஏய்... ஏய்' என்று கத்தியபடி, எகிறி வந்தான். அவள் கண்டுகொள்ளாமல், கால்களுக்கு இடையே மூன்றடி இடைவெளி கொடுத்து நடந்தாள். நடப்பது போல ஓடினாள்.
சரோசா அவசரத்தில் 'ஏரியா' இருந்த திசையைப் பார்த்து நடக்காமல், ரைட்டுக்குப் பதிலாய் லெப்டுக்கு திரும்பி விட்டாள். ஆனால் அது ஒரு முட்டுச் சந்து. இரண்டு பக்கமும் நெருக்கமான வீடுகளாலும், இறுதியில் அந்த இரண்டு பக்கங்களையும் இணைப்பது போல் மூன்று வீடுகளை வரிசையாய் கொண்டு மேற்கொண்டு போகமுடியாமல் முட்டிப் போன தெரு. சரோசா வலது கை கோணிப் பையை இடது கைக்கு மாற்றிக் கொண்டு, யோசித்தாள். அந்தப் பக்கம் ‘ஜம்ப்' பண்ணமுடியாது. போதாக் குறைக்கு நடு வீட்டுக்கு முன்னால் ஸ்டூல் போட்டு ஒரு கூர்க்கா உட்கார்ந்திருந்தான். அவள் திரும்பி நடந்தாள்.
இளங்கோவை நோக்கி, எதுவுமே நடக்காதது போல் ஓரங்கட்டி நடந்தாள். கீழே கிடந்த ஒரு பேட்டரி செல்லை பொறுக்கி கோணிக்குள் போட்டுக் கொண்டு, 'பாவலா' செய்தபடி அவனைப் பார்க்காதது போல் பார்த்து, நடக்காதது போல் நடந்தாள். அவள், அந்த குறுக்குத் தெருவில் தெற்குப் பக்கமாகத் திரும்பப் போனபோது, அவன், அவள் முன்னால் போய் இரண்டு கைகளையும் சிலந்திக்கால்கள் மாதிரி குவித்துக் கொண்டு நின்றான். அவள் பிறருக்குக் கேட்காத - அதேசமயம் அவனுக்குக் கேட்கும் - கிசுகிசுப்புக் குரலில் -
"வழிய விடு சாரே..."
"எச்சிக்கலன்னு சொல்லிட்டு இப்ப சாரா போடுறே... ஒன்ன விடமாட்டேன்."
"என்ன சாரே... வம்பு பண்றே. ஒன்ன எதுக்கு நான் அப்படி சொல்லணும்? நீ...அடையாளம் தெரியாம பேசறேன்னு நினைக்கேன். ஒன்னை எதுக்கு நான் திட்டணும்? நீ என் மாமனா, மச்சானா, எதிரியா?"
"யாருமில்ல! நீ அடிச்சுப்போட்டுட்டு வந்திருக்கியே, அவங்களோட மகன். ஒன்னை போலீஸ்ல ஒப்படைக்கப்போற சமூகத் தொண்டன்.”
சரோசா, அவனை நேருக்கு நேராய் பார்த்தாள். தோற்றத்தில் வஸ்தாதுதான். ஆனால், தோரணையைப் பார்த்தால் ஒரு குயந்தே... டபாச்சுடலாம். அவள் இப்போது நாலு பேருக்குக் கேட்கும்படி சத்தம் போட்டாள்.
"யோவ்... பட்டப்பகலுல ஒரு வயசுப் பொண்ணு கிட்டயா வாலாட்டறே? தோ பார்... என்ன தொட்ட அப்புறம் தெரியும் மவனே."
இருவரும் சடுகுடு ஆடுவது போல் ஒருவரையொருவர் ஆழம் பார்த்தார்கள். அவள், அவன் கைகளுக்கு அப்பால் நடக்கப்போனபோது, அவன் கரங்கள் அனுமார் வாலாய் நீளுவது போல் தோன்றியது. உடனே அவள் 'டேய்... டாய்' என்று தெருவோர்க்குக் கேட்காமல் அவனுக்கு மட்டுமே கேட்கும் சின்னக்குரலில் பேட்டைத்தனமாக உறுமினாள். அவனோ முகத்தில் எந்தச் சலனத்தையும் காட்டாமல் அம்மாவுக்கு மட்டுமே கட்டுப்பட்ட கர்மயோகிபோல் சரோசா அசைந்த விகிதாச்சாரத்திற்கு எதிர் விகிதாச்சாரத்தில் அல்லாடிக் கொண்டிருந்தான். இதனால் சரோசாவும் ஒரு அசைக்க முடியாத முடிவுக்கு வரவேண்டியதாயிற்று.
சரோசா, அவன் நெடுங்கையை ஒருபுறமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டாள். அவன் பதிலுக்கு அவள் கைகளைப் பிடிக்கப் போனான். பிறகு கூச்சப்பட்டு, அவள் கைபிடித்த கோணியைப் பிடித்து இழுத்தான். அவளோ, அவனை மாறி மாறித் தள்ளினாள். அவளை அப்படித் தள்ள முடியாத கூச்சத்தில் இருந்த அவன், ஒத்தாசைக்கு ஆள் கிடைக்குமா என்று அங்குமிங்குமாய் பார்த்த போது -
சரோசா, தானே எதிர்பார்க்காத வகையில் தைரியப்பட்டாள். பின்னால் கிடந்த கோணிப் பையை முன்னால் கொண்டு வந்தாள். இன்னும் திரும்பாமல் நின்ற அவன் விலாவில், கோணிப்பையால் விளாசினாள். அவன் துள்ளிக் குதித்துத் திரும்பியபோது, தேங்காய்களால் கனத்து இரும்பு முட்கள் எட்டிப்பார்த்த அந்தக் கோணிப் பையால் அவன் முட்டிக்குக் கீழே இரண்டு கால்களிலும் வாங்கு வாங்கென்று வாங்கினாள்.
கோணிக்குள் கிடந்த இரும்புக் கம்பி அவனை செமத்தியாகக் குத்திவிட்டன. அதனால், அவன் அடிபட்ட காலை தூக்கிப் பிடித்து வலி பொறுக்க முடியாமல் பல்லைக் கடித்து ஒற்றைக் காலில் நின்றான். அவளோ அவனை, ‘இந்த அடி போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா' என்பது போல் பார்த்துவிட்டு, தனது ஏரியா திசையை நோக்கி புலிப் பாய்ச்சலில் நடந்தாள்.
இளங்கோ, திணறிப்போனான். மலைப்பாம்பின் கண்ணின் உக்கிரத்தில் கட்டுப்பட்டு அசைவற்று நிற்கும் மானாய் நின்றான். அந்த ஆண் மானுக்கு, இந்த அனுபவம் புதிது. அம்மாக்காரி காய்கறிக்காரியிடமோ, கார்ப்பரேஷன் குப்பை அம்மாவுடனோ போர் தொடுக்கும் போது, தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு, அந்த வீட்டிலும் அதன் சுற்றுப்புற வளாகத்திலும் ஒரு நிசப்தம் நிலவுவது போல் ஒரு அனுமானத்தைக் கொடுத்துவிட்டு தன் பாட்டுக்கு நடப்பவன். ஆனால் இப்போதோ அப்படி நடக்க முடியாமல் முட்டிக்கால்களுக்குக் கீழே ஊற்றுக் கண்களாய் துளிர்த்த ரத்தத் துளிகளை தலைகுனிந்து பார்த்தபடியே நின்றான். பிறகு அவன் ஒருபொருட்டே அல்ல என்பது போல் அவனுக்குப் புறமுதுகு காட்டி வீரத்தனமாய் நடந்த சரோசாவின் பின்தலையை, பிடரியில் கைவைத்தபடியே பார்த்தான். இப்படியும் நடக்குமா என்ற சந்தேகம். நடந்துவிட்டதே என்ற ஆதங்கம்... ஒரு பெண்ணோடு போட்ட முதல் சண்டை. கலகலப்பு இல்லாத கைகலப்பு... ஏமாற்றம்... எரிச்சல்... இயலாமை.
இளங்கோ, எல்லாம் முடிந்து விட்டது என்பது போல் திரும்பி வீட்டுக்குப் போகத்தான் போனான். இதற்குள் அந்தத் தெருமுனையிலிருந்து நிதானமாக வந்த ஒரு 'பத்துப் பாத்திரம்மா' இன்னும் முடியவில்லை என்பது போல் ஒப்பாரி போடாத குறையாக நடந்து முடிந்த விவகாரத்திற்கு அதிரடி வர்ணனை கொடுத்தாள்.
"அடிப்பாவி! ஒரு ஆம்பிளைய இப்படியா அடிச்சுப் போட்டுட்டுப் போறே? நடுரோட்ல ஒரு அறியாத பையன நாய் மாதிரி அடிச்சுப் போட்டுட்டுப் போறியேடி... பாவி! ஆம்புளய கை நீட்டலாமாடி? என்ன தினாவட்டா நடக்கறாள்? என்ன பிள்ளாண்டாப்பா நீ...? என்ன ஆம்புள நீ?"
இளங்கோ, அடி கொடுத்த வலியைவிட, அவள் கொடுத்த வலியில் அல்லாடினான். போதாக் குறைக்கு, ஜன்னல்கள் வழியாக எல்லோரும் அவனை ஏளனமாய் பார்ப்பது போல் இருந்தது. இப்போது, அவளைப் பார்த்து ஓடினான். அவளுக்கு முன்னால் எதிர் திசையில் வந்த பேண்ட் ஸ்லாக் பேர்வழிகளின் காதுகளில் விழும்படி கத்தினான்:
"அதோ போறாளே... அவள் திருடி... பொம்பள ரவுடி... பிடிங்க சார் ; பிடிடங்க..."
பேண்ட்-ஸ்லாக் பேர்வழிகளும், அவளைப் பிடிக்கப் போவது போல் கடிகாரக் கைகளை செங்குத்தாய் நீட்டி, முன் கைகளை கொக்கிகள் போல் மேலே கொண்டுபோய் குவித்து, சாலையை அடைப்பது போல் வழிமறித்தார்கள்.
உடனே சரோசா, சர்வ சாதாரணமாக, கோணிப் பைக்குள் கையை விட்டு, இரும்புத் தடியை எடுத்து, வலது கையில் பிடித்து, தோளுக்கு மேல் உயர்த்தி, தன்பாட்டுக்கு நடப்பது போல் நடந்தாள். சாலை மறியல்காரர்கள் அவளுக்கு பயபக்தியுடன் வழி விட்டார்கள். 'பிடிங்க பிடிங்க' என்று குரல் கொடுத்து ஓடிவருபவனை எரிச்சலோடு பார்த்தபடி நடையைத் தொடர்ந்தார்கள்.
இதற்குள், ஒரு திட்டிலில் போய் நின்று திரும்பிப் பார்த்தாள் சரோசா. அவனைப் பார்த்து 'டாடா' காட்டிவிட்டு, கார்ப்பரேஷன் மைதானத்திற்குள் நுழைந்து, அதற்கு அப்பால் உள்ள கட்டிடக் குவியல்களுக்குள் மறைந்து கொண்டிருந்தாள்.
முட்கம்பிகள், பேண்டை துவாரங்களாக்கி, அவற்றில் ரத்தத் துளிகளை மேலோங்கச் செய்தபோது, இளங்கோ, அப்படியே திகைத்து நின்றான். பின்னால் கடாமுடா சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.
ஒரு ஆட்டோரிக்ஷாவில் இரண்டு சிவப்புத் தொப்பிகளும், அவன் அம்மாவும் வந்து கொண்டிருந்தார்கள். அந்த ஆட்டோவை வழிமறித்து 'பத்து பாத்திரக்காரி' ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள்.
ஆட்டோ ரிக்ஷாவும் அவனும் பாதிப்பாதி வழியில் சந்தித்துக் கொண்டார்கள். அம்மாக்காரி, ஆத்திரம் தாங்காமல் கத்தினாள் :
"ஏண்டா அவள்கிட்ட அடிபடறதுக்கா உன்னை வளர்த்தேன்? உங்க தாத்தா எப்பேர்ப்பட்டவர்ன்னு உனக்குத் தெரியுமா...? புலிக்குப் பிறந்து பூனையா போயிட்டியேடா... ஏறுடா, ரிக்ஷாவில ஏறு. இவங்களோட போய், அவள் கையில விலங்கு போட்டு நம்ம வீட்டுப் பக்கமா இழுத்துக்கிட்டு வா. எவ்வளவு செலவானாலும் சரி.”
கடைசி வார்த்தையில் ருசிகண்ட கான்ஸ்டபிள்கள், அவனை ஏறச்சொல்லி, முகத்தை ஏற்ற இறக்கமாக ஆட்டினார்கள். அம்மாக்காரி இறங்கிக்கொண்டாள். இளங்கோ ஏறிக்கொண்டான். ஆட்டோ பறந்தது.

