Chapter 21

சரோசா, போக மனமின்றி, போவது போல் போனாள். இப்போது குறுக்கு வழியில் நடக்காமல் பஸ்கள் போகும் சாலை வழியாக நடந்தாள். தனிமையில் நடக்க நடக்க, அவளுக்கு கால்கள் துண்டித்து தரையில் விழுவது போல் இருந்தது. மலைபோல நம்புன அண்ணாத்தே இப்படிச் செய்திட்டாரே. நேர்ல கூப்பிட்டு கன்னத்துலகூட இரண்டு போட்டு புத்திமதி சொல்லியிருக்கலாம். போலீஸ்ல அநியாயமாய் மாட்ட வைக்கிறதுக்குத் திட்டம் போட்டுருக்காரே... இன்னா மனுஷன்? அண்ணாத்தே காலுல போய் விழலாமா, வேணாமா? இவரு இன்னா அண்ணாத்தே? நானு நினைக்கிற மாதிரி அவரு நினைச்சிருந்தா இப்படிச் செய்வாரா? அண்ணாத்தே என்கிறது - நாய், நரி, பண்ணி என்கிறது மாதிரி ஒரு பேரு.

சரோசா, வேகவேகமாய் நடந்தாள். அவன் வாழும் இடத்திற்கே சென்று அங்கு இரண்டில் ஒன்றைப் பார்த்துவிட வேண்டும் என்ற வேகம். அந்தச் சமயம் பார்த்து 'அண்ணன் காட்டிய வழியம்மா' என்ற பாட்டு; அவள் அழுது விட்டாள். துக்கம் தாங்காது சிற்சில இடங்களில் நின்று நின்று அழுகை சுமையை இறக்கி வைத்தாள். "நாயினா, நாயினா, நானு வெட்டுப்பட்டுப் போயிட்டா ஒனக்கி யாரு இருக்கா நாயினா?"

சரோசா, துரையின் வீட்டுக்குப் போகத்தான் நினைத்தாள். அவன் மனைவியின் தலைமுடியைப் பிடித்து, தன் பங்குங்கும் இரண்டு சாத்துச் சாத்த வேண்டும் என்று நினைத்தாள். துரையைப் பார்த்து "பொட்டப் பையா” என்று கேட்க வேண்டும் என்று நடந்தாள். ஆனாலும், துரை அண்ணன் வீட்டுக்குப் போக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவன், இடுப்பு லுங்கி அவிழ்ந்து கிடக்க, டவுசர் பட்டை வெளியே தெரிவது தெரியாமல் கடற்கரையோ மேடு ஒன்றில் இரண்டு கைகளையும், பின்னால் ஊன்றியபடி, முதுகை வளைத்துப் போட்டு உட்கார்ந்திருந்தான். அவன் முன்னாலும், பின்னாலும் சிகரெட் துண்டுகள் கருப்பு முகமும், வெள்ளை உடலுமாகிக் கிடந்தன. ஆள்காட்டி விரலில் உள்ள சிகரெட் சுடுவது தெரியமலே அவன் அல்லாடினான்.

தனக்குத்தானே, பேசிக்கொண்டான் :

"இனிமேல் யாருக்காக வாழ வேண்டும்? எதுக்காக வாழ வேண்டும்? எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். பெட்டிக்கடை வெச்சி பிழைப்பு நடந்தப்போ இவள் பெட்டிப் பாம்பாத்தான் கிடந்தாள். ஒரு தடவ, நெருங்கின தோஸ்து ஒருத்தன் வீட்டுக்கு வந்திருந்தான். வெளியில் புயல் மழை. நாலு) வருஷத்துக்கு முன்னாடி நல்லா ஞாபகம் இருக்கு. அவனுக்கு என்னோட லுங்கிய கொடுத்தேன். மறுநாளு வீட்டுக்காரி 'எப்படிய்யா, அவன் கட்டின லுங்கியை நான் துவைக்கிறது? ஒன் லுங்கிய அந்த முடிச்சுமாறி கட்டுவதப் பார்க்கும் போது எனக்குக் கூச்சமா இருந்தது. பேசாம லாண்டரியில போடு' இப்படிச் சொன்ன என்னோட பத்தினியை அண்ணாத்த மயக்கிட்டானே. இஸ்திரிக்குப் போடுன்னு சொன்னவள் என் நெஞ்ச இஸ்திரி போட்டுட்டாளே. யாருக்கிட்ட சொல்லுவேன்? பெண்டாட்டி அடங்காப்பிடாரின்னு சொல்லலாம். வாயாடின்னு சொல்லலாம். அடுத்தவன்கிட்ட போகிறவள்னு எப்படிச் சொல்லுறது? நான் படுத்த கட்டிலிலேயே இன்னொருத்தன் படுக்கான்னு எப்படிச் சொல்லுறது? ' அவரு என்கிட்டத்தான் சொல்லுவாரு... ஒன்கிட்ட சொல்லணும்னு அவசியமில்லே. புரிஞ்சா புரிஞ்சுக்கோ, புரியாட்டி இருந்துக்கோ'ன்னு ரப்பேரி முண்ட எப்படிச் சொல்லிட்டா! அண்ணாத்த வீட்ல டெலிபோன் வச்சப்பவே தெரியும், அது அவன், அவளுக்குப் போட்ட தாலிண்ணு. நானு இருக்கப்போகூட, அந்த முண்ட முகத்த டெலிபோனுல மறைச்சிட்டு ரகசியமா பேசினது இப்போதுதான் புரியுது. கலக்கலில சிக்கி கலங்கிட்டேனே. அண்ணாத்தேகிட்ட சாராயத்துக்கு உதவிக்குப் போனா, அவன் என்னோட சம்சாரத்துக்கே உதவியா வந்துட்டானே. அய்யோ, அய்யய்யோ.''

முன்பெல்லாம் இப்படிப்பட்ட சந்தேகம் வரும்போது, அதை. சாராயத்தால் கழுவிய துரைக்கு, இப்போது மனைவி வெளிப்படையாகவே சொல்லி விட்டது உள்ளத்தை வேர்க்க வைத்தது. வீடுகூட அவள் பேரில்தான் இருக்கு. இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைக்கப் போன துரை, கருகிய சிகரெட் கையில் இருப்பதைப் பார்த்துவிட்டு, அதை விரல் நுனியிலேயே கசக்கினான்.

சரோசா, அவன் கையை எட்டிப் பிடித்தாள்.

“ஒன்ன எப்படியோ நினைச்சேன். கட்சில என் கையில விலங்கு போட்டுப் பார்க்கிறதுக்கு ஆசைப்பட்டுட்டியே பாவி, படுபாவி."

துரை, அவளை அரைக்கண் பார்வை போட்டுப் பார்த்தான். பிறகு அவள் கைகளில் முகத்தைப்போட்டு ஏங்கி ஏங்கி அழுதான். அழுத கண்களை அவள் புறங்கையாலேயே துடைத்துக் கொண்டு அவளைப் பார்க்காமலேயே பேசினான் :

“எய்தவன் எங்கேயோ, நானு அம்புவட இல்லமே. அந்த அடங்காப்பிடாரி காட்டேரி நாய்தான், ஒன் அண்ணாத்தேயோட அம்பு. நானுயாரு, எனக்கே புரியல. இந்தாமே சரோ, நீ கேக்காக்காட்டியும் நானே சொல்லியிருப்பேன். ஒன்னத்தாம்மே, இங்கிருந்து தப்பிச்சுப் போம்மே. இல்லாட்டி ஒன் உசிரு உனக்கில்லே. என் நிலைமை, கரையான் புத்தெடுக்க கருநாகம் குடியிருக்கிற கதையாப் போச்சும்மே. என் வீட்டிலேயே எனக்கு ஒரு எதிரிய உண்டுபண்ணி, அவளையும் அபேஸ் பண்ணிட்டாம்மே. இந்த அண்ணாத்தே உருப்படுவானா?”

துரை மீண்டும் அழுதான். அவளை ஆறுதல் படுத்துவதற்குப் பதிலாக ஆறுதல் தேடுவது போல் ஏக்கமாகப் பார்த்தான். சரோசாவிற்கு அவனைப் பார்க்கப் பார்க்க ஒரு பூதம் தனியாய், பூதாகாரமாய் அண்ணாத்தை ரூபத்தில் பயங்கரப் பற்களோடு, அந்தப் பற்களே ஆயுதங்களாகத் தோன்றும்படி வெடிச் சிரிப்பாய் சிரிப்பது போல் தோன்றியது. அவளுள்ளும் ஒரு உறுதி பிறந்தது.