Chapter 6
இளங்கோவின் அம்மா, பாக்கியம் வீட்டுக்கு வெளியேயும் உள்ளேயுமாய் அல்லாடினாள். ஒன்பது மணிக்கே படுத்துக் கொள்ளும் இளங்கோ, இரவு பத்து மணியை தாண்டியும் வீட்டுக்கு வராதது, அவளுக்கு அந்த வீடே ஒரு காடு மாதிரி தோன்றியது. கேட்டை இழுத்து வெளியே வந்து, தெரு முனை வரைக்கும் கழுத்தை வளைத்துப் பார்த்தாள்.
தேக்கு சோபா செட்டில் கால்மேல் கால்பின்னி அவள் கணவர் சுப்பையா எதிலும் சம்பந்தப்படாதவர் போல், சாய்ந்து கிடந்தார். அவருக்குப் பக்கத்தில் சபாரி உடையில் கால் மேல் கால் போட்டு, தலைமுடிக்கு 'மை தீட்டி' உட்கார்ந்திருந்த மிஸ்டர் ரமணனை மனதிற்குள் திட்டிக்கொண்டே ஒப்புக்குச் சிரித்துப் பார்த்தாள். இந்த சோபாசெட்டோடு ஒட்டி, எதிரே போடப்பட்டிருந்த இரண்டு துண்டு நாற்காலிகளில் பாவாடை தாவணி மல்லிகாவும், சேலை கட்டிய பாமாவும் எதையோ கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள். பாக்கியம், அவர்கள் சத்தம் அடங்கும்படி புலம்பினாள்:
"என் பிள்ளைய காணுமே; எனக்குப் பயமா இருக்கே. ரோஷத்துல எங்கேயும் ஓடிப் போயிருப்பானோ? ஒருவேளை மருந்த சாப்பிட்டுட்டு-இல்லாட்டி அந்தப் பொம்பள ரவுடி அவன அடிச்சுப் போட்டிருப்பாளோ; ஏங்க, உங்களைத்தான், அவனைத் தேடிப் பார்த்துட்டு வாங்களேன்.'
சுப்பையா ஒல்லி மனிதர்; மனைவியின் கனத்தில் பாதிகூடத் தேறாதவர். ஆனாலும் அவளை விட தாம் உயரம் என்று மனதைத் திடப்படுத்திக் கொள்பவர். இப்போது எழுந்து நின்றே கத்தினார்:
"தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளினாளாம், எவளோ ஒரு மூதேவி. அவனைத் தொரத்துனது நீ. அவனும் அப்பன் மாதிரி ரோஷம் கெட்டவனா இருப்பான்னு நீ எப்படி நினைக்கலாம்?”
மிஸ்டர் ரமணன் மட்டும் அங்கே இல்லையானால், பாக்கியம் சுப்பையாவை இந்நேரம் உப்பு வைத்து ஊறவைத்திருப்பாள். பிளட் பிரஷர்க்காரர். அப்படியும் பொறுக்க முடியாமல், அவருக்குத் தனியாக டோஸ் கொடுக்க நினைத்து “ஏங்க, கொஞ்சம் இந்தப் பக்கம் வறீங்களா” என்றாள் பணிவாக -மிகமிகப் பணிவாக. சுப்பையாவா கொக்கா, கண்டுக்கவில்லை. அவருடைய நீண்ட நாள் சிறைபட்ட உணர்வுகள், இப்போது விடுதலை வேகத்தில் வெளிப்படுவதைப் புரிந்து கொண்ட, ரமணன் சமயோசிதமாக சமாளித்தார்.
"சுப்பையா சாருக்கு எப்பவுமே ஜோக்குதான். ஒரு தாயோட மனச ஏன் புரிஞ்சுக்கத் தெரியல? எம் மனசு அவங்கள விட அதிகமாக சங்கடப்படுது. ஏன்னா, என் வீட்டு இரும்புக் கம்பிய எடுக்கிறத தடுத்தவரு எங்க போயிட்டாருன்னு தெரியலையேன்னு, ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு."
மிஸ்டர் ரமணன், தொடர்ந்தார்.
"நானும் இந்த ஏரியாவில் ஒரு கூர்க்கா போடணுமுன்னு ஒவ்வொரு வீட்டு முன்னாலயும் கரடியா கத்துறேன். யார் கேட்கிறாங்க? இப்பத்தான் இந்த நாடே குட்டிச்சுவராப் போகுது. ஓட்டுப் போடப் போகமாட்டோம். அதே சமயத்தில் அரசியலை அலசுவோம். சினிமாவுல கஷ்டப்படுகிற கேரக்டர்களுக்குக் கண்ணீர் விடுவோம், ஆனால் வாழ்க்கையில கஷ்டப்படுகிறவங்களுக்கு தண்ணி காட்டுவோம். இதுதான் நம்மோட நேஷனல் கேரெக்டர். நம்ம நேஷன்ல் கேரெக்டர் இருக்குதே... அப்படி ஏதும் இருக்குதா என்ன?”
ரமணனின் மகள் பாமா, தந்தையை வெடுக்கெனப் பார்த்தாள். சந்தனத்தையும், குங்குமத்தையும் கலந்தது மாதிரியான நிறம். அடிக்கடி பிடரி முடியை மேலே தூக்கித் தூக்கி வைப்பாள் என்பதைத் தவிர குற்றம் சொல்லும்படியாக எதுவும் கிடையாது.
“என்ன டாடி... இப்போ போய லெக்சர் அடிக்கிறீங்க! பாவம் ஆன்டி எப்படித் துடிக்கறாங்க பாருங்க. நீங்களும், அங்கிளும் அங்கே இங்கே போய் தேடுங்க.'
"ஓகே.. ஓகே... மிஸ்டர் சுப்பையா, நீங்க வரப்போறீங்களா, அல்லது இருக்கப் போறீங்களா?"
சுப்பையாவும் எழுந்தார். அறைக்குள் போய் ஒரு கோணிப்பை சட்டையை எடுத்துப் போட்டார். அகப்பட்டுக் கொண்டார் என்ற திருப்தியில் அங்கே வந்த மனைவியை விட்டு, லாவகமாக விலகி, வெளியே வந்து, மிஸ்டர் ரமணனோடு சேர்ந்து நின்றுகொண்டு, அவளை இளக்காரமாகப் பார்த்தார். மிஸ்டர் ரமணன் பூட்ஸ்களுக்குள் கால்களை சொருகப் போனபோது -
இளங்கோ உள்ளே வந்தான். பாமாவை பார்க்கும்போதெல்லம், எப்பவும் ஒரு புன்னகை சிந்துவானே, அந்த சிந்தல்கூட இல்லாமல் அங்கிருந்தவர்களை ஏறெடுத்தும் பார்க்காமல், அவர்கள் இருந்த வழியாய் நடந்து, எதிர்ப்பக்கமாய் இருந்த தனது அறைக்குள் போனான். வழக்கம் போல் அவன் உள்ளே போனதும் எரியும் பல்ப் எரியவில்லை. அவன் பீஸாகிக் கிடந்தான். பாக்கியம் ஓடோடிப் போய் லைட்டைப் போட்டாள். "கெட்டவுட், கெட்டவுட் அம்மா ஒங்களால இப்பவும் அவமானப் பட்டுட்டு வாறேன்” என்று அவன் கத்துவது கேட்டு சுப்பையா மகிழ்ச்சியோடு ஓடினார். மல்லிகா மாத நாவலோடும், பாமா தந்தையோடும் ஓடினார்கள். ரமணன் உபதேசித்தார்:
"மை டியர் யங்மேன், என்ன நடந்தாலும், அதையும் அதை நடத்தினவங்களையும் தீர்த்துக்கட்ட இந்த அங்கிள் இருக்கேன். கமான், என்ன நடந்ததுன்னு சொல்லுப்பா... அப்புறம் இந்த அங்கிள் என்ன செய்யப் போறேன்னு பாரு, கமான் மை பாய், கமான்."
இளங்கோ கண் விழித்தான். அதில் அம்மா பட்டதால், மீண்டும் மூடிக்கொண்டான். பிறகு கண்களை மெல்லத் திறந்து, அங்கிள் ரமணனை பயபக்தியோடு பார்த்தான். அவரைப் பார்க்கப் பார்க்க ஒரு நிமிர்வு ஏற்பட்டது. முன்பெல்லாம், குண்டோதரன் என்று அவரையே கேலி செய்தவன் இவன். இப்போது, அவரை தனக்கு உதவப்போகிற மிகப் பெரிய ரவுடியாக எண்ணினான். அன்று காலையிலிருந்து இரவு வரை நடந்த விவகாரங்களை அம்மாவைக் கோபமாகப் பார்த்தபடியும், பாமாவை குளுமையாகப் பார்த்தபடியும், மல்லிகாவைப் பார்க்காதபடியும் சொல்லி முடித்தான். கடைசியில், பாமா முன்னால், தனது கதாநாயகத்தனம் குறைந்துவிடாமல் இருக்க, முகத்தை நிமிர்த்தி கம்பீரமாகச் சொன்னான் :
"அவள் வழிமறிச்சவுடனே எப்படித்தான் அப்படி ஆத்திரம் வந்ததோ எனக்கே தெரியல, அவளை ஒரேத்தள்ளா கீழே தள்ளினேன். அப்புறம் அங்கே பிடிச்ச ஓட்டத்தை இங்கே வந்துதான் முடிச்சேன்.''''
அவனை கைகுலுக்கி பாராட்டப் போவதுபோல், பாமா கைகளை நீட்டினாள். அவனும் தனது கையை நீட்டுவது போல் இருந்தது. ஆனாலும் பாமா, தானாகவே வெட்கப்பட்டு, தானாகவே நீட்டிய கைகளை மடக்கிக் கொண்டு அவனை சாய்த்துப் பார்த்தாள். ஒருவர் வீட்டுக்கு ஒருவர் வந்து, குடும்பத்தாரோடு பொதுப்படையாகப் பேசி, அதனாலேயே மண்ணுக்குள் வேராய் மண்டிக் கிடந்த அவளின் காதல் அல்லது நேசம் இப்போது சம்பிரதாயத் தடையை மீறி வெளிப்படப் போவது போல் இருந்தது. மனதுக்குள் தன்னை அறியாமலே பற்றாக்குறையாய் இருந்த ஒரு வேற்றிடம் இப்போது பற்றாலும் பாசத்தாலும் இட்டு நிரப்பப்பட்டது போன்ற ஒரு புதுச்சுமை. அந்த சுமையிலும் ஒரு சுவை.
பாமா, உதடுகளை சுவைப்பது போல் கடித்துக் கொண்டு அவனைப் பார்த்தாள். இனம் தெரியாத ஒன்றுக்கு இனம் கிடைத்த ஏகாந்தம். அரூபமாய் நின்ற உணர்வை ரூபப்படுத்துவது போன்ற திருப்தி, பெண்மையின் மென்மையை அன்றுதான் அடையாளம் கண்டது போன்ற ஒரு பரவசம்.
"அந்த ஊமன் ரவுடிக்கு போலீஸ் இன்ஃபுளூயன்ஸ் அதிகமாக இருக்கும்போலத் தோணுது. போலீஸ், இளங்கோவை விட்டு வைக்க மாட்டாங்கனு நினைக்கிறேன். கற்பழிப்பு முயற்சின்னு போலீஸ் சொல்லிட்டால், அப்புறம் நம்ம பக்கமே யாருமே நிக்க மாட்டாங்க. இப்பவே நாம் ஏதாவது செய்தாகணும்.”
ரமணன் யோசிப்பவர் போல், தலையை சொறிந்தபோது, பாக்கியம் ஒப்பாரி போடாத குறையாகக் கேட்டாள் :
"அய்யய்யோ... என் பிள்ளை உள்ளே போயிடுவானா? இந்த போலீஸ்காரனுங்க அட்டூழியத்த அடக்க ஆள் இல்லையா? என் மகனுக்குக் கெட்ட பேரு வந்தால், இவளுக்கும் ஒரு கல்யாணம் நடக்காதே.”
இதுவரை எந்த உணர்வையும் காட்டாமல் மாத நாவல் பாத்திரங்களை மனதில் திரையிட்டுக் கெண்டிருந்த மல்லிகா, லேசாய் கண்களைக் கசக்கினாள். பாமாதான், அப்பாவை சூடாகப் பார்க்க, அவர், வாய் திறந்தார்.
“வேலியே பயிரை மேயுது... நாடு முழுகம் மாமூல் நிலைமை இருக்கோ இல்லையோ, மாமூல்தனம் இருக்குது. இதனாலதான், என் பையன் அமெரிக்காவிலேயே எம்.பி.ஏ. படிச்சுட்டு அங்கேயே செட்டிலாயிட்டான்."
ரமணனுக்கு ஒரு திருப்தி. எந்த வீட்டுக்கு எத்தனை தடவை போனாலும், அந்த வீட்டில் அத்தனை தடவையும் தனது மகன் அமெரிக்காவில் இருப்பதைச் சொல்லாவிட்டால் அவருக்கப் பேச்சே வராது. ஆனால், பாமா அப்பாவை அதட்டினாள்:
"டாடி, நம்ம பிரதரோட அமெரிக்கப் பெருமையை நாளைக்கு வச்சுக்கலாம். போலீஸ்காரங்கள் இளங்கோவை கைது செய்யறதுக்கு முன்னால டூ சம்திங். பிளீஸ். ஏதோ ஒரு டெப்டி கமிஷனர் உங்களோட கிளாஸ்மெட்டுன்னு அலட்டிக்குவீங்களே, அது உண்மையா பொய்யான்னு இப்பவே தெரியணும். இளங்கோவுக்கு மட்டும் நியாயம் கிடைக்காட்டி, நானே போலீஸ் ஸ்டேஷன் முன்னால போய் மறியல் செய்வேன். இதையும் உங்க பிரெண்ட்கிட்ட டெலிபோன்ல சொல்லுங்க டாடி."
மிஸ்டர். ரமணன், கம்பீரமாக எழுந்தார். டெலிபோன் இருந்த அறைக்குள், சுப்பையா அவரை வழிநடத்தினார். டெலிபோன் எண்களைச் சுழற்றினார். இதற்குள் பாமாவின் கண்ணசைவில் இளங்கோவும் அவளோடு அறைக்குள் வந்தான். லைன் கிடைத்ததும் ரமணன் வெளுத்துக்கட்டினார்.
“நீங்க யாரு? டெப்டி கமிஷனரோட பி.ஏ.வா? அவரு இப்ப ரொம்ப பிஸியா? என்னோட கிளாஸ்மெட்டுய்யா; பிரச்சினையும் பெருசுய்யா. இந்த நாடே குட்டிச்சுவராகப் போனதுக்கு உன்னமாதிரி பி.ஏ.க்கள் தான்யா காரணம். என்ன? உன் கிட்ட சொல்லுணுமா? சொல்றேன், சொல்றேன். என்னோட பக்கத்து வீட்டுப் பையன் - குட் பாய் ஒரு பொம்பள ரவுடி அவன அடிச்சது மட்டுமில்லாம, இவன் என்னமோ அந்த அழகிய கற்பழிக்கப் போனதா போலீஸ்ல சொல்றாளம். அந்த மானங்கெட்ட போலீசும் அவள் சொல்றத நம்புதாம். வாட் எ ஷேம்! என்னய்யா சொல்றே? அந்தப் பையனை போலீஸ்ல சரண்டராகச் சொல்லணுமா? நீ யாருய்யா அத சொல்றதுக்கு? டெப்டி கமிஷனர் கிட்ட லைன கொடுய்யா. ஹலோ... ஹலோ...!"
ரமணன், டெலிபோனில் கிலோ கணக்கில் ஹலோ போட்டார். இறுதியில் போனை உடைப்பது போல் வைத்து விட்டு, "லைனை கட் பண்ணிட்டான். இந்த நாடே இப்போ, பி.ஏ.க்களாலதான் ஆளப்படுது. போலீசும் இதுக்கு விதி விலக்கு இல்ல" என்று சொல்லிவிட்டு, பரக்கப் பரக்கப் பார்த்தார். பாமா, ஒரு யோசனை சொன்னாள் :
“ஏன் டாடி... பேசாமல் டெப்டி கமிஷனர் வீட்டுக்கே போயிட்டு வந்திடுங்களேன்."
“போகலாம்தான். அங்கேயும், ஏ.கே-47 துப்பாக்கியோட இருக்கிற ஒருத்தன் தடுப்பானே. டோன்ட் ஒர்ரி... நாளைக்குக் காத்தால எட்டு மணிக்குள்ள அவரை பிடிச்சுடறேன். அப்போ பி.ஏ.-வும் இருக்க மாட்டான்; எம்.ஏ.வும் இருக்க மாட்டான்; கவலைப்படாதே இளங்கோ."
"இவ்வளவு நடந்தும் எப்படி சார், கவலைப்படாம இருக்க முடியும்?"
“ரமணன் ஸார்... நீங்கதான் என் பிள்ளைய மீட்டுத்தரணும். இந்த மனுசனை நம்பிப் பிரயோசனம் இல்லை.”
"கவலைப்படாதீங்க பாக்கியம்மா. இப்படி குழந்தை மாதிரியா அழுவறது? பாருங்க உங்க டாட்டர் மல்லியை... அவளை மாதிரி கம்பீரமாக இருக்கணும்."
"ஆமாம் ஆன்ட்டி, டாடி ஏதாவது செய்யாமல் அவர நான் விடப்போறதுல்ல. ஒருவேளை நான் மட்டும் வீட்ல இருந்து, இந்தப் பொறுக்கிப் பொண்ணை நான் தடுத்திருந்தால் என்னை கொலை பண்ணிட்டு இந்த ஆறு பவுன் செயினை கழுத்தோட சேர்த்து அறுத்துட்டுப் போயிருப்பாளே. எதுக்குச் சொல்றேன்னா, இளங்கோவோட பிரச்சினை, என்னோட பிரச்சினை. அவரோட தியாகம் வீண்போகாது."
மிஸ்டர் ரமணனும், அவர் மகள் பாமாவும் எழுந்தார்கள். இளங்கோ பாமாவை சோர்வோடு பார்த்தபோது, அவளோ, 'யாமிருக்கப் பயம் ஏன்?” என்பது போல் முருக தோரணையோடு உள்ளங்கையை நிமிர்த்திக் காட்டினாள். அவர்களோடு சேர்ந்து நழுவப்போன கணவனை “எங்கே போறீங்க” என்று பாக்கியம் அதட்டினாள். அவரோ, "ஒரே இருட்டா இருக்கு. அவங்களை விட்டுட்டு வாறேன்” என்று முன்னால் நடந்தார். இனிமேல் அவள் தூங்கிய பிறகுதான் வருவார்.
இளங்கோ, சாய்வு நாற்காலியையே கட்டிலாக்கினான்.

