Chapter 25

ருக்குமணி, தெருவிலேயே நின்றுகொண்டிருந்தாள். அவள் அருகே ஒரு அகலமான பொம்மனாட்டி. அட்டே அந்த தடிச்சியா? இளங்கோ சாரோட அம்மாவா?

சரோசா, அவளை அடையாளம் கண்டதுபோல், பாக்கியம்மாளும் அவளை அடையாளம் கண்டுகொண்டாள். ருக்குமணி சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் திக்குமுக்காடியபோது, அவள் புருஷன் கோவிந்து, வெளியே வந்து சரோசாவைப் பார்த்து சந்தோஷமாகப் பேசினான் :

"இன்னாம்மே, சரோ, புடிச்சாலும் புடிச்சே புளியங்கொம்பாப் புடிச்சே! பிடிய விட்டுடப்பிடாது... அந்த பிள்ளக்கா பையன் இளங்கோ, ஒன்ன லாக்கப்புல வச்சாலும் வச்சான், அப்பால அதுக்கு அபராதம் கட்டுறாப்புல ஒன்ன கவருமென்டு வேலையிலயும் வச்சுட்டான். நினைக்க, நினைக்க ஒரே கிக்காக்கீது.'

பாக்கியம்மா, சரோசாவையும், ருக்குமணியையும் மாறி மாறிப் பார்த்தாள். பிறகு ருக்குமணியை அடிக்கப்போவது போல் கைகளை ஆட்டியபடியே கத்தினாள்.

"ஏண்டி, சில்லாட்டே, நேத்துக்கூட இவள் வேலூர்ல இருக்காள்னு சொன்னே; வெளியில வாரதுக்கு ஆறு வருஷம் ஆகும்னு இளங்கோ சொல்லும்போது, நீயும் ஆமாம் போட்டே. இவள் என்னடான்னா தேங்கா கொழுக்கட்ட மாதிரி இப்படி நிக்கா. என்னடி மூடுமந்திரம்? என் அப்பாவி மவன எதுக்குடி இப்படி மடக்கிப் போட்டு இருக்கீங்க? சொல்லுடி! சொல்லுங்கடி!”

இயல்பிலேயே யானை மாதிரி தோற்றம் கொண்ட பாக்கியம்மா, அதற்கு ஏற்றாற்போல் இரண்டு கைகளையும் தும்பிக்கை மாதிரி ஒன்றாக்கிக்கொண்டு 'கராமுரா' சத்தத்தோடு நின்றாள். 'பூக்காரி பய மவள் பேசட்டும்' என்று கர்ஜனையோடு காத்திருந்தாள். ருக்குமணியோ, செய்வதறியாது திகைத்தாள். இரண்டு நாட்களுக்குமுன் பாக்கியம்மா வீட்டுக்கு சாயங்காலமாய் வாடிக்கை பூ கொண்டு போனபோது, தாய்க்காரி, இவளுக்குக் கேட்கும் குரலில் இளங்கோவிடம், "ஏண்டா, என்னையும், ஒன்னையும் அடிச்சுப் போட்டுட்டுப் போன சேரிக்காரிய, ஒன்னோட ஆஸ்பத்திரி ரூம்ல பார்த்ததாய் ஒங்கப்பா இவ்வளவு நாளைக்கிப் பிறகு இன்னிக்கிச் சொல்றார்” என்று கேட்டாள். ருக்குமணி கூட திடுக்கிட்டு கூடையிலிருந்து எடுத்த பூவை பாம்பு மாதிரி சுருட்டி வைத்தாள். இளங்கோ சிறிது அசந்துவிட்டு பிறகு “அப்பாவைப் பத்தி ஒனக்குத் தெரியாதம்மா? அரை மணி நேரத்தில் சாப்பிட்டது என்னன்னு கேட்டாக்கூட அவருக்குத் தெரியாதே. அந்த சரோசா நம்மக்கிட்ட தப்பிச்சிட்டாலும் ஒரு கொல கேசுல மாட்டிக்கிட்டு வேலூர்ல இருக்காள். திரும்பி வர்றதுக்கு ஆறு வருஷம் ஆகும்” என்றான். அதோடாவது அவன் விட்டிருக்கலாம்; "வேணுமுன்னா நம்ம ருக்குமணியைக் கேளு” என்றான். உடனே ருக்குமணியும் 'ஆமாம்' போட்டாள்.

அப்போது பாக்கியம்மாளும், அவர்கள் பதிலில் சமாதானம் ஆனவள்போல், அங்கில்லாத கணவனை ஒரு பிடிபிடித்தாள். "பாவி மனுஷன் எனக்குன்னு வாய்ச்சாரு பாரு. ஆட்கள அடையாளம் காணுறது அவருக்குக் குதிரக்கொம்பு மாதிரி. ஒரு தடவ கோயிலுக்குப் போனோம். நானுன்னு நினைச்சி, அம்பாள் குங்குமத்த இன்னொருத்தி நெத்தியில வெச்சி, கைய ஒடிக்க கொடுத்தவரு. இவரையும் வேலூருக்கு அனுப்பணும். அப்பதான் என் மனசு ஆறும்."

இந்தப் பின்னணியை யோசித்துக் கொண்டி டிருந்த பாக்கியம்மாளுக்கு, இப்போது கோபம் கொந்தளித்தது. கணவனே கை நீட்டாத தன்னை அடித்துப் போட்டவள், வேலூரில் இருக்காமல் இதோ விலாப்பக்கம் நிற்கிறாள்! இந்தப் பூக்கார முண்டையும், அந்தப் பையித்தியக்காரப் பய இளங்கோவும் தன்னைப் பைத்தியமாக்கி விட்டதில் ஆவேசம். பேசாத பூக்காரியைப் பார்த்து, இவளே பேசினாள். ஆசை மகளுக்கு நிச்சயமாகி விட்டதால், நாளை நிச்சயதாம்பூலத்திற்காக, பூவுக்குச் சொல்ல வந்தவள், இப்போது சாவுக்குச் சொல்பவள்போல் சொன்னாள்:

"ஏண்டி பூக்காரி, ஒய்யாரக் கொண்ட! எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். எதுக்குடி பொய் சொன்ன? அந்த அப்பாவிப் பயலுக்கு இவள நீ கூட்டிக்குடுத்தியா, இல்ல இவள் ஒன்னைக் கூட்டிக் குடுத்தாளா? சொல்லுடி. எதுக்குடி என் அப்பாவிப் பையனோட சேர்ந்து நாடகம் போட்டே?"

பூக்கார ருக்குமணி, சரோசாவைப் பார்த்தாள். அவளோ, இப்படிப் பேசியதற்கு பழையவளாக இருந்திருந்தால், கெய்வியை பின்னியிருப்பாள் பின்னி. இப்போது முடியவில்லை. ஆனாலும், இளங்கோ சாரோட அம்மாவாச்சே. பால பார்க்கிறதா, இந்த பாலுப் பானை வயித்தப் பார்க்கிறதா? சரோசா நாயினாவின் முதுக்குப் பின்னால் தலையை குனித்துக் கொண்டாள். கோவிந்துதான், பாக்கியம்மா கண்ணுக்கு முன்னால் விரல்களை ஆட்டியபடியே பேசினான். இப்போது அவன் வயிற்றுக்குள் சாராயம் இல்லை, பசிதான் இருந்தது. அதுவும் கோபத்தைக் காட்டியது.

"பெரிய மனுஷி பேசற பேச்சா இது? ஒன் வயசுக்காக விட்டு வைக்கேன். எனிக்குக் கோபம் வர்றதுக்கு முன்னாடி மரியாதையா பூடு."

ருக்குமணி, கணவனைப் பிடித்து ஒரு ஓரமாகத் தள்ளினாள். அப்போது பாக்கியம்மாள் போட்ட கத்தலில் அக்கம் பக்கம் சந்தோஷப்பட்டுத் திரண்டது. பாக்கியம்மா, கோவிந்தை இளக்காரமாய் பார்த்தபடியே பதிலடி கொடுத்தாள்.

"பெண்டாட்டி பவுக தெரியல, நீயெல்லாம் ஒரு ஆம்பளையா? என் மகனப் பார்க்கும் பொதெல்லம், இவள் எதுக்கு கிசுகிசுன்னு பேசினாள்னு கேளு. இதோ, கோவில் மாடு மாதிரி தெருவில் திரியுறவள, எதுக்காக ஜெயிலுல இருக்கறதா பொய் சொன்னாள்னு கேட்டுப்பாரு. அப்போதான் நீ நெசமான ஆம்புள."

கோவிந்துக்கு, லேசாய் கலக்கம் ஏற்பட்டது. ஆமாம், இந்தப் பெரியம்மா சொல்றாப்புல இந்த ருக்கு எதுக்குப் பொய் சொல்லணும்? அறியாத பிள்ளாண்டானோட எதுக்கு இவள் கிசுகிசுக்கணும்? பழைய பாடாதி படமனாலும் நேத்துப் பார்த்த தூக்குத் தூக்கி சினிமாவுல கொலையும் செய்வாள் பத்தினின்னு நிரூபிச்சாங்களே; அப்படிப்பட்ட பத்தினியா இவள்? அதான் நான் நைட்டுல ஆசையா கூப்பிட்டா, கழுத்தப் பிடிச்சி வெளியில் தள்ளுறாளா?

கோவிந்து கோபமாகப் புலம்பினான் : “ஏம்மே, பெரிம்மா பேச்சுக்கு பதில் சொல்லும்மே. இல்லாட்டி அந்தம்மா கேட்டதெல்லாம் நானு கேட்டதா அர்த்தம். ஏம்மே சொம்மா வாய்செத்து நிக்கே? ஒனிக்கி அந்தப் பிள்ளக்காப் பையன், ஒசத்தியா பூட்டான், ஒரு பவுனு தாலிபோட்ட நானு மட்டமா பூட்டேனா?"

ருக்குமணி, இடுப்பிலிருந்த கையை எடுத்து கன்னத்தில் வைத்தாள். சொன்னால் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். அதுவே மீண்டும் போலீஸ் விவகாரமாகி, சரோசாவுக்கு விகாரமாகும். சொல்லாவிட்டால் இதுவரைக்கும் குடிகாரனாய் மட்டும் இருக்கும் ஆம்புடையான், கொலைகாரனாய் மாறுவான். “ஏய் ஒன்னத்தாம்மே, ஒனிக்கு யாருமே புருஷன்?"

“அவள் எப்படிப்பா பதில் சொல்லுவா? திருடனுக்குத் தேள் கொட்டினதுமாதிரி இருக்கும். ஏண்டி, போயும் போயும் என் அப்பாவி மகன்தானா ஒனக்குக் கிடைச்சான்? கெடக்க முடியாட்டி வேறு எவனையாவது பிடிக்க வேண்டியதுதானேடி. ஒன் மூடு மந்திரத்த கட்டுன புருஷன்கிட்டயாவது காட்டுடி."

கோவிந்து, பாக்கியம்மாளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அடியாய் கீழே குனிந்து, அரிவாள்மனையை எடுத்தபடி நிமிர்ந்தான். அதைப் பார்த்த ருக்குமணியோ சிறிதும் அலட்டிக்காமல் வீறாப்புடன் நின்றாள். இதைப் பார்த்த சரோசா, நாயினாவின் முதுகுப் பக்கத்தலிருந்து அவரது மார்புப் பக்கம் வந்தாள். பாக்கியம்மாளின் ஒரு கையை கெஞ்சுதலாய் பிடித்தபடியே, விவரம் சொன்னாள் :

"நானு சொல்றேன் பெரிம்மா. பாவம் இந்த ருக்கு... எனிக்காக பழி சொமக்காள். நடந்ததைச் சொல்றேன் கேள். ஒன் பிள்ளாண்டான் ஒத்தாசையிலதான் நானு விடுதலையானேன். எனக்குத் தெரியாது. அதனால், அது என்னோட ஏரியாவுல என்ன பாலோ பண்ணுறதா நெனச்சு, அதை ஆளுங்க வச்சு அடிக்க வச்சேன். அதுக்கு ஆக்ஸிடெண்ட் ஏற்பட்டதாச் சொன்னது பொய். பாவம், இந்த ருக்குமணி என்ன மொதல்ல போலீசுல பிடிச்சுக் குடுக்கப் போனாள். அவ கையில காலுல விழுந்து, ஒன் மவன ஆஸ்பத்திரியில சேர்த்தோம். அதுவும் என்ன மன்னிச்சி, இப்போ கவர்மெண்ட் வேல கொடுத்திருக்கு. இந்த ருக்குமணி மட்டும் இல்லாட்டி, ஒன் பிள்ளாண்டானிக்கி போட்டோவுல இன்னேரம் நீ பூப் போட்டு இருப்பே. ஒன் பிள்ளாண்டானுக்கும் எனக்கும் கூடப் பொறக்காத பொறப்பாப் பழகின இந்த ருக்கு, ஒழுக்கம் கெட்டவள்னா, பூலோகத்துல எந்தப் பொம்மனாட்டியும் ஒழுக்கமா இருக்காது. தடிமாடு மாதிரி திரிஞ்ச எனக்கி, வழிகாட்டுனது இளங்கோ சாரும், இந்த ருக்கும்தான். நான் சொல்றத சொல்லிட்டேன். அப்புறம் ஒன்னோட இஷ்டம். இந்த ருக்குவையும் ஏகநாதர மாதிரி சிலுவையில அறைஞ்சிடாதே."

பாக்கியம்மா, சரோசாவை கண் ஆடாமலே பார்த்தாள். ஆனாலும், அவளுக்கு ஏசுநாதர் சிலுவை என்பதெல்லாம், மனோ எல்லைக்குள் பிரவேசிக்க முடியாத விவகாரங்கள். இந்த சேரிப் பிசாசு, தன் மகனை ஆள் வச்சு அடித்திருக்கிறாள் என்ற எண்ணமே அவளுக்கு மேலோங்கியது. எதிரி இளக்காரமாய் நினைக்கும்படி அவளுக்கே வேலையும் வாங்கிக்கொடுத்த மகனின்மீது எரிச்சல் வந்தது, அந்த எரிச்சல் அந்தப் பெண்களை எரிக்காமல் எரித்தது :

"ஆகக்கூடி, ரெண்டு தட்டுவாணிகளும் தர்மரு மாதிரி இருந்த என் மவன பாடாபடுத்தி இருக்கீங்க. ஏண்டி ருக்கு, எல்லாமே முடிச்சிட்டியா, இனிமேத்தானா?"

"இந்தா பாரு பெரிம்மா, என்னப் பேசு, வேணாங்கலே. காறித் துப்பு, கண்டுக்கல. இந்த ருக்கப் பத்திப் பேசின, மரியாதையில்ல. எனிக்கி ஒன் மகன் கொடுத்த வேலையைவிட இந்த ருக்குவோட மானம்தான் பெரிக."

“என்னடி செய்வே எருமைமாடு?”

"எங்கே இன்னொருவாட்டி இந்த எருமைமாடு கேக்கும்படியா சொல்லு பார்க்கலாம்; வாயி வெத்துல பாக்கு போடுதா, இல்லியான்னு பாத்துடலாம்."

பாக்கியம்மாளுக்குப் பயம் வந்தது. பழைய அனுபவத்தை மனதில் வைத்தபடி, வேகவேகமாய் நடந்தாள். திரும்பிப் பார்க்காமலே போலீஸ் நாய் போவதுபோல் போனாள். தெருமுனையில் மட்டும் நின்று ஆங்காரமாகத் திரும்பினாள். ருக்கு சரோசாவின் மார்பில் தலை போட்டுப் புரண்டாள். கோவிந்து தனது தலையிலேயே அடித்துக் கொண்டான். அக்கம்பக்கங்கள், பாக்கியம்மாவை விட்டிருக்கக் கூடாது என்று உபதேசித்தன.