ஜனரஞ்சகமும் சமுத்திரமும்...
தமிழ் இலக்கிய உலகில், ஒரு சிலரின் விமர்சனத் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கும் ஒரு எழுத்தாளர் சு. சமுத்திரம். இவருடைய படைப்புகள் விமர்சனத்திற்கு உட்படும் போதெல்லாம், இவரைச் சாடுபவர்தம் எழுத்தாணியிலிருந்து எம்பிக் குதிக்கும் கேள்வி இதுதான்.
"ஜனரஞ்சகமாக எழுதுவது இலக்கியமாகுமா?”
ஜனரஞ்சகமும் இலக்கியமும் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி சமுத்திரத்தின் ஒவ்வொரு படைப்போடும் சம்பந்தப்பட்டிருக்கிறது.
ஜனரஞ்சகம் என்றால் என்ன?
ஜனரஞ்சகம் என்ற சொல்லை குறிப்பிட்ட ஒரு பொருளில் புரிந்துகொள்ள வேண்டும். அந்தச் சொல்லைப் பாமரத் தனத்தோடு சம்பந்தப்படுத்திக் கொள்வதோ, பாவிப்பதோ, அல்லது அவ்வாறு செய்து கொச்சைப்படுத்துவதோ சற்றும் சரியல்ல. ஜனரஞ்சகம் என்ற சொல், எல்லாத் தரப்பினரும் எளிதில் படித்துப் புரிந்து கொள்ளக் கூடியது என்ற அளவிலேயே இங்குக் குறிப்பிடப்படுகிறது.
ஜனரஞ்சகம் என்ற சொல்லை, ஒரு ஆரோக்கியமான பார்வையில் புரிந்து கொண்டே, சமுத்திரம் என்ற எழுத்தாளரைப் பார்க்க வேண்டும்.
ஜனரஞ்சகமாக எழுதுவது என்பது, படிக்கும் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எழுதுவது என்பதுதான். எழுதுகிறவன் சிந்தனையில் தெளிவு இருந்தால், எழுத்தில் தெளிவு இருக்கும். அதை வாசகன் புரிந்து கொள்வான். இப்படி எழுத்தாளனை, வாசகன், உரையாசிரியர் உதவி இல்லாமல் புரிந்து கொள்வதால், அந்தப் படைப்பு 'கனத்தை' இழந்துவிடாது. ஒருவர், தனக்கே தெளிவில்லாமல் எழுதுவது, தன் இலக்கு என்ன என்பது தனக்கே தெரியாமல் எழுதுவது, அதன் விளைவாகப் படிப்பவன் சிரமப்படுவது, இதில் “ஏதோ” இருக்கும் என்ற பிரமையைத் தன்னுள் விரித்துக்கொண்டு, தன் சிரமத்தையே இலக்கியத் தரமாகப் பாவிப்பது இவை எல்லாம் இலக்கிய அதிகாரமாகும்.
இலக்கியத் தெளிவும் இலக்கியத் தரமும் முரண்பட்டவை அல்ல!
படைப்பின் புரிதலும் படைப்பின் கனமும் வெவ்வேறானவை அல்ல!
ஒரு எழுத்தாளருக்கு, தான் நினைப்பதைச் சரியாகச் சொல்லத் தெரியாது போனால், அவர்தேர்ந்த எழுத்தாளனாக இருக்க முடியாது.
ஒருவரது, மொழிப் பலவீனம், அந்த மொழியின் பலவீனமாக மாறும்; அதை மறைக்க அதாவது பலவீனத்தையே பலமாக்கச் செய்யப்படும் முயற்சியே, இலக்கியக் கனம், இலக்கியத் தரம் என்ற கண்டுபிடிப்புகள், தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு எதிரியின் மீது ஏவும் அஸ்திரமே, தெளிந்த நீரைப் பார்த்து ஆழமில்லை என்பது,
பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் - இவர்கள் எல்லாம் ஜனரஞ்சகமாக எழுதியவர்கள் தான். மக்களை மனதிலேயே வைத்துக்கொண்டு எழுதியவர்கள் தான். ஜனரஞ்சகமாக எழுதியதால், இவர்கள் படைப்புகளில் இலக்கியத் தரம், வறுமையை எய்திடவில்லை.
என்றாலும், ஜனரஞ்சக எதிர்ப்பாளர்கள் எதற்கும் துணிந்தவர்கள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பாரதி, பாரதிதாசன்,பட்டுக்கோட்டையார், கண்ணதாசன் ஆகியோரையும் கைகழுவி விடுவார்கள். அவர்களுக்கும் இலக்கியத் தரம் இல்லை என்று “கத்த” வாதம் செய்து விடுவார்கள். அவசியமானால் “கம்பனுக்கும்” கல்தா கொடுப்பார்கள்.
சுமார்15 ஆண்டுகளுக்கு முன் "கார்க்கி” பத்திரிகையை அன்று நடத்திய கவிஞர் இளவேனில் ஒரு வேடிக்கையைச் செய்தார், வார்த்தைகளை வைத்து விளையாடி, ஒரு புதுக் கவிதை எழுதினார். அதன் பொருள், அவருக்கே தெரியாது. ஆனால், ஏதோ ஒரு கலையம்சமோ அல்லது கருத்து அம்சமோ இருப்பதுபோல் ஒரு பாசாங்கு செய்யும் அந்தக் “கவிதை” கணையாழிக்கு அனுப்பப் பட்டது. எழுதியவரின் பெயர் அசத்தலாக இருந்தால்தான் கவிதைக்கு மவுசு என்று கருதி, கவிஞர். இளவேனில், அருப சொரூபன் என்ற பெயரில் அனுப்பி வைத்தார். எழுதியவருக்கே தெரியாத பொருள், கணையாழி ஆசிரியருக்குப் புரிந்தது. அந்த கவிதையை தனது பத்திரிக்கையில் வெளியிட்டார். பின்னர் இளவேனில், இவர்களின் பொய் முகத்தை சுட்டிக் காட்டினார். புரியாமல் எழுதினால், அதை இவர்கள் உயர்ந்தது என்று அங்கீகரிப்பார்கள் என்பது நிரூபித்துக் காட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சி, இவர்களின் இலக்கியத்தரம், கனம், ஆழம் முதலியவை இவர்களின் போலித்தனத்திற்கு ஒரு அரித்தார அலங்கோலத்தையே காட்டும்.
ஒரு படைப்பு ஜனரஞ்சமாக இருப்பாதலேயே, தன் இலக்கியத் தரத்தை இழந்து விடாது என்பது திண்ணம். ஒரு படைப்பின் ஜனரஞ்சக அம்சம், அதன் இலக்கிய அந்தஸ்துக்கும் குறுக்கே நிற்காது.
இப்படிச் சொல்வதால் ஜனரஞ்சகப் படைப்பெல்லாம் இலக்கியத்தரமானது என்று சொல்வதாக, கோணல்வாதம் செய்யக் கூடாது. ஜனரஞ்சக படைப்புக்களிலும் பல படைப்புகளுக்கு இலக்கியத்தரம் இருப்பதில்லை. இலக்கியத்தரம் என்பது, பல அம்சங்களை ஒருங்கிணைப்பதைப் பொறுத்ததாகும்.
ஜனரஞ்சகமாக எழுதுவதாலேயே, ஒரு எழுத்தாளனை ஓரம் கட்டப்பார்ப்பது இலக்கிய தர்மம் அல்ல என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது.
சரோசா, ஒரு குப்பத்துக்காரி. திருடுதல், சாராயம் காய்ச்சுதல், அவளுக்குத் தொழில். பெற்றோரை இழந்த அவளுக்கு ஆறுதல், அவள் பாட்டன். அவரைக் காப்பாற்றும் பொறுப்பு அவளுக்கு. இளங்கோ என்ற இளைஞன் வீட்டில் திருடி மாட்டிக் கொள்கிறாள். காவல் துறையில், இளங்கோவின் நண்பருக்கு இருக்கும் செல்வாக்கால், காவல் நிலையத்தில் உதைபடுகிறாள் சரோசா. செய்த குற்றத்துடன் செய்யாத குற்றமும் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. செய்யாத குற்றத்திற்குச் சரோசா, தண்டிக்கப்படுவதை விரும்பாத இளங்கோ, தன் காதலி பாமா, பூக்காரி ருக்குமணி ஆகியோர் உதவியுடன், சரோசாவைக் காவல் நிலையத்தில் இருந்து சிறை மீட்கிறான்.
ஆனால் இந்தப் பின்னணியை உணராத சரோசா, தன் குப்பத்து ஆட்கள் மூலம், இளங்கோவைப் பழி வாங்குகிறாள். குப்பத்து ரவுடிகள் இளங்கோவை அடித்துக் குற்றுயிராய்த் தூக்கி எறிகிறார்கள். பூக்காரி ருக்குமணி காப்பாற்றுகிறாள். பின்னர் சரோசா உண்மையை அறிகிறாள்.
சாராயத் தொழிலில் இருந்து சரோசாவை விலக வைத்து இளங்கோ, தன் அலுவலகத்திலேயே ஒரு தாற்காலிக வேலை வாங்கித் தருகிறான். தங்களை விட்டுப் போவதை விரும்பாத சாராயக்கும்பலோ, அவளை ஒழிக்க விரும்புகிறது. இதனால், காவல் துறையை அந்த கும்பல் ஏவி விட்டு சரோசா மீது செய்யாத கொலைப் பழியை தலையில் சுமத்துகிறது. என்றாலும், அரசு அலுவலகத்தில் வேலைபார்க்கும் இன்னொரு தொழிலாளியான முனியம்மா, சரோசாவைக் காப்பாற்றச் சமதர்ம மாதர் மன்றத்திற்கு அழைத்துக்கொண்டு செல்கிறாள். அந்த மாதர் மன்றம், சரோசாவை வென்றெடுக்கிறது. அவள் அதில் ஐக்கியமாகிறாள். இதுதான் கதை.
குப்பம், மத்தியதர வாழ்க்கை, அலுவலகம், காவல் துறை இவை அத்தனையின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை, சமுத்திரம் கண்முன் நிறுத்துகிறார். இந்த நான்கில் சிதைவையும், சீரழிவையும் சித்திரிக்கும் சமுத்திரம், அங்கே மனிதாபிமானம் சுடர்விடுவதையும் சுட்டிக்காட்டுகிறார். குப்பத்தில் ஒரு சரோசா, மத்தியதர வர்க்கத்தில் ஒரு இளங்கோ, அலுவலகத்தில் ஒரு முனியம்மா, காவல் துறையில் ஒரு திருமலையப்பன் - இவர்கள் தத்தம் வாழ்க்கைச் சூழலிலிருந்து "மானுடம்" காப்பவர்கள். அதாவது ‘சமன் செய்து சீர்தூக்குகிறார் சமுத்திரம்.
சமதர்ம மாதர் மன்றம், நாவலில் திணிக்கப்பட்டிருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. இது, பின் சிந்தனையாகவும் இருக்கக்கூடும். சரோசாவைச் சமதர்ம மாதர் மாமன்றத்திற்கு முனியம்மாள் அழைத்துச் செல்கிறாள். ஆனால் முனியம்மாள் இத்தகைய சிந்தனையும் பார்வையும் உடையவள் என்பதை முன்னாலே ஆசிரியர் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும்.
நாவல் முழுவதும் சமுத்திரத்தின் நடையில் ஒரு கிண்டல், குத்தல், கேலி... இந்த 'பாணி' நாவல் முழுவதும் சமுத்திரம் 'இருக்கிறார்' என்பதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. சாதாரணமாகப் படைப்பிலக்கியத்தில், ஆசிரியர் இருக்கிறார் என்ற உணர்வு துருத்திக்கொண்டு நின்றால் அது கலையம்சத்தைப் பலவீனப்படுத்தும். ஆனால் சமுத்திரத்தின் நாவலில் அந்தப் பலவீனம் இல்லை.
பாத்திரப்படைப்பும், நடையும் நாவலுக்குப் பெருமை சேர்க்கும் அம்சங்கள்.
சரோசா, தாழம்பூவாக இருக்கலாம். தாழம்பூவையே தலையில் சூட இயக்கம் இருக்கலாம். ஆனால் சமுத்திரம், மல்லிகைப்பூ தான், அதைத் தலையில் சூடத் தயக்கம் காட்டினால், தலையில் தான் கோளாறு.
டிசம்பர், 1992. ச. செந்தில் நாதன்
சென்னை. தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்,

