Chapter 11
சென்னைப் பெருநகர் காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திற்குள், அந்த ஆட்டோ ரிக்ஷா பயபக்தியுடன் நின்றது. புலி போன்ற உறுமல் சத்தத்தை நிறுத்தி விட்டு, அது பூனை மாதிரி நின்ற போதும், ஒரு வெள்ளை யூனிபார போலீஸ்காரர், அங்கே ஓடிவந்து டிரைவரை செல்லமாகத் திட்டினார்:
"ஏம்பா, நீ, பெரிய ஆட்களை கூட்டிட்டு வந்ததாகவே இருக்கட்டும். அதுக்காக எங்க கண்ணு முன்னாலேயே நாலு பேர ஏத்திட்டு வரணுமா? கேட்டுல ஒருத்தர இறங்கி வரச் சொல்லக்கூடாதா? போலீசுன்னா அவ்வளவு கிள்ளுக்கீரையாப் போச்சா?"
பாமாவும் இளங்கோவும் டிரைவர் பதில் சொல்லட்டும் என்பது போலவும், அந்த கான்ஸ்டபிளிடம் பேசுவது தகுதிக் குறைவு என்பது போலவும் நினைப்பதாய், வெள்ளைச் சட்டைக்காரர் நினைத்துக் கொண்டார். ஆனால், ருக்குமணியை ஒரு ஓரத்தில் தள்ளிவிட்டு, இடுப்பில் இடுப்பு உரச, தோளில் தோள் மோத, ஜோடி சேர்ந்து அமர்ந்திருந்த அவர்களுக்கு ஆட்டோ அங்கே நின்றதே நினைவில்லை. ருக்குமணிதான், தனது பையனைப் பிடித்துக் கொண்டே, கீழே குதித்தாள். பூ மாலைகள் வைக்கப்படும் மேசையையும், பூக் கூடைகளையும், லத்தியால் தட்டி கீழே இழுத்துப் போடுவது இந்த வெள்ளைச் சட்டைக்காரர்கள் தானே... ஆகையால் அவள் பயந்து போனாள். அவளைப் போலவே அந்த டிரைவரும் தலையைச் சொறிந்து கொண்டே அந்த போலீஸ் மனிதர் முன்னால் பல்லைக் காட்டினார். பாமாவும், இளங்கோவும் போட்டி போட்டுக் கொடுத்த ஆட்டோ கட்டண ரூபாய் நோட்டுகளை வாங்காமல், ஆட்டோவிள நம்பர் பிளேட்டை லாவகமாக டிரைவர் மறைத்து நின்றார். போலீஸ்காரர் தன்னுடைய பரிபாலனத்துக்கு எதிர்ப்பு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு போய்விட்டார்.
சென்னை நகருக்கே காவல் சக்ரவர்த்தியான அந்த வளாகம், எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருந்தது, ருக்குமணிக்கு ஆச்சரியமாக இருந்தது. 'நாயே பேயே' என்று கத்தாமல் ஆங்காங்கே நிற்கும் போலீஸ்காரர்களையும், போலீஸ் வேன்களையும், கராமுரா சத்தம் போடும் ஜீப்புகளையும் பயபக்தியோடு பார்த்தாள். அவளுக்கே சந்தேகம்... அது போலீஸ் ஆபீசா... இல்லை சாதாரண ஏதோவொரு அலுவலகமா என்று. அங்கே நின்ற சிவில் உடைக்காரர்கள் அனைவரும் காவல் நிலையத்தில் நிற்பவர்களைப் போல் நிற்காமல் சாதாரணமாக நிற்பதைப் பார்த்ததும், இவளும் தன்னை வழக்கத்திற்கு அதிகமாக தனது தலையை நிமிர்த்திக் கொண்டும், மகன் ஆறுமுகப் பயலின் கையைப் பிடித்துக் கொண்டும், இளங்கோ-பாமா ஜோடியின் பின்னால் நடந்தாள்.
ருக்குமணி, பராக்குப் பார்த்துக் கொண்டே போன போது, பாமா, தனது தந்தையின் நண்பராகக் கருதப்படும் டெப்டி கமிஷனர் அறையை பல்வேறு அறைகளிலிருந்து பிரித்துப் பார்ப்பதுபோல் அவற்றின் பெயர்ப் பலகைகளைப் படித்தாள். அவர் பெயர் தெரியவில்லை. பிறகு அங்குமிங்குமாய் விசாரித்தாள். இரண்டு பேர் ஆளுக்கு ஒரு திசையாகக் காட்டிய போது, சிறிது திகைத்தாள். பிறகு, அவர்களை மாதிரியே அலைந்து குறிப்பிட்ட அந்த டெப்டி கமிஷனரைக் கண்டுபிடித்த ஒருவர் வழியில் அகப்பட்டார். அவர் சுட்டிக்காட்டிய இடத்திற்கு மரப்படிகள் வழியாக ஏறி, இதர எஞ்சிய மூவரையும் பின்னால் வரும்படி சைகை செய்தாள். முதல் மாடியில் மூன்றாவது அறை. அந்த அறையே குட்டி போட்டது போல் ஒரு சின்ன அறை. இந்த இரண்டு அறைக்கும் இடையே ஒரு கதவுத் தடுப்பு.
அந்த சின்ன அறைக்குள் அங்குமிங்குமாக டெலி போன்களை சுற்றிக் கொண்டிருப்பவர் முன்னால் பாமா போய் ஒரு வணக்கம் போட்டாள். அதற்கு அவர் டெலிபோனை ஆட்டியே பதில் வணக்கம் போட்டார். பாமா இனிமையாகக் கேட்டாள்:
"சார், டெப்டி கமிஷனர் அங்கிளை பார்க்கணும், இருக்காங்களா?"
"வெளியே போங்கள்" என்று சொல்லப்போன அந்த நேர்முக உதவியாளர், 'அங்கிள்' என்ற வார்த்தையைக் கேட்டதும் தாத்தாவாகக் குழைந்தார். அதே சமயம், இப்படிப் பல பேர் டூப் அடித்து, உள்ளே போய் ஏடாகூடமாய் பேசிவிட்டு, கடைசியில் டி.சி.யிடம், தான் வாங்கிக்கட்டிக் கொண்டதையும் நினைத்துக் கொண்டார். ஆகையால், இருக்கிறார் என்றோ, இல்லை என்றோ சொல்லாமல், அவளையே பார்த்தார். உடனே, பாமா ஆங்கிலத்தில் வெளுத்துக்கட்டினாள். கான்வெண்டில் படித்தவளான அவள், வெள்ளைக்காரி தோற்றது போல் விளாசினாள். குறிப்பிட்ட அந்த டெப்டி கமிஷனர் தனக்கு அங்கிள் என்றும், தான் வந்திருப்பது தெரிந்தால், அவரே அங்கு ஓடிவந்து விடுவார் என்பது போலவும் பேசினாள்.
எந்த அரசு அலுவலகத்திலும் நடைபெறும், மனிதச் சந்திப்பில் தமிழுக்கு மூடிக்கிடக்கும் கதவு, இங்கேயும் அவளது ஆங்கிலத்திற்கு வழி விட்டது. 'இன்டர்காமை' எடுத்து, டி.சி.யிடம் அவள் வரவைக் குறிப்பிட்டார். பிறகு எதுவும் பேசாமல் தனது வேலையைப் பார்க்கத் துவங்கினார். இப்போது அவருக்கு பாமா உயரத்தில் சிறிது குறைந்தது போல் தெரிந்தது. கால்மணி நேர கால்வலிப்புக்குப் பிறகு, பாமா அவசரப்படுத்தினாள் :
"சார், எப்போ பார்க்க முடியுமுன்னு சொல்லுங்க. இல்லாட்டா முடியாதுன்னாவது சொல்லுங்க. நாங்களும் பிசி தான்."
நேர்முக உதவியாளர், அவளுக்கு எரிச்சலோடு பதில் அளிக்கப் போனார். இவளுக்குத்தான் டெப்டி கமிஷனர் அங்கிளே தவிர, அந்த அங்கிளுக்கு இவளிடத்தில் பங்கில்லை என்பதால், விட்டிருந்தால், விளாசியிருப்பார். அதற்குள், டெலிபோனில் ஒரு கரகரப்பான சத்தம் வந்ததும், அவர் படபடப்பானார். பாமாவை போகலாம் என்பதுபோல் சைகை செய்தார்.
அந்த பிரும்மாண்டமான அறைக்குள் இளங்கோவும், பாமாவும் பக்குவமாகப் போனார்கள். சுழல்மெத்தை நாற்காலியை சுற்றிக் கொண்டே டெலிபோனில் பேசிக் கொண்டிருந்த டெப்டி கமிஷனரை பார்த்தபடியே, அங்கப்பிரதட்சணம் செய்வது போல் சென்றார்கள். திரும்பிப் பார்த்த பாமா, ருக்குமணி பின்னால் வராததைக் கண்டு பி.ஏ. ரூமிற்குப் போனாள். ஐந்து நிமிடத்திற்குப் பிறகு பல்வேறு வாக்குவாதங்களை முடித்து விட்டு, அவளையும், அவள் பையனையும் உள்ளே கூட்டி வந்தாள். டெலிபோனில் பேசிக் கொண்டிருந்த டெப்டி கமிஷனர் அதன் குமிழை மூடிவிட்டு "என்ன வேண்டும்” என்று கேட்டார். ஏதோ பதில் சொல்லப்போன இளங்கோவின் முதுகைக் கிள்ளிவிட்டு, பாமா சாதாரணமாக, பரபரப்பு இல்லாமல் பதிலளித்தாள்:
"நீங்க பேசி முடிங்க அங்கிள். எங்களுக்கு அப்படியொன்றும் அவசரம் இல்ல.'
அரசியல்வாதிகள், கேடிகள், கிரிமினல்கள் ஆகியோருடன் பழகிப் போன அந்த டெப்டி கமிஷனருக்கு, 'அங்கிள்' என்ற வார்த்தை நெகிழ்வைக் கொடுத்தது. அவளை உட்காரும்படி சைகை செய்தார். அவள் உட்கார்ந்ததும், அவளைப் போல் தானும் உட்காரலாமா என்று யோசித்த இளங்கோ, சிறிது நின்றுவிட்டு பிறகு உட்கார்ந்தான். ருக்குமணி ஜம்மென்று உட்காரப்போன மகனை காதைப் பிடித்துத் திருகி தன் பக்கத்தில் நிறுத்திக் கொண்டாள். டெப்டி கமிஷனர், ஒரு டெலிபோன் பேச்சை முடித்து விட்டு, அவர்களைப் பார்ப்பதும், மற்றொரு டெலிபோன் அறுக்க வருவதுமாக இருந்தது. ஒன்றில் “எஸ் ஸார்... எஸ் ஸார்” என்று குழைந்த அவர், இன்னொரு போனில், “என்னா மேன் செய்யறே? கொஞ்சமாவது மூளையிருக்கா?” என்று எரிந்தார். இப்படி ஒரே சமயத்தில் மெழுகுவர்த்தி மாதிரி குழைவதும், எரிவதுமாக இருந்த அவரைப் பார்த்த ருக்குமணி ரஜினிகாந்தை விட, இவர் பெரியவராக இருக்கலாமோ என்று சந்தேகப்படுவதுபோல் பார்த்தாள்.
டெலிபோன் மணிகளும், மைக் பிளிறலும் சிறிது நின்ற போது, பாமா குழந்தைத்தனமாகக் கேட்டாள் :
"அங்கிள், என்னை ஞாபகம் இருக்குதா? பத்து வயசுல உங்களைப் பார்த்தது... பட், உங்க அப்போதைய உருவம் இன்னமும் ஞாபகம் இருக்குது. டாடி... அதான் உங்க பிரண்ட் மிஸ்டர். ரமணன், சதா உங்களைப் பத்தியே போரடிப்பார். பரீட்சையில் உங்க பேப்பரைப் பார்த்து அவர் காப்பியடிச்சாராம், இதனால் உங்களுக்கு பெரிய சைபரும், அவருக்கு சின்ன சைபரும் கிடைச்சுதாம்.”
பாமாவின் சிரிப்போடு சேர்ந்து சிரிக்கப் போனார் டெப்டி. இதற்குள் ஒரு மேலிட மிரட்டல் டெலிபோன். கீழிட பிரார்த்தனை டெலிபோன். அதற்குள் பி.ஏ. கொண்டு வந்து கொடுத்த ஒரு பவர் புரோக்கரின் விசிட்டிங் கார்ட். அவரை உடனே பார்க்கா விட்டால் ஆவடி ஆயுத போலீசுக்குத்தான் போக வேண்டும். ஆகையால் அவசர அவசரமாய்க் கேட்டார்.
"சொல்ல வேண்டியதை ஒரு நிமிசத்துல சுருக்கமா சொல்லும்மா."
பாமா சுருக்கமாக எப்படிச் சொல்வது என்பதற்காக கால் நிமிடம் எடுத்துக் கொண்டாள். பிறகு நடந்த விவரத்தை ஒப்பித்துக் கொண்டிருந்தாள்.
டெப்டி கமிஷனர் அவளை இடைமறித்துக் கேட்டார்:
“இந்தப் பையனை கொலை செய்ததாய் கேஸ். ஓகே! பட், அப்படி நடக்கலே, சரிதானே? ஒங்க ஏரியா இன்ஸ்பெக்டரை போய்ப் பாரு. நான் மைக்கில பேசிடுறேன். சரோசாவையும் வார்னிங் கொடுத்து விட்டுடச் சொல்றேன். ஒன் பேரு என்னம்மா, ருக்குமணியா? குழந்தைய சரியா கவனிச்சுக்கத் தெரிஞ்சுக்கோ. பாமா! ஒரு நாளைக்கு சாவகாசமாக வீட்டுக்கு வா. உங்க அப்பாவ அங்கே வந்து என்ன ‘டா' போட்டு பேசலாமுன்னு சொல்லு. ஓகே!''
"தாங்க்யூ அங்கிள்” என்று சொல்லப்போன பாமா, அவர் இன்னொரு டெலிபோனில் பேசப் போவதைப் பார்த்துவிட்டு வாயில் அந்த வார்த்தையை சுமந்து கொண்டு நின்றாள். பிறகு அவர் ஒரு மாதிரி டெலிபோனில் பேச்சை இழுப்பதைப் பார்த்துவிட்டு, சத்தம் போட்டு ஒரு தாங்க்ஸை சொல்லிவிட்டு மற்றவர்களோடு வெளியேறினாள்.
சென்னைப் பெருநகர் காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திலிருந்து உருண்டோடி வந்த இன்னொரு ஆட்டோ ரிக்ஷா, சரோசாவுக்கு அடி உதைகளை வாடகையாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் பழைய காவல் நிலையத்திற்குள் வந்தது. இங்கேயும் ஒரு போலீஸ்காரர் வந்து அந்த டிரைவரை திட்டக்கூடாது என்பதற்காக, ருக்குமணி வாசலிலேயே இறங்கிக் கொண்டாள். ஆனாலும், அம்மாம்பெரிய போலீஸ் அதிகாரியைப் பார்த்ததால், அவளுக்கு, இந்தக் காவல் நிலையம், மகுடம் இல்லாத பிசாத்தாய் தோன்றியது.
பாமா, தயங்கித் தயங்கி பின்னால் நடந்த ருக்குமணியை வலுக்கட்டாயமாக கையைப் பிடித்து இழுத்தாள். பின்னால் மெல்ல நடந்த இளங்கோவை முதுகைப் பிடித்துத் தள்ளினாள். அந்த மூவரும், ஆறுமுகப் பயலும், மாடிமேல் குடிகொண்ட இன்ஸ்பெக்டர் அறைக்குள் வந்தார்கள். இப்போதும் அங்கே அதே கிரைம் இன்ஸ்பெக்டரும் இருந்தார். அவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர், இவர்களைப் பார்த்ததும் உடனடியாக வாயை மூடிக்கொண்டு, முறைத்தார். பாமா அதை பொருட்படுத்தாதது போல் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, இளங்கோவையும் உட்கார வைத்துவிட்டுப் பேசினாள்:
“ஸார், என் பெயர் பாமா. டி.சி.கிட்டே போயிட்டு வாரோம்!" "நாங்களெல்லாம் சின்னவங்க. பெரியவங்கக்கிட்ட போன பிறகு எங்ககிட்ட என்ன வேலை?"
இதற்குள், சப்-இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டுப் பேசினார்:
“ஒன்று மட்டும் நினைச்சுக்கங்கம்மா. நீங்க டைரக்டர் ஜெனரல்கிட்ட போனாலும், கடைசியில அது நல்லதோ, கெட்டதோ அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, ஒரு சப்-இன்ஸ்பெக்டர்கிட்ட, அல்லது ஒரு கான்ஸ்டபிள்கிட்டதான் வந்து விழும். இந்த இளங்கோ அந்த சரோசாகிட்ட முறை தவறி நடக்கப்போனார்னு அந்த டெப்டி கமிஷனர்கிட்ட நாங்க சொன்னோமுனா, அவரால மூச்சுவிடக்கூட முடியாது. நீங்கள் எங்களப் பார்த்துட்டு, அப்புறம் முடியாட்டால்தான் டெப்டி கமிஷனர்கிட்டே போயிருக்கணும்."
பாமாவும், இளங்கோவும் சும்மாயிருந்தபோது, இன்ஸ்பெக்டர் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த ருக்குமணியை சுண்டுவிரலை ஆட்டிக் கூப்பிட்டார்.
"இந்தாம்மா! உன் பேர்தான் ருக்குமணியா? இவன் பேரு
தான் ஆறுமுகா?"
"ஆமாங்கய்யா..."
சப்-இன்ஸ்பெக்டர் குறுக்கே புகுந்தார் :
"ஏண்டி, ஒனக்கு மூளை இருக்குதா? குழந்தைய காணுமுன்னு போலீஸ்ல ரிப்போர்ட் செய்யத்தெரிஞ்சுதே, அது கிடைச்சுதுன்னு ஏண்டி சொல்லல?"
புருஷன்கூட பேச யோசிக்கும், 'டி'-யை அவர் காப்பி குடிப்பது மாதிரி பேசியதால், ருக்குமணி கூனிக்குறுகினாள். உடனே பாமா இன்ஸ்பெக்டரைப் பார்த்து "சார், இவர்... பேசறது டூ மச்” அந்தம்மாவும் ஒரு கொளரவமான குடிமகள்தான் என்றாள் அழுத்தம் திருத்தமாக. இன்ஸபெக்டர் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் பேசினார்:
"சரி, விஷயத்துக்கு வருவோம். டெப்டி கமிஷனர், சரோசாவை விடுதலை செய்யச் சொல்லல... குழந்தை கிடைச்ச பேக்ரவுண்டுல விசாரிக்கத்தான் சொன்னார். ஆனாலும், சரோசாவை விடுதலை செய்ய நான் தயாரா இருக்கேன். ஆனால், ஒண்ணு... அவள்கிட்ட பெரிய செட்டே இருக்குது.பழி பாவத்துக்கு அஞ்சாதவங்க. இளங்கோ கையோ, காலோ போனால், அதுக்கு நான் பொறுப்பில்ல. அவள் உள்ளே இருந்தாத்தான், உங்களுக்குப் பாதுகாப்பு. அதுக்குள்ள அவளோட செட்டும் சிதறிப் போயிடும். இல்ல பயந்துடம். ருக்குமணியோட குழந்தைய, சரோசா கடத்திக்கிட்டுப் போனதாயும், நாங்கதான், மீட்டிக் கொடுத்ததாயும் ஒரு கேஸ் போட்டு, அவள ஏழு வருஷம் உள்ளே தள்ளிடலாம். டெப்டி கமிஷனர் முகத்துக்காக நீங்க என்ன சொன்னாலும் நான் செய்யத் தயார். அவள் விடுதலையாகணுமா, இல்ல இளங்கோ உயிரோட இருக்கணுமா? ரெண்டுல ஒன்றைச் சொல்லுங்க..."
இளங்கோவும், பாமாவும் ஒருவரையொருவர் பீதியோடு பார்த்துக் கொண்டபோது, இன்ஸ்பெக்டர் இளங்கோவிற்கு ஏற்படக்கூடிய அபாயத்தை தனது அனுபவ பின்னணியில் மீண்டும் விளக்கினார்:
"சாராய கோஷ்டிங்க கிட்ட இருக்கிறசெட்டுங்க, மோசமான செட்டுங்க. பொதுவா இவங்களுக்கும், மிருகங்களுக்கும் அதிக வித்தியாசம் கிடையாது. ஒரு மிருகத்துக்கு, எப்படி தன்னால் தாக்கப்பட்டவன் ஞாபகம் இருக்காதோ, அப்படி இவங்களுக்கும் தங்களால் பாதிக்கப்பட்டவங்களப் பத்தி பின்னால் நினைப்பே இருக்காது. பெரிய பெரிய பட்டாக்கத்திய வச்சு, எதிராளியை ஒரு வீச்சு வீசணும். அதுல கை விழுந்தாலும், கால் விழுந்தாலும் கவலையில்லை. அதோட சரி. இளங்கோ மேலே ஒரே ஒரு தடவைதான் பட்டாக்கத்திய வீசவாங்க. அதுல, இவரு தப்பிச்சுட்டா அப்புறம் அவங்களும் கவலைப்பட மாட்டாங்க. இவரு தலை போயிட்டால் கொஞ்ச நாளைக்கு தலை மறவைா இருப்பாங்க. அப்புறம் தானா ரோட்டுக்கு வருவாங்க. காரணம் ஒவ்வொரு சாராய கோஷ்டிக்கும் பின்னால், ஒரு அரசியல்வாதி இருக்கான்.. இவங்கள எதுவும் செய்ய முடியாது. பயப்படும்படியா பேசுறேன்னு நினைக்காதீங்க. நீங்க டெப்டி கமிஷனருக்கு வேண்டியவங்க என்பதால விலாவாரியா சொல்லிட்டேன். எதுக்கும் கலந்தாலோசித்து முடிவ சொல்லுங்க."
இளங்கோவின் முகத்தில் இன்னதென்று சொல்லமுடியாத ஒரு இறுக்கம். பாமா முகத்தில் பல்வேறு சுழிப்புகள். அவனை கையைப் பிடித்து இழுக்காத குறையாக அந்த அறைக்கு வெளியே கூட்டி வந்தாள். பையனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்த ருக்குமணியும் பதறியடித்து நின்றாள்.
பாமா சிறிது யோசிப்பவள் போல் அங்குமிங்குமாய் சுற்றினாள். ஒவ்வொரு சுற்றும் அவளுக்கு தலைச்சுற்றலைத் தான் கொடுத்தது. குழம்பிப் போய் அவளும் உளறிப் பேசினாள்:
"எனக்குப் பயமாய் இருக்குது இளங்கோ. போலீஸ் முடிவுக்கே விட்டுடுவோம். உங்களுக்கு நாளைக்கு ஏதாவது நடந்துடக்கூடாதேன்னு இன்னிக்கே எனக்குப் பயம் வருது. வம்ப விலை கொடுத்து வாங்க வேண்டாம். என்ன ருக்குமணி நான் சொல்றது?"
இளங்கோ, ருக்குமணியை முந்திக் கொண்டு பேசினான். தோளில் விழுந்த பாமாவின் கையை தனது இடது கையால் எடுத்து, வல்து கைக்குள் சங்கமமாக்கி உறுதிபடப் பேசினான் :
"நமக்கு எதிர்காலத்தில் ஓர் ஆபத்து ஏற்படுறதாய் நினைத்து இப்போ, சரோசாவுக்கு வந்திருக்கிற ஆபத்தை அலட்சியப் படுத்தக் கூடாது... பாமா. என்ன ஆனாலும் சரி, நம்மால அவள் ஜெயிலுக்குப் போகக்கூடாது. இல்லாவிட்டால் நமக்கும் அவளோட செட்டுக்கும் வித்தியாசம் இருக்க முடியாது."
"தனக்குப் போகத்தான் தானம் சாரே... வளர்த்த கடா மார்புல பாயறது மாதிரி ஆயிடப்படாது பாருங்க."
ஒரு கடாயை நாம் வளர்க்கிறதே, அத வெட்டித் தின்கிறதுக்காகத்தானே. அப்போ அது மார்புல பாயுறதுல என்ன தப்பு? நாம் ஒருத்தருக்கு விசுவாசமா உதவினால், அவங்களும் விசுவாசமா நம்மகிட்ட இருப்பாங்க. இதுல, எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அதோட யதார்த்தமாய் பார்த்தால், சரோசாவை ஜெயிலுக்கு அனுப்பினால்தான், அவளோட செட்டுக்கு என் மேல கோபம் வரும். இன்ஸ்பெக்டரும், அவள விடுதலையா குறதுக்கு நாம் மேற்கொண்ட முயற்சிகளை சொல்லதான் போறாரு. இதனால் அவளுக்கும், அவளோட ஆட்களுக்கும் இப்போ கோபம் இருந்தாலும், அப்புறமா தணிஞ்சுடும். என்ன பாமா... நான் சொல்றது...சரிதானே?"
பாமா சரியா, சரியில்லையா என்று அவனையே திருப்பிக் கேட்பது போல் பார்த்தாள். ருக்குமணி மவுனமாய் இருந்ததில் இருந்து அவளுக்கும் இளங்கோ சொல்வது சரிஎன்று பட்டது போல் தோன்றியது. இருந்தாலும் பாமா பதறிப் பதறிப் பேசினாள்.
"எனக்குத் தலையே வெடிச்சிடும் போல இருக்குது. இது நாயர் பிடிச்ச புலிவால் மாதிரி தோணுது. விடவும் முடியல, தொடவும் முடியல... இவருக்கு ஏதாவது...”
விம்மப்போன பாமா, தன்னைச் சரிப்படுத்திக் கொண்டாள். இளங்கோ அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே, அவளையும், ருக்குமணியையும் கூட்டிக் கொண்டு உள்ளே போனாள். இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உரையாடலுக்கு தடங்கல் ஏற்படுத்தியபடி முடிவை அறிவித்தான்:
“எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை சார். ஆனால், நியாயத்துக்குத்தான் எதுவும் நடந்துடக்கூடாது. தயவு செய்து சரோசாவை விடுதலை செய்திடுங்க சார்."
மேஜையில் பேப்பர் வெயிட்டை உருட்டிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர், அவனைப் பார்க்காமலேயே பேசினார்:
“ஆல் ரைட்... ரைட்டர் கிட்ட போய் உங்க புகாரை வாபஸ் வாங்குறதாய் ஒரு மனு கொடுங்க. ஒன் பேரு என்னம்மா? ருக்குமணியோ, மக்குமணியோ... ஒன் பையன் கிடச்சுட்டதாய் நீயும் எழுதிக் கொடு. இந்தாப்பா, இவங்கள ரைட்டர்கிட்ட கூட்டிட்டுப் போப்பா...ஓ.கே. மிஸ்டர் இளங்கோ! தாங்க்யூ மிஸ்-ஸா, மிஸ்ஸஸ்ஸா... விஷ்யூ... குட்லக் பாமா."
"சரோசாவை எப்போ சார் விடுவீங்க?”
"போலீசுக்கு எந்தச் சமயத்தில் என்ன செய்யணும் என்று தெரியும். எங்க டூட்டிய நீங்க செய்ய வேண்டாம். இனிமேலாவது, குப்பத்து காரிங்ககிட்ட நாசூக்கா நடந்துக்கங்க. டி.சி.கிட்ட இன்னொரு தடவை பேசி, என்ன முடிவு எடுக்கணுமோ அதை எடுப்போம். போயிட்டு வாறீங்காள?"
இன்ஸ்பெக்டர், அவர்கள் அங்கேயே தயங்கி நின்றபோதும், அவர்கள் அங்கே இல்லாததுபோல் அனுமானித்து, சப் இன்ஸ்பெக்டரிடம் பேசப் போனார். இதற்குள் அவர்களை ரைட்டரிடம் கூட்டிப் போகும் பொறுப்பை மேற்கொண்ட ‘கரும்பு மாமூல்' கான்ஸ்டபிள் பாமாவை கெஞ்சுவதைப் போலவும், இளங்கோவுக்கு அஞ்சுவது போலவும், ருக்குமணியை மிஞ்சுவது போலவும் ஒரே சமயத்தில் பல பார்வைகளை வீசிக் கொண்டு அவசரப்படுத்தினார். அவர்களும், அவர் பின்னால் போய் விட்டார்கள். உடனே, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து லேசாய் சிரித்தார். அந்தச் சிரிப்பைப் புரிந்து கொண்ட சப்... அதற்குரிய அர்த்தத்தை அவரிடமே விளக்கினார்.
"பயல் ஆறு மாதத்துக்கு தூங்க மாட்டான் சார். டெப்டி கமிஷனர் கிட்டயிருந்து வந்தங்கிறதுல ஆரம்பத்துல தெனாவட்டா நின்னவனை அப்படியே கூனிக் குறுக வைச்சுட்டீங்களே; அவனை வாழப்பழமா கொழய வச்சு, எல்லாப் பக்கமும் ஊசியாலே குத்திட்டிங்களே. ஆனால், என்ன மாதிரி போலீஸ், கிராமப்புறத்துல இந்த மாதிரி டெக்னிக்கை பயன்படுத்துறது இல்ல சார். பேக்ரவுண்ட் உள்ளவன் முன்னால, பேக்ரவுண்ட் இல்லாதவனை எடுத்த எடுப்பிலேயே 'தேவடியா மகனே'ன்னு கேட்போம். அவனோட பெண்டு பிள்ளைகளையும் வாய்க்கு வந்தபடி திட்டுவோம். பேக்ரவுண்ட் உள்ளவன் பயந்துடுவான். சரி... விஷயத்துக்கு வருவோம்... சுதந்திர தினத்துக்கு பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்யணுமே?"
“சுதந்திரத்துக்கும் நமக்கும் என்னப்பா சம்பந்தம்? எப்போ போலீசுல சேர்ந்தோமோ அப்போமே, நம்ம சுதந்திரத்தையும், விட்டுட்டோம். அடுத்தவன் சுதந்திரத்தையும் அபகரிச்சுட்டோம். சரோசாவ... நீயே போய் கூட்டிக்கிட்டு வா."
சப்-இன்ஸ்பெக்டர், தனக்குப் பதவி உயர்வு வந்தது போல் துள்ளி எழுந்தார்.
சரோசாவை எப்படியாவது விட்டுவிட வேண்டும் என்று இந்த சப்-இன்ஸ்பெக்டரை கரும்பு மாமூல் கான்ஸ்டபிள் நச்சரித்துக் கொண்டிருக்கிறார். பதவி ரீதியில் இவர் அவருக்கு முதலாளி, ஆனால் மாமூல் விவகாரத்தில் அவர் இவருக்கு முதலாளி.
இன்ஸ்பெக்டர், சரோசா விவகாரத்தை விட்டு விட்டு, இன்னொரு விவகாரம் கொண்ட எப் ஐ ஆர் ஐ படிக்கத் துவங்கினார். சரோசாவை கிட்டத்தட்ட மறந்தே விட்டார். அப்போது:
"சார், இதோ சரோசா..."
"ஏய், ஒன் பேரு சரோஜாவா? சரோசாவா?"
"நீங்க கடைசியா சொன்ன சொல்லு வரமாட்டேங்குதே சாரே. போலீஸ் எங்களோட தோஸ்துன்னு பேரு. அப்படியும் என்னை இந்தப் பாடு படுத்திட்டாங்களே. கடவாப்பல்லு ஆடுது சாரே; கையி பிசகிட்டு சாரே.'
முகம் வீங்கி, கை வளைந்து, உடம்பை உண்மையிலேயே காயம் என்று சொல்லலாம் என்று சொல்வது போல் காயப்பட்டு நின்ற சரோசாவை, இன்ஸ்பெக்டர் பற்றற்ற முறையில் பார்த்தபோது, எங்கிருந்தோ ஓடிவந்த கரும்புக்கார போலீஸ்காரர் அவளுக்கு உபதேசம் செய்தார் :
"ஏய், சரோ! இந்த மாதிரியா இன்ஸ்பெக்டர் ஐயா கிட்டே பேசறது? நானும் சப்-இன்ஸ்பெக்டர் ஐயாவும் சொன்னதுக்காக ஐயா, ஒன்ன விடுதலை செய்யறார். இன்ஸ்பெக்டர் ஐயா டெப்டி கமிஷனர்கிட்ட உனக்காக வாதாடி... போராடி ஒன்ன கொலை கேஸிலிருந்து விடுவிச்சிருக்கார்."
"அதுக்காக கொழந்தைய கடத்திட்டுப் போன நிசமான கேடிய விட்டுடாதீங்க சாரே."
"இப்படிக் கூடக் கூடப் பேசக்கூடாதுடி... இன்ஸ்பெக்டர் ஐயா கையில காலுல விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கிட்டு, முதல்ல வீட்டுக்கு போ."
"இல்ல சாரே, முதல்ல ஆஸ்பத்திரிக்குத்தான் போகணும் சாரே."
அங்கே எதுவும் நடக்காதது போல் எழுதிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டரின் காலில், சரோசா நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தாள். தரையில் வயிற்றைப் போட்டு மேசையின் அடிக்கம்பில் மார்பைப் போட்டு, அவர் கால்களைப் பிடித்துக் கொண்டு மன்றாடினாள்:
"இதே மாதிரி இனிமே காட்டியும் நான் தப்பு தண்டா செய்தாலும், சார்தான், என்னை மன்னிக்கணும். எங்கள மாதிரி ஆட்களுக்கு போலீச விட்டா யார் கதி சாரே?”
"இந்தாம்மா எழுந்திரு மொதல்ல. இது போலீஸ் ஸ்டேஷனா, கோவிலா?"
கரும்பு கான்ஸ்டபிள், இமிடியட் பாஸ்ஸான சப் இன்ஸ்பெக்டரை பொருட் படுத்தாமலேயே பேசினார் :
“ஐயா சொன்னத நல்லா கேட்டுக்கோ. சப்-இன்ஸ்பெக்டர் கையிலயும், இன்ஸ்பெக்டர் காலிலேயும் நான் ஒனக்காக விழுந்தேன். இன்ஸ்பெக்டர், டெப்டி கமிஷனர் காலில விழுந்து ஒன்ன விடுவிச்சிருக்கார். நீயுண்டு, ஒன் தொழில் உண்டுன்னு இருக்கணும். சொல்றது புரியுதா?"
இன்ஸ்பெக்டர் கத்தினார்:
"யோவ், உன் மாமா, மச்சான் பேச்சை வெளியே வச்சுக்கய்யா. இவள இமிடியட்டா வெளியில கொண்டு விடுய்யா."
கான்ஸ்டபிள், பயப்பட்டவர்போல் நடந்தபடியே அவரை ஒரு சல்யூட்டால் அடித்துவிட்டு, சரோசாவை கண்களால் இழுத்துக் கொண்டு போய் விட்டார். சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டரிடம் கேட்டார் :
“என்ன சார் திடீர்னு சூடாயிட்டீங்க?”
“பின்ன என்னப்பா, டெப்டி கமிஷனர் காலுல நான் விழுந்தேன்னு சொல்றான். அறிவு கெட்ட மடயன். அந்தப் பொண்ண போலீஸ் ஸ்டேஷன்ல வச்சே கொஞ்சிடப் போறான். நீயே போய் அவளை ஸ்டேஷனுக்கு வெளியில விட்டுட்டு வா."
இன்ஸ்பெக்டர் அதற்குமேல் பேச விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் அங்குமிங்குமாய் உள்ள அறைகளைப் பார்த்துவிட்டு படியிறங்கினார்.
ஒரு புளிய மரத்திற்கு அடியில் சரோசாவை அவள் தோஸ்துகள் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். அதே கான்ஸ்டபிள்
அவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் கை தட்டி, அவர்களது கண்களை தன் பக்கம் இழுத்து, அவர்களை வெளியே போகும்படி சைகை செய்தார்.
சரோசா, தனது தோஸ்துகளோடு, நொண்டிக் கொண்டே வெளியே வந்தாள். ஒருவன் முகவெட்டு... அதோடு குளோஸ்கட்டு... இன்னொருத்தன் அம்மைத் தழும்பன், மற்றவர்கள் ‘மற்றும் பலர்' என்பது மாதிரி சாதாரணங்கள். முகவெட்டுக்காரன், எதிரே இளநீர் குடித்துக் கொண்டிருந்தவர்களை அடையாளம் காட்டிப் பேசினான்:
"அதோ பாருமே, ஒன்னை கம்பியெண்ண வச்ச, ஒத தின்னவச்ச அந்த இளங்கோப் பயல் இரண்டு குட்டிகளோட எப்படி ஜாலியா நிக்கறான் பாரு. இப்பவே அவன ஒரு சீவு சீவிட்டு வரப்போறேன்."
இதற்குள், அம்மைத் தழும்பன் அவனை ஆற்றுப்படுத்தினான்:
“என் பொறுப்புல விடுடா... நம்ம சரோவுக்கு, ரத்தக் காயத்த வாங்கிக் கொடுத்தவன், ரத்தத்துல மிதக்கணும். நானே அத என் கையால செய்யப் போறேன். டாய்! இளநியா குடிக்கற? உன் ரத்தத்த நான் குடிக்கிறனே பாரு... மவனே..."
சரோசா அவர்கள் கை ஆட்டிய திசை நோக்கிப் பார்த்தாள். இளங்கோ அவளைப் பார்த்துவிட்டு இளநீரால் முகத்தை மறைத்துக் கொண்டது போல் தோன்றியது. சரோசாவால் அவர்களைப் பார்க்க முடியவில்லை. போலீஸ் கொடுத்த உதையில் கழுத்து வலித்ததால் மீண்டும் சகாக்களைப் பார்த்தாள். எந்தவித கரணையும் இல்லாமல் தோஸ்துகளிடம் தன்னை ஒப்படைத்தவள் போல வழி நடந்தாள்.

