Chapter 20
குறுக்கு வழியாக நடந்து, சரோசா பூக்கார ருக்குமணியின் குடிசைக்குள் வந்தாள். ஓட்டைக் கதவுதான்; கரடு, முரடு தரைதான்; தில்லு முல்லு கூரைதான்; ஒழுகல் காவாதான். ஆனாலும், அந்தக் குடிசையில் ஒரு கத்தம், ஒரு பூவாடை.
சரோசா நீட்டிய தூக்குப் பையை அதன் தாத்பரியத்துடன் வாங்கிக் கொண்ட ருக்குமணி கொதித்தாள்:
"நீயே அதுக்கு விஷச்சாராயம் குடிச்சுக் குடுமே; பாவி, கஸ்மாலம், அழிஞ்சு போவான்."
“சரி எனக்கு நேரமாயிட்டது, சரக்கு எடுக்கப் போறேன்.”
"இளங்கோ சொல்லச் சொன்னாருமே... சர்க்கார்வேலையிலே சேர்ந்தா ஒனிக்கும் நல்லதாம், ஒன் நயினாவுக்கும் நல்லதாம்.”
சரோசா, ருக்குமணியிடம் நடந்தவற்றை விவரமாக எடுத்துரைக்கப் போனபோது ஒருவன் ஓடிவந்தான். கோவிந்து என்று திட்டப்போன ருக்குமணி. முனுசாமியைப் பார்த்துவிட்டு கேள்விக்குறியுடன் நின்றாள். அவன் பாதி கிறக்கத்தோடு சொன்னான் :
"சரோசா! நீ வரப்போ நான் குடிக்கப்போனேனா... துரை சம்சாரம் டெலிபோன்லே, உன் பேரைச் சொல்றத கேட்டுட்டு ஒட்டுக் கேட்டேன். யார்கிட்டேயோ அவள் பேசிட்டு, அப்பாலே துரைகிட்டே ஒப்பிச்சாள். எவனோ அண்ணாத்தையோ, கிண்ணாத்தையோ, நீ வேலையில சேர்ந்தா ஆபத்துன்னு சொன்னாராம். அதனால நீ இன்னிக்கி சரக்கு எடுத்து வறப்போ ஒன்னை போலீஸ் மடக்குமாம். ஏற்பாடு செய்திட்டாராம். அவள், துரைகிட்டே சொன்னதும், அவன், அவள, போட்டுப் போட்டு உதைச்சான். வேடிக்கை பார்க்க நினைச்ச மனசை அடக்கிட்டு, உன்னே பாலோ பண்ணி வந்திட்டேன். ஏன்னா, நீ என்னோட தோஸ்து இளங்கோவுக்கு தோஸ்தாச்சே... சொம்மா இருக்க முடியுமா?"
முயல்போலப் பாயப்போன சரோசா, ஆமை போல் நின்றாள்.எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கி ஏதோ ஒரு வாகனத்தின் சக்கரம் தலையில் ஏறியது போன்ற தடுமாற்றம். அது தலைக்குள்ளே சுழலுவது போன்ற அதிர்வு. அந்தத் தலையும், கழுத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு பம்பரமாய் சுற்றுவது போன்ற அவள் உணர்வுச் சுற்றல். அரைக்கண் பார்வையோடு, அப்படியே நின்றாள். முனுசாமி அவளைப் பரிதாபமாகப் பார்த்தபடியே, அதே சமயம் ஒரு சாதனையை நிகழ்த்திக் காட்டிய பெருமிதத்தில் ‘தண்ணிப்பட்டபாடாய்' நடையைக் கட்டினான்.
அம்மாவின் ஆணைப்படி பலசரக்குக் கடையிலிருந்து, கால் கிலோ தக்காளியை மறைக்கும்படி கருவேப்பிலை ‘கொசுரை’ கவரில் போட்டுக் கொண்டு வந்த ஆறுமுகப் பயலை, ருக்குமணி, அவன் முதுகைப் பிடித்து வளைத்து, காரணமில்லாமலேயே இரண்டு போடு போட்டாள். சரோசாவின் முன்னால் வந்து அவள் முகத்தையே பார்த்தாள். அவள் தோளைப் பிடித்து உலுக்கினாள். அப்படியும் சரோசாவின் கண்கள் அங்குமிங்கும் சுழலாமல் நின்ற இடத்திலேயே நிலைத்திருப்பதைப் பார்த்து, அவள் தலையைப் பிடித்துக் குலுக்கிக்கொண்டே கேட்டாள்:
"ஒன்ன, கடாவ வளக்கது மாதிரிதான் வளர்த்துருக்காங்கமே. ஒனிக்கி நாய்க்கி தீனி போடறதுமாதிரிதான் போட்டுருக்காங்கமே. நாய்க்கி வெறி வந்தா அத வளர்க்கிறவன் மருந்துபோட்டு காப்பாத்தறான். ஆனாங்காட்டி, கையாளுக்குப் புத்தி வந்தா, அதோட எசமான் கொலை கூட செய்வான். இப்பவாவது ஒனக்கு புரியுதாமே? ஏம்மே பேச மாட்டேங்குற?"
பூக்கார ருக்குமணி சொல்லச் சொல்ல, சரோசா அகலமாய் கிடந்த கண்களை ஆழப்படுத்தி, அப்படியே நின்றாள். ருக்குமணி, தக்காளிகளை எடுத்து தன்மீது எறிந்து கொண்டிருந்த மகனைப் பற்றி பிரக்ஞை இல்லாமலே, சரோசாவின் பிரச்சினைக்கு விடை கண்டவள் போல் அவள் தோளில் கை போட்டபடி, உபதேசித்தாள்.
"விட்டுத்தள்ளு கஸ்மாலத்த, இதுவும் நல்லதுக்குத்தான். ஒன்கிட்டே விசாரிக்காமலே குழி பறித்தான் பாரு கஸ்மாலம் அண்ணாத்தே... அவன் வாடையே வாணாம். பேசாம இளங்கோ சாரு சொல்ற வேலைல சேர்ந்திடு. இன்னாமே! நானு பேசிக்கினே போறேன், நீ சொம்மாவே நின்னா இன்னா அர்த்தம்?”
சரோசா, இன்னும் அசைந்து கொடுக்காமல் இருப்பதைப் பார்த்த ருக்குமணிக்கு லேசாகப் பயம் பிடித்தது. இதற்குள் ஆறுமுகப்பயல் அம்மாமேல் குறிவைத்த ஒரு அழுகிய தக்காளி, சரோசாவின் நடுமூக்கில் பட்டு இரண்டு கண்களிலும் சிதறியதால் அவள் சுயவுணர்வுக்கு வந்தாள். ஆனாலும், தலையில் கைவைத்தபடியே, அந்த வீட்டின் இற்றுப்போன கதவில் அற்றுப்போனவள் போல சாய்ந்தாள். ருக்குமணி, அவளை ஆதரவாய் பிடித்து நார்க்கட்டிலில் உட்கார வைத்தாள். பிறகு அவள் சோகம் தனக்கும் தொத்த, கேட்பாரற்ற குரலில் பேசினாள் :
"அல்லாம் நல்லதுக்குதாம்மே. நடந்தத கெட்டகனவா நினைச்சுடு. இளங்கோ சார் நாளிக்கே வேலையில சேருறதா மல்லி சொல்லிச்சு. நீயும் சேர்ந்திடு. இல்லாட்டி ஆறின சோறு பழஞ்சோறுதான். ஏண்டா, பொறம்போக்கு! எல்லா தக்காளியையும், அக்குவேறு ஆணிவேறா பண்ணிட்டியே. நானு கொயம்புக்கு இன்னடா பண்ணுவேன்? ஏம்மே சரோசா, ஏதாவது பேசி என் வயித்திலே பாலு வாருமே."
ருக்குமணி, மகன் குதறிப்போட்ட தக்காளி சதைகளை பொறுக்கிக் கொண்டே, சரோசாவைப் பார்த்தாள். அவள் பிரச்சினை மட்டும் குறுக்கே வரவில்லையானால், இந்நேரம், அருமை மகனை தக்காளி மாதிரியே பிதுக்கியிருப்பாள். அதைப் புரிந்து கொண்டது போல் அந்தப் பயலும் அம்மாவுக்குப் பயந்து சரோசாவின் மடியில்போய் உட்கார்ந்து கொண்டான். ஏதோ ஒரு பொருள் தன் மடியில் உட்கார்ந்திருக்கிறது என்ற உணர்வு மட்டுமே உந்த, சரோசா ருக்குமணியைப் பார்த்தாள். பிறகு விரக்தியோடு பதிலளித்தாள் ;
"நீ நினைக்கது மாதிரி இளங்கோ சொல்ற வேலையில சேர்ந்திட்டா, அண்ணாத்தே என்ன விட்டுவைக்க மாட்டாரு ருக்கு.”
"இப்ப மட்டும் விட்டுவைக்கானா? அதென்ன கூத்து? எவனோ பொறுக்கிக்கி நீ ஏன் பயப்படறே? கண்றாவியா இருக்கு."
சரோசா, நார்க்கட்டிலில் சாய்ந்து சுவரில் தலையை போட்டுக் கொண்டு, அந்தத் தலையை அங்குமிங்குமாய் புரட்டிக் கொண்டு, ருக்குமணிக்குக் கதை சொல்வது போல் சொன்னாள்:
'அண்ணாத்தைய பத்தி சரியா தெரிஞ்சா இப்படிப் பேசமாட்டே ருக்கு. அவரோட அஞ்சு வருஷமா இருக்கிற பழக்கத்த அறுத்துக்கினுபோறது, என்னையே நான் அறுத்துக்கிறதுமாதிரி. போன மாசம் துரையண்ணே வீட்டுல எங்க கோஷ்டியில ஒருத்தன் தண்ணியில மிதந்தான். அப்போ பார்த்து அண்ணாத்த வந்தாரு. அவருகிட்டயே 'நாளைக்கி கோர்ட்டுல ஒன் பேரையும் சொல்லப்போறேன் அண்ணாத்தேன்னு' சொம்மா தமாஷுக்குச் சொன்னான். அண்ணாத்தையும் சிரிச்சாரு. அண்ணாத்தே ஆள் வச்சி ஒருத்தர வெட்டின கோஷ்டியில அவனும் ஒருத்தன். மறுநாளு பார்த்தா... அந்த தோஸ்து கடலுல மிதக்கான். பொணமா மிதந்தான். அண்ணாத்தே எதுவும் தெரியாதது போல அந்தப் பொணத்த ஜோரா அடக்கம் பண்ணினாரு. 'பாவம் நல்லவன்'னு வேற துக்கமாச் சொன்னாரு. அப்பேர்ப்பட்டவரு அண்ணாத்தே.”
ருக்குமணியே பயந்துவிட்டாள். சரோசாவின் ‘அண்ணாத்தே’ எங்கும் வியாபித்திருப்பது போல் ஒரு பிரமை. அந்தக் குடிசைக் குள்ளும், அவர் வந்து நிற்பது போல் ஒரு அனுமானம். சரோசாவிற்கு சப்போர்ட் செய்ததற்காக தன்னையும் பட்டாக்கத்தியோடு குறிபார்ப்பது போன்ற ஒரு அச்சம். சிறிது நேரம் தடுமாறினாள். பிறகு குடிகாரக் கோவிந்துடன் குடித்தனம் செய்வதை விட, அப்படி வெட்டுப்பட்டாவது சாகலாம் என்று தெளிந்தாள். எல்லாவற்றையும்விட, இயல்பான மனிதாபிமான வேகம். அண்ணாத்தையை எதிர்கொள்ள வேண்டும் என்ற ஒரு அசட்டுத் துணிச்சல். இப்போது, தானே சரோசா என்பது மாதிரி ருக்குமணி பேசினாள் :
"வல்லவனுக்கு வல்லவன், வையகத்துல உண்டுமே. ஒன் அண்ணாத்தே சாராயக் கொம்பன்னா, பாமாவோட அப்பா ரமணன் போலீஸ் கொம்பன். நீ வேலைக்குப் போகாமலேயே அண்ணாத்தே கூட இருந்தாலும், அவன் ஒன்ன ஏதாவது செய்யத்தான் போறான். இளங்கோவோட கவர்ன்மெண்ட் வேலையில சேர்ந்திட்டா, ஒனிக்கி அதுவே ஒரு பாதுகாப்பு. நம்ம கார்ப்பரேஷன் எச்சில் லாரி ஆளுங்க கூட ரோட்ல வண்டிய குறுக்கா வெச்சிட்டு பெரிய பெரிய கார்ல வர்றவங்களக் கூட எப்படி முறைக்காங்க! இதுக்கப் பேருதான் சர்க்கார் வேல. ஒண்ணாத்த பருப்பு ஒண்ணும் வேகாது."
"நீ நெனக்கிது மாதிரி எனக்குக் கொஞ்சம் பாதுகாப்புத்தான். ஆனால் அந்தப் படுபாவி இதுக்குக் காரணம் இளங்கோன்னு, பாவம் அந்த மனுஷன எதுவும் செய்திடப்பிடாதே. நானு பாவி, அவர ஆளுவெச்சி அடிச்ச காயமே இன்னும் முழுசா ஆறலே; அதுக்குள்ளே அண்ணாத்தே..."
‘அண்ணாத்தே... எவன்மே ஒனக்கு அண்ணாத்தே? தென்னமரம் காத்துல ஆடுறப்போ, அதுல இருக்கிற ஓணான், மரத்த தான்தான் ஆட்டுறதா நினைச்சி தலைய ஆட்டுமாம். அப்படிப்பட்ட ஓணான் பய உங்கண்ணாத்த, அவன், எங்க இளங்கோவ ஒண்ணும் ஆட்ட முடியாது. அவருக்குப் பக்கபலமாக அந்த கஸ்மாலம் சார் ரமணன் இருக்காரு. அவருக்கு அல்லா போலீசுமே சல்யூட் அடிக்காங்கோ. பாமாவோட அங்கிளோ, கிங்கிளோ பெரிய போலீஸ்காரரு. ஒனிக்கு வேண்டாமுன்னா சொல்லு, நானு சேர்ந்திடறேன். பூக் கட்டிக் கட்டி கைதான் கட்டியாப் பூட்டு.''
“ஒனக்கென்ன சொல்லிட்டே. கட்டிக்கிட்டுப் போக நல்ல புடவகூட இல்ல. எனிக்கி இருந்த ஒரு புடவையும் இப்போ நாயினாவுக்கு பெட்ஷீட்டா ஆயிட்டு! சீவிச் சிங்காரிக்க ஒரு சீப்பு கூட இல்ல."
"கவலைய வுடுமே. சீவுறதுக்கு ஒனக்கு முடியிருக்கு. சிங்காரிக்க முகமிருக்கு. நானு என்னோட புடவயத் தாறேன். இரண்டு மொயம் பூவும் தாறேன். நாளிக்கி வந்து இங்க டிரெஸ் பண்ணிக்கிட்டுப்போ. நானும் பால்ராஜ் பேன்சி கடையில ஒரு கில்ட்டு செயினு பத்துரூவா தானாம் வாங்கி வச்சிட்றேன். நல்ல காரியத்த தள்ளப்புடாதுமே."
சரோசா, என்ன நினைத்தாளோ, ருக்குமணியின் தோளில் சாய்ந்து குலுங்கினாள். காலாட, கால் விரல்கள் தனித்தனியாய் ஆட, முதுகு மேலும் கீழுமாய் நகர, குலுங்கிக் குலுங்கி அழுதாள். பிறகு அவள் கையிரண்டையும் தனது தோளில் போட்டுக் கொண்டு, ருக்குமணியின் முகத்தில் மாறிமாறி முத்தமிட்டபடியே "எங்கம்மாவ பார்த்துட்டேன் எங்கம்மாவப் பார்த்துட்டேன்" என்று தன்பாட்டுக்குப் புலம்பினாள். ருக்குமணி, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தாள். குழந்தையை தாலாட்டுவது போல் அவளை மார்போடு சேர்த்து ஆட்டினாள். அவள் முகத்தைத் துடைத்து தனது கைகளை ஈரமாக்கிக் கொண்டாள். இந்த இடைவேளையில் சரோசா சுதாரித்துக் கொண்டாள். ருக்குமணியின் தோளை ஆதரவாகப் பிடித்தபடியே கம்பீரமாக எழுந்தாள். கூடவே எழுந்த ருக்குமணி சிறிது பதட்டத்தோடு வினவினாள் :
"சரக்கு எடுக்கவா போறே?"
"இனிமே எடுக்கப் போனா, என்ன நானே ஜோட்டால் அடிக்க முகத்தக் கொடுத்ததா அர்த்தம்."
"எனிக்கி ஒரு யோசனை தோணுது. பேசாம இன்னிக்கி நைட்டுல என் வீட்டுலேயே படுத்துக்கோ. நீ படுத்தாலும் படுக்காட்டியும் கோவிந்த வெளியில போட்டுத்தான் கதவ சாத்துவேன். இன்னா சொல்றே?"
"கவலைப்படாதே ருக்கு! எனிக்கி சமாளிக்கத் தெரியும். காத்தால வாறேன்."
"கண்டிப்பா வாறே. இல்லாட்டி நீ ஆரோ... நான் ஆரோ."
"அபசகுனமாப் பேசாதே. நானு ஒரு சொல்லுல நிக்கற பொம்மனாட்டி."

