Chapter 27

சரோசா தோளில் கறுப்புக் கயிறு போட்ட சிவப்பு பிளாஸ்கை தொங்கப் போட்டுக் கொண்டிருந்தாள். அந்த பிளாஸ்க் வயிற்றுக்கு மேலே அங்குமிங்குமாய் ஆடியது. அவளது இரண்டு கரங்களிலும் இரண்டு பொட்டலங்கள். கிட்டத்தட்ட சர்க்கஸ்காரி மாதிரி உடம்பை பாலன்ஸ் செய்துகொண்டு அலுவலகத்திற்குள் போனாள். அரசாங்க காண்டின் சரியில்லை என்று வெளியே ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓட்டலில் வாங்கிக்கொண்டு வரச் சொல்லியிருந்தார்கள். அவள் அலுவலகத்திற்குள் வந்ததும் வராததுமாக பலர் நச்சரித்தார்கள். அவள் ஏற்கனவே குடித்து முடித்துக் கிடந்த எச்சில் கிளாஸ்களை ஒவ்வொரு விரலுக்கும் ஒவ்வொன்றாக எடுக்கப் போனபோது கிரேடு -டூ கிளார்க்கும், டைபிஸ்டுமான கனகா மேஜையைத் தட்டியபடியே கத்தினாள்:

"ஏய் சரோ, இந்த மொட்ட டைப்ரைட்டர் சரிப்படல. ஜெனரல் செக்ஷன்ல போய் வேற டைப்ரைட்டர எடுத்துட்டு வரச்சொன்னேனே, ஏன் கொண்டுவரல?"

"போனேம்மா, ஒரிஜினல் பியூன் போனால்தான் கொடுப்பாங்களாம்."

"ஒன்னப் பார்த்தாலே யாருக்கும் கொடுக்கணுமுன்னு தோணாது. அப்துல்லா, இவள கூட்டிக்கிட்டுப் போ."

"எனக்குக் கல்யாணம் ஆயிட்டும்மா, ஆனாலும் பாதகமில்ல."

"அது ஒங்க இரண்டு பேரோட இஷ்டம். நீதான் பெரிய ஆளுன்னு எல்லாருக்கும் தெரியுமே. சரி, இவள கூட்டிக்கிட்டுப் போய் தோளுல டைப்ரைட்டர ஏத்திவிடு.”

“இப்பத்தானே மணி பதினொண்ணு ஆகுது. இதுக்குள்ளயா ஆளுங்க வந்துடுவாங்க? அப்படியே வந்திருந்தாலும் காண்டினுக்குப் போயிருப்பாங்க. அப்புறமா பார்க்கலாம்."

"ஏய் சரோசா, இதோ பாரு என்னோட நாற்காலி எப்படி இருக்குதுன்னு, ஏன் தொடைக்கல?”

வேலைக்காரப் பெண்ணின் சம்பளப் பாக்கியை, அந்த அலுவலகம் மூலமாக சரிக்கட்ட முயன்ற இன்னொரு கிளார்க் வனஜா, சும்மா சொல்லிவைப்பது போல் சொன்னாள்:

"இது தேறாத கேஸ்ப்பா, ஒழுங்கா இருந்த இளங்கோவுக்கு ஏன்தான் இப்படி புத்தி கெட்டுப் போச்சோ?"

எச்சில் கிளாஸ்களோடு நின்ற சரோசா, அவர்களை எரிச்சலோடு பார்த்தாள். அவற்றை அவர்கள் மேலே வீசக்கூடிய அளவுக்கு அவள் கைகள் உயர்ந்தன. செம்மண் நிறத்தில் அடியும் தலையும் ஒரேமாதிரி ஆங்காரமாகப் பார்த்த அப்துல்லாவை நோக்கினாள். டைப்ரைட்டரைத் தட்டுவதற்குப் பதிலாக உதடுகளில் விரலை வைத்துத் தட்டிய வனஜாவைப் பார்த்தாள்.

அலுவலகத்திற்கு சம்பந்தம் இல்லாத ஏதோ ஒன்றை அவசர

அவசரமாக டைப் அடித்துக் கொண்டு பிடரியை மட்டும் பூவோடு சேர்த்துக் கட்டிய கனகாவைப் பார்த்தாள். நமுட்டுச் சிரிப்புச் சிரித்த அக்கௌண்டன்ட் ராமசாமியை தனித்துப் பார்த்தாள். பிறகு அடைக்கலம் தேடுவது போல், எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல், ஒரு டெலிபோனை குடைந்து கொண்டிருந்த தலைமை கிளார்க் எட்வர்ட்டைப் பார்த்தாள். எல்லாரும் எல்லாமும் எதிரித்தனமாகத் தோற்றம் காட்டின. ஆனாலும், அவள் தலையை தொங்கப் போட்டபடியே எச்சில் டம்ளர்களோடு குளியல் அறைக்குள் போனாள். பத்து நிமிடம் கழித்து கப்புகளிலிருந்து நீர் சொட்டச் சொட்ட உள்ளே வந்தாள். தலை தாழ்த்தியபடியே பிளாஸ்கைத் திறந்து காபி டம்ளர்களை நிரப்பினாள். இதுவரைக்கும் அந்த அலுவலகத்திற்கும், தனக்கும், குறிப்பாக அவளுக்கும் தனக்கும் ஒட்டோ உறவோ கிடையாது என்பதுபோல் வஸ்தாது நாற்காலியில் உட்கார்ந்திருந்த எட்வர்ட் இப்போது கத்தினார்

"ஒரு காபி கொடுக்கிறதுக்கு எவ்வளவு நாழிம்மா? இப்படியிருந்தா கட்டுபடியாகாது."

"ஏய் சரோ, பேரு மட்டும் பெரிசா வச்சா போதுமா? டம்ளருக்கு வெளியில கைய வச்சுப் பிடி. உள்ள விரல விட்டுக் கொண்டுவர்றியே, ஒன் டீயே வாணாம்.”

"இந்தாம்மா, காபி ஏன் ஐஸ் மாதிரி இருக்குது? ஒன் கை பட்டாலே எல்லாமே கோளாறாயிடும் போலிருக்கே. ஒன்ன மாதிரி காபிக்கும் சூடு சொரணை இல்லாமப் போச்சே."

சரோசா கடைசியாகப் பேசிய பியூன் அப்துல்லாவை கடைசியாகப் பார்ப்பதுபோல் கோபத்தோடு பார்த்தபோது, இன்னொரு கிரேடு டூ கிளார்க் மோகன் பொதுப்படையாக விளக்கமளித்தான் :

"இந்த பிளாஸ்க் சரியில்லாட்டா, அந்தப் பொண்ணு என்ன பண்ணும்? சர்க்கார் தலையின்னா எல்லா காண்ட்ராக்ட்காரன்களும் மொட்டையடிச்சிடுறான். எழுதாத பால்பாயிண்ட்; இங்க் உறிஞ்சுற பேப்பரு; முனை இல்லாத குண்டூசி. தட்டிக்கேக்க நாதியில்ல. எனக்கு எதுக்கு வம்பு. கமிஷன் வாங்கியிருக்காங்கன்னு சொன்னாலும் அதை நிரூபிக்க முடியாதே."

மோகன் தன்னை குறிவைப்பதைப் புரிந்துகொண்ட அக்கௌண்டன்ட் ராமசாமி அவனிடம் ஏற்பட்ட செல்லாக் கோபத்தை சரோசாவிடம் செலாவணியாக்கினார்:

"இந்தாம்மா, ஸ்டேஷனரி சாமான்களை வாங்கிக்கிட்டு வரச்சொன்னேனே... ஒன் காது செவிடா?"

"எங்க போயி வாங்கணும்னு தெரியல சார். ஒரு வாட்டி காட்டினா போதும்."

"ஒனக்கு எல்லாமே நான் கத்துக்குடுக்கணும்னு சொல்லுவ போலிருக்கே!"

அக்கௌண்டன்ட் ராமசாமியைப் பார்த்து, வனஜாவும், கனகாவும் செல்லமாகச் சிரித்தார்கள். தலைமை கிளார்க் மட்டும் அவர்களை லேசான கோபத்தோடு பார்த்து, பிறகு கனகாவின் முக அழகில் மயங்கியதுபோல் சிரித்தார்.

சரோசா ஆடையற்றுப் போனவள் போல் அவமானப்பட்டு நின்றாள். பல்லைக் கடித்துக் கோபத்தையும் கண்களில் தேங்கிய நீரையும் வெளிப்படுத்தாமல், அனைவருடைய மேஜைகளிலும் இருந்த எச்சில் கிளாஸ்களையும் எடுத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு டம்ளர் மீதும் அவள் கரம் நீண்டு அதை எடுப்பதற்கு அதிகமாகக் காலம் தாழ்த்தியது. சேரியில் பழகிய ஒவ்வொருவரும், அவள் மனதில் நிழலாடினார்கள். இப்படித்தான் ஒருதடவை ராசு சரக்கப் போட்டுட்டு "பிரா எங்கேம்மே வாங்கினேன்னு" கேட்டப்போ, துரையண்ணன் அவன போட்டுப் போட்டு ஒதச்சான். அப்புறம் செட்டுல இருந்தே தள்ளி வச்சான். அங்கே ஒருத்தன்தான் இப்படின்னா, இங்கே ஒட்டுமொத்தமாக அல்லாப் பசங்களும் பொம்மனாட்டிங்களும்... அடக் கண்றாவியே... அடி ஆத்தே! இதுக்குப் பேருதான் கவர்ன்மென்ட் ஆபீசா?

சரோசா,யந்திர கதியில் இயங்கினாள். அப்துல்லா நாற்காலி யை துடைத்துவிட்டாள். அவனோடு போய் டைப்ரைட்டரை சுமந்து வந்தாள். மீண்டும் வெளியே உள்ள ஓட்டலுக்கப் போய் வந்தாள். எச்சில் கிளாஸ்களை மூணாவது தடவையாகக் கழுவி விட்டாள். இதற்குள் கிளிக்கூண்டு மாதிரி இருந்த பிளைவுட் அறைக்குள் இருந்து ஒரு காலிங்பெல் சத்தம். சரோசா உள்ளே ஓடிப்போனாள். அங்கே மெத்தை போட்ட நாற்காலியில் உடம்பு முழுவதையும் பரப்பி வைத்திருந்த அசிஸ்டென்ட் டைரக்டர் அருணாசலம், அவளிடம் ஒரு பில்லையும், இருபது ரூபாய் நோட்டையும் கொடுத்தபடியே உத்தரவிட்டார்:

"ஒரு பேண்டையும், சர்ட்டையும் இந்த லாண்டரியில் போட்டிருக்கேன்... அப்புறம் ஒனக்கு பாஸ் தந்தார்களா?"

“தருவாங்க சார்"

"கேட்டதுக்கு பதில் சொல்; தந்தாங்களா, தரலியா?”

"தர்ல; தருவாங்க!"

"இந்தாப்பா சுந்தரம்! இந்தப் பொண்ணுக்கு பாஸ் போட்டுக் குடுன்னு சொன்னேனே... ஏன் போடலே? ஒன்னத்தாம்பா சுந்தரம். மூணுதடவ கேக்கிறேன்ல, ஒரு தடவையாவது பதில் சொல்லேன்.."

"நேற்று போட்டுக் கொடுக்கிறதா இருந்தேன். அதுக்குள்ள ஒங்க எல்.ஐ.சி பணத்த கட்டப் போயிட்டேனா, இன்னிக்கி காலையில் போடலாமுன்னு நினைச்சேன். அதுக்குள்ள ஒங்க டெலிபோன் பில்ல கட்டப் போயிட்டேனா..."

சரோசா லாண்டரி பில்லோடு வெளியே வந்தபோது, 'பி.ஏ.' கந்தரம் எரிந்து விழுந்தான் :

"ஒன் மனசுல என்னம்மா நினைப்பு? வேலையில சேர்ந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகல. அதுக்குள்ள ஒன் புத்திய காட்டிட்டியே! ஆபீசருகிட்ட போய் ஏன் கம்ப்ளைண்ட் செய்யுறே?”

"நான் வேணும்னு சத்தியமா..."

"இனிமே ஒனக்குப் பாஸே தரமாட்டேன். வேணுமுன்னா நான் சொன்னேன்னு உள்ளே கிடக்கறதுகிட்ட சொல்லு. ஒன் மினுக்கத்த பார்த்தால் நீயே ஒரு பாஸ் மாதிரிதான்."

எல்லோரும் அவளைப் பார்த்துச் சிரித்தார்கள். சரோசா தனக்குத்தானே புரியாத புதிராய் தவித்தாள். அந்தச் சமயம் பார்த்து, உயரம், கனம், வயது ஆகிய முப்பரிமாணங்களிலும் நடுத்தரமான ஒருவர் உள்ளே வந்தார். அனைவரும் அவருக்கு சல்யூட் அடித்தார்கள். அவர், அவற்றை தலையாட்டி அங்கீகரித்தபடியே பிளைவுட் அறையின் புஷ் கதவைத் திறந்தார். அது, அவரது கையை இடுக்குப்பிடி போட்டுக் கொண்டு தலையில் ஒரு போடு போட்டது. அவர் தலையை தடவியபடியே புதுப்பெண் போல் நின்ற சரோசாவை சுட்டிக்காட்டி "இது யாரு" என்றார்.

"புது கேஷ்வல் சார்..."

'இந்தாம்மா, கேஷ்வலு. நான் உள்ளே இருக்கிறவர் மாதிரியே ஒரு ஆபீசரு. என்னப் பார்த்துட்டு அந்தக் கதவ திறந்து வச்சிக்கிட்டு நிக்கணும்னு ஒனக்கு ஏன் தோணல? நானே கதவ திறந்துக்கிட்டு போகணும்னா அப்புறம் நீ எதுக்கு? ஒனக்கு எதுக்குத் தண்டச் சம்பளம்?”

சரோசா, குறுக்கே வந்த பூதம்போன்ற அவரைப் புரியாமல் பார்த்தபோது, அந்த மனிதர் அவள் கதவைத் திறப்பாள் என்று எதிர்பார்த்தார். அவள் சும்மா நின்றதைப் பார்த்துவிட்டு மீண்டும் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனார். ஒரு நிமிடத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டர் அருணாசலம், "சரோ" என்று காலிங்பெல் தாள நயத்தோடு சொன்ன வார்த்தையை, அவர் முடிக்கும் முன்பே சரோசா அங்கே போனாள். அவர் எள்ளுங் கொள்ளுமாய் வெடித்தார்:

"இந்தாம்மா, நீ சரிப்படாதுன்னு தோணுது. இவர் சொன்னப் பிறகும் கதவத் தொறந்து விடலைன்னா ஒனக்கு எவ்வளவு திமிரு இருக்கணும்? இன்னொருவாட்டி இப்படிச் செய்தே. சீட்டக் கிழிச்சிடுவேன். அப்புறம் ஏ.வோ. சார்! இந்த மோகன் பயல் சரிப்பட மாட்டேங்கறான்; தண்ணியில்லா காடாய் பார்த்து...."

சரோசா, அதிகாரியின் அறையிலிருந்தும், அவர் செங்கோலோச்சும் செக்ஷனிலிருந்தும் வெளிப்பட்டு கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவமானப்பட்டு விட்டோமே என்பதைவிட, அவர்களை ஒன்றும் செய்யமுடியாமல் கையும், காலும் கட்டிப் போடப்பட்டிருக்கிறதே என்பதற்கு அதிகமாக வருந்தினாள். அந்தப் பக்கமாய் படியேறிக் கொண்டிருந்த இளங்கோவைப் பார்த்ததும், அவளுக்கு கவலைகள் கழன்று ஒரு உற்சாகம் ஏற்பட்டது. "சாரே.. சாரே...!” என்று சொன்னபடியே அவனைக் கூப்பிட்டாள். அவன் நடுப்படியில் நின்றபடி அவளை ஏறயிறங்கப் பார்த்தான். ஏதோ சொல்லப்போவது போல் உதடுகளைக் குவித்தான். பிறகு, அவள் அங்கே இல்லாததுபோல் அனுமானித்துக்கொண்டு மேலே சென்றான். சரோசா, புதைகுழிக்குள் மூழ்குகிறவள் போல் புதைந்தாள். அவனிடம் ருக்கு வீட்டில் நடந்த அனைத்தையும் காரண காரியங்களோடு சொல்ல வேண்டும் என்றுதான் அவள் துடித்தாள். அவனோ, அவளுடைய தோஸ்தாக நடந்துகொள்ளாமல், பாக்கியம்மாளின் மகனாகவே நடந்து கொள்கிறான். இல்லையானால், படிகளில் அப்படி நடந்து போயிருக்க மாட்டான்.

சரோசா வெளியே போய், லாண்டரித் துணிகளை வாங்கிக் கொண்டு மீண்டும் தனது செக்ஷனுக்குள் வந்தாள். அப்போது தலைமை கிளார்க் எட்வர்ட் முன்னால் நாற்பது வயது பெண் ஒருத்தி கண்ணீரும், கம்பலையுமாய் அழுது கொண்டிருந்தாள். பரட்டைத் தலை, பழுப்பேறிய முகம், காய்ப்புக்கள் கொண்ட கைகள், திக்கற்ற பார்வை, திக்குமுக்காடும் குரல். எட்வர்ட் அவளை விரட்டினார்:

"இங்க வந்து ஏம்மா ஒப்பாரி போடுறே? ஒன்கிட்ட எத்தனை தடவ சொல்லுறது? ஒன் புருஷன் செத்தா நான் என்ன செய்ய முடியும்? தாசில்தாரோட வாரிசு சர்ட்டிபிகேட்ட திருத்தாமல், பென்ஷனையோ, பிராவிடன்ட் பணத்தையோ தரமுடியாது. என்கிட்ட அழுகிறத, தாசில்தார் கிட்ட போய் அழு."

"தாசில்தார் கிட்ட போனேன் சார். பல தடவை காத்திருந்து ஒருதடவை பார்த்தேன். என்னோட மாமியார் அவரோட புருஷன் பென்ஷன வாங்கிக்கிட்டிருக்கார். அதோட அவருக்கு என் புருஷன் மாதிரி ஆறு பேர் இருக்காங்க. அதனால் அவரு வாரிசுகள்ல ஒருத்தரா ஆகுமுடியாதுன்னு படிச்சுப்படிச்சு சொன்னேன். ஆனால், அந்த ஆளு 'கொடுத்தது கொடுத்ததுதான், செய்யுறத செய்துக்கோ'ன்னு கத்துறாரு."

"அதுக்கு ஏம்மா, என் பிராணன வாங்குறே? வாரிசு சர்ட்டிபிகேட்டுல தாசில்தார் வில்லங்கம் செய்தால், நான் என்ன செய்ய முடியும்? அந்த சர்ட்டிபிகேட்ட திருத்தாத வரைக்கும் நாங்க ஒனக்கு ஒரு பைசா தர முடியாது!'

"அப்போ, பியூனா வேல பார்த்த என் புருஷன் செத்து இந்த ஒன்பது மாசமா வயது வந்த மகளோட, படிக்கிற பையனோட பட்டினி கிடக்குறேனே, அது மாதிரி கிடக்கணும்னு சொல்றீங்களா?"

தலைமை கிளார்க் எட்வர்ட், அவளுக்குப் பதில் சொல்லாமல் தன் வேலையைப் பார்த்தார். அந்தப் பாவிப் பெண்ணும், ஆறுதலுக்காக அங்குள்ள அத்தனை முகங்களையும் பார்த்தாள். ஒன்றுகூட ஒரு அனுதாபப் பார்வையை வீசவில்லை. இவ்வளவுக்கும் அவள் கணவன் அந்த செக்ஷனிலேயே கொத்தடிமை போல் வேலை பார்த்தவன். அனுதாபமாகப் பார்த்த சரோசாவிடம் ஒரு தோழியைக் கண்டுவிட்ட தோழமையில், அந்தப்பெண் “நீங்களே சொல்லுங்கம்மா புருஷன் இருக்கப்பவே, அரப்பட்டினி. அவரும் செத்து, அதோட அவரு சம்பளமும் செத்துப் போனால் எப்படிம்மா பொழப்ப ஓட்டுறது?” என்றாள். இதற்குள் அக்கௌண்டன்ட் ராமசாமி சரோசா மீது எரிந்துவிழுந்தார்.

“ஏய் சரோசா, பெரிய ஆபீசருமாதிரி கேட்டுகிட்டா நிக்கே? ஒன் வேலையை பாறேன். சரியான கழுத்தறுப்பு. இந்தாம்மா! ஒன் புருஷனோட வாரிசு சர்ட்டிபிகேட்டை தாசில்தார் திருத்தணும். இல்லாட்டி நீ தலைகீழா நின்னாலும் பணிக்கொடை பணமோ, சேமநிதியோ, பென்ஷனோ வராது. பேசாமப் போ. தலைக்கு மேல வேலையிருக்கு.''

அந்தப் பெண் தலையில் கை வைத்தபடியே வெளியேறினாள். வாசலைத் தாண்டியபோது , ஒரு விம்மல், வெடிச்சத்தம் போலக் கேட்டது. அவளை விக்கித்துப் பார்த்து நின்ற சரோசாவும், நிலைகுலைந்து போனாள்.

அன்று மாலைப் பொழுது முழுவதும் சரோசா மனதில் அந்த அப்பாவி விதவைப் பெண்ணே குடியிருந்தாள். இதற்குள், அனைவரும் போகத் துவங்கினார்கள். மாடிப்படிகளில் சந்தோஷமான பேச்சும், சரளமான காலடிச் சத்தங்களும் கேட்டன. அந்த செக்ஷனில் இருந்த பெண் கிளார்க்குகளும், மோகனும் போய்விட்டார்கள். ஆனால், தலைமை கிளார்க் எட்வர்ட், கணக்காளர் ராமசாமி உட்கார்ந்திருந்தார்கள். வேறு செக்ஷனிலிருந்து இரண்டு மூன்றுபேர் உள்ளே வந்தார்கள். வெளியே போகப்போன சரோசாவை, எட்வர்ட் அங்கே நிற்கும்படி சைகை செய்தார். இதற்குள் அப்துல்லா, கதவை மூடினாள். ஜன்னல்களை சாத்தினான். போதாக்குறைக்கு ஸ்கிரீன் துணிகளை இழுத்துவிட்டான். எட்வர்ட், ஒரு தாளில் வரிசை வரிசையாக எழுதி, சரோசாவிடம் ரூபாய் நோட்டுகளையும் நீட்டியபடியே உத்தரவிட்டார்.

"இந்தாம்மா, ஒரு புல் பாட்டில் பிராந்தி, நாலு பீர், கொஞ்சம் நொறுக்குத் தீனி... எட்டு பாய்ல்டு முட்டை... குயிக்கா வாங்கிக்கிட்டு வா."

சரோசா திகைத்துப் போனாள். ஒருவேளை, தான் ஒருமாதத்திற்கு முன்புவரை சரக்கு வாங்கியது அவர்களுக்குத் தெரியுமோ என்று கூட நினைத்தாள். இங்கேயுமா சரக்கு? அடக்கண்றாவியே! ஒரு நிமிடம் மலைத்து நின்றவள், பிறகு மலைபோன்ற உறுதியுடன் அழுத்தம் திருத்தமாய் சொன்னாள்:

“இந்த வேலைக்கி வேற ஆளப் பாருங்கோ சாரே..."