Chapter 28
இன்ஸ்பெக்டர் கோபதாபமாக எழுந்தார். அருகே உட்கார்ந்திருந்த ‘எல் அன்டு ஒ' இன்ஸ்பெக்டரைப் பார்த்து அவர்தான் தனது நிலைமைக்குக் காரணம் என்பது போல் தன்னை அறியாமலே கத்தினார்:
"என்னப்பா இது, பொல்லாத செக்யூரிட்டி டியூட்டி. இந்த வாரத்திலேயே இது மூன்றாவது தடவை. குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்காமல் மணிக்கணக்கில் திண்டாடணும். போன சமயம் இப்படித்தான்: எவனோ தலகாஞ்சவன்னு ஒருத்தனத் திட்டிட்டீங்க. அவ்வளவுதான், அவன் குதியோ குதின்னுகுதிச்சான்.பிரஸ்மேனாம். அப்பப் பாத்து டெபுட்டி கமிஷனர் வந்தார். அடாபடியாப் பேசுற அவனைத் திட்டப் போறார்னு நெனைச்சேன். அவர் என்னடான்னா 'தொப்பியை கழத்தணுமாயா'ன்னு என்னைத் திட்டிக்கிட்டு அந்த ஜிப்பாப் போட்ட பிரஸ்காரன் தோளிலே கையைப் போட்டுக்கிட்டுப் போறார். வசவு வாங்குறதுக்குப் பெயரே செக்யூரிட்டி டியூட்டின்னு ஆகிப்போச்சு."
இந்தச் சமயத்தில், ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க சபாரி உடைக்காரர் ஒருவர், ஐம்பது வயதுப் பெண்ணோடு உள்ளே வந்தார். அவர் கெஞ்சிய கெஞ்சல், அந்த உடைக்குச் சம்பந்தம் இல்லாமல் இருந்தது. முகமெல்லாம் வியர்த்து தரையில் சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருந்தது. அந்த அம்மா கணவனைப் பிடித்துக் கொண்டே ஏங்கி ஏங்கி அழுதாள்; அந்த மனிதர் அழுகைக் குரலில் புலம்பினார்;
"இன்ஸ்பெக்டர் சார்! நீங்கதான் சார் எங்களைக் காப்பாற்றணும். நீங்கதான் எங்களுக்கு அடைக்கலம் கொடுக்கணும். நாற்பது வருஷமா டெல்லியிலே இருந்திட்டேன். செக்கரட்டேரியேட்டில் செக்ஷன் ஆபீஸரா போனமாசம்தான் சார் ரிட்டெயர்டு ஆனேன் . மூணு வருஷத்திற்கு முன்னால வாங்கிப் போட்ட நிலத்தில் வீடு கட்டலாமுன்ன வந்தால் அய்யோ..."
அவரால் மேற்கொண்டு பேசமுடியவில்லை; அதற்குள் இன்ஸ்பெக்டரும் அதட்டினார்:
"இது என்ன துஷ்டிவீடா ஒப்பாரி போடுறதுக்கு? சட்டுப்புட்டுன்னு விஷயத்தைச் சொல்லுங்க.”
எதையோ பெரிதாய் எதிர்பார்த்து ஒப்பிக்கப் போன அந்த அம்மா, தனது மெல்லிய தேகத்தை லேசாய் ஒடுக்கிக் கொண்டு, இன்ஸ்பெக்டரை திடுக்கிட்டுப் பார்த்தாள். பிறகு எந்திரக் குரலில் விஷயத்தைச் சொன்னாள்:
"நாங்க வாங்கிப் போட்ட இரண்டு கிரவுண்டு இடத்தில் எவனோ ஒருத்தன் மல்ட்டிப் பிளாட் கட்டியிருக்கான் சார். உண்ணாம தின்னாமல் சேமிச்சப் பணத்தில் வாங்கின நிலத்தை, எந்தப் பாவியோ வாயில போட்டுட்டான் சார்.''
அந்த இன்ஸ்பெக்டரும் உண்மையிலே கொதித்துப் போனார்.
“அடக்கடவுளே! எந்த இடத்தில கட்டினாங்க? கட்டின பயல் கையில விலங்கு போட்டு இழுத்திட்டு வாறேன். எந்த இடத்தில?”
"சிக்னல் பக்கத்துல சார்... பிள்ளையார் கோவில் இருக்கே அதுக்குக் கிழக்குப் பக்கம்..."
இன்ஸ்பெக்டர் முன்வைத்த மூளையை பின்வைத்தார். முன் யோசனையை பின் யோசனையாக்கினார். இதற்குள், எல் அண்டு ஓவும், அவரைப் பார்த்துக் கண்ணடித்தார். அது தேவையே இல்லை. இந்த கிரைம் இன்ஸ்பெக்டருக்கும் அதில் பிளாட் கட்டியது யார் என்று தெரியும். சரோசாவுக்கு அண்ணாத்தையான சாராய சக்ரவர்த்தி; அந்த பிளாட்டுக்கு கிரஹப்பிரவேசத்திற்கு இவரே போயிருக்கிறார். இப்போது பட்டும் படாமலும் பேசினார்:
"எதுக்கும் நாளைக்கு வாங்க. நான் கவர்மென்ட் லாயரை கன்செல்ட் பண்ணணும். இது சிவில் விவகாரம். கிரிமினல் விவகாரம் இல்ல. போலீசுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினை. தாசில்தார் தீர்க்க வேண்டிய விவகாரம்.”
"தாசில்தாருக்கிட்டே போனேன் சார். அவரு போலீஸ் விவகாரம் என்கிறார். சார், எங்கள மாதிரி வெளி நகரத்தில் இருந்து தமிழ் மண்ணையே நேசிச்ச ஆட்களுக்கு நீங்கதான் சார் ஆதரவு கொடுக்கணும்; நீங்கதான் சார் காப்பாற்றணும்.”
"நீங்க சொல்றது சரிதான். அதேசமயம் ‘மல்டிப் பிளாட்' கட்டுறவர், எம் எம் டி யே அப்ரூவல் வாங்கித்தான் கட்டுவார். அந்த அப்ரூவல், பட்டா இல்லாமல் கிடைக்காது. அதனால்தான் தாசில்தாருக்கிட்டே போகச் சொல்லுறேன்.”
"இதோ இருக்கு சார் என் பட்டா."
இது பட்டாவா, பட்டமான்னு தாசில்தார் தான் தீர்மானிக்கணும். அவர் சரிப்படாட்டால், கோர்ட்டுக்குப் போங்க."
"அப்போ போலீஸ் எதுக்கு சார்?"
“என்னையா நீ பெரிய மனிதன்னு மரியாதை கொடுத்தால் சின்னத்தனமா நடந்துக்கிடுறீயே. நிலத்தை வாங்கும் போது போலீஸ்ல கேட்டா வாங்குன? முதலில் இடத்தைக் காலி பண்ணுய்யா.”
இந்த மாதிரி வார்த்தைகளைக் கேட்டறியாத அந்த ஓய்வு பெற்ற மத்திய அதிகாரி, அப்படியே அசைவற்று நின்றார். இன்ஸ்பெக்டர் அடித்தாலும் அடித்து விடுவாரோ என்று அந்த அம்மா பயந்து போனாள். கணவனை இழுத்துக் கொண்டு படிப்படியாய் இறங்கிய போது, இன்ஸ்பெக்டர் விரலைச் சுண்டி அவர்களை நிற்க வைத்தார். சிவகாசி வெடிபோல் வெடித்தார் :
“அந்த பிளாட் பக்கம் கலாட்டா கிலாட்டா செய்யாதிங்க. அப்புறம் நாங்க எங்க கடமையைச் செய்ய வேண்டியது இருக்கும். போலீசுக்கு ஒரு உடைமை யாருக்குச் சொந்தம் என்பது முக்கியம் இல்ல; யாருக்கிட்ட அந்தப் பொருள் இருக்கோ அவங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கிறதுதான் முக்கியம். நான் சொல்லுறது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கேன்; நீங்க போகலாம்."
இன்ஸ்பெக்டர், அவர்களைப் போகவிடுவதே, தான் செய்யும் மிகப்பெரிய சேவை என்பது போல் பெருமிதமாய் நின்றார். அந்த பழுதடைந்த ஆபீஸர்பித்துப் பிடித்து, செத்துப் பிழைத்தவர் போல் மனைவியோடு வெறுமையாக நடந்தார். மேலே கைகளை நீட்டி "கடவுளே கடவுளே” என்றார். இதற்குள் எல் அன்டு ஓ குற்றம் சாட்டும் குரலில் பேசினார்:
“ஆனாலும் நம்ம சாராய சக்ரவர்த்தி ரொம்பத்தான் ஆட்டம் போடுறான். கோவில் நிலத்தை மடக்கினான்; பேசாமல் இருந்ததோம். புறம்போக்கு நிலத்தை முடக்கினான்; சும்மா இருந்தோம் மாதச் சம்பளக்காரங்க குருவி சேர்க்கிறது மாதிரி சேர்த்த பணத்தில் வாங்குற நிலத்தை மடக்குறது என்ன நியாயம்? நீ அந்தப் பெரியவங்கள அப்படி விரட்டி இருக்கக் கூடாது!"
"என்னப்பா நீ, பிரச்சினை உன் சம்பந்தப்பட்டது இல்லை என்கிறதால, சிந்தித்துப் பார்க்கவே மறுக்கிறீயே. நம்ம போலீஸ் கமிஷனரால கூட அவனை ஒன்றும் பண்ண முடியாது. அரசாங்கமே அவன் பையில இருக்குது. செல்லாக் கோபத்தை பொறுமையா காட்டிக்க வேண்டியதுதான். அப்படி அடக்கி வைக்கிற கோபம் ஏலாத ஆசாமிங்கக்கிட்ட பாயுது. சப்ரெஜிஸ்டிராரும் சாராயக்காரன் பெயரில் ஒரு போலிப் பத்திரத்தை பதிஞ்சிருக்கான். தாசில்தாரும் பட்டாக் கொடுத்திருக்கான். நாம என்ன செய்ய முடியும்? நாளைக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினால், அதை விசாரிக்கப் போறதே இந்த தாசில்தார்தான். யார் நிலத்தையும் யாரும் அபகரிக்கலாம் என்பது மாதிரி ஆகிப்போச்சு."
"போகிற போக்கைப் பார்த்தால் நம்ம யூனிபாரத்தைத் திருடி எவனாவது அதை உடுத்திக்கிட்டு நம்ம நாற்காலியில் வந்தே உட்கார்ந்து, தான்தான் இன்ஸ்பெக்டர் என்று சொல்லிவிடலாம்; அப்பமும் நம்மால ஒன்றும் செய்ய முடியாது."
இரண்டு இன்ஸ்பெக்டர்களும் ஒருவரையொருவர் இயலாமையில் பார்த்தார்கள். அதே சமயம் கிரைம் இன்ஸ்பெக்டர் சிந்தித்தார். திடீர் என்று மார்க் டிவைன் என்ற அமெரிக்க எழுத்தாளர் பெண்களுக்கு 'உபதேசித்தது' நினைவுக்கு வந்தது. 'கற்பழிப்பை எதிர்க்க முடியாவிட்டால், அதை ரசித்து அனுபவி.."
இன்ஸ்பெக்டர், சாராய சக்ரவர்த்திக்கு டெலிபோன் செய்து, அவரது மல்ட்டிப் பிளாட் கட்டிடத்திற்கு வந்த ஆபத்தையும் அதைத் தாம் முறியடித்ததையும் சொல்லப் போனார். டெலிபோன் அருகே போனவர் திடுக்கிட்டார். எதைச் சொல்லப் போனாரோ அதை அந்த எல் அண்டு ஓ இன்ஸ்பெக்டரே சாராய சக்ரவர்த்தி 'பி.ஏ.'விடம் ‘அய்யா அய்யா' என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.
வாழ்க்கையே வெறுத்தப் போன கிரைம் இன்ஸ்பெக்டர், படிகளில் இறங்காமல் அந்த அறையிலிருந்து கீழ்த்தரைக்குக் குதிக்கப் போனபோது, மேஜையில் இருந்த ரேடியோ மைக் அலறியது. எடுத்தார்.
"எஸ் சார், கிரைம்தான் சார் பேசுகிறேன்... எஸ் சார்... நோ சார்... எஸ் எஸ் சார்... விசாரிக்கேன் சார்... அவளும் பெரிய ரவுடிதான் சார்... எஸ் சார்.. சாரி சார்..."
மைக்கில் பேசி முடித்த இன்ஸ்பெக்டர், சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் மீது இருந்த கோபத்தை மறந்து, தாபத்தோடு பேசினார்:
"அந்த சாராயக்காரி சரோசாவுக்கு திமிரப் பாரு. யாரோ ரவுடிங்க, அவளை ஏதோ ஒரு நைட்டுல கொலை செய்யப் போனாங்களாம். லோக்கல் போலீஸ்ல நம்பிக்கை இல்லன்னு, கமிஷனரே விசாரிக்கணும்னு மனுக் கொடுத்திருக்கிறாளாம். டெப்டி கமிஷனர் கத்துறார். 'எப்படிய்யா அவளை கமிஷனர் லெவலுக்கு விட்டு வைக்கலாமு'ன்னு சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் சொல்லுறார். இவளை அப்பவே விட்டது தப்பாப் போச்சு."
"லோக்கல் போலீஸ், கமிஷனர் ஆபீஸ், கிரைம் பிராஞ்ச், இந்த மாதிரி வார்த்தைகள் சாதாரணமானவங்களுக்குத் தெரியாது. இவளுக்குப் பின்னாலே எவனோ ஒரு போலீஸ்காரன் இருக்கிறான்.”
“எவனோ என்ன எவன்; இந்த திருமலையப்பனாத்தான் இருக்கும்."
“பாத்திடலாம். இந்த சரோசா எங்க போயிடப் போறாள்?" கிரைம் இன்ஸ்பெக்டர், சரோசா எதிரே நிற்பதுபோல் அனுமானித்துக்கொண்டு 'இரு இரு' என்பது மாதிரி தலையை மேலும் கீழுமாய் ஆட்டினார்.

