என்னுரை

1992-ஆம் ஆண்டில் இந்த நாவலை, இதே பெயரில் தினத்தந்தியில் தொடர்கதையாக எழுதினேன். ஆகையால், அந்த வாசகர்களுக்குரிய எளிய நடையில் முதல் தடவையாக ஒரு சமூக பிரச்சனை குறித்து எழுதப்பட்டது.

இந்த நாவலுக்கான நிகழ்வு, என் கண் முன்னாலயே நடந்தது. எங்கள் பகுதிப் பக்கம், இந்தப் படைப்பில் வரும் சரோசாபோல இரும்பு இத்தியாதிகளை திருடுவதும், தட்டி கேட்பவர்களை தலைகளில் தட்டுவதுமாக இருந்த ஒரு சேரிப் பெண்ணைப் பற்றிய சித்தரிப்புதான். இவள், தனது தாத்தாவிடம் காட்டிய பரிவையும் நான் ஒரு தடவை கண்டிருக்கிறேன். அந்த மனிதர், இந்த நாவலில் வருவதுபோலவே காட்சி அளிப்பார்.

சென்னை தொலைக்காட்சியிலும், வானொலியிலும் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய நான், இந்த இரு நிறுவனங்களிலும் கேசுவல்கள் எனப்படும் அரசின் அன்றாட கூலி அலுவலர்கள், நிரந்தர அலுவலர்களால் எப்படி பாடாய்ப்படுத்தப்படுகிறார்கள் என்பதை அறிவேன். பெரும்பாலும் இந்த நாவலில் வருவதுபோலவே அவர்கள் நடத்தப்படுகிறார்கள். ஆனாலும், இவர்களுக்கு நான் மனிதாபிமானமிக்க அலுவலராகவே செயல்பட்டேன். இவர்களில் பட்டதாரிகள் உட்பட்ட பலர், இன்னும் என் வீட்டிற்கு வருகிறார்கள். இந்த நட்புரிமைதான் இவர்களை பற்றி எழுத எனக்கு தகுதி வழங்கியுள்ளது.

ஒரு சேரிப் பெண்ணை பற்றிய பரிதாப சித்தரிப்போடு. அரசின் அன்றாடக் கூலி அலுவலர்களின் அனுதாப சித்தரிப்போடும் இரட்டை நோக்கத்தோடு, இந்த நாவலை எழுதினேன். கூடவே, கள்ளச்சாராயம் காய்க்கப்படும் 'கலையை' சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் போய் தெரிந்து கொண்டேன்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் தோழர். செந்தில்நாதன், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எனது குடும்ப நண்பர். அவர் அண்ணன் ச. ராசமாணிக்கமும் நானும், நேருதாசன், பகத்சிங், தமிழ்மணி, தர்மலிங்கம், பலராமன் போன்ற தோழர்களும் சேர்ந்து, 1958-ம் ஆண்டு வாக்கில் தேசிய முழக்கம் என்ற பத்திரிகையை நடத்தியிருக்கிறோம். இவர்களோடு, தோழர் செந்தில்நாதனும் அந்தக் காலகட்டத்தில், என் சிந்தனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

தோழர். செந்தில்நாதனின் அணிந்துரை, அடிப்படை மக்களைப் பற்றிய இந்த படைப்பிற்கு வலிமை சேர்க்கிறது. ஜனரஞ்சகத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டிருக்கும் கருத்து, இந்தக் காலகட்டத்தில் ஒரு கருத்துப் போராகவே நடை பெற்று வருகிறது. இது, இப்போது தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது. தரமான வாசகர், எந்தப் பக்கம் முகம் திருப்புவது என்று புரியாமல் தவிக்கிறார். மேட்டுக்குடி எழுத்தாளர்கள், இவரது முகத்தை பளவந்தமாக திரும்பப் பார்க்கிறார்கள். என்னைப் போன்ற எழுத்தாளர்களும், தோழர் செந்தில்நாதன் போன்ற சமூகச் சிந்தனையாளர்களும் இந்த வன்முறை திருப்பிலிருந்து வாசகர்களை, மீட்டெக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்.

மக்கள் எழுத்து என்பது மலிவு எழுத்தல்ல, மாறாக எந்த மக்களிடம் நிகழ்வுகளையும், மொழியாடல்களையும் உள்வாங்குகிறோமோ, அவற்றை, அந்த மக்களுக்கே. விஞ்ஞான பூர்வமாக, அவர்களின் மானுட நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் திருப்பிக் கொடுப்பதே மக்கள் எழுத்தாளர்களின் பெரும் பொறுப்பாகிறது. இதற்கு, இந்த தாழம்பூ, பத்தாண்டுகளுக்கு முன்பே தாள் திறந்தது.

தோழர் செந்தில்நான் சுட்டிக்காட்டுவதுபோல், சமதர்ம மாதர் மன்றம் இட்டுக்கட்டப் பட்டதுதான். பத்தாண்டுகளுக்கு முன்பு ஆங்காங்கே நடந்த பெண்ணியப் போராட்டங்களை உள்வாங்கித்தான் இந்த 'மன்றத்தை' படைப்பில் கொண்டு வந்தாலும், சம்பந்தப்பட்ட பெண்ணிய அமைப்புகள்கூட இந்தப் படைப்பைப் பற்றி அலட்டிக்கவில்லை.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் 19-ஆம் நூற்றாண்டில், நம் மூதாட்டிகள் மாராப்பு போட உரிமை கேட்டு முப்பத்தைந்தாண்டு காலம் நடத்திய தோள்சீலைப் போராட்டமே இன்றைய பெண்ணிய இலக்கிய மீட்புகளில் இடம் பெறாதபோது, இந்தப் படைப்பு இடம் பெற வேண்டும் என்று நான் நினைப்பது ஒரு மூடநம்பிக்கை மாதிரிதான்.

இந்தப் படைப்பு வெளியாகக் காரணமாக இருந்த தினத்தந்திக்கு - குறிப்பாக அதன் இயக்குனர் திரு. சிவந்தி திரு.சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கும், அப்போதைய செய்தி ஆசிரியரும், மிகச் சிறந்த எழுத்தாளருமான தோழர்.சண்முக நாதனுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படைப்பை பல்வேறு கல்வியாளர்கள் தத்தம் ஆய்வுகளுக்காக கருப்பொருளாக எடுத்தாண்டிருக்கிறார்கள். பல்வேறு ஆய்வு அறிக்கைகள், எம்.பில்., -பட்ட அறிக்கைகள் வெளியாகி உள்ளன. இவர்களுக்கு, என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது படைப்புகள் அனைத்தையும் கொண்டு செலுத்த முன்வந்திருக்கும் பெரியவர் திருநாவுக்கரசு அவர்களுக்கும், அவரது அருமை மகன் ராமு அவர்களுக்கும், நான் நன்றி கடன்பட்டுள்ளேன். இங்கே நான் குறிப்பிடுவதுபோல் நன்றி ஒரு கடன்தான். காரணம், எனது பழைய படைப்புகளை கொண்டு வருவதன் மூலம் இவர்களுக்கு புதிய வருவாய் வரப்போவதில்லை. ஆனாலும், என் மீதுகொண்ட அன்பாலும், என்னைப் போன்ற எழுத்தாளர்களின் மக்கள் வழி படைப்புகள் புதுப்பிக்கபட வேண்டும் என்ற சமூக நோக்காலும் பெரியவர் திருநாவுக்கரசு இந்த நாவலையும், இது போன்ற எனது இதரப் படைப்புகளையும் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கிறார். அவருக்கு ஆயிரம் தடவை நன்றி கூறினாலும் அது முழுமையாகாது.

வாசகப் பெருமக்கள் இந்தப் படைப்பு குறித்து தங்களின் விசர்சனத்தை தெரியப் படுத்தினால் அது என்னை ஊக்குவிக்கும்.

சு.சமுத்திரம்