Chapter 5
அந்தப் போலீஸ்காரரும், இந்த இளங்கோவும், சரோசாவும் சேர்ந்தாற்போல், மாதா கோவில் வளாகத்திற்கு வெளியே வந்தார்கள்.
போலீஸ்காரருக்கும் இளங்கோவுக்கும் மத்தியில் வந்த சரோசா, தலைமுடியை விரித்துப்போட்டு, அதுவே கழுத்துக்கு ஒரு ஸ்கிரீன் மாதிரி காட்ட, அங்குமிங்குமாய் பார்த்தாள். ஒரு மேட்டில், இரண்டு பேர் சவலைக் குழந்தை மாதிரி இருந்த கரும்பை துவம்சம் செய்து கொண்டிருந்தார்கள். அதற்கு அருகே கரும்புச்சாறு குவளை ஒரு மேஜையில் இருந்தது. ஈக்கள் மொய்த்து, அந்தச் சாறு தன்னை ஒரு நோய்த் திரவமாய் பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தது. காக்கிச் சட்டையில் மூன்று கோடுகள் போட்ட ஒரு போலீஸ்காரரும், சிவில் உடையில் சிவப்புக்கோடு சட்டை போட்டிருந்த இன்னொருவரும் கரும்புக்காரரிடம் எதையோ கிசுகிசுத்தார்கள். போலீஸ்காரர், லத்திக் கம்பை ஊன்றிக் கொண்டு கம்பீரமாக நின்றபோது, அந்தக் கரும்பு மனிதர் இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுகளை எடுத்து அவரிடம் நீட்டினார். அவரோ அதை கண்ணால் பார்க்க விரும்பாதது போல் கண்களை மூடிக்கொண்டார். இதற்குள் சிவில் ஆசாமி, அந்த இரண்டு நோட்டுகளையும் பறித்துக் கொண்டு யூனிபாரம் ஆசாமியோடு, ஒரு பேன்சிக் கடையை பார்த்துப் போய்க் கொண்டிருந்தார்.
சரோசா, தன் பக்கம் நின்ற போலீஸ்காரரைப் பார்த்துக் கேட்டாள்:
“ஏன் சாரே அதோ மாமூல வாங்குறாரே, அவரை ஒன்னால அரஸ்ட் பண்ண முடிமா?"
சரோசாவின் பக்கத்தில் நின்ற போலீஸ்காரர் சற்றுத் தொலைவில் ஒரு சீப்பை எடுத்து தலைவாரியபடியே, 'சீப்பாக' நடந்து கொள்ளும் தனது போலீஸ் சகாவையே வெறித்துப் பார்த்தார். அவருக்கு, தனது யூனிபாரமே கழன்று அம்மணமாக நிற்பது போல் தோன்றியது. 'நான் அப்படிப்பட்டவன் இல்லை' என்று இவளிடம் எப்படிச் சொல்வது? இதுவரை ஒரு டீ கடையில்கூட, ஓசிடீ, குடித்ததில்லை என்பதையும், இதனாலேயே பல தண்ணி இல்லாக் காடுகளை ஓசியாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டதையும், பதவி உயர்வு பறிபோனதையும், இவளிடம் எப்படிச் சொல்வது? சரோசா, அவரது முகச் சுளிப்பைப் பார்த்துவிட்டு சமாளித்தாள்.
"அந்த போலீஸ் அண்ணாத்தைய நான் தப்பா சொன்னதா நினைக்காதே சாரே. நாங்கோளும், நீங்கோளும் தோஸ்துங்க. சாரு வேலைக்குப் புதுசோ?”
"இல்ல, இல்ல, உனக்குத்தான் புதுசு."
அந்தப் போலீஸ்காரர் பேச்சோடு பேச்சாக, அவளை முறைத்துப் பார்த்துவிட்டு, அந்த வழியாய் போன ஒரு ஆட்டோ ரிக்ஷாவை கைதட்டிக் கூப்பிட்டார். அந்த ஆட்டோ டிரைவர் யானை வாயில் பட்ட கரும்பும், போலீசிடம் சிக்கிய ஆட்டோவும் ஒன்று என்பது போல் கண்டுக்காமல் ஆட்டோவை ஒடித்து முறித்து வளைத்தார். உடனே இவர் விசிலடித்தார். பயந்துபோன ஆட்டோக்காரர், பம்மிப்பம்மி வந்து ஆட்டோவை அவர் கால் அருகே, அதன் முனைப்பைக் காட்டி நிறுத்தினார். அந்தப் போலீஸ்காரர் உடனடியாய்க் கேட்டார்:
"இந்தாப்பா, பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல இவங்களை விட்டுட்டு பழையபடியும் இங்கே என்னைக் கொண்டுவந்து விடணும். எவ்வளவு கேக்கிற?"
"சார்... சார், கிண்டல் பண்ணாதீங்க சார். நீங்க கைதட்டிக் கூப்பிட்டது நிசமாவே என் காதுல விழல சார்."
போலீஸ்காரர் ஆட்டோக்காரரை கண்டுக்காமல், இளங்கோவிடம் இப்படிச் சொன்னார்:
"இந்தாங்க மிஸ்டர்! என்னோட டூட்டி உங்களை நடக்கவச்சு கூட்டிப்போறதுதான். உங்களுக்கு இஷ்டம் இருந்தால் பத்து ரூபாய் அவர்கிட்ட கொடுங்க, ஆட்டோவில் போகலாம்."
இளங்கோ தலையாட்டினான். பைக்குள் இருந்த இருபது ரூபாய் முனுசாமியின் வயிற்றுக்குள் சாராயக் கஞ்சியாகப் போனது அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஆனாலும், அதே ஆட்டோவில் வீட்டுக்குப் போய் பணம் கொடுத்துவிடலாம்.
அந்தப் போலீஸ்காரரும், இளங்கோவும் அக்கம்பக்கம் பார்த்தபோது, சரோசா அந்த ஆட்டோவில் ஏறி ஜம்முன்னு குந்தினாள். இதற்குள் போலீஸ்காரரும் ஆட்டோவுக்குப் பின்புறமாய் நடந்து ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு சரோசாவை ரைட் சைடில் நகரும்படி சைகை செய்துவிட்டு, இளங்கோவைப் பார்த்தார். அவன் சற்று தயங்கிவிட்டு அவர்கள் இருவருக்கும் மத்தியில் வந்து உட்காருவதற்கு யோசிப்பவன்போல் நின்றான். சரோசா அதட்டினாள்:
"யோவ் உன் பேரு இன்னாயா?"
"இளங்கோ."
"பேருல மட்டும் கொறச்சல் இல்ல. சீக்கிரமா வந்து குந்தேன்யா. உன்ன மாதிரி நான் என்ன வேலை வெட்டி இல்லாதவளா? நானு ரொம்ப பிஸி.”
இளங்கோ, அவர்கள் இருவருக்கும் மத்தியில் உட்கார்ந்து கொண்டான். பிறகுதான், அவள் கேட்டதற்கு தன் பெயரைச் சொல்லி ஒரு உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவன் மாதிரி நடந்து கொண்டதற்கு அவமானப்பட்டவன் போல் முகத்தை உம்மணா மூஞ்சியாக்கினான். பெற்றெடுத்த அம்மா மீது பயங்கரமான கோபம். ‘அதட்டி அதட்டியே என்ன ஆம்பளையா இல்லாம செஞ்சுட்டாங்க.
ஆட்டோ, பாய்ந்து பறந்தது. இடையிலே ஒரு சைக்கிள். ஆட்டோ டிரைவர் போலீஸ் தைரியத்தில் கத்தினார்:
"ஏண்டா சோமாறி! பொறுக்கி! பொறம்போக்கு! இது என்ன உங்கப்பன் வீட்டு ரோடா? போலீஸ் சார் இருக்காரேன்னு பார்க்கிகேன்.''
கிடாமீசை சைக்கிள்காரர், சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு விட்டு, ஆட்டோ டிரைவரை அடிப்பதற்காக லுங்கியை இறுக்கிக் கட்டப் போனார். பிறகு போலீஸ்காரர் அங்கு இருப்பதைப் பார்த்துவிட்டு, இறுக்கிய லுங்கியை அவிழ்த்துப் போட்டு விட்டு, ஏதோ அது தற்செயலாக அவிழ்ந்தது போலவும், அதை அவர் கட்டுவதற்காகத்தான் சைக்கிளை நிறுத்தியது போலவும், பாவலா செய்தார். உடனே ஆட்டோ டிரைவர் “இந்த ஆட்டோவுக்கு முதல் எதிரியே சைக்கிள்தான்” என்றார். சரோசா கத்தினாள்:
"யோவ் இளங்கோ, ஏன்யா என்மேல இப்படி ஒட்டிக்கிறே? நீ எப்பவுமே பொம்மனாட்டி பக்கத்துல குந்துனது இல்லியா? சார், 'இதை' ஒத்தியிருக்கச் சொல்லுங்கோ. கைய எங்கெல்லாமோ கொண்டு வருது."
இளங்கோ, இரண்டு தோள்களும் கிட்டத்தட்ட ஒன்றோடு ஒன்று வட்டம் போல் வளைந்து ஒன்றையொன்று பற்றிக் கொள்ளும்படி மார்பை குறுக்கி, கைகளை குறுக்காக மடித்து, கால்கள் இரண்டையும் பின்னி, கூனிக்குறுகிக் கிடந்தான்.
சரோசா, கன்னங்களை உப்ப வைத்துக் கொண்டாள். அவனைப் பார்த்துக் கண்களை உருட்டினாள். இளங்கோவிற்கு ஓடுகிற ஆட்டோவிலிருந்து கீழே குதித்து ஓடிவிடத் தோன்றியது. ஆனாலும் அந்தப் போலீஸ்காரர் அவளை அதட்டலாகப் பார்ப்பதுபோல் இருந்ததால், சிறிது, பயம் தெளிந்தது. என்றாலும் அவளோ அல்லது அந்தப் போலீஸ்காரரோ தனது குற்றச்சாட்டை பெரிதாக எடுத்துக் கொள்ளாததுபோல் தெரிந்ததால், அவனுக்கு மனம் வலித்தது. இது போதாது என்று அந்த ஆட்டோ டிரைவர் போலீஸ்காரர் இருக்கிற தைரியத்தில் எதிரே 'நான்வாரேன்' என்பது மாதிரி லைட்டுப்போட்டுக் காட்டிய ஒரு காரை மோதப்போவது போல் ஓட்டி, ஒரு டிரக் வண்டியை உரசி, ஒரு சைக்கிளை வழி மறித்து தக்காரும் மிக்காரும் இல்லாமல் காவல் நிலையத்திற்குள் ஓடிப்போனது.
அந்தப் போலீஸ்காரர், இளங்கோவையும், சரோசாவையும் கைக்கு ஒரு பக்கமாய் வைத்துக் கொண்டு, நான்கு படிகள் ஏறி, இரும்புக்கிராதி கதவை அங்குமிமாய் தள்ளிவிட்டு, இடது பக்கமாய் போனார். அதன் முதல் அறையில் நுழைந்து ஒரு சல்யூட் அடித்தார். எதிர் நாற்காலியில் உடம்பே பற்றி எரிவது போல் புகை பிடித்துக் கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர், அந்த சல்யூட்டை சிகரெட்டை ஆட்டி அங்கீகரித்து விட்டு அவளைப் பார்த்தார்.
"அட சரோசாவா! எப்படி இருக்கே? உன்னோட லேட்டஸ்ட் வம்பு என்ன? - அப்புறம் உங்க ஏரியாவில நெட்டி கோஷ்டியும், பறட்டை கோஷ்டியும் எதுக்காக அப்படி அடிச்சுக்கிறாங்க? விவகாரம் கமிஷனர் வரைக்கும் போயிட்டுது. நீ...அவங்களுக்குக் கொஞ்சம் சொல்லப் படாதா?"
சரோசா, இளங்கோவை ஓரக்கண்ணால் பார்த்தாள். கூட வந்த போலீஸ்காரரையும் ஒரங்கட்டிப் பார்த்தாள். பிறகு, பேசியவரின் முன்னால் இருந்த மேசை மேல் இரண்டு கைகளையும் அட்டகாசமாகப் போட்டபடியே பதில் அளித்தாள்:
“அத ஏன் கேக்கிற சாரே... நாறிப் போச்சு நாறி. அதுவும் அந்த பறட்டை தலையன் வந்தாப்பல."
"விபரமாத்தான் சொல்வேன்."
சரோசா கதை கதையாய் சொல்லிக் கொண்டிருந்தாள். இளங்கோவிற்கு கால்கள் வேர்த்தன. கைகள் நடுங்கின. இதற்குள் அவர்களைக் கூட்டி வந்த போலீஸ்காரர் அவசர அவசரமாய் இடை மறித்துப் பேசினார் :
"சார், இந்தப் பொண்ணு, இவரோட அம்மாவ அடிச்சப் போட்டுட்டு வந்திருக்கா. என்னல்லாமோ திருடியிருக்கிறாள். இவரோட ஏரியாவில், ஒரு குழந்தையக்கூடக் காணுமாம். நிறைய காஸ்ட்லி அயிட்டம், திருட்டுப் போயிருக்காம். இந்தப் பொண்ணு இன்னிக்கி அந்த ஏரியாவில அடாவடியா நடந்ததால், இதை சஸ்பெக்ட்டா கூட்டி வந்திருக்கேன்."
"நீ லா அண்ட் ஆர்டர்செக்ஷன்... இது கிரைம், எல் அண்ட் ஓ-விற்கும், இதுக்கும் என்னய்யா சம்பந்தம்?"
"இருக்கு சார், சம்பந்தம் இருக்கு சார். இவரோட ஏரியாவில போகிற திருட்டுக்களை நாம் சீரியஸ்ஸா எடுக்கலைன்னு, இவங்க ஏரியாக்காரங்க, நம்ம போலீஸ் ஸ்டேஷன் முன்னால மறியல் செய்தால் அது லா அண்ட் ஆர்டர்தானே. அப்படியாகாமல் தடுக்கத்தான், இப்பவே ஆக்ஷன் எடுத்தேன்."
"ஓஹோ... மூக்கை பிடறி வழியாத் தொடுறியா? இந்தாப்பா ராமசாமி, எல் அண்ட் ஓ சப்-இன்ஸ்பெக்டர நான் கேட்டுக்கிட்டதாச் சொல்லி கொஞ்சம் கூட்டிக்கிட்டு வா! ஏன் சரோசா, உன்னால கலாட்டா பண்ணாம இருக்க முடியாதா? என்ன இதெல்லாம்?"
"பெரிசா ஒண்ணுமில்ல சாரே, இந்தப் பிள்ளாண்டான், நாலு நாளா ஏன் பின்னாடியே சுத்திக்கினு கீறான். நானும் கண்டுக்கல. இவன் ஏரியா பக்கம் கிருஷ்ணாயில் வாங்கப் போனேன். இவன் இன்னாடான்னாஸைட் அடிக்கிறான். நான் கண்டபடி திட்டுனேன். போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கப்போறதா கத்துனேன். அதுக்காங்காட்டியும் இவன் முந்திக்கிறான். அய்ய... இந்த ஆட்டோவில் இவன் என்ன படுத்தின ரோதன இருக்கே, அத சொல்றதுக்கே வெக்காமாகீது சாரே."
''சார் சார்! இது அக்கிரமம் சார். எனக்கு இந்த மாதிரியெல்லாம் பழக்கமில்லை சார்."
“வெயிட் மிஸ்டர் வெயிட்... ஒரு பொண்ணு மானத்துக்கு ஏற்படுகிற களங்கத்த பொதுவா சொல்ல மாட்டாள். அதையும் மீறி அவ சொல்றான்னா, அதுல ஏதாவது இருக்கணும். ஒரு சீரியஸ் சமாச்சாரத்த நான் கேக்காமல் இருக்க முடியுமா? சரோசா அப்புறம் மேற்கொண்டு சொல்லு."
இந்த இடைவெளியில் மேற்கொண்டு என்ன பேசுவது என்று யோசித்து வைத்திருந்த சரோசா, கதையை தொடரப்போன போது, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு சப்-இன்ஸ்பெக்டர், அங்கே வந்தார். நேரடி நியமனக்காரர். எல்லா கான்ஸ்டபிள்களும் அயோக்கியர்கள் என்று நினைப்பவர். அவரிடம் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் சொல்வதற்கு முன்பே அவரைக் கூட்டிவரப் போனவர் சொல்லிவிட்டதால், தன்னை விட பத்து வயது பெரிய அந்தப் போலீஸ்காரரைப் பார்த்துக் கத்தினார்:
"யோவ் திருமலையப்பா! பீச்சுக்கு டூட்டிபோட்டா இங்க எதுக்குய்யா வந்தே?”
“இந்த சஸ்பெக்ட கூட்டிக்கிட்டு வந்தேன் சார்."
"உன்னை பீச்சுலதான் டூட்டி போட்டேன். நீ ஏன் ஏரியாவிட்டுப் போறே? உனக்கு எதுக்குய்யா வம்பு? இந்நேரம் பீச்சுல ஒரு லா அண்ட் ஆர்டர் பிராப்ளம் ஏற்பட்டிருந்தா யாருய்யா பொறுப்பு? ஏய்யா திமுறா பாக்கே? ஏ.சி. வரட்டும். உன்னமாதிரி ஆளுங்களை கொடுத்துட்டு சட்டம் அமைதி நல்லாயிலலன்னு சட்டம் பேசுறாரு சட்டம்."
திருமலையப்பன், அந்த சப்-இன்ஸ்பெக்டரை அடிக்கப் போவது போல் முறைத்தார். பிறகு அழப்போவது போல் பார்த்தார். கடந்த கால அனுபவங்களையும், குடும்ப நிலையையும் மனதிற்குள் வலுக்கட்டாயமாக நினைத்துக் கொண்டார். கோபம் வந்தால் பத்துவரை எண்ண வேண்டும் என்று ஒருவர் சொல்லிக்கொடுத்தபடி மனதிற்குள் எண்ணினார். எண்ணியதை இடையில் விட்டார். பிறகு அவர்களுக்கு விறைப்பாக ஒரு சல்யூட் அடிக்கும் சாக்கில், வலது புறங்கையால் கண்களைக் துடைத்துவிட்டு, வேகப்பட்டவர் போலவும், பாவப்பட்டவர் போலவும் வெளியேறினார்.
கிரைமும், லாவும் மணிக்கணக்கில் பேசப்போவது போல் சாவகாசமாகப் பேசிக் கொண்டிருந்த போது, சரோசா ஒரு பாட்டை முணுமுணுத்தபடி, அந்த அறைச்சுவரில் அப்பிக்கிடந்த துப்பாக்கிகளைப் பார்த்தாள். இளங்கோ, கடிகாரத்தையே மாறிமாறிப் பார்த்தான். இதை தற்செயலாகப் பார்த்த கிரைம் சப்-இன்ஸ்பெக்டர், “நீங்க ரெண்டு பேரும், வெளியில நில்லுங்க, கூப்பிட்டு அனுப்புறேன்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.
வெளியே வந்த இளங்கோவை, சரோசா கண்ணடித்துச் சிரித்தாள். அவன் ஒதுங்கிப் போய் ஒரு மரத்தோடு மரமாக நின்றான்.
அவளோ கீழே கிடந்த ஒரு பொடிக்கல்லை காலால் தட்டித்தட்டி, அது உருண்டு விழும் இடங்களைப் பார்த்து நிதானமாக நடந்தாள். ஒரு சமயம், அதே கல்லை காலால் இடறி அவன் கணுக்காலில் விழச் செய்தாள். இளங்கோ அப்படியும் அசையாது இருப்பதைப் பார்த்துவிட்டு, நாக்கைத் துருத்தி 'கொன்னுடுவேன்' என்பது மாதிரி கையை ஓங்கி அழகு காட்டினாள். அவன் பதிலழகுகாட்டாமல் சும்மா இருந்ததால் சலித்துப் போய் அவனைப் பார்த்து சிறிது நெருங்கி நேருக்கு நேராய் கேட்டாள்: "இந்தாப்பா, நானு இதோ அந்த கீரைக்காரம்மாவண்ட பேசிட்டு வாரேன். அதுக்குள்ள போலீஸ் கூப்டா ஒரு நட வந்து சொல்லு. பேஜாருபிடிச்ச பிள்ளாண்டாம்பா... இந்நேரம் ஒரு கிலோ இரும்பு கிடைச்சிருக்கும்."
இளங்கோ, முகத்தைத் திருப்பிக் கொண்டான். கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்த போது, அது நனைந்துவிட்டது. சரோசாவோ, அலுங்காமல் குலுங்காமல் போய்க்கொண்டிருந்தாள்.
இளங்கோ, அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே நின்றான். அரை மணி நேரம் கழித்து சரோசாவும் ஆற அமர வந்தாள். ஆடாமலே அடங்கிப்போன அவனைப் பார்த்து 'ரப்பாகச் சிரித்தாள். "இன்னுமா கூப்பிடல” என்று அவனிடமே சர்வ சாதாரணமாகக் கேட்டாள். அவனோ, அவளைப் பார்க்காமல் அடிக்கடி கீழே தொங்கிய கையைத் தூக்காமலே கடிகாரத்தை குனிந்து பார்த்தான். இப்படிப் பல 'தலைக் குனிவுகள்!"
இளங்கோ பத்துத் தடவைக்கு மேல் கடிகாரத்தைப் பார்த்துவிட்டான். ஒரு தடவைக்கு பத்து நிமிடம் என்பது போல் நூறு நிமிடம் ஆகிவிட்டது. அவன் பொறுமை இழந்து உள்ளே போகப்போனபோது, இரண்டு சப்-இஸ்ன்பெக்டர்களும் வெளியே வந்தார்கள். இளங்கோ குறுக்கே போய் நின்றான். ஒருவர் அதட்டினார். இன்னொருவர் அந்த அதட்டலுக்கு அபிநயம் பிடிப்பவர் போல் தலையை மேலும்கீழும் ஆட்டினார்.
"என்ன மிஸ்டர் உன்னோட பெரிய தொல்ல? அந்தப் பொண்ணு எப்படிப் பொறுமையா நிக்கறா பாரு. உனக்கு என்ன கேடு? அவசரமாக வெளியில போறோம். வெயிட்... வந்து கவனிக்கிறேன்.'
ஜீப்பில் சகாவுடன் ஏறிக்கொண்ட கிரைம் சப்-இன்ஸ்பெக்டர், துப்பாக்கியை கண்டும் போது எப்படி விரலை இழுத்து விடுவாரோ, அப்படி அவனைப் பார்த்து விரலைச் கண்டினார். இளங்கோ ஓடோடிப் போய் நின்றபோது-
“ஆல் ரைட்... நாளைக்குக் காலையில ஒன்பது மணிக்கு வந்திரு. வராமல் மட்டும் இருந்துடாதே. அந்தப் பொண்ணு சொல்றது சீரியஸ் குற்றச்சாட்டு. இந்தாப்பா இவரோட அட்ரஸ்ஸ வாங்கிக்கோ, சரோசா உனக்குந்தான், கரைக்டா வந்துடணும்."
"சரி சாரே, அதுவரைக்கும் இந்தப் பிள்ளாண்டான் என்னை..."
ஜீப்காரர்கள், பதில் சொல்லாமலே பறந்துவிட்டார்கள். இளங்கோவிற்கு அந்தக் குளிரிலும் வேர்த்தது.இப்போது விவகாரத்திலிருந்து கழட்டிக்கொண்டால் போதும் என்பது மாதிரியாகிவிட்டது. வீட்டுக்கு ஓடிப்போய் சரணடைய வேண்டும் என்று தோன்றிது. சரோசாவை பார்க்காதது போல நடந்தான். ஆனால் அவளோ, அவனை வழிமறித்துக் கொண்டே வாதித்தாள்:
"யோவ், ஆட்டோவில கொண்டுவந்து விட்டுட்டு, அப்புறமா என்ன நடக்கவைச்சா எப்படி? அதான் நம்மகிட்ட நடக்காதுன்னேன்... என்னை எந்த இடத்துல ஏத்தினியோ அந்த இடத்தில இறக்கிடு டாக்ஸி வேணாம், ஆட்டோ போதும்."

