Chapter 9
மிஸ்டர் ரமணன் வீட்டு மொட்டை மாடி பொங்கி வழிந்தது. வீட்டிற்குக் கீழே, புல்வெளி இல்லாத தரைவெளியில் மாருதிகளும், அம்பாஸிடர்களும், இடைஇடையே ஸ்கூட்டர்களும் அங்கே தரையே இல்லாதது போல் வியாபித்து நின்றன. இடம் போதாமல் சாலையில் கூட ஒரே வாகனக் குவியல், பாமா, சமையல் அறையில் கேசரி கிண்டிக் கொண்டிருக்கும் சமையல்காரர்களை கண்களால் கிளறிவிட்டுக் கொண்டே, மாடிக்கும், மனைக்குமாக உருண்டோடிக் கொண்டிருந்தாள். எல்லோரும் அவள் அப்படிச் செயல்படுவதைப் பார்த்துவிட்டு மனதுக்குள்ளும், வெளிப்படையாகவும் பாராட்டினார்கள ஆனால், அவளோ சமையல் அறைக்குள் வரும் சாக்கில் அங்கிருந்த ஜன்னல் வழியாக இளங்கோ அகப்படுகிறானா என்று பார்த்தாள். மொட்டை மாடிக்குப் போய் அங்கு திரண்டு இருந்தவர்களைப் பார்த்து, வாய் குசலம் விசாரித்தாலும், கண்கள் இளங்கோவைத் தேடின. காதல் கண்மூடித்தனமானது என்பதைக் காட்டுவது போல், அவன் மேலே இருப்பான் என்பது போல் ஆகாயத்தைக்கூடப் பார்த்தாள்.
ரமணன் வீட்டு மொட்டை மாடி அலங்காரம் செய்யப் பட்டது போல் தோன்றியது. சபாரி போட்டவர்கள், தலைக்கு டை அடித்து, காதோரம் நரைமுடி காட்டி, 'சுயமுடி' வெளிப்பட நின்றவர்கள், அறுபது வயது ‘டீசட்'டைகள், பட்டுப் புடவைகள், சல்வார் கம்சுகள், பாவாடைத் தாவணிகள்...
த.வ.ந.ச. வின் கூட்டம் - அதாவது தமிழ்த்தாய் நகர் வசிப்போர் நல்வாழ்வு சங்கத்தின் அவசரக் கூட்டம் அங்கே நடக்கப் போகிறது.
இப்போது இந்த தமிழ்த்தாய் நகர், சென்னை பெருநகர் சீமாட்டிக்கு மையிட்ட கண்ணாய் விளங்குகிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாலும், கெஜடட் ஆபீஸர்களாலும், பாரின் ரிட்டன்களாலும் பளபளக்கிறது. ஆனால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பகுதி, நகைநட்டுப் போடாத ஒரு நாட்டுப்புறப் பெண்ணாகவே இருந்தது. அப்போது பிழைக்கத் தெரிந்த ஒரு பெட்டிக் கடை மலையாளி, ரெவின்யூ இன்ஸ்பெக்டரை மாமூலாக்கி, இருபது கிரௌண்ட் புறம்போக்கு இடத்தை பிளாட் போட்டார். மற்றவர்களையும் அப்படிப் போட வைத்தார்.பிளாட் போட இடம் கிடைக்காத ஒரு ஆசாமி கொடுத்த மனுவின் அடிப்படையில், அரசாங்கம், இந்த பிளாட்டுகளை முடக்கப் போனது. ஆனால், பிளாட்காரர்களோ, அந்த பிளாட்டுகளை, எந்த அதிகாரிகளை மடக்கிப் போட வேண்டுமோ, அவர்களுக்கே பாதியை, மலிவு விலை மது விலையில் கொடுத்துவிட்டார்கள். இதனால், பொது மக்களைத் தவிர எல்லோருக்கும் லாபம். மடக்கிப் போட்டவர்களுக்கு கிரௌண்டுக்கு மூன்று லட்சம் என்றால், முடக்கப் போனவர்களுக்கும் மூன்று லட்சம். ஆகையால் இந்தப் பகுதியை 'வேலியே பயிரை மேய்ந்த நகர்' என்று சொல்லலாம். இங்கே துவக்கத்தில் குடியிருக்க வந்தவர்கள், அடிப்படை வசதிகளை அரசிடம் கேட்பதற்காக, ஒரு சங்கத்தை வைத்தார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்ததால், வேலை வெட்டி இல்லாத மிஸ்டர் ரமணன், தன்னைத் தானே தலைவராகப் பிரகடனப் படுத்த முடிந்ததது. அடிப்படை வசதிகள் கிடைத்ததும், ரமணனும், அந்தச் சங்கத்தின் லெட்டர் பேடுமே மிஞ்சின. ரமணன் மட்டுமே சந்தா கட்டுகிறார்.
ஆனால், இன்றைக்குப் பார்த்து ரமணனுக்கு மௌக வந்துவிட்டது. 'திடீர் நகர்' மாதிரி, அவரும் திடீர் பிரமுகர் ஆகிவிட்டார். காவல் நிலையத்தில் சரோசாவுக்கு அடிவாங்கிக் கொடுத்து விட்டு, அலுவலகம் போனதும், தமிழ்த்தாய் நகர் மாமிகள் ஒவ்வொருவருக்கும் டெலிபோன் செய்தார். கொலைகாரியான சரோசாவை, போலீசார், விரைவில் விடுதலை செய்துவிடுவார்கள் என்றும், அப்படி அவள் வெளியே வந்தால், ஒவ்வொருத்தியின் குழந்தையும் கடத்தப்படும் என்றும் எச்சரித்தார். "ஒங்க பையன் ரகு, நாளைக்கு உயிரோடு இருப்பான் என்கிறது நிச்சயமில்லை” என்று ஒவ்வொரு வீட்டிலும், அந்த வீட்டுக் குழந்தையின் பெயரைச் சொல்லி அபாயம் சொன்னார். இந்த நிலைமையைத் தடுக்க வேண்டும் என்றால், த.வ.ந.ச. வின் அவசரக் கூட்டம் உடனடியாகக் கூட்டப்பட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் கையெழுத்தோடு ஒரு மனு போலீஸ் கமிஷனருக்குப் போகவேண்டும் என்றார். உடனே, தாய்மார்களும், அலுவலகங்களில் இருந்த தத்தம் கணவர்களைப் பயப்படுத்தியும், பயமுறுத்தியும், அவசரக் கூட்டத்திற்கு இணங்க வைத்தார்கள்.
கூட்டம் ஆரம்பமாகப் போனது. அப்போது ஒருத்தர், ஒரு கேள்வியைக் கேட்டார்:
"என் வீட்டுலேயும், இன்னொருத்தர் வீட்டுலேயும் ஜன்னலுக்கு மேலே கொக்கி வச்ச கம்புங்க சாத்தப்பட்டு இருக்கு... காரணம் தெரியுமா?"
“ஆபீஸ்லே தான் குழப்படி செய்யுறீங்க; இங்கேயுமா? சஸ்பென்ஸ் எதுக்கு?"
"சொல்றேன் சார். முன்னால திருட்டுப் பசங்க வந்து ஏதாவது ஒரு கம்ப எடுத்து ஜன்னலுக்குள்ளே விட்டு, துணிமணிகளை எடுத்துட்டுப் போவாங்க. இதைப் பக்கத்து வீட்டுக்காரங்க கண்டுக்கலை... இதனாலே, இப்ப திருடங்க எந்தச் சமயத்திலே வேணுமுன்னாலும், திருடறதுக்கு வசதியாய், ஜன்னலுக்கு மேலே கம்பயே சாத்திட்டுப் போறாங்க. என்னய்யா நகர்... அதுவும் தமிழ்த்தாய் நகரு?'
கம்புக்காரர், கூட்டத்திடம் பதிலை எதிர்பார்த்தபோது, ஒரு ஆடிட்டர் - வம்புக்காரர் - ஒரு பிரச்சினையைக் கிளப்பினார்.
"சங்கம் ஆரம்பிச்சு, பதினைந்து வருஷமாச்சு; ஆனால் தலைவர் ரமணன் கணக்குக் காட்டல."
ரமணன் பொங்கி எழுந்தார்: "நான் ராஜினாமா செய்யப் போறேன்; என்னோட தியாகம் வீணாயிட்டு."
"கூடாது. ஒங்களையும், த.வ.ந.சவையும் யாராலும் பிரிக்க முடியாது. ராஜினாமா செய்யப்படாது. நம்முடைய அரசியல் பாரம்பரியம் மாதிரி, சாகிற வரைக்கும் நீங்கதான் தலைவர்.”
"அப்போ, சங்கம்தான் முதலில் சாகும்."
"நீங்க படிச்சவங்ளா... ஆபீஸருங்களா? உங்களுக்கும், சினிமா தியேட்டர்லே விசில் அடிக்கிறவங்களுக்கும் என்னய்யா வித்தியாசம்?"
கடையில் சொன்னவர், வேறு உறுப்பினராக இருந்திருந்தால், அவரை உப்பு வைத்து ஊறவைத்திருப்பார்கள். ஆனால், சொன்னவர், போலீஸ் விஜிலென்ஸ் ஆபீஸர்; அதிகாரிகளின் ஊழல்களைக் கண்டுபிடிக்கும் பூதக் கண்ணாடி. அவரைப் பூதமாக நினைத்து எல்லோரும் வாயை மூடிக்கொண்ட போதும், அவர் அதட்டினார்:
"மிஸ்டர் ரமணன்! தீர்மானத்தைப் படியுங்க.”
உயிரோடு சமாதி கட்டப்பட்டது போல், தலைவர் நாற்காலியில் உட்கார வைத்துக் கொண்டே, தனது பதவியைப் பறித்த அந்த விஜிலென்ஸ் அதிகாரியை வேண்டா வெறுப்பாய் பார்த்துக் கொண்டே, ரமணன் தீர்மான நகலைப் படித்தார். தமிழ்த்தாய் நகரில், கொலைக் குற்றம் உட்பட பல குற்றங்கள் நடப்பதாகவும், அதற்கு அந்த ஏரியா போலீஸ் உடன்போகிறது என்றும், ஆகையால், சரோசா நடத்திய கொலையை போலீஸ் கமிஷனரின் கிரைம் பிராஞ்ச் விசாரிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் வற்புறுத்தியது. அதுவரைக்கும் சரோசாவை ஜாமீனில் வெளிவர முடியாத குண்டர்கள் தடுப்புச் சட்டத்தில் சிறையில் போட வேண்டும் என்றும் தீர்மானம் வற்புறுத்தியது. எல்லோரும் கைதட்டினார்கள்.
அந்தச் சமயத்தில், இளங்கோவையும், சுப்பையாவையும் 'தள்ளிக் கொண்டு' பாக்கியம் வந்தாள்.
சுப்பையாவை கூட்டிக்கொண்டு வந்தது பாக்கியத்துக்கு ரோதனையாய் போயிற்று. சுப்பையா கர்ஜித்தார்:
"பெரிசாய் தீர்மானம் போட்டுட்டிங்க. அந்த ரவுடிப் பொண்ணு உள்ளே போயிட்டா, என் பையன் வெளியிலே இருக்க முடியுமா? அப்புறம், நான் பிள்ளைக்கு எங்கேய்யா போவேன்? இவனுக்கு பூனைப்படை பாதுகாப்புக் கொடுத்தாலும், சேரி ரவுடிங்க இவனை விட்டு வைப்பாங்களா? வேணுமுன்னா பாருங்க... இங்கே வந்த சோடா பாட்டில் அடிக்கப் போறாங்க. உங்க கண்ணுலே அது விழுந்து ஆஸ்பத்திரியிலே இருக்கப் போறீங்க. என் வாக்குத் தப்பாது."
பாக்கியம்கூட பயந்து போய், கணவனைப் பயமுறுத்துவதை விட்டு விட்டாள். எல்லோரும் அப்போதே கண்ணுக்குள் சோடா பாட்டில் விழுந்த மாதிரி கண்களை மூடிக்கொண்டார்கள். சில பெண்கள் தத்தம் கணவன்மார்களை வீட்டிற்குக் கூப்பிட்டார்கள். இந்த நடுத்தர வர்க்கம் இப்படி அல்லாடிக் கொண்டிருந்தபோது...
பூக்காரி ருக்குமணி மேலே வந்தாள். கையிலே ஒரு வட்டக்கூடை. அதற்குள் பல்வேறு வகைப் பூக்கள், பாம்புகள் மாதிரி சுருண்டு கிடந்தன. கையில் கனகாம்பரப் பூச்சரங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. ஒவ்வொருத்திக்கும் பூ அளந்தபடியே வாய் அளந்தாள். முப்பது வயதுக்காரி. முழுசான அழகு.
"போங்கம்மா... ஆட்டோக்காரனுக்குப் பயந்து அஞ்சு ரூபாய் அதிகமா கொடுப்பீங்க; ஆனால் பூக்காரிக்கிட்ட போய், அஞ்சு பைசாவுக்கு பேரம் பேசுவீங்க.”
ருக்குமணி, அந்தக் கூட்டத்தைப் பார்த்துவிட்டு, ஒரு பாவாடை, தாவணியிடம் விளக்கம் கேட்டாள். அவள் சொன்னதை உள் வாங்கிக் கொண்டு, அந்தக் கூட்டத்தை வாக்காளர்களாக நினைத்து, வாதிட்டாள்:
"ஏன் சாரே... தெரியாமத்தான் கேக்கேன்... என் கொழந்த, நான் பெத்த ஒரே கஸ்மாலம் காணாமப் பூட்டான்னு சொன்னேன். காது கொடுத்துக் கேட்டீங்களா? நானும் இந்த ஏரியாக்காரிதானே? என் பிள்ளாண்டானுக்கு இப்படி ஒரு கூட்டம் போட்டீங்களா? ஏதோ பிசாத்து இரும்பும், பன்னாட கம்பியும், என் கொயந்தைய விட உங்களுக்குப் பெரிசாப் போச்சா? அதோ, பெரிசா பேசுறாங்களே பாக்கியம் அம்மா, அவங்ககிட்டே கொயந்தய காணலேன்னு அழுதேன்.என் வீட்டில ஒப்பாரி வைக்காதேன்னாங்க. அதோ தலவரு, ரமணன் சாரு, அவர்கிட்டே பஸ் ஸ்டாண்டுலே வச்சு சொன்னேன். அவர் என்னடான்னா... 'பஸ் வருது, அப்புறம் பேசிக்கலாமுன்னார். இப்படி நாறிப்போன உங்க ஏரியாவை இன்னும் பூவாலேயே மணக்க வைக்கேன்."
விஜிலென்ஸ் ஆபீசர், ரமணனின் காதைக் கடித்தார். அவளை வைத்து, போலீஸ் கமிஷனருக்கு ஒரு கடிதம் எழுதச் செய்ய வேண்டும் என்றார். சரோசா தன் வீட்டிற்கு அடிக்கடி வருபவள் என்றும், அவள்தான், குழந்தையை கடத்தியிருக்க வேண்டும் என்றும் எழுதி, கையெழுத்துப் போடச்சொல்ல வேண்டும் என்றார். இந்த விஜிலென்ஸ் ஆபீஸர், சங்கத்தின் தலைமைப் பதவி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்பதற்காக, ரமணன் எழுந்தார். ருக்குமணியை நெருங்கினார். அவள் கோபத்தோடு நின்றபோது, அவள் கையை பட்டும் படாமலும் பிடித்துக் கொண்டே ஏதோ காதுக்குள் கிசுகிசுத்தார். அவள், அங்குமிங்குமாய் தலையை ஆட்டி, கத்தப்போன போது, ரமணன் அவள் கையைப் பிடித்துக் கொண்டு, படி இறங்கினார்.
இளங்கோவிற்கு ஏதோ ஒன்று பட்டது. தற்செயலாய் எழுவது போல் எழுந்து சுவர் பக்கம் போய், கீழே எட்டிப் பார்த்தான். அங்கே, மிஸ்டர் ரமணன், அவளுக்கு ஒரு தட்டில் கேசரியை நீட்டிக் கொண்டே காதுக்குள் கிசுகிசுத்தார். அவளோ அந்தத் தட்டை வாங்கித் தரையில் வைத்து விட்டுக் கத்தப் போனாள். பிறகு, அவரை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே அந்த வீட்டை விட்டு வெளியேறினாள். பூப்போல நடப்பவள் பூகம்பமாய் நடந்து கொண்டிருந்தாள்.

