Chapter 30

எப்படியோ, சரோசா தாக்குப்பிடித்துவிட்டாள். அந்த அலுவலகத்தில் வேறொரு பிரிவிற்கு மாற்றப்பட்டாள். இதற்கு முன்னதாக பத்து நாட்களுக்குள், அவளுக்காக தனியாகப் பில் போடப்பட்டு, பதினைந்து நாட்களுக்குள் அவளுக்கு சம்பளம் கொடுக்கப்படும் என்றும், அதற்கு மாற்றாக, அவள் செக்ஷனை 'பிராண்டி' தொல்லை கொடுக்கக்கூடாது என்றும் உடன் பாடாயிற்று.

அந்த சம்பள நாளும் வந்தது... சரோசா, கற்பனைகளை பாதியாக குறைத்துக்கொண்டுதான் அலுவலகம் போனாள். ஆனால் பழைய செக்ஷன் மோகன் வந்து, அவளிடம் ‘ஸ்வீட்' கேட்டான். கேஷியரிடம் அவள் கூலி சம்பளம் சொளையாய் தயாராய் இருப்பதாகவும், அவள், அங்கே போய் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு, அவனே அவளுக்கு ஒரு லட்டைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டான்..

சரோசா, ஆனந்த பைரவியாகி, 'பணக்கார' மாடிக்கு, புறப்பட தயாரானபோது -

ஒரு போலீஸ்காரர் உள்ளே வந்தார். அரசு அலுவலகங்களுக்கு காவல்துறை கடமையாற்றும் போது எப்படி வர வேண்டுமோ அப்படி வரவில்லை. அதாவது 'மப்டியில்' வரவில்லை. கஞ்சி போட்டு இஸ்திரி போட்ட காக்கி யூனிபாரத்திலேயே உள்ளே வந்தார். லத்திக் கம்பு வேறு அங்குமிங்கும் ஆடியது. ஒரு வருட காலமாக கைகளில் கிடைத்தவற்றை அவர் 'கைமாறாமலேயே' வைத்திருந்தார் என்ற ஆத்திரத்தில் ஏதோ ஒரு தலைவருக்கு மழையால் நனைந்து வெயிலால் உலரும் செக்யூரிட்டி கார்டாக நியமிக்கப்பட்டிருந்தார். எவருடைய கையையோ காலையோ பிடித்து இப்போதுதான் 'ஸ்டேஷனுக்கு' வந்திருக்கிறார். ஆகையால் ஒரு வருட வனவாசத்தை அந்த ஒரே நாளில் ஈடுகட்ட விரும்பினார்.

இங்கே சரோசா என்கிறது யாரு என்று அதட்டலாக கேட்டார்.

சரோசாவை, யாரோ ஒருவர் சைகையால் சுட்டிக்காட்ட போலீஸ்காரர், அவள் முன்னால் போய் நின்று அதட்டினார்.

"நீதானே சரோஜா என்கிற கேடி? உன்ன முன்னிப் பின்ன பார்க்காமல் எப்படிக் கண்டு பிடிச்சுட்டேன்னு நினைக்கிறியா? அதுதான் உன் மூஞ்சியிலயே எழுதி இருக்கே?"

சரோசாவுக்கு சம்பளம் கிடைத்துவிட்டதா என்று அவளிடமே கேட்பதற்காக, உள்ளே வந்த இளங்கோ, வாசலில் சிறிது நின்றுவிட்டு, பின்னர் போலீஸ்காரரை நெருங்கிக் கேட்டான்.

"அப்படி என்ன சார் இந்தப் பொண்ணு தப்புப் பண்ணிட்டு?”

“தப்புக்கும் தவறுக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியுமா? இவள் செய்தது தப்பும் இல்ல, தவறும் இல்ல... ஒரு கொலை; துரை என்கிற கள்ளச்சாராய வியாபாரியைக் கொன்னு, கோணி மூட்டையில் கட்டி மகாபலிபுரம் கடலுல போட்டிருக்காள். ஏய்! நடடி ஸ்டேஷனக்கு. நீ கெட்ட கேட்டுக்கு ஒனக்கு கவர்மெண்டு வேலையா?"

அதுவரை அந்த போலீஸ்காரரை முகம் மாறாமல் பார்த்தபடி நின்ற சரோசா, அப்படியே சரிந்து குத்துக்காலிட்டு உட்கார்ந்தாள். இரண்டு கைகளையும் எடுத்து தன்னை அறியாமலேயே தலையில் வைத்து அசைவற்றிருந்தாள். பிறகு அவள் கண்முன்னால் ஆடிய லத்திக் கம்பின் ஊசலாட்டத்தைக் காணும் சுரணை இன்றி ஒப்பாரியிட்டாள் :

"தொரண்ணே! அய்யய்யோ, தொரண்ணே! கட்சியிலே அந்த தட்டுவாணி தடிச்சியும், அண்ணாத்தேயும் சேர்ந்து உன்னைத் தீர்த்துக் கட்டிட்டாங்களே. நானு பாவிண்ணே. இந்த ஒரு மாசத்துல ஒரு வாட்டியாவது ஒரு நட நடந்து உன்னைப் பார்க்காமப் பூட்டேனே. நீ அருண்டு மருண்டு துடிச்சப்போ ஒனிக்கு ஆறுதல் சொல்லாம இருந்துட்டேனே. ஏய் அண்ணாத்தே, நீ உருப்படுவியா? ஒன்னையும் உன் வப்பாட்டியயும் இதே மாதிரி அடிச்சுக் கொல்ற காலம் வராதா? அய்யோ... அய்யய்யோ...!"

சரோசா, வாயில் அடித்துக் கொண்டாள். எல்லோரும் அவளைக் கொலைகாரியாகப் பார்த்தபோது இளங்கோவின் கண்கள் கலங்கிவிட்டன. சிலர் பிரமிப்போடு எழுந்தார்கள். போலீஸ்காரர் லத்திக் கம்பை தரையில் தட்டியபடியே அதட்டினார்:

"இன்னும் ரெண்டு கொலை செய்வேன்னா சொல்றே? நல்லாத்தான் நடிக்கே? இல்லாட்டி ஒரு ஆம்பளைய பதினாறு இடத்தில் வெட்டி கடலுல போடுவியா? எழுந்திருடி."

போலீஸ்காரர், அவள் முடியைப் பிடித்துத் தூக்கப் போனபோது, இளங்கோ அந்தக் கையை லேசாகப் பிடித்தான். இதற்குள் அவர் கை அவள் முடியைப் பற்றியபடி மேலே வந்தது. ஏதோ பேசப் போன இளங்கோவை பேச முடியாதபடி சில அலுவலக வாசிகள் உலுக்கினார்கள்:

“என்ன மிஸ்டர் இளங்கோ! இந்த மாதிரி ஒரு கிரிமினல் கேர்ள எங்க தலையில கட்டிட்ட பாரு. உன்னை நல்லவன்னு நெனத்தா. என்னப்பா... இதெல்லாம்... ஊமை ஊரை கெடுக்கும். பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும் என்பது சரியா இருக்கே..."

போலீஸ்காரரும் இளங்கோவைச் சந்தேகமாகப் பார்த்தார். வார்த்தைகளில் மரியாதை போட்டு அதே சமயம் அவமரியாதைக் குரலில் கேட்டார்:

"உங்களுக்கும் இந்தப் பொண்ணுக்கும் என்ன சார் சம்பந்தம்? நீங்களும் அநேகமா ஸ்டேஷனுக்கு வரவேண்டியது இருக்கும்."

இதற்குள் நடப்பதை கேள்விப்பட்டு, பழைய செக்ஷன் ஆட்களும் கூடிவிட்டார்கள்.

அஸிஸ்டெண்ட் டைரக்டர் அருணாசலம், இளங்கோவைப் பார்த்துக் கொலை பழிக்கு சாட்சியாய் போகவேண்டியது வருமோ... என்கிற பயத்தில் உண்மையை கொட்டுவதாக நினைத்து உளறிக் கொட்டினார்.

"என்னப்பா இளங்கோ! உன்னோட உல்லாச சல்லாபத்தை யெல்லாம் வெளில வச்சுக்காம எங்களையே புரோக்கர் மாதிரி ஆக்கிட்டியே. கவர்மெண்ட் சர்வண்ட் காண்டக்ட் ரூல்படி உன்மேல ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போறோம். நல்லவேளை, போலீஸ்காரர் சரியான சமயத்துக்கு வந்துட்டார். இல்லாட்டி, இவள் எங்களையும் ஒரு வழி பண்ணியிருப்பாள். ஆப்டர் ஆல் ஒரே ஒரு மாதச் சம்பளம் கிடைக்கலேன்னு எப்படிக் குதிச்சா?"

"இளங்கோ! உன்னை விடப்போறதில்ல மேன்...”

பித்துப் பிடித்து நின்ற இளங்கோவின் தோளில், மோகன் கை போட்டாள். "டோண்ட் ஒர்ரி இளங்கோ. என்கொயரி இல்லாம உங்களை எதுவும் செய்ய முடியாது. அதுல நான் உங்களுக்கு டிபன்ஸ் அஸிஸ் டெண்டா இருந்து, இவங்களை நார் நாராகக் கிழிக்கப் போறேன் பாருங்க."

சரோசா அங்குமிங்குமாய்ப் பார்த்தாள். இளங்கோவை உற்றுப் பார்த்தாள். 'துரைண்ணே' என்று மீண்டும் கத்தப் போனாள். பிறகு எதுவோ நெஞ்சில் கத்த, அதன் உந்தலில் அவள் வாயாடியது.

"அடப்பாவிங்களா! ஒண்ணுமே அறியாத இந்த கொழந்தப் பையன் மேல பழி போடறீங்களே; இந்த அல்பத்துக்காக படாத பாடுபட்டவரு அவரு. போலீஸ் அண்ணாத்தே, வாரியா போகலாம். அடேய் அல்பங்களா, இளங்கோ சாரை விட்டுடுங்கடா."

இளங்கோ,இன்னும் பிரமை கலையாமல் நின்றபோது, சரோசா சித்தப்பிரமை பிடித்தவள் போல் வாசலுக்கு வெளியே வந்தாள்.போலீஸ்காரர்பின்தொடர்ந்தார். இவள் என்னவோ பெண் போலீஸ் போலவும், அவர் என்னமோ யூனிபாரத்தில் தப்பு செய்தவர் போலவும் தோன்றியது. சரோசா, மீண்டும் அந்த அறைக்குள் ஓடிப்போய் இளங்கோவின் இரண்டு கன்னங்களுக்கும் இரண்டு கைகளையும் உறையாகப் போட்டுக் கொண்டு “உன்னால நானு புதுசா பெறப்பெடுத்த சரோசா சாரே! உன்னோட சரோசா கொலைகாரியும் இல்ல, குடிகாரியும் இல்லன்னு நம்பு சாரே. நீ நம்பினா போதும் சாரே. போலீஸ் நம்புறதும் நம்பாததும் அவங்க இஷ்டம். அந்த அண்ணாத்தையோட இஷ்டம்” என்று சொல்லி விட்டு மீண்டும் திரும்பி நடந்தாள்.

அவள் வேகவேகமாக நடந்ததால், போலீஸ்காரர் எக்கி எக்கி ஓடினார். அவள் மூலம் தங்களுக்கும் விமோசனம் கிடைக்கும் என்று நினைத்து ஆங்காங்கே நின்ற கேஷுவல் ஊழியர்கள் அநாதைகள் போல தவித்தார்கள். இனிமேல் நிரந்தர ஊழியர்களிடம் தாங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்றும், பிராண்டி கிராண்டி கேட்டால் சொந்தக் காசில்கூட வாங்கிக் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டார்கள்.

அந்தப் போலீஸ்காரரும், இந்த சரோசாவும் அலுவலக வளாகத்திற்கு வெளியே வந்தார்கள். சரோசா, ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தாள், ஆண்டவன் இருக்கிறானா என்பது மாதிரி. அவள் மனதில் எந்தப் பயமும் ஏற்பட்டது போல் தோன்றவில்லை. உணர்வுகள் இருந்தால்தானே பயம் என்ற உணர்வு ஏற்படும்? இதற்குள் ஒரு ஆட்டோ ரிக்ஷாவை போலீஸ்காரர் அதட்டிக் கூப்பிட்டார். அது அவர்கள் முன்னால் வந்து உறுமியபோது, சரோசா போலீஸ்காரர் அதட்டும் முன்னாலேயே ஏறிக் கொண்டாள்.

ஆட்டோவிற்கு, போலீஸ்காரர்கையால் வழிகாட்டியபோது, முனியம்மா அங்கே ஓடிவந்து, போலீஸ்காரர் பக்கத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். அதிசயமாகப் பார்த்த அவர், ஆச்சரியத் தொனியில் கேட்டார்:

“அடடே... முனியம்மா, என்ன இப்படி ஜேம்ஸ்பாண்ட் மாதிரி?"

“அப்போ நீ என்ன ஆபீஸ்ல பார்க்கலியா?”

“எந்த ஆபீஸ்ல?"

"அதே அந்த கேடி ஆபீஸ்ல; திருட்டு ஆபீஸ்ல; தெனாவட்டு ஆபீஸ்ல; அங்கதான் வேலை பாக்கேன். சொந்தப் பெரியப்பா பிள்ளையா இருந்தும், நீ என்னை கண்டுக்கலியேன்னு எனக்கு எப்படி அழுகை வந்தது தெரியுமா?"

"தப்பா நினைக்காதே தங்கச்சி. ஒரு போலீஸ்காரனுக்கு எப்பவுமே குற்றவாளிமேலதான் கண்ணு இருக்கும். வீட்டுல வந்து ஆற அமர பேசறேன். இப்ப நீ இறங்கு."

"வழியிலேயே இறங்கிக்கறேன் அண்ணே."

"ஆட்டோ, நீ பாட்டுக்கு ஓட்டுப்பா.'