Chapter 7
இளங்கோ, திடீரென அம்மாவின் சத்தமும், ஒரு அந்நிய சத்தமும், கூட்டாகவும், தனித்தனியாகவும் ஒலிப்பதைக் கண்டு எழுந்து பார்த்தான். நடு வீட்டிற்குள் வந்து அந்த வீட்டை ஏற இறங்கப் பார்க்கும் அந்தப் போலீஸ்காரரை உற்றுப் பார்த்தான். அவர் வேறு யாரும் இல்லை. தெருவோர கரும்பு வியாபாரியிடம் செங்கோல் செலுத்தினாரே அவரேதான். அம்மா அழாக்குறையாகக் கத்தினாள்:
"ஒங்கக் கொடுமைக்கும் ஒரு அளவு வேண்டாமாய்யா? அந்த அநியாயக்காரியத்தான் உங்களால ஒண்ணும் செய்யமுடியல. ஒதுங்கிப் போறவனையாவது விட்டுத் தொலைக்கலாமே."
"நீங்க எது சொல்லணுமுன்னாலும் ஸ்டேஷன்ல வந்து சொல்லுங்க."
“நான் அனுப்பி வைக்காட்டி?”
"போலீஸ் மீறுறவங்களை எப்படி பிடிக்கணுமுன்னு வேலூர்லேயும், கே.கே. நகர்லேயும் டிரெயினிங் கொடுத்திருக்காங்க."
‘அவனை எதுக்காகக் கூப்பிடுறீங்கன்னு எனக்கு முதல்ல தெரிஞ்சாகணும்.''
"ஏதோ ஒருரு பொண்ணு, சரோசாவோ, ரோசாவோ, இவரு அவள கீழே பிடிச்சுத் தள்ளி ரத்தக் காயம் உண்டு பண்ணிட்டாராம். அதுக்கு முன்னால கற்பழிக்க முயற்சி செய்தாராம். இந்த இரண்டும் சீரியஸ்ஸான விவகாரம். அதனாலதான், இன்ஸ்பெக்டர் இவர கையோட கூட்டிட்டு வரச்சொன்னார். யாரு பக்கம் நியாயம் இருக்கு என்கிறது எனக்கு முக்கியமில்லை. இவர கையோட கூட்டிக்கிட்டுப் போறதுதான், முக்கியம்.”
"கான்ஸ்டபிள் சார், இது அநியாயம் சார். நான் ஒரு பாவமும் அறியாதவன் சார். இப்படி நடக்குமுன்னு தெரிஞ்சிருந்தால், ஒதுங்கிப் போயிருப்பேன் சார்.”
"எது பேசணுமுன்னாலும் ஸ்டேஷன்ல வந்து பேசுங்க மிஸ்டர்."
“சரி காலையில வாறேன்.”
"இல்ல, இப்பவே வரணும். வந்தாகணும்.”
அந்தப் போலீஸ்காரர் இளங்கோவை அந்த இரவில் கையோடு கொண்டு போகாமல் போகப் போவதில்லை என்பதுபோல், அங்கேயே - அந்த நடு வீட்டுலேயே லத்திக் கம்பை ஊன்றியபடி நின்று கொண்டிருந்தார்.
இளங்கோவிற்கு, தலைக்கு மேல் வெள்ளம் போன துணிச்சல்; அதுவும் கரும்புச் சாருக்காரனை சக்கையாக்கிய போலீஸ்காரரே, வீட்டிற்குள் வந்து, டி.வி. செட்டையும், கண்ணாடி பிரேமிற்குள் இருந்த ஓவியப் பொருட்களையும் பார்த்துவிட்டு, திருப்தியுடன் மனதிற்குள் அசைபோட்டபடியே தலையாட்டுவதைக் கண்டு, அவன் கொதித்துப் போனான். அவருக்கு முன்னால் வந்து இரண்டு கைகளையும் நீட்டியபடியே கத்தினான் :
"இந்தாங்க சார்... உங்களைத் தான். விலங்கை மாட்டி இழுத்துக்கிட்டு வேணுமுன்னாலும் போங்க. இந்தாய்யா கை. எங்கேய்யா உன் விலங்கு?"
அனுபவப்பட்ட அந்த காவலருக்கு, அவன் ஒரு அப்பாவி என்பது உடனடியாகப் புரிந்தது. அதே சமயம், இந்த மாதிரி கேஸ்கள் காமதேனுவாக மாறும் என்பதும் தெரிந்தது. எதுவும் பேசாமல், அவனை அவன் போக்கிலேயே விட்டார். இதற்குள், இளங்கோ மேலும் அதிகமாய் உணர்ச்சிவயப்பட்டு, அவனே, அவரது கைகளைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தான். என்ன பேசுகிறோம் என்பது புரியாமல் பேசினான் :
"வாங்க சார், போகலாம். நான் அவளை கற்பழிக்க முயற்சி செய்யல... செய்திட்டேன். அதுக்காகவே திட்டம் போட்டு அவள இந்த ஏரியா பக்கம் வரவழைச்சு இரும்புக் கம்பிய திருடச் சொன்னேன். வாங்க சார் போகலாம்... வராட்டால் என்ன செய்வீங்க!”
"இதுக்கெல்லாம் மசியற ஆளு வேற; நான் இல்ல. தேவைப்பட்டால் விலங்குகூட மாட்டி இழுத்துக்கிட்டுப் போவோம். போலீஸ் கிள்ளுக்கீரை இல்லை. எங்களுக்கு பங்களாவும் ஒண்ணுதான். சேரியும் ஒண்ணுதான். ஏதோ கையில, காலிலே விழுந்து மன்னிப்புக் கேட்டு, அப்படி இப்படி நடந்துகிட்டால், தேறலாம். நீ என்னடான்னா உதவி செய்ய வந்த என்னையே வம்புக்கு இழுக்கிறீயே."
பாக்கியம், பிரமை பிடித்து நின்றாள். இப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்று எதிர்பார்த்தே, அதற்குப் பயந்து கணவன் ஓடிவிட்டதாக நினைத்து மனதிற்குள் கணவனைத் திட்டினாள். பிறகு மகனை மலங்க மலங்கப் பார்த்தாள். அவனையே சுற்றிச் சுற்றி வந்தாள். போலீஸ்காரர் அபயம் அளித்தார்.
"வழிய விடுங்கம்மா... இப்பவும் எதுவும் குடிமூழுகிப் போயிடல. உங்க பைனை நைட்ல ஜாக்கிரரையா பார்த்துக்க வேண்டியது என்னோடது. நீங்க காலையில வாங்க. பார்க்க வேண்டியவங்களை பக்குவமா பாருங்க. எல்லாம் சரியாயிடும். பாவம் சரோசா பொண்ணு. இவரு தள்ளிப் போட்டதுல அவளுக்குப் பிடரியில ஒரே ரத்தம். எதுல காயம் வந்தாலும் பிடரியில் மட்டும் காயம் வரக்கூடாது. ஏன்னா அது உயிரோட கூட நிக்கும். ஆனாலும், கேஸ் இன்னும் ரிஜிஸ்டர் ஆகல. சரி... நடப்பா."
பாக்கியம், மகனையும் அந்த காவலரையும் ஒருசேரப் பார்த்தாள். அவளுள் இருந்த நகரத்துப் பெண் விலகி, கிராமத்து நாட்டாமைப் பெண்ணுக்கு வழி கிடைத்தது. கணவனைப் பார்த்து கர்ஜிப்பாளே அதேமாதிரி கர்ஜித்தாள் :
"சரி வாங்க போகலாம். நானும் வாரேன். என்னதான் நடக்குதுன்ன பார்த்துடலாம். ஏய் மல்லி, கதவைப் பூட்டிக்கடி. இல்லாட்டி திறந்த வீட்ல யாராவது, 'ஏதோ மாதிரி' நுழைஞ்சு வம்புக்கு இழுப்பாங்க. இரண்டுல ஒண்ண பார்க்காம் நான் இன்னிக்கி விடப்போறதுல்ல. உங்கப்பா வந்தால் கதவ திறக்காதடி. அவரோட புத்திக்கு ரோட்டுல தூங்கணும். டேய் இளங்கோ, நட்டா! என்னதான் நடத்தறாங்கன்னு பார்த்துடலாம்.”
அந்தப் போலீஸ்காரருக்கு கோபம் வரத்தான் செய்தது. ஆனால், அழுது கொண்டே பின்னால் வருவாள் என்று எதிர்பார்த்த அந்த அம்மாள், வயதான கண்ணகி போல் பேசுவது கண்டு அதிர்ந்து போனார்.
போலீஸ்காரர் முன் நடக்க, தாயும் மகனும் பின் நடக்க, முன்னால் நடந்த போலீஸ்காரர் ஆழம் பார்த்துப் பேசினார்.
"இந்த மாதிரி ராத்திரியில தம்பிய கூட்டிக்கிட்டுப் போறது, எனக்கே ரொம்ப சங்கடமாகத்தான் இருக்குது. ஆனால் எங்க ஸ்டேஷனுக்குள்ளேயே, எங்க கண்ணு முன்னாலேயே ஒரு சின்னஞ்சிறு பொண்ண அடிச்சப் போட்டுட்டு அலட்சியமாகப் போகிறவனை நாங்கலட்சியப்படுத்தாமல் இருந்தால், எங்க பேரு போலீஸா? எப்படியோ சமாதானமாப் போனால் எல்லாருக்கும் நல்லது."
அந்த மூவரும்,பிரதான சாலைக்கு வந்தார்கள். வலப்பக்கமாகத் திரும்ப வேண்டியவர்கள், இடப்பக்கமாகத் திரும்புவது கண்டு போலீஸ்காரர் அவர்களை சந்தேகத்தோடு பார்த்தார்.
“அடுத்த தெருவில் தெரிஞ்சவர் ஒருத்தர் வீட்ல என் வீட்டுக்காரர் இருக்கார். அவரையும் கூட்டிக்கிட்டு போகலாம்."
"இவரு இங்கேயே நிக்கட்டும். நீங்க போயிட்டு வாங்க.”
"இந்தா பாருய்யா, நான் பனங்காட்டு நரி. இந்த மிரட்டுற வேலைய வெச்சுக்காத. ஒரு பத்து நிமிஷம் உன்னால பொறுக்க முடியல. ஆனால், அடாவடி செய்யறவங்கள வருஷக்கணக்காய் பொறுத்துக்க முடியும். நான் சொன்ன சொல்ல காப்பாத்துறவள். வேணுமின்னால் நீயும் கூடவா. அதே சமயம் நீ தடுத்தால் நாங்க நடக்கத்தான் போறோம். உன்னால முடிஞ்சத செஞ்சுக்கோ."
மகன், காவல் நிலையத்தில் சிக்கி அவனுக்கு இரவோடு இரவாக ஏதாவது ஆகிவிடக்கூடாதே என்று கோழி போல் தவித்த அந்தத் தாய், இப்போது பருந்து போல் வீறாப்புக் கொண்டாள். இளங்கோவின் கையைப் பிடித்துக் கொண்டு இடது பக்கமாக நடந்தாள். வலது பக்கம் கால் வைத்திருந்த போலீஸ்காரரும், அவர்களுக்குப் பின்னால் நடந்தார்.
தாயும், மகனும் ஒரு பெரிய பங்களாவிற்குள் நுழைவதைப் பார்த்துவிட்டு, போலீஸ்காரர் வருத்தப்பட்டார். கஷ்டப்பட்டார். புத்தியை கடன் கொடுத்து விட்டோமே என்பது போல் தொப்பியை சொறிந்தார். இதற்குள் மிஸ்டர். ரமணனும், பாமாவும் சத்தம் கேட்டு வெளியே வந்தார்கள். இளங்கோ இப்போது வீறாப்பாய் பேசினான் :
"நான், என்னை வழிமறித்த பொண்ணைத் தள்ளாமல் அவள் முன்னால தோப்புக்கரணம் போட்டிருக்கணுமாம். அவள் இரும்புக் கம்பிய திருடினதத் தடுக்காமல் எங்க வீட்டுல இருக்கிறதையும் எடுத்துக் கொடுத்திருக்கணுமாம். அப்படிச் செய்யாததுனால என்னை, ராத்திரியோடு ராத்திரியா விசாரிக்கப் போறாங்களாம்.'
பாமா கத்தினாள் :
"டாடி, இது டூ மச்... உங்க டெப்டி கமிஷனர் பிரண்டுக்கு போன் செய்யுங்க. இல்லாட்டி கமிஷனர் கிட்ட, நானே பேசப்போறேன்.'
பெரிய பெரிய வார்த்தைகளைக் கேட்ட போலீஸ்காரர் சிறிது சுதாரித்து, கையில் பிடித்திருந்த லத்திக்கம்பை முதுகோடு முதுகாக மறைத்துக் கொண்டார். இதற்குள் இளங்கோவின் தந்தை சுப்பையா, அந்தப் போலீஸ்காரரையே கமிஷனராய் அனுமானித்து ‘பணிவன்புடன்’ சொன்னார்:
"சார் நீங்க வாங்க... தப்பில்ல. எந்த வீட்டுக்கும் எந்த நேரத்திலயும் வர்றதுக்கு உங்களுக்கு ரைட் இருக்கு. இப்படி யூனிபார்ம்ல வராமல் மப்டியில் வந்திருக்கலாம். இதுவும் தப்பில்லதான்."
"என்ன அங்கிள் சம்பந்தம் இல்லாமல் பேசறீங்க! போலீஸ்காரர் காலிலயே விழுந்துடுவீங்க போலிருக்கே. இளங்கோவை கேவலப் படுத்தணுமுன்னுதானே, இவரு யூனிபாரத்துல வந்திருக்கார். டாடி, இன்னுமா உங்களுக்கு லைன் கிடைக்கல?"
ரமணன் டெலிபோனை சுற்றோ சுற்று என்று சுற்றி, டெபுடி கமிஷனரை எப்படியோ, கையும் டெலிபோனுமாகப் பிடித்து விட்டார்.
“ஹலோ! நான்தான் மிஸ்டர் ரமணன். தப்புத்தான்... என்னை நானே மிஸ்டர்ன்னு சொல்லிக்கக் கூடாதுதான். உங்கள மாதிரிதான் அமெரிக்காவில இருக்கிற என்னோட மகனும் அடிக்கடி சொல்லுவான். அப்புறம் ஒரு விஷயம். போலீஸ் எங்க ஏரியாவிலே போலீஸாவே இல்ல. ஓகே! சொல்ல வேண்டியத ஒரு நிமிஷத்துல என்ன, அரை நிமிஷத்திலேயே சொல்லிடறேன்.”
ரமணன், இளங்கோவிற்கு காலையிலிருந்து அந்த இரவு வரை ஏற்பட்ட சோதனைகளை விளக்கினார். அந்த ஏரியாவில் ஒரு குழந்தை காணாமல் போனதையும், பல பொருட்கள் திருட்டுப் போனதையும், இவைபற்றி அவ்வப்போது காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தாலும், அவை போன இடம் தெரியவில்லை என்பதையும் விளக்கினார். இப்போது ஒரு கான்ஸ்டபிள் கையும் லத்தியுமாய் நிற்பதையும் சொன்னார். பிறகு , “ஹலோ... தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.
"இன்னும் பத்து நிமிஷத்துல திருப்பி டெலிபோன் செய்யறதா சொல்லியிருக்கார்.”
"அப்படின்னா, உங்க டெலிபோன் நம்பரை அவர் கேட்டுருக்கணுமே டாடி! நீங்கதான பேசிக்கிட்டுப் போனீங்க, நீங்க பேசி முடிச்சதும் மூணு செகண்ட்ல அவரு டெலிபோனை வைச்சுட்டாரே"
"போலீஸ் ஆபீசருங்க எப்பவுமே அப்படித்தான். கட் அன்ட் ரைட்டாத்தான் இருப்பாங்க."
இதற்குள் போலீஸ்காரர், அந்த வீட்டையும் அவர்களையும் ஆழம் போட்டார். ஒன்பது நிமிடம் ஐம்பது வினாடி வரை பொறுமையோடு இருந்தார். பத்தாவது நிமிடம் படபடப்பானார்.
“சார், எனக்கு டைம் ஆகுது. குற்றவாளிய என்னோட அனுப்பி வைச்சீங்கன்னா, உங்களுக்கும் நல்லது."
"வேணும்னா விலங்கு போட்டு இழுத்துக்கிட்டுப் போய்யா. நீ இவர ஸ்டேஷன் வரைக்கும்தான் இழுக்க முடியும். நான் உன்ன சிட்டி முழுக்க இழுப்பேன். என்ன நினைச்சுக்கிட்ட?"
ரமணன் போட்ட சத்தத்தில் நியாயம் இருப்பது போல் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு போலீஸ்காரர், பேசாமல் நின்றார். இதற்குள் டெலிபோன் மணி ஒலித்தது. ரமணனும், பாமாவும் போட்டி போட்டு ஓடினார்கள்.
பாமா எடுத்த டெலிபோனை ரமணன் வாங்கிக் கொண்டு "எப்படி என் டெலிபோன் நம்பரை கண்டுபிடிச்சீங்க?” என்றார்.
"ஹலோ, தேங்கயூப்பா. சார், சாரி! தேங்க்யூ சார். எங்க ஸைடுல நியாயம் இருக்கிறதாலதான், நீங்க தலையிடுறீங்கன்னு எனக்குத் தெரியும். என்ன? சரோசாவ பத்தி உங்களுக்கும் தெரியுமா? தெரிஞ்சிக்கிட்டுமா இவ்வளவு நாளும் விட்டு வைச்சீங்க? சார்... அது உங்க விவகாரம்தான். எங்களுக்கு இப்போ நியாயம் கிடைக்கிறதைவிட அநியாயத்துல இருந்து பாதுகாப்புக் கிடைச்சாலே போதும். இந்த கான்ஸ்டபிள் இன்னும் இங்கேயே நிற்கிறார். ஓகே... ஓகே! அப்புறம் நீங்க ரிடையர் ஆன பிறகாவது வகுப்புல பேசினது மாதிரி உங்கள “டா” போட்டு பேசலாமா? யெஸ்... பிரதர், நீங்க பிஸிதான்... குட் நைட்..."
ரமணன் ஆனந்தப் பள்ளுப் பாடினார்:
"நம்ம ஏரியாவில நடந்த திருட்டுக்களைப் பத்தி இதுவரைக்கும் கொடுத்த புகார்களோட நகல்களை எடுத்துக்கிட்டு நாளைக்கி இன்ஸ்பெக்டரை போய் பார்க்கணுமாம். அப்படியும் நமக்கு திருப்தி வராட்டால், இவரையே போய் பார்க்கலாமாம். இன்ஸ்பெக்டரை தாளிச்சிருப்பார்! அவர் பேச்சுல அப்படி ஒரு வாடை தெரிஞ்சுது..."
ரமணன், மகள் இன்னும் தன்னை பெரிதாக நினைக்கவில்லையே என்று ஏக்கத்தோடு அவளைப் பார்த்தபோது, அவள் இளங்கோவை ஆறுதலாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். போலீஸ்காரருக்கு இருப்பதா போவதா என்ற சந்தேகம். அங்குமிங்குமாய் நடமாடிக் கொண்டிருந்த போது, மீண்டும் ஒரு டெலிபோன்; கரகரப்பான குரல். ரமணன் அதை வாங்கி, அந்த கான்ஸ்டபிளிடம் கொடுத்தார். அவரும் “அய்யா... அய்யா... சார்... சார்... அப்படியே... சார்... அப்படியே... சார்” என்று சொல்லிவிட்டு, டெலிபோனை வைத்தார். பிறகு விறைப்பாக ஒரு சல்யூட் அடித்தார். “அவளை விடப்பிடாது சார். நீங்க கொடுக்கிற கம்ப்ளைன்ட்ல அவளும் தேறப்பிடாது, அந்த சப்-இன்ஸ்பெக்டரும் தேறப்படாது” என்று சொல்லிவிட்டு, இளங்கோவைப் பார்த்து இரண்டு சல்யூட்களும், பாக்கியம்மாவைப் பார்த்து மூன்று சல்யூட்களும் அடித்துவிட்டு, சுப்பையாவை ஒரு முறைப்பு முறைத்து விட்டு கழன்று கொண்டார்.
ரமணன், பெருமை பிடிபடாமல் பேசினார் :
"மிஸ் அண்ட் மிஸ்ஸஸ் சுப்பையா! நீங்க வீட்டுக்குப் போங்க. நான், பாமா, இளங்கோ மூணுபேருமாய் சேர்ந்து ஒரு புகார் மனு தயார் செய்யப் போறோம். இளங்கோ இங்கேயே சாப்பிடுவார். சுப்பையா சார் புறப்படலையா?"
சுப்பையா சாருக்கு போக மனமில்லை. கூடவே, ஒரு எண்ணமும் ஏற்பட்டது. மகன் அன்றிரவு போலீசிடம் சிக்கினால் எப்படியாவானோ, அப்படி அன்றிரவு அவர் மனைவியிடம் சிக்கினால் ஆவார். சிக்க விரும்பாமல், அதேசமயம் சிக்கனமாகப் பேசினார்:
"அந்த கான்ஸ்டபிள் கையில் ஏதாவது கொடுத்துட்டு வந்திடறேன். எங்க பாக்கியத்துக்கு தனியா போகத் தெரியும். தனியா போயிடுவாள். ரொம்ப தைரியசாலி.”
பாக்கியம், அவசரத்துக்குத் தோஷமில்லை என்பது போல், சுப்பையாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளிக் கொண்டே மாட்டைப் பிடித்துக் கொண்டு போவது போல் போனாள். அதை முன்பக்கம் இறுக்கப் பிடிக்க வேண்டும். இவரை பின் பக்கமிருந்து தள்ள வேண்டும். அவ்வளவுதான் வித்தியாசம் என்பது போல் அவரை நடத்தினாள்.
ரமணன் சுழற் நாற்காலியில் உட்கார்ந்து தனியாய் போகப்போன அந்தச் சின்னஞ் சிறுசுகளை தன்பக்கம் வரவழைத்தார். அந்த ஏரியாவாசிகளின் சங்கத்திற்கு, இதே ரமணன் அவர்களின் தலைவர் - தொண்டர். சந்தாகூட கொடுக்காத தெருவாசிகளுக்காக அவர்கள் வீட்டில் நடந்த திருட்டு சம்பவங்களை விளக்கும் கடிதங்களை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாக ஒரு டிக்டேஷனைக் கொடுத்துவிட்டு, பாமாவை டைப் அடிக்கும்படி சொன்னார்.
பாமா, இளங்கோவை தனது அறைக்குள் கூட்டி வந்தாள். இயற்கைக் காட்சிகளைக் கொண்ட கட்டவுட் ஒரு பக்கம்; வீணையோடு நாதம் இசைக்கும் சரஸ்வதியின் உருவம் பொறித்த திரைச்சீலை... டூ இன் ஒன். ஒரு சின்ன டி.வி. செட். அறை முழுவதும் ஒரே சென்ட் வாசனை.
சாப்பிட ஏதாவது கொடுங்கள் என்று கேட்கப்போன இளங்கோ, பசியை மறந்தான். தன்னையறியாமலேயே சொன்னான்:
"உங்களுக்கு கொண்டை போட்டால் நல்லாயிருக்கும். ஏன்னா உங்க முகம் ஓவல் இல்லை. அளவுக்கு மீறி ரவுண்ட். அதோட நீங்க கொஞ்சம் குள்ளம், கொஞ்சந்தான். அதனால கொண்டைய மேல்நோக்கிப் போட்டால், உங்களை உயர்த்திக் காட்டும்."
“இதெல்லாம் எப்படித் தெரிஞ்சிக்கிட்டீங்க?" “இப்போதைக்கு சஸ்பென்ஸ்.”
அவள், அவனையே வைத்த கண் வைத்தபடி சிரித்தாள்.
"சரி புறப்படுங்க. நாளைக்குத்தான் டைப் அடிக்கப் போறேன். இப்போ அடிச்சால் தப்புத்தப்பா வரும். ஆனாலும் ஒன்று, உங்களை அவள் அடிச்சது எனக்கு இன்னும் வலிக்குது. அவளுக்கு ஆறு வருஷம் வாங்கிக் கொடுக்கிறது, என்னோட பொறுப்பு. தைரியமா போங்க."
இளங்கோ, அவளைப் பார்த்தபடியே எழுந்து நடந்தான். அவள் கொடுத்த காதல் சமிக்ஞைகள் அவனுக்கு டூயட் மாதிரியான கற்பனையை தரவில்லை. அந்த சேரிப் பெண் ஆறு வருடம் உள்ளேயிருக்கப் போகிறாள் என்ற ஒரு ஆனந்தத்தில் அன்று நடந்த அத்தகைய சோதனைகளும், சாதனைகளாய் ஆனது போல் ஒரு அகரத் திருப்தியோடு நடந்தான்.

