Chapter 19
சரோசா, பல்லவன் பேருந்துக்குள் ஏறியவர்களை முண்டியடித்து, அவர்களை இறக்கியபடியே, கீழே இறங்கினாள். அடி கனத்த காகிதக் கவரை அணைத்துப் பிடித்தபடியே கோவில் வளாகத்திற்குள் விழுந்தடித்து ஓடினாள். அங்கே குத்துக்காலிட்டுக் கிடக்கும் நாயினாவைக் காணவில்லை. கோவில் வளாகத்திற்கு வெளியே மீண்டும் வந்து, கண்களை அங்குமிங்குமாக அலையவிட்டாள். அந்தக் கோவில் மதில் சுவருக்கு வெளியே சாத்தி வைக்கப்பட்ட பிணங்கள்போல் கிடந்த பிச்சைக் கூட்டத்தைப் பார்த்தாள். இளங்கோ, தனக்குத் தெரிவித்த எதிர்காலக் கணிப்பை மனதில் நிறுத்தியபடியே பார்த்தாள். அவிந்து போனது போல் கிடக்கும் பறட்டைத்தலை ஆயா, கால்கள் வேப்பங்குச்சியாய் வளைய, தரைதட்டிய வயிற்றுடன் கிடக்கும் சப்பாணிப் பையன், ரோகமே வடிவாய் புழுத்துக் கிடக்கும் தொழு நோயாளி இவர்களைப் போன்றவர்களில் ஒருத்தியாக, தான் அங்கே ஒரு காலத்தில் இருக்க வேண்டியிருக்கும் என்பதை நினைத்து, நினைத்து, அவள் நினைவற்று நின்றாள். அந்தப் பகுதியில் இப்போதே இடம் பிடிக்கப்போவது போல் பார்த்துவிட்டு அது தாளமாட்டாது கண்னை மூடிக்கொண்டாள்.
இந்தச் சிந்தனை பயத்தில் அவள் கரம் அந்தக் காகிதத் தூக்கின் நுனிக்கு வர, அதற்குள் கிடந்த கோழி பிரியாணிப் பொட்டலமும், ஆம்லேட் பார்சலும், தனியாகக் கட்டப்பட்ட தயிர் நனைத்த வெங்காயப் பச்சடியும் கீழே விழுந்தன. கையில் கனமற்றுப் போனதை உணர்ந்து கண்திறந்த சரோசா, கீழே கிடப்பதை எடுத்து பைஜாமாக்குள்ளும், சட்டை முந்தானைக்குள்ளும் திணித்தபோது, பெரிய பொட்டலம் பிதுங்கி சிறிது சோறும், ஒரு கறித் துண்டும் கீழே விழுந்தன. அவ்வளவுதான்... அந்த மதிலோரக் கூட்டம் வாய்பிளந்து அந்த இறைச்சித் துண்டையே கோரஸாகப் பார்த்தது. இதற்குள் அங்கே ஓடிவந்த சொறி நாய் அதைக் கௌவியபோது, அந்தப் பிச்சைக் கூட்டம் அந்த நாயைப் பொறாமையாகப் பார்ப்பதுபோல் பார்த்தது. சரோசாவையும் அண்ணாந்து பார்த்தது. அவள் பார்வையைப் புரிந்துகொண்ட பறட்டைத்தலை ஆயா, அவள் நயினா போன இடத்தை கைநீட்டி சுட்டிக்காட்டினாள். பஸ் நிலையம் இருக்கும் திசை.
சரோசா உடனடியாக நகரவில்லை. அந்தக் கூட்டத்தையே வெறித்துப் பார்த்தாள். வருடக்கணக்கில் பார்த்துப் பழகிய அந்தக் கூட்டம், இப்போது வேறு விதமாய் தோன்றியது. அவர்கள் பார்வையில், இவள் பார்வை இருளாகியது. சிறிது நேரத்திற்குப் பிறகு, இடது கையை ஜாக்கெட்டுக்குள் விட்டு இருபது ரூபாய் நோட்டை வெளியே கொண்டு வந்தாள். அந்தக் கூட்டத்தில் வஸ்தாவாகத் தோன்றிய ஒரு குச்சிக் கிழவனிடம் அந்த நோட்டைத் திணித்து, “அல்லாருக்கும் சில்லரை மாத்தி சரிசமமாகக் கொடு” என்றாள். சிலர் இரண்டு ரூபாய் கிடைக்கும் ஆனந்தத்தில் முகம் தூக்கினார்கள். சிலர், அந்தப் பிரக்ஞையே இல்லாமல் அப்படியே கிடந்தார்கள்.
சரோசா, பஸ் நிலையம் பக்கம் வந்தாள். அப்படி வரும்போது இளங்கோவை நினைத்துக் கொண்டாள். அந்தப் பிச்சைக் கூட்டத்தின் ஆனந்தத்துக்கு அவனே காரணம். இன்றைக்கு, டிஸ்சார்ஜ் ஆகப் போவதால், அவனைப் பழைய இளங்கோவாக முழுமையாக ஒரு தடவை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆள் இல்லாத சமயமாய் அவன் அறைக்குப் போயிருந்தாள். அவனோ, பழையபடியும் கவர்மென்ட் வேலைக்கு வரும்படி, அவளிடம் பத்துத் தடவை சொல்லியிருப்பான். இவள், 'கல்லுளி மங்கி மாதிரி' அவனுக்குப் பதில் சொல்லாமல், இறுதியில் "நாய்னா பசியில துடிப்பார். துரை அண்ணன்கிட்ட காசு வாங்கணும். அவுரு தலமறைவா ஆகுமன்னாலே போயிடணும்” என்று சொன்னாள். உடனே இளங்கோ, சட்டைப் பைக்குள் இருந்த ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து அவள் மடியில் போட்டான். அவள், அதை எடுத்து இளங்கோவிடம் நீட்ட, அவன் மறுக்க, இறுதியில் அவன் சட்டைப்பைக்குள் அதைப் போடப் போனாள். அவனோ, "இதைக் கடனாத்தான் தாறேன். என் ஆபீசிலே சேர்ந்து, மாசக்கடசியிலே சம்பளம் வாங்கும்போது நீ தர வேண்டாம்; நானே பிடிச்சுடறேன்" என்றான். அவன் அன்பை கவுரவப்படுத்துவதற்காக, சரோசா, அதை வாங்கிக் கொண்டாள். அவன், அவளை வேலையில் சேர்த்தால், அவனும் கொலை செய்யப்படலாம் என்று தான் கூறிய பிறகும், இளங்கோ பிடிவாதமாக இருப்பதில், அவள் புல்லரித்துப் போனாள்.
அந்தப் பஸ் நிலையத்தில், அவள் நாய்னா அங்கே நிற்பவர்களின் முழங்கால்களில் முகம் படும்படி பார்த்தார். அவர் தனது கிழிந்த காக்கிச் சட்டையின் மேலே துண்டு மாதிரி ஒரு துக்கடா கோணியைப் போர்த்தியிருந்தார். கீழே குனிந்து தலையை நிமிர்த்திப் பார்த்தார். அவர் தோளில் ஒரு பை. தட்டு, தம்ளர், ஈயப்போணி ஆகியவற்றால் துருத்திய பை. இந்த அரிய பொக்கிஷத்தை இருந்த இடத்தில் வைத்திருந்தால், அதையும் தட்டிக்கொண்டு போய்விடுவார்கள் என்ற அனுபவ பயம். எவரோ ஒருத்தர் அவரது கையில் ஒரு நாலணாவைத் திணித்தபோது, சரோசா, நாய்னாவை பாய்ந்து பிடித்தாள். "இன்னா நாய்னா, நான் உயிரோட இருக்கபோவே பிச்சை எடுக்கிறியா? காச, அவரண்ட நீட்டு” என்றாள். அப்போதுதான், அந்தக் காக கையில் விழுந்த உணர்வைப் பெற்ற நாய்னா, ஆள்காட்டி விரலையும், பெருவிரலையும், கொக்கின் மூக்குபோல் ஆக்கிக்கொண்டு, காசைக் கொத்தினார். பிறகு, எவரிடம் கொடுப்பது என்று தெரியாமல் அவர் புலம்பியபோது, சரோசா, அந்தக் காசை எடுத்து பிச்சை இட்டவரிடமே பிச்சைபோல் கொடுத்தாள்.
தாத்தாவும், பேத்தியும், கோவில் வளாகத்திற்கு உள்ளே வந்தார்கள். அவரோ, தான் பிச்சை எடுக்கப்போகவில்லை என்பதைப் பிரகடனப்படுத்துவதற்காக “ஒன்னை பாக்கே” என்றார். அதைப் புரிந்து கொண்ட சரோசா, அவரது தலையை செல்லமாகக் குட்டிக்கொண்டே, அவரை இருந்த இடத்தில் உட்கார வைத்தாள். பெரிய பொட்டலத்தைப் பிரித்து, கோழி பிரியாணியைக்கிளறி, ஒரு கவளத்தை அவர் வாய்க்குள் போட்டாள். இதற்குள் பல சொறி நாய்கள் அங்கே கூடிவிட்டன. இந்தப் போட்டியை தவிர்ப்பதற்காக, அந்த வளாகத்தின் உட்பக்கம் உள்ள ஒரு தேவாலயக் கட்டிடத்திற்குள் நாய்னாவை அழைத்துப் போனாள். சின்னக் கட்டிடம்.. உள்ளே, ஒரு கதவு. அதற்கு வெளியே சின்ன செவ்வக வழி. இதன் முடிவில் இரும்புக் கிராதிக்கதவு. சரோசா, கிராதிக் கம்பியின் வழியே உள்ளே கைபோட்டு, தாழ்ப்பாளை நீக்கி தாத்தாவை உள்ளே நகர்த்தியபோது ஒரு ஏவல் பையன், அவள் வரவுக்கு வாயால் தாளிட்டான் :
"எக்கோ, என்ன தப்பா நினைக்காதே. இனிமேகாட்டி இந்த இடத்திலே நீங்க குந்தினால் என்னோட வேல போயிடுமுன்னு பாதர் சொல்லிட்டார். நானு வேலையிலே இருக்கது, இல்லாதது உன்னோட பொறுப்பு."
பெரிய மனிதன்போல் பேசிய அந்தப் பையனைத் துணுக்குற்றுப் பார்த்த சரோசா, நாய்னாவை கீழே இறக்கினாள். இரவில், அந்த இடத்தில்தான், அவரை அவள் படுக்க வைப்பாள். அஞ்சாறு வருடமாய் நடக்கிற சமாச்சாரம். இப்போ, புதுசா ஒரு பாதர் வந்திருக்காராம்; பேருதான் 'பாதா'.
சரோசா, நாய்னாவை நாய்கள் அண்ட முடியாத ஒரு ஒதுக்குப்புறமாகக் கொண்டுபோய் பிரியாணியை ஊட்டினாள். இதற்குள், அம்மைத் தழும்பன் அந்தப் பக்கமாக வந்தான்.
"ஒன்ன எங்கெல்லாம் தேடறதாம்? தொரண்ணன் ஒன்ன அர்ஜண்டா கூப்பிடுறார். எங்கம்மே பூட்டே?"
"போய்க்கினே இரு; இதோ வாரேன்."
சரோசா, நாய்னாவை நகர்த்தி, கார்ப்பரேசன் குழாய் பக்கம் கொண்டுபோய், அவரது வாயைக் கழுவிவிட்டு, மணல் சிம்மாசனத்திலேயே அவரை உட்கார வைத்தாள். எதிரே, இரண்டு பெண்கள் போய்க் கொண்டிருந்தார்கள். தெரிந்தவர்கள்... சர்க்கார் வேலைக்காரர்கள்; ஆகையால் பத்து மணி ஆபீசுக்கு பதினோரு மணிக்குப் புறப்பட்டார்கள்.
'எப்படி அசத்தலா போகுதுங்க. தலையாட்றதிலையும், ஒரு இது... கை ரெண்டும் அப்படிச் சுத்தம், கடசல் உருளை மாதிரி. என் கை இருக்கே, துடப்பக் கட்ட... எனிக்கு என்ன குறயாம்? நானும் வேலைக்குப் போனா, அதுங்க மாதிரி, கொண்ட போடலாம்; ரெட்ட சடை போடுவேன். நாய்னாவுக்கு தீனி போடறதுக்கு இரும்புக் கம்பியை தூக்கவும் வாணாம், போலீசிலே பிடிபடவும் வாணாம். சர்க்கார் வேலையிலே சேர்ந்திட்டா வீடு குடுப்பாங்களாம்மே! நாய்னாவை அந்த மாதிரி வீட்லே வச்சுப் பாக்கிறதுக்கு எவ்வளவு ஆசையா கீது. ஆனால் அண்ணாத்தே...'
சரோசா, இத்தகைய சிந்தனை அழுத்தத்துடன், துரை அண்ணன் வீட்டுக்குப் பின்புறமாய் வந்து, பந்தல் வளாகத்திற்குள் நுழைந்தாள். பந்தலின் மணல் பரப்பில் ஒருவன் சுருண்டு கிடந்தான். இன்னொருத்தன் அவன்மேல் படுத்துக் கிடந்தான். ஒருத்தன், நண்டு இருந்த தட்டை நக்கினான்; இன்னொருத்தன் காலி கிளாசையே வாய்க்குக் கொண்டு போனான். சரோசாவுக்கு இளங்கோ சொன்னது மீண்டும் நினைவுக்கு வந்தது. நண்டுத் தட்டை நக்குகிறவன் முகத்தைப் பன்றி முகமாகக் கற்பனை செய்து பார்த்தாள். வெறும் கிளாசை வாய்க்குக் கொண்டு போகிறவனை மனித முகத்தோடு கூடிய நான்குகால் நாயாக உருவகித்துப் பார்த்தாள். சிரிப்பும் வந்தது; சினமும் வந்தது; கூடவே சிறுமையும் ஏற்பட்டது.
சரோசா, செருப்புச் சத்தம் கேட்டு, வாசலைப் பார்த்தாள். ஒரு கையில் தேங்காயையும், மறு கையில் தூக்குப்பையையும் பிடித்தபடி, ஒருத்தன் உள்ளே வந்தான். பைக்குள் இரண்டு கிலோ அரிசி. சரோசா, அவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியபடியே திட்டினாள்:
"இந்தாப்பா கோவிந்து! இனிமேக்காட்டி இந்தப் பக்கம் இப்டி வந்தே, நானே ஒன்னை ஒதைப்பேன். சரக்கு வேணும்னா, இதோ ஒன் பேண்ட மார்வாடிகிட்ட அடகு வை. வீட்ல அரிசி, தேங்காயை ஏய்யா திருடுற? போப்போ!"
இதற்குள், துரை அண்ணன் சத்தம் கேட்டு, அவள் வீட்டுக்குள் போனாள். ஊஞ்சல் பலகையில் துரை; அவனை உரசியபடி, அவன் தர்ம பத்தினி. அவள், இவளை அதட்டினாள்:
"ஆமா, அவனை எதுக்கு இப்படி அதட்றே? குடிக்க வர்றவன் எதோடு வந்தா ஒனிக்கு என்ன?”
"எக்கோ! ஒனக்கும் எனக்கும் பேச்சு இல்லை. என்ன விஷயம் துரை அண்ணே.”
"கும்மாளம்மனுக்கு விசேஷமாம். கூட்டம் அதிகமா வரும். சரக்கு எடுத்துட்டு வந்திடு."
"இந்தத் தொழிலே இனிமே வேண்டான்னு நினைக்கேண்ணே. மாதச் சம்பளம் கிடைக்கிற ஏதாவது ஒரு வேலையிலே சேரலாம்னு...."
துரை, அவளிடம் பேசப் போனபோது, அவன் தர்மபத்தினி கொதித்தாள். கட்ட நண்டு போல் அவள் முகம் சுருங்கியது. இவளை - இந்த கிழிஞ்சபைஜாமா, கீறல் கையோட பார்க்கறதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குது.
"இந்தா பாரும்மா, அவர எட்டன்னு நினைக்காதே. தண்ணிக்குள்ளேயே தடம் காணுறவரு அவரு.
"எவரும்மே?"
"ஒனிக்கி, இன்னுந் தெரியலையா? அவருன்னா, அவருதான்; ஒன்னோட அண்ணாத்தே. இந்த பதினஞ்சி நாளா, இந்த சரோசா, எங்கே எங்கே போராள், யாரைப் பார்க்காள்னு அவருக்கு அத்துபடி."
"அவருக்குத் தெரியுமுன்னு ஒனக்கு எப்படிம்மே தெரியும்?"
தர்மபத்தினி, குறுஞ்சிரிப்போடு சிரித்தாள். துரைக்கு, சரோசா, யாரை எல்லாமோ பார்த்தாள் என்பதைவிட, அண்ணன், அந்த சமாச்சாரங்களை தன்னிடம் சொல்லாமல், தனது தர்மபத்தினியிடம் சொன்னதில், ஒரு இஸ்கு-தொஸ்கு இருப்பதை உணர்ந்தான். லேசாய் தெரிந்த சங்கதிதான். ஆனால், அப்படி இருக்காது என்று ஒரு அற்ப ஆசை, இதுவரை இருந்தது. இப்பப் பூட்டுது.
துரையின் உடம்பு படபடத்தது. ஏதோ ஒன்று தலைக்குள் துவாரம் போட்டு, கனமாகக் கீழிறங்கி, தொண்டைக்குள் சிக்கி நெஞ்சுக்குள் விழுவது போல் இருந்தது. ஏதோ இன்னொன்று பிடரிக்குள்ளே இருந்து பிராண்டுவது போல் இருந்தது. மனைவியையே வைத்த கண் வைத்தபடி பார்த்தான். அவள் உதடுகள் விரிய விரிய, இவன் உதடுகள் குவிந்தன. அவள் கண்கள் மலர மலர, இவன் கண்கள் சுருங்கின. அந்த வீடே ஆதாரமற்று அவளோடு சேர்ந்து அதல பாதாளத்தில் விழுவது போன்ற அல்லாடல்...
இதைப் புரியாமல், சரோசா, வேண்டா வெறுப்பாய் நின்றாள். ஸ்பெஷல் சாராயம், பிடிச் சாம்பலாய் போனதால், அண்ணாத்தை கோபப்பட்டதாக தோஸ்துகள் சொன்னார்கள். ஆகையால் காச்சல், மீண்டும் பக்குவப்பட்ட அதாவது பழிபாவத்தைப் பற்றிக் கவலைப்படாத கரங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அண்ணாத்தையும் தனக்கு எதிராக 'தாம் தூம்' என்று குதித்த அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனரை மாற்றி விட்டதாகவும் கேள்வி. இந்தச் சமயத்தில் சரக்கு எடுக்கப் போய், அண்ணாத்தைக்கு, தன் மீது இருக்கக்கூடிய சந்தேகத்தைப் போக்க வேண்டும். வேறு வழியில்லை.
"சரி, குயிக்கா போயிட்டு குயிக்கா வாறேண்ணே.''
சரோசா, தர்மபத்தினியை நோட்டம் போட்டபடியே, வெளியே வந்தாள். பந்தலுக்குள் கோவிந்து, இடுப்பில் வெறும் டவுசரோடும், கையில் கிளாசோடும் கிடந்தான். அவன் காலில் சாய்ந்து கிடந்த தூக்குப் பையை எடுத்துக் கொண்டு சரோசா புறப்பட்டாள்.

