Chapter 31
அந்த ஆட்டோ அதுபாட்டுக்கு ஓடியது. முனியம்மா தனது அண்ணன் - போலீசிடம் சரோசாவைப் பற்றி தனக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொண்டே வந்தாள். “பாவமண்ணா... என்ன மாதிரி கேஷுவல். அடுத்தவங்க கஷ்டப்பட பொறுக்காதவள். இவளோட குடும்ப நிலமை எனக்குத் தெரியும். கொலை செய்யக்கூடியவள் இல்லண்ணா. அவளோட முகத்தை உத்துப்பாரு, உனக்கே தெரியும்!”
‘அதனாலதான் சொல்றேன், நீ இதுல தலையிடாதேன்னு. அதோட, பெரிய பெரிய ஆளுங்க கிட்ட இருந்து போன் மேல போனா வருது. இவள் ஸ்டேஷன்ல கொண்டு ஒப்படைக்கதுதான் என்னோட வேலை."
சரோசா, அவர்கள் பேசுவதை காதில் வாங்காமலும், கண்ணில் விழும்படி ஏறெடுத்துப் பார்க்காமலும் ஆட்டோவுக்குப் பின்புறமாக இரண்டு கைகளையும் நீட்டியபடி அப்படியே கிடந்தாள். இதற்குள் அந்த ஆட்டோ கத்திக்கொண்டும், கதறிக்கொண்டும், மூன்று கிலோ மீட்டர் வரை ஓடிவிட்டது. இடது பக்க ஒரு மாடிக் கட்டிடத்தைப் பார்த்த முனியம்மா, அதை அந்த ஆட்டோ சிறிது கடந்த பிறகு, ஆட்டோவை நிறுத்தும்படி டிரைவரின் சட்டையைப் பிடித்து இழுத்தாள். அது நின்றதும், போலீஸ் அண்ணனிடம் முறையிட்டாள் : “என்னைப்பத்தி உங்களுக்குத் தெரியுமுண்; தலையை அடகு வச்சாவது சொல்லுற சொல்லைக் காப்பாத்துறவள். இந்தப் பொண்ணு அதோ அந்த வீட்டில் ஐநூறு ரூபாய் கடன் வாங்குனாள். இவளுக்கு நான்தான் ஜாமீன் போட்டேன். ஜெயிலுக்குப் போற இவளோட கடன கொஞ்சம் கொஞ்சமா அடைக்கேன்னு கடங்காரம்மாகிட்டே சொல்லணும். அதுக்கு இந்தப் பொண்ணு என்னோட வரணும். வேனுமுன்னா நீயும் வா, அஞ்சே நிமிஷம்தான். ஒருவேளை அந்த அம்மா இல்லாட்டி ரெண்டே ரெண்டு நிமிஷம்தான். குளிச்சிட்டுகிளிச்சிட்டு இருந்தால் பத்து நிமிஷம்; ஒன் தங்கச்சி மேல நம்பிக்கை இருந்தா விடு."
அந்த போலீஸ்காரர் பதில் பேச முடியாமல் வாய் மட்டும் திறந்து காட்டினார். முனியம்மாவைப் பற்றித் தெரியும். அவளால் தனது பதவிக்கு ஆபத்து ஏற்படாது. ஆனால், இவள் அவளைத் தட்டிவிட்டுப் போயிட்டா?
"நான் பிள்ளை குட்டிக்காரன் தங்கச்சி. நீ ஆயிரம் சொல்லு கேப்பேன், ஆனா. இந்த விஷயத்துல என் போக்குல விட்டுடு. யூனிபாரம் போயிட்டா கோமணம் கூட கெடையாது. உன் நாத்தானரும் கொழுந்தைகளும் இன்னிக்குக்கூட சமைக்க அரிசி இல்லாம தவிக்குதுங்க. பேருதான் போலீஸ்; தனக்குப் போகத்தான் தானம்.”
முனியம்மா, இடுப்பில் தொங்கிய சுருக்குப் பையை, அவருக்குக் காட்டாமலே மாராப்பு சேலைப் பக்கம் கொண்டு போனாள். வயிற்றின் இரண்டு பக்கமாக இரண்டு கைகளையும் உள்ளே விட்டாள். அந்த சுருக்குப் பையைத் திறந்து ஒரு நோட்டை எடுத்துக்கொண்டு அந்தப் பையின் வாயை அடைத்துவிட்டு, மீண்டும் அதை இடுப்பில் சொருனாள். வலது கையை வெளியே கொண்டு வந்து, அது பிடித்திருந்த ஒரு நூறு ரூபாய் நோட்டை அண்ணனின் பைக்குள் அவரது கண்ணில் படும்படியாகக் காட்டினாள். அவர் அதை பத்து ரூபாய் நோட்டு என்று நினைத்து விடக்கூடாதே என்பதற்காக 'வரவர நூறு ரூபாய் நோட்டுங்க கூட சின்னதா இருக்கு' என்றாள். பிறகு ஆட்டோவிலிருந்து கீழே குதித்து சரோசாவைக் கையைப் பிடித்துக் கீழே இழுத்தாள். அவள் இழுத்த இழுப்பிற்கு சரோசாவும் பொம்மை போல தரைக்கு வந்தாள்.
போலீஸ்காரரும் இறங்கினார். வீடு பக்கத்தில்தான் இருக்கு; ரூபாயோ பையில; ரெண்டு எட்டு நடந்து காலைல உதைபட்ட மனைவியோட கன்னத்தை அந்த நோட்டால் தடவலாமா என்று யோசித்தார். இந்தச் சாக்கில் சரோசா ஓடிவிடக்கூடாதே என்று ஒரு பயம். ஆகையால் முன்னால் நடந்த அந்தப் பெண்களின் பின்னால் இவரும் நடந்தார்.
சரோசா, தன் கையைப் பிடித்திருக்கும் முனியம்மாவைத் தட்டி விட்டுவிட்டு ஓடினால், அவளைத் தாவிப் பிடிப்பதற்குத் தயாராக போலீஸ்காரர் பக்கவாட்டில் நடந்தார். ஒருவேளை, தங்கச்சியும் இதற்கு உடந்தையாக இருக்கலாமோ என்று அவளையும் பார்த்தார். இன்சூரன்ஸ் ஏஜெண்ட் 'எல்லார் உயிருக்கும் ஆபத்து' என்று நினைக்கிற மாதிரி, 'என் புத்தியும் போலீஸ் புத்தியிலிருந்து மாற மாட்டேங்கே' என்று தனக்குள்ளே பேசிக் கொண்டார்.
இதற்குள், சரோசா நடந்த நடையும், பார்த்த பார்வையும் அவள் விழுந்தாலும் விழுவாளே தவிர, ஓடமாட்டாள் என்று அவரது அனுபவ அறிவு உணர்த்தியது. அந்த இரண்டு பெண்களும் அந்தத் தெருமுனையை திரும்பியபோது அது ஒரு முட்டுச்சந்து என்பதாலும், இவருக்குப் பசி வயிற்றை முட்டியதாலும், "சீக்கிரமா வந்துடு தங்கச்சி, சீக்கிரமா கூட்டிட்டு வந்துடு தங்கச்சி” என்று சொல்லியபடியே ஆட்டோ பக்கம் வந்தார்.
இதற்குள், முனியம்மா சரோசாவை கூட்டிக்கொண்டு ஒரு கட்டிடத்தின் மாடிப்படிகளில் ஏறினாள்.

