Chapter 33

அந்த ஆட்டோ போலீஸ் வளாகத்திற்குள் பாய்ந்தது. ஆட்டோவிற்குள் சரோசாவிடம் கரிசனம் காட்டிய அந்த போலீஸ்காரர், இப்போது லத்திக் கம்பாலேயே சரோசாவை நெட்டித் தள்ளி கீழே இறக்கினார். கூட வரப்போன முனியம்மாவை அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டார்.

சரோசா, அந்தப் போலீஸ்காரரோடு முதல் மாடிக்கு வந்தாள். இன்ஸ்பெக்டரின் அறைக்கு வெளியே அவளுக்கு வேண்டியவர்களும், வேண்டாத ஒருத்தியும் சுவரோடு சுவராய் நின்று கொண்டிருந்தார்கள். தலையை தொங்கப்போட்டு நின்றருக்குமணி, அவள் தோளைத் தட்டிக் கொடுக்கும் கோவிந்து, அவள் கையைப் பிடித்து வீட்டுக்குப் போகலாம் என்பது மாதிரி தன்பக்கம் இழுக்கும் ஆறுமுகப்பயல், பத்துப் பதினைந்து குடிசை வீடுகளுக்குச் சொந்தக்காரியான ஒரு கிழவி, எல்லாவற்றுக்கும் மேலாக தரையில் முட்டிக்கால்களை மேலே தூக்கி, முகத்தைக் கீழே வளைத்துக் கிடக்கும் நாயினா.

வீட்டுக்காரி, சரோசாவைப் பார்த்துக் கத்தினாள் : "பாவி, கெடுத்தியேடி. கொலைகாரிக்கு என் வீடுதானா கெடைக்கணும்? ஆமை புகுந்த வீடு மாதிரி என் வீட்டை ஆக்கிட்டியேடி. போலீஸ்காரங்க உன்னால என்னையும் பிடிச்சு வைக்கிறது என்னடி நியாயம்? உடனே போய் அந்தக் கொலைக்கும் வீட்டுக்காரம்மாவுக்கும் சம்பந்தம் இல்லேன்னு போலீஸ்ல போயிச் சொல்லுடி."

சரோசா, வீட்டுக்காரியை விநோதமாகப் பார்த்தாள். ருக்குவைப் பார்த்த போது பீறிட்ட அழுகை நாயினாவைப் பார்த்தபோது வெறும் ஒலி வடிவங்களாய் உருமின.

அதே போலீஸ் இருக்கையில் இன்ஸ்பெக்டர் முன்பு மாதிரியே உட்கார்ந்திருந்தார். மீசை மட்டும் கொஞ்சம் தடித்திருந்தது. அவர் அருகே பழைய கிரைம் சப்-இன்ஸ்பெக்டர்; இன்ஸ்பெக்டர் ஊதிக் கக்கிய புகையால் கண்ணீர்ப் புகை பிரயோகத்திற்கு ஆளானதுபோல், கண்ணெரிய உட்கார்ந்திருந்த சப், தனது எரிச்சலைக் காட்டுவதற்கு ஆள் தேடிக் கொண்டிருந்தார். கோபம் வந்தால், இவர் உதடுகளையே பற்கள் மாதிரி சில மடிப்புகளை ஏற்படுத்திக்கொண்டு, அவற்றை முன்பக்கமாகக் குவித்துக் கொள்கிறவர். இது 'கரும்பு மாமூல்' கான்ஸ்டபிளுக்குப் புரியும். ஆகையால் உள்ளே எட்டிப் பார்த்தவர் பின்வாங்கிக்கொண்டார்; சுவரோடு சுவராய் பதுங்கிக்கொண்டார். இந்தச் சமயத்தில்தான், சரோசா ஒப்பாரி போட்டாள். புகைத் தாக்குதலில் புகைந்துபோன சப்-இன்ஸ்பெக்டர் கத்தினார் : "இந்தாப்பா, ஒப்பாரி போடுறவள இழுத்துட்டு வா."

கரும்பு கான்ஸ்டபிள், சரோசாவை ஒரு கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து, அந்த அதிகார அறைக்குள் வந்ததும், அவள் முதுகில் வலது கையை ஊன்றி ஒரு தள்ளுத் தள்ளினார். இதனால் இன்ஸ்பெக்டர் மேல் முட்டி மோதப்போன சரோசா, தன்னை அறியாமலேயே மேஜையில் கையூன்றி, தன்னை சரிப்படுத்திக் கொண்டபோது, வெளியே ருக்கு, வீட்டுக்காரி முகங்களும், இந்த இரண்டிற்கும் இடையே கோவிந்து முகமும் உடம்புகளைக் காட்டாமல் மூன்று தலைகளையும், ஒரு உடம்பின் தலைகளாகக் காட்டின. சப்-இன்ஸ்பெக்டர், சரோசாவைப் பார்த்து கேலியும் கிண்டலுமாய் கேட்டபோது, இன்ஸ்பெக்டர் அவளைப் பார்க்காதது போல் எங்கேயோ பார்த்து புகைவிட்டார்.

"வாம்மா, வா. நீ அங்க சுற்றி, இங்க சுற்றி, எப்படியும் எங்கப் பக்கம் வருவேன்னு தெரியும். ஒன் மூஞ்சிக்கு கவருமென்ட் வேல வேற கேக்குதா? சொல்லுடி, துரைய நீ மட்டுமா கொன்னியா, இல்ல ஆட்கள வச்சிக் கொன்னியா? ஸார்! இவௗயெல்லாம் வெளியில விட்டுருக்கப்பிடாதுன்னு நான் அப்பவே சொன்னது, சரியாப் போச்சுது பாருங்கோ சார்."

சரோசா, எதுவும் பேசாமல், நின்று கொண்டே செத்துப் போனவள் போல் தோன்றினாள். இன்ஸ்பெக்டர், துண்டு சிகரெட்டை ஆஷ்டிரேயில் வைத்து அழுத்திவிட்டு, இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்தார். கோபம் வந்தால் அவர் செய்கிற முதல் காரியம் இதுதான். செயின்-ஸ்மோக்கிங். 'என்ன நினைச்சிருக்கான் இந்த சப்-இன்ஸ்பெக்டர்? அப்போ ஒரு பேச்சு, இப்போ ஒரு பேச்சு. பிரமோஷன்ல போகட்டும்... அதுக்காக பேச்சை மாத்துறதா? இவள விடும்படி சொன்னதே இவன்தானே?"

இன்ஸ்பெக்டருக்கு, அந்த சப்-இன்ஸ்பெக்டர் மேல் கோபம் கூடியதால், சரோசா மீதிருந்த கோபம் குறைந்தது. ஆனாலும் அவள் போட்ட அந்த பெட்டிஷனை நினைத்துக் கொண்டார். 'எவ்வளவு தைரியம் இருந்தா கமிஷனருக்கு கம்ப்ளைண்ட் எழுதுவாள்? அதுவும் ஏ.சி-யா பிரமோஷன் வரப்போற சமயத்துல. டெப்டி கமிஷனருக்கு ஒரு போன் போட்டு, அவர ‘விடுவிடு'ன்னு விடலாமா? ‘நீங்க அப்ப விடச் சொன்னீங்க... இப்போ அப்படிச் சொல்ல முடியுமா'ன்னு சவால் விடலாமா?

"இந்தாப்பா, இவள அந்த ரூமுக்குள்ள கொண்டு போ; விசாரிக்கிறபடி விசாரிச்சா சரியாயிடுவாள்."

சரோசாவை, அங்கிருந்து உடம்பையும், உள்ளத்தையும் விசாரிக்கிற ஒரு நீண்ட, நெடிய இருண்ட அறைக்குள் இட்டுப் போவதற்காக இரண்டு போலீஸ்காரர்கள் வந்தபோது, நான்கைந்து பெண்கள் வாசலில் சிறிது நேரம் நிதானித்து நின்றுவிட்டு, பிறகு உள்ளே வந்தார்கள். அவர்களில் ஒருத்தி கறுப்புக் கோட்டுப் போட்டிருந்தாள். சரோசாவிடம் 'குசலம்' விசாரிப்பதற்காக இருக்கையை விட்டு எழப்போன இன்ஸ்பெக்டர், இப்போது அங்கே வந்தவர்களுக்காக மரியாதையின் பொருட்டு, அப்படி எழுந்ததுபோல் ஒரு சிரிப்புச் சிரித்தபடியே, "வாங்கம்மா... வாங்க" என்று சொன்னபடியே உட்கார்ந்தார். பிறகு ஐந்தாறு விநாடி இடைவெளி விட்டுவிட்டு, "இந்தாப்பா, இவள வெளியில கொண்டு போய் நிறுத்து" என்றார். உடனே, அங்கு வந்த பெண்களில் தலைவி மாதிரியான அந்தம்மா, உட்காரப்போன நாற்காலியைப் பிடித்துக்கொண்டு நிதானமாகச் சொன்னார்:

"இந்த சரோசாவும் இங்கேயே நிற்கட்டும் சார்... நாங்க வந்ததே இவளுக்காகத்தான்."

இன்ஸ்பெக்டருக்கு நெஞ்சுக்குள் ஏதோ ஒரு இடத்தில் இடித்தது. அந்த வேகத்தில் ஒரு சிகரெட்டை எடுக்கப் போனார். பிறகு எடுத்ததைக் கீழே போட்டுவிட்டு எடுத்த எடுப்பிலேயே முந்திக் கொண்டார்:

"இந்த மாதிரி கொலைகாரிங்களுக்கு ஒங்கள மாதிரி ஆட்கள் வரப்படாதும்மா."

நாற்காலியில் லேசாய் சாய்ந்து உட்கார்ந்திருந்த அந்தம்மா, இன்ஸ்பெக்டரின் இருக்கைக்கு எதிரான நாற்காலியின் முனைக்குத் தன்னை நகர்த்திக் கொண்டு, அவரை, உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வை தாளமாட்டாது, அவர் அல்லாடினார். நியாயம் கேட்க வரும் வக்கீல்களைக்கூட அடித்துப் பிடித்து உள்ளே போட்டவர்தான். காவலில் இருப்பவர்களைப் பார்ப்பதற்காக நிராயுதபாணிகளாக - அதுவும் வெறுங்கையோடு வருகிற சொந்தக்காரர்களைக் கூட குற்றவாளிகளுக்கு உடந்தை என்று உள்ளே தள்ளியவர்தான். ஆனால், இந்தம்மாவை அப்படிச் செய்ய முடியாது. தொலைக்காட்சியை சாட்சியாக வைத்து, அமைச்சர்களை கதாநாயகர்களாக்கி, பெண்களுக்கு ஏதோ பாடுபடுவது போல பாவலா செய்து, அரசாங்க மானியத்தை வாங்கித் தின்னும் டைப் அல்ல இவர். மந்திரிகளையும், பெரிய மனிதர்களையும் கைக்குள் போட்டு, ஏற்கனவே குழந்தை பெற்று, கணவன்களோடு வாழும் பெண்களுக்கு மேடையில் அதே கணவன்களோடு போலிக் கல்யாணம் செய்து வைக்கும் அமைப்பும் அல்ல, இவரது அமைப்பு. ஓசைப்படாமல் ஆங்காங்கே உதவி செய்கிறவர்கள். இவர்கள் எப்போதாவது ஓசை எழுப்பினால், அதை துப்பாக்கி ஓசையாலும் தடுக்க முடியாது என்பது இன்ஸ்பெக்டருக்குத் தெரியும். ஆகையால், "ஒன் மினிட் மேடம்" என்று சொல்லிவிட்டு யாருக்கோ அவசர அவசரமாய் டெலிபோன் செய்வதுபோல், டயலில் ஒன்பது எண்களைச் சுழற்றினார். பிறகு லைன் கிடைக்காதவர்போல் முகத்தைச் சுளித்துக்கொண்டே அந்தம்மாவைப் பார்த்தபோது, அவள், நேரிடையாகவே கேட்டாள் :

"இந்தப் பெண்ணோட பேக்ரவுண்ட் எனக்கு நல்லாவே தெரியும் சார். பாவப்பட்டவள். இவளோட அண்ணாத்தே, அதான் ஒங்களுக்கும் தெரிஞ்ச பெரிய மனுஷன் இருக்காரே..."

இதற்குள் எஞ்சிய நான்கு பெண்களில் வாய் தூக்கலான ஒருத்தி இடைமறித்தாள்:

"எதுக்காக, ஒரு தாதாவுக்கு 'ரே' போடுறீங்க?”

"நீ சும்மா இரும்மா. அந்தப் பெரிய மனுஷன் இந்தப் பெண்ணை, ராத்திரியோட ராத்திரியா வேட்டையாடி இருக்கான். எப்படியோ தப்பித்து இந்தப் பொண்ணு, கமிஷனருக்குப் புகார் செய்திருக்காள். ஒங்களுக்கு நேரடியாய் எழுதாதது தப்புத்தான். அதுக்காக இவ்வளவு பெரிய குற்றத்த அவள்மேல் சுமத்தப்படாது. ஒங்களுக்கும் பிள்ளகுட்டி இருக்கு."

இன்ஸ்பெக்டருக்கு, இப்போதும் ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும்போல் இருந்தது. அதை, அந்தம்மா ஆட்சேபிக்கப் 19 போவதில்லை; ஆனாலும் ஒரு தயக்கம். இந்தச் சமயம் பார்த்து நழுவப் போன கிரைம் சப்-இன்ஸ்பெக்டரை ‘சிட்-டவுன்' என்றார். பிறகு பட்டும், படாமலும் பார்த்தபடியே, நீதிமன்றங்களில் கூறப்படுமே கசங்கிப்போன வார்த்தை, "சொல்வது அனைத்தும் உண்மை, உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை” என்ற தொனியில் பேசினார் :

"நீங்க நினைக்கிறது மாதிரி இல்லம்மா. இந்தப் பொண்ணோட புகார் கமிஷனர் கிட்டேயிருந்து என்கிட்டே என்கொயரிக்கு வந்தது. நான் விசாரிக்கப் போனேன். அப்போதுதான் ஒரு அக்கிரமம் தெரிஞ்சுது. துரை என்கிற கள்ளச்சாராயக் காரனோட பிணம், ஒரு கோணிப்பையில் மகாபலிபுரம் கடலுல மிதந்ததுக்கும், இவளுக்கும் சம்பந்தம் இருக்குது. நாங்காளா தேடாமல் தானாக கிடச்ச கேஸ்."

"தொரண்ணா, அய்யோ... தொரண்ணா..."

“ஏய், சும்மா இருடி..."

இன்ஸ்பெக்டர் அப்படிக் கத்திவிட்டு, முகம் குன்றிய அந்தம்மாவை, குற்ற உணர்வோடு பார்த்தார். நீண்டகாலப் பழக்கம் அப்படிப் பேச வைத்து விட்டது. அதைச் சரிக்கட்டும் வகையில், "இந்தாப்பா, ஏழு கப் டீ வாங்கிட்டு வா” என்று சத்தம் போட்டார். வெளியே நிற்கும் எந்த சிபாரிசுக்காரரின் காதுலயாவது விழுந்து அவன் வாங்கிக்கிட்டு வருவான் என்கிற நம்பிக்கை. பிறகு அவர், கதை சொல்வது போல் சொன்னார்:

"நான் நேரடியா விசாரிக்கலதான். எங்கம்மா இந்த செக்யூரிட்டி காலத்துல டைம் இருக்குது? ஊருக்கு இளைச்சவன் இன்ஸ்பெக்டர். சரி அந்தக் கதையை விடுங்க. இவரு கிரைம் சப்-இன்ஸ்பெக்டர். அவரை விசாரிக்கச் சொன்னேன். இவர் விசாரணையில் இந்த சரோசா கள்ளச் சாராயம் கடத்தினவள் என்கிறதும், இவளுக்கும் கொலையான துரைக்கும் ஏதோ தகராறு ஏற்பட்டு, இரண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்கன்னும் தெரிய வந்தது. ஒருநாள், நைட்ல இவள், நாயினா வெளியில கிடக்கிறானே ஒரு கிழவன், அவனோட, துரை வீட்டுக்குப் போயிருக்காள். அவனைக் கண்டபடி திட்டியிருக்காள். துரை பொண்டாட்டி இதைத் தட்டிக் கேட்டிருக்காள். உடனே இவள், அவளையும் பிடிபிடின்னு பிடிச்சிருக்காள். அந்தம்மா, கொஞ்சம் நாகரிகமானவள். கதவைப் பூட்டிக்கிட்டாள். அன்னிக்கி ராத்திரியே கொலை நடந்திருக்கு. சூழ்நிலை சாட்சியங்கள் இவளைத்தான் கொலைகாரின்னு சுட்டிக்காட்டுது."

இன்ஸ்பெக்டர், தான் பேசியது சரியா என்பதுபோல், சப்-இன்ஸ்பெக்டரை கண்ணசைத்துப் பார்த்தார். அவரும் தலையாட்டினார். அப்போது சிறிது நிசப்தம். அதைக் கலைத்து தேநீர் கோப்பைகளின் சலசலப்புக்களில், அந்த அம்மாவுடன் வந்த பெண்கள், சுவரில் சாய்ந்தபடி, சுவாசிப்பதில் மட்டுமே உயிரை வைத்திருப்பது போல் தோன்றிய சரோசாவையே பார்த்தார்கள். அந்த அம்மாவும் தம்மிடம் நீட்டப்பட்ட தேநீர் கோப்பையை வாங்கிக் கொண்டாள். ஆனால், வாயருகே கொண்டு போகவில்லை. சரோசா குற்றமற்றவள் என்று நம்பிக்கை ஏற்பட்டாலும், அவள் கண்ணீரும், கம்பலையுமாய், அவசர அவசரமாய் தன்னிடம் கூறிய தகவல்களை மீண்டும் சரிபார்க்க வேண்டும் போல் இருந்தது. சரோசாவையே இன்ஸ்பெக்டர் முன்னிலையில் பேசச் சொல்லலாமா, அதற்கு அவர் சம்மதிப்பாரா என்று அந்தம்மாள் யோசித்தாள். இந்த யோசனை வேளையையே தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்வது என இன்ஸ்பெக்டர் உபதேசிதார்:

"பேசாமல் வரதட்சணைக் கொடுமை, விவாகரத்து, விதவைப் பிரச்சினை, பெண் தொழிலாளர் சம்பளம் இந்த மாதிரியான பிரச்சினைகளை மட்டும் எடுத்துக்கங்கோ மேடம். சேரிப் பொண்ணுங்கக் கிட்ட வராதீங்கோ. இவளுக ஒங்களையும் பார்ப்பாளுங்க; எங்களையும் பார்ப்பாளுங்க."

"நீங்க சொல்றது, 'ராமன் கெட்டதும் பெண்ணாலே, ராவணன் கெட்டதும் பெண்ணால' என்கிறது மாதிரி ஒரு தப்பான அணுகுமுறை.”

“அப்படியில்லம்மா! கேளுங்க, இவளப்பத்தி... ஒங்களவிட எங்களுக்கு நல்லாத் தெரியும். அசல் கேடி. அதனாலதான் சொல்லுறேன். நீங்க இப்போ எந்த அபலைப் பெண்ணுக்காவது உதவி செய்யணுமுன்னா அது துரை பெண்டாட்டிக்குத்தான். பாவம் படுத்த படுக்கையா கிடக்காள்."

இதற்குள் அந்தம்மாவுடன் வந்த பெண்கள் மத்தியில் லேசான சிரிப்பு. இன்ஸ்பெக்டர் அப்படிச் சொன்னதும் அவர்களில் ஒருத்தி “யாரோடயாம்” என்று தோழிகளிடம் கிசுகிசுப்பாய் சொல்லி விட்டாள். இந்தச் சிரிப்பு பெரிதானதும், அந்தம்மா அப்போதைய சூழலை நினைவுபடுத்துவது போல் அவர்களை எரிச்சலோடு பார்த்தாள். அந்தச் சிரிப்பு அண்ணாத்தேக்கு துணைபோன தன்னைப் பற்றிய சிரிப்பாய் இருக்கும் என்று உடனடியாக நினைத்துக்கொண்ட இன்ஸ்பெக்டருக்கு, இப்போது கோபம் வந்தது. அந்த அம்மாவிடம் வெட்டொன்று துண்டு இரண்டு என்ற தோரணையோடு பேசினார் :

"அப்போ போயிட்டு வாரீங்களா? செய்த கொலையை மறைக்கிறதுக்குத்தான், இந்த சரோசா, கமிஷனருக்கு பெட்டிஷன் போட்டிருக்காள். இவள் செட்டுல எவனோ ஒருத்தன், எவரையோ வச்சு எழுதிக் கொடுத்த புகார அனுப்பியிருக்காள். துரையை கொன்னது இவள்தான். அதுக்கு முன்னால, இளங்கோன்னு, ஒரு அப்பாவி இளைஞனை கிட்டத்தட்ட உயிர் போகிற அளவுக்கு அடித்துப் போட்டிருக்கிறாள். இதுவும் விசாரணையில தெரிய வந்திருக்கு. அதனால, இவள்தான் துரையை கொன்னாள் என்பதை யாராலயும் மறுக்க முடியாது."

"ஆனா, என்னால மறுக்க முடியும் சார்"

அங்கிருந்தவர்களும், இன்ஸ்பெக்டரும் குரல் வந்த திசையை நோக்கியபோது, அவர்கள் கண்களில் முட்டுவதுபோல் கான்ஸ்டபிள் திருமலையப்பன் உள்ளே வந்தார். இன்ஸ்பெக்டரை அடிக்கப்போவது போல் ஒரு சல்யூட் போட்டார். பிறகு, தண்ணீர் கொட்டுவது போல் ஒப்பித்தார்:

"துரை கொலை செய்யப்பட்டதாய் கூறப்படும் ராத்திரி, எனக்கு நைட்டுல பீச்சுல பீட்டு சார். இந்த சரோசாவ, ஐந்தாறு ரவுடிங்க தொரத்தி வந்தாங்க. நான்தான் ஓடிப்போய் இவளையும், இவள் நாயினாவையும் காப்பாத்தினேன். ரெண்டு பேரையும், என் பாதுகாப்புல வச்சிட்டு, மறுநாள் காலையில பூக்காரி ருக்குமணி வீட்டுல விட்டுட்டு வந்தேன்.”

இன்ஸ்பெக்டர், திகைத்துப் போனபோது கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் தன்னையும், அறியாமலேயே கத்தினார்:

"ஆக நீ ஒரு கொலைகாரிக்கு புகலிடம் கொடுத்திருக்கே. ஒன்னை சர்வீஸிலிருந்து சஸ்பெண்ட் செய்து, ஒன் யூனிபாரத்தை நானே கழட்டுறேன் பார்.”

திருமலையப்பன் வீறாப்பாய் நின்றார். இதற்குள் கறுப்பு அங்கி போட்ட பெண் எழுந்தாள். அத்தனை சட்டங்களையும் வாய்க்குள் வைத்திருப்பது போல் கன்னங்களை பலூன்கள் மாதிரி உப்பவைத்தாள். பிறகு சராமாரியாகப் பேசினாள் :

"இந்தியன் பினல் கோட் சட்டத்தின்படி...”