Chapter 3

“அவள் எப்படி இருப்பாள்?”

"அழகாய் இருப்பாள்."

"இந்த வயசில உங்களுக்கு கிழவிகூட அழகாகத்தான் தெரியும். நாங்க அத கேக்கல... அங்க அடையாளம் எப்படி?"

"உருண்ட முகம்... லேசா ஒரு தூக்கலான பல்லு. கழுத்துல ஒரு மச்சம். தாவணி தொடாத பாவாடை.பேச்சுரவுடி மாதிரி.. ஆனா முகம் ஜென்டில்."

“கழுத்துப் பக்கம் ஒரு வெட்டு இருக்குமா?”

"ஆமா சார். ஆமா."

காவலர்கள், தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள் பரிபாஷையில்.

அந்த ஆட்டோ அலைமோதி ஓடியது. எதிரே வந்த ஒரு பாவாடை தாவணி இளம் பெண்ணைப் பார்த்து உறுமியபடி நின்றது. அவள் சிவப்புத் தொப்பிகளைப் பார்த்து ஒதுங்கியபோது, இளங்கோ, "இவள், இல்லை” என்றான். ஆட்டோ, அவளைக் கடந்து, ஒரு மல்டி-பிளாட் கட்டிடம் வழியாக வந்து, அங்கே நின்ற ஒரு பெண் குவியலின் முன் நின்றது. இளங்கோவை இறக்கி விட்டார்கள். அவன், அவர்களை ஒட்டுமொத்தமாகப் பார்த்துவிட்டு, "இல்லை இல்லை” என்று சொன்னபடியே ஆட்டோவில் மீண்டும் ஏறிக் கொண்டான்.

அந்தப் பெண்கள், ஆட்டோவுக்குள் கால் கைகளை விரித்துப் போட்டுக் கொண்டு அடாவடியாகக் கிடந்த கான்ஸ்டபிள்களைப் பார்த்தார்கள். டயர்கள் வெடிக்கும் படியாய், அவர்கள் உடம்புகளும் வெடிப்பது போல் தோன்றின. ஆனால் முன் இருக்கையிலோ அன்றையப் பிழைப்பு போலீஸ்தனமாகப் போய்விட்டதே என்று அம்பேலாய் உட்கார்ந்திருந்த ஒடிசல் டிரைவரை, கோபங் கோபமாய் பார்த்து, அதே பார்வையை பரிதாபமாய் முடித்தார்கள். இதற்குள் ஆட்டோவின் பின் இருக்கையில் இடம் கிடைக்காமல், டிரைவரின் இருக்கையை பார்த்துப் போன இளங்கோவை கோபமாகப் பார்த்தார்கள். அந்தப் பெண் குவியலில் ஒரு இளம் பெண்ணால் தாள முடியவில்லை. தளதளப்பான உடம்புக்காரியான அவள் தகராறுக் குரலில் கேட்டாள்:

"நாங்க என்ன ஆடா மாடா? நீ பாட்டுக்கு இறங்றே... நீபாட்டுக்கு பார்க்கிற? ஒரு மரியாதிக்குக் கூட இன்னுதுக்காகப் பார்த்தேன்னு சொல்லப்படாதா? இன்னாயா நாயம்? கூலிக்காரிங்கன்னா திருடிங்கனு நெனைப்பா? இந்த அடாவுடிக் காலம் ரொம்ப நாளைக்கு போகாதையா... சாரத்த கழற்றுரது மாதிரி இந்த மட்டுமரியாதி இல்லாத அம்போக்குத்தனனத்த கழற்றுர காலமும் வருமுய்யா."

இளங்கோ... ‘பே' என்று விழித்த போது, ஒரு போலீஸ்காரர்அவனை உள்ளே பிடித்து இழுத்துப் போட்டுவிட்டு, டிரைவரைப் பார்த்து கையை ஆட்டினார்.

ஆட்டோ பறந்தது.

பிரதானச் சாலை, பிரதானச் சாலையில் இரண்டாவது தெரு, இரண்டாவது தெருவின் முதலாவது குறுக்குத் தெரு என்பது போன்ற புரியாத பெயர் கொண்ட சாலைகள் வழியாய் ஓடி ஓடி, இறுதியில், சந்தடி மிக்க ஒரு தெருவில் போய் நின்றது, அந்தக் காவலர்கள் இளங்கோவுடன் சேர்ந்து இறங்கினார்கள். பக்கத்தில் ஒரு தேநீர் கடை... அதன் வாசலில் போய் நின்று கொண்டு அங்கே இருந்தவர்களை ஒரே பார்வையாய்ப் பார்த்து மிரட்டுவது போல் கேட்டார்கள் :

“இந்தப் பக்கமா எவளாவது ஒருத்தி கோணி மூட்டையோட போனாளா? சொல்லுங்கப்பா... துரமாரே."

எல்லோரும் முகங்களை கேளாக் காதுகளோடு, திரும்பிக் கொண்டபோது, ஒரே ஒரு ஒல்லி மனிதர், 'ஒடக்கு'ப் போன்ற ஜிப்பாக்காரர் எதிர்க் கேள்வி போட்டார்:

“கையில் இரும்புத்தடி வச்சிருந்தவளா? கழுத்துல மச்சமா? முதுகில கோணி மூட்டையா?”

"ஆமா ஆமா...”

"இந்தக் கடையில இஸ்ட்ராங்கா டீ போடச் சொல்லி குடிச்சிட்டு, இப்போதான் அதோ அந்த இரும்புக் கடைக்குள்ள போனாள்."

காவலர்களில் ஒருவர், கடைக்காரரை அதட்டினார் :

“ஏண்டா டேய், உன் கடையிலேயே டீ குடிச்சிட்டுப் போயிருக்காள்; நீ பேமானி மாதிரி பேசாம இருக்கே... கடைய இழுத்து மூடணுமா?”

அவர்களின் வேகத்தைப் பார்த்து உற்சாகப்பட்ட இளங்கோ,சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு, பிறகு அவர்கள், பேசாமல் நிற்பதைப் பார்த்து விட்டு அவசர அவசரமாய் பேசினான்:

"வாங்க போகலாம் சார். அந்த கடைக்குள் போய் அவளைப் பிடிக்கலாம் சார்."

"அவசரப்படாத கண்ணு; எங்களுக்குத் தெரியும்.'

அவன் எவ்வளவுக்கெவ்வளவு வேகப்பட்டானோ, போலீஸ்காரர்கள் அவ்வளவுக் கவ்வளவு நிதானப்பட்டார்கள். நேற்று முழுவதும் ஒரு விஐபிக்கு 'பாரா' போனதால், பட்டினி கிடக்கும் வயிறுகளை, ரொட்டிகளாலும், மசால் வடைகளாலும் நிரப்பி விட்டு, இளங்கோவை அர்த்தத்தோடு பார்த்தார்கள். அவன் பைக்குள் இருந்ததை தேனீர் கடைக்காரரின் கைக்குள் வைத்துவிட்டு, அவர்களை அவசர அவசரமாய் பார்த்தபோது, ஒரு போலீஸ்காரர் அந்த இரும்புக் கடையை நோக்கி நின்ற ஆட்டோவில் துணி கட்டப்பட்ட மீட்டரை துகிலுரிந்து கொண்டிருந்த டிரைவருக்கு ஆணையிட்டார்:

"இந்தாப்பா... வண்டிய திருப்பு.''

இளங்கோ, பதறியடித்துச் சொன்னான் :

“சார்... சார்... அந்த இரும்புக் கடையில் போய்...”

அவளை எப்போ எப்படி மடக்கணும்னு எங்களுக்குத் தெரியும். ஒரு பொம்மனாட்டிய மடக்கத் தெரியல... பெரிசா பேசற பாரு. எதுக்கும் சாயங்காலமா ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கம்ப்ளைன்ட் கொடு. நீங்க கற்பழிக்கப் போனதா அவள், எதிர் புகார்கூட கொடுப்பாள். நீங்க அதுக்கும் தயாராய் இருக்கணும். ஓகே.. ஈவினிங் வாங்க. ஆட்டோ சார்ஜ்க்கு டிரைவர் கிட்ட காசு கொடுத்திடறீங்களா?"

ஆட்டோ டிரைவர் இளங்கோவை 'பொருள்'படப் பார்த்தான். இளங்கோவும், இவனுக்கு நான் எதுக்குக் காசு கொடுக்கணும் என்று சொல்லப் போனான். பிறகு 'கற்பழிப்பு, பலாத்காரம்' போன்ற பயங்கரவாத வார்த்தைகளை வீசிப்போட்ட காவலர்கள் உருட்டிய கண்களையும் பார்த்தான். ஓசைப்படாமல் பேண்ட் பைக்குள் துழாவி மூன்று பத்து ரூபாய் நோட்டுகளை வலதுகையின் முகப்பிற்ழக்கு கொண்டு வந்து, டிரைவரிடம் நீட்டப் போனபோது, ஒரு காவலர் அதைப் பறித்துக் கொண்டார். உடனடியாக அந்த ஆட்டோ, இளங்கோ இல்லாமலே இரும்புக் கடைக்கு எதிர்த் திசையில், அந்தக் கடைக்குப் பயந்து ஓடுவது போல் ஓடியது.

தேநீர் கடைக்குள் இருந்த அந்த ஒல்லி ஜிப்பாக்காரர் இப்போது உரக்கப் பேசினார்:

"சூரப்புலிங்க மாதிரி நம்மள மிரட்டுற மாதிரி அதட்டினாங்க. ஆனால், அந்தப் பொண்ணு அதோ அந்த 'இரும்பு' கடைக்குள்ளே போயிட்டான்னு தெரிஞ்சதும் சப்புன்னு அடங்கிட்டாங்க. ஏழைங்க கிட்ட நாகப்பாம்பா சீறுறது; இருக்கப்பட்டவங்கக் கிட்ட பெட்டிப் பாம்பா அடங்கறது. இதுதான் போலீஸ்ன்னு ஆகிப்போச்சு."

வேறு மாதிரியான சந்தர்ப்பங்களில் அந்தப் பேச்சை ரசித்துக் கேட்கும் இளங்கோ, இப்போது தலை குனிந்தபடியே வீட்டுப் பக்கமாக நடந்தான். அவள் வேறு வழியாய் போயிருப்பாள் என்று நெஞ்சுக்குப் பொய் சாட்சி சொல்லிவிட்டு வீட்டைப் பார்த்து நடந்தான். வீட்டுக்கும் போய் விட்டான்.

கிராமத்தில் நாட்டாண்மை குடும்பத்தில் பிறந்த அம்மாவின் ஆதிக்க ரத்தம் இப்போது அழுத்தமாகி, அவனுக்கு திட்டு வாங்கிக் கொடுத்தது.

"ஏண்டா, ஒரு சின்னப் பொண்ணுகிட்ட அடிவாங்கிகிட்டு வந்து நிக்கிறியே... இந்த ஒடம்ப வச்சிக்கிட்டு என்னடா செய்யப்போற? எங்கடா போற?”

இளங்கோ, ஒரு வைராக்கியமாய் தெருவில் நடந்தான்.