Chapter 4
பல்லவ பஸ்களின் முன்னால் விழப்போகிறவன்போல் குவிந்து நடந்து, மல்லாக்கச் சாயப்போகிறவன் போல் வளைந்து நடந்து, இளங்கோ எங்கெல்லாமோ நடந்தான். இறுதியில் தனக்கே தெரியாமல் கடற்கரை மண்ணில் கால் வைத்தான்.
இளங்கோ, அலையடித்த கடல் நீர் முன்னால் நின்றான். பிறகு, அங்கே உட்கார்ந்தபடி, கைகள் இரண்டையும் பின்னால் ஊன்றி, கால்களை அலை படும்படி முன்னால் நீட்டிக் கொண்டு பின்பக்கமாய் சாய்ந்தான்.
"இன்னா சாமி, ஆகாயம் இடிஞ்சுட்டா? பூமி நொறுங்கிட்டா? ஏன் இப்படி கீற? ஆமா... நான் கேள்விப்பட்டது நிசமா? ஒரு அறியாத பொண்ணு உன்ன கைவெச்சுட்டாளாமே?”
இளங்கோ, ஒரு பக்கமாய் திரும்பி, முனுசாமியைப் பார்த்தான். அவனுக்கு முப்பது வயதிருக்கும். அய்ம்பது வயதைக்காட்டும் ஒடிந்த குரல்; குச்சி மாதிரியான உடம்பு. இடுக்கிப் பார்க்கும் கண்கள்... இளங்கோ பக்கத்தில் அவன் உட்கார்ந்தான்.
"இன்னா சாமி! இன்னா நடந்தது சாமி? நான் இப்ப இன்னா செய்யணும்னு சொல்லு. அவள் தலையை வெட்டி ஒன் காலுல வைக்கணுமா? வெட்டிட்டு வான்னு சொல்லு, கட்டிட்டு வரேன்."
இளங்கோ, முனுசாமியை தெய்வத்தைப் பார்ப்பதுபோல் பார்த்தான். அவன் தோளிலே கைபோட்டான். மனதில் இருந்ததை கொட்டிப் போட்டான்.
"முனுசாமி! முனுசாமி! அவளை எப்படியும் பழிக்குப் பழி வாங்கியாகணும்; அப்பதான் எங்கம்மா மனசு குளுரும். என் மனது ஆறும்."
"கவலைய விடு சாரே, அத என் பொறுப்புல விடு. அவள் இருக்குற இடமும் எனிக்கி தெரியும்.
"தெரியுமுன்னா காட்டு. அவள் கழுத்த வெட்டி அம்மா காலுல வைக்கணும்."
“அப்படிச் சொல்லாத சார், போலீஸ் எதுக்கு இருக்கு? அவங்ககிட்ட ஒப்படைக்கணும்.”
"நீ வேற. போலீஸ் காலுல விழறத விட, அவள் காலுலயே விழுந்திடலாம்."
"சும்மா சொதப்பாத சாரே... போலீஸ்காரங்களுக்கு வெள்ளைச் சட்டகாரங்கன்னா, ஒதறல்; எப்பவுமே போலீஸ் காரங்ககிட்ட உத்தரவு போடற மாதிரி நீ பேசணும். படிச்சவன் அப்படிப் பேசினா, அவனுக பல்லக் காட்டுவானுக. என்ன மாதிரி எளியவங்க பேசினா பல்ல ஓடைப்பாங்க."
"சரி அவங்க கிடக்கட்டும், இப்போ அவள எப்படி பழிக்குப்பழி வாங்குறது? எழுந்திரு அவள பிடிக்கப் போகலாம்.''
“போகலாம்தான்... ஆனா அதுல ஒரு சிக்கலு. ஆமா சாரே... அவளோ, கள்ளச்சாராயக்காரி. சாராயம் குடிக்கிற சாக்குலதான் அவகிட்ட போக முடியும். ஒரு டம்ளர் ‘கஞ்சி” மூணு ரூபா. மூணு டம்ளர் போட்டாத்தான் பேசறது பத்தி யோசிப்பா.'
“கஞ்சின்னா என்னப்பா?”
"அதெல்லாம் நீ கண்டுக்கப்படாது. அது சல்பேட்டா சாராயத்துலேயே ஒரு தனி ரகம். மூணு டம்ளர் 15 ரூபா. இன்னா சொல்றே?''
இளங்கோ, பைக்குள் இருந்த ஒரேயொரு இருபது ரூபாய் நோட்டை முனுசாமியின் இடுப்புக்குள் செருகி விட்டு, அவனைப் போகும்படி தள்ளி விட்டான். முனுசாமி அவனுக்குப் பிரியாவிடை கொடுப்பவன் போல் போனான்.
முனுசாமி, அந்த மாதா கோவில் ஆலய வளாகத்திற்குள் போவதை, இளங்கோ தொலைவில் நின்று பார்த்தான். ஐந்து நிமிட அவகாசத்திற்குப் பிறகு அங்கே நெருங்கி நெருங்கிப் போனான். அந்த வளாக வாசல் பகுதிக்குள் ஒரு ஓரமாய் நின்றபடி உள்ளே அவன் எட்டிப் பார்த்தபோது-
அந்த வளாகத்தின் கிழக்குப் பகுதியில் மாதா கோவில்; மேரி மாதா குழந்தை ஏசுவோடு, புன்முறுவலோடு நிற்கிறாள். வருத்தப்பட்டு பாரம் சுமக்காதவர்கள், பட்டுப் புடவைகளோடும், கழுத்துத் தாங்க முடியாத நகைகளோடும், சபாரி உடைகளோடும் போய்க் கொண்டிருக்கிறார்கள். காரிலிருந்து இறங்கிய கண்ணியவான்கள் மனைவிகளை கரம் கோத்து நடந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வளாகத்தின் இன்னொரு பகுதி; கல்லும் மண்ணும் கொண்ட கட்டாந்தரை. அங்கே மரித்தெழுந்தது போல், எழுந்த சுவரோடு சுவராக பல்வேறு வகை பிச்சைக்காரர்கள் மண்டியிட்டும், சம்மணம் போட்டும், குத்துக்காலிட்டும், அப்படிப் போடுவதற்கு முழுக்கால்கள் இல்லாமலும் கிடந்தார்கள். ஒவ்வொருத்தர் முன்னால் ஏதோ ஒரு துண்டு, ஏதோ ஒரு தட்டு.
சொர்க்கமும், நரகமும் அருகருகே இருப்பது போன்ற அந்த வளாகத்திற்குள் எட்டிப் பார்த்த இளங்கோ, வறுமையும், வெறுமையும் கூடி கோர தாண்டவம் ஆடும் அந்தக் கட்டாந்தரைப் பகுதியை உற்றுப் பார்த்தான்.
திடீரென்று பார்த்துப் பார்த்துப் பூத்துப்போன அவன் கண்கள் பிரகாசித்தன. சுரக்காய் குடுக்கைபோல் ஒடுங்கிய சந்திற்கு அப்பால், தென்பட்ட குடிசைப் பகுதியிலிருந்து, முனுசாமி தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தான். அவனைப் பிடித்தபடியும், அதேசமயம் அவன் தன்மேல் விழும்போது தள்ளியபடியும், சரோசா வந்து கொண்டிருந்தாள். அவள் இடுப்பில் ஒரு சுருக்குப் பை தொங்கியது. அதிலிருந்த ரூபாய் நோட்டுகளை எண்ணியபடியே முனுசாமியை நடத்திக் கொண்டிருந்தாள். அவன் தடுமாறி தரையில் விழுந்தபோது, அவனை அங்கேயே போட்டுவிட்டு வெளியே வந்தாள். இளங்கோ ஒதுங்கிக் கொண்டான்.
சரோசா, பஸ் நிலையப் பின்பக்கத்து மதில்மேல் இருந்த ஒரு டீக்கடையில் இரண்டு பன்களை வாங்கி ஒரு கையில் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையில் ஒரு கப் டீ டம்ளரை ஏந்திக்கொண்டு திரும்பிப் போனாள். இளங்கோ சுவரில் முகம் போட்டு அவளுக்கு முதுகு காட்டினான். ஏதோ ஒரு பயம், ஏதோ ஒரு உதறல்; அவனுக்கே அவன் போக்கு வெட்கமாக இருந்தது.
இதற்குள், சரோசா அவன் இருப்பது தெரியாமல், அந்த வளாகத்திற்குள் நடந்தாள். அந்த கட்டாந்தரைப் பகுதிக்குப்போய் அந்த வெயிலிலும் கம்பளியால் மூடி, அப்படியும் குளிர் தாங்க முடியாமல் ஆடிக்கொண்டிருந்த ஒரு முதியவரின் முன் குத்துக்காலிட்டாள். அவருக்கு பிறப்பினால், எழுபது வயதென்றால், வறுமையோ அல்லது வெறுமையோ மேலும் இருபது ஆண்டுகளைக் கூட்டிவிட்டதைக் காட்டுவது போல் கால்கள் கைகளைப் போலவே இருந்தன. முகத்துக்கும், மார்புக்கும் இடைவெளி தெரியவில்லை. கூனிக்குறுகி கண் இழந்தவர்போல் அங்குமிங்குமாய் கைகளைத் துழாவிய அவர் வாயில், அவள் டீயை ஊற்றினாள். பிறகு கையில் இருந்த ஒரு ‘பன்னை’ பிய்த்துப் பிய்த்து தேநீரில் தோய்த்துத் தோய்த்து, ஈரம் சொட்டச் சொட்ட அவரது வாய்க்குள் திணித்தாள். சற்றுத் தொலைவில் 'தாயப்பாஸ்' ஆடிக்கொண்டிருந்த அவளது தோஸ்துகள் - "இன்னாமே யாரோ ஒருத்தன அடிச்சுப் போட்டுட்டு வந்தியாமே, அந்த பொட்டப்பயல் ஒன்னை திருப்பி அடிக்கலியா?” என்றனர்.
வாசல் பக்கம் பட்டும் படாமலும் பார்த்துக் கொண்டு நின்ற இளங்கோவிற்கு, தன்னை ஆண் பயல் என்று நிரூபிக்க வேண்டும். போல் இருந்தது. மீண்டும் ரோஷம் வந்தது. அதற்கு வடிகாலாக, அந்தச் சமயம் பார்த்து அந்தப் பக்கமாய் ஒரு போலீஸ்காரர் வந்தார். அவனுக்கு ஏற்றாற் போல் மணி கேட்டார். அவன் “ஐந்து நாற்பது" என்று சொல்லிவிட்டு, பேச்சை ஆரம்பித்தான். முனுசாமி சொன்னது போல் சற்று ஆணித்தரமாகப் பேசினான்.
"சார், இதுக்குள்ளே ஒரு கிரிமினல் இருக்காள்... எங்கம்மாவை கொலை செய்ய ‘அட்டம்ட்' செய்தவள். எதிர் வீட்டுக்குள் போய் எதையோ திருடியிருக்காள். தட்டிக்கேட்ட என் 'மதரின்' காலை உடைச்சிருக்காள். ஐ.ஏ.எஸ். அதிகாரிங்க அதிகமாக இருக்கிற எங்க ஏரியாவிலேயே பிரிட்ஜ், டி.வி. காணாமல் போகுது. ஒரு ஆறு வயகப் பையன்க்கூட காணல. இவளே இதுக்குக் காரணமுன்னு நினைக்கிறேன். நீங்க இப்போ இவள பிடிச்சு ஸ்டேஷனுக்குக் கொண்டு போகணும்."
"நான் 'பீட்டுக்கு' வந்திருக்கேன். எல் அண்ட் ஓ கவனிக்கிறவன்; அதாவது சட்டம் - ஒழுங்கை கவனிக்கிறதுதான் என் வேல. இது கிரைம்; அதனாலதான் யோசிக்கிறேன்."
"ஒரு குற்றவாளி கண்ணில் படும்போது பொதுமக்களில் ஒருத்தர்கூட போலீசில் சொல்லாட்டால், அதுவே குற்றமுன்னு சட்டம் சொல்லுது. நீங்க ஒரு போலீஸ்காரர், அப்புறம் உங்க இஷ்டம்.”
அந்த கான்ஸ்டபிள் யோசித்தார். இவன் முகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குரிய களையோ அல்லது திமிரோ இல்லை. ஆனாலும் இவன் அப்படிப்பட்ட ஒரு ஐ.ஏ.எஸ்.ஸின் ஒரு அசட்டுப் பையனாகக்கூட இருக்கலாம். எதுக்கு வம்பு, அவர்? அவன், தோளில் தோழமையோடு கை போட்டு "அவளை காட்டுங்க சார்" என்று கூட்டிப் போனார்.
இருவரும் போய் அந்தப் பிச்சைக்காரப் பகுதியில் நின்றனர். அவள், கையில் இன்னும் இருந்த அந்த மிச்ச மீதிப் பன்னை, பிய்த்துப் பிய்த்து அவருக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள்.
இளங்கோ, போலீஸ்காரரை அவசரப்படுத்தினான். அவர் தனது விருப்பத்திற்கு விரோதமாகவே அவளை லத்திக் கம்பால் தட்டி ஆணையிட்டார்:
"ஏய்... எழுந்திரு, ஒன் பேரென்ன?"
நைனாவின் கையிலிருந்து விடுபட்டு, தலை நிமிர்ந்த சரோசா, அந்தப் புதிய போலீஸ்காரரைப் பார்த்துச் சிரித்தாள். பிறகு, “பேருக்கு ஏற்றபடிதான் அரஸ்ட் பண்ணுவீங்களா” என்று கேட்டாள். போலீஸ்காரருக்கு இப்போது கோபம் வந்ததது. லத்திக் கம்பை ஓங்கியபடி நின்றார். அவள் எழுந்தாள்; அப்போதுதான், இளங்கோவைப் பார்த்தாள். அவனை ஏற, இறங்கப் பார்த்துவிட்டு, "இந்த கேஸ் யாரு சாரே, இதுகூட சேர்ந்து நான் எந்த தப்புத் தண்டாவும் செய்யலயே. இது பிளேடா, இல்ல பிச்சுவாவா" என்றாள்.
இளங்கோ கோபப்படுவதற்கு முன்பே போலீஸ்காரர் பல்லைக் கடித்தார்.
"இந்தாம்மா! மரியாதையா ஸ்டேஷனுக்கு நட. நான் மனுஷனா இருக்கிறது உன் பொறுப்பு."
சுவரில் சாய்ந்து கிடந்த அந்தக் கிழவர், தட்டுத்தடுமாறி எழப்போனார். பிறகு விழப் போனார். பின்னர், கை எழும்பியது போல் கால் எழும்பாத நிலையில், கண்ணுக்குத் தெரியாத அந்த போலீஸ்காரருக்கு ஒரு கும்பிடு போட்டபடியே, குழைந்தார்.
"போன மாசம்தானே, உங்க ஆளுங்க ஒரு கேசுக்காக கூப்பிட்டாங்க, இவளும் அவங்களுக்காக, செய்யாத தப்ப செய்ததா சொல்லி அபராதம் கட்டினாள். இது தாங்காது சாமி." "எது செய்தாலும் சட்டப்படிதான் செய்வோம் பெரியவரே. உம், நடம்மா."
சரோசா, இளங்கோவிற்கும் அந்தப் போலீஸ்காரருக்கும் இடையே கம்பீரமாய் நின்றாள். இதற்குள் தாயப்பாஸ் விளையாடிய அவளது தோஸ்துகள் "சாரு புட்சு போல. நீ போமே, நாங்க பின்னால் வரோம்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் தாயப்பாஸ் ஆடினார்கள். அவள் ஆணையிடுவது போல் பேசினாள் :
"நாய்னா, ஜாக்கிரதோ. இந்த குயந்த பையன் இன்னாதான் செய்வான்னு பார்த்துட்டு வர்றேன். யோவ், பொட்டை! நடய்யா!”

