Chapter 40

எல்லாம் ஏழு நிமிடங்களில் முடிந்துவிட்டன..... அரைகுறை இல்லாமல், முழுமையாக முடிந்து போனது. கோலவடிவு அந்த சிலைமேல் சிலையாகக் கிடந்தாள்... அம்மன் மார்பில், பின் தலையைச் சாய்த்துப் போட்டாள்.... கண்கள் மேல்பட்டு, அம்மனின் கண்களையே உற்று நோக்குவது போல், அடங்கிக் கிடந்தாள்.

இதற்குள் போலீஸ்காரர்களின் கூக்குரலால், கண் விழித்த ஊரார், துளசிங்கம் போட்ட ஓலத்தால், ஓடி வந்தார்கள்.... என்னமோ ஏதோ என்று முதலில் ஓடி வந்தவர்கள், அவர்கள் எதிர்பார்த்ததை விடப் பெரிதாக நடந்ததைப் பார்த்த பயத்தில் திரும்பி ஓடினார்கள். பின்னால் வந்தவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஊமை போல் குரலிட்டார்கள். அம்மன் கோவிலை நோக்கி, கைகளை மட்டும் நீட்டி நீட்டிக் காட்டினார்கள்.... கிட்டே வந்த பெண்கள் எட்ட ஓடினார்கள்... சிலர் கண்களை மூடிக் கொண்டே நின்றார்கள்... சிலர் ஊரைவிட்டே ஓடினார்கள்... கூட்டம் கூட்டமாகக் கூட்டம் சேர்ந்தது.... காத்துக்கருப்பன்கள், காரை வீட்டார்கள், செம்பட்டையான்கள், கரும்பட்டையான்கள், பள்ளிக்கூடப் பிள்ளைகள் எலி டாக்டர் மயங்கி, ஒருவர் தோளில் சாய்ந்தார்... காஞ்சான் பற்குணத்தை ஆதரவாகப் பிடித்துக் கொண்டார். நாட்டு வக்கீல், பழனிச்சாமி வீட்டைப் பார்த்து ஓடினான். இரண்டு கைகளிலும் விலங்குத் தடங்களை விழுப்புண்கள் போல் கொண்ட திருமலை நொண்டியடித்து வந்தான். தங்கையைப் பார்த்து, கையெடுத்துக் கும்பிட்டான். தனக்குத்தானே முனங்கிக் கொண்டான். "நான் செய்து மாட்டிக்கப்-படாதுன்னு நீ செய்திட்டியாம்மா..."

கூட்ட நெருக்கம்... கூக்குரல் தாக்கம்... யாராலும் பேச முடிய வில்லை.... கோலவடிவை நேருக்கு நேராய் பார்க்கவும் முடியவில்லை. உச்சிமுடியைப் பிடித்திழுக்கும் போது ஏற்படும் முகச்சுழிப்புடன்

துளசிங்கத் துண்டுத்தலை, ரத்தக் கட்டியில் ஒட்டிப்போய் கிடந்தது. சிவ சிவ என்றார்கள். அய்யய்யோ என்றார்கள். ஆனால் எவருக்கும் கோவிலுக்குள் போகும் தைரியமில்லை. எப்படியோ நான்கைந்து போலீஸ்காரர்கள் தைரியப்பட்டு வந்தார்கள். கோலவடிவைப் பார்க்காமல் கூட்டத்தைப் பார்த்து அதட்டினார்கள்.... பிறகு, கோலவடிவின் அருகே கிடந்த அரிவாளைப் பயத்தோடு பார்த்தபடியே, கோவிலுக்குள் போகப் போனார்கள்... ஆனாலும் போனபாடில்லை....

ரஞ்சிதம் ஓடி வந்தாள். கூட்டத்திற்குள் ஊடுறுவி, கோலவடிவின் பார்வை படும் இடத்தில் நின்றபடியே வெறித்துப் பார்த்தாள். விரக்தி யோடு பார்த்தாள். திருமலையைப் போல் தனக்குத்தானே முனங்கிக் கொண்டாள்... " என்னை துளசிங்கம் எதுவும் செய்துடப் படாதுன்னு அவனை அப்படிச் செய்திட்டியா கோலம்? அவசரப்பட்டுட்டியே கோலம் இல்ல.... நீ அவசரப்படல... ஒன்னை அவசரப்படுத்திட்டாங்க..."

கோலவடிவு, ரஞ்சிதத்தைப் பார்ப்பதுபோல் தெரிந்தது. சிலையில் போட்ட தலையைத் தூக்கினாள்... அவளை நோக்கி லேசாக கையை உயர்த்தினாள்.... வெறி பிடித்தவள் போல் சிரித்துக் காட்டினாள்.... பிறகு பழையபடியே தலையை அம்மன் சிலையில் போட்டாள். அப்புறம் தன் பாட்டுக்குக் கிடந்தாள்.....

சிறிது நேரத்தில் பழனிச்சாமி அந்தப் பக்கம் வந்தார். வாடாப்பூ அலற-சந்திரா புலம்ப-நாட்டு வக்கீல் நாராயணன் அவரை ஆதரவாய் பிடித்துக்கொள்ள, அருணாசலத்தின் தோளை ஆதரவாய், ஊன்றுகோல்போல் பிடித்தபடி வந்தார்... பெற்றெடுத்த மகளை - அதிர்ந்து பேசாத செல்வத்தை, இப்போது பேயாகிப் போனவளை, நேருக்கு நேராய்ப் பார்த்தார். அவளின் குற்றங்களையும், குணங் களையும் மறந்து, மகளென்று மட்டுமே பார்த்தார்.... தந்தை என்று மட்டுமே பார்த்தார். பெற்ற பாசம், கண்ணீராய் கவிழப் பார்த்தார்.

அந்த பரிச்சயப்பட்ட பார்வையில் நெகிழ்ந்தவள் போல் - காய்ந்த இரும்பை தண்ணீருக்குள் திணிக்கும் போது அது எப்படி ஒலி எழுப்புமோ, அப்படி ஓசையிட்டபடியே கோலவடிவு நேர் கோடாய் எழுந்தாள். பிறகு கீழே குனிந்து துளசிங்கத்தின் தலையைத் தூக்கிப் பிடித்தபடி மீண்டும் எழுந்தாள். சிறிது நேரம் அப்படியே நின்றாள்... பிறகு தந்தையை நோக்கி, அந்தத் தலையைத் தூக்கி காட்டினாள்.... காட்டிக் கொண்டே நின்றாள்....