Chapter 36

திடீரென்று, கட்டை வண்டிப் பக்கம் போன சந்திரா, கூக் குரலிட்டாள்....

"இங்கே யார் இருக்கான்னு பாருங்க... எக்கா... எக்கா... எப்பக்கா வந்தே? இப்டி பண்ணிட்டியே... அக்கா...."

சந்திரா, கோலவடிவை இழுத்துக்கொண்டு உள்ளே வந்தாள். அவள் முதுகின் ஆதரவோடு வந்த கோலவடிவு, சட்டென்று முற்றத்தில் நிலைகுலைந்து விழுந்தாள்... முகத்தை கைகளால் மறைத்துக் கொண்டு, குப்புறக் கிடந்தாள்.... எவரும் கண்டு கொள்ளாத ஏணிப் படிக்கட்டுக்குள் கிடந்த பேச்சியம்மா, கோலவடிவின் முன்னால் வந்து மாரடித்தாள்.

"பாவி கெடுத்திட்டியே.. பாவி.. கெடுத்தியேடி... ஒன்னால நாங்க சின்னாபின்னப்பட்டு நிக்கோமே... இதுக்குல்லாம் காரணம் இந்த பாவி மொட்ட... வாடாப்பூதான்.. இவள் மட்டும் சொல்லியிருந்தால்..."

மாயாண்டி, பேச்சியம்மாவை மடக்கப் போனார். வாடாப்பூவை எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி, கூட்டி வந்தாச்சு.... பழையபடியும் அவள் ரஞ்சிதம் கிட்ட போயிடப்படாதே...

"இந்தா பாரு.. பேச்சி.. என்ன பேச்சு பேசுறே... என் மகளாவது சொன்னாள்..... ஒன் மகள் சொல்லியிருக்கக்கூட மாட்டாள். ஏழா.-- கோலவடிவு... எங்கள் பண்ணாத கோலமெல்லாம் பண்ணிட்டியளா... பாவி...”

மாயாண்டியையும் பேச்சியம்மாவையும் யாரோ அதட்டினார்கள்... பிறகு பழனிச்சாமியையும், கோலவடிவையும் மாறி மாறிப் பார்த்தார்கள் - கோலவடிவோ தன்னைப் பார்த்த சொக்காரர்களைப் பார்க்காமல், எதுவும் நடக்காதது போலவும், அவள் அங்கே செல்லாதது போலவும், சாய்வு நாற்காலியில் கிடந்த தந்தையை, கீழே கிடந்தபடியே ஏறிட்டுப் பார்த்தாள்... உதடுகள் திறந்தன... பற்கள் விலகின...

'அப்பா.... அப்பா.... என்னை செல்லமா.... வளத்து சீராட்டுன அப்பாவே... எப்போ அந்த துளசிங்கம் ஒம்ம அவமானப் படுத்துறதுக்காவத்தான் என்னை கூட்டிட்டுப் போனான்னு தெரிஞ்சுதோ.... அப்பவே நான் பழையபடியும் ஒம்ம மகளாயிட்டேம்பா.... எப்போ அண்ணனை போலீஸ் அடச்சு, சித்தரவதை செய்யுறதுக்கு ஏற்பாடு செய்தானோ, அப்பவே நான் அண்ணனுக்கு தங்கச்சியாயிட்டேன். அப்பா... எந்த உடம்போட போனனோ அந்த உடம்புல எந்த வில்லங்கமும் இல்லாமத் திரும்பி வந்துட்டேம்பா... நடந்ததை எல்லாம் போலீஸ்ல சொல்லி இந்த துளசிங்கத்துக்கும், அலங்காரிக்கும் பத்து வருஷமாவது ஜெயில் வாங்கிக் கொடுக்கணும் அப்பா. விட்டில் பூச்சியான என்னை வீட்டுக்குள்ள சேரும்பா. அம்மா.... என் அம்மா.... நீ இப்படி ஆவேன்னு தெரியமுன்னா ... நான் ஏழெழு ஜென்மத்துக்கும் இப்டிப் பண்ண மாட்டேம்மா... அண்ணன இரும்பால பூட்டிட்டு... நான் கழுத்துல தாலிய... பூட்டிக்கதுக்கு... நான்... அரக்கி இல்லம்மா...'

கோலவடிவு பேசுவதாகத்தான் நினைத்தாள். எல்லோரும் சும்மா நிற்கிறாவளே.. கேட்டதுக்கு அடையாளக் கோபம்கூட வர்லயே... ஓகோ எனக்கு நானே தான் பேசிக்கிட்டேனோ? என்னால பேச முடியலியோ.... பேச முடியலியோ? நாக்கு சுத்தமாட்டங்கே.... குரல் வரமாட்டங்கே ..."

தாய்க்காரி பாக்கியம் லேசாகக் கண் விழித்தாள்... ஏதோ பேசப் போன வாயில், கண்ணில் உற்பத்தியான நீர் சங்கமமானது... அவளின் இரண்டு கைகளும், ஆகாயத்தைப் பார்த்துக் கும்பிட்டன... பின்னர், காலாடாமல் கையாடாமல் வாய் மட்டும் துடிக்க அப்படியே கிடந்தாள்... தாயம்மா அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தாள்... வாடாப்பூ முந்தானையால் விசிறி விட்டாள். சந்திரா, கோலவடிவைத் திட்டினாள்.

எல்லோரும் பழனிச்சாமியை ஏறிட்டுப் பார்த்தார்கள்.

பழனிச்சாமி, அந்த சாய்வு நாற்காலியை சாய்ப்பவர் போல் எழுந்தார். சிறிது தொலைவில், முடங்கிக் கிடந்த கோலவடிவைப் பார்த்து, தலையை 'இரு... இரு...' என்பது போல் ஆட்டியபடியே, வீட்டுக்குள் போனார். அவர் போனதும், வீட்டுக்குள் டமார்' என்று சத்தம் கேட்டது. எல்லோரும் என்னமோ ஏதோ என்று உள்ளே பார்த்தபோது, பழனிச்சாமி கையில் ஒரு டிரங்க் பெட்டியோடு வெளியே வந்தார்.... பாசிபூத்த பழைய பெட்டி. பூட்டோடு கூடிய - நாட்டுப் பெட்டி

பழனிச்சாமி, அந்தப் பெட்டியுடன் மகளை நோக்கிப் போனார். கோலவடிவு, இப்போது தரையில் கிடந்தபடியே தவழ்ந்து தவழ்ந்து, அவர் காலைத் தொடப் போனாள். லேசாகத் தொட்டு விட்டாள். உடனே அவர், அந்தக் கைவிரல்களை ஐந்து தலை நல்ல பாம்பாக நினைத்தவர் போல், தனது கால்கள் அவள் கையில் சிக்காமல் இருக்க, துள்ளிக் குதித்தார். பிறகு அவளைப் பார்த்து, வழக்கில் தீர்ப்புக்குக் கட்டுப்படாதவளைப் பார்த்து, எப்படிப் பேசுவாரோ- அதே ஆணித்தரமான குரலில், விருப்பு வெறுப்பற்ற வேதாந்த முறையில் பேசினார்.

"எழுந்திரு... இந்த பெட்டியில் ஒன் துணிகள் நகைகள் நட்டு எல்லாம் இருக்குது... இதை.... நான் ஒனக்கு ஆசையோடு தரல... ஒன் ஞாபகம் வரப்படாதுன்னுதான் எல்லாத் துணியையும் அள்ளிப் போட்டுத் தாறேன். எழுந்திரு... நான் ஒன்னை பெத்தவன் பாரு.... அதனால் நானே... ஒன்னை அந்தப் பயல் வீட்ல கொண்டு விடுறேன்...

வா....”

கோலவடிவு, எல்லாவற்றையும் அங்கே வருவதற்கான அவசியம் உட்பட அனைத்தையும் அவரிடம் சொல்லப் போனாள். வார்த்தைகள் கிடைக்கவில்லை.... ஏதோ அரைகுறையாகப் பேசப் போனவளை, பழனிச்சாமி, மடக்கிப் பேசினார்.

"நீ எதுவும் பேச வேண்டியதில்ல.... பேசி ஆக வேண்டியதுமில்ல.... மரியாதியா எழுந்திரு.... டேய் நாராயணா.... நீயும் இவளுக்கு அண்ணாச்சேடா, செல்லாம் வளர்த்த செல்லத் தங்கச்சிய... புருஷன் வீட்ல கொண்டு விடவேண்டாமா? ரகசியமா ஓடுனவளை பகிரங்கமாய் கொண்டுவிட வேண்டியது நம்மோட கடமையாச்சேடா.... எந்திரிங்கடா... நமக்கு நல்ல பேர் வாங்கித் தந்தவளை கொண்டு விட்டுட்டு வரலாம். ஒருத்தி புருஷன் வீட்டுக்குப் போகும்போது தலை குனியணும்... பெத்தவங்களும் கூடப் பிறந்தவங்களும் தலை நிமிரணும்... இது இந்த வீட்ல தலைகீழா போயிட்டேன்னு பாக்கியாடா.... பரவாயில்ல.... எழுந்திருடா.... ஏய்... என் செல்ல மகளே.... என்ன அலங்கோலமாக்குன கோலமவளே.... எழுந்திரும்மா.... எழுந்திருழா. எழுந்திரு நாயே..."

நாராயணன் இருந்த இடத்திலேயே ஏறெடுத்துப் பாராமல் கிடந்தான். திண்ணையில் இப்போது மல்லாந்து கிடந்த அம்மா பாக்கியம், கைகளைத் தூக்கி தூக்கி ஆட்டினாள். என்ன சொல்ல நினைத்தாளோ.... எது செய்யத் துடித்தாளோ.....

கோலவடிவு, அப்பா நின்ற திசை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டாள்.... ஆனால் பழனிச்சாமி கும்பிட்ட அவள் கைகளை ஒரு சேரப் பிடித்து, அவளைச் செந்தூக்காகத் தூக்கினார். அவள் கீழே உட்காரப் போனாள். அவர், அவளை அப்படியே மேலே இழுத்துப் பிடிக்க, அவள் சிறிது நேரம் அந்தரத்தில் தொங்கினாள். தந்தை, அவளை அப்படியே தூக்கிக் கொண்டு சிறிது நடந்தார். அவள் எப்பா... எப்பா..." என்று பரிதாபமாய் குரலிட்டதும் அவர் கத்தினார்...

“நான் ஒனக்கு அப்பனும் இல்ல. நீ எனக்கு மகளும் இல்ல... ஏதோ பெத்த கடமைக்கு பொண்ணுக்குத் தோழியா' வாரேன். இந்த வீட்ல நீ இனிமேல் இருக்க முடியாது. இது மானஸ்தனுக்குப் பிறந்த மானஸ்த ன் வீடு. உம்... நட.... நட...”

கோலவடிவு நடக்க மறுத்தாள். பழனிச்சாமி விடவில்லை. சண்டித்தனம் செய்யும் மாட்டை இழுப்பது போல், அவள் கையை, விட்டுவிட்டுக் கழுத்தைப் பிடித்து இழுத்தார். அவள் கால்கள், தரையில் சாய்ந்த கோபுரம் போல் கோடுகள் போட, அவள் உடம்பு அவர் இழுத்த இழுப்பிற்கு நகர்ந்தது. அங்கே இருந்த எல்லோருக்கும், பழனிச்சாமியிடம் ஏதோ சொல்லவேண்டும் என்ற எண்ணம்... என்ன சொல்ல முடியும்... போனால் போகுது... இங்கே அவள் இருக்கட்டும் என்று சொல்ல முடியுமா.... என்னத்தைச் சொல்ல....

கரும்பட்டையான்கள் கைகளை நெறித்தபோது, பழனிச்சாமி, மகள் கழுத்தை நெறிக்காத குறையாக, இழுத்துக் கொண்டு போனார். இருவரும் அந்த வீட்டை விட்டு மறையப் போகும்போது, திண்ணையில் கிடந்த அம்மாவின் கைகால்கள் வெட்டின. "ஊ... ஊ " என்ற அலறல் சத்தம் ஒலித்தது.

பழனிச்சாமி, மகளை இழுத்துக் கொண்டு, பாதி வழி வந்துவிட்டார். வீட்டு வாசல்களில் இருந்தும், மாடிகளிலிருந்தும், ஊரார் உன்னிப்பாகப் பார்த்தார்கள். செம்பட்டையான் குடும்பத்தினரிடம் கூட, இப்போது அனுதாபம், அகங்காரத்தை விரட்டியது... பழனிச்சாமிக்கும் இளைத்தது..... அதற்குமேல், மாடாகப் போன அந்த மகளை அவரால் இழுக்க முடியவில்லை. கை வலித்தது. மனம் கனத்தது.. கால்கள் இளைத்தன. இதைவிட எல்லாக் கண்களும் அவரை மொய்த்தன... நடக்க மாட்டேன் என்பது போல் கால்களை, தரையில் மடித்துப் போட்டபடி அப்பாவின், கைக்குள் கழுத்தைக் கொடுத்துவிட்டு, பைசா நகரக் கோபுரம் போல் சரிந்து கிடந்த கோலவடிவை அவர் நிமிர்த்தினார்....அங்க ஓடத் தெரிஞ்சுது -- இங்க நடக்கத் தெரியலியோ...' என்று கத்தியபடியே, அவள் தலைமுடியைப் பிடித்து சுற்றி வளைத்து, அவளைப் பம்பரமாகச் சுற்றினார்... கோலவடிவு பேசுவதுபோல் முனங்கினாள். பழனிச்சாமி கத்தினார்...

"நீ என்னத்தழா பெரிசா சொல்லப் போறே... நீ என்ன பண்டமா.... பாத்திரமா.... தவலையா.... தட்டா... கிண்ண மா... செம்பா .... எச்சுபாத்திருமுன்னு சாம்பல வச்சு விளக்கி, வைக்கதுக்கு. நடழா.. எச்சிக்கல் நாயே... நட.."

கோலவடிவு இப்போது சுரணையற்றுப் போனாள்..... நடப்பது நடக்கட்டும் என்பதுபோல் நடக்காமல் நின்றாள்.... ஆகாயத்தைத் துழாவிப் பார்த்து, அந்த வேகத்தில் பூமியைக் குடைந்து பார்த்து, கூன் பட்டு நின்றாள்... பழனிச்சாமி விடவில்லை ... அவளுக்குப் பின்னால் வந்து, அவள் தோளில் தன் கரங்கள் இரண்டையும் அணை கொடுத்துத் தள்ளினார். அப்படியும், அவள் உடல்தான் சாயப் போனதே தவிர, கால்கள் நகரவில்லை ..... நகராத மாட்டையும் நடக்க வைத்துப் பழக்கப்பட்ட பழனிச்சாமி, தனது கால்களால் அவளது கால்களை முன்னால் தள்ளித் தள்ளி விட்டார். வலது கையில் இருந்து டிரங்க் பெட்டியை தோளில் போட்டு, கழுத்தால் அதை கொக்கி போட்டுத் தக்க வைத்துக் கொண்டு அவளைத் தள்ளினார். அவளோ கூந்தல் கலைய, சேலை விலக, கண்ணாடி வளையல்கள் சிதறல்களாக, தந்தையின் தள்ளிய வேகத்திற்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தாள். துளசிங்கம் வீட்டருக்கே போன போது, அந்த வீட்டுக்குப் போக விரும்பாதவள் போல், அவள் வேறு பக்கமாக உடம்பைச் சாய்த்தபோது, பழனிச்சாமி, தன் தலையால், அவள் உடம்பிற்கு அணை கொடுத்து, அவளைத் திருப்பினார்... துளசிங்கம் வீட்டை நோக்கி நகர்த்தினார்... அவள் பின்னால் சாயப்போனபோது, அவளை முன்னுக்குத் தள்ளி, தாளம் போட்டுப் பேசினார்.

"நான் ஒங்கள அடிக்கப் படாதும்மா... இப்போ நீங்க இன்னொருத்தன் பொருளும்மா... மரியாதையா நடங்கம்மா.. வந்தாச்சு... எட்டே எட்டுத்தான்... எனக்கு எட்டாத எட்டு... நடங்கம்மா...."