Chapter 24
கோலவடிவு, அவர்களைப் பார்த்து, அவசர அவசரமாய் பேசினாள்... வீட்டிற்குப் போகத் தயாராய் இருப்பவள் போல், ஒரு காலை மேற்குத் திசை நோக்கி வைத்தபடியே கிழக்குப் பக்கம் நின்றவர்களைப் பார்த்து பேசினாள்.
"எனக்கு ஓடிப்போறதுல சம்மதம் இல்ல... அதுக்காக நான் வர்ல... துளசிங்கம் மச்சான வெட்டுறதுக்கு ஊருக்காரனுவ சுத்திக்கிட்டு இருக்கானுவ... பழைய பகைய மனசுல வச்சுட்டு அரிவாளோட
அலையுறானுவ... எங்கேயாவது போயி... அவரு தப்பிச்சா நல்லது.... நான் வாறேன் அத்தே..."
அலங்காரி , அவளை நின்று நிதானித்துப் பார்த்துவிட்டு, அழுகைக் குரலோடு பேசினாள்....
"சரிம்மா... நீ போ... நீ சொன்ன சேதி கோடி பெறும்.... இவன் எப்படியாவது போறான்... நீ போம்மா.... கூட வேணுமுன்னா துணைக்கு வரட்டுமா... போம்மா.... அக்னி ராசாவுட்டயோ... எந்த ராசாவுட்டயோ.. ஒரு தடவ மாட்டிக்கிட்டா ஒரேயடியா மாட்டுனது மாதிரி... என்கிற எண்ணத்தோட போம்மா..."
கோலவடிவு, அந்தக் கும்மிருட்டில் அலங்காரி அத்தையைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு வீட்டை நோக்கி உடம்பின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்தாள்.... பிறகு நின்றாள். நின்றபடியே பேசினாள்....
"எத்தே - இவர சாக்கிரத்தையா இருக்கச் சொல்லுங்க... இவருக்கு ஏதாவது ஆயிட்டுன்னா நான் உயிர விட்டுடுவேன்னு சொல்லுங்க அத்தே ..."
சினிமா தோஷம் பிடித்த துளசிங்கம் பேசினான்.
"அப்படியே எனக்கு ஏதாவது ஆனாலும் கோலத்த சத்தம் போட்டு அழப்படாதுன்னு சொல்லுங்க சித்தி... ஏன்னா, அவள் அழுகைக்கான காரணம் ஊருக்கு தெரிஞ்சு அவளுக்கும் எனக்கும் இருந்த பாசம் வெளில வந்துடப்படாது, இன்னொருத்தன் வீட்ல வாழப் போறவள் பாரு.."
அலங்காரி, வாயை வாழைப்பழமாக்கி, நாக்கை ஊசியாக்கினாள்.
கோலம்.. நீ பேசுற முறையும், ஒரு வகையில் சரிதான்... ஆனாலும் மனசு கேட்க மாட்டக்கு... எங்க மச்சான் மவன் வெட்டுப்படப் போறது நிச்சயம்... அதனால, இவனும் வெட்டுப் படுறதே வெட்டுப்படுறோம்.... வெட்டிட்டு படுவோமுன்னு இரும்புல பிச்சுவாக் கத்தியோட நிக்கான்.... இவன் ஒண்ணு கொலையில் சாவான்... இல்லாட்டா கொலை செய்துட்டு செயிலுல சாவான்... ஏதோ ஒன்கூட ஓடிப் போனால் தப்பிப் பிழைப்பான்னு நெனச்சேன்.... அப்புறம் பழனிச்சாமி அண்ணாச்சிக்கு மருமவனாயிட்டா ஊரில் எந்தப் பயலும் இவன் எதுவும் செய்ய முடியாதுன்னு இந்த அத்த ஆறுதல்பட்டேன். கடைசில, நீ அக்னிராசா கிட்ட அவஸ்தப்படணு முன்னும், இவன் அரிவாளால் வெட்டுப் படணுமுன்னும் தலைவிதி இருந்தால், அதை யாரு மாத்த முடியும்... நீ மனசு வச்சால் இவனையும் காப்பாத்தலாம்... ஒன்னையும் காப்பாத்தலாம்... ஊரையும் காப்பாத்தலாம்..."
கால்மணி நேரம் பதில் இல்லை. யாரும், யாருடனும் பேசவில்லை .
அலங்காரிக்கும், துளசிங்கத்திற்கும், முதுகைக் காட்டி நின்ற கோலவடிவு, சிறிது நேரம் அப்படியே நின்றாள். பிறகு வீடு இருந்த திசையை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டாள். கும்பிட்டு முடித்ததும், அவர்களுக்கு முகத்தைக் காட்டினாள். முந்தானையை இறுக்கி முடிந்துகிட்டு, ராட்சதப் பூச்சி மாதிரி நின்ற அந்த விக்கி வண்டியின் பின்னிருக்கையில், ஏறிக் கொள்வதற்காக செங்குத்தான உடம்பை, "உப்புக் குத்திக் காலில்" நின்றபடி, சாய்ந்தாள்....

