Chapter 31
அந்த முருகன் கோவில் முகப்பில் எல்லாப் பெண்களும் கொட்டாவி விட்டபடியே பீடி சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.... மத்தியான வெயில்... மண்டைக்குள் ஊடுறுவியது. ரஞ்சிதம் எதையோ யோசித்தபடி, கைகளை மட்டும் யந்திர ரீதியில் இயக்கிக் கொண்டிருந்தாள்... கோலவடிவு சமாச்சாரத்தைப் பழனிச்சாமியிடமே சொல்லியிருந்தால், இந்த நிலமை வந்திருக்காதே என்ற மனத்தாங்கல் அவளுக்கு ... ஒருத்தர் வீணாகப் போகும் அபாயம் ஏற்படும்போது, அதனைத் தடுப்பதற்கு கௌரவப் பிரச்சினையோ, இழிவுபடுவோம் என்ற எண்ணமோ, இடையில் வரப்படாது என்று நினைப்பவள். இப்படிப்பட்ட கௌரவப் பிரச்சினைகள் பலருடைய கௌரவங்களை சந்திக்குக் கொண்டு வந்து வாழ்க்கையே பாழாக இருப்பதைக் கண்கூடாகப் பார்த்தவள். இப்போது இனிமேல் என்ன செய்யலாம் என்பதுபோல் பீடி இலை ஒன்றைக் குறி வைத்துக் கத்தரியை நீட்டி அந்த இலையை வெட்டாமலே வெறித்துப் பார்த்தாள்.
இந்தச் சமயத்தில் வாடாப்பூ, தலைவிரி கோலமாக ஓடி வந்தாள். ரஞ்சிதத்தின் முன்னால் மூச்சிறைக்க நின்றபடியே கோவிலை அங்குமிங்குமாய் பார்த்தபடியே கேட்டாள். இவள் இரவு தூங்கவில்லை என்பதைக் கண்கள் காட்டின.
"ரஞ்சிதம்... எங்க பேச்சியம்மா சித்தி இங்க வந்தாளா?" "வரல்லியே.. என்ன விஷயம்..." "ஒனக்கு விஷயமே தெரியாதா?"
"கோலவடிவு விஷயமாத்தானே... ரெண்டு பேருமே பெரிய தப்பு பண்ணிட்டோம்..."
"நாம நினைச்சுப் பாக்காத அளவுக்கு ஊர்ல என்னெல்லாமோ நடக்குது... ரஞ்சிதம்."
"விவரமாத்தான் சொல்லேன்..."
"அலங்காரி போலீஸ்ல என்ன சொன்னாளோ...... திருமலை அண்ணாவ போலீஸ்ல அடச்சிட்டாங்க.... இப்போ என்னடான்னா... ரெண்டு லோடு போலீஸ் வந்திருக்கு... மூலைக்கு மூலை... போலீஸா நிக்குது... யாரு வீட்டுக்கு வெளியேயும் ஒரு காக்கா குருவிகூட இல்ல.... எங்க வீட்டுப் பக்கம்கூட போலீஸ் துப்பாக்கியோட நிக்குது."
"அதான பாத்தேன்.... எங்க துளசிங்கம் அண்ணா வீட்ல ஒரு மணி நேரத்திற்கு முன்னாலே ஒரு அண்டாவுல சோறு வெந்தது.... நாலஞ்சு கோழிவ பிடிபட்ட சத்தம் கேட்டுது..."
"வினையே உங்க அண்ணான் தான்..."
"இந்தா பாரு... இந்தப் பேச்ச இங்க வச்சக்காத... ஒங்க கோலவடிவு மட்டும் யோக்கியமா....? ஊசி இடம் கொடுக்காம நூலு நுழையுமா...?"
"எம்மா.... ஒனக்கு கோடி கும்பிடு... ஏற்கனவே நொந்து போயிருக்கேன்... ஆள விடு..."
"அதெப்டி ஒங்க இஷ்டத்துக்கு எங்க அண்ணாவ பேசணும்..... நாங்க சும்மா கேட்டுக்கிட்டு இருக்கணுமா....?"
"என்ன ரோசாப்பூ... நமக்காவ பீடி சுத்துறதையே விட்டுக் கொடுத்தவள்.... நம்ம வாடாப்பூ.... அவள்கிட்ட போய்... சண்டைக்குப் போகலாமா...? அப்புறம் ஒன் பேச்சியம்மாவுக்கு என்ன ஆச்சாம்...?"
"எங்க குடும்பத்த கெடுக்கிறதுக்குனே வந்தவள் அவள்..... காலையில் அலங்காரி தலையில் மண்ணள்ளிப் போட்டாளா - இப்போ ஊரு முழுக்க போலீஸா - பயந்து போய் எங்கேயோ ஓடிட்டாள். அய்போ போலீஸ்... அய்யோ போலீஸ்'ன்னு சத்தம் கேட்டுது.... அப்புறம் பார்த்தா ஆளக் காணும். அருணாசலம் சின்னய்யா.... அழுதுட்டு கிடக்காரு.... அவருக்கும் வெளில வர பயம்... சந்திரா குய்யோ முறையோன்னு கூப்பாடு போட்டுக்கிட்டு கிழக்குப் பக்கமா போனாள். நான் மேற்குப் பக்கமா வாரேன்...”
"அட கடவுளே... ஊரு முழுக்க போலீஸா.... நம்ம ஊருக்கா... இந்த நெலம்..."
"இதோட போனாக்கூட பரவாயில்லியே... இன்னும் என்னெல்லாம் நடக்கப் போகுதோ..."
"ஊருக்குள்ள வந்து பாரு ரஞ்சிதம்... நாம பொட்டப் பிள்ளியாவது ஏதாவது சேர்ந்து செய்யணும்... ஆமை போற வீடும், போலீஸ் போற ஊரும் உருப்படாது. துளசிங்கம் ரெண்டுலயுமே அவசரப்பட்டுட்டான் .."
"வாரேன் ரஞ்சிதம்... எங்க சித்தி..... வயலுல... பம்பு செட்டுக்குள்ள பதுங்கிக் கிடக்காளான்னு பாத்துட்டு வாறேன்."
வாடாப்பூ, வயலைப் பார்த்துப் போவதற்காக திரும்பப் போனாள். அப்போது தந்தை மாயாண்டி ஓட்டமும் நடையுமாக ஓடி வருவதைப் பார்த்துவிட்டு நின்றாள். ஒருவேளை பேச்சியம்மா கிடைத்துவிட்டதைச் சொல்ல வருகிறாரோ.... என்னமோ...
மகள் வாடாப்பூவையே பார்த்தபடி ஓடி வந்த மாயாண்டி, அவள் மேல் பாய்ந்தார். அவள் தலையைப் பிடித்து தன் கையில் சிக்க வைத்துக் கொண்டு, அவள் முதுகில் சரமாரியாக குத்தினார். பிறகு அவளை மல்லாக்கத் தள்ளினார். மீண்டும் அவள் தலை முடியைப் பிடித்துத் தூக்கினார். தூக்கியபடியே களைப்புத் தெரியாமல் இருக்க ஏலேலோ பாடுவது போல் மகளின் கனத்தை உணராமல் இருக்கக் கத்துவது போல், கத்தினார்.
"செறுக்கி மவளே... ஊரே இழவெடுத்து நிக்குது. நம்ம குடும்பமே செத்துப் போயிக் கிடக்குது... திருமல ஜெயிலுல இருக்கான்.. கோலவடிவு குரங்கு கையில் அகப்பட்ட பூமாலையாயிட்டாள்.... பாக்கியம் மயினி மயங்கிக் கிடக்காள்.... நீ இங்க வந்து சந்தோஷமா பேசிக்கிட்டு இருக்கியாக்கும்... அதுவும் இவளுவகிட்ட... இன்னைக்கு ஒன்ன சாவடிக்கனா இல்லியான்னு பாரு..."
மாயாண்டி, மகளின் விலாவைக் காலால் இடறினார். திடீரென்று ரஞ்சிதம் எழுந்தாள்.... அவளோடு நான்கைந்த பெண்களும் எழுந்தார்கள்.... ரஞ்சிதம் மாயாண்டியை ஒப்புக்குத் தொட்டபோது, அந்தப் பெண்கள் அவரை ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்து, ஒரு மரத்துப் பக்கம் கொண்டு போனார்கள். ஒவ்வொருத்தியும் அவர் உடம்பை ஊமைக்கீறலாக நகங்களால் பிராண்டினர் மாயாண்டி சத்தம் போட்டார்.
"என் மவள்.... நான் என்ன வேணுமுன்னாலும் செய்வேன்... ஒங்களுக்கு என்னழா...?"
ரஞ்சிதம் அவரருகே போனாள். பொட்டப் பிள்ளைகளிடம் கைதி போல் நின்ற அவரைப் பார்த்து ஆத்திரம் ஆத்திரமாகக் கேட்டாள்.
"தலைக்கு மேல.... வளந்த பொண்ண இப்டி அடிக்கியே.... நீ மனுஷனா?"
"ஏய்... அவன் இவன்னு பேசினே ..."
"இதுக்கு மேல பேசினா... ஒனக்கு மரியாதி போயிடும். இவள் வயசுல ஒரு மகன் இருந்தா இப்டி அடிப்பியாய்யா? மகள்னா ஒனக்கு இளக்காரம்... அதுவும் வயசுக்கு வந்த மகள் - நாலு பேருக்கு முன்னால் நாய அடிக்கது மாதிரி அடிக்கே... நாம் துணி உடுக்கது எதுக்குய்யா. மரியாதைக்குத்தானே... சொத்து இல்லாம ஒருத்தர் வாழலாம். சுகம் இல்லாமலும் வாழலாம்.... ஆனால் மரியாதை இல்லாம வாழுறது ஒரு வாழ்க்கையா.... வாழப்போற ஒரு பொண்ணோட மரியாதய கெடுக்கது மாதிரி அடிக்கவன் ஒரு அப்பனாயா - அப்படியே அவன் அப்பன்னாலும் அவன் ஒரு மனுஷனாய்யா. பழனிச்சாமி எப்பவாவது கோலவடிவ அடிச்சிருக்காராய்யா....? கருப்பசாமி எப்பவாவது சந்திராவை அடிச்சிருக்காரா....? ஒன் பொண்ணோட மரியாதய நீயே கெடுத்த அப்புறம் யார்தான் கெடுக்க மாட்டாக..?"
"என் மவள் எப்படின்னாலும் நடத்துவேன். நீ யாருழா...?"
"நானா... அவள மாதிரி ஒரு பொண்ணு. எப்போ பெத்த மகளை மாட்டை அடிக்கது மாதிரி அடிச்சியோ... அப்பவே நீ அப்பன் இல்ல... அவள் ஒனக்கு மகளும் இல்ல... இந்தப் பாவிப் பொண்ணு... ஒன்கிட்ட அடிபட்டே ஆடிப் போயிட்டாள். மகள் மறந்துட்டு பேசாம போய்யா.... திரும்பிப் பாராம ஓடுய்யா... இனிமேல் வாடாப்பூ என் வீட்லயே இருந்துக்குவாள்.... நீ யாரோ அவள் யாரோ.... எங்க கூட பீடி சுத்தி பிழச்சுக்குவாள். நீரு மவராசனா போயி பழனிச்சாமிக்கு சேவகம் செய்யும். உட்காரு... வாடாப்பூ... இந்த மனுஷன் இனிமேல் ஒனக்கு அப்பன் இல்ல.... நீ என்னோடயே இருந்துக்கலாம்..."
எல்லாப் பெண்களும் வாடாப்பூவைச் சூழ்ந்து கொண்டார்கள். அவளை, புதுப்பெண்ணை உட்கார வைப்பது போல் உட்கார வைத்தார்கள். சற்று நேரத்திற்கு முன்பு சண்டை போட்ட ரோசாப்பூ அவள் கன்னங்களை முந்தானையால் துடைத்துவிட்டாள். மாயாண்டி பரபரக்க பார்த்தபடியே நின்றார். பிறகு துள்ளினார்....
"ஏழா எழுந்திருக்கியா.. இல்ல.... ஒரே மிதியாய் மிதிக்கட்டுமா?" "எங்க அவளத் தொடு பாக்கலாம்..."
"நீயாழா.... எனக்குப் பிறந்தே..... அவளே சொல்லட்டும். ஏழா வாடாப்பூ.... எழுந்திருக்கியா இல்லியா...."
வாடாப்பூ, ரஞ்சிதத்தின் கையைப் பிடித்துக் கொண்டாள்..... இப்போது அவள் நினைத்துப் பார்க்கும் போது இதுவரை வாழ்ந்தது வாழ்க்கை இல்லை என்பது புரிந்தது. இந்தக் காலத்தில் எந்த பெண்ணுமே, அதுவும் விவகாரம் உள்ள பெண்கூட, அடிபடாத காலத்தில், எத்தனை வருஷமா அடிபட்டிருக்கேன்... எந்த மாட்டுக்கு புல்லு வெட்டுறேனோ.... அந்த மண்வெட்டிக் கணையால்..... எந்த மாட்ட விரட்டுறதுக்கு இருக்கோ .... அந்த சாட்டைக் கம்பால அடிபட்டேன்.... எந்தக் கால பிடிச்சு விடுவனோ அந்தக் காலால் உதைபட்டேன். இவரு அப்பனாய் இருந்தாலும் சரி... கடவுளாய் இருந்தாலும் சரி. வேண்டாய்யா... இந்த வேதனை வாழ்க்கை...'
"ஏழா... வாரியா.... இல்லியா...?"
"இனிமேல் ஒம்ம வாடையே வேண்டாம்... நீருமாச்சு... நானுமாச்சு என்னால தனியா பிழச்சுக்க முடியும்... ஒம்ம சோலியப் பார்த்துக்கிட்டு போவும்..."
"வரமாட்டியா?" "மாட்டேன்... மாட்டேன்... மாட்டவே மாட்டேன்... போதுமா..."
மாயாண்டி மகள் மேல் பாயவில்லை... அவளையே உற்றுப் பார்த்தார். பிறகு கண்களை மூடிக்கொண்டே யோசித்தார்.... யோசிக்க யோசிக்க எதுவோ தென்பட்டது... பேசாமல் அங்கேயே நின்றார். கால்களை ஒன்றுடன் ஒன்றாய் தேய்த்தபடியே நின்றார்... அவர் தலை குனிந்திருந்தது.... ரஞ்சிதம் சத்தம் போட்டாள்.
"இந்தாரும்... ஒம்மத்தான்.... நீரு... ஊசிமுனையில் ஒத்தக் காலுல தவம் இருந்தாலும் வாடாப்பூ... இப்போ ஒம்ம கூட வரமாட்டா.... இப்பதான் முதல் தடவயா ஒம்ம வாழ்க்கையில் யோசிக்கியரு. நல்லா யோசியும்... சாயங்காலமா வாரும்... நாங்களும் யோசிக்கோம்."
வாடாப்பூ, அப்பனைப் பார்க்காமல், குத்துக் கல்லாய் இருந்தாள். பிறகு தனது சுதந்திரத்தைப் பிரகடனப் படுத்துவதுபோல், ஒரு பீடி இலையை எடுத்து, பழுத்த பகுதியை வெட்டிவிட்டு அதை ஒரு புதுமை இலையாகக் கத்தரித்தாள். மாயாண்டி எங்கேயும் போகாமல் அங்கேயே கால்களைத் தேய்த்தபடி நின்றார்.
அப்போது அந்த சினிமா வேன் நான்கு பாய்ச்சலில் வந்தது. அதன் ஜன்னல் ஓட்டைகளில் தலை தலையாகத் தெரிந்தன. தொப்பித் தலை, மொட்டைத் தலை... டோப்பாத் தலை.... சாதாரணத் தலை.... பந்தயத்தில் ஓடுவதுபோல் பாய்ந்த அந்த வேன், முருகன் கோவில் பக்கம் நடைபோட்டது. முன் வரிசையில் நான்கு போலீஸ்காரர்கள் அந்தப் பெண்களைப் பற்றி தங்களுக்குத் தெரியும் என்பது போல் தலையாட்டினார்கள்.
அப்போது பின்வரிசைகளில் இருந்த சினிமாப் பையன்கள், அந்தப் பெண்களுக்கு முகம் காட்டாமல் வெளியே கைகளை நீட்டி ஆட்டினார்கள்.... 'ஹலோ... ஹலோ.... சுகமா' என்று பாடினார்கள்.... 'வாரீயா... வாரீயா...' என்பது மாதிரி கைகளை ஆட்டினார்கள். அந்தப் பெண்கள் கோபத்தோடு எழுந்தபோது, அந்த வேன் பறந்தது. சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு மாயாண்டி எழுந்திரும்மா..." என்று மகளை அம்மாவாக அனுமானித்து கூப்பிடப் போன போது, அந்த வேன் மீண்டும் பாய்ந்து வந்தது.... அந்தப் பெண்களுக்கு மீண்டும் கையாட்டிவிட்டு ஊரைப் பார்த்து ஓடியது.... ரோசாப்பூ கத்தினாள்....
"எங்க துளசிங்கம் சரியான அயோக்கியனா இருப்பான் போலுக்கே.... அவனுக்கு நாங்கள்லாம் தங்கச்சிமாரு. எங்கள் பார்த்துதான் இந்த பயலுவ அப்படி கையாட்டுதாங்கன்னு துளசிங்கத்திற்குத் தெரியும். அப்படி இருந்தும், அந்தப் பயலுவளையே போலீஸ் பாதுகாப்புல அனுப்பி நம்மள கூப்பிடும்படியா செய்துட்டான் பாரு... இன்னும் காரியம் ஆகணுமுன்னா எங்கள் அந்தப் பயலுலகிட்ட கூட்டிக்கூட கொடுப்பான் போலுக்கே.... என்ன ரஞ்சிதம்
பேசாம இருக்கே ..."
"நான் நினைக்கறத நல்லாவே சொல்லிட்டே ரோசாப்பூ - பொதுவா வசதியுள்ளவன் தான் மட்டும் வாழறதுக்காகவே சாதி பேசுவான்... உறவு பேசுவான்.... மற்றபடி சாதிக்காரனையோ... உறவுக் காரனையோ. வளர்க்கணுமுன்னு நெனைக்கவே மாட்டான்... ஏழை உறவுக்காரன் இவங்களுக்கு அடுப்புக்கு விற்கு மாதிரி. சாதிக்காரன் அடிதடிக் கத்தி மாதிரி. அதுலயும் இந்த துளசிங்கம் இருக்கானே... அவன் காரியம் ஆகணுமுன்னா நீ சொன்னதை செய்யக்கூட தயங்க மாட்டான்... பாவம்... கோலவடிவு..."
"புஷ்பம் மட்டும் என்ன... கோலவடிவ துளசிங்கம் சீரழிச்சான். புஷ்பத்த அலங்காரி சீரழிச்சிட்டாள்.... கன்னி கழியாமலே அது கழிஞ்சது மாதிரி ஆயிட்டாள். சோறு தண்ணி இறங்காம படுத்த படுக்கையா கிடக்காள்..."
"இவ்வளவுக்கும் காரணம் இந்த துளசிங்கம், இந்த அலங்காரி, இந்த போலீஸ்."
"திருமலையையும் இந்த மாயாண்டி மனுஷனையும் சேர்த்துக்க."
"சரி... இப்போ .... ஆட்கள் முக்கியமில்ல.... அவங்க அட்டூழியந்தான் முக்கியம்... நாம் ஏதாவது செஞ்சாகணும்..."
ரஞ்சிதம் முகத்தில் கையமர்த்தி, யோசித்தாள்.

