Chapter 38
வீட்டிற்குள் இருத்தி வைக்கப்பட்ட இடத்தில் அப்படியே பித்துப் பிடித்தவள் போல் விழித்த கோலவடிவின் தலை முடியைச் சரிசெய்தபடியே ரஞ்சிதம் ஆறுதல் சொன்னாள்.
"கண் கலங்காத கோலம்.... ஒரு ஆம்புளத்துண இல்லாமலும் ஒரு பொண்ணால வாழமுடியுமுன்னு காட்டு.... பெத்தவங்க மத்த வங்களா ஆயிட்டால், மத்தவங்களே நமக்கு பெத்தவங்கன்னு மனச தேத்திக்கணும்... நீ ஒன் ஆயுள்வரைக்கும் என் வீட்லயே இருக்கலாம்... நம்மள எப்போ வேண்டான்னு சொல்லுதாங்களோ அப்பவே நாமும் அவங்கள வேண்டாங்கணும்... இப்போ எதுவும் குடிமுழுகிடல்.... பேசாம கொஞ்ச நேரம் தூங்கு... நான் அதுக்குள்ள சோறு பொங்கிடுறேன்.."
ரஞ்சிதம், ஒரு பாயை விரித்து, கோலவடிவைக் குழந்தையை சாய்ப்பதுபோல் சாய்த்து, பிறகு அவள் தலையைத் தூக்கி, ஒரு தலையணையை வைத்தாள்... பாவம் எப்போ சாப்பிட்டாளோ... இவள் சாப்பிட்டவள் இல்ல.... சாப்பிடப்பட்டவள்...
ரஞ்சிதம் அடுப்படி வேலையில் இறங்கி அரைமணி நேரமாகியிருக்கும்... கோலவடிவ, மல்லாந்து படுத்தபடி, அந்த வீட்டின் ஓலைக்கூரையை, பரக்கப் பரக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள்....
திடீரென்று ஒரு விக்கி வண்டிச் சத்தத்தின் பின்னணிக் கூச்சலில் துளசிங்கத்தின் போர்ச்சத்தம் கேட்டது..... "ஏடி.... ரஞ்சிதம்... வாடி வெளில்...."
ரஞ்சிதம் வெளியே வந்தாள்.... விக்கியின் இரண்டு பக்கமும் இரண்டு கால்களை போட்டபடி துளசிங்கம் கர்ஜித்தான்...
"மரியாதியா... அந்த ஓடுகாலி நாய... வெளில துரத்தப் போறியா இல்லியா? ஆற அமர இவள் என் தலையில் கட்டலாமுன்னு பாக்கியா? ஒன்னாதாமுழா... ஏய் ரஞ்சிதம்.... ஒத்த வீட்டு நாயே... ஒனக்கு.... என் தலதானா கிடச்சது? அதுதான் நடக்காது.... பேசாம, அவள் அப்பன் வீட்டப் பார்த்து அடிச்சு விரட்டல, மரியாதி போயிடும்... எவன் கூடவோ ஒடிப் போயிட்டு என்கிட்ட வரப் பாக்கிற எச்சிக்கல நாயி இவள்... என் விஷயத்துல ஏமுழா தலையிடுறே...''
"வயசுப் பொண்ண காதலிக்கது மாதிரி காதலிச்சுட்டு... அப்புறம் அடிச்சு விரட்டுறது சொந்த விஷயமுல்ல துளசிங்கம்..."
"அவள் மயக்குனது மாதிரி ஒன்னயும் மயக்கணுமா...?"
"நீ அனாவசியமாய் பயப்படுற துளசிங்கம்... இவள் ஒங்க வம்புக்கே வரமாட்டாள்... நீ சம்மதிச்சாலும் ஒன்னைக் கட்டிக்க இவள் சம்மதிக்கமாட்டாள். தயவு செய்து இனும்யாவது அவள் விட்டு வை..."
"ஒன் சாலக்கு எனக்குத் தெரியாதா... இந்த ஊருக்கு எமனே நீதான்... இன்னைக்குள்ள இவளை நீ வீட்ட விட்டுத் துரத்தல்... அப்புறம்.... ஒனக்கு வீடே இருக்காது..... ராத்திரியோட ராத்திரியா ஒன்னையும்.... கொன்னு வீட்டையும் எரிச்சுப்புடுவேன் எரிச்சு...."
இதற்குள் சத்தம் கேட்டு பிள்ளைமார்குடி பெண்களும், ஆண்களும் கூடி விட்டார்கள். ஏற்கெனவே ரஞ்சிதத்தைப் பிடிக்காதவர்கள். அதோடு சொன்னபடி செய்யும் துளசிங்கம் வைக்கும் நெருப்பு.... ரஞ்சிதத்தின் வீட்டோடு மட்டும் நிற்காது... ஆகையால் ரஞ்சிதத்தை ஆளுக்கு ஆள் திட்டினார்கள். துளசிங்கத்திற்குத் தாங்கள் வேண்டப்பட்டவர்கள் என்று காட்டினார்கள்.
"ஏய் ரஞ்சிதம்... வேலில போற ஓணான... எடுத்து என் தாழில போடுறே..? ஒன்னால எங்களுக்கெல்லாம் கெட்ட பேரு... நீ இருக்க துவரைக்கும் நாங்க நிம்மதியாய் இருக்க முடியாது... இன்னைக்கே இந்த ஊரை விட்டு... நீ போயிடணும்... இல்லன்னா நாங்களே விரட்டுவோம்..."
ரஞ்சிதம் இடுப்பில் கை வைத்தபடி திருப்பிக் கத்தினாள்....
"இது எங்க அம்மா அப்பா நடமாடுன வீடு. மூதாதையர் கால்பட்ட இடம்... நான் பிறந்த பூமி... ஆயிரம் துளசிங்கம் வந்தாலும், என்னை அப்புறப்படுத்த முடியாது... வேணுமுன்னால் நீங்க இந்த ஊரைவிட்டுப் போங்க... நான் போகப் போவதாய் இல்ல..."
கோலவடிவு, வளைகோடாய் எழுந்தாள்... ரஞ்சிதம் கத்துவதையும், அவளின் உறவினர்கள் திருப்பிக் கத்துவதையும் அதனால் ஏற்பட்ட கூச்சலையும், குழப்பத்தையும் குழப்பத்தோடு பார்த்தாள். "நானே அவள் வெளில இழுத்துப் போடுறேன் பாரு" என்று துளசிங்கம் கத்தியது ஊருக்கே கேட்டாலும், அவளுக்கு லேசாகத்தான் கேட்டது. அவள் எழுந்தாள். கொல்லைப்புறத்தை நோக்கி மெல்ல நடந்தாள்.

