Chapter 37

பழனிச்சாமி, கோலவடிவைத் தன் மார்போடு சேர்த்து துளசிங்கம் வீட்டிற்குள் நுழைந்தபோது, அங்கே கூடியிருந்தவர்கள் திகைத்து போனார்கள். ஒருவர் என்னய்யா நெனச்சே' என்று ஆவேசப்பட்ட எலி டாக்டரை பிடித்துக் கொண்டார். சுத்தப்படுத்தப்பட்ட மாட்டுத் தொழுவில் நான்கைந்து கோவில் ஆடுகள் அங்கே தலைகளும், முண்டங்களுமாகக் கிடந்தன. கால்படி பொங்கல் சோறு, ரெண்டு வாழைப்பழம், கால் தேங்காய், ஆகியவற்றுடன், ஆட்டிறைச்சி சம அளவில் வைக்கப்பட்டன. மொத்தம் அறுபது பங்குகள். இனிமேல் ஆட்டுத் தலைகளை ஏலம் போடுவார்கள். அதுவரைக்கும் அங்கிருந்த பெண்களும், பிள்ளைகளும் அங்கேயே கிடப்பார்கள். பங்குகள் குறைந்திடப்படாதே... அழுகுன வாழைப்பழத்தை நொறுக்குன தேங்காயோட வச்சுடப்படாதே....

கோலவடிவின் கோலத்தைப் பார்த்து பதைத்தவர்கள் பலர்; பகைத்தவர்கள் சிலர்.... என்ன பேசுவது என்று தெரியாமல், திகைத்தவர்கள் ஒருசிலர். பழனிச்சாமி மகளை ஒரு கிடாத்தலை இருந்த இடத்திற்கு முன்னால் நிறுத்தியபடியே வாயுருக பேசினார்.

"தர்மப் பிரபுக்களே... இனிமேல் இவள் உங்களோட சொத்து. நா யார் சொத்துக்கும் ஆசப்படுறவன் இல்லை என்கிறது ஒங்களுக்கே தெரியும். துளசிங்கத்தோட இந்த சொத்த நீங்க விப்பியளோ.... வைப்பியளோ.... விறகா எரிப்பியளோ... ஒங்க இஷ்டம்... நான் தலையிடமாட்டேன்... நான் யார் தலையிட? போயிட்டு வாறேன்... தப்புத் தப்பு போறேன்.... ஒரே வழியாய் போறேன்... புண்ணியவான்களே..."

பழனிச்சாமி மகளை ஏறிட்டுப் பார்க்காமலே, குனிந்த தலை நிமிராமல், பேசிய வாய் மூடாமல் பேய்ப் பாய்ச்சலில் நடந்தார். கோலவடிவு, எங்கு நிற்கோம் என்ற உணர்வு இல்லாமல் அப்படியே நின்றாள். ஏதோ ஒரு பொம்மைக்கு கலர் அடிக்கப்பட்டு அங்கே நிறுத்தப்பட்டிருக்கிறது என்பதுபோல் நின்றாள். கண்கள் வெளுத்துப் பார்த்தன. எதையோ கேட்ட வெறுமையில் காதுகள் சிலிர்த்து நின்றன. தலையோ தாழ்ந்து போனது... அதோ வெட்டப்பட்டுக் கிடக்குதே ஆடு. அதன் தலையை பொருத்தி, செங்குத்தாய் நிறுத்திப் பிடித்தால் எப்படியோ அப்படி நின்றாள்.... எவரும் பிடிக்காமல், அவளும் கீழே விழாமல், அப்படி நின்றது ஆச்சரியந்தான்... அதிசயந்தான்.

செம்பட்டையான் கூட்டத்தினருக்கு, இப்போது அங்கே நடந்த சம்பவத்தின் முழுத் தாத்பரியம் மெள்ள மெள்ளப் புரிந்தது. மாமிசப் பங்குகளை சரிபார்த்த, அந்தக் கண்கள், அந்த நரமாமிச உணவை நைந்து பார்த்தன..... நையாண்டியாப் பார்த்தன. நமக்கும் பெண்ணிருக்கே என்று பயந்து பார்த்தன. நமக்கென்ன என்று பட்டும் படாமலும் பார்த்தான்... என் வீட்டு ஆடுகளை அறுக்கிறதுனால் ஒரு ஆட்டுத்தல் எனக்கு இனாம் வேணும்' என்று கேட்பதற்கு, கால நேரம் பார்த்துக் கொண்டிருந்த துளசிங்கத்தின் அப்பா, எலி டாக்டர் கோலவடிவின் அருகே வந்தார்.

"ஒப்பன் தான்... அறிவில்லாமல் கூட்டி வந்தான்... நீ எப்படி இங்கே வரலாம்? அந்தப் பயல கூட்டிட்டு ஓடும்போது என்கிட்ட சொல்லிட்டா ஓடின.... அந்த பயலே எனக்கு சம்பந்தம் இல்ல.... நீ எப்படி சம்பந்தமாவும்? திரும்பி நட... திரும்பி பாராமல் நட...''

கோலவடிவு, பேசாமல் அங்கேயே நின்றாள்... எங்கே நிற்கிறோம் என்பது தெரியாமல் எங்கேயோ நிற்பது போல் நின்றாள். இதை எதிர்ப்பாகக் கருதிய எலி டாக்டர், அந்த எதிர்ப்பை முறியடிக்கும் குறி, அவள் முதுகில் இருப்பதுபோல், அவளை உற்றுப் பார்த்துவிட்டு, பிறகு அவள் முதுகைப் பிடித்து தள்ளினார். கீழே விழப் போனவளை, முடியைப் பிடித்து நிறுத்தினார். அவள் அசையாமல் நிற்பதைப் பார்த்துவிட்டு, அவள் கையைப் பிடித்து இழுத்தார். இழுத்துக் கொண்டே நடந்தார். இவரது கையைவிட, அவளது கை மிக வலுவாக இருந்ததால், அவர் , கைகளை விட்டுவிட்டு, பின்னால் கிடந்த தலைமுடியை தேடிப் பிடித்து, முன்னால் கொண்டு வந்து, பச்சை கீரைப்போல், படர்ந்திருந்த அந்த தலை முடியைக் கயிறு மாதிரி திருகிவிட்டு, அதன் முனையை பிடித்தபடியே இழுத்தார். இழுத்தபடியே நடந்தார். நடந்தபடியே கத்தினார்.

“எத்தனைபேர் கிட்ட போனியோ... இவன் எத்தனாவது ஆளோ.... இங்க எப்படிழா வரலாம்?"

செம்பட்டையான்கள் சிலருக்கு மனம் கேட்கவில்லை.

"ஏப்பா.... பெண்பாவம் பொல்லாதுப்பா... ஒன் மவன நம்பி வந்த ஜீவன்... அவன் விட்டாலும் நாம் விடப் படாதுப்பா... ஒன் மவளுக்கும் இப்படி ஒரு நெலம வந்தால், என்னப்பா செய்வே.... பாவம் இருந்துட்டுப் போட்டும்." |

எலி டாக்டர் யோசிப்பது போல் நின்றபோது, அவரது புலிப் பொண்டாட்டி உறுமல் குரலோடு பெரிய வீட்டிற்குள் இருந்து வந்து, சொன்னவர்களைப் பார்த்து சூடாகக் கேட்டாள்.....

"ஒங்க மவளுவ இவள மாதிரி பண்ணுவாளுவ. ஆனால், என் மகள் பண்ணமாட்டாள். அப்படிப் பண்ணுனால் அவளை எருக்குழிலே நானே வெட்டிப் புதைப்பேன்- இவளை எப்படிச் சேக்க முடியும்? எந்தப் பொண்ணையும் ஏறெடுத்துப் பாராத என் மவன மயக்குனாள்... அவனும் நியாயத்துக்குக் கட்டுப்பட்டு அவளைக் கூட்டிட்டுப் போனான்... கோயில் கொடைக்கு கூட்டிவரப் போனான்... இவதான், அங்க இருந்து எங்கேயோ ஓடிப்போயிட்டு, இப்போ வந்து நிக்காள்... என் மகனை விட்டுட்டுப் போனவளை சேத்தால், பழையபடியும் போகமாட்டாள்னு என்ன நிச்சயம்...? விளையும் பயிரு முளையிலே தெரியும்.... இது, மூணு இல விடுமுன்னாலேயே நாலு முந்தானை விரிச்ச வம்சம்... இதோ பாரும்... இன்னுமா பார்த்துக்கிட்டு நிக்கியரு... பாவி மனுஷா ஒம்மத்தான்...."

புருஷன்கார எலி டாக்டர், கோலவடிவின் பிடித்த முடியை, இறுக்கினார். சுருட்டுச் சுருட்டாய் சுருட்டி, அதன் இடைவெளியைக் குறைத்தார். அவளை, வெட்டுப்படப் போகும் ஆட்டை இழுப்பதுபோல, இழுத்துக் கொண்டு போனார். கல்லெல்லாம் அவள் காலில் மோதின. மண்ணெல்லாம் அவள் விரல்களில் அப்பின்.... அவள் நடக்கவில்லையானால், தலைமுடி பிய்ந்து, அவர் கையில் வந்திருக்கும். கோலவடிவு, வலிதாங்க முடியாமல் நடந்தாள்... மன வலியை உடல் வலி சிறிதாக்க, உடல் வலியை மனவலி சிறிதாக்க, அவள் கால்களைத் தாவிப் போட்டு, எலி டாக்டரின் இழுப்பு வேகத்தைவிட அதிக வேகத்தில் நடந்தாள். அந்த வீட்டிற்கு வெளியே உள்ள முச்சந்திக்கு வந்ததும், எலி டாக்டர், கோலவடிவை விட்டு விட்டு, "வீட்டுக்குள்ள வந்தே. வெளில வராமத்தான் போவே" என்று எச்சரித்து விட்டுப் போய்விட்டார் - ஆட்டுத் தலையை, அதிகாரப் பிச்சையில் கேட்பதற்கு.

கோலவடிவு குன்றிப்போய் நின்றாள்.

அவளுக்கு அருகே, முச்சந்தியின் ஒரு மூழிக்கல்லில், தன்னந்தனியாய்ச் சிக்கிக் கொண்ட ஒரு பூணிக் குருவியை இரண்டு காகங்கள் சுற்றி வளைத்துக் கொத்திக் கொண்டிருந்தன.... இந்த குருவிகள் கூட்டமாக... குடும்பமாக தத்திக் கொண்டிருக்கும் போது, அவற்றை சிநேகித முறையில் பார்த்த காகங்கள் தான் இவை. இப்போதோ, குடும்பத்திலிருந்து தனிப்பட்ட அந்த சின்னக் குருவியை, மேலும் தனிப்படுத்தி, வியூகம் போட்டு, அதன் உடம்பை சுரண்டிச் சுரண்டி ரத்தப் பிழம்பாக்கிக் கொண்டிருந்தன. இவற்றிற்கு எதிர்த் திசையில், நான்கு நாய்களுக்கு இடையேயான இடைவெளிக்குள் தாவி தப்பிக்கலாமா அல்லது தாக்கித் தப்பிக்கலாமா என்பதுபோல், ஒரு பூனை பதுங்கிப் பார்த்தது.

எலி டாக்டர் பிடித்த தடயத்துடன், தலைமுடி கூம்பி நிற்க, அவள் சிலிர்த்தாள். கண் மூடியபடியே கதியற்று நின்றாள். பழக்கப்பட்டச் சத்தம் கேட்டு லேசாய், அரை இருளாய்க் கண் விழித்தாள். துளசிங்கம், ஒரு சினிமாப் பாட்டைப் பாடாய் படுத்திக் கொண்டு வந்தான். அவளைப் பார்த்து திடுக்கிட்டவன் போல் சிறிது நின்றான். பிறகு அவள் முதுகைப் பிடித்துத் தள்ளியபடியே கத்தினான்.....

"வெட்டாம்பட்டியில்... எவன் கூட்டி படுத்தே....? படுத்த பயல கூட்டிக்கிட்டு இப்பவும் போ... இங்கே ஒனக்கு என்ன வேல..."

துளசிங்கம், அவளைத் தள்ளிய வேகத்தில் அவள் கீழே விழுந்தாள். விழுந்த வேகத்தில் தரைக்குச் சிவப்புச் சாயம் போட்டாள். துளசிங்கம் சிறிது நேரம் அவளை முறைத்துப் பார்த்துவிட்டு, வேகவேகமாய் வீட்டிற்குள் நுழைந்தபோது, அவள் மெள்ள மெள்ள எழுந்தாள். அவள் நெற்றியில் பெருக்கெடுத்த ரத்த ஊற்றைப் பார்த்த பெண்கள் 'அச்சச்சோ' போட்டார்கள். ஆளுக்கு ஆள் நினைத்ததைப் பேசினார்கள்..... இன்னிக்கு..... ஊர்ல.... கூட்டம் போட்டு ஏதாவது பண்ண ணும்... பாவமா... இருக்கு... இவளுக்கு இதுதான் சரி... இதைப் பாத்துட்டாவது... மத்தவளுவ திருந்தணும்.... இது பொண்ண பெத்தவங்களுக்கும், அவளப் பிடிச்சவங்களுக்கும் நடக்கிற விவகாரம்... நாளைக்கே ஒண்ணாயிடு வாங்க... நாம இன்னிக்கு தலையிட்டு... நாளைக்கு என் பொல்லாப்பாகணும்....? ஆனாலும் ஒருத்திய.... இப்படி....

முச்சந்தியில்.... அனாதரவா விடுறது அநியாயம்...

கோலவடிவுக்கு ஊரார் பேச்சு காதில் விழவில்லை .... அடிமேல் அடியாய் நடந்தாள். கூன்பட்டு, கண் குருடுபட்டவள் போல், நடந்தாள். வலித்த நெற்றியை மட்டும் அவ்வப்போது வலது கை பெருவிரலால் அழுத்திவிட்டு, அழுத்திவிட்டு, அழுத்தமின்றி நடந்தாள். நடந்து கொண்டே போனாள்..

எலி டாக்டர் வீட்டுக்குள், செம்பட்டையான் பீடிப் பெண்கள் கோபங் கோபமாய் கத்துவது லேசாய் கேட்டது. புஷ்பம் ஒப்பாரி போட்டு அழுவதும், ஏதோ ஒரு அழுகைச் சத்தம் போல மட்டுமே அவளுக்குக் கேட்டது.

குழந்தை நடப்பது போலவும், கிழவி நடப்பது போலவும், இலக்கு இல்லாமல் நடந்தாள்... இடந்தெரியாமல் நடந்தாள்... செம்பட்டையான் பகுதிக்கும் கரும்பட்டையான் பகுதிக்கும் எல்லை போலான பழைய காலத்து இளவட்டக் கல்லருகே கண்களை மூடியபடி உதடுகளைப் பிரித்தபடி நின்றாள்... தொலைவில் நின்ற வாடாப்பூவும், சந்திராவும், கூப்பாடு போட்டபடியே அவளைப் பார்த்து ஓடி வரப் போனார்கள். கரும்பட்டையான்கள், அவர்களை, கைகளைப் பற்றி வீட்டுக்குள் கொண்டு போனார்கள்.

அந்தப் பக்கமாக ஒரு போலீஸ்காரருடன் அலங்காரி வந்தாள். கோலவடிவு என்ன செய்கிறாள் என்பதைப் பார்ப்பதற்காக. துளசிங்கமும் தற்செயலாக வருவதுபோல், வந்து கொண்டிருந்தான்... கோலவடிவையே, உதடுகள் துடிக்க உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அலங்காரி, எதுவும் நடக்காததுபோல் நடக்கப் போன துளசிங்கத்தின் கையைப் பிடித்து இழுத்தபடியே மன்றாடினாள்.

"ஏய் ராசா... சித்தி சொல்லுறதக் கேளுடா.... பெண்பாவம் பொல்லாதுப்பா.... நம்பள தஞ்சமுன்னு வந்தவள் சேத்துக்கப்பா...."

"என்ன சித்தி... ஒன் பேச்சு ஒரு மாதிரி இருக்குது..."

"ஆமாம்பா... யோசிச்சு பார்த்தா நல்லதா தெரிஞ்சுது, இப்போ நடத்தி பார்க்கும்போது மனசுக்கு கஷ்டமா இருக்குதுடா.... சித்தியோட முகத்துக்காகவாவது..."

"ஏய் அலங்காரி... ஒன்னை மாதிரி கண்டவன் கூடல்லாம் ஓடிப்போறவள் எனக்கு பெண்டாட்டியா வரணுமா?"

"எப்பா.... என் மவனே.''

"யாருழா... ஒனக்கு மகன்? ஒன் மகளே எவனுக்குப் பிறந்தான்னு ஒனக்குத் தெரியுமாழா..."

"எப்பா இதுக்குமேல பேசாதப்பா..."

"ஒனக்கு வயசாயிட்டு.... இவள் என் தலையில் போட்டால்... ஒன் வியாபாரத்த நல்லா நடத்தலாமுன்னு பாக்கியா..."

துளசிங்கம் காறித் துப்பிவிட்டு, தன்பாட்டுக்கு நடந்தான்.

அலங்காரி போகிற துளசிங்கத்தையே வெறித்துப் பார்த்தாள். 'இவனை பயன்படுத்த நெனச்சேன்...... இவனோ.... என்னையே பயன்படுத்தி இருக்கான்... மோசம் போயிட்டேனே... நான் பெத்த மவள் - கல்யாணத்துக்குப் பிறகு என்னை ஏறிட்டுப் பார்க்காம போன நாளுல இருந்து என் மனசு.... என்ன பாடு படுதோ , அப்படித்தானே... இந்த பழனிச்சாமியும்... பாக்கியமும் படுவாவ...'

இதற்குள், எலி டாக்டரின் மனைவியும், ஏழெட்டு செம்பட்டையான்களும் சத்தம் கேட்டு ஓடி வந்தார்கள்... எலி மனைவியின் கையில் துடப்பம்..... அவன்கள் கையில் சாட்டைக் கம்பு... கருங்கல்லு... வாதமடக்கிக் கம்புகள்.... ஒருத்தன் கத்தினான்...

"எல்லாம் இந்த தாசி முண்ட அலங்காரியால வந்த வினை... இவள் விடப்படாது... பிடிங்கடா.... பிடிங்கடா... ஏழா... நில்லுழா..."

அலங்காரி நிற்கவில்லை ...... உயிர்பிழைக்க அவள் ஓடிக் கொண்டிருந்தாள்... " ஒரு காலத்துல சொக்காரன் எல்லாரும் ஒன்னை நாயத் துரத்துறது மாதிரி துரத்தப் போராங்க பாரு" என்று பெத்த மவள் போட்ட சூடு.... இப்போதுதான் வலிப்பதுபோல் ஓடினாள்.... இதற்குள் எலி டாக்டரும், காஞ்சானும் கூட, கூட்டத்தோடு கூட்டமாய் அவளை விரட்டினார்கள். அவள் எலி டாக்டருடன் கொஞ்சியதை காஞ்சான் நினைத்துக் கொண்டும், காஞ்சானிடம் கொஞ்சியதை எலி டாக்டர் நினைத்துக் கொண்டும் கோபாவேசமாய் விரட்டினார்கள். அவளிடம் கொஞ்சக் கொடுத்து வைக்காத கிழடு கெட்டைகள், அவளை விரட்டுவதில் காஞ்சானை மிஞ்சினார்கள். எலி டாக்டரை விட வேகமாகப் பாய்ந்தார்கள்.

அலங்காரியோ ஒரு குட்டிச்சுவரை, குதிரை போல் தாண்டி, கழுதை போல் கத்தியபடி ஓடிக் கொண்டிருந்தாள்.....

இதற்குள், அவளைத் துரத்திய செம்பட்டை வம்சம் வழியில் துளசிங்கத்தைப் பார்த்து நின்றது. பிறகு அவனை இழுத்துக் கொண்டு, பங்கு போடும் இடத்தை நோக்கி நடந்தது.

கோலவடிவு நின்ற இடத்திலேயே நின்றாள்.... அவளைச் சுற்றிய வீடுகளின் ஜன்னல்களில் கண்கள் தான் பதிந்திருந்தன.. கால்களோ வெளிவரவில்லை. வாசலோரங்களில் கூடிக்கூடி நின்றார்கள் - எவரும், எவளும் அவளை "வா" என்று அழைக்கவில்லை. அவளைப் பொறுத்த அளவில், திறந்திருந்த வாசல்களும், மூடப்பட்டவையே..... அன்னி யோன்யமாகப் பழகிய உறவினர்களும் அந்நியர்களே.

கோலமிழந்து நின்ற கோலவடிவு, யாரோ தனது கையைப் பற்றியது கண்டு திடுக்கிடாமலே பார்த்தாள் ரஞ்சிதம்.....

"ஏன் கோலம் மிரளுறே...? நான் இருக்கேன் கோலம்.... வாய் செத்த இந்த ஊரில் நாம ரெண்டு பேருந்தான் உயிரோட இருக்கோம். என் வீட்டுக்கு வா.... நான் ஒன்னைக் காப்பாத்துறேன்... ஒன்னை இந்த நிலைக்கு கொண்டுவந்த எல்லோரையும் விடப்போறதாய் இல்ல..."

ரஞ்சிதம் கோலவடிவின் கையைப் பிடித்து லேசாய் இழுத்தாள். தன்னிடம் எதிர்ப்புக் காட்டாமலே இணைந்து கொண்ட கோலவடிவை, முதுகில் தட்டியபடியே, ரஞ்சிதம் வீட்டைப் பார்த்து நடந்தாள். கோலவடிவையும் நடத்திக் கொண்டே போனாள்.

வீட்டுக்கு வெளியே, அம்மாவின் பாராவோடு' வந்து துளசிங்கம் அவர்கள் இருவரும் இணைந்து நடப்பதைப் பார்த்துவிட்டு, பல்லைக் கடித்தான். இந்த ரஞ்சிதம் ஊர்ல இருந்தால் தானே இந்தக் கோலவடிவும் இருக்க முடியும்...