Chapter 23

வியாழக்கிழமை ; இரவு ஒன்பது மணி என்பதை உறுதிப்படுத்துவது போல் தொலைக்காட்சிப் பெட்டியில், தமிழ்ப் பெண் ஒருத்தி மறைந்து, ஒரு இந்திப் பெண் தோன்றினாள்.

பழனிச்சாமி வீட்டில் கல்யாணம் நடப்பதுபோல் பந்தி நடந்தது. வில்லுப் பாட்டாளிகள், மேளக்காரர்கள், (பதினாறு எம்.எம். காரர்கள் ஏனோ வரவில்லை) பந்தல்காரர்கள், ஒலிபெருக்கிக் காரர்கள், இவர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்தவர்கள், அட்வான்ஸ் நிச்சயித்தவர்கள், பண்ணையாட்கள் என்று பல்வேறு தரப்பினர், பல்கிப் பரவி, பாய்களில் உட்கார்ந்து வாழை இலைகளை வழித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ராமசுப்பு, திருமலை, அருணாசலம் போன்றவர்கள் பறிமாறி முடித்துவிட்டு, தாங்களும் சாப்பிடுவதற்காக உட்கார்ந்தார்கள். பந்தியைக் கண்குளிரப் பார்த்து விட்டு, பழனிச்சாமி, தமது தேக்குக் கட்டிலில் உட்கார்ந்தார். எதிரே முற்றத்தில் குவியல் குவியலாய் கிடந்த வாழைக் குலைகளையும், வெற்றிலைக் கட்டுக்களையும், பூமாலைகளையும் மேலெழுந்த வாரியாகப் பார்த்துவிட்டு, லேசாகக் கண்மூடப் போனார்.

சுடலைக்குக் கொடை வெள்ளிக்கிழமை என்பது ஒப்புக் கொள்ளப்பட்டாலும், அது உச்ச நாள்... இன்று, பதினொரு மணியளவில் மேளம் தட்டப்படும்.... ஒலிபெருக்கி பாட்டுப் பாடும்... அதற்குள் எழுந்துவிடலாம் என்றுதான், பழனிச்சாமி படுக்கப் போனார். அதற்குள் வந்துட்டானுவ.... ராமசாமி, நாட்டு வக்கீல், மாடக்கண்ணு , கருப்பசாமி....

பழனிச்சாமியின் மனைவி பாக்கியம், கணவரின் காலடிப்பக்கம் உட்கார்ந்திருந்தாள். கோலவடிவு சாப்பிட்டாளோ , சாப்பிடலியோ, அம்மாவின் பக்கத்தில் அவளை ஒட்டியபடியே உட்கார்ந்து அம்மாவின் கால் பாதங்கள் மேல் தன் கால்களைப் பரப்பினாள். அப்பாவையே, அவர் பார்க்காத சமயமாகப் பார்த்தாள். எதிரே பனை நார் கட்டிலில் 'உஷ்' என்ற 'அப்பாடா மூச்சோடு' உட்கார்ந்த அண்ணன் திருமலையைக் குற்ற உணர்வோடு பார்த்தாள்.... அம்மாவின் பாதங்களை அழுத்தமாகப் பற்றினாள்... தாய்க்காரி பாக்கியம், தற்செயலாகத்தான் சொன்னாள்.

"என்னழா வந்துட்டு ஒனக்கு...? ஏன் இப்டி ஒட்டுப் புல்லு மாதிரி ஒட்டுறே... ஒரே புழுக்கமா இருக்குல்ல... தள்ளி உட்காரேன்..."

கோலவடிவு தள்ளி உட்காரவில்லை. அம்மாவைத் தள்ள போகிறவள் போல் நெருக்கியடித்தாள்... பங்காளிகளின் பேச்சு சுவாரஸ்யத்தில், பாக்கியமும் அந்த பாச நெருக்கடியை மறந்து விட்டாள் கோலவடிவுதான், அங்கே நடக்கும் பேச்சைக் கேட்பது போல் பாசாங்கு செய்தபடி எங்கோ நினைத்தாள்... இவங்கள் விட்டுட்டு எப்டிப் போவேன்... என் அம்மாவ விட்டுட்டு ஒரு மணி நேரத்துக்கு மேல பிரிஞ்சதில்ல.... எங்கப்பா முகத்த ஒரு நாளைக்கு முப்பது தடவையாவது பாக்காட்டா அது எனக்கு நாளே கிடையாது.... எனக்காவ அரிவாளைத் தூக்குன அண்ணா ... இவனுக்கு நானே அரிவாளாயிடப்படாதே... போக மாட்டேன். எங்கேயும் போகமாட்டேன். யார்கூடவும் போகமாட்டேன்.... போகவே மாட்டேன்....

கோலவடிவு, மூச்சைப் பிடித்திழுத்து, முன்னெற்றிச் சுருக்கங்கள் கலைய, பதட்டம் லேசாய் அடங்க, அம்மாவின் பாதத்தைப் பிடித்த கைகளைத் தூக்கி, மடியில் போட்டபடியே மனதை வைராக்கியப் படுத்தினாள். அங்கே நடந்த பேச்சுக்களின் ஒலியை மட்டும் உள்வாங்கி, அதன் உட்பொருள் புரியாமல் இருந்தவள், திடீரென்று காதுகளைக் கூர்மைப்படுத்தினாள்... மத்தியானமே காற்றில் வந்த செய்திக்கு, நாட்டு வக்கீல் நாராயணன் வர்ணனை கொடுத்தான்.

"காத்துக்கருப்பன் குடும்பத்த கலுகமூட்டி பிரிச்சுட்ட பெருமையில எலி டாக்டர் நின்னாரா..... அப்போ பார்த்து அந்த வேன் டயா நம்ம திருமலை காற்றப் பிடுங்கி விட்டானா... வேனுக்குள்ள இருந்த பயலுவ பித்துப் பிடித்துப் போய் இருந்தாங்களா.... அப்புறம் கையெடுத்து கும்பிட்டபடியே இறங்குனாங்க... கூட்டம் அவங்கள் அடிக்கப் போச்சுதா.... உடனே எலி டாக்டர் என்ன பண்ணுனாரு தெரியுமா...''

"தெரியுமான்னு தெரிஞ்சவன் கேட்டா.... என்னடா அர்த்தம்... சொல்லு...”

"எலி டாக்டர் தரையில் அப்படியே நெடுஞ்சாண் கிடையா விழுந்துட்டாரு... கூட்டத்துக்கு முன்னால் நல்ல பாம்பு படமெடுத்து காட்டுறது மாதிரி... படுத்தபடியே ஜனங்கள் கையெடுத்துக் கும்பிட்டாரு...”

"மானங்கெட்ட பய..."

"நீ வேற, அப்டி மட்டும் அவரு கும்பிடாட்டா - மெட்ராஸ்காரனுவள் ஊர்க்காரங்க உண்டு.... இல்லன்னு பிச்சி எடுத்திருப்பாங்க..... ஒரு எலும்புகூட மிச்சம் இருந்திருக்காது...."

"அப்புறம்.."

"துளசிங்கம் சேக்காளிவ, கோணச்சத்திரத்துக்கு ஓடிப் போயிட்டாங்களாம்.... இதுல ஒண்ணு தெரியுமா...? இதுக்குல்லாம் காரணம் துளசிங்கமுன்னு அவனைப் பிடிச்சு வாரதுக்கு காத்துக் கருப்பன் பற்குணம், காரை வீட்டுக்காரன் வாலன்', இன்னும் சிலருமா ஓடுறாங்க.... எலி டாக்டர் இவங்க பின்னால் ஓடினாரு... துளசிங்கம் கிடைக்கல எப்படியும் ரயில்வே பாலம் பக்கம் வருவான்னு நாலைஞ்சு பேரு.... அவனுக்குன்னே அரிவாள வச்சுட்டு காத்து இருக்காங்க.... துளசிங்கத்துக்கு அநேகமாக ஒத்தக் கையாவது, காலாவது போயிடும்..... நாம் செய்ய வேண்டியது காளியாத்தா வேற ஆள்மூலம் செய்ய வைக்கிறாள்.... துளசிங்கம் பய தொலைஞ்சிட்டாமுன்னு தோணுது..."

"இதனாலதான்.... பெரிய சினிமாவ மறந்துட்டியா?"

"ஊர்ல இதவிடப் பெரிய சினிமா நடக்கப்போவுது... துளசிங்கம் பய வசமா மாட்டிக்கிட்டான்... இந்நேரம் முடிச்சிருப்பாங்க..."

பழனிச்சாமி, ராமசுப்புவையும், நாட்டு வக்கீலையும் செம்பட்டை யான்களைப் பார்ப்பது போல் பார்த்தார். சுடச்சுட , சூடுபோட்டுப் பேசினார்.

"ஒருவன அடிக்கிறதும்.. பிடிக்கிறதும்... மனுஷத் தன்மையில்லடா கல்ல எறியுறவனுக்கு ஒரு நிமிஷம், அதனால் கஷ்டப்படுறவனுக்கு ஒரு யுகம்.... இதுல உடம்புக் கஷ்டத்தைவிட மனக்கஷ்டம் இருக்கே... அது சொல்லி மாளாது.... துளசிங்கத்த ஒரு காலை எடுத்துட்டாங்கன்னே வச்சுக்க. அவன் ஒத்தக் காலுல நொண்டியடிச்சு நம்ம வீட்டுப் பக்கமா நடந்து போறான்னு வச்சுக்க... நம்மள - 'நீங்களும் ஒரு காரணம்' என்கிறது மாதிரி பரிதாபமா பாக்கான்னு வச்சுக்க.... ஒன்னால தாங்க முடியுமோ என்னமோ... என்னால தாங்க முடியாது... சில பேச்சு பேச்சுக்குன்னே இருக்கு... காரியத்துக்காவ இல்ல.... பாக்கியம் எழுந்திருக்காத.... எனக்கு பசிக்கல...."

"பாத்தியாப்பா.... ஒங்க அண்ணாச்சி. அவர இனும் சாப்புட வைக்கது ஒங்க பொறுப்பு...”

என்ன அண்ணாச்சி .... வாலன், துளசிங்கத்தோட மோதப் போனால் நாம் என்ன செய்ய முடியும்..."

"ஒரு குற்றம் நடக்குமுன்னு தெரிஞ்சும் அதை தடுக்காம இருக்கது பெரிய குற்றம். சரி... சரி... ஓடுங்க... வாலனையும், பற்குணத்தையும் எங்க இருந்தாலும் தேடிப்பிடிச்சு இங்க கூட்டி வாங்க.... நீங்க போறியளா... நான் ..... போவட்டுமா..."

"எப்பா... சீக்கிரமா கூட்டி வாங்க.... இல்லாட்டா ஒங்கண்ணாச்சி புறப்பட்டு போவாரு..."

"ஊர்சனமே கொதிச்சு நிக்குது... அதுக்கு நாம் என்ன பண்ண முடியும்... எப்படியோ போயிட்டு வாறோம்..... அண்ணாச்சிக்காவ... போறோம்... அதுக்குள்ள முடிஞ்சுட்டுன்னா நாங்க ஜவாப் இல்ல..."

"ஒங்க பேச்ச தட்டாமப் போயிட்டாங்கல்ல....? அவங்க அடாபிடி பண்ணுமுன்னால் தடுத்துடுவாங்க... நீங்க சாப்புடுங்க..."

"அப்டி இல்ல பாக்கியம்... என்னப் பத்தி தெரிஞ்சிருந்தும்... என் முன்னால் இதையெல்லாம் பேசலாமுன்னு அவங்களுக்கு ஒரு எண்ண ம் வந்துட்டுப் பாரு..."

"சரி... மனச கலங்கவிடாதீங்க. நல்ல வேள் நமக்கு வார மருமவனாவது அப்பிராணி... வம்புதும்பு பேசாதவன்."

பழனிச்சாமி பதில் சொல்லாமல் இருந்தார். எஞ்சியிருந்த பங்காளிகள் கோவில் காரியங்களைப் பார்க்கப் போய்விட்டார்கள்...

அப்பாவையே அதிசயித்து பார்த்த கோலவடிவு, அவருக்கு மகளாகப் பிறந்த பெருமிதத்தில் நெகிழ்ந்து போனாள்...... அதே சமயம், சட்டென்று ஒரு எண்ணம் அவள் மனதில் முள்ளாகியது. துளசிங்கம் மச்சானை ஒண்ணு கிடக்க ஒண்ணு செய்துடுவாங்களோ. மெட்ராஸ் பயலுவ அப்டி நடந்துக்கிட்டா... அவரு என்ன பண்ணுவாரு... அய்யய்யோ அவரு ஒத்தக் காலுல நடக்க வேண்டியது வருமோ... அதை இந்தப் பாவி கண்ணால் பாக்க வேண்டியது வருமோ... எப்பா... எப்பா - நீங்களும் எழுந்திரிச்சு போங்கப்பா.... அவர காப்பாத்துங்கப்பா...

அப்பாவிடம் நினைத்ததைச் சொல்ல முடியாத கோலவடிவு, மொட்டை மாடிக்கு வந்தாள். அங்கே நின்றபடி நான்கு பக்கமும் கண்களைச் சுழலவிட்டாள்... எங்கேயும் விபரீதமான சத்தம் கேட்கவில்லை.... சுடலைமாடன் கோவில் முன்னால் மின்சார வெளிச்சத்தில் சின்னக் கூட்டம்... காளியம்மன் கோயிலில் பெரிய கூட்டம்.... எல்லோரும் சர்வ சாதாரணமாகப் பேசிக் கொண்டுதான் இருக்காங்க.... இந்த துளசிங்கம் எங்கதான் போயிருப்பாரு..? போய்ப் பார்ப்போமா.... எம்மாடி காதும் காதும் வச்சது மாதிரி போமாட்டேன். எங்கம்மாவ விட்டுட்டு போவமாட்டேன்... அம்மாவ விட்டுட்டுப் போனாலும் போவேனே தவிர, அப்பாவை விட்டுட்டுப் போவமாட்டேன். துளசிங்கம் மச்சான் என்னைக் கல்யாணம் பண்ணான்டாம்.... அவரு காலு கையி கதியா இருந்தால் போதும்... ஒத்தக் காலுல நடக்காம இருந்தா அதுவே போதும்......

கோலவடிவு, அந்த மொட்டை மாடியில் எத்தனை சுற்றுச் சுற்றினாளோ, எத்தனை கிலோ மீட்டர் நடந்தாளோ... கிழக்குப் பக்கமாய் திரும்பினாள். அது என்ன லைட்டு... சிவப்பு லைட்டு... பருத்திக் காட்டு.... துளசிங்கம் மச்சானா... சொன்னபடி நிக்காரே.... நேத்து சோளத்தட்டைக்குள்ள சொன்னாருல்லா... சரியா பதினொரு மணிக்கு என் விக்கி வண்டியோட நிப்பேன்... சிவப்பு லைட்டக் காட்டுவேன்.... வாரதும் வராததும் ஒன் இஷ்டமுன்னு சொன்னாரே.... போமாட்டேன். தூங்கப் போறேன்... இப்டி செய்தா என்ன... வாலனும், பற்குணமும், அவரை வெட்டிடப்படாதே.. எதுவும் செய்துடப்படாதே பழி எங்க குடும்பத்து மேல வந்துடப்படாதே.... பழி வருதோ இல்லியோ... அவருக்கு எதுவும் வரப்படாது.... அவர் உஷார் படுத்திட்டு வந்திருவோம்... எம்மா எப்பிடி போறதாம்... போனால் என்ன? ஒடியா போறோம்... பழகுன தோசத்துக்கு அவருகிட்ட சொல்லிட்டுத்தான வரப் போறோம்.... ஒருவருக்காவ காத்திருக்கவும் படாது... காக்க வைக்கவும் படாது. இதோ - நாலு எட்டுல போய் சொல்லிட்டு ரெண்டு எட்டுல திரும்பப் போறேன்.... சீக்கிரமா போவணும்... இல்லாட்டா... அங்கே போயி .... அவரக் கொன்னுடப் போறானுவ...

கோலவடிவு படியிறங்கினாள். "எம்மா... கோவிலுக்குப் போறேன்" என்று அம்மாவிடம் சொல்லி விட்டு அவள் பதில் சொல்லுமுன்பே படி தாண்டினாள். காளியம்மன் முன்னால் நடந்தாள். அடையாளம் தெரியாமல் இருப்பதற்குத் தலையிலே முக்காடு போட்டபடி பாய்ந்தாள். சுடலைமாடன் கோவிலுக்குப் போவது போல், போய், புளியந்தோப்பில் ஒதுங்குவதுபோல் ஒதுங்கி, பருத்தித் தோட்டத்தின் கரைக்கு வந்தபோது, துளசிங்கம் விக்கி வண்டியை உருட்டிக் கொண்டு வண்டிப் பாதைக்கு வந்தான்.. அலங்காரியும் முக்காடு போட்டபடியே அவன் பின்னால் நின்றாள்.....