Chapter 28
கோலவடிவு அந்தப் பெரிய வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள். துளசிங்கத்துடன் விக்கியில் வந்த பாதி வழியிலேயே மனதை திடப்படுத்தி வைத்திருந்த அவளை, துளசிங்கம் கீழே தள்ளிப்போட்டதன் மூலம் அவள் மனதும் திரவமாக்கி விட்டது உண்மைதான். ஆனாலும் அவ்வப்போது ஜன்னல் வழியாக அவன் எட்டிப் பார்த்தது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. வீட்டு நினைப்பும் அடிக்கடி வந்தது. அப்போதெல்லாம் பற்களைக் கடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள். மனதைக் குழப்பிக் குழப்பி, குழம்பிப் போய், இறுதியில் நம்மால் ஆகக்கூடியது ஏதுமில்லை என்ற ஒரு இயலாமை எண்ணம் வரும்போது, கூடவே வருமே ஒரு பெருந்தூக்கம் - அது அவளையும் ஆக்கிரமித்தது. நீண்ட நெடுந்தூக்கம்.
கோலவடிவைச் சூரியக் கதிர்கள் இப்போது எரிப்பதுபோல் சுட்டன. அப்போது அவள் ஒரு இன்பக் கனவில் ஈடுட்டிருந்தாள். அம்மா, அவள் தலையை வாரி விடுகிறாள். "சனியனுக்கு எவ்வளவு நீள முடி பாரு...." என்ற திருமலையை "டேய் யார் வேணுமுன்னாலும் பேசு.... என் கோலத்த மட்டும் பேசாதே" என்கிறார் அப்பா. அவள் அப்பாவைப் பாசத்தோடு பார்த்துவிட்டு, அண்ணனை பொய் முறைப்பாய் முறைத்துவிட்டு அம்மாவின் மார்பில் அப்படியே சாய்கிறாள். இதுக்குப் பேர்தான் சொர்க்கமோ....
கோலவடிவு வீறிட்டு எழுந்தாள்... "அம்மா.... அம்மா..." என்று கூவியபடியே தூக்கம் கலைந்து எழுந்தாள். பிறகு அந்த சூன்ய அறையை விட்டு சூன்யமாகப் பார்த்தாள்.... இது வெட்டாம்பட்டி வீடு... அம்மா - அப்பாவிடம் இருந்து வெட்டிக் கொண்டு வந்து தங்கியிருக்கும் வீடு.
விரிந்த தலைமுடியை உசுப்பி வைத்துக் கொண்டு, இரண்டு கைகளால் இரண்டு காதுகளையும் மூடி, முன்னங் கைகளை முன்புறமாக மடக்கி வைத்து, செய்வதறியாது பிரமையோடும், பிரமிப்போடும் இருந்த கோலவடிவு, ஒரு சத்தங்கேட்டு திடுக்கிட்டாள். லேசாய் சந்தோஷப்பட்டாள். அலங்காரி அத்தையின் சத்தம்.
கோலவடிவு கதவை உடைப்பது போல் திறந்து கொண்டு வெளியே வந்தபோது, அலங்காரி அத்தை முற்றத்தில் நின்றாள்.... அவளருகே புஷ்பம்... பாட்டிக்காரி இருவரையும் ஆச்சரியமாகப் பார்த்தாள். செம்மண் கோலத்தில் அலங்காரி அத்தை ஏன் அப்படி நிற்கிறாள் என்பதோ, புஷ்பம், ஜாக்கெட் பியந்து போய் ஏன் வந்தாள் என்பதோ கோலத்திற்கு அனுமானமாகவில்லை. எதோ இயல்பாக நிற்பது போலவே நினைத்தாள். ஆனால் துளசிங்கமோ சித்தியையும், தங்கையையும் வாயகலப் பார்த்தான். பார்த்தபடியே எழுந்தான். பிறகு அவர்கள் முன்னால் போய் நின்றான்.
"என்ன சித்தி இதுல்லாம்....? இவள் ஏன் இப்டி வந்திருக்காள்... சொல்லு சித்தி.... சொல்லு சித்தி..."
"சொல்லத்தானே வந்திருக்கேன்... ஆதியோட அந்தமாச் சொல்லுறேன்... சொன்னாலும் ஆறாது.... சொல்லியும் மாளாது..."
"என்ன நடந்தது சித்தி.... சொல்லித் தொலை சித்தி..."
அலங்காரி சொல்லத் தொடங்கவில்லை சேலை மடிப்பில் ஒன்றை விலக்கியபடியே திண்ணையில் உட்கார்ந்தாள்.... கலங்கி நின்ற புஷ்பத்தை, கையைப் பிடித்து உட்கார வைத்தாள். திண்ணைத் தூணைப் பிடித்தபடி நின்ற கோலவடிவை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு, அவள் யாரோ எவளோ என்பது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கோலவடிவால் பொறுக்க முடியவில்லை.
"அத்தே .... அத்தே ...” | "அத்த.... இன்னும் சாகாம இருக்கத்தான் செய்யுதேன்..."
அலங்காரி, கோலவடிவைப் பார்க்காமலே பதிலளித்தாள் - ஆனால் உட்கார்ந்திருந்த புஷ்பம் எழுந்தாள்... கோலவடிவை நேருக்கு நேர் பார்த்தபடி பேசினாள்....
"ஒனக்கென்ன....? நீ எடாத எடுப்பு எடுத்து எங்கண்ண ன கடத்திட்டு வந்துட்டே.... ஒனக்கு கொளுப்புப் பிடிச்சா..... நான் என்ன பண்ண முடியும்... இந்த ஜாக்கெட்டப் பாரு... ஒங்கண்ணன் என்னை என்ன பாடு படுத்தியிருக்கான்னு..."
புஷ்பம், பாதி அலங்காரியாலும், பாதி திருமலையாலும், பியக்கப் பட்ட ஜாக்கெட்டைக் கோலவடிவிற்குக் காட்டியபோது, துளசிங்கம் துள்ளி எழுந்தான்.
"குட்டாம்பட்டிக்கு இப்பவே போயி, செறுக்கி மவன என்ன பாடு படுத்துறேன் பாரு... என் தங்கச்சிய அவன் தங்கச்சி மாதிரி நெனச்சிட்டான் பாரு... ஏய் புஷ்பம் நீயாவது சொல்லுழா.."
"நானே சொல்லுதேண்டா... நானே சொல்லுதேன்.... கோழி கூவுறதுக்கு முன்னாலயே நானும் இவளும் சுடலைமாட சாமி கோவிலில் இருந்து நாங்க பாட்டுக்கு பேசிக்கிட்டு வந்தோம்.... கோலவடிவு, இங்க ஓடி வந்தது பழனிச்சாமி வீட்டுக்கு தெரிஞ்சுட்டு.... போலுக்கு - திருமலைப் பயல் ஓடிவந்து என்னை மிதிமிதின்னு மிதிச்சு கீழே தள்ளுனான். இந்த முழுத்த பொம்புளய் பிள்ளய ஜாக்கட்ட பிடிச்சு.... அய்யோ எப்டிச் சொல்லுறதுடா.... எப்டிச் சொல்லுறது.....
அழாதழா புஷ்பம்..."
துளசிங்கம் பொறுமை இன்றி முந்தினான்.
"இதுக்கு மேல நீ எதுவும் சொல்லாண்டாம்... இன்னைக்கு ஒண்ணு அவன் சாகணும்... இல்லன்னா நான் சாகணும்..."
"குறயும் கேளுடா... ஊர்க்கூட்டம் திரண்டுது... அதுக்குள்ள நம்ம ஆளுவளுக்கும் அவங்களுக்கும் ஒரே கல்லெறி... காஞ்சான் மச்சான்
முதுக நிமுத்த முடியாம கிடக்காரு. ஒங்கப்பாவுக்கும் நெத்தில காயம்... துடிச்சிட்டு கிடக்காரு. இதோ பாரு... என் வாய திருமலைப் பய என்ன பாடு படுத்தியிருக்கான்னு...”
"பாட்டி! ஒன் கையால் ஒரு அரிவாளை எடுத்துத்தா..." "முழுசா கேளு துளசிங்கம்... நீ எப்பவுமே அவசரந்தான்."
"நீ என்ன செய்யணுமுன்னு நினைக்கியோ, அதை வட்டியும் முதலுமா நடத்துறதுக்கு சித்தி ஏற்பாடு பண்ணிட்டேன். இவளக் கூட்டிக்கிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனேன். சுடலை மாடன சும்மா சொல்லப்படாது..... சப்-இன்ஸ்பெக்டர் அய்யா இருந்தாரு. நடந்ததைச் சொன்னேன்... மொதல்ல விரட்டுனாரு.... அப்புறம் நான் துளசிங்கத்தோட சித்தின்னேன்... அவ்வளவுதான்... கடிச்ச பல்ல திறந்தாரு... இதுக்குள்ள நம்ம சினிமாக்காரங்களும் வேன்ல வந்தாங்க..... திருமல வேனை பஞ்சராக்குனதைப் பத்தி புகார் கொடுத்திருக்காங்களாம். அது சம்பந்தமா.... வந்திருக்காங்க... அதுவும் நல்லதாப் போச்சு. ஏற்கனவே போன வருஷம் இந்த சப்-இன்ஸ்பெக்டரும், நம்ம ஊர் தகராறுல கார்ல இருந்துக்கிட்டே யாரையோ விசாரிச்சாராம்.... அப்போ இந்த திருமலை கார்ல இருந்து இறங்கி விசாரிச்சா என்னன்னு கேட்டானாம்... அப்போவே அவனை இவரு நோட்டோ பூட்டோ செய்து வச்சிருக்காராம்... ஏட்டய்யாவ, நான் தனியா கவனிக்கும்போது, தனியா சொன்னாரு..."
"அப்புறம்"
"திருமலையை விலங்கு போட்டு இழுத்துட்டு வாரதுக்கு, சப்-இன்ஸ்பெக்டரு போலீஸை அனுப்பி இருக்காரு... அவசரத்தில இந்த பேச்சியம்மாவை போலீஸ்ல சொல்ல மறந்துட்டேன்... அவள்தான் தலையில் மண்ணள்ளிப் போட்டாள்... இந்நேரம் திருமலை கையிலயும் காலுலயும் விலங்கு ஏறி இருக்கும்."
"செறுக்கி மவனுக்கு நல்லா வேணும்."
கோலவடிவு குமுறிப் போய் நின்றாள். அவர்களிடம் பேசுவதாய் நினைத்து தனக்குத் தானே பேசிக் கொண்டாள்.
"அத்தே... எங்கண்ணாவ ஒண்ணும் பண்ணாதிய.... அவசரத்துல ஏதோ பண்ணியிருப்பான்... அதுக்கு என் மேல இருக்கிற பாசம்தான் காரணம்... ஒங்க மேலே இருக்க கோபமுல்ல.... துளசிங்கம் மச்சான், எங்கண்ணாவ அப்டி திட்டாதேயும்.... இனுமே அவன் ஒமக்கு மச்சினன் மச்சினன் கையில் விலங்கு போட்டா ஒமக்கு கால் விலங்கு போட்டதா அர்த்தம்... அய்யோ அண்ணா ... எத்தே .... எங்கப்பா.... எப்டி இருக்கார்...? எம்மா எப்டி இருக்கா....? மச்சான்.... அவன் தங்கச்சி மாதிரி.... என் தங்கச்சிய நெனச்சிட்டான்னு... சொல்லிட்டீரே.... சொல்லிட்டீரே... இதுக்கு மேலயும் நான் உயிரோட இருக்கணுமா...?
கோலவடிவு, பேசப்போனதை பேசமுடியாமல், உள்வாங்கினாள்... தலை, தனியாய் பிய்ந்து பம்பரமாய் சுழன்றது போல் இருந்தது... ஆகக்கூடியது ஏதுமில்லை என்பதுபோல், கைகளை விரித்தாள்.... இதற்குள் புஷ்பம் மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்ததை ஒப்பித்தாள்.
"பாரு அண்ணா சித்திய ... திருமலை என்னைக் கற்பழிச்சுட்டான்னு போலீஸ்ல சொல்லிட்டாள்.... அந்தப் பன்னாடைப் பயலுவளும் எதையோ சோடிச்சு எழுதி... என்கிட்ட கையெழுத்து வாங்கிட்டாங்க.... அவரு என் கையைத்தான் பிடிச்சு இழுத்தாரு... அதுவும் கோபத்துலதான்... வேற அர்த்தத்துல அவரு பிடிக்கல..."
அலங்காரி கற்பழிப்புக்கு விளக்கமளித்தாள்.
"இவ்வளவு நடந்த பிறவும் அவராம்... அவரு... ஒனக்கு மூள இருக்குதா... புஷ்பம்! கையைப் பிடிக்கது கற்பழிச்சது மாதிரிதான். நாம்... தமிழ்நாட்டுல இருக்கவங்க..... மறந்துடாத"
"ஆனாலும் சித்தி நீ நடக்காததை நடந்ததாச் சொல்லியிருக்கக் கூடாது.... கடைசியில் புஷ்பத்திற்குத்தான் அசிங்கம்..."
"நான் என்ன இழவப்பா கண்டேன் அப்பிடிச் சொன்னாத்தான் திருமலையை விலங்கு போட்டு கொண்டு வர முடியுமுன்னு ஏட்டய்யா சொன்னாரு... சரி... நான் தான் சொன்னேன்.... இவள் ஏன் கையெழுத்துப் போடணும்..."
"நான் என்னத்தைக் கண்டேன் ..... கிறுக்கல் கிறுக்கலாய் எழுதியிருந்தாங்க..... படிக்கதுக்கு முன்னாலயே அவங்களும் அவசரப்படுத்தினாங்க. சிச்தியும் அவசரப்படுத்துனாள். கையெழுத்துப் போட்ட பிறகு கற்பழிப்புன்னு சொல்லுதாங்க..."
"என்ன சித்தி இப்படிச் செய்துட்டே...."
"என்ன இழவோ செய்துட்டேன்.... இனும் என்ன செய்யச் சொல்லுற அப்புறம் சப்-இன்ஸ்பெக்டரு ஒன்னை கையோட கூட்டிட்டு வரச் சொன்னாரு... புஷ்பமும் வரணுமாம்."
"அவங்க பார்வையே சரியில்ல.. நான் போக மாட்டேன் "
"அண்ணாச்சி இருக்கும் போது எதுக்கும்மா கவலப்படுற....? எல்லாப் போலீசும் இவன் கைக்குள்ள அடக்கம்... இல்லியாடா துளசிங்கம்..."
துளசிங்கம் எதுவும் பேசவில்லை. வீட்டுக்குள் போய் டைட் பேண்ட்டை அவசர அவசரமாகப் போட்டான். அதுவரைக்கும் வெளியே காத்திருந்த கோலவடிவு உள்ளே போனாள். அந்தக் குழப்பத்திலும், அவளுள் ஒரு தெளிவு ஏற்பட்டது... போலீஸில் நடந்ததைச் சொல்லி அண்ணனை, மச்சானே மீட்டினால் அண்ணாவுக்குக் கோபம் தணியும். அப்புறம் அவனைச் சாட்சியாய் வச்சே ரிஜிஸ்டர் கல்யாணம் செய்துக்கிட்டு ஊருக்குப் போகலாம். அம்மாவப் பாக்கணும்... இப்பவே பாக்கணும்...”
கோலவடிவு, துளசிங்கத்தை நெருங்கினாள். அவ்வளவு பேசிய அவனிடம் பேசவே தோன்றவில்லை. ஆனால் பேசித்தானே ஆகவேண்டும்....
“நானும் வாரேன் மச்சான்...” "எங்க வார?"
"ஒங்க கூடத்தான், நானும் வரப்போறேன் மச்சான். நடந்த விஷயத்த போலீஸ்ல சொல்லுவோம். அப்புறம்.... அண்ணாவோடயே ரிஜிஸ்டர் ஆபிசுக்குப் போவோம். புஷ்பம் அண்ணிய எங்கண்ணாவுக்கு கட்டி வச்சுடலாம்.... மொதல்ல போலீஸ்.... ரெண்டாவது ரிஜிஸ்டர் ஆபீஸ்... மூணாவது ஊர்... திருமலை-புஷ்பம் கல்யாணம்... எல்லாத்தையும் நல்லவிதமா முடிச்சுடலாம்... சரிதானே மச்சான்.."
"அப்பன் கோவணத்தோட கிடந்தானாம்..... மகன் 'இழுத்து மூடப்பான்'னு சொன்னானாம்... என் தங்கையை ஒண்ணன் தேவடியா மவன் ... சீரழிச்சிருக்கான்... அப்பா கல்லெறிக் காயத்தோட துடிக்காராம்... ஒனக்கு இந்தச் சமயத்துல கல்யாணம் கேட்காக்கும்... கல்யாணம்... பேசாம இங்கேயே கிட... இல்லன்னா எங்கேயாவது போய்த்தொலை..."
துளசிங்கம் அவளைப் பாராமலே வெளியே வந்தான். எதுவுமே பிடிபடாமல் நின்ற பகவதி பாட்டி "ஏய் ஒருத்திய தொடப்படாது. தொட்டா விடப்படாதுடா" என்றாள் - பேரனின் சட்டைக் காலரை பிடித்தபடி... துளசிங்கம், கோலவடிவைப் பார்த்தபடி பாட்டிக்குப் பதிலளித்தான்....
"நீயே அவள் கட்டிக்கிட்டு அழு... இப்போ எனக்கு அதைவிட வேற வேல இருக்கு.... எழுந்திரு சித்தி ... எழுந்திரு புஷ்பம்.... இன்னையோட அவங்க குளோஸ்."
துளசிங்கம், புஷ்பத்தோடும் அலங்காரியோடும் வெளியேறினான். புஷ்பமாவது கோலவடிவை பாசமாகப் பார்த்து விட்டு, பிறகு தானே பாவப்பட்டவள் போல் போனாள். அலங்காரியோ அவளைத் திரும்பியே பார்க்கவில்லை.
கோலவடிவு, குற்றுயிரும் குறையுயிருமாய் துடித்தாள்.

