Chapter 29

சட்டாம், வெட்டாம், குட்டாம்பட்டிகள் போன்ற பல பட்டிகளுக்கு ஆதிபத்திய உரிமை கொண்ட அந்தக் காவல் நிலைய லாக்கப்பிற்குள் ஏழெட்டுப் பேர்கள் நின்றார்கள். கால்மணி நேரத்திற்கு முன்பு வரை கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தவர்கள் இப்போது எதிரே சுவரோடு சுவராக நின்றவனை சுதாரித்துப் பார்த்தார்கள். எத்தன கொலை செய்தானோ.... இல்லன்னா இப்டியா....

காவல் நிலைய வாசல் முகப்பில் துப்பாக்கி பிடித்து நின்ற இரண்டு காவலர்களில் ஒருவர் லைட்டரைத் தூக்கி, துப்பாக்கி சுடுவது போல் சுட்டு, சிகரெட்டைக் கொளுத்த, இன்னொருத்தர் அதே வளாகத்தில் கூடிக்கூடி நின்ற கூட்டங்களில் ஒன்றை நோக்கி டா' போட்டும் டி' போட்டும் கூப்பிட்டார். லாக்கப் அறைக்கு அடுத்த அறையில் நகரங்களில் இருப்பதுபோல், போக்குவரத்து, சட்டம், ஒழுங்கு, குற்றம், புலனாய்வு என்று தனித்தனி சப்-இன்ஸ் பெக்டர்கள் இல்லாமல், எல்லாமே சர்வமயமான சப்-இன்ஸ்பெக்டர் நடுத்தரம். கல்லூரியில் ரேக்கிங் செய்த அனுபவம் அவருக்குக் கை கொடுத்தது. டெலிபோனில் அரசினர் சுற்றுலா மாளிகை அலுவலரை விரட்டிக் கொண்டிருந்தார். “எத்தனை தடவப்பா சொல்றது..... எஸ்.பி. கேம்ப் வாரார்.... வாரார்னு.... நோ.... நோ.... நாலு ரூமையும் பூட்டி வை.... புள்ளி விவகார அதிகாரிக்கு ரிசர்வ் செய்திருக்கா.....? இடமில்லன்னு சொல்லிடு.... ஆமா.... நாலு ரூம்ல ஒண்ணக்கூட திறக்கப்படாது..... அப்புறம் பின்னாடி என் மேல் வருத்தப்பட்டு பிரயோசனமில்ல... சுற்றுலா மாளிகையில் என்னெல்லாம் நடக்குன்னு எனக்குத் தெரியும்.

ஒன்னால்.... முடியுமா.... முடியாதா.... ஆங்..... அப்படி வழிக்கு வா..."

ஆகமொத்தத்தில், அந்த நிலையம் காவல் நிலையமாகத் தெரியவில்லை , காவலர் நிலையமாகவே தெரிந்தது... சப் இன்ஸ்பெக்டர் சுவரில் சாய்ந்து கிடந்த திருமலையை, எஸ்.பி. வருகையின் அவசரத்தையும் மீறி, நிதானமாக, இளக்காரமாக ஏடாகூடமாக, ஏளனமாகப் பார்த்தார். அவன் அருகே போய் நின்றபடியே போர்ப்பரணி பாடினார்.

"சப்-இன்ஸ்பெக்டர் எப்படிப்பட்டவர்னு இப்பவாது புரியுதுதாடா...? தேவடியா மவனே..... பாஸ்டர்ட்... என்ன சொன்னே சப் இன்ஸ் பெக்டர்னா காரை விட்டு இறங்கப்படாதோ.... இன்னொரு தடவ சொல்லுடா.... பார்க்கலாம்... போலீஸ் ஒன் மாமன் மச்சான் மாதிரி நெனச்சிட்டே.... இல்லே...'

சப்-இன்ஸ்பெக்டர் பூட்ஸ் காலால் திருமலையின் பாதத்தைத் தட்டிவிட்டார். அவனோ செத்துப் போனவன் போல் சுவரில் கிடந்தான். அந்த நிலையத்திற்கு உள்ளே, இரண்டு சுவர்களுக்கு இடையே உள்ள ஒடுகலான வழியில், முதல் சுவரில் அமைக்கப்பட்ட கொக்கிகளில் அவன் கைவிலங்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

குப்புறச் சாய்ந்து கிடந்த திருமலை முகத்தை மட்டும் அங்குமிங்குமாக அசைத்தான்.... உடம்பை அசைக்க இயலாது.... சுவருக்குச் சுவராகி விட்டான். அந்தச் சுவர் விழாமல் இருப்பதற்கான அணைப்புக்கல் மாதிரி நிறுத்தி வைக்கப்பட்டான். பயங்கரக் குற்றவாளிகளுக்காக விசேஷமான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப் படவேண்டிய அந்தச் சுவர் கொக்கிகள், அவன் கைகளை விலங்கோடு சேர்த்து இழுத்துப் பிடித்தன. அவனுக்குக் கை வலித்தது. நீட்டிய கையைச் சுருக்கப் போனால், சுவர்க் கொக்கிகள் சுண்டி இழுத்தன. சுவரிலே முகம் போட்டுப் போட்டு மூச்சு முட்டியது. முகத்தைத் திருப்பலாம் என்றால், சுவர் மோவாயை இடித்தது. அவன் முட்டிக்கால்களின் பின்பகுதிகளில் லத்திக் குத்துக்கள் முத்திரை போட்டிருந்தன. அவற்றில் பூட்ஸ் காலின் அடையாளங்கள் செம்மண் நிறத்தில் தெரிந்தன.

சப்-இன்ஸ்பெக்டர் வெளியே ஒரு வேன் வந்து நிற்பதைப் பார்த்துவிட்டு, தனது அறையில் கம்பீரமாக உட்கார்ந்தார். இன்னும் வேன்காரர்கள் ஏன் தன்னிடம் வரவில்லை என்பது மாதிரி முகத்தைச் கழித்தார்... வாரவன் நேரா வரக்கூடாது? ரைட்டர்கிட்ட என்ன பேச்சு... நானிருக்கையில்...'

ஏழெட்டுப் பேர், சப்-இன்ஸ்பெக்டர் முன்னால் வந்து நின்றார்கள் துளசிங்கம், தனது சகாக்களையும் அலங்காரி சித்தியையும் பிரமிக்கச் செய்வதற்காக, "ஆளே இளச்சீட்டிங்களே ஸார்" என்றான் - சர்வசாதாரணமாக. இதைப் புரிந்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் சுள்ளென்று விழுந்தார்.

"யோவ் துளசிங்கம்... நீயும் போலீஸ்.... மாமா மச்சானா நெனச்சிட்டே - இல்ல.. ஒன் சிஸ்டர் கற்பழிக்கப்பட்டிருக்காள்.. அவளை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பணும். எங்கேயா போயிட்டாள்? இந்தாம்மா.... ஒன் பேரு என்ன?"

"அலங்காரி.... எசமான்."

"ஏய் அலங்காரி... ஒன் மனசுல என்ன நெனச்சுக்கிட்டே.... கற்பழிக்கப்பட்ட பொண்ண எங்கே கடத்திட்டுப் போனே. அவள் வந்த பிறகுதான்... நீ போக முடியும்.”

"வருவாள் சாமி... வருவாள்... கற்பழிச்சவனையே நீங்க இன்னும் பிடிக்கல.”

"யோவ்.... இந்த பொம்புளைக்கு கண்ணு குருடா..."

துளசிங்கம், தனக்கும் கண் குருடு என்பதுபோல் புரியாமல் விழித்தான். சப்- இன்ஸ்பெக்டர் திருமலையைப் பார்த்துக் கண்ணடித்துக் காண்பித்தார். பிறகு அவர்களிடம் அப்படி நடந்து கொள்வது கௌரவக் குறைச்சலாக்கும் என்று ஒரு எண்ணம் திடீரென்னு ஏற்பட, அவர் உடம்பை விறைத்து, முகத்தை

முறைப்பாக்கினார்.

எல்லோரும் சுவரில் கட்டப்பட்ட திருமலையையே பார்த்தார்கள். வேன்கார சினிமாக்காரர்களுக்கு அது கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தாலும், அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. 'வேன் டயர்களை பஞ்சராக்கி, மூணு கிலோமீட்டர் தூரத்துக்கு வேனைத் தள்ள வைத்த கிராமத்து எக்ஸ்டிராப் பயல்.... ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு நாள் வீதம் கிடக்கட்டும். சினிமாக் காமிரா கொண்டு வராமப் போயிட்டோமே... இதையே ஒரு குளோஷப்பாய் ஷாட் எடுத்தால் எந்த தயாரிப்பாளர் கிட்டேயும் வித்துடலாம்...'

துளசிங்கம் முகத்தில் எந்தவிதச் சலனமும் காட்டாமல் திருமலையை யந்திர ரீதியில் பார்த்தான். லேசாகத் தலையை மட்டும் அங்கும் இங்குமிங்குமாய் ஆட்டிக் கொண்டான். அப்புறம் சப்-இன்ஸ்பெக்டரை நன்றியோடு பார்த்தான். அலங்காரிதான், அவன் முன்னால் போய் நின்று பார்த்தாள். பிறகு, "இந்தக் காலுதானே உதச்சது" என்று திருமலைக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிவிட்டு, சப்-இன்ஸ்பெக்டர் அறைக்கு வந்தாள். அவர் அனைவரையும் அறையப் போவதுபோல் அதட்டினார்.

"கடுமையான குற்றம் செய்கிறவங்களத்தான். அதாவது - சீரியஸ் அபென்ஸ் செய்கிறவங்களத்தான்... இப்டி சுவர்ல போடுவோம்.... ஒங்களுக்குத் தெரியுமோ என்னமோ... ஒங்க கம்ப்ளயிண்ட் சீரியஸ்.... ரேப் சார்ஜ். டெட்லி சீரியஸ்... ஒன் சிஸ்டா மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பணும்... சீக்கிரமா கூட்டிவா..."

"ஸார் வந்து"

"யோவ் கூட்டி வாரியா இல்ல...? நானே கூட்டிட்டு வரணுமா... கூடக் கூடப் பேசுனே... எனக்குக் கோபம் வரும்..."

"சும்மா இருடா துளசிங்கம்... நான் போயி என் மவள கூட்டிட்டு வாறேன்."

அலங்காரி, திருமலையை அடிக்காத குறையாகக் கடந்து வெளியே போனாள். போலீஸ் கட்டிடத்திற்கு வெளியே, ஒரு ஓரமாக நின்ற புஷ்பத்தை இழுத்தாள். அவள் அங்கிழுக்க, இவள் இங்கிழுக்க, இறுதியில் வாயில் காவலர் அதட்ட, புஷ்பம் சுயமாகவே உள்ளே வந்தாள். திடீரென்று பழக்கப்பட்ட ஒரு குரல் கேட்டு நிமிர்ந்தாள். திருமலை குலுங்கிக் குலுங்கி அழுதான்... சுவரிலே இருந்து கையைப் பிய்ப்பது போல், முன்னாலும் பின்னாலும் தலையை ஆட்டி ஆட்டி சுவரில் முட்டினான்... ஒவ்வொரு சொல்லாகச் சொல்லி அந்த ஒவ்வொரு சொல்லுக்கும் இடையே அழுதழுது சொல்லி முடித்தான்....

"புஷ்பம்.... நானா ஒன்னைக் கற்பழிச்சேன்... புஷ்பம்... எனக்கு காப்பு மாட்டுனதுகூட பெரிசில்ல புஷ்பம்... ஒன்னை கற்பழிச்சேன்னு பழி போடுதாங்க பாரு... அதை நெனச்சாத்தான்.."

புஷ்பம், அவன் நின்ற கோலத்தைப் பார்த்து நிலையிழந்து நின்றாள். மனதுக்குள் யாரோ சூடு போடுவது போலிருந்தது.... குலுங்கிக் குலுங்கி அழும் திருமலையைப் பரிதாபமாகப் பார்த்தபடியே விம்மிவிம்மி அழுதாள். உடனே அலங்காரி, அவளைக் கைத் தாங்கலாய் அணைத்தபடி, சப்-இன்ஸ்பெக்டர் முன்னால் ஆஜர் படுத்தினாள். இன்னும் அந்த சப்பைப் பார்க்காமல் திருமலையையே பார்த்த புஷ்பத்தின் முகத்தை, அலங்காரி சப்-இன்ஸ்பெக்டர் பக்கமாக திருப்பிவிட்டாள். புஷ்பம் மீண்டும் மாங்கு மாங்கென்று அழுதாள்... வழியில் பார்க்கும் போதெல்லாம் “என்ன பிள்ள இப்டி வெட்கப்படுறே" என்று எந்த சூதும் இல்லாமல் பேசுன மனுஷன்... ஏதோ கோபத்துல அப்டி நடந்திட்டாரு. அதுக்காவ இப்டியா.... இப்டியா.... மாட்டக்கூட இப்டி கட்டமாட்டாவளே.... கூண்டுல கிளியக்கூட இப்டி அடைக்க மாட்டாவளே..."

கட்டுப்படுத்த முடியாமல் அழுத புஷ்பம் ஏதோ பேசப் போனாள். அலங்காரி அவள் வாயைப் பொத்தியபடியே முறையிட்டாள்.

"பாருங்க எசமான்... என் மச்சான் மவள அந்தப் பய என்ன பாடுபடுத்தி இருக்கான்னு.... எப்டி அழுவுறாள் பாருங்க...."

சப்-இன்ஸ்பெக்டர், புஷ்பத்தைப் பார்த்தார். அவள் பிய்ந்த ஜாக்கெட்டைப் பார்த்தார். பார்த்தபடியே சிகரெட்டைப் பற்ற வைத்தார். அந்த பார்வையைப் பார்த்த துளசிங்கம் பயந்துவிட்டான் பம்மியபடியே பயபக்தியோடு பேசினான்.....

"ஸார் தப்பா நெனக்கப்படாது. நாம கொஞ்சம் வெளில போய்..." "சரி நீங்க மொதல்ல போங்க... நான் வாறேன்..."

துளசிங்கம், புஷ்பம், அலங்காரி முன் நடக்க, சினிமாப் பயல்கள் பின் நடக்க, திருமலையைக் கடந்து போன போது, அந்தச் சுவர்க்

கைதி வீமனைப் போல் சபதமிட்டான்.

"ஜெயிச்சுட்டோம்னு நெனக்காதடா... துளசிங்கம்... ஒன் மார்பப் பிளந்து ரத்தம் குடிக்காட்டா என் பேரு திருமலை இல்ல... போலீஸ் அடிச்ச ஒவ்வொரு அடிக்கும் ஒன்னை ஒவ்வொரு வெட்டா வெட்டாட்டா நான் பழனிச்சாமி மகன் இல்ல.... இது எனக்குப் பெரிசில்லடா... என் தங்கச்சிய இழுத்துட்டுப் போனியே... அதுக்கு நீ ரத்தத்தால் பதில் சொல்லித்தான் ஆகணும்.... ஏய்.... அலங்காரி செறுக்கி..."

சப்-இன்ஸ்பெக்டர் ஓடிவந்து அவன் விலாவில் குத்தினார். பிடறித் தலையைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டே, அவன் முன் தலையை சுவரிலே மோதவிட்டார். அவருக்கு அடித்த களைப்பு ஏற்பட்டு விடக்கூடாதே என்று இரண்டு காவலர்கள் ஒத்தாசைக்கு வந்தார்கள். திருமலையைக் கவனிக்கும்படி அவர்களுக்கு கண்காட்டிவிட்டு சப்-இன்ஸ்பெக்டர் வெளியே வந்து, துளசிங்கக் கூட்டத்தின் மையம் போல் நடுவில் வந்து நின்றார்.

"இந்தாம்மா.... புஷ்பம்... வேன்ல ஏறு... மருத்துவ பரிசோதனை செய்துட்டு வர்லாம்.."

"ஸார்.. கோபப்படாம கேட்கணும்... எங்க சித்தி புத்தியில்லாதவள். தெரியாத்தனமாக சொல்லிட்டாள்.... அவன் ஒண்ணும் என் சிஸ்டா கற்பழிக்கல ஸார்..."

“சும்மா கிட துளசிங்கம்... கற்பழிக்க முயற்சி செய்தால் அதுவும் குற்றந்தான்."

சப்-இன்ஸ்பெக்டர் தன் தவறை உணர்ந்தவர் போல் வாயில் இருந்த சிகரெட்டை வீசிவிட்டு எச்சரித்தார்.

"பால்ஸ் கம்ளெயிண்ட் கொடுத்ததுக்கு ஒங்களயும் இப்போ உள்ளே போடலாம் தெரியுமா?"

"தெரியாம இருப்பனா ஸார்.. இவனையும் விடப்படாது.... என் தங்கச்சி ... பேரும் சந்திக்கு வரப்படாது.... ஏதாவது வழி சொல்லுங்க ஸார்...”

சினிமா மாஸ்டர் குறுக்கே புகுந்தான்.

"இந்தாப்பா துளசிங்கம்..... ஸார் மச்சினிக்கு வளைகாப்பாம்... வீடியோ எடுக்கணுமாம்... ஒங்கிட்டே தானே டேப் இருக்கு... கொடு கொடு... படம் எடுத்துட்டு சீக்கிரமா மெட்ராஸ் போகணும்.... ஷூட்டிங் இருக்குது....."

"வீட்ல இருக்கு... அதனால் என்ன.. இங்கேயே வாங்கித் தாறேன். என் செலவிலேயே எடுங்க மாஸ்டர்.... ஸார்... சீக்கிரமா சொல்லுங்க ஸார்... சிமெண்ட் பாக்கி வசூலுக்கு போகணும்... இப்போ கையில ஐயாயிரம் ரூபாய் வசூல் பணம் இருக்குது.... இன்னும் ஐயாயிரம் வசூலாகணும். ஆனாலும் இப்ப ஐயாயிரம் புது நோட்டா இருக்குது. சீக்கிரமா சொல்லுங்க... ஸார்... ஏதோ முன்ன பின்ன பழகாதவன்கிட்டே பேசுறது மாதிரி பேசாதீங்க ஸார்... நீங்க... எந்த ஸ்டேஷன் போனாலும் நான் உங்க ஆளு ஸார்."

"சரி. ரேப் கம்ளெயிண்ட் இருந்தால்தான் திருமலைப் பயல அப்படி வைக்க முடியும். எஸ்பி. வந்துட்டுப்போறது வரைக்கும் கம்ளெயிண்ட் லெட்டர் இருக்கட்டும். இருக்கணும்... அப்புறம் பார்த்துக்கலாம்.... பரவாயில்லியே.... காலையிலேயே ஐயாயிரம் ரூபாய் வசூலிச்சிட்டியே..."

அலங்காரி, சப்-இன்ஸ்பெக்டர் முன்னால் வந்து நின்றாள். பின்னால் கிடந்த தலைமுடியை முன்னால் போட்டுக் கொண்டே, முத்தம் கொடுக்கப் போவதுபோல் உதடுகளைக் குவித்தாள்... மயக்கப் போவதுபோல் அவரைச் சாய்த்துப் பார்த்தாள். பிறகு, பின்னலை எடுத்து மார்பில் செல்லமாய் அடித்தபடியே கொஞ்சுவது போல் பேசினாள்....

"வசூலிக்காட்டாலும் என் மகன் வீட்ல இருந்து எடுத்துட்டு வந்திருப்பான். மாதச் சம்பளக்காரங்க கஷ்டம் அவனுக்கு நல்லாவே தெரியும்... அப்புறம் எசமான்... இந்த திருமலைப் பயல் எப்படி மிரட்டுறான் பார்த்தியளா... இவன வெளில் விட்டால் எங்களால ஊர்ல உயிரோட லாந்த முடியாது... இவன்கிட்டயும் இவன் அப்பன் பழனிச்சாமி, சித்தப்பன், மாயாண்டி, பேச்சியம்மா இவங்ககிட்டவும்

எழுதி வாங்கணும்... நீங்க கூப்புட்டாவது விசாரிக்கணும்..."

"விசாரிக்கேன்... விசாரிக்கேன்... யோவ் துளசி... சிமெண்ட் பணம் மீதி ஐயாயிரமும் வசூலாயிடுமா... இன்னைக்குள்ளேயே..."

"அந்தக் கவல வேண்டாம் ஸார்... நான் எது சொன்னாலும் யோசிச்சு சொல்லுறவன்... அப்புறம் ஸார்... எங்க சுடலமாடன் கோவில் கொடைய கரும்பட்டையான் கூட்டம் தடுக்காம இருக்கணும்... எதுவும் ஏடாகூடமாய் செய்துடுவாங்களோன்னு பயமாய் இருக்குது...''

"கவலப்படாத... டி.எஸ்.பி. கிட்ட பேசிட்டு, ஆயுதப் போலீஸயே அனுப்பி வைக்கேன்.... குரூப் கிளாஸ் ஏற்படாம தடுக்கணுமுன்னு நான் சொல்றதை அவரு தடுக்கமாட்டாரு... தட்ட முடியாது..... இந்த மாதிரி சித்தி கிடச்சது ஒன்னோட லக்குய்யா..."

"இல்ல நீங்க எங்களுக்கு கிடச்சதுதான் லக்கு... அப்புறம் எசமான்... ஊர்ல நாங்க உயிரோட லாந்தணுமுன்னா..."

"யோவ் முனுசாமி உடனடியாய் போய், பழனிச்சாமி.. மாயாண்டி." "பேச்சியம்மாவும் எசமான்...''

"ஆமா , பேச்சியம்மாவையும் கையோட கூட்டிவா.... எதுக்கும் விலங்கு எடுத்துட்டுப் போ..."