Chapter 35

சுடலைமாடன் கோவில் சுறுசுறுப்பாய் இயங்கியபோது, காளியம்மா கோவில் மூடிக்கிடந்தது..... அரைகுறை பந்தலுடன், மொட்டையான சப்பரத்துடன் அந்தக் கோயில் இருளில் மூழ்கிப் போனது... இவ்வளவு பெரிய அவமானத்தைத் தந்த காளியாத்தாவிற்கு இந்த வருஷம் இல்லை, எந்த வருஷமும் கொடை தேவையில்லை என்று கரும்பட்டையான்கள் தீர்மானித்தார்கள்.... திறந்து கிடந்த அம்மன் கோவிலை மூடப்போனால் அம்மனைப் பார்க்க வேண்டியதிருக்கும் என்று நினைத்து, அவள் முகத்தில் விழிக்க விரும்பாதவர்கள் போல் அப்படியே விட்டுவிட்டார்கள்... சிலர் காளியம்மாவை வாய்க்கு வந்தபடி திட்டினார்கள்...

கோலவடிவின் தந்தை பழனிச்சாமி வீட்டிலே.....

எல்லாமே தலைகீழாகக் கிடந்தன. தொழுவத்தில் கட்டப்பட்ட மாடுகளுக்கு யாரும் தண்ணி' காட்டவில்லை.... அவை ம்மா... ம்மா" என்று கத்தின. தொட்டியில் போட வேண்டிய புண்ணாக்கு திண்ணையில் திட்டாகக் கிடந்தது. வீடு பெருக்கப்படாமல் குப்பையும் கூளமுமாகக் கிடந்தது.... சேலை துணிமணிகள், அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடந்தன.... அடுப்பிலே தூசித் திட்டுக்கள். அம்மியிலோ பல்லிகள் பாச்சானைப் பிடித்துக் கொண்டிருந்தன.

இதேபோல், அந்த வீட்டு ஆட்களும் அப்படித்தான். பழனிச்சாமி, கட்டிலில் சோர்ந்து போய்க் கிடந்தார். அவர் முன்னால் சிதறிக் கிடந்த கரும்பட்டையான் பங்காளிகளைப் பரக்கப் பரக்கப் பார்த்தார். அவர் கண்கள், அவர்களைப் பார்ப்பது போல் எங்கேயோ பார்த்தன.... அடிக்கடி தன்னையறியாமலேயே வயிற்றைத் தடவி விட்டார்.... மாயாண்டி ஒரு அரிவாளைக் கூர் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் ஏதாவது செய்துவிடக் கூடாது என்பதற்காக நாட்டு வக்கீல் "அரிவாளைக் கீழே போடும்... போடும்...'' என்று நச்சரித்துக் கொண்டிருந்தான். கோலவடிவின் அம்மா பாக்கியம், திண்ணையில் கிடந்து தலையைச் சுவரில் தேய்த்து தேய்த்து "பாவி மொட்டை கெடுத்துட்டாளே.. பாவி மொட்ட தலகுனிய வச்சுட்டாளே... யாருக்கும் தல வணங்காத என் மவராசன் அதோ அடியத்து கிடக்காரே.... கப்பல் போல இருந்த என் ராசா கவிந்து போய் கிடக்காரே...." என்று புலம்பினாள். அழுதழுது, அவள் முகம் வீங்கியிருந்தது.... வாடாப்பூ, அவள் வாயில் நீராகாரத்தை டம்ளர் விளிம்பால் உதடுகளைப் பிரித்து உட்புகுத்திக் கொண்டிருந்தாள். அந்தத் தாயைச் "சாப்பிடு... பெரியம்மா.... என்... கண்ணுல்ல...' என்று சொல்லிச் சொல்லிக் குழந்தைக்கு ஊட்டுவது போல் ஊட்டிக் கொண்டிருந்தாள். ஆனாலும், வலுக்கட்டாயமாக வாய்க்குள் போன நீராகாரத்தை பாக்கியம் துப்பினாள்.... பிறகு அப்படியே பேச்சற்று மூச்சற்றுச் சாய்ந்தாள்... திக்கற்றுக் கிடந்த பழனிச்சாமியையும் பாக்கியத்தையும் பார்த்துவிட்டு பலர் அழுது விட்டார்கள்.

நள்ளிரவில், சுடலைமாடசாமி பருத்திக் காட்டிற்குத் தீப்பந்தத்துடன் 'வேட்டை'க்குப் போய்விட்டு வந்து விட்டார். மேளத்திற்குப் பிறகு ஆடிய ரிக்கார்ட் டான்ஸம்மா மேடையிலேயே மேக்கப்பை கலைத்துக் கொண்டிருந்தாள். கூட்டம் சிறிது சிறிதாகச் சிறுத்துக் கொண்டிருந்தது.... கதிரவனும் கண் விழித்தான்.

திடீரென்று பழனிச்சாமி வீட்டு முகப்பில் பழைய காலத்துத் துப்பாக்கியோடு ஒரு கான்ஸ்டபிள் தோன்றினார்.

"யாரும்மா ... பாக்கியம்...." நாட்டு வக்கீல் நாராயணன் பதிலளித்தான். "அதோ புலம்பிக்கிட்டு இருக்காவளே..... அந்தம்மா...” "யாருவே பழனிச்சாமி..."

"அதோ யானை சேத்துல சிக்குனமாதிரி கட்டிலிலே கிடக்காரே, அவருதான். என்ன விஷயம்?"

"யாருவே பேச்சியம்மா..."

"எங்க வகையறாதான்.... ஒங்களுக்குப் பயந்து எங்கேயோ போயிட்டாள்... என்ன விஷயம்?"

"இவங்க மூணுபேரையும் எங்கய்யா கையோட கூட்டிட்டு வரச்சொன்னாரு..."

"ஓங்கையான்னா ..."

"விளையாடுறியளா... சப்-இன்ஸ்பெக்டர்தான்... சுடலமாடன் கோவிலுல பந்தோபஸ்த பார்த்துட்டு இருக்கார்... அங்க வரச் சொன்னார்...''

"என்ன விஷயமாம்?" "எது பேசணுமுன்னாலும் அவருகிட்ட வந்து பேசுங்க..." "வரமுடியாதுன்னு சொல்லுங்க...."

''விஷயம் லேசுல்ல.... இப்பவே பாத்துடுங்க.... இல்லன்னா எங்கய்யாவுக்கு கண்மண் தெரியாம கோபம் வரும்."

"அட போய்யா... எங்களால் வரமுடியாதுன்னா வரமுடியாது.... என்ன செய்யணுமுன்னாலும் செய்யலாமுன்னு ஒங்கய்யாகிட்ட சொல்லி புடு."

அந்த கான்ஸ்ட பிள் சிறிது யோசித்தார்... அந்த வீட்டில் நிலவிய அவல நிலை அவரையும் ஆட்டுவித்தது... சப்-இன்ஸ்பெக்டர் செய்வது அதிகப்படி என்று புரிந்தது. அவர் நாம் சொன்னால் கேட்பாரா.... துளசிங்கம் - அலங்காரி தானே இப்போ அவருக்கு ஆண் கான்ஸ்டபிள், பெண் கான்ஸ்டபிள்...

அந்த போலீஸ்காரர் போய்க் கொண்டிருக்கும் போதே, அருணாசலம் கத்தினார்....

"கொடுமைக்கு ஒரு அளவு வேண்டாம்..? நம்மளப் போய் சுடல மாடன் கோவிலுக்கு கூப்புடணுமுன்னா எவ்வளவு திமுறு இருக்கணும்? அவமானப் படுத்துறதுக்கும் அளவு இல்லாமப் போயிட்டுப் பாரு... இந்த பேச்சியம்மாவ வேற காணல்.... ஏடா... நாராயணா... திருமலை எப்டிடா இருக்கான்..."

"முணு மணிநேரம் சுவர்லயே மாட்ட வச்சிருந்தாங்களாம்.... என்னப் பார்த்துட்டு அழுதான்.... அழுதான்... அப்டி அழுதான்..."

பாக்கியம்மா, திடீரென்று எழுந்தாள்.... பெற்ற வயிற்றில் மாறி மாறி அடித்தாள். நாட்டு வக்கீல் நாராயணன் ஆற்றுவித்தான்.....

"பொறுத்துக்க சித்தி, பொறுத்துக்க... நாளைக்கு அவன் ஜாமீன்ல கொண்டு வாரது என் பொறுப்பு... இந்த புஷ்பத்த கூண்டுல ஏத்தி, வக்கீல வச்சு, அசிங்கம் அசிங்கமாய்க் குறுக்குக் கேள்வி கேட்க வைக்கேன் பாரு - நாளை மத்தியானத்துள்ள திருமலய ஒன் கண்ணுல காட்ட வேண்டியது என் பொறுப்பு. அதுவரைக்கும் பொறுத்துக்க சித்தி... நம்ம வீட்டு முன்னாலயே போலீஸ் போட்டிருக்கான் பாரு."

சிறிது நேரத்தில், பழனிச்சாமி வீட்டுப் பக்கம் பாரா பார்த்த போலீஸ்காரர்களுடன் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளே வந்தார். இடுப்பில் துப்பாக்கியுடனும் கையில் லத்திக் கம்போடும் வெளிப்பட்டுப் பேசினார்.

"எவண்டா அவன் பழனிச்சாமி... அவன் பெண்டாட்டி எங்க இருக்காள்?"

"சார் கொஞ்சம் மரியாதியாய்..."

"லத்தி பிஞ்சுடும்... கடத்தல் பயல்வளுக்கு என்னடா மரியாதை... கோலவடிவ கடத்தி எங்கடா வச்சிருக்கான், அந்த பழனிச்சாமி..."

எல்லோரும் திகைத்து திக்பிரமை பிடித்து நின்றபோது கட்டிலில் குப்புறக் கிடந்த பழனிச்சாமி தலையை ஒரு குலுக்கு குலுக்கினார். அங்கிருந்து முற்றத்தில் குதித்து முன்நோக்கி நடந்தார். சப்-இன்ஸ்பெக்டர் முன்னால் இரண்டு கைகளையும் நீட்டியபடியே கத்தினார்.

"இந்தாப்பா... கையி... விலங்கை மாட்டய்யா.... ஏய் பாக்கியம்... இங்க வாடி... ஒன் கையிலயும் விலங்க மாட்டட்டும்..."

"எங்கண்ணாச்சி கையில் மட்டும் விலங்கு போச்சுது... அப்புறம் தலையில் தொப்பி இருக்காது."

பமனிச்சாமி பதறாமலே சீறினார்.

"ஏய்யா யோசிக்கே... நீ கூப்பிட்டதுக்கு வராதது குற்றம். ஒரு மகளப் பெத்தது குற்றம். அவள் அருமையா வளத்தது குற்றம்... அவள் ஓடிப்போனதும் என்னோட குற்றம்... அவள் துளசிங்கம் கூட்டிட்டுப் போனதும் என் குற்றம்... அலங்காரி என்றவள் ரெண்டு பேரையும் செட்டப் பண்ணுனதும் என் குற்றம். இதோ வெளில் மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம தவிக்காளே.... பாக்கியம் இவளும் குற்றவாளிதான்... எல்லா குற்றத்துக்கும் சேர்த்து ரெண்டு பேருக்கும் விலங்கு மாட்டு. பாக்கியம் வாடி... ஒனக்கும் கோடி புண்ணியம்.... எங்க ரெண்டு கையையும் ஒண்ணா சேர்த்து விலங்கு போடு. இப்போ படற அவமானத்தைவிட ஒன்னால் படப்போற அவமானம் பெரிசாயிடாது."

சப்-இன்ஸ்பெக்டர் யோசித்தார். இந்த ஆசாமி இப்படிக் கத்துறார் என்றால் ஏதாவது பேக்ரவுண்ட் இருக்கும். இவன் மாமனோ மகனோ தாலுகா ஆபீஸ்ல இருப்பான். விஷயத்த இதோட விடமாட்டான்.... ஆர்.டி.ஓ. என்குயரி வரும். ஆனால், புகார் கொடுத்தவன் துளசிங்கமாச்சே.... ஒப்புக்காவது ஏதாவது செய்யணுமே.....

"நான் எதுக்கு சொல்ல வந்தேன்னா... பெரியவரே."

"நீ எங்கய்யா என்னை பெரியவன்னு நெனச்சே... என் வயசுல முக்கால் வயசுகூட ஒனக்கு இல்ல. எடுத்த எடுப்புலயே ஏடா ஓடான்னு பேசுறே... ஒன்னை மாதிரி நானும் விவகாரிதாய்யா... நாலு ஊர்ல வழக்குப் பேசி முடிச்சு வச்சவன் தாய்யா நான். இந்த ஊருல இந்தத் தெருவுல ரெண்டு வம்சங்க. ரெண்டுக்கும் ஏடாகோடமான போட்டி. இந்த ஊருக்குப் பொறுப்பு வகிக்கிற ஒனக்கு மொதல்ல இது தெரிஞ்சிருக்கணும். இப்படிப்பட்ட நிலையில் ஒரு குடும்பத்து பொண்ணு எதிரிக் குடும்பத்துப் பயலோட ஓடிப்போறது வெறும் காதல் விவகாரமா மட்டும் ஆகாது. அதுல பெண்ணப் பெத்தவன் குடும்பத்தோட மானமும், ஆணப் பெத்தவன் குடும்பத்தோட ஆணவமும் அடங்கியிருக்கு......

நீ சப்-இன்ஸ்பெக்டர்... என்ன செய்திருக்கணும்... இப்போ வந்து நிக்கியே.... இந்த இடத்துக்கு வரணும்.... ரெண்டு குடும்பத்துக் காரனுவளயும் ஊர்ப் பெரியவங்களையும் கூட்டணும்... அப்புறம் உருட்டு மிரட்டு.... இது ஒன் வேலை... ஒருத்தன் எதையோ சொன்னான்னு நிரபராதிகள் உருட்டி... மிரட்டி எதிரி கோவிலுக்கே கூப்பிடறதும்.... சொன்னபடி போகாட்டா விரட்டுறதும்... நல்லா இருக்கா? சும்மா ஒரு புகார் கிடச்சுட்டு என்கிறதாலே... கண்மண் தெரியாம ஆடுறதா.... ஏற்கெனவே படுற அவமானம் போதாதுன்னு, நீயும் அவமானப் படுத்துனா என்னய்யா அர்த்தம்? எங்களுக்கு மட்டும் ஆளில்லையா என்ன? விலங்கு போட்டு கூட்டிட்டுப் போய்யா... அப்படியாவது என் திருமலையை நான் பார்க்கலாம்..."

பழனிச்சாமி போட்ட கூச்சலில் ஊரில் பாதி கூடி விட்டது. காத்துக் கருப்பன்கள், காரை வீட்டுக்காரர்கள், ஒத்தை வீட்டுக்காரர்கள், ஆசாரிக் கூட்டம், கோனார் சாதியினர், சேரிக்காரர்கள்.... கடந்த ஒரு நாளில் போலீஸ்காரர்கள், பந்தோபஸ்து என்ற பெயரில் கண்டவர்களை எல்லாம் கழுத்தைப் பிடித்துத் தள்ளியதும், எலி டாக்டர் வீட்டில் என்னெல்லாமோ சாப்பிட்டதும், ஊர் மக்களிடம் ஒரு உக்கிரத்தை ஏற்படுத்தியது. ரஞ்சிதம் பீடிப் பெண்களோடு வந்தாள்... சப்-இன்ஸ்பெக்டர் முன்னால் போய் சவாலிட்டாள். "சாதாரண மனுஷன் பட்டை போட்டுட்டு ஆடுறான். நீங்க சர்க்கார் யூனிபார்ம் போட்டுட்டு ஆடுறிங்க. சினிமாப்பயல்க எங்கள் கிட்ட முறைகேடா நடந்ததா புகார் கொடுத்தேனே... அதுக்கு ஆக்ஷன் எடுத்தியா? இதோ புஷ்பம், இவள் கற்பு திருமலையால போயிட்டுதான்னு தீர விசாரிச்சியா? புஷ்பா நீயே சொல்லு..."

புஷ்பம் விம்மினாள்.

"இல்ல இல்ல, சண்டாளி முண்ட... அலங்காரி சோடிச்சா... இந்த சப்-இன்ஸ்பெக்டரும் நம்புறமாதிரி நடிச்சார். என்ன பேசவே விடலே..."

"இப்ப என்ன ஸார் சொல்றீங்க..... பொய்ப் புகார் கொடுத்த துளசிங்கத்தையும் அலங்காரியையும் கைது செய்ங்க பார்க்கலாம்... அப்போதான் நீங்க நிசமான போலீஸ்... இல்லன்னா போலி... இந்த ஊர்ல.. தடிமாடு மாதிரி திரிய வச்சிருக்கியே துளசிங்கம் - அவன்கிட்ட அந்த கோலவடிவ எங்கேடான்னு கேட்டியா?"

இடுப்பில் உள்ள துப்பாக்கியில் கை வைக்கப் போன சப்-இன்ஸ்பெக்டரை, அருணாசலம் இழுத்துப் பிடித்தார். கல்லைத் தூக்கப் போன பற்குணத்தை, நாட்டு வக்கீல் மடக்கிப் பிடித்தான். எவரோ இரண்டு பேர் முகங்களைக் காட்டாமல், சப்-இன்ஸ்பெக்டர் இடுப்பைக் கிள்ளினார்கள். சப்-இன்ஸ்பெக்டர் முன்னால் வந்து நின்ற ரஞ்சிதம் கோபாவேசப்பட்ட பீடி பெண்களைத் தடுத்து நிறுத்தினாள். அதற்குள் எதுவும் தெரியாத அப்பாவி போலவும் சற்றுத் தள்ளி நின்ற ஆயுதப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சப்-இன்ஸ்பெக்டருக்கு கேடயமாக நின்றபடியே கெஞ்சினார்.

"நான் சொல்லுறதை தயவு செய்து கேளுங்க.... இந்த சப்-இன்ஸ்பெக்டர் நடந்துகிட்ட முறை தப்புத்தான்... இந்த ஒரு நாளிலேயே ஊர் நிலையை புரிஞ்சிக்கிட்டேன். ஏதோ நடந்தது நடந்து போச்சு... அதை இனிமேல் மாத்த முடியாது... திருமலையை உடனே விடுதலை செய்ய ஏற்பாடு செய்யுறேன்... நாங்களும் ஊரை விட்டு

ஓடிப் போயிடுறோம். ஆனால் அதுக்கு நீங்க அமைதி காக்கணும். ஒங்க விவகாரத்தை நீங்களே தீர்ப்பதாய் உறுதி சொல்லணும்."

காண்டிராக்டர் தாமோதரன் உறுதி சொன்னார். "எங்க விவகாரத்த நாங்களே தீர்த்துக்கிடுறோம் ஸார். அதுக்குன்னு ஒரு பிளான் வச்சிருக்கேன் ஸார். நீங்க எல்லாரும் பொறுமையா என் வீட்ல சாப்பிட்டுட்டு போங்க ஸார்... அதுக்குள்ள கோலவடிவையும் கண்டு பிடிச்சுடுங்க ஸார்."

போலீஸ் கூட்டமும், ஊர்க் கூட்டமும் சிறுகச் சிறுகக் கலைந்தது. வீறாப்பாய் நிற்பது போல் நின்ற சாதாரண சப்-இன்ஸ்பெக்டரை, ஆயுத சப்-இன்ஸ்பெக்டர் இழுத்துக் கொண்டு போனார்.