Chapter 33
அலங்காரி, துடித்துப் போனாள்.
புறக்கடை வழியாக அலறியடித்து முன் பக்கம் வந்தாள். மச்சான் மகன் தர்மராசா கையையும், மச்சினன் ரத்தினத்தின் கையையும்
பிடித்தபடியே பதறியடித்துப் புலம்பினாள். "கோலவடிவ காணுமே.... காணுமே...''
உடனே, அந்த செம்பட்டையான்கள் இருவரும், வீட்டுக்குள் போய், அலங்காரி பார்த்த இடத்தையெல்லாம் பார்த்தார்கள்..... அலங்காரி குரல் கொடுத்தாள்.
"பப்பாளி மரம் பாதில்.... ஒடிஞ்சிருக்கதப் பார்த்தா ... கோலவடிவு அந்த மரத்தைப் பிடிச்சு சுவரில் ஏறி அந்த பக்கமா குதிச்சிருப்பான்னு நெனக்கேன்... நல்லாப் பாருங்க... பாவி... மொட்ட... கெடுத்துட்டாளே.... ரஞ்சிதம் பாவி விடமாட்டாளே...''
அவர்கள் இருவரும் சுவரில் ஏறி, பேட்டரி விளக்குப் போட்டு, அதை அங்குமிங்குமாய் ஆட்டிப் பார்த்தார்கள். பிறகு உதடுகளைப் பிதுக்கியபடியே வந்தார்கள்.... பகவதி பாட்டி புலம்பினாள்.
"ஏய் அலங்காரி! குடி கெடுப்பா.... ஒனக்கு வர வேண்டிய நிலம் அவளுக்கு வந்துட்டே... இந்நேரம் நீ விழவேண்டிய கிணத்துல அவள் விழுந்திருப்பாளே.... ஒரு சின்னஞ்சிறிச... கொன்னுட்டியடி பாவி. அவள் ஒரு பொண்ணு மாதிரி நெனச்சா பேசுன... நாயப் பேசுறது மாதிரி பேசுன.... அப்போ துளசிங்கம் பய பேசுனதையும் இப்போ நீங்க பேசுனதையும் கேட்டுட்டு அவள் சாவுறதுக்காக ஓடிட்டாள். ஆத்துலயோ, கிணத்துலயோ உயிரவிட ஓடிட்டாள்.... நான் என்ன செய்வேன்.... கையும் ஓட மாட்டங்கு.... காலும் ஓட மாட்டேங்கே.... எப்பா.... சிவனுபாண்டி.... எப்பாவு.''
வீட்டில் கிழக்குச் சுவர் பக்கமாக போய் நின்று பகவதி பாட்டி கத்தினாள்... பழனிச்சாமியின் சித்தி மகன் சிவனுப்பாண்டி பெண்டு பிள்ளைகளோடு சுவர்ப் பக்கமாக வந்து தலையை நீட்டினான்.
''எப்பாவு... கோலவடிவு அங்க வந்தாளா? எங்கேயோ போயிட்டாளே..."
"வந்தபோது சொல்லணுமுன்னு தோணல.... போன பிறவா சொல்லுதே... கோலவடிவ வெட்டிக் கொன்னியளா? எரிச்சுச் கொன்னியளா? அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும்.... ஒன்னையுைம் சேர்த்து போலீஸ்ல ஒப்படைக்கேன் பாரு..."
“நான் என்னப்பாவு செய்வேன்... இந்த மூளி அலங்காரி செய்த வேல்.... பாதகத்தி.... நானாழா.... ஒனக்கு கிடச்சேன்... வாழப்போற பெண்ணை நாசமாக்கி மிதிச்சிட்டியளா... பாவி... மொட்டுப்பூவ... பறிச்சி... எறிஞ்சிட்டியேழா... சண்டா ...."
"ஒனக்கும் எனக்கும் பேச்சில்ல... பெரியம்மா...”
"அப்படின்னா .... என் வீட்டுக்குள்ள ஏமுழா வந்த...? மரியாதி கெட்டவளே.... மேனாமினுக்கி... கையேயி... நீலி... என் கடைசி காலத்த நிம்மதி இல்லாம பண்ணிட்டியே...."
"இனிமே ஒன் வீட்டுப் படி ஏறுனால் சொல்லு..."
பகவதி பாட்டி, அங்குமிங்குமாய், அலைபாய்ந்து புலம்பினாள். சிவனும் பாண்டியனை, அவன் மனைவி சட்டையைப் பிடித்து வீட்டுக்குள் இழுத்தாள். இந்தச் சமயத்தில் பகவதிப் பாட்டி சொன்னதுதான் சாக்கு என்று அலங்காரி முகத்தை உப்பிக் கொண்டு செம்பட்டையான்களுடன் வெளியேறினாள். அவளால் பேச முடியவில்லை.... 'ஒரு வேளை கோலவடிவு தற்கொலை செய்திருப்பாளோ... எனக்கென்ன... இதுக்குல்லாம் காரணம் துளசிங்கந்தான்.... எலி டாக்டர் மவன்... அந்த இரப்பாளிப் பயல்தான்.'
அலங்காரியின் மெய்க்காப்பாளர்கள் போல் இருவரும் இருபக்கமும் நடக்க, அவள் இந்த இருட்டு வழியில் நடந்தாள். பேட்டரியை அடிக்கப் போன தர்மராசாவின் கையைப் பிடித்துத் தடுத்தபடியே இருட்டாகி நடந்தாள். சற்றுத் தொலைவில் தெரிந்த கார் வெளிச்சத்தை இலக்காக்கி, நடக்கும் தரையைப் பாதையாக அனுமானித்து அந்த மூவரும் நடந்தார்கள்.
அந்தக் காரை அவர்கள் நெருங்கியதும் துளசிங்கம் கூட கேட்க வில்லை. கான்ஸ்டபிள்கள் சகிதமாக நின்ற சப்-இன்ஸ்பெக்டர்தான் கேட்டார்.
"கோலவடிவு வரலியா...? ஒங்களத்தான் அலங்காரியம்மா.... ஏன் வரல?"
"ஓடிட்டா ஸாரே..... ஓடிட்டா.... ஓடுகாலி ... அந்த வீட்ட விட்டு எவனோடயோ ஓடிட்டா..."
"என்ன சித்தி நல்லா பாத்தியா..."
"நல்லாவே பார்த்துட்டேன். ஒடியே போயிட்டாள். கடைசில அவள் கரும்பட்டையான் புத்தியக் காட்டிட்டா.... இப்போ என்ன செய்யலாம் ஸாரே....”
சப்-இன்ஸ்பெக்டர், அலங்காரியின் கையைப் பிடித்தபடியே பதிலளிக்கப் போனார். அதைத் துளசிங்கம் பார்ப்பதைப் பார்த்த அலங்காரி, அவர் பிடியிலிருந்து லாவகமாக விடுபட்டு விலகி நின்றாள். சப்புக்கு' தாபம் - கோபம். மணமகளைப் பாதுகாப்பாகக் கொண்டு வர இரண்டு கான்ஸ்டபிள்களே போதும், அவரும் வந்ததே இந்த அலங்காரிக்காகத்தான்... ரொம்பத்தான் பிகு பண்ணுறாள்...
"அலங்காரி! நீ சாதாரணமா சொல்றது மாதிரி விஷயம் சின்னதுல்ல... கோலவடிவு ஒங்க பாதுகாப்புல இருந்தவள். அவள் ஓடிட்டான்னு நீங்க சொல்லலாம். ஆனால், எதிரிங்க நீங்க கொலை செய்ததா புகார் செய்யலாம். அப்போ நானும் சும்மா இருக்க முடியாது. ஒங்க ரெண்டு பேரையுமே ஒரே விலங்குல.... பூட்டி ஸ்டேஷனுக்கு கொண்டு போகவேண்டியது வரும்... இப்பவே கூட அரெஸ்ட் செய்யலாம்... கோலவடிவ காட்டவேண்டியது ஒங்க பொறுப்பு... அண்டர்ஸ்டாண்ட்... துளசி..."
துளசிங்கம், எதுவும் புரியாமல் அலங்காரியைப் பார்த்தபோது, அவள், சப்-இன்ஸ்பெக்டரின் அருகே வந்தாள். அவர் இடுப்பில் தன் கரத்தைத் தற்செயலாக உரச வைப்பது போல் உரசியபடியே கெஞ்சினாள்....
"எசமான்... நீங்களே எங்கள் கைவிட்டா ... எப்படி எசமான்? அப்படியே அந்த கரிமுடிவாள் உயிரை மாய்ச்சிருந்தாலும், எங்கள் நீங்கதான் கரை சேர்க்கணும். ஒங்களத்தான் மலை போல நம்பியிருக்கோம். நாங்க செய்த தப்பை எல்லாம் காலால உதறி கையால அணைக்கணும்...”
சப்-இன்ஸ்பெக்டர், அலங்காரி சொன்னதைச் செய்தார். அவள் கால்களில் தனது கால்களை மோதவிட்டபடியே அலங்காரியின் தோளில் கூசாமல் கையைப் போட்டார். துளசிங்கம், வேறுபக்கமாகத் திரும்பிக் கொண்டான். சப்-இன்ஸ்பெக்டர் குழைந்து குழைந்து பேசினார்.
"நான் சொல்றத தப்பா.... நெனக்காதீங்க... அலங்காரியம்மா நாளைக்கே பழனிச்சாமி கோர்ட்ல மனுப்போட்டு, கோலவடிவ... ஆஜர் செய்யணுமுன்னு கேட்டால் நம் எல்லோரும் மாட்டிக்குவோம்.... ஏற்கெனவே ரஞ்சிதம் நான் ரயில்வே பாலத்துல செக்குரிட்டி ஏற்பாட்டைப் பார்க்கப் போனப்போ துளசிங்கம் இருக்கான்.... கோலவடிவு எங்கேன்னு ... நான்... என்னமோ கோலவடிவ கூட்டிட்டுப் போனது மாதிரி கேட்டாள்.... சரி ஊருக்குப் போயிட்டாளோ.... என்னமோ... அங்க போய் பார்க்கலாம்.... காரில் ஏறுங்க..... என்ன ஆனாலும் சமாளிச்சுத்தானே.... ஆகணும்..."
துளசிங்கம், காரின் முன்னிருக்கையில் ஒதுங்கிக் கொண்டு, தர்மராசாவையும், ரத்தினத்தையும் இழுத்துப் போட்டுக் கொண்டான்... அவனுக்குப் பயம் பிறந்தது. கோலவடிவு செத்துப் போயிருப்பாளோ என்று உயிரோடு செத்துக் கொண்டிருந்தான். பின்னிருக்கையில் சப்-இன்ஸ்பெக்டரும், அவரைத் தடுக்காத அலங்காரியும் உட்கார, கார் பறந்தது. அரை மணி நேரத்தில் தார் ரோட்டில் பாய்ந்து மண்பாதையில் ஓடி பருத்திக் காட்டுப் பக்கம் வந்தபோது, வெளிச்சத்தைப் பார்த்த மேளக்காரர்கள், அடி அடி என்று அடித்து ஊது ஊதென்று ஊதித் தள்ளினார்கள். அவர்களை நெருங்கியதும், சப்-இன்ஸ்பெக்டர் அதட்டலில் மேளதாளம் நின்றதால், கோவில் மைக் போட்ட சத்தம் நன்றாகக் கேட்டது.
"ஆண் பிள்ளை என்று நிரூபித்த அண்ணன் துளசிங்கமே வருக!"
"அதற்கு ஒத்துழைத்த அண்ணி கோலவடிவே வருக!"
சப்- இன்ஸ்பெக்டர் அலங்காரியின் தோளைத் தட்டியபடியே கேட்டார்.
"என்ன உளறுறாங்க?"
"அதுவா ஸாரே.... மெட்ராஸ்ல ஒரு சினிமாக்காரன் குழந்தை பெறாத முதல் பெண்டாட்டிய தள்ளி வச்சிட்டு ரெண்டாவதா ஒருத்திய கட்டி பிள்ள பெத்தானாம். அவன் ரசிகர் மன்றம் அப்போ போட்ட போஸ்டர் இந்தப் பயலுவ பாராம படிச்சு ஒப்பிக்காங்க.... ஒரு காலத்துல ஊர்க்காரனைப் பார்த்து சினிமாக்காரன் காப்பியடிச்சான்... இப்போ சினிமாக்காரனப் பார்த்து ஊர்ப்பயலுவ காப்பியடிக்காங்க.... நல்ல கூத்து ..."
அந்த கார் சுடலைமாடன் கோவிலுக்கு வந்தபோது, சாமியாடிகள் ஆடியபடியே காரை மொய்த்தார்கள். செம்பட்டையான்கள் வாணவேடிக்கை போட்டார்கள்..... சப்-இன்ஸ்பெக்டர் கார் கதவை உடைப்பது போல சாத்திவிட்டு இறங்கினார். லத்திக் கம்பைக் காட்டி எல்லோரையும் விரட்டினார். அப்படியும் ஆண்களும் பெண்களுமாய் கும்பல் கும்பலாய்க் கூடி கிசுகிசுத்தார்கள். இவர்களின் கவனத்தைக் கலைப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர் "விசேஷம் அதுபாட்டுக்கு நடக்கட்டும், மைக்குல பேசுற பயல் வாயை மட்டும் மண்ணவச்சு அடைங்கப்பா" என்றபோது
வில்லுப்பாட்டாளி, "பார்வதியானவள் ஊசி முனையில் நின்று தவம் செய்து, அதனால் கிடைத்த சிவனார் வரத்தின்படி, கைலாயத்தில் வடக்குமணி வாசலில் முப்பத்திரண்டாவது தூணில் தூண்டாமணி விளக்கு சுடர் விளக்கைத் தூண்ட, சுடலை பிறந்தான்" என்று பாடியபோது, கார்ப்பக்கம் நின்ற ரத்தினம் ஊளை யிட்டுக்கொண்டே கோயிலுக்குள் ஓடினான். அவன்தான் சுடலைமாட சாமியாடி.... அந்தக் கதாநாயக சாமிக்குக் குல்லாய் போட்டார்கள். இரும்பு முள் செருப்பை மாட்டினார்கள். ரத்தினம் தங்குதங்கென்று ஆடி வடக்கே இருந்த பகவதியம்மனை ஆடும் பெண்சாமி ஒருத்தியிடம் உத்தரவு வாங்கிட்டு, மீண்டும் ஆட, உடனே எல்லாச் சாமியாடிகளும் குதித்தார்கள்.
மேளம் பீறிட்டது... நாதஸ்வரம் வீறிட்டது... பெண்களின் குலவைச் சத்தம் பந்தலை முட்டியது. கால்களைத் தூக்கி, கைகளை ஆட்டி வாய்களால் ஊளையிட்டபடி ஆடினார்கள். மேளக்காரர்களுக்கும் சாமி வந்தது..... எவர் சாமியாடி, எவர் மேளக்காரர் என்று கண்டுபிடிக்க முடியாத ஆட்டம். எல்லாச் சாமியாடிகளையும் கும்பிட்டு திருநீர் வாங்கிய ஒரு செம்பட்டை, பகவதியம்மனிடம் போகவில்லை. போகக்கூடாது. பகவதியம்மா, மனைவியைப் பிடித்து ஆட்டினாலும், மனைவி மனைவிதான். கும்பிடப்படாது..... எலிடாக்டர் ஒரே இடத்தில் நின்றபடி தோளை மட்டும் முறுக்கினார். மயான புத்திரன் இவர். நேற்று மண்டையில் பட்ட கல்லெறியால் அதுக்கு மேல் ஆட முடியவில்லை.
ஒரு சாமியாடி தோளில் வெட்டரிவாள்... இன்னொருத்தர் கையில் பிரம்புத்தடி. ஒருவர் புண்ணாக்கு தின்ன, இன்னொருத்தர் வாழைப்பழத்தை உரிக்காமலே உள்ளே போட்டார். இவர்களுக்கு மத்தியில் சுடலைமாட ரத்தினம் சுற்றிச் சுற்றி வந்தான் ... கையிலே
அரிவாளோடு குதித்தான்.... "டேய் என் புத்திரர்களா... பாத்தியளாடா... சுடலை மாடனோட லீலையை.... எதிரி கோயில் எப்படி மூடிட்டேன் பார்.... சப்-இன்ஸ்பெக்டர் மவனே..... கவலப்படாத..... கோலவடிவ கண்டுபிடிச்சுத் தாரது என் பொறுப்பு.... இவளை நான் தான் சில காரணத்துக்காவ மறச்சு வச்சிருக்கேன்..."
சப்-இன்ஸ்பெக்டர் கோவிலை விட்டுக் கோபமாக வெளியே வந்தார். கோவிலுக்குள் சாமியாட்டத்தை ஆடியோச் சத்தத்துடன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த சினிமாக்காரர்களின் கும்பிடுகளுக்கு பதில் கும்புடு போடாமலே வெளியேறினார்.
ஆங்காங்கே பாராபோட்டிருந்த போலீஸாரைக் கண்காணிப்பது போல் பார்த்துவிட்டு ஒரு வேப்பமரத்தின் பக்கமாக வந்தபோது காலடிச் சத்தம் கேட்டு திரும்பினார். அலங்காரி..... அவளே, இப்போது அவரது கையை எடுத்துத் தோளிலே போட்டுக் கொண்டு கேட்டாள்....
"ஸாரே என்ன யோசிக்கியே...?"
"ரத்தினம் பயல அரெஸ்ட் பண்ணப் போறேன்... இப்பவே கையுல விலங்கு மாட்டப் போறேன்..."
"ஐய்யய்யோ ... அப்டில்லாம் செய்யாதிய ஸாரே... என்ன விஷயம்..?"
"ஆழம் தெரியாமல் காலைவிட்டுட்டு அவஸ்தப்படுறவன் மாதிரி கோலவடிவு என்ன ஆனாளோன்னு நான் அவஸ்தப்படுறேன். சாமியாடிப்பய சும்மா ஆட வேண்டியது தானே... சுடலைமாடன் மறச்சு வச்சிருக்கதா சொன்னான்... கிட்நாப்பிங்கா... அவன விடமாட்டேன்..."
"என் மொகத்துக்காவ அவன் விடுங்க சாமி. அவன் சரியான நெருப்புக்கோழிப் பய....”
"அலங்காரி , எனக்கென்னமோ... கோலவடிவு அவளோட வீட்டுக்கோ... சொந்தக்காரங்க.... வீட்டுக்கோ வந்திருக்கலாமுன்னு ஒரு சந்தேகம்... யாரையாவது ஆட்கள் அனுப்பி பார்க்கச் சொல்லேன்.”
"எல்லா அதிகாரத்தையும் கையில வச்சுக்கிட்டா இப்டிச் பேசுறது...? போலீஸ் அனுப்பி பழனிச்சாமி வீட்ட சோதனை போடுங்க... இல்லன்னா.... எந்த வீட்டுக்குப் போனாலும் பெரிய மனுஷத்தனம் இல்லன்னு நினைக்கிற பழனிச்சாமிய போலீஸ் அனுப்பி கையோட கூட்டி வரச்சொல்லி கோலவடிவ எங்கேடா கடத்திட்டு போனேன்னு ரெண்டு தட்டுத் தட்டுங்க..."
"அலங்காரி... நீ நெசமாகவே ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாய் ஆயிருக்கணும்.”
"அப்படின்னா ஸாரே...?"
"ஒண்ணுமில்ல.... விடியட்டும்... பழனிச்சாமிய இங்க கூட்டிவந்து ஒன் கண்ணு முன்னாலயே.... விசாரிக்கேன் பாரு...."

