Chapter 25
கண்மூடித்தனமான இரவு....
அந்தக் குருட்டுத்தனமான இருட்டுப் பயங்கரப் பின்னணியில், பனங்காட்டை அடுத்த மாந்தோப்பிற்குள், ஏதோ ஒரு பூனை அசல் பச்சைக் குழந்தை போல் அழுதது. விட்டுவிட்டும், விடாப்பிடியாகவும் அழுது புலம்பியது. இந்த அழுகைச்சத்தம் அரவம் கேட்டு, பனங்காட்டு நரி ஒன்று, ஊளையிட்டது. அதற்கு அருகிலேயே நாகப் பாம்போ, அல்லது சாரைப் பாம்போ எலிவளை ஒன்றிற்குள் பசியேக்கப் பார்வையுடன் ஊர்ந்து கொண்டிருந்தது... காதைப் பியக்கும்படி அடித்த காற்று, பேயிரைச்சலாய்க் கத்தி, அங்குள்ள அனைத்தையும் ஆட்டுவித்ததில், பனங்காய்கள் விழுந்தன. புளியம் பழங்கள் சிதறின... தென்னை ஓலைகள் சாய்ந்தன.... காட்டுப் பூனை "விறுவு" நாட்டுக் கோழி ஒன்றைக் கௌவிக் கொண்டு நர்த்தனமாடுவதுபோல் தாவியது.
அந்த இருட்டுக்குப் பழக்கப்பட்ட துளசிங்கம், விக்கி வண்டியை வேகமாகத்தான் ஓட்டினான்... பழக்கப்பட்ட பாதை என்பதுடன், எவரும் பார்த்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையாலும், அவன் வண்டி வேகத்தை முடுக்கி விட்டான். பின்னால் உட்கார்ந்திருந்த கோலவடிவு படபடப்பாகப் பதறிப்பதறிக் கேட்டாள்.
"எனக்கு பயமாய் இருக்கு மச்சான்.... பயமாய் இருக்கு மச்சான் வண்டியை நிறுத்தும் மச்சான்... ஒமக்குப் புண்ணியம் மச்சான்... இது தப்பு மச்சான்... வீட்டுக்குப் போறேன் மச்சான்..... அய்யோ பயமா இருக்கு.... பயமா...."
மரணமுற்ற கர்ப்பிணிப் பெண் - பேய்களுக்காக அமைக்கப்பட்ட சுமைதாங்கிக் கல்லைப் பிடித்தபடியே, வண்டியை நிறுத்திவிட்டு, அவள் முகத்திற்கு எதிராய் முகம் போட்டுக் கேட்டான் துளசிங்கம்....
"சரி... வண்டிய திருப்பட்டுமா..." "திருப்பும் மச்சான் திருப்பும் மச்சான்.. பயமா இருக்கு மச்சான்."
"எதையும் பயப்பட்டு செய்யப்படாது... அப்படிச் செய்தால் அது உருப்படாது.... சரி... இறங்கு வண்டிய திருப்புறேன்."
"ஆனால் நீரு ஊருக்குள்ள இருக்கப்படாது... எங்க ஆட்கள் ஒம்ம கண்டதுண்டமா வெட்டுப்பிடுவாங்க."
"நீயே என்னைவிட்டு... வெட்டிக்கிட்டு போகும்போது அவங்களே என்னை வெட்டிக் கொல்லட்டும்."
"அப்போ நான் வீட்டுக்குத் திரும்புனால், நீரு ஊர்ல இருந்துக்கிட்டு கோயில் விவகாரத்துல வம்பு பண்ணுவீரோ...."
"வம்புக்கு போவ மாட்டேன்.... வர்ர வம்பை விடமாட்டேன்... சரி இறங்கு, வண்டியைத் திருப்புறேன்.... ஆமா ஏன் இறங்க மாட்டக்கே..."
"பயமா இருக்கு மச்சான்..."
"ஒனக்குப் பயம்.... எனக்கு கோபம்... ரெண்டும் தீரணுமுன்னா ஊருக்குப் போறதுதான் ஒரே வழி - இறங்கு கோலம்..."
"சரி... சரி... வண்டிய விடும்..."
"எந்தப் பக்கமா....”
"என்ன குழப்பாதயும்... எந்தப் பக்கமாய் வேணுமுன்னாலும் விடும். ஒம்ம இஷ்டம்..."
"அப்போ ஒனக்கு இஷ்டமில்லியா..."
"ஒம்ம இஷ்டந்தான்... என் இஷ்டமுன்னு இதுக்கு மேல எப்படிச் சொல்லுறதாம்... ஆனாலும் பயமா இருக்கு மச்சான்... ஏதோ செய்யத் தகாததை ..."
"அவனுவ ஒன்னை அக்னிராசாவுக்கு கொடுக்கது மட்டும் செய்யத் தக்கதா....? என்னை கொலை பண்ணுறதுக்காவ அரிவாள் கம்போட அலையுறது மட்டும் செய்யத்தகுமா...”
“சீக்கிரமா விடும்... ஊர்ல ஆளுவ தேடி வர்றதுக்கு முன்னால போயிடலாம்... எனக்கு பயமா இருக்கு மச்சான்... சீக்கிரமா விடும்..."
விக்கி வண்டி விரைந்து ஓடியது; ஒடுங்கிப் போய் உட்கார்ந்த கோலவடிவின் உடம்பெல்லாம் ஆடியது.... அவள் உடம்பில் பெருக் கெடுத்த வேர்வை வெள்ளத்தை, அந்தப் பேய்க் காற்றாலும், துடைக்க முடியவில்லை.... மோவாய், மார்பெலும்பில் முட்டும்படி கீழே விழப் போவதுபோல், இருந்த கோலத்தின் தோளில், இடது கையை அணைத்துப் போட்டபடியே துளசிங்கம் அவளுக்கு ஒரு யோசனை சொன்னான்....
"கீழ விழுந்துடப்போற கோலம்... என்னைச் சேர்த்துப் பிடிச்சுக்க... இப்டி பிடிச்சுக்க..... ஆமாம். இப்படித்தான்.... அப்புறம் இந்த மாதிரி சமயத்தில், எந்த கண்ணுலயும் ஒன் முகம் தெரியப்படாது... அதனால்.... ஒன் முகத்த என் முதுகுல போட்டு மறச்சுக்க... அப்டி இல்ல.... இப்டி..."
துளசிங்கம் அவளிடம் பேசியபடியே, அவளின் வலது கரத்தைப் பிடித்து, தனது வயிற்றோடு சேர்த்து வைத்தான். ஒரு கரத்தை வளைத்துப் போட்டான்.... அவன் ஓரிரு தடவை அந்தக் கையை எடுக்கப் போனபோது, அவள் தனது இடக்கையால் அவன் விரல் நுனிகளைப் பிடித்துக் கொண்டாள்.... பிறகு, தனது கையை, வண்டி சாயாமல் இருப்பதற்காக, அவன் எடுத்த போது, கோலம் தனது கையை அவன் வயிற்றில் இருந்து எடுக்கவில்லை. மாறாக, அந்தக் கைப்பிடியை வலுவாக்கினாள்.... பயத்திலே போட்ட பிடி, பாசப் பிடியானது. அவன், அவளைப் பார்க்காமலே வண்டியை ஓட்டியபடியே, ஒரு கையைப் பின்புறமாக வளைத்து, அவள் முகமென்று பிடறியைப் தடவி, பிடறி என்று முகத்தைப் பிடித்து, தன் முதுகிலே சாத்திக் கொண்டான்... வண்டிப் போகப் போக, கோலவடிவின் குரலும் போயிற்று... பிடித்த பிடியைத் தளர்த்தாமல், போட்ட முகத்தை நிமிர்த்தாமல், கிடந்தாள். இன்னும் சொல்லப் போனால், அவள் பிடி இறுகியது; கிடுக்கிப்பிடி... துளசிங்கம் வண்டியைத் தென்மேற்குப் பக்கமாய்த் திருப்பியபடியே, அவளிடம் சந்தேகம் கேட்டான்.
"ஒனக்கு இப்போ பயம் போயிட்டுன்னு நினைக்கேன்... பேசு கோலம்.... என் பேசமாட்டக்கே... நீ பேசாட்டா என்னை ஒனக்கு பிடிக்கலன்னு அர்த்தம்... ஏன் பேசமாட்டக்கே... ஏய்... பேசுப்பா..."
"மாட்டேன்... பேசுனா என் வாய் ஒம்ம கழுத்துல படும்..."
"சரி.. அப்போ முகத்தை தூக்கி வச்சுட்டுப் பேசு... இப்போ பயமா இல்லியா... வீட்டுக்குப் போகணுமேன்னு எண்ணம் வரலியா... தப்பு செய்துட்டோமுன்னு தோணலியா... சொல்லு கோலம்... ஒனக்கு கூச்சமா இருந்தால் முகத்த எடுத்துட்டுப் பேசு...”
கோலவடிவு முகத்தை அவன் முதுகில் இருந்து எடுத்தாள்.... அதுவும் அவன் சொன்னதற்காக அப்படிச் செய்பவள் போல், முகத்தைப் பட்டும் படாமலும் எடுத்துவிட்டு, பட்டுப்பட்டென்று பதிலளித்தாள்.
"எனக்கே என்னைப் பத்தி நினைக்க ஆச்சரியமா... இருக்கு மச்சான். இப்போ பயம் இருந்த இடத்துல... படபடப்புத்தான் இருக்குது.... சரியோ..... தப்போ .... வந்தாச்சு.... தப்புல்ல.... சரிதான்... நீரு என்கூட இப்டி வராமல்.. ஊர்ல... லாந்துனால்..... நிச்சயம்... ஒம்ம கொல பண்ணிப் புடுவானுவ... ஒம்ம காப்பாத்தறதுக்கு ஒரே வழி... இப்படி.... ஓடி வாரதுதான்... ஊரு உலகத்தில் செய்யாததையா.... செய்யுறோம். எத்தன பேரு.... இப்டி..... ஓடிப் போயிட்டு.... அப்புறம் குடும்பத்துல.... சேர்ந்துட்டாங்க...... கல்யாணம் ஆனதும்..... மாலையும் கழுத்துமாய் எங்கப்பாம்மா காலுல விழணும்... ஒங்கப்பாம்மா காலுலவுந்தான். வெட்டுப் புடுவாவளா... என்ன.... இப்போ .... ஒம்ம பிளானு என்ன ...''
கோலவடிவு, பயம் தெளிந்து, பலம் புரிந்து பேசுவதைப் பார்த்து, துளசிங்கமே அசந்து விட்டான்... மீண்டும் தனது கையைச் சுற்றி வளைத்து, அவள் பிடரியைச் செல்லமாகத் தட்டித்தட்டி, அவள் முகம் தன் முதுகில் மோதும்படி செய்துகொண்டே பேசினான்.
"இப்போ... நேராய் நாம வெட்டாம்பட்டிக்குப் போறோம்... எங்கம்மா பிறந்த ஊரு..."
''அய்யய்யோ ..... எங்க சொந்தக்காரங்களும் அங்க இருக்காங்களே..." |
"இருக்கட்டுமே.. கல்யாணத்துக்கு சாட்சிக் கையெழுத்துப் போட அவங்களையும் கூப்புடலாம்..."
“சரி.... சொல்லப் போறத முழுசாப் சொல்லும்..."
"வெட்டாம்பட்டில் எங்க பாட்டி வீடு இருக்குது. மாமன் மாருங்க... அவனவனுவ பெண்டாட்டிகள் ஊர்ல, வீடுகள் கட்டிக்கிட்டு இருக்காங்க... பாட்டி மட்டும் தான் தனியா அந்த வீட்ல இருக்காள்... இன்னைக்கு ராத்திரிக்கு .... அங்கேதான் தங்கப் போறோம்.."
"அப்புறம்..." "இதைக் கூடவா சொல்லிக் கொடுக்கணும்..."
"என்ன மச்சான் நீரு... அதுக்காவத்தானா... நான் ஓடிவாறேன்? சத்தியமாச் சொல்லுதேன்... எனக்கு அந்த நெனப்பே இல்ல.. ஒம்ம இப்டி கட்டிப் பிடிச்சிருக்கதுகூட நீருதான் தஞ்சமுன்னு சொல்லுறது மாதிரிதான். சரி... விஷயத்துக்கு வருவோம்... ராத்திரி தங்குறோம்.... ராத்திரி போனதும்..."
"காலையில் நேரா கோணச் சத்திரம் போறோம்... ரிஜிஸ்டர் கல்யாணம் செய்துக்கிறோம். அங்கே இருந்து மாலையும் கழுத்துமா… காளியம்மாவ கும்புடுறோம்.... சுடல மாடன தரிசிக்கோம்..... நம்மள பெத்தவங்க காலுல விழுறோம்..."
"நாம இங்க ஓடிவாரது தெரிஞ்சு.... சட்டாம்பட்டில் இருந்து எங்க ஆளுவ வந்து ஏறுக்குமாறா எதுவும் செய்துப்படாதே மச்சான்...”
"நீ சின்ன பொண்ணு ... அதனால ஒனக்குத் தெரியல... யாரும் யாரையும் பொதுவா ஊர்விட்டு ஊர் வந்து அடிக்க மாட்டாங்க..... அடிக்க முடியாது... இந்த வெட்டாம்பட்டிக்குள்ள எந்த ஊர்க்காரனும் வந்து நம்மை அடிச்சா... இந்த ஊர்க்காரன் தன்னையே அடிச்சதா நெனைப்பான்..."
"சரி... இந்த ஊர்க்காரனே நம்மள அடிச்சா...."
"வெட்டாம்பட்டிக்காரன் அந்தப் பேருக்கு... ஏத்தபடி அடாவடிக்காரன்தான்... ஆனால் காலுல விழுந்துட்டா ஒருத்தர் உயிரை எடுக்கப் போறவனும் தன்னோட உயிரையே கொடுப்பான். சரி... என்னை நல்லா பிடிச்சுக்க... கீழே விழுந்துடப் போற..."
"இதோ பிடிச்சுக்கிட்டேன். இனிமேல் நான் விழுந்தா நீரும் விழுந்துதான் ஆகணும். தெரியுமா...”
அந்த விக்கி வெட்டாம்பட்டிக்குள் வந்தபோது, நாய்கள் கூடக் குலைக்கவில்லை... அவ்வளவு பெரிய தூக்கம். ஆனாலும், துளசிங்கம் வண்டியை நிறுத்திவிட்டு, தானும் இறங்கி, கோலவடிவையும் இறக்கிவிட்டு, வண்டியை உருட்டினான். ஏன் என்பது மாதிரி கேட்கப்போன கோலவடிவின் வாயை ஆள்காட்டி விரலால் தாளிட்டான். வெட்டாம்பட்டி என்ற பெயர் விளங்கும்படி, கருவேல மரங்களான உடைக்காடும், கல்லும் பாறையுமான அகழியும் கொண்ட அந்த ஊருக்குள் ஒரு ஓரத்தில் இருந்த, ஒரு பாடாதி வீட்டைத் துளசிங்கம் தட்டினான். அந்த இருட்டில், கதவைத் தட்டுவதாக நினைத்து, துளசிங்கம் சுவரைத் தட்டியபோது, கோலவடிவு அவன் கையைப் பிடித்து, கதவில் வைத்தாள்.... அவன் என்ன தான் தட்டினாலும், உள்ளே இருந்து எந்தக் குரலும் கேட்கவில்லை. இப்போது கோலவடிவும் சேர்ந்து தட்டினாள். கால் மணி நேரத்திற்குப்
பிறகு கதவு இடுக்கில் பார்த்தால், லாந்தர் வெளிச்சம் தெரிந்தது. ஐந்து நிமிடத்திற்குப் பிறகு கதவு திறக்கப்பட்டது. திறந்தவளுக்கு, எழுபது வயது இருக்கும்... ஆனாலும், பல் விழாத பாட்டி... வெள்ளைச் சேலைக்காரி... காயப்போட்ட மொச்சை கொட்டை மாதிரி சுருங்கிப் போன முகம்..... அந்த மெல்லிய லாந்தர் விளக்கில், பேரனை அடையாளம் கண்டு கொண்டாள்.
"அய்யய்யோ .... இது யாருடாப்பா.... யாருடா..."
"பாத்தாத் தெரியல... பொண்ணு... ஏன் பாட்டி இப்டி எதிர் பாக்காதது மாதிரி முழிக்கே... நேத்து சாயங்காலம் இங்க மெனக்கிட்டு வந்து, ஒரு பொண்ணோட வருவேன்னு ஒன்கிட்ட சொல்லிட்டுத் தானே போனேன்..."
"சொல்லத்தான் செஞ்சே.... ஆனால் அதுக்கு நான் சம்மதிக்கு முன்னாலயே ஓடிட்டியே.... அய்யய்யோ ... இது அடாத காரியண்டா ... பொண்ணு யாருப்பா..."
"நம்ம பழனிச்சாமி மாமா மகள்..."
"அந்தப் பையன்' ஒருத்தன் தான் ஊரிலேயே யோக்கியன்... நீ நேராய் அவன் கிட்டயே பொண்ணு கேட்டிருக்கலாமேடா. நீயும் என்ன குறைஞ்சவனா....? இந்த பகவதியோட பேரனாச்சே...”
"குறைஞ்சவனோ கூடுனவனோ... இப்போ எங்கள் வீட்டுக்குள்ள விடு"
இற்றுப்போன அந்தக் கதவை மூடிவிட்டு, மூவரும் வீட்டுக்குள் வந்தார்கள். சமையலறை குடிசை ஒன்று.... அதற்கு எதித்தாற்போல, முற்றத்தைத் தாண்டிய காரைக் கட்டிடம்... துளசிங்கம் திண்ணையில் ஏறியபடியே கேட்டான்.....
"பெரிய வீட்டத் திற..." "ஏண்டா நீ செய்யறது ஒனக்கே நல்லா இருக்கா..? ஏம்மா... அவனுக்குத்தான் புத்தியில்ல... ஒனக்குமா.... பழனிச்சாமி குடும்பம்... எப்பேர்ப்பட்ட குடும்பம்... கரும்பட்டையான் குடும்பமுன்னு..."
"சும்மா தொணதொணக்காத பாட்டி... நான் இவள் கொல செய்யவா கூட்டி வந்தேன். நாளைக்கே ரிஜிஸ்டர் கல்யாணம் செய்யப் போறேன்.... நாங்க விழுற முதல் காலு ஒன் காலுதான்.."
"போலீஸ்காரன் என்ன தூக்கிட்டுப் போக மாட்டானே..?"
"ஒரு காதல் ஜோடியை சேர்த்த வச்சதுக்காவ போலீஸ்காரன் ஒன் கையைக் குலுக்குவான்.... சரி பெரிய வீட்ட திறந்துவிடு..."
பாட்டியின் இரண்டு கரங்களையும், ஒத்தைக் கைக்குள் வைத்துக் கொண்டே , துளசிங்கம், ஊரில் பலர் அரிவாள் கம்புகளோடு, தன்னைத் தேடி அலைவதைச் சொன்னான். கோலவடிவை திருமணம் செய்வதன் மூலந்தான், தான், ஊர்க் கொலையில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் விளக்கினான்....
இதைக் கேட்டுக் கொண்டிருந்த கோலவடிவும் தெளிவான குரலில் திடமாகப் பேசினாள்....
"ஆமாம் பாட்டி... இவரு... என்னைக் கூட்டி வரல.... நான்தான் இவரைக் கூட்டி வாரேன்... இல்லாட்டா... இவரு ஊர்ல.... உயிரோட இருக்க முடியாது.... எனக்கு எங்க குடும்ப மானம் பெரிசுதான்.... ஆனால்..... அதைவிட பெரிசு இவரோட உயிரு... இவருக்கு மட்டும் உயிர்போற நெலம வராட்டால்..... இவரு... தலைகீழ நின்னாலும்... இப்டி வரமாட்டேன்.... எங்கப்பாவ மாதிரி நானும்.... நியாயக்காரிதான் பாட்டி.."
"எம்மாடி... இந்த வயசுல... என்ன பேச்சு பேசுற..."
கிழவி பேசிவிட்டு, அவர்கள் இருவரையும் ஏற இறங்கப் பார்த்தாள்.... பிறகு, முணுமுணுத்தபடியே, வீட்டைத் திறந்துவிட்டாள்.... இருவரும் உள்ளே வந்தார்கள் - துளசிங்கம், கதவை மூடப் போனான் கோலவடிவு மூடப்போன கதவை, இடையிலேயே கை கொடுத்து நிறுத்தியபடியே கேட்டாள்....
"எதுக்கு மச்சான் கதவ மூடுறியரு...?" "இதுக்கு மேல சொல்லணுமோ... எனக்கு சொல்லத் தெரியல..."
"நான் சொல்லுறதையும் கேளும்... ஒம்மை நம்பி வந்தவள் நான். என் உடம்பு மட்டுமில்ல, இந்த நெஞ்சுக்குள்ள துடிக்கிற ஒவ்வொரு துடிப்பும் ஒமக்கு சொந்தம்... என் நெனப்பே ஒமக்குத்தான்.... என் நடமாட்டமே இனும் ஒம்மாலதான்... ஆனால் எல்லாம் கழுத்துல தாலி விழுந்த பிறகுதான். சரி... வெளில போயி படும்... நீரு போறீரா..... நான் போகட்டுமா...?"
துளசிங்கம் கதவை மறித்த அவளை, எதேச்சையாகவோ கோபத்தாலோ தள்ளியதில் கோலவடிவு கீழே விழுந்தாள். அவள் யோசித்தபடியே எழுந்தபோது, பாட்டி உள்ளே வந்தாள்.
"அந்த குலமானு சொல்லுறதைக் கேளுடா - இனிமேல் அவள் கழுத்துல நீ மஞ்சள் கயிற கட்டும்போது தான் ஒன் கையி அவள் மேல படணும். இதுக்கு முன்னால் படப்படாது. அதுக்கு முன்னால்.... அவள் சம்மதிச்சாலும் நான் சம்மதிக்க மாட்டேன்..."
துளசிங்கம் பாட்டியைக் கோபமாகப் பார்த்தபடியே, வெளியே வந்து, முற்றத்தில் முன்னும் பின்னுமாக நடந்தான்... செக்கு மாடு மாதிரி, சுற்றிச் சுற்றி வந்தான்.
கோலவடிவு யோசித்தாள் .... ஏன் இப்டி முரட்டுத்தனமாத் தள்ளினாரு? கீழே விழுந்தவளைக்கூட தூக்கி விடல?

