Chapter 34
கோலவடிவு, அலங்கோல வடிவாய் நடந்தாள்.
இரவோடு இரவாக, பகவதிப் பாட்டி வீட்டின் தெற்குச் சுவரில் ஏறி, கீழே குதித்தாள்; ஒரு எருக்குழியில் விழுந்தாள்.... சண்டும், சருகும், சாணமுமாக அந்த இடத்தின் குமிழி போன்ற குழியில் பொத்தென்று விழுந்தாள். அங்கிருந்து விடுபடவேண்டும் என்ற உணர்வு அற்றுப் போனவளாய், கால்மணியோ - அரைமணி நேரமோ அங்கேயே குப்புற ஒரு பள்ளத்தில் உருண்டு கிடந்தாள். ஏதோ பெரிய இரை கிடைத்த சாக்கில், அங்கே வந்த தெரு நாய்கள், அவள் காலையும், கழுத்தையும் மூக்கால் நுகர்ந்து, வாயால் கௌவப் போன போது, கோலவடிவு நிமிர்ந்து உட்கார்ந்தாள். உடனே அந்த நாய்கள் குலைத்தான்.... அவளைச் சமாளிக்க இன்னும் சில தேவை என்பதுபோல், இதர நாய்களைக் கூப்பிடும் குரலில் கத்தின... காதல் வயப்பட்டு, ஒப்பாரி போடுவதுபோல், ஊளையிட்ட நாய்களும், இப்போது போர்ப்பரணி பாடின... அவள் எழுந்தபோது, லேசாய் பயந்து, அவளைச் சுற்றி வியூகம் போட்டு நோட்டம் பார்த்தன.
கோலவடிவு, அதைப் பொருட்படுத்தாததுபோல் நின்றாள். அங்கே உள்ள, சின்னப் பாட்டி மகன் சிவனுப்பாண்டி சித்தப்பா வீட்டிற்குப் போகலாம் என்று யோசிப்பதுபோல், பிடறியில் கை கோர்த்தபடி, அந்த வீட்டையே பார்த்தாள். பிறகு ஓடிப் போனவளுக்கு, உறவும் ஓடிப்போகும் என்று நினைப்பதுபோல், நடக்கத் துவங்கினாள்... அந்த நாய் வட்டம், அவள் நடை வேகத்திற்குப் பயந்து, விட்டுக் கொடுத்தது. பெரும்பாலான நாய்கள், அவளுக்குப் பயந்தது போல், வால்களை பின்னங் கால்களில் நுழைத்துக் கொண்டு, வட்டத்தை வழிகளாய்க் காட்டின.
கோலவடிவோ , அந்த மையிருட்டில் தாறுமாறாய் நடந்தாள். எருக்குழியைத் தாண்டி, ஊரின் கொல்லைப் புறமாக பனங்காட்டு வழியாக பாய்ந்தாள். அது வெட்டாம்பட்டிக்கும் சட்டாம்பட்டிக்கும் இடையே உள்ள குறுக்குவழி சைக்கிள் கூட செல்ல முடியாத பாதை - பனைமரத்து ஓலைகள், பேய்க்காற்றில், ஒன்றுடன் ஒன்று உரசி ஊளையிட்டன.... எங்கோ ஓடிய முயல், அவளைப் பார்த்து பம்மியது.... ஏதோ ஒரு .... பாம்புக்கு குறி வைத்த கீரி, அதை விட்டுவிட்டு, அவளை எதிர்த்து நின்றது... அவள், அது புரியாமல், அதன்மேல் கால் வைக்கப் போனபோது, அந்தக் கீரி, எந்த பிராணியோ இளைப்பாறும் குழிக்குள் பாய்ந்த து....
மரணம் என்ற உருவமற்ற ஒன்று, பனங்காடே தலையாக, சவுக்குத் தோப்பே உடலாக, பாழுங் கிணறுகளே பாதங்களாக உருவம் பெற்றது போல் பேய்ச்சத்தமாக காற்று மூச்சை வேக வேகமாய் விட்டுக் கொண்டிருந்தது..... காற்றில் விழுந்த பனங்காய்கள், ஏற்கெனவே விழுந்த புளியங்காய்களை நசுக்கின... எங்கோ ஒரு அவலச் சத்தம்.... எதிலோ ஒரு ஊளைச்சத்தம்... அனைத்திலும்... ஒரு ஆவேசச் சத்தம்...
கோலவடிவு பனங்காட்டைத் தாண்டி சவுக்குத் தோப்புக்குள் நடந்தாள். நடக்கும் இடமெல்லாம் இடறல்கள்.... நோக்கும் திசையெல்லாம் பேயிருட்டு... சப் சப் என்று வளைவிலும், நெளிவிலும் நர்த்தனம் ஆடும் சவுக்கு மரங்கள்.... அவளை சில நரிகள் வழி மறிக்கப் பார்த்தான்.... அவளும், அவை தன்னை அடித்துத் திங்கட்டும் என்பதுபோல் நின்ற இடத்திலேயே நின்றாள்.... ஆனால் அந்த நரிகளோ, அவள் தங்களை அடித்துத் தின்னாமல் இருந்தால் போதும் என்பதுபோல் திரும்பி பாராமல் ஓடின...
கோலவடிவு, சவுக்குத் தோப்பைத் தாண்டி, வயல்வெளிப் பக்கம் வந்தாள். பகலில் பொன் நிறத்தில் மின்னும் நெற்பயிர்கள், இருட்டுக் கற்றைகளாய் அவள் மேல் பட்டுத் தொட்டன... தென்னைகள், இருளின் கோடுகளாய் தென்பட்டன. அவள் நடை போட்டாள்.... தாண்டவமாடுபவள் போல், தாவிக் குதித்தாள்.... தொலைவில், சுடலைமாடன் கோவில் பக்கம், வாணங்கள், ஆகாயத்தில் பாளம் பாளமாய் பாய்ந்து அந்தக் கோவிலை அடையாளப்படுத்தின. இருள் கிழிந்த வாணங்கள், இறுதியில் இருளில் கிழிபட்டு, அற்றுப் போயின.... அவளை போகாதே போகாதே என்பதுபோல், பூசணிக் கொடிகள் அவள் கால்களைப் பின்னின... ஆமணக்குச் செடிகள் வழிமறித்தன.... வெட்டப்பட்ட சோளக் கட்டைகள் தட்டின... அவளோ கொடியைக் கிழித்து, செடியை ஒடித்து, கட்டைகளை கட்டையாக்கி நடந்தாள்.... கடந்த காலம், நிகழ்கால களங்கமாக, எதிர்காலம், எதிரிக் காலமாக.... அவள், காலங் கடந்தவளாய், காலத்தால் கடத்தப்பட்டவளாய் நடந்தாள்....
ஏதோ ஒரு விரக்தியோ அல்லது சக்தியோ அவளை நடத்திக் கொண்டிருந்தது. துணிந்தவளுக்கு துக்கமில்லை... வெட்கமில்லை என்பது மாதிரியான அசட்டு நடை.... துளசிங்கத்தால் கீழே விழுந்த போது வருத்தப்பட்டு, தனது தங்கையை தன்னுடன் ஒப்பிட்டு பேசியபோது கோபப்பட்டு, அவன் போலீஸ் நிலையம் நோக்கி போன போது பாவப்பட்டு, கட்டிலோடு கட்டிலாய் கிடந்தவள், இப்படி நடக்கிறாள்.
எந்த அர்த்த ராத்திரியில் ஐவராசாவும், அலங்காரியும், தனது அண்ணன் திருமலை, காவல் நிலையத்தில் கட்டுண்டு கிடப்பதைச் சொன்னார்களோ - அப்போது எழுந்தாள். எப்போது பழனிச்சாமியை இளக்காரமாய் பேசினார்களோ - அப்போது என்னடா நெனச்சே என்னடா நெனச்சே' என்று பாயப் போனாள்.... எப்போது தன்னைக் காட்சிப் பொருளாக்கி, தான் பிறந்த கரும்பட்டையான் குடும்பத்தை சிறுமைப்படுத்த திட்டமிட்டு வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்தாளோ - அப்போதே குமைந்தாள்... கல்யாணம் என்ற பெயரில் - தனது உற்றார்க்கும், பெற்றார்க்கும் கருமாந்திரம் வைக்கப் போகிறார்கள் என்பதை எப்போது தெரிந்தாளோ... அப்போது தெளிந்தாள்.... அப்பா விவகாரி..... ஓடிப்போன பல பெண்களைக்கூட, குடும்பப் பெண்களாக்கியவர். நடந்த விவரத்தை ... அப்படியே அவரிடம் சொன்னால் - அவர் நிச்சயம் அனுதாபப்படுவார். ஒருத்தனுடன் ஓடியது சாதாரண துணிவு என்றால், அவனை, தாய் தந்தையருக்காக உதறிவிட்டு திரும்புவது அசாதாரண துணிவு என்று தந்தை நினைப்பார் என்று அவள் நினைத்தாள்.... துளசிங்கம், ஐவராசா, அலங்காரி வகையறாக்கள், தன் குடும்பத்தை படுத்திய பாட்டில் பெருமிதப் பட்டபோது, அவள் தனது மனதுக்குள்ளேயே, அவர்களுக்கு எதிராக போர் தொடுத்தாள்.
அவர்கள் எந்தக் கையில் தன்னை ஒரு கருவியாக வைத்திருக்கிறார்களோ - அந்தக் கையையே உடைக்கும் கருவியாக தான் மாறியே ஆகவேண்டும் என்று கருவிக்கொண்டாள்... சட்டாம்பட்டிக்கும், வெட்டாம்பட்டிக்கும் இடைப்பட்ட வழியில் மட்டும் சிறிது தடுமாறி, பகவதி பாட்டி வீட்டுக்கு வந்ததும் பழைய கோலவடிவாய் தான் ஆகிவிட்டது, தனது பெற்றோருக்கு புரியும் என்று நினைத்தாள். ஒருவர் மீது அன்பு செலுத்தும்போது, அவரும் தம்மீது அந்த அளவு அன்பு செலுத்துவதாக நினைப்பது போல், பெற்றோருக்காக அவள் அனுதாபப்பட்டதால், பெற்றோரும் அனுதாபப் படுவார்கள் என்று நினைத்தாள். பெற்றோரின் கௌரவத்தை தூக்கிப் பிடித்து இப்போது நடக்கும் இந்த நடை ஒரு வீர நடை என்று வீம்புடன் நடந்தாள். வேண்டப்பட்டவர்களைப் பற்றி தீவிரமாக நினைக்கும்போது, அந்த நினைப்பின் ஒவ்வொரு அசைவும், நினைக்கப் படுகிறவர்கள் இதயத்திலும் ஒரு அசைவை உருவாக்கி, அந்த அசைவே நினைத்தவரின் சிந்தனையாய் மாறும் என்று நினைப்போமே, அந்த நினைப்பில் நடந்தாள்.
என்றாலும், ஊரை நெருங்க நெருங்க, ஓடிப்போன கேவலம், அவள் உடம்பில் களைப்பாகவும், உள்ளத்தில் உளைச்சலாகவும் ரூபமெடுத்தன... இருண்டிருந்த காளியம்மன் கோவில், அவள் முகத்தை இருளடையச் செய்தது. சுடலைமாடசாமி கோவிலின் விளக்குப் பிரகாசம் அவள் கண்களைப் பறித்து குருடாக்கியது....
ஊருக்குள் வட்டமடித்து, வேறு வேறு பாதைகளில் நடந்து நடந்து, இறுதியில் வீட்டுப் பக்கம் வந்தாள்... உள்ளே எல்லாமே தலைவிரி கோலமாய் ... தலைகீழாய் கிடப்பதைத் தொலைவிலேயே பார்த்துவிட்டாள்.... அம்மாவின் விசும்பல் கேட்டு, உள்ளே ஓடப் போனாள்.... அப்பாவின் பொருமல் கேட்டு தாவப் போனாள். ஆனாலும் கால்கள் நடந்தால், முதுகு நின்றது.... முதுகு வளைந்தால், கால்கள் நின்றன.
சொந்த வீடே, அன்னிய வீடானதுபோல் தோன்ற, அவள், அந்த வீட்டின் வடக்குச் சுவர்ப்பக்கம், வேற்றுப் பெண்ணாய் போனாள்... லேசாய் வியாபித்த பொட்டல்வெளி... அதில் கட்டை வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. அதற்குள் தவழ்ந்து தவழ்ந்து போனாள்... அதன் பைதாக்களுக்குள் (சக்கரங்கள்) உடம்பைக் குறுக்கிக் கொண்டாள்....
வெளியே நடப்பதைப் பார்க்கும் போதெல்லாம், உள்ளே ஓடிப்போய் விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்ற வேகம்... அதே சமயம் வீட்டில் நடப்பதைப் பார்க்கும் போது, வெளியே ஓடி, பாழுங் கிணறு ஒன்றின் பாறைப் பற்களுக்கு தீனியாக வேண்டும் என்ற உந்தல்.
கோலவடிவு - அந்த பெயருக்கு எதிர்மாறாய் கிடந்தாள். வீட்டையும் தொலைவில் உள்ள ஒரு ஆழக் கிணறையும் மாறி மாறிப் பார்த்தாள்....

