Chapter 39
ரஞ்சிதத்தின் வீட்டுக்குப் பின்னால் வந்த கோலவடிவு, மேற்குப் பக்கமாக நடந்தாள்.... பின்னர் தெற்குப் பக்கமாக நடந்து குளத்துக் கரைக்குப் போனாள். அங்கிருந்து கரையிலே நடந்தாள்.... தரையிலே இறங்கினாள்... வயல்களில் கால் சிக்க வரப்புக்களில் கால் முட்ட, நடந்து நடந்து, அந்த ஊரையே வலம் வந்து, நஞ்சை வயல்களைத் தாண்டி, புஞ்சை வயல்களில் பாய்ந்து, புளியந்தோப்புக்கு வந்து, மூச்சு விட்டாள்.... பிறகு சோளத் தோட்டம் வழியாக ஊடுறுவி , பருத்திக் காட்டிலே பதுங்கி, அந்த ஆலமரத்தடி காளியம்மனின் பின்புறமாக நடந்து, முன்புறமாய் வந்தாள். ஆலமரம் வெறிச்சோடிக் கிடந்தது.... அம்மன் கோவில், அனாதைகள் இல்லாத இல்லமாய் வெறுமையுடன் தோன்றியது. அந்தக் கோவிலின் இரண்டு நிலைக் கதவுகளும் பூட்டில்லாமல் ஒதுங்கிக் கிடந்தன...
கோலவடிவு என்ன நினைத்தாளோ , ஏது நினைத்தாளோ , அம்மன் கோவில் படிக்கட்டுக்களில் ஏறினாள்.... உள்ளே போய், அம்மனுக்கு எதிரே சரிக்குச் சமமாய் உட்கார்ந்து கொண்டாள்... சுவரோரம் உள்ள கொடியில் சிவப்புச் சேலைகள் தொங்கின.... அம்மனின் ஊதாப் பாவாடை... அந்தச் சேலைகளுக்குள் சிக்கியிருந்தது...... அம்மனின் கால்மாட்டில் ஒரு வெட்டரிவாள்.... வாடிக்கிடந்த வாழை இலையில் அழுகிப் போன வாழைப்பழங்கள்... உலர்ந்துபோன வெற்றிலைகள்.. கோலவடிவு, சப்பாணி போல் நகர்ந்து, அம்மன் சிலையை, மிக நெருக்கமாக உற்றுப் பார்த்தாள். பிறகு இரண்டு கரங்களை பின்புறமாகக் கொண்டு போய், அம்மனின் முதுகைத் கோர்த்துப் பிடித்தபடியே, அம்மாவின் மார்பிலே தலை சாய்த்தாள். திக்கற்றவளுக்கு தெய்வமே துணை என்று பிடித்தாளோ தெய்வமே திக்கற்றும் போய் விட்டதாக நினைத்து, அந்த சிலைக்கு ஆதரவு காட்டுவதாக எண்ணி பிடித்தாளோ... அவளுக்கே பிடிபடவில்லை .
உச்சி வெயில் சுட்டது.
சுடலை மாடன் உபயத்தில் இரண்டு நாட்கள் இரவும், பகலும், லைலாவையும் ரிக்கார்ட் டான்ஸையும், முப்பது எம்.எம். கராத்தே படத்தையும் பார்த்த ஊரார், அந்தப் பட்டப் பகலில் தூங்கிக் கொண்டிருந்தார்கள் ... கரும்பட்டையான்களும், காத்துக் கருப்பன்களும், பழனிச்சாமிக்காக விட்டுக் கொடுத்த ராத்தூக்கத்தை, அந்தப் பகலில் கரைத்துக் கொண்டிருந்தார்கள்.... எவரும் கோலவடிவை, அந்த கோவிலுக்குள் பார்க்கவில்லை. சில சின்னக் குழந்தைகள் மட்டும் அவளைப் பார்த்துவிட்டு, பயந்துபோய் அப்பாம்மாக்களிடம் சொல்வதற்காக ஓடிக் கொண்டிருந்தபோது
கோலவடிவு, சத்தம் கேட்டு, அம்மன் மார்பில் குப்புறப் போட்ட முகத்தைத் திருப்பினாள்.... ரஞ்சிதம் வீட்டில் பலமாகக் கத்தியபோது லேசாகக் கேட்ட துளசிங்கத்தின் சத்தம், இப்போது லேசாய் ஒலித்தாலும் அவளுக்குப் பலமாய்க் கேட்டது.... அதோ போய்க் கொண்டிருக்கிறான் - இவள் இருப்பது தெரியாமலே யூனிபாரம் போட்ட இரண்டு போலீஸ்காரர்கள் பாதுகாப்பாய் பக்கத்துக்கு ஒருவராய் நடக்க, அவன் அட்டகாசமாகப் பேசியபடி, அனாவசியமாக கைகால்களை ஆட்டியபடி நடந்து நடந்து பேசினான்....
"ரஞ்சிதம் மட்டும் நான் சொன்னதைக் கேட்காட்டால்... அவள் ராத்திரியோட ராத்திரியா... ஏதாவது செய்யப் போறேன்... நீங்கதான் கண்ணை மூடிக்கணும்..."
"அதுக்கென்ன.. சாப்பாடுல்லாம் ஆயிட்டு... இனும் என்ன வேல.... நாங்க சாயங்காலமா ஸ்டேஷனுக்குப் போயிடுறோம். எது செய்தாலும் சாட்சி இல்லாம செய்யணும்..."
கோலவடிவு, கோரவடிவாய் எழுந்தாள்.
ஆயிரமாயிரம் ஆடு கோழிகளை வெட்டிய அம்மனின் வெட்டரிவாளை எடுத்துக் கொண்டாள்.... எப்படிக் கழுவினாலும் ரத்தத்துரு போகாத வெட்டரிவாள். விரிந்த குழல்..... துடிக்கின்ற உதடுகள்... கடிக்கின்ற பற்கள்... ஊழி நடனம் ஆடுவது போன்ற உடலாட்டம்... கோழைத்தனம் கலைந்தது போன்ற ஆவேசம்... இலக்கு தேடும் வெட்டரிவாள்... இலக்கு கண்ட பெண்சக்தி......
கோலவடிவு தாவிக் குதித்தாள். ஓங்காரமாய் கூக்குரலிட்டாள்... ஆங்காரமாய் கத்தினாள்... ஊரே அதிரும்படி ஓசையிட்டு ஓடினாள்...
"ஏய்... டேய் .."
மேனி வில்லாய் வளைய, முப்பது பற்கள் இப்போது கோரமாய் காட்சி காட்ட, கோலவடிவு ஆகாயமும், பூமியுமாக ஆனவள் போல், துளசிங்கத்தை நோக்கி ஓடினாள்... திரும்பிப் பார்த்த துளசிங்கம், எதுவும் பிடிபடாமல், அப்படியே நின்றான்.
அவனுக்கு, மெய்க்காவல் போட்ட காவலர்கள், வெட்டரிவாட்காரியைப் பார்த்துவிட்டு, திருடர்கள் போல் ஓடினார்கள். 'வேண்டாம்மா... வேண்டாம்மா....' என்று கூச்சலிட்டபடியே அங்கு மிங்குமாய் ஓடி, ஆளுக்கு ஒரு இடமாகத் தேடிப் பிடித்து ஒளிந்தார்கள். இப்போது திகைத்து நின்ற துளசிங்கமும் ஓடினான். கோலவடிவை விட்டு, அவள் குறியில் இருந்து விலகி ஓடுவதாக நினைத்து, அவள் அருகிலேயே ஓடினான்... குறுக்கும் நெடுக்குமாய் ஓடினான்... அய்யய்யோ என்று அலறியபடியே அங்குமிங்குமாய் ஓடினான். அவளையே சுற்றிச் சுற்றி ஓடினான் .... கற்ற குஸ்தி கைகொடுக்கவில்லை... கண்ட பெண்களோ இவளைப் போல் இல்லை...
கோலவடிவின் தலைமுடி, அந்த ஆடிக்காற்றில் பின்னாலும், முன்னாலுமாய் கோரதாண்டவம் ஆடியது.... அவள், அழுத்தமாய் நின்றாள்... அர்ச்சுனன், இலக்கை மட்டுமே பார்த்ததுபோல், துளசிங்கத்தின் கழுத்தை மட்டுமே பார்த்தாள். இவன் இலக்கோ அங்குமிங்குமாய் ஆடி அப்படியே நிலைகுலைந்து, நின்றும், நடந்தும், ஓடியும் அலைக்கழிந்தபோது -
ஒரு வீச்சு... ஒரே வீச்சு... கோலவடிவின் வலது கரத்தில் இருந்து விடுபட்ட வெட்டரிவாள், துளசிங்கத்தின் கழுத்தில் விழுந்தது.... கழுத்துச் சதையின் பாதி இடத்திற்குள் ஊடுருவிப் பாய்ந்து கௌவிப் பிடித்தது. அவன் ரத்தமும், சதையுமாய் தரையில் சாய்ந்தான்.... வெட்டுப்படும் கிடா போல் அலறி விழுந்தான்... கோலவடிவு விடவில்லை ... அவனிடம் அடிமேலடியாய் நடந்து போனாள்... அவன் முதுகில் வலது காலை வைத்து அழுத்தியபடியே, தொங்கிக் கொண்டிருந்த தலையை கீழே கிடந்த அரிவாளை எடுத்து அறுத்தாள்... வாழைக்காயை சீவுவது போல் சீவினாள்... ஒரே பாகம்... கொத்துக் குறை, மிச்சம் மீதி பேச்சுக்கே இடமில்லை...
கோலவடிவு, துளசிங்கத்தின் துண்டுபட்ட தலையை, அதன் முடியைப் பிடித்துத் தூக்கினாள்.... தூக்கியபடியே நடந்தாள்... காளியம்மன் கோவிலுக்குள் துள்ளிக் குதித்துத் தாவினாள்... அம்மனுக்கு முன்னால் அந்தத் தலையை வைத்தாள்.... வெட்டரிவாளையும், விடாமலே பிடித்துக் கொண்டாள்... அந்த தலைக்கும் அம்மன் சிலைக்கும் இடையேயான இடத்தில் ரத்தாசனம் போட்டாள்.... அவள் நெற்றிப் பொட்டில் துளசிங்கத்தின் ரத்தத் துளிகள்... சிவப்பான தலை..... குங்குமமான கண்கள்... ரத்தம் உறைந்த கழுத்து....

